என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Sunday, October 28, 2012

சென்னையின் சர்ச்சை சிலை


வரலாறு மிகவும் விசித்திரமானது. அது சிலரை உயர உயரத் தூக்கி கடைசியில் அதல பாதாளத்தில் வீசி எறியும். அப்படி வீசி எறியப்பட்ட ஒருவர் தான் கர்னல் ஜேம்ஸ் நீல். நகரின் பிரதான சாலையில் கம்பீரமாக நின்று கொண்டிருந்த நீலின் சிலை அருங்காட்சியகத்தில் அடைபட்டுப் போன கதை மிகவும் சுவாரஸ்யமானது.

'அலகாபாத் கசாப்புக்காரன்' என்று பிற்காலத்தில் பெயர் எடுத்த ஜேம்ஸ் நீல், ஸ்காட்லாந்தில் ஒரு சிறிய கிராமத்தில் 1810இல் பிறந்தார். கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற நீல், கிழக்கிந்திய கம்பெனியின் மெட்ராஸ் ஃபுசிலியர்ஸ் ரெஜிமண்ட் படைப் பிரிவில் சேர்ந்தார். இரண்டாவது பர்மியப் போரில் சூறைக் காற்றாய் சுழன்றடித்த நீலுக்கு லெப்டினன்ட் கர்னலாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

கிழக்கிந்திய படையின் துடிப்பான அதிகாரி எனப் பெயர் பெற்ற நீல், 1857ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தார். தனது பெயர் இந்திய சரித்திரத்தின் கருப்புப் பக்கத்தில் இடம்பெறப் போகிறது என்பதை நீல் அப்போது அறிந்திருக்கவில்லை. அவர் இந்தியா வந்த சமயம் கிழக்கிந்திய படையில் இருந்த சில இந்திய வீரர்கள் தலைமைக்கு எதிராக கொந்தளிக்கத் தொடங்கி இருந்தனர். விளைவு, இந்தியத் துணைக்கண்டத்தில் நிகழ்ந்த வெள்ளையர் எதிர்ப்புகளிலேயே அளவிலும் பங்கேற்பிலும் பெரியதாக கருதப்படும் சிப்பாய் கலகம் வெடித்தது.
சிப்பாய் கலகம்
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முதல் மாபெரும் கிளர்ச்சியான இந்த கலகம் கிழக்கிந்திய படையை கலக்கமடையச் செய்தது. வட மாநிலங்களில் வேகமாகப் பரவிய கலகத்தை ஒடுக்க திறமையான அதிகாரிகள் உடனடியாக கலவரப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவ்வாறு பனாரஸ் நகருக்கு அனுப்பப்பட்டவர்தான் நீல்.

ஜூன் 4ந் தேதி பனாரஸ் சென்றடைந்த நீலின் படை, ஒரே இரவில் ஏராளமான கிளர்ச்சியாளர்களை கொன்று குவித்தது. பின்னர் அலகாபாத்திலும் நீல் இதே வெறியாட்டத்தை வெளிப்படுத்தி கிளர்ச்சியை அடக்கி ஒடுக்கினார். நீலின் இந்த படுபாதக செயல்தான் அவருக்கு 'அலகாபாத் கசாப்புக்காரன்' என்ற அடைமொழியைப் பெற்றுத் தந்தது.

இப்படிப்பட்ட நீலுக்குத் தான் கிழக்கிந்திய கம்பெனி மவுண்ட் ரோடில் சிலை வைத்து அழகு பார்த்தது. 1861 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி நீலனின் வெண்கலச் சிலையை ஆளுநரின் ஆலோசனைக்குழு உறுப்பினர் எட்வர்டு மால்ட்பி திறந்து வைத்து, நீலனை வானளாவப் புகழ்ந்தார். இன்றைய ஸ்பென்சர் பிளாசாவுக்கு எதிரில் கம்பீரமாக நின்று கொண்டிருந்த நீலின் 10 அடி உயர பிரம்மாண்ட சிலை, தேச பக்தர்களை கொந்தளிக்கச் செய்தது. இதனை அகற்றக் கோரி ஆரம்பித்ததுதான் நீலன் சிலை சத்தியாகிரகம்.
மவுண்ட் ரோடில் இருந்த நீல் சிலை
இந்த அறவழிப் போராட்டம் 1927இல் நடத்தப்பட்டது. சென்னை மகாஜன சபையும்இந்திய தேசிய காங்கிரசின் சென்னை மாகாணக் குழுவும் நீல் சிலையை அகற்றக் கோரி தீர்மானங்கள் இயற்றின. பின் அதற்காகத் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டன. திருநெல்வேலியைச் சேர்ந்த சோமையாஜூலு இதற்கு தலைமை வகித்தார். சென்னை மாகாணம் முழுவதிலும் இருந்து வந்த போராட்டக்காரர்கள் இதில் பங்கேற்றனர். அவர்களில் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு சில வாரங்கள் முதல் ஒரு வருடம் வரை சிறை தண்டனைகள் வழங்கப்பட்டன.

சோமையாஜுலு, சாமிநாத முதலியார் போன்ற முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்பட்ட பின், செப்டம்பர் 1927இல் காமராஜர் களத்தில் இறங்கினார். அந்த சமயம் சென்னை வந்திருந்த மகாத்மா காந்தியை சந்தித்து இதற்கான அனுமதியையும் பெற்றார். சிலை அகற்றலுக்கு ஆதரவாக சென்னை சட்டமன்றத்திலும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. ஆனாலும் நீலை அங்கிருந்து அசைக்க முடியவில்லை.

அந்த சமயத்தில் சைமன் குழு புறக்கணிப்புப் போராட்டம் வலுப்பெறத் தொடங்கியதால், இது உரிய கவனம் பெறாமல் போய்விட்டது. நீல் பல ஆண்டுகள் மவுண்ட் சாலையில் மவுனமாக நின்று கொண்டிருந்தார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து நீலை இடம்மாற்றி ரிப்பன் கட்டிட வளாகத்தில் வைத்தனர்.

பின்னர் 1937இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராஜாஜி சென்னை மாகாண முதல்வரானதும் முதல் வேலையாக நீல் சிலையை அகற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து நீல் சிலையை அகற்றி சென்னை அருங்காட்சியகத்தில் வைக்க உத்தரவிடப்பட்டது. ஆனாலும் 1952ஆம் ஆண்டுதான் நீலின் சிலை முறைப்படி அருங்காட்சியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

ஒரு வீரனின் சிலை என்று ஆங்கிலேயர்களால் வியந்து பார்க்கப்பட்ட ஒன்று, இந்தியர்களால் அவமானச் சின்னமாகப் பார்க்கப்பட்டது. விளைவு, காலம் அந்த காலனை தற்போது அருங்காட்சியகத்தின் மானுடவியல் பிரிவில் நிற்க வைத்திருக்கிறது.

நன்றி - தினத்தந்தி

* லக்னோ நகரில் குதிரை மீது அமர்ந்தபடி களத்தில் கட்டளையிட்டுக் கொண்டிருந்த நீல், இந்தியச் சிப்பாய்களின் பீரங்கித் தாக்குதலுக்கு இரையாகி செத்து விழுந்தார்.

* நீலின் சிலையை லண்டனைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற சிற்பி எம் நோபிள் வடித்துக் கொடுத்தார்.

Saturday, October 27, 2012

மேப் போட்ட மெட்ராஸ்


மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் நிகழ்வுகள் சில நேரங்களில் அதிசயமாக வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்து விடுகின்றன. எவரெஸ்ட் தான் உலகின் உயரமான சிகரம் என்ற கண்டுபிடிப்புக்கான விதை மெட்ராசில் விதைக்கப்பட்டதும் அப்படி ஒரு நிகழ்வுதான்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தபோது இந்த தேசம் பல்வேறு ராஜ்ஜியங்களாக பிரிந்து கிடந்தது. எனவே இதற்கு முறையான வரைபடங்கள் எதுவும் கிடையாது. இதனை மெல்ல தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ஆங்கிலேயர்கள், இதன் நிலப்பரப்பு குறித்த துல்லியமான தகவல்கள் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதினர். இந்த கருத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டது தான் 'இந்தியாவின் பெரும் முக்கோணவியல் அளவீடு' (The Great Trigonometrical Survey of India). நிலத்தை முக்கோணங்களாக பிரித்து அளந்ததால், இந்த பெயர் கொடுக்கப்பட்டது.
கர்னல் லாம்ப்டன்
1802ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி இந்த பெரும் பணி தொடங்கியது. இந்தியாவின் நீள அகலத்தையே அளக்கப் போகும் இந்த மெகா திட்டம் தொடங்கிய இடம் மெட்ராஸ். புனித ஜார்ஜ் கோட்டையை பரங்கி மலையுடன் இணைக்கும் 7 மைல் நீளம் கொண்ட நேர்க் கோட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த வேலை ஆரம்பமானது. ஆனால் சென்னையைப் பொறுத்தவரை இதற்கு முன்னரே சில வரைபடங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. 1673-லேயே குத்துமதிப்பாக ஒரு வரைபடம் இருந்தது. இருந்தாலும் 1710இல் ஆளுநர் தாமஸ் பிட்டின் முயற்சியால் உருவான வரைபடமே நகரின் நம்பகமான முதல் வரைபடமாக கருதப்படுகிறது.

இந்தியாவின் பெரும் முக்கோணவியல் அளவீடு தொடங்கிய போது, இந்த பணியை முடிக்க 5 ஆண்டுகள் ஆகலாம் என்று நினைத்தனர். ஆனால் இந்த பணி 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கப் போகிறது என்பது அப்போது யாருக்கும் தெரியவில்லை. காரணம் இந்த பணியை அவ்வளவு துல்லியமாக மேற்கொண்டனர். ஒரு நிலத்தின் பரப்பை அளக்கும் போது, இயற்கை உட்பட எந்தெந்த காரணங்களால், எந்தெந்த அளவு தவறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று கணக்கிட்டு அதற்கேற்ப அளவீடு சீர் செய்யப்பட்டது.

நூற்றுக்கணக்கான ஆங்கிலேய அதிகாரிகளும், ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்களும் இரவு பகலாக இந்த பணியில் ஈடுபட்டனர். அப்போது விஷப் பூச்சிகள் கடித்தும், மலேரியா போன்ற நோய்கள் தாக்கியும் பலர் உயிரிழந்தனர். இருப்பினும் பணி தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்த திட்டத்தின் மேற்பார்வையாளராக லாம்ப்டன் என்பவர் நியமிக்கப்பட்டதும் வேலை இன்னும் சூடு பிடித்தது. 'எத்தகைய சோதனை வந்தாலும் தொடர்ந்து முன்னே தான் செல்ல வேண்டும்' என்ற விதியை லாம்ப்டன் வகுத்தார். அதாவது மலை, ஆறு என எது குறுக்கிட்டாலும் அதில் ஏறி அல்லது நீந்தி முன்னே சென்று அளக்க வேண்டும். இதற்காக கோணங்களை அளக்க வசதியாக லாம்ப்டன் 'தியோடலைட் (Theodolite) என்ற புதிய கருவியுடன் களம் இறங்கினார்.
தியோடலைட்
இந்த கருவி இங்கிலாந்தில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டது. ஒருமுறை தஞ்சாவூரில் ஒரு கோவிலின் கோபுர உச்சிக்கு கொண்டு சென்றபோது, இந்த கருவி கீழே விழுந்து சேதமடைந்தது. பின்னர் இது சரி செய்யப்படும் வரை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனிடையே 1818இல் ஜார்ஜ் எவரெஸ்ட் என்ற பொறியாளர் நியமிக்கப்பட்டார். இவரும் லாம்ப்டனுக்கு சளைக்காமல் பணியில் பின்னி எடுத்தார்.

மத்திய இந்தியா வரை நில அளவைப் பணி விறுவிறுப்பாக நடந்து முடிந்திருந்தபோது, ஓய்வில்லாமல் உழைத்து வந்த தாமஸ் லாம்டன், தனது 70வது வயதில் நிரந்தரமாக ஓய்வெடுத்துக் கொண்டார். அதன்பிறகு, முழுப் பொறுப்பும் எவரெஸ்ட்டிடம் அளிக்கப்பட்டது. அவர், இங்கிலாந்துக்குச் சென்று புதிய கருவிகளைக் கொண்டு வந்து, மிக துல்லியமான நில அளவைப் பணியை மேற்கொள்ளத் துவங்கினார்.

இப்படி அளந்துகொண்டே எவரெஸ்ட், இமயமலை வரை சென்று விட்டார். இமய மலையில் உள்ள சிகரங்களை கடும் சிரமங்களுக்கு மத்தியில் அளவிட்டார். ஆனாலும், அவற்றின் உயரத்தை அவரால் துல்லியமாக அறிய முடியவில்லை. இந்நிலையில் 1843-ம் ஆண்டு அவர் ஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்பினார்.

அதன்பிறகு, ஆண்ட்ரு ஸ்காட் வாக் என்ற அதிகாரி நில அளவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அவரது வழிகாட்டுதலில் இமயமலையின் சிகரங்கள் அளவிடப்பட்டன. பல்வேறு இன்னல்களுக்கு இடையில் தியோடலைட் கருவிகளை, இமயமலை மீது தூக்கிச் சென்று அதன் சிகரங்களை கணக்கெடுக்கத் துவங்கினார். அப்போதுதான், கஞ்சன் ஜங்கா சிகரம் கண்டுபிடிக்கப்​பட்டது.

ஜார்ஜ் எவரெஸ்ட்டின் பணிக் காலத்தில் ராதா நாத் சிக்தார் என்ற வங்காள இளைஞர் இந்த பணியில் சேர்ந்தார். கணிதத் திறமையும் துடிப்பும் நிறைந்த அந்த இளைஞர் நில அளவையைத் துல்லியமாகக் கணக்கிட தானே ஒரு புதிய முறையை உருவாக்கினார். டார்ஜிலிங்கில் இருந்து இமயமலையின் சிகரங்களை ஆறு கோணங்களில் துல்லியமாக அளந்து, முடிவில் 1852-ம் ஆண்டு, ராதாநாத் சிக்தார் இந்தியாவின் மிக உயரமான சிகரமாக இமயமலையின் 15-வது சிகரம் உள்ளது என்பதைக் கண்டறிந்தார். அப்படி, அவர் கண்டுபிடித்த சிகரம் 29,002 அடி உயரம் இருந்தது. தனக்கு முந்தைய சர்வேயர் ஜெனரலின் நினைவாக ஆண்ட்ரு ஸ்காட் வாக், உலகின் மிக உயரமான அந்த சிகரத்துக்கு 'ஜார்ஜ் எவரெஸ்ட்டின் பெயரைச் சூட்டினார்.
ஜியார்ஜ் எவரெஸ்ட்
ஆனால் இதை, எவரெஸ்ட்டே ஏற்க மறுத்தார். தனது பெயரை இந்தியர்களால் முறையாக உச்சரிக்க முடியாது என்பதே எவரெஸ்டின் எதிர்ப்புக்கு காரணம். ஆனால் ஆண்ட்ரு ஸ்காட் விடாப்பிடியாக உலகின் மிக உயரமான சிகரத்துக்கு எவரெஸ்ட் என்றே பெயர் சூட்டினார். இதை, ராயல் ஜியாகிரஃபி சொசைட்டி 1857-ல் அங்கீகரித்தது. இதுதான் மெட்ராசில் தொடங்கிய பணி எவரெஸ்ட் வரை நீண்ட கதை.

60 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த இந்த பணியால் இந்திய நிலவியல் துறை பயனடைந்ததைப் போல, இதில் ஈடுபட்ட சர்வேயர்களும் பயனடைந்தனர். ஆன்ட்ரூ சாம்ரெட் (Andrew Chamrette), அவரைத் தொடர்ந்து அவரது மகன், பின்னர் அவரது மகன் என ஆன்ட்ரூ குடும்பத்தினர் மூன்று தலைமுறையாக இந்த பணியில் ஈடுபட்டனர். இவர்கள் மூவரும் சேர்ந்து மகராஷ்டிர மாநிலத்தில் 1800 ஏக்கருக்கும் அதிகமாக வளைத்துப் போட்டனர். இதேபோல ஜார்ஜ் எவரெஸ்ட் அவர் பங்குக்கு டேராடூனில் 600 ஏக்கர் வாங்கிப் போட்டார். இப்படி இந்தியாவை அளந்தவர்கள் தனியாக தங்களுக்கென சில பல ஏக்கர்களை ஒதுக்கியது தனிக்கதை.

நன்றி - தினத்தந்தி

* நில அளவைக் குழு வைத்திருந்த டெலஸ்கோப் மூலம் பார்த்தால் பெண்கள் நிர்வாணமாகத் தெரிவார்கள் என்று யாரோ சொன்னதை நம்பி, ஒரு வணிகன் அவற்றைப் பிடுங்கி சோதித்துப் பார்த்த சம்பவமும் அரங்கேறி இருக்கிறது.

* பூமிக்கடியில் உள்ள புதையல்களைக் கண்டுபிடிக்க இந்த கருவி உதவும் என நினைத்து திருட்டுக் கும்பல் ஒன்று நில அளவைப் பணி​யாளர்களை மடக்கி வாரக்கணக்கில் பூமியைத் தோண்டச் செய்து இருக்கிறார்கள். புதையல் கிடைக்கவில்லை என்றவுடன் கருவிகளை உடைத்ததோடு, பணியாளர்களின் கை கால்களையும் முறித்திருக்கிறார்கள்.

Saturday, October 13, 2012

கவர்னர் ஜெனரலான காதல் மன்னன்


சாதாரண பேட்டையில் இருந்து அதிகார கோட்டைக்கு போகும் சாகசக் கதாநாயகனின் கதையை போன்று விறுவிறுப்பானது, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான வாரன் ஹேஸ்டிங்சின் வாழ்க்கை. சுமார் 300 ஆண்டுகால ஆங்கிலேய ஆட்சியில் ராபர்ட் கிளைவுக்கு அடுத்தபடியாக பெரிதும் பேசப்பட்டவர் வாரன் ஹேஸ்டிங்ஸ். இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு அவர் போட்ட பலமான அஸ்திவாரமே இதற்கு காரணம்.

வாழ்ந்து கெட்ட ஒரு அரச குடும்பத்தில் 1732இல் பிறந்தார் வாரன் ஹேஸ்டிங்ஸ். எனவே இந்தியாவிற்கு சென்றால் பிழைத்துக் கொள்ளலாம் என கப்பல் ஏறிய அந்தக்கால இங்கிலாந்து இளைஞர்களைப் போல, 18வது வயதில் தனது பயணத்தை தொடங்கினார் ஹேஸ்டிங்ஸ். கிழக்கிந்திய கம்பெனியின் சாதாரண எழுத்தராக அவர் வந்திறங்கியது முதலில் கல்கத்தாவில் என்றாலும், வாழ்வில் அனைத்து விதமான ஆட்டங்களையும் ஆடிப் பார்த்தது மெட்ராசில்தான்.

1750ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கல்கத்தா வந்த வாரன் ஹேஸ்டிங்ஸ், தனது கடின உழைப்பால் விரைவில் நல்ல பெயர் எடுத்தார். இந்தியாவைப் பற்றி தெரிந்து கொள்வதிலும், உருது, பாரசீகம் ஆகிய மொழிகளைக் கற்பதிலும் ஓய்வு நேரத்தை செலவிட்டார். இதனிடையே சில பல பதவி உயர்வுகளைப் பெற்று வாழ்க்கையில் சற்று மேலே போனாலும் கல்கத்தாவில் அன்று நிலவிய அரசியல் குழப்பங்கள் ஹேஸ்டிங்ஸை மன உளைச்சலுக்கு உள்ளாக்கின. எனவே 1764ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவியை உதறிவிட்டு இங்கிலாந்திற்கு திரும்பிவிட்டார்.

தனது மற்ற சகாக்களைப் போல தாயகம் திரும்பும்போது பெரும் செல்வத்தை அவர் சேர்த்துக் கொண்டு செல்லவில்லை. அவர் சேர்த்த சிறிதளவு பணமும் விரைவிலேயே கரைந்துவிட கடனாளியான ஹேஸ்டிங்ஸ், வட போச்சே என்று வருந்தினார். அப்போதுதான் மீண்டும் இந்தியா செல்வது என முடிவு எடுத்தார். அந்த முடிவு அவரது வாழ்வை மட்டுமின்றி இந்தியாவின் எதிர்காலத்தையே மாற்றி அமைத்தது.

இந்த முறை அவருக்கு மெட்ராசில் வேலை கிடைத்தது. இதற்காக 1769இல் ட்யூக் ஆஃப் கிராஃப்டன் என்ற கப்பலில் ஏறிய போதுதான் அவரது வாழ்வில் வசந்தம் வீசத் தொடங்கியது. அதே கப்பலில் இம்ஹோஃப் என்பவர் தனது மனைவியுடன் பயணம் செய்தார். பிரபு குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் வசதியில் குறைந்த இம்ஹோஃப் நன்றாக ஓவியம் வரைவார். எனவே சென்னையில் ஓய்வு நேரத்தில் ஆங்கிலேய அதிகாரிகளை படம் வரைந்து நன்றாக சம்பாதிக்கலாம் என்ற நினைப்போடு, சிபாரிசு மூலம் ராணுவத்தில் பயிற்சியாளர் வேலை பெற்று, கனவுகளோடு கப்பலில் வந்துகொண்டிருந்தார்.

நீண்ட கப்பல் பயணத்தில் வாரன் ஹேஸ்டிங்ஸும், இம்ஹோஃபின் மனைவி மரியாவும் நெருங்கிய நண்பர்களானார்கள். கடல் பயணம் ஒத்துக் கொள்ளாமல் ஹேஸ்டிங்ஸ் நோய்வாய்ப்பட்டபோது, மரியா மருந்துகளோடு சேர்த்து அன்பையும் கொடுத்து அரவணைத்தார். ஏற்கனவே மனைவியை இழந்திருந்த ஹேஸ்டிங்ஸுக்கு மரியாவின் துணை பெரும் ஆறுதலாக இருந்தது. சென்னையில் வந்து இறங்குவதற்கு முன்பே இவர்களின் நட்பு காதலாக பரிணாம வளர்ச்சி அடைந்துவிட்டது.
வாரன் ஹேஸ்டிங்ஸ்

சென்னைக்கு வந்ததும் வாரன் ஹேஸ்டிங்ஸ் அடிக்கடி மரியாவின் வீட்டிற்கு சென்று வந்தார். 1771இல் மரியா தனது கணவருடன் கல்கத்தா செல்லும் வரை இது நீடித்தது. ஹேஸ்டிங்ஸ் தனக்கு ஆளுநர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்னையிலேயே தங்கி இருந்தார். ஆனால் விதி அவரையும் கல்கத்தாவிற்கு இழுத்துச் சென்றது. அவருக்கு கல்கத்தாவின் ஆளுநர் பதவி கொடுக்கப்பட்டிருப்பதாக செய்தி வந்தது. மச்சக்கார ஹேஸ்டிங்ஸிற்கு அவர் விரும்பிய ஆளுநர் பதவி மரியா வசிக்கும் நகரிலேயே கிடைத்துவிட்டது.

ஹேஸ்டிங்ஸ் கல்கத்தா சென்றதும் மீண்டும் உறவு தொடர்ந்தது. அந்நாட்களில் கல்கத்தா முழுவதும் இதுதான் பேச்சாக இருந்தது. இதனிடையே ஹேஸ்டிங்ஸ் தனது நிர்வாகப் பணிகளையும் சிறப்பாக செய்துவந்தார். அந்தக் காலத்தில் நிலவிய பல்வேறு அரசியல் சிக்கல்களையும் திறம்பட சமாளித்தார். எனவே 1773இல் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். அதுநாள் வரை மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா ஆகிய மூன்று மாகாணங்களுக்கும் தனித்தனி ஆளுநர்கள்தான் இருந்து வந்தனர். ஹேஸ்டிங்ஸின் முயற்சியால்தான் இந்த மூன்றையும் ஒருங்கிணைத்து கவர்னர் ஜெனரல் என்ற பதவி உருவாக்கப்பட்டது.

இதனிடையே கணவனை விவாகரத்து செய்துவிட்டு வந்த மரியாவை 1777இல் முறைப்படி திருமணம் செய்துகொண்டார் வாரன் ஹேஸ்டிங்ஸ். பின்னர் இவர்களின் இல்வாழ்க்கை கடைசி வரை இனிமையாகத் தொடர்ந்தது. மரியாவின் மனதில் இடம் பிடித்துவிட்டால் கவர்னர் ஜெனரலிடம் காரியம் சாதித்துக் கொள்ளலாம் என சிறு குழந்தைக்கு கூட தெரிந்திருந்தது. இதனால் அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார் ஹேஸ்டிங்ஸ்.
வாரன் ஹேஸ்டிங்ஸ் நினைவிடம்

இந்த சூழலில்தான் 'பெங்கால் கெஜெட்' என்ற இந்தியாவின் முதல் செய்தித்தாளைத் தொடங்கினார் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி. ஹிக்கியின் பத்திரிகை ஹேஸ்டிங்ஸையும், மரியாவையும் சரமாரியாக கிழித்தது. இப்படித்தான் இந்தியாவின் முதல் பத்திரிகை கிசுகிசு சூடு பிடித்தது. கவர்னர் ஜெனரல் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஹிக்கியை சிறையில் அடைத்தார். அப்போதும் அடங்காமல் அவர் அவதூறுகளைப் பிரசுரித்துக் கொண்டே இருந்தார். இதனால் அவரது அச்சகத்தையும் அரசு அபகரித்துக் கொண்டது. இறுதியில் தனது போரில் ஹிக்கி தோற்றார்.

ஹிக்கியின் பத்திரிகைக்கு தீனி போடுவதைப் போல ஹேஸ்டிங்சும் நிறைய அதிகார துஷ்பிரயோகங்களிலும், ஊழல்களிலும் ஈடுபட்டார். ஓர் எழுத்தராக ஐந்து பவுண்ட் பணத்துடன் வந்த வாரன் ஹேஸ்டிங், இந்தியாவில் கொள்ளை அடித்த பணத்தின் மதிப்பு குறைந்தபட்சம் 20 மில்லியன் பவுண்ட் என்கிறார்கள். இது போன்ற குற்றச்சாட்டுகளைப் பற்றி இங்கிலாந்தின் காமன் சபையில் விசாரிக்கப்பட்டது. ஏழு ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கின் முடிவில், வாரன் ஹேஸ்டிங் குற்றமற்றவர் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பை விலைக்கு வாங்கினார் வாரன் என்றும் சொல்லப்படுகிறது.

எது எப்படியோ ஓட்டாண்டியாய் இந்தியா வந்து ஓஹோவென வாழ்ந்து, பெரும் செல்வத்துடன் ஓட்டம் பிடித்த ஆங்கிலேயர்கள் வரிசையில் வாரன் ஹேஸ்டிங்ஸும் இடம்பிடித்துவிட்டார்.

நன்றி - தினத்தந்தி

* பகவத் கீதையால் கவரப்பட்ட வாரன் ஹேஸ்டிங்ஸ் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் செய்தார்.

* மெட்ராசிற்கு ஒரு துறைமுகம் தேவை என்ற கருத்தை முதன்முதலில் வலியுறுத்தியவர் வாரன் ஹேஸ்டிங்ஸ்தான்.

Saturday, October 6, 2012

வள்ளலார் இல்லம்


ஆயுள் முழுவதும் அன்பை போதித்த வள்ளல் பெருமானை உருவாக்கியதில் தருமமிகு சென்னைக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது. சென்னை ஏழுகிணறுப் பகுதியில் வீராசாமித் தெருவில் உள்ள ஒரு ஒண்டிக் குடித்தன வீட்டில் தான் அந்த மாமனிதர் சுமார் 33 ஆண்டுகள் வசித்து வந்தார்.

கடலூர் மாவட்டம் மருதூரில் 1823இல் ராமலிங்கம் பிறந்தார். அவர் பிறந்த சில மாதங்களிலேயே தந்தையை பறிகொடுத்தார். எனவே தாயார் சின்னம்மை தனது 5 குழந்தைகளுடன் சொந்த ஊரான சின்னக் காவனத்திற்குச் வந்து விட்டார். தற்போதைய திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரிக்கு அருகில் இருக்கிறது இந்த கிராமம். சென்னைக்கு சென்று விட்டால் வாழ்க்கை வளப்படும் என ராமலிங்கத்தின் பெரிய அண்ணன் சபாபதி கருதியதால் குடும்பம் ஏழு கிணறு பகுதிக்கு இடம்பெயர்ந்தது. இப்படித்தான் இரண்டு வயது சிறுவனாக வீராசாமி தெருவில் உள்ள 31ம் நம்பர் வீட்டின் மொட்டை மாடிக்கு வந்து சேர்ந்தார் ராமலிங்கம். சிறிது காலத்தில் தாயார் சின்னம்மை காலமான பின்னர், சுமார் 33 ஆண்டுகள் அவர் இந்த வீட்டில் தான் தனது அண்ணனோடும், அண்ணியோடும் தங்கி இருந்தார்.
வீராசாமி தெருவில் வள்ளலார் வீடு
ராமலிங்கம் முறையாக பள்ளிக்குப் போகவில்லை. தமிழ் ஆசிரியர் ஒருவரிடமும், பின்னர் சொற்பொழிவாளராக இருந்த அண்ணன் சபாபதியிடமுமே பாடம் பயின்று வந்தார். மற்ற நேரங்களில் அருகில் உள்ள கந்தசாமிக் கோவிலுக்கு சென்று தியானத்தில் ஆழ்ந்துவிடுவார். ஒருமுறை அவர் சரியாகப் படிக்கவில்லை என கோபித்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார் சபாபதி. அப்போதும் ராமலிங்கம் தஞ்சமடைந்த இடம் இந்த கோவில்தான். பின்னாட்களில் வள்ளலாராக உயர்ந்த ராமலிங்க அடிகள் திருவருட்பா பாடியதும் இந்த தலத்தில்தான்.

ராமலிங்கம் திருவொற்றியூர் வடிவுடையம்மன் மீதும் அதீத பக்தி கொண்டிருந்தார். ஏழு கிணறு பகுதியிலிருந்து திருவொற்றியூருக்குத் தினமும் நடந்தே சென்று வழிபட்டு வருவது அவர் வழக்கம். ஒரு முறை நீண்ட நேரம் கோவிலில் மெய்மறந்து இருந்துவிட்டு, இரவு தாமதமாக வீட்டுக்கு வந்தார் ராமலிங்கம். கதவு மூடியிருந்ததால் வெளியில் உள்ள திண்ணையிலேயே படுத்துக் கொண்டார். அப்போது அவருக்கு அம்பிகையே அண்ணியின் உருவில் வந்து உணவு பரிமாறியதாக கூறப்படுகிறது.

ஒரு நாள் ராமலிங்கம் மாடியறையில் தீவிர முருக வழிபாட்டில் ஈடுபட்டபோது, சுவரிலிருந்த கண்ணாடியில் திருத்தணி முருகன் காட்சியளித்ததாகவும் சொல்லப்படுகிறது. வீராசாமி தெரு வீட்டில் வள்ளலார் வசித்தபோது இப்படி பல அற்புதங்கள் நிகழ்ந்ததாக அவரது வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வள்ளலாரின் மாடி அறை

புராணச் சொற்பொழிவு செய்யும் அண்ணன் சபாபதிக்கு, ஒருமுறை உடல்நலம் குன்றியதால் சொற்பொழிவுக்குச் செல்ல முடியவில்லை. எனவே ராமலிங்கத்தை அனுப்பி வைத்தார். அன்றைய தினம் சொற்பொழிவைக் கேட்க ஏராளமானோர் கூடியிருந்தனர். அண்ணன் சொன்ன படியே சில பாடல்களை மனமுருகப் பாடினார் ராமலிங்கம். பின்னர் அருமையான ஒரு சொற்பொழிவையும் நிகழ்த்தினார். இப்படி வள்ளலாரின் முதல் சொற்பொழிவு அரங்கேறியதும் சென்னையில்தான்.

வள்ளலாரின் பாடல்களை அவரது மாணவர்கள் அருட்பா
என்று அழைத்தனர். அதுவரை தேவார, திருவாசகத்தை மட்டுமே அவ்வாறு அழைத்து வந்தனர். இதனால் ஆறுமுக நாவலர் என்பவர் அருட்பா என்று அழைப்பது தவறென நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் வள்ளலாரே தனக்காக வாதாடினார், வழக்கில் வெற்றியும் பெற்றார்.

இதனிடையே பலரது வற்புறுத்தலுக்கு இணங்க, ராமலிங்கம் இருபத்தேழாவது வயதில் தனது சகோதரியின் மகளை திருமணம் செய்துகொண்டார். ராமலிங்கம் அமைதியை நாடியவர். கடவுள் என்றால் என்ன என்று அறிய விரும்பியவர். எனவே, 1858ஆம் ஆண்டு சென்னையிலிருந்து புறப்பட்டுப் பல தலங்களைத் தரிசித்து சிதம்பரத்தை அடைந்தார்.

பின்னர் அவர் வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை நிறுவி பசிப் பிணி போக்கியது எல்லாம் வரலாறு. இறுதியில் வள்ளலார், 1874ல் தை மாதம் 19ம் தேதி வடலூருக்கு அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் இருக்கும் சித்திவளாக மாளிகை அறைக்குள் புகுந்தார். அவரது விருப்பப்படி, அவரது பிரதம சீடர்கள் மூடப்பட்ட அறையின் வெளிப்புறத்தைப் பூட்டினார்கள். அன்று முதல் வள்ளலார் உருவத்தை துறந்து அருவமாக மாறி விட்டதாக சொல்லப்படுகிறது.

மொத்தத்தில் தனது 51 ஆண்டு கால வாழ்வில், பெரும்பகுதியை அவர் சென்னையில்தான் கழித்திருக்கிறார். பாரிமுனை, ஏழு கிணறு, திருவொற்றியூர் என நகரின் பல இடங்களிலும் அந்த வள்ளல் பெருமான் வலம் வந்திருக்கிறார். இறைத் தேடலில் அவருக்கு கிடைத்த பல்வேறு அனுபவங்களை வீராசாமித் தெரு வீடு பார்த்திருக்கிறது. ஆனால் இந்த நினைவுகளை எல்லாம் நெஞ்சில் சுமந்தபடி அந்த வீட்டிற்கு இன்று போனால், ஏமாற்றமே மிஞ்சுகிறது.

சுமார் 187 ஆண்டுகளைக் கடந்த பின்னும், சென்னையின் மத்திய தர குடும்பங்கள் வசிக்கும் ஒரு சாதாரண ஒண்டிக்குடித்தனமாகத் தான் இன்றும் அந்த வீடு இருக்கிறது. தண்ணீர் பிடிப்பது, வேலைக்கு கிளம்புவது என பக்கத்து போர்ஷன்காரர்கள் அன்றாட அலுவல்களில் மும்முரமாக இருக்கிறார்கள். மாடியில் வசித்த மாமனிதரை நினைப்பதெற்கெல்லாம் அவர்களுக்கு நேரம் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த வீடு தற்போது தனியார் வசம் இருந்தாலும், உள்ளே சென்று பார்க்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் ஒரு மாபெரும் மனிதர் வாழ்ந்த வீடு என்பதற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை. வள்ளலாரின் நினைவாகத் தான் அந்த பகுதியே இன்று வள்ளலார் நகர் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அவர் வாழ்ந்த வீட்டை முறையாகப் பராமரிக்கத்தான் ஆள் இல்லை. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் வீட்டைப் பார்க்கும்போது நம் மனம் வாடித்தான் போகிறது.

நன்றி - தினத்தந்தி