என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Wednesday, August 11, 2010

கொலையில் கலை‘கிளாடியேட்டர்’ போன்ற ஹாலிவுட் திரைப்படங்களில் காட்டப்பட்ட அந்த பிரம்மாண்ட அரங்கம், ரோமானியர்களின் கலை உணர்வுக்கு சாட்சியாக 2000 ஆண்டுகளைக் கடந்தும் நின்று கொண்டிருக்கிறது. ‘கொலோசியம் ஆஃப் ரோம்’ என்று அழைக்கப்படும் அந்தக் கட்டிடத்தை இப்பொழுது பார்க்கும் போதும் நமக்குள் ஒருவித அச்சம் பரவுவதை தவிர்க்க முடியவில்லை. காரணம் அங்கு
அரங்கேற்றப்பட்ட கணக்கில் அடங்காத கொலைகள்.

கிமு 80-ல் ரோம சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னர்கள் தங்களின் குடிமக்களின் பொழுதுபோக்குக்காக இந்த பிரம்மாண்ட அரங்கத்தை நிர்மாணித்தார்கள். 165 அடி உயரமும், 600 அடி நீளமும் கொண்ட இந்த அரங்கில் சுமார் 50 ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்டு களிக்கலாம். இங்கு அரங்கேற்றப்பட்ட நிகழ்ச்சிகள் என்ன தெரியுமா? இரண்டு அடிமைகள் சாகும் வரை ஒருவருடன் மோதிக் கொள்வது அல்லது அடிமைகள் புலி, சிங்கம் போன்ற பயங்கர விலங்குகளுடன் மோதுவது. ரத்தம் சொட்டச் சொட்ட நடத்தப்பட்ட இதைத் தான் அந்தக் கால ரோமானியர்கள் மயிர்க் கூச்செரிய ரசித்துப் பார்த்தார்கள். இந்த போட்டிகள் அலுத்துப் போகும் போது, அரங்கம் முழுவதும் தண்ணீர் நிரப்பி கடற்போர்களை நடத்துவார்கள். சில சமயங்களில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவது உண்டு.

இந்த பிரம்மாண்ட அரங்கத்தின் கட்டிடக் கலை இன்றைய தொழில்நுட்பங்களுக்கும் சவால் விடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பல அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கிற்குள் நுழைய பல வாசல்களை வைத்திருக்கிறார்கள். எனவே 50 ஆயிரம் பேர் அரங்கில் இருந்தாலும், ஏதேனும் அசம்பாவிதம் நேரிட்டால் ஒரு சில நிமிடங்களில் அனைவரும் அரங்கை விட்டு வெளியேறி விட முடியும். ஆயிரக்கணக்கான ரசிகர்களின் பாரத்தை அரங்கம் தாங்க வசதியாக, பல தூண்களையும், வளைவுகளையும் நிர்மாணித்திருக்கிறார்கள். ரசிகர்கள் வெயிலில் வாடாமல் போட்டிகளை ரசித்துப் பார்க்க, அரங்கின் மேல் தளத்தில் நிழல் ஏற்படுத்தும் விரிப்புகளும் கட்டப்பட்டிருந்தன. அதேபோல போட்டி மைதானத்திற்குள் தரையில் பல ரகசிய திறப்புகளை அமைத்துள்ளனர். இவற்றின் மூலம் சிங்கம், புலி போன்ற விலங்குகள் திடீரென வெளியில் வந்து பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தும்.

அரச குடும்பத்தினர், விருந்தினர்கள், அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் முன் வரிசையில் அமர்ந்து இந்த கொலை விளையாட்டுக்களை ரசித்துப் பார்த்தனர். இதில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட அடிமைகளுக்கு பிரத்தியேக பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. 2000 ஆண்டுகளைக் கடந்த நிலையில், தற்போது சிதிலமடைந்த அந்த அரங்கில் கொலை மறைந்து, கலை மட்டுமே எஞ்சியிருக்கிறது.

No comments:

Post a Comment