என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, March 24, 2012

மெட்ராஸ் விமானம்

மெட்ராஸ் வான்வெளியில் முதன் முதலில் விமானம் பறந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது. இந்த விமானம் பறந்தது மட்டுமல்ல, பிறந்ததும் மெட்ராசில்தான். எனவே இதை நாம் தாராளமாக மெட்ராஸ் விமானம் என்று அழைக்கலாம்.

1910ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தின் ஒரு வெயில் நாளில், தீவுத்திடல் மைதானத்தில் எதையோ பார்ப்பதற்காக ஏராளமானோர் கூடியிருந்தார்கள். ஓசியில் வேடிக்கை பார்க்க வந்த கூட்டமல்ல அது. இரண்டு அணாக்களில் இருந்து 5 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி வந்திருந்த கூட்டம். இரண்டு அணா கொடுத்தவர்கள் எல்லாம் தரையில் அமர்ந்திருக்க, ரூபாய்களில் கொடுத்தவர்கள் நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தார்கள்.

மைதானத்தின் மத்தியில் இரண்டு இறக்கைகளுடன் ஒரு விசித்திரமான வாகனம் பார்வையாளர்களின் விழிகளை விரிய வைத்துக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் அங்கு வந்த பிரெஞ்சுக்காரர் ஒருவர் அந்த வாகனத்தை சுற்றி சுற்றி வந்து எதை எதையோ சோதித்துக் கொண்டிருந்தார். பின்னர் அதில் ஏறி அமர்ந்து கொண்டார். அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற ஆர்வத்தில் மூச்சுவிடக் கூட மறந்து, பார்த்துக் கொண்டிருந்தார்கள் மெட்ராஸ்வாசிகள்.

வாகனத்தின் முன்னால் இருந்த காற்றாடி சுற்ற ஆரம்பிக்க மெல்ல நகரத் தொடங்கியது அந்த விசித்திர வண்டி. மைதானத்தை ஒருமுறை அப்படியே சுற்றி வந்தது. இப்போது அனைவரும் அதை நெருக்கத்தில் பார்க்க முடிந்தது. பின்னர் மெல்ல மெல்ல வேகமெடுத்து வானில் உயரக் கிளம்பியது. மெட்ராஸ்வாசிகள் கண்களை கசக்கிக் கொண்டு நடப்பது நிஜம்தான் என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டனர்.

வானில் கிளம்பிய வாகனம் வங்கக் கடலின் மேல் பறந்து சிறிய புள்ளியாய் மாறி, பின்னர் காணாமல் போனது. எல்லோரும் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, சுமார் அரைமணி நேரம் கழித்து அந்த உலோகப் பறவை திரும்பி வந்தது. மக்கள் அதற்கு ஆரவார வரவேற்பு கொடுத்தார்கள். விமானத்தில் இருந்து கைகளை அசைத்தபடி வெளியில் வந்த அந்த பிரெஞ்சுக்காரர், மக்களிடம் சென்று 'யாராவது வருகிறீர்களா, ஓசியில் ஒரு ரவுண்ட் அழைத்துச் செல்கிறேன்' என்றார். கூட்டத்தில் இப்போது பயங்கர நிசப்தம். யாரும் முன்வரத் தயாராக இல்லை.

சிறிது நேரம் கழித்து ஒரே ஒரு சிறுவன் மட்டும் எழுந்து நின்றான். அவனையும் அருகில் இருந்தவர்கள் இழுத்து உட்கார வைக்க முயற்சித்தனர். ஆனால் பிரெஞ்சுக்காரர் அந்த சிறுவனை அழைத்துச் சென்று விமானத்தில் தனக்கு அருகில் இருந்த இருக்கையில் உட்கார வைத்து சீட் பெல்ட் போட்டுவிட்டார். மீண்டும் பறக்கத் தயாரானது அந்த விசித்திர வாகனம். எல்லோரும் அதிசயிக்கும் வகையில், அதே சாகசம் மீண்டும் ஒருமுறை வான்வெளியில் வெற்றிகரமாக அரங்கேறியது.

அடுத்தநாள் மெட்ராஸ் நாளிதழ்கள் அனைத்திலும் இதுதான் முக்கியச் செய்தி. பாரதியார் நடத்திய இந்தியா வார இதழிலும் இதுபற்றிய செய்தி இடம்பெற்றிருந்தது. அந்த கட்டுரையில், ஏழ்மை காரணமாக இந்தியர்கள் இதுபோன்ற புதிய முயற்சிகளில் ஈடுபடுவதில்லை என்று பாரதி குறைபட்டிருந்தார். ஆனால் இந்த விமானத்தை உருவாக்கிய தொழிலாளர்கள் தமிழர்கள் என்பதையும் பாரதி குறிப்பிடத் தவறவில்லை.

இந்த சாகசத்தை செய்து காட்டிய பிரெஞ்சுக்காரரின் பெயர் டி'ஏஞ்ஜிலி (D' ANGELI). இவர் மெட்ராசின் மவுண்ட் ரோட்டில் டி'ஏஞ்ஜிலிஸ் ஹோட்டல் என்ற பெயரில் பெரிய உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். விமானம் செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பற்றிய தகவல்களை பாரீஸ் நகரில் இருந்து பெற்று, அதன் அடிப்படையில் இவர் மெட்ராசிலேயே இந்த விமானத்தை தயாரித்தார்.

அப்போது மெட்ராசில் ரயில் பெட்டிகள் தயார் செய்துகொடுத்துக் கொண்டிருந்த பிரபல சிம்சன் நிறுவனத்திடம் விமான பாகங்களை தயாரிக்கும் பணியை ஒப்படைத்தார். இது மிகவும் சாதாரண சிறிய ரக விமானம் என்பதால் அதிக சிரமம் இல்லாமல் இங்கேயே தயாரித்துவிட முடிந்தது. பல்லாவரம் பகுதியில் இதனை முதலில் சோதித்துப் பார்த்தார். சோதனை வெற்றி அடைந்ததால், அதிக சக்தி உள்ள என்ஜினைப் பொருத்தி மீண்டும் சோதித்துப் பார்த்தார். இதுவும் வெற்றிகரமாக அமைந்துவிட, உடனே 'கூட்டுங்கடா கூட்டத்தை' என்று தீவுத்திடலில் டிக்கெட் போட்டுவிட்டார்.

ஆர்.ஏ. பத்மநாபன் என்ற மூத்த பத்திரிகையாளர் இந்தியன் ரிவ்யூவில் (INDIAN REVIEW) எழுதிய கட்டுரையில் இந்த சம்பவத்தை அப்படியே நமக்கு படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். இப்படி இன்னும் நிறைய சுவாரஸ்யமான கதைகளை தனக்குள் புதைத்து வைத்திருக்கிறது மெட்ராஸ் மாநகரம். ஆனால் முறையாக ஆவணப்படுத்தத் தவறியதால் அவற்றில் பலவற்றை நாம் இழந்துவிட்டோம்.

நன்றி - தினத்தந்தி

* என்ஜின், பைலட் எல்லாம் சேர்த்து மெட்ராஸ் விமானத்தின் எடை வெறும் 700 பவுண்டுகள்தான்.

* விமானத்தில் உடன் பறந்த சிறுவனின் பெயர் பி.ஆர்.எஸ். வாசன். அந்த சிறுவனின் நேரடி அனுபவங்களும் அடுத்தநாள் செய்தித்தாள்களில் வந்திருந்தன.

* மெட்ராஸ் விமான சாகசத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன் கல்கத்தாவில் ஒரு பஞ்சாபி தயாரித்த விமானம், 1909 டிசம்பர் 30ந் தேதி வானில் பறந்தது. அதுதான் இந்தியாவின் முதல் விமானம்.

Sunday, March 18, 2012

ராணி மேரிக் கல்லூரி

வங்கக்கடலின் காற்றுக்கு மேலும் குளிர்ச்சி கூட்டியபடி கடற்கரைச் சாலையில், கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் ராணி மேரிக் கல்லூரிதான் மெட்ராசின் முதல் பெண்கள் கல்லூரி. தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் இரண்டாவது பெண்கள் கல்லூரி என்ற பெருமையும் இதற்கு உண்டு. கடலைப் பார்த்தபடி மரங்களுக்கு இடையில் அமைதியாக காட்சியளிக்கும் இந்த கட்டடம் கல்லூரியாக மாறியதே ஒரு சுவாரஸ்யமான கதை.

ஜூலை 1914இல் மதராஸ் மகளிர் கல்லூரி என்ற பெயரில் தொடங்கப்பட்ட இது, அதற்கு முன்பு ஹோட்டலாகவும், அதற்கும் முன்பு தனியார் ஒருவரின் வீடாகவும் இருந்தது. கர்னல் பிரான்சிஸ் கேப்பர் (Col. Francis Capper) என்ற ராணுவ வீரர் கடற்கரைக்கு எதிரில் ஒரு வீடு கட்டினார். எனவே இந்த வீடு கேப்பர் இல்லம் (Capper’s House) என அழைக்கப்பட்டது. அவர் இந்தியாவை விட்டு வெளியேறும்போது, இந்த வீட்டை விற்றுவிட்டார். அடுத்து அங்கு ஒரு ஹோட்டல் முளைத்தது. அதையும் மக்கள் கேப்பர் ஹோட்டல் என்றுதான் அழைத்தனர். மெரினா சாலைக்கு வந்த முதல் ஹோட்டல் அதுதான். ஆனால் அந்த ஹோட்டலில் அதிக வருமானம் கிடைக்கவில்லை.

இதனிடையே 1910களில் பெண்களுக்கென ஒரு கல்லூரி தொடங்குவது குறித்து விவாதிக்கப்பட்டு வந்தது. இதற்கான இடம் தேடும் பணியும் ஒருபுறம் நடைபெற்றது. ஹோட்டலிலும் அதிக வருமானம் இல்லாததால் கேப்பர் இல்லத்தையே கல்லூரியாக மாற்றிவிடலாம் என முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுக்கு பின்னணியில் மெட்ராஸ் வர்த்தக சபையின் பங்கு இருந்ததாக கூறப்படுகிறது. காரணம், வர்த்தக சபையின் தலைவர் பியர்ட்செல்ஸின் (WA Beardsells) எக்மோர் இல்லத்தை கல்லூரியாக மாற்றலாம் என்றும் பரிசீலிக்கப்பட்டு வந்தது. இதனை தவிர்ப்பதற்காக கேப்பர் இல்லத்தை கைகாட்டி விட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஒருவழியாக 1914இல் கேப்பர் இல்லத்தில் மதராஸ் மகளிர் கல்லூரி தொடங்கப்பட்டது. ஆரம்பித்தபோது 37 பெண்கள் இதில் சேர்ந்தனர். முதல் முதல்வரான டி லா ஹே (Ms de la Haye) கல்லூரியின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டார். அவரது அயராத முயற்சியால் கல்லூரி வளாகத்தில் Pentland House (1915), Stone House (1918), Jeypore House(1921) ஆகிய கட்டடங்கள் கட்டப்பட்டன. இதனிடையே 1917இல் இது ராணி மேரிக் கல்லூரி எனப் பெயர் மாற்றப்பட்டது. கல்லூரிக்கு அருகில் இருந்த நீதிபதி சுப்பிரமணிய ஐயரின் பீச் இல்லம், நீதிபதி சங்கர ஐயரின் இல்லம் ஆகிய இரண்டு கட்டடங்கள் விலைக்கு வாங்கி கல்லூரியுடன் இணைக்கப்பட்டன.

எத்தனை கட்டடங்கள் வந்தாலும், இவற்றிற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்ட கேப்பர் இல்லம்தான் கல்லூரியின் முக்கியப் பகுதியாக விளங்கி வந்தது. 1990களில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், கேப்பர் இல்லம் சிதிலமடைந்தது. இதனை தொடர்ந்து பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என்பதால், அதன் பயன்பாடு நிறுத்தப்பட்டது. இங்கிருந்த அலுவலகங்கள் வேறு கட்டடங்களுக்கு மாற்றப்பட்டன.

இதனிடையே 2003இல் ராணி மேரிக் கல்லூரியை இடம் மாற்றிவிட்டு, அங்கு புதிய தலைமைச் செயலகம் கட்டப் போவதாக தமிழக அரசு அறிவித்தது. கல்லூரி மாணவிகள் பொங்கி எழுந்து போராட்டத்தில் குதித்தனர். கையெழுத்து இயக்கங்கள் நடத்தப்பட்டன, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசியல் கட்சிகள் இப்பிரச்னையை கையில் எடுத்தன. இப்படி பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து இந்த முடிவு கைவிடப்பட்டது. இந்நிலையில் தான் ஒருநாள் இரவு கேப்பர் இல்லத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது.

இதனை சீரமைப்பதற்கு பதிலாக, இந்த கட்டடம் ஒட்டுமொத்தமாக இடிக்கப்பட்டு, அங்கு ஒரு புதிய கட்டடம் கட்டப்பட்டது. அதேபாணியில் கட்டப்பட்டதாக சொல்லப்பட்டாலும், பழைய கட்டடத்திற்கும் புதியதற்கும் பெரிய ஒற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை. 2010ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட இந்த கட்டடத்திற்கு கலைஞர் மாளிகை எனப் பெயரிடப்பட்டது. இப்போது இது 'கலை மாளிகை'யாக மாறிவிட்டது.

இங்கிருக்கும் கட்டடங்களின் கதைகளைவிட, இங்கு பயின்று செல்லும் பெண்களின் கதைதான் மிக முக்கியம். அந்த வகையில், மெட்ராசின் முதல் பெண்கள் கல்லூரியாக உருவெடுத்து எத்தனையோ பெண்களின் வாழ்வையே மாற்றி இருக்கிறது இந்த ராணி மேரிக் கல்லூரி. சாமானியர்களாக, சாதாரண குடும்பத்தில் இருந்து படிக்க வந்த ஆயிரக்கணக்கான பெண்கள், சாதனைப் பெண்களாகும் வல்லமையுடன் இங்கிருந்து வெளியில் சென்றிருக்கிறார்கள். இப்படி சத்தமின்றி தொடர்ந்து சரித்திரங்களை படைத்து வரும் இந்த கல்லூரி விரைவில் நூற்றாண்டு விழா கொண்டாடத் தயாராகி வருகிறது.

நன்றி - தினத்தந்தி

* கல்லூரியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய முதல்வர் டி லா ஹேவிற்கு கல்லூரி வளாகத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

* அரசு மகளிர் கல்லூரிகளில் ராணி மேரிக் கல்லூரிதான் முதலில் (1987) தன்னாட்சி அதிகாரம் பெற்றது.

Saturday, March 10, 2012

தங்க சாலை

மெட்ராஸ் மாநகரின் மிக நீண்ட தெரு என்ற பெருமைக்கு உரியது தங்க சாலை (MINT STREET). அரசின் நாணயங்களை அச்சடிக்கும் தொழிற்சாலை இங்கு இருந்ததால், இந்த சாலைக்கு இப்பெயர் வந்தது. நாணய சாலை இங்கு எப்படி வந்தது என்பதை தெரிந்துகொள்ள நாம் மெட்ராஸ் நகரம் உருவான காலத்திற்கு செல்ல வேண்டும்.

ஆம், 1639ஆம் ஆண்டு விஜயநகர அரசரின் பிரதிநிதியான வெங்கடாத்ரி நாயக்கரிடம் இருந்து மெட்ராஸின் நிலப்பகுதியை வாங்கிய கிழக்கிந்திய கம்பெனியார், இங்கு நாணயங்களை அச்சிட்டு புழக்கத்தில் விடும் உரிமையையும் பெற்றனர். எனவே புனித ஜார்ஜ் கோட்டைக்குள்ளேயே ஒரு நாணய தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இங்கிருந்த சில செட்டியார்கள் ஒப்பந்த அடிப்படையில் இதனை இயக்கி வந்தனர். நாணயத்தை அச்சடிக்கத் தேவையான தங்கத்தை கிழக்கிந்திய கம்பெனி இறக்குமதி செய்து தரும். பின்னர் 1650களில் இந்த நாணயக் கூடத்தை கிழக்கிந்திய கம்பெனி தானே இயக்குவது என முடிவு செய்தது.

கிழக்கிந்திய கம்பெனியின் வருகையின்போது, விஜயநகர அரசின் நாணயங்கள்தான் இப்பகுதியில் புழக்கத்தில் இருந்தன. விஷ்ணுவின் வராக அவதாரத்தை தாங்கி வெளியான இந்த நாணயங்கள் விஜயநகர தங்க வராகன்கள் என அழைக்கப்பட்டன. இதனிடையே கிழக்கிந்திய கம்பெனியும் தங்க நாணயங்களை வெளியிட்டதால் அவை மெட்ராஸ் வராகன்கள் எனப் பெயர் பெற்றன. இவை விஜயநகர நாணயங்களை விட எடை குறைவாக இருக்கும், அதேபோல இதன் மதிப்பும் குறைவுதான்.

இதனைத் தொடர்ந்து ஜார்ஜ் கோட்டையில் இருந்த நாணயக் கூடம், தங்க மற்றும் வெள்ளிப் பணங்களை வெளியிடத் தொடங்கியது. பின்னர் செப்புக் காசு, துட்டு ஆகியவை அச்சிடப்பட்டன. 1692 முதல் முகலாயர்களின் வெள்ளி ரூபாய்களையும் அச்சடித்துக் கொள்ளும் உரிமை இந்த நாணயக் கூடத்திற்கு அளிக்கப்பட்டது. பொதுமக்களும் தங்களிடம் இருக்கும் தங்கத்தை கொடுத்து, மெட்ராஸ் அல்லது முகலாய ரூபாயாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. ரூபாயை அச்சடித்துக் கொடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்பட்டது.

இந்நிலையில் 1695ஆம் ஆண்டு கோட்டைக்குள் ஒரு புதிய நாணயத் தொழிற்சாலை கட்டப்பட்டு சில ஆண்டுகள் கழித்து கோட்டைக்குள்ளேயே வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. 1742ஆம் ஆண்டு கோட்டைக்கு வெளியே ஒரு நாணயத் தொழிற்சாலை கட்டப்பட்டது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் சிந்தாதிரிப்பேட்டை. 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இரண்டாவது தொழிற்சாலை கோட்டைக்கே திரும்பிவிட்டது. இப்போது கோட்டைக்குள் இரண்டு நாணயத் தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கின.

1815ஆம் ஆண்டு ரூபாய், அணா, பைசா என நாணயத் தொழிற்சாலையின் பணி பல மடங்கு அதிகரித்தது. எனவே கோட்டைக்கு வெளியே ஒரு பெரிய நாணய தொழிற்சாலை அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஜார்ஜ் டவுனின் வடக்கு பகுதியில் பயன்பாடற்று கிடந்த வெடிமருந்து தொழிற்சாலையை நாணயத் தொழிற்சாலையாக மாற்றலாம் என டாக்டர் பானிஸ்டர் என்பவர் யோசனை தெரிவித்தார். அப்படித்தான் தங்க சாலைக்கு வந்து சேர்ந்தது நாணயத் தொழிற்சாலை.

அதற்கு முன்பெல்லாம் இந்த சாலையை வண்ணார் சாலை என்றுதான் அழைப்பார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் துணி வியாபாரத்திற்காக நியமிக்கப்பட்ட சலவைத் தொழிலாளர்கள் இந்தப் பகுதியில்தான் தங்கி இருந்தனர். இந்நிலையில்தான் இங்கு அமைக்கப்பட்ட நாணயத் தொழிற்சாலை, 1842ஆம் ஆண்டு தனது பணியைத் தொடங்கியது. இதனிடையே பம்பாய் மற்றும் கல்கத்தா ஆகிய இடங்களில் இரண்டு பெரிய நாணயத் தொழிற்சாலைகளை கிழக்கிந்திய கம்பெனி தொடங்கியது. மெட்ராஸ் நாணயச் சாலை இவற்றிற்கு வழிகாட்டியாக இருந்தது.

குருவை மிஞ்சிய சிஷ்யர்களாக இந்த இரண்டு தொழிற்சாலைகளும் உருவெடுத்ததை அடுத்து, மெட்ராஸ் நாணயச் சாலைக்கு தேவை இல்லாமல் போய்விட்டது. எனவே 1869ஆம் ஆண்டு இது மூடப்பட்டு, இந்த இடத்தில் அரசு அச்சகம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அச்சகம் இன்றும் செயல்பட்டு வருகிறது. பட்ஜெட் முதல் சலான்கள் வரை தமிழக அரசின் அனைத்து அச்சுத் தேவைகளையும் இதுதான் நிறைவு செய்து வருகிறது.

நாணயங்களோடு நெருங்கிய நட்பு பாராட்டிக் கொண்டிருந்த தங்க சாலை, பின்னர் அச்சகங்களின் முகவரியாக மாறியது. ஆறுமுக நாவலரின் நாவல வித்யானுபால அச்சகம் இந்த தெருவில் தான் இருந்தது. ஆனந்த விகடன் தனது ஆரம்ப நாட்களில் இங்கிருந்துதான் வெளியானது. 1880களில் தி ஹிந்து பத்திரிகை வாரத்திற்கு மூன்று முறை வந்துகொண்டிருந்தபோது, தங்கசாலையில்தான் அச்சடிக்கப்பட்டது.

இசைக்குகூட இந்த தெருவுடன் நிறைய தொடர்பு இருக்கிறது. டிக்கெட் வாங்கி கச்சேரி பார்க்கும் பழக்கத்திற்கு பிள்ளையார் சுழி போட்டதே இங்கிருந்த தொண்டைமண்டல சபாதான். திருவையாற்றில் ஆண்டுதோறும் தியாகராஜ ஆராதனையை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற முடிவு இந்த தெருவில்தான் எடுக்கப்பட்டது. இங்கிருக்கும் தொண்டை மண்டல துருவ வேளாளர் பள்ளியில் 1908ஆம் ஆண்டு கூடிய இசைக் கலைஞர்கள் தான் இந்த முடிவை எடுத்து செயல்படுத்தியவர்கள். கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஹரிகதா காலட்சேபத்தை முதல்முறையாக சரஸ்வதி பாய் என்ற ஒரு பெண் அரங்கேற்றியதும் இதே தங்கசாலையில்தான்.

இப்படி நிறைய சிறப்புகளைப் பெற்ற தங்க சாலையில் தமிழர்கள் மட்டுமின்றி தெலுங்கர்கள், மார்வாடிகள், குஜராத்திகள் என பல்வேறு தரப்பினரும் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். சென்னையில் வேறு எங்கும் காண முடியாத ஒரு அற்புதமான கலாச்சாரக் கலவையைக் கொண்டிருக்கும் இந்த நீண்ட தெரு, உண்மையில் 'தங்க' சாலைதான்.

நன்றி - தினத்தந்தி

* வடலூர் வள்ளலார் வாழ்ந்த வீராச்சாமி தெரு வீடும் இந்த பகுதியில்தான் இருக்கிறது.

* பேரறிஞர் அண்ணா பச்சையப்பன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தனது தொத்தாவுடன் இந்த தெருவில்தான் வசித்து வந்தார்.

* கெயிட்டி திரையரங்கு மூலமாக, தென் இந்தியாவில் முதல் தியேட்டர் கட்டிய இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற ரகுபதி வெங்கய்யா, தங்கச்சாலையில் கட்டியதுதான் கிரவுன் தியேட்டர்.

Saturday, March 3, 2012

ராயபுரம் ரயில் நிலையம்

கால வெள்ளத்தில் எவ்வளவு பெரிய விஷயங்களும் காணாமல் போய்விட வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான நிகழ்கால சாட்சியமாக நின்று கொண்டிருக்கிறது ராயபுரம் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தின் கதை, மிக மிக சுவாரஸ்யமானது. ஆனால் இந்த பகுதியைச் சேர்ந்த பலருக்கே கூட இன்று அது தெரியவில்லை என்பதுதான் உச்சகட்ட சோகம்.

தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் ராயபுரம்தான். இங்கிருந்துதான் தென்னிந்தியாவின் முதல் ரயில் தனது பயணத்தைத் தொடங்கியது. ஸ்டீபன்சன் நீராவி என்ஜினை கண்டுபிடித்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு, தென்னிந்தியாவில் ரயில்களை இயக்குவது குறித்து லண்டனில் விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து 1845ஆம் ஆண்டு 'மெட்ராஸ் ரயில்வே கம்பெனி' தொடங்கப்பட்டது.

ஆனால் அவர்கள் திட்டமிட்டு வேலையைத் தொடங்குவதற்கு முன்னர், 1849ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 'தி கிரேட் இந்தியா பெனின்சுலா கம்பெனி' இந்தியாவின் முதல் இருப்புப் பாதையை அமைத்துவிட்டது. 21 மைல் நீளத்திற்கு அமைக்கப்பட்ட இந்த இருப்புப் பாதையில் பம்பாயின் போரி பந்தரில் (Bori Bunder) இருந்து தானே வரை, இந்தியாவின் முதல் ரயில் 1853, ஏப்ரல் 16ந் தேதி இயக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் இருப்புப் பாதை அமைக்கும் பணியை மெட்ராஸ் ரயில்வே கம்பெனி தொடங்கியது. அதற்காக அது தேர்ந்தெடுத்த இடம்தான் ராயபுரம். கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் வசித்து வந்த புனித ஜார்ஜ் கோட்டைக்கு மிக அருகில் இருந்ததால், இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு, விசாலமான அறைகள், உயரமான தூண்கள், அழகான முகப்பு என பிரம்மாண்டமான ராயபுரம் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டது.

அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் ஹாரிஸ் பிரபு 1856, ஜூன் 28ந் தேதி இதனைத் திறந்துவைத்தார். இதனை அடுத்து, ஜூலை 1ந் தேதி தென்னிந்தியாவின் முதல் ரயில் இங்கிருந்து புறப்பட்டது. ஆற்காடு நவாப்பின் தலைமை இடமாக இருந்த ஆற்காடு வரை இந்த ரயில் இயக்கப்பட்டது. இதற்கான ரயில் பெட்டிகளை அக்காலத்தில் புகழ்பெற்ற சிம்சன் கம்பெனி தயாரித்திருந்தது. ஆளுநர் ஹாரிசும், சுமார் 300 ஐரோப்பியர்களும் இந்த முதல் ரயிலில் பயணப்பட்டனர். ஆம்பூர் சென்றடைந்த ரயிலுக்கு துப்பாக்கி குண்டுகளும், பேண்டு வாத்தியங்களும் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் மற்றொரு ரயில் ராயபுரத்தில் இருந்து திருவள்ளூர் வரை இயக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி பற்றி லண்டன் பத்திரிகையான The Illustrated London News விரிவாக செய்தி வெளியிட்டிருந்தது. வழிநெடுகிலும் இந்த ரயில்களை ஏராளமானோர் அச்சம் கலந்த ஆச்சர்யத்தோடு பார்த்ததாக அந்த செய்தி தெரிவிக்கிறது. வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்களும், மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்களும் ஒரு மிகப் பெரிய இரும்பு வாகனம் தங்களை நோக்கி விரைந்து வருவதைப் பார்த்து மிரண்டு ஓடினார்களாம். சில இடங்களில் மக்கள் விழிகள் விரிய பலத்த ஆரவாரத்தோடு இந்த ரயிலை ரசித்துப் பார்த்திருக்கிறார்கள். இப்படி அன்றைய மெட்ராஸ்வாசிகளுக்கு மறக்க முடியாத ஒரு அனுபவத்தை கொடுத்தன ராயபுரத்தில் இருந்து புறப்பட்ட முதல் இரண்டு ரயில்கள்.

முதல் ரயில் ஆம்பூர் சென்றடைந்ததும், அங்கு ஒரு சிறிய விழா நடத்தப்பட்டிருக்கிறது. அதில் பேசிய ஆளுநர் ஹாரிஸ் பிரபு, மெட்ராஸ் ரயில்வே கம்பெனியையும், அதன் மேலாளர் ஜென்கின்சையும் (Major Jenkins) வெகுவாகப் பாராட்டி இருக்கிறார். ஒரு மைல் இருப்புப் பாதை அமைக்க 5,500 பவுண்டுகள் செலவானதாகவும், அது ஒரு நல்ல முதலீடுதான் என்றும் அவர் அப்போது குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படி கோலாகலமாக தொடங்கப்பட்ட ராயபுரம் ரயில் நிலையம், அடுத்த 17 ஆண்டுகளுக்கு மெட்ராஸ் மாநகரின் ஒரே ரயில் நிலையமாக கோலோச்சியது. 1873இல் இதற்கு போட்டிக்கு வந்தது மெட்ராஸ் சென்ட்ரல் ரயில் நிலையம். பின்னர் வடக்கு நோக்கி செல்லும் ரயில்கள் சென்ட்ரலில் இருந்தும், தெற்கு நோக்கி செல்லும் ரயில்கள் ராயபுரத்தில் இருந்தும் புறப்பட்டுச் செல்லும் என சொத்து பிரிக்கப்பட்டது. இதனிடையே சென்னை துறைமுகம் வேகமாக வளர்ச்சி அடைந்ததால், துறைமுகத்தின் சரக்குப் போக்குவரத்தும் ராயபுரம் ரயில்நிலையம் மூலம் நடைபெறத் தொடங்கியது. இதன் விளைவு, புதிதாக முளைத்தது எழும்பூர் ரயில் நிலையம். பின்னர் தெற்கு நோக்கி செல்லும் ரயில்கள் எழும்பூருக்கு இடம்பெயர்ந்தன.

ராயபுரம் ரயில் நிலையம் மெல்ல தனது செல்வாக்கை இழக்கத் தொடங்கியது. சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ரயில் நிலையம், இன்று புதர்கள் மண்டி பொட்டல்வெளி போல காட்சியளிக்கிறது. சென்னை கடற்கரை மார்க்கத்தில் இயக்கப்படும் வெகு சில ரயில்கள் மட்டுமே இங்கு நின்று செல்கின்றன. அப்படி ஒரு ரயிலில் அமர்ந்துகொண்டு ஜன்னல் வழியாக, பொலிவிழந்து கிடக்கும் இந்த ரயில் நிலையத்தைப் பார்க்கும்போது, நம்மையும் அறியாமல் கண்கள் பனிக்கின்றன.

நன்றி - தினத்தந்தி

* இந்தியாவில் ஹவுரா ரயில் நிலையத்திற்கு அடுத்தபடியாக அதிக இடவசதி இருக்கும் ஒரே ரயில் நிலையம் ராயபுரம்தான்.

* இந்த ரயில் நிலையம் கடந்த 2005ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டது.

* சென்ட்ரல், எழும்பூரைத் தொடர்ந்து ராயபுரத்தை மூன்றாவது ரயில் முனையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் தற்போது வலுத்து வருகின்றன.