என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Thursday, August 26, 2010

பழையனூர் நீலி(2)



சென்ற பதிவின் தொடர்ச்சி....


நீலன், நீலியின் குட்டு வெளிப்பட்டதும், அந்த பேய்க் குழந்தைகளை வீட்டில் வைத்துக் கொள்ள பயந்த பெற்றோர், அவற்றை தொட்டிலோடு கொண்டு போய் ஒரு வேல மரத்தில் கட்டி விட்டு வந்துவிட்டார்கள். உடனே இரு குழந்தைகளும் மீண்டும் பழைய உருக் கொண்டன. இனியும் ஒன்றாக இருந்தால் பழிவாங்க முடியாது என்று எண்ணி, பிரிந்து செல்ல முடிவெடுத்தன. நீலன் அந்த வேல மரத்திலேயே தங்கி இருக்க, நீலி திருச்செங்கோடு சென்றுவிட்டாள்.

ஒருநாள் பழையனூரில் உள்ள வேளாளர்கள் உழவிற்கு கலப்பை மரம் தேவைப்பட்டதால், செழிப்பான அந்த வேல மரத்தை வெட்டிக் கொண்டு போய்விட்டார்கள். இப்போது நீலனுக்கு இருந்த வீடும் போய்விட்டது. அந்த ஆத்திரத்தில் அலைந்துகொண்டிருந்த நீலன் அவ்வழியாக வந்த திருவாலங்காட்டு கோவில் குருக்களை அடி பின்னிவிட்டான். இது குறித்து குருக்கள் சிவனிடம் முறையிட, சிவன் தனது கணங்களில் ஒன்றை அனுப்பி நீலனின் கதையை முடித்துவிட்டார்.

இதை அறிந்ததும் அலறி அடித்து ஓடிவந்த நீலி, தனது சகோதரன் சாவிற்கு காரணமான வேளாளர்களையும் பழிதீர்ப்பேன் என சபதமேற்றாள். தக்க தருணத்திற்காக திருவாலங்காட்டிலேயே காத்திருந்தாள்.

இந்த சமயத்தில் தான் காஞ்சியில் இருந்த தரிசனனுக்கு திடீரென பழையனூர் சென்று வியாபாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. மந்திரக் கத்தி இருக்கும் தைரியத்தில், யார் தடுத்தும் கேளாமல் கிளம்பிவிட்டான். தரிசனன் திருவாலங்காட்டை அடைந்ததும் அவனை நீலி பார்த்துவிட்டது. உடனே கால் கேர்ளாக மாறி வந்து 'சிறப்பு செஞ்சுட்டு போங்க' என்று அழைத்தாள். ஆனால் தரிசனன் இதற்கெல்லாம் மசியவில்லை. மந்திரக் கத்தி வேறு இருந்ததால் அவனை நீலியால் நெருங்கவும் முடியவில்லை.

நீலியின் அடுத்தடுத்த அட்டெம்டுகளும் தோல்வியிலேயே முடிந்தன. உடனே நீலி பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்தாள். தரிசனனின் மனைவியைப் போல் உருமாறி, ஒரு பெரிய கள்ளிக் கட்டையை எடுத்து குழந்தையாக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு தலைவிரிகோலமாக பஞ்சாயத்தை கூட்டிவிட்டாள். தன் கணவர் தன்னை பிரிந்து செல்ல நினைக்கிறார், நீங்கள் தான் சேர்த்து வைக்க வேண்டும் என்று உருக்கமாக கண்ணீர் விட்டாள். தரிசனன் எவ்வளவு சொல்லியும் எடுபடவில்லை.

என் கணவர் ரொம்ப கோபக்காரர், நான் பஞ்சாயத்தை கூட்டியதால் என்னைக் கொன்றாலும் கொன்றுவிடுவார். அவர் கையில் உள்ள கத்தியையும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றாள். தரிசனனுக்கு உதறல் எடுத்தது. அய்யா, சாமி இது பேய். என்னைக் கொல்ல வந்திருக்கிறது என்று வாதாடியும் எந்த பயனும் இல்லை.

தரிசனரே, தைரியமாக போங்கள். ஒருவேளை உங்கள் உயிருக்கு ஆபத்து வந்தால், இங்கு பஞ்சாயத்தில் அமர்ந்திருக்கும் நாங்கள் 70 வேளாளர்களும் அப்போதே உயிரை மாய்த்துக் கொள்வோம் என்று அருகில் உள்ள சாட்சிபூதேஸ்வரர் கோவிலில் வைத்து சத்தியம் செய்துகொடுத்தனர்.

அப்புறம் என்ன, நீலி தரிசனனின் கதையை முடித்துவிட்டாள். இதை அறிந்த வேளாளர்களும் சாட்சிபூதேஸவரர் ஆலயம் முன்பு தீக்குளித்து தங்கள் வாக்கை காப்பாற்றி விட்டனர். நீலி தன் குழந்தையை காலால் மிதித்து கொன்றதாகவும் கூறப்படுகிறது. இதுதான் பழையனூர் நீலியின் கதை.

விசாரித்துப் பார்த்ததில் சாட்சிபூதேஸ்வரர் கோவில், வேளாளர்கள் தீக்குளித்த இடம் , நீலி குழந்தையை காலால் மிதித்த இடம் எல்லாம் இன்றும் இருப்பதாகச் சொன்னார்கள். விசாரித்துப் போய் சாட்சிபூதேஸ்வரரை பார்த்துவிட்டேன். பழங்கால சிறிய சிவாலயம். ஆங்காங்கே சிதலமடைந்திருக்கிறது. எதிரிலேயே தீக்குளிப்பு மண்டபம் இருக்கிறது. வேளாளர்கள் தீக்குளிப்பது போன்ற சிலையை செய்து வைத்திருக்கிறார்கள்.

அடுத்து நீலி குழந்தையை கொன்ற இடம் எங்கே என்று விசாரித்தேன். அதுதான் நீலி கோவில் என்றார்கள். ஏதோ கோவில் இருக்கும் என்று தேடி அலைந்தவனுக்கு மெயின் ரோட்டின் ஒரு ஓரத்தில் சிறிய சமாதி போன்ற தொட்டி ஒன்றைக் காட்டினார்கள். குப்பைகள் மலிந்து குப்பைத் தொட்டி போன்றே இருக்கிறது. இதற்கு காரணமானவர்களை பழையனூர் நீலி நிச்சயம் பழிவாங்காமல் விடமாட்டாள் பீ... கேர்ஃபுல்...

Tuesday, August 24, 2010

பழையனூர் நீலி

முதல் ஜென்மத்தில் ஏமாற்றியவனை அடுத்த ஜென்மத்தில் பழிவாங்கிய பழையனூர் நீலியின் கதையை எழுதுவதாக சொல்லியிருந்தேன், அல்லவா. அதை எழுத இப்போது தான் நேரம் கிடைத்தது. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

உண்மையைச் சொல்வதென்றால் நான் திருவாலங்காடு சிவன் கோவிலை பார்ப்பதற்காகத் தான் புறப்பட்டேன். சிவன் கோவிலை நெருங்க இன்னும் சில கிலோ மீட்டர்கள் இருக்கும்போது சாலையின் இடதுபுறம் பழையனூர் என்ற பெயர்ப் பலகை தெரிந்தது. அதைப் பார்த்ததும், எப்போதோ சிறு வயதில் நான் இரவில் கேட்டு பயந்து நடுங்கிய பழையனூர் நீலியின் நினைவு திடீரென தோன்றியது. அந்த பழையனூராக இருக்குமோ என்ற சந்தேகம் என்னை மேற்கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.

அருகில் பாழடைந்த பேருந்து நிறுத்தம் ஒன்றில் அமர்ந்துகொண்டிருந்த சிலரிடம் நீலியைப் பற்றி விசாரித்தேன். என்ன ஆச்சர்யம், நான் பயந்த அதே பழையனூர்தான் இது. நீலிக்கு கோவில் கூட இருக்கிறது என்றார்கள். சரி முதலில் நீலியைப் பார்த்துவிடுவோம் என்று வண்டியைத் திருப்பினேன். அதற்கு முன்னால் உங்களுக்கு நீலியின் கதையை சொல்லிவிடுகிறேன்.

அன்றைய காஞ்சி மாநகரில் புவனபதி என்று ஒரு அந்தணர் இருந்தார். சிறிது காலம் இல்லறம் நடத்திய அவர் புனித யாத்திரை செல்லத் திட்டமிட்டார். அதனையடுத்து காசிக்கு சென்று காசி விஸ்வநாதரை வழிபட்டு கொஞ்ச காலம் அங்கேயே தங்கியிருந்தார். அங்கிருந்த சத்தியஞானி என்பவர் நம்ம புவனபதியை ஒருநாள் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார். விருந்துக்கு போன இடத்தில் நம்மாள் விருந்து கொடுத்தவரின் மகள் நவக்கியானியின் மனதை மயக்கி கல்யாணமும் செய்துகொண்டார். தனக்கு காஞ்சிபுரத்தில் ஒரு குடும்பம் இருப்பதைப் பற்றி மூச்சுகூட விடவில்லை.

சிறிது காலம் கழித்து ஊர் ஞாபகம் வரவே காஞ்சிக்கு புறப்பட்டார் புவனபதி. நவக்கியானி நானும் வர்ரேன் என அடம்பிடிக்க வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டார் புவனபதி. போதாக் குறைக்கு நவக்கியானியின் சகோதரன் சிவக்கியானியும் கூட கிளம்பிவிட்டான். சொந்த ஊர் நெருங்க நெருங்க புவனபதிக்கு உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது.

ஒரு மாலைப் பொழுது திருவாலங்காட்டை அடைந்த அவர்கள் அங்கேயே இரவு தங்க முடிவு செய்தனர். அப்போதுதான் புவனபதிக்கு ஒரு விபரீத எண்ணம் தோன்றியது. குடிப்பதற்கு தண்ணீர் கொண்டுவருமாறு கூறி மைத்துனனை அனுப்பிவிட்டு, இரண்டாவது மனைவியின் கழுத்தை நெறித்து பரலோகம் அனுப்பிவிட்டார் நம்மாள். அடுத்து ஊரைப் பார்த்து ஓட்டம்பிடித்தார்.

தண்ணீருடன் வந்த அண்ணன், தங்கை இறந்துகிடப்பதைப் பார்த்து துடித்தான். பக்கத்தில் இருந்த புளிய மரத்தில் தூக்குப் போட்டு தானும் இறந்துவிட்டான். அவர்கள் இருவரும் நீலன், நீலி என்ற பேய்களாக அந்த ஆலங்காட்டையே சுற்றி சுற்றி வந்தனர்.

ஒரு பிறவி முடிந்தது. அடுத்த பிறவியில் புவனபதி வைசிய குலத்தில் தரிசனன் என்ற பெயரில் பிறந்தான். அவனது ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர்கள், இவனைப் பழிவாங்க வடக்கில் ஒரு பேய் காத்துக் கொண்டிருப்பதாக எச்சரித்தார்கள். அந்த பேயிடம் இருந்து தப்பிக்க மந்திரித்த கத்தி ஒன்றையும் கொடுத்தனர். முடிந்தவரை வடக்கு பக்கமாக போவதை தவிர்க்குமாறும் அறிவுரை கூறினர்.

தரிசனனுக்கு உரிய வயது வந்ததும் காஞ்சிபுரத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. தரிசனனின் அப்பா சாவதற்கு முன், அவனுக்கு இருக்கும் ஆபத்தைப் பற்றி விளக்கி அந்த மந்திரக் கத்தியையும் கொடுத்துவிட்டு மண்டையைப் போட்டார்.

இது இப்படி இருக்க நீலனும், நீலியும் திருவாலங்காட்டில் ஒரு தம்பதிக்கு குழந்தைகளாகப் பிறந்தனர். இருவரும் பகலில் தொட்டிலில் படுத்து உறங்குவார்கள். இரவானதும் பேயாகி ஆடு, மாடுகளை கொன்று ரத்தத்தைக் குடிப்பார்கள். ஊரில் இருந்து ஆடு, மாடுகள் மர்மமான முறையில் இறப்பதைக் கண்ட ஊர்காரர்கள் ஒரு நாள் இரவு மறைந்திருந்து பார்த்தபோது நீலன், நீலியின் குட்டு வெளிப்பட்டு விட்டது.....

மீதி அடுத்த பதிவில்....
(நீலி ஒரு ஜென்மம் காத்திருந்தாள், நீங்க ஒருநாள் பொறுத்துக்கங்க பாஸ்...)

Friday, August 20, 2010

பழி வாங்கிய நீலி

முதல் ஜென்மத்தில் ஏமாற்றியவனை அடுத்த ஜென்மத்தில் பழி வாங்கிய நீலியின் பயங்கர கதை.... நீலி தனது கணவனை கொன்றுவிட்டு, குழந்தைகளையும் காலால் மிதித்து கொன்ற இடத்தை அண்மையில் நேரில் சென்று பார்த்துவிட்டு வந்தேன். அது பற்றி விரைவில் எழுதுகிறேன்.

Wednesday, August 18, 2010

தியானம்

என்ன முயன்றும்
கட்டவிழ்ந்து ஓடும்மனம்
உன் நினைவெனும்
ஒற்றைப் புள்ளியில்
ஒருமைப்பட்டு நிற்கிறதே
தியானமடி நீ எனக்கு!

Wednesday, August 11, 2010

ஹெமீஜி கோட்டை



இயற்கையும், தொழில்நுட்ப அறிவும் சேர்ந்தால் ஒரு கோட்டையை எந்தளவுக்கு வலிமையுள்ளதாக ஆக்க முடியும் என்பதற்கு ஜப்பானின் ஹெமீஜி கோட்டை மிகச் சிறந்த உதாரணம். 14-ம் நூற்றாண்டில் அகாமாட்சு சடனோரி என்ற மன்னரால் கட்டப்பட்ட போது இது சாதாரண கட்டிடமாகத் தான் இருந்தது. இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு தான் இது பலம் வாய்ந்த கோட்டையாக உருமாறியது. மேல் இருந்து பார்த்தால் பறக்கத் தயார் நிலையில் இருக்கும் பறவையைப் போல காட்சியளிக்கும் இந்த மலைக் கோட்டை இரண்டு மலைகளின் மேல் கட்டப்பட்டுள்ளது.

கோட்டையின் மையப் பகுதியில் உள்ள பிரதான மாளிகையின் பாதுகாப்பைக் கருதி அதனைச் சுற்றி 3 அகழிகளை அமைத்துள்ளனர். முதல் மற்றும் இரண்டாவது அகழிகளுக்கு வெளிப்புறமாக கோட்டைக்குள் வசிக்கும் மற்றவர்களின் இருப்பிடங்கள் உள்ளன. எனவே எத்தகைய பலம் வாய்ந்த எதிரியும் மூன்று கட்டப் பாதுகாப்பிற்குள் இருக்கும் மைய மாளிகையை எளிதில் அணுகிவிட முடியாது. அதேபோல மூன்று அகழிகளை கடப்பதற்குள் எதிரிகளின் படை பலமும் கணிசமாக குறைந்துவிடும் என்பதால் இத்தகைய ஏற்பாட்டைச் செய்துள்ளனர்.

கோட்டையை நெருங்கும் எதிரிகள் உள்ளே இருப்பவற்றை எளிதாகப் பார்க்க முடியாதபடி, கோட்டையின் சுற்றுச் சுவர்களை சற்று சரிவாகக் கட்டியிருக்கின்றனர். கட்டுக்காவலையும் மீறி நுழையும் எதிரிகளைத் தடுக்க கோட்டைக்குள் மொத்தம் 84 கதவுகள் இருக்கின்றன. எதிரிகளின் பெரும்படை வேகமாக உள்ளே நுழைவதை தடுப்பதற்காக இந்த கதவுகளை மிகவும் சிறியதாக அமைத்திருக்கிறார்கள். அதேபோல எதிரிகளை குழப்புவதற்காக நாலாபுறமும் பல்வேறு பாதைகள் பிரிந்து செல்லும் படி வடிவமைத்துள்ளனர். எந்த பாதை எங்கு செல்கிறது என்பது அந்த கோட்டையில் வசிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.

எதிரிகளை திணறடிப்பதற்காக இந்த கோட்டையின் வடிவமைப்பில் சில பிரத்யேக முறைகளையும் கையாண்டுள்ளனர். உதாரணத்திற்கு மேல்தளத்திற்கு செல்ல படிக்கட்டுகளில் ஏறினால், சிறிது தூரம் சென்றதும் அது நம்மை கீழ்தளத்தில் கொண்டு விடும்படி அமைத்துள்ளனர். படிக்கட்டுகளுக்கு இடையிலும் அதிக இடைவெளி இருப்பதால் யாரும் விரைவாக அவற்றில் ஏறிவிட முடியாது. ஆனால் இவ்வளவு பாதுகாப்பாக கட்டப்பட்டுள்ள இந்த கோட்டை இதுவரை எந்த போரையும் சந்தித்ததில்லை. அதனால் தானோ என்னவோ இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் ஹெமீஜி கோட்டை அதே கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது.

சிசென் இட்ஸா



பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 7-ம் நூற்றாண்டில் இட்ஸா என்று அழைக்கப்பட்ட வீரர் கூட்டம், வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் நகரம் ஒன்றைக் கைப்பற்றியது. அன்று முதல் அந்த நகரம் சிசென் இட்ஸா என்று வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் அந்த நகரில் ஏராளமான மாளிகைகளையும், கோவில்களையும், நினைவுச் சின்னங்களையும் கட்டினார்கள். மாயர்கள் என வரலாற்றில் குறிக்கப்படும் அந்நகர மக்கள் சிறந்த போர் வீரர்கள் மட்டுமின்றி அறிவில் சிறந்தவர்களாகவும் இருந்தனர். வானில் உள்ள நட்சத்திரங்களை ஆராய்வதற்காக அவர்கள் கட்டியுள்ள ஆய்வகமே இதற்கு சாட்சி. நத்தை வடிவில் உருவாக்கப்பட்ட இந்த ஆய்வகத்தின் அறைகளில் விழும் நிழலை வைத்தே அவர்கள் பல்வேறு வானிலைகளை கணித்தனர்.

வரலாற்றை எழுதி வைக்கும் அரிய பழக்கமும் மாயர்களிடம் இருந்திருக்கிறது. பந்து விளையாட்டுகளிலும் இவர்கள் அதிக ஈடுபாடு காட்டினர். எனவே இதற்கென நீண்ட விசாலமான பல மைதானங்களையும் உருவாக்கியுள்ளனர். அதில் ஒன்றின் நீளம் 545 அடி, அகலம் 232 அடி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த மைதானத்தின் உட்புற சுவர்களில் வீரர்கள் பந்து விளையாடுவது போலவும், தோற்ற அணித் தலைவரின் தலை வெட்டப்படுவது போலவும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இந்த நகரின் மையப்பகுதியில் பிரமிட் வடிவில் அமைந்துள்ள குகுல்கன் (ரிuளீuறீநீணீஸீ) கோவில் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்கிறது. குகுல்கன் எனப்படும் இறக்கை முளைத்த பாம்புதான் மாயர்களின் முக்கிய கடவுள். எனவே அதற்காக இந்த பிரம்மாண்ட கோவிலை உருவாக்கியுள்ளனர். கோட்டை என்றும் அழைக்கப்படும் இந்த கோவிலின் நான்கு புறங்களிலும் உச்சியை நோக்கி படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படிக்கட்டுகளின் கைப்பிடி சுவரின் அடிப்பாகம் ராட்ச பாம்பைப் போல உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் இதன் நிழல் அருகில் உள்ள சுவரில் விழும் விதத்தில் மிக நேர்த்தியாக, ஆச்சரியப்படும் படி, இந்த கோவிலை வடிவமைத்துள்ளனர்.

சிசென் இட்ஸாவைச் சுற்றி இரண்டு ராட்சத கிணறுகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது பலி கிணறு. இது மாயர்களின் மழைக் கடவுளான சாக்கை (சிலீணீணீநீ) வழிபட்டவர்களின் புனிதக் கிணறு. இந்த கிணற்றில் பானை முதல் விலை உயர்ந்த நவரத்தினங்கள் வரை பல பொருட்களை மக்கள், சாக் தெய்வத்திற்கு படையலாக போட்டு உள்ளனர். பஞ்ச காலங்களில் நரபலியும் கொடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது. இவை தவிர போர் வீரர்களை நினைவு கூறும் வகையில் ஆயிரம் தூண்களுடன் கோவில், தாடி மனிதன் கோவில், மான் கோவில் என பல கோவில்கள் இங்கு காணப்படுகின்றன.

இவ்வளவு சிறப்பான கட்டிடங்களை உருவாக்கிய மாயர்கள் திடீரென ஒருநாள் இந்த நகரைவிட்டுச் செல்ல முடிவெடுத்தனர். இதற்கான காரணம் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. ஆனால் சிசென் இட்ஸாவை சுற்றியுள்ள குகைகளில் அவர்கள் பயன்படுத்திய பானை உள்பட பல்வேறு அபூர்வ பொருட்கள் இன்னும் அப்படியே உள்ளன. இவை காண்போரை வியப்பில் ஆழ்த்துகின்றன.

பெட்ரா



மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட பிரம்மாண்டம் தான் ஜோர்டான் நாட்டில் அமைந்துள்ள பெட்ரா குகைக் கோவில்கள். இது சாக்கடலுக்கும், அகாபா வளைகுடாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. 18-ம் நூற்றாண்டு வரை பலராலும் அறியப்படாமல் இருந்த இந்த மலை நகரத்தை, 1812-ம் ஆண்டு லுட்விக் பர்க்ஹார்ட் (லிuபீஷ்வீரீ ஙிuக்ஷீநீளீலீணீக்ஷீபீt) என்ற சுவிட்சர்லாந்து நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்தான் வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டினார். பின்னர் 1985-ம் ஆண்டு இது யுனெஸ்கோ அமைப்பால் உலக கலாச்சாரச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 2007-ல் சுவிட்சர்லாந்து நாட்டின் தனியார் அமைப்பு வெளியிட்ட புதிய 7 உலக அதிசயங்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.

உலக அதிசயமாக கருதப்படும் அளவுக்கு அங்கு என்ன இருக்கிறது? கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கட்டப்பட்ட இந்த மலைக் கோவில்கள் இன்னும் காலத்தை வென்று நிற்கின்றன என்ற ஒரு காரணமே போதும். ஆனால் அதையும் தாண்டி பல அதிசயங்கள் அங்கே விரிந்து கிடக்கின்றன. பண்டைய காலத்தில் நெபாடியர்களின் தலைநகரமாக செல்வ வளம் கொழித்த நகரம் தான் பெட்ரா. பெட்ரா என்றால் கிரேக்க மொழியில் பாறை என்று அர்த்தம். நாலாபுறமும் மலைகள் சூழ நடுவில் இருக்கும் பள்ளத்தாக்கில் அமைந்திருந்ததால் இந்த நகரம் மிகவும் பாதுகாப்பானதாகவும் கருதப்பட்டது.

நெபாடியர்கள் தண்ணீர் மேலாண்மையில் கைதேர்ந்தவர்கள். அந்த வறண்ட மலைப் பிரதேசத்தில் பெய்யும் மழை வீணாகி விடாத வகையில் நகருக்குள் நேர்த்தியான கால்வாய்கள், அணைகள் போன்றவற்றை அமைத்து தண்ணீரை பல இடங்களில் தேக்கியுள்ளனர். காலத்தை வென்று வானைத் தொடும் வகையில் உயர்ந்து நிற்கும் குகைக் கோவில்கள் தான் இந்த நகரின் சிறப்பம்சம். இவற்றில் பல காலவெள்ளத்தில் சிதைந்து விட்டாலும், பானை சோற்றுக்கு பதம் சொல்வது போல இன்னும் சில பிரம்மாண்டங்கள் அங்கே நிலைத்து நிற்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது, கருவூலம் என அழைக்கப்படும் அல்-கஸ்னே. பண்டைய மன்னர் ஒருவர் தனது பொக்கிஷங்களை போருக்கு செல்லும் வழியில் இந்த மலைக் குகையின் கூரைகளில் ஒளித்து வைத்தார் என்று ஒரு செவி வழிக் கதையும் உள்ளது. ஆனால் இந்த கல் கட்டிடத்தின் சிற்ப வேலைப்பாடுகளையும், கைவினை நுணுக்கங்களையும் பார்க்கும் போது இது உண்மையிலேயே கலைகளின் கஜானா என்றுதான் சொல்ல வேண்டும். குறுகிய மலைப் பாதை வழியாக இந்த இடத்தை அடைவதே மிகவும் சவால் மிக்க பயணமாக இருப்பதால் இதைக் காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

பெட்ராவில் உள்ள ஒவ்வொரு கல் மாளிகையும் கட்டிடக் கலைக்கு பெருமை சேர்ப்பவை. பல்வேறு கலாசாரங்களின் கலவையாக இந்த கல் மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. நகரின் மையத்தில் அமைந்துள்ள பெரிய கோவிலின் முகப்பு பகுதி மலைக்க வைக்கும் நான்கு தூண்களுடன் பிரம்மாண்டமாக நம்மை வரவேற்கிறது. உள்ளே சென்று பார்த்தால் விழிகள் வியப்பால் விரிந்து விடுகின்றன. இந்த கோவிலைச் சுற்றி நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளில் கண்டெடுக்கப்படும் பொக்கிஷங்கள் நாம் இன்னும் பல அதிசயங்களுக்கு தயாராக வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்கின்றன.

மலை உச்சி மடாலயம்



எத்தியோப்பியாவின் பழமையான மடாலயங்களில் ஒன்றான டெப்ரா டெமோ (ஞிமீதீக்ஷீணீ ஞிணீனீஷீ) மடாலயம் டிக்ரே நகரில் உள்ள மலை உச்சியில் அமைந்துள்ளது. சுமார் 1400 ஆண்டுகள் பழமையான இந்த மடாலயத்தைக் காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். மற்ற சுற்றுலாத் தலங்களைப் போல அவ்வளவு சுலபத்தில் இங்கு சென்றுவிட முடியாது. காரணம் இந்த மடாலயம் 75 அடி உயரமுள்ள செங்குத்தான மலையில் அமைந்துள்ளது. மலை உச்சியில் இருந்து தொங்கவிடப்படும் ஒரு கயிற்றை இடுப்பில் கட்டிக் கொண்டு, மற்றொரு கயிற்றைப் பிடித்து ஏறித்தான் உச்சிக்கு செல்ல வேண்டும்.

டெப்ரா டெமோ மடாலயம் அபுனா அராகவி (கிதீuஸீணீ கிக்ஷீணீரீணீஷ்வீ) என்ற துறவியால் நிர்மாணிக்கப்பட்டது. ஒரு ராட்சத பாம்பு அவரை இந்த மலை உச்சிக்கு கொண்டு வந்ததாகவும், பிறகு அவர் இந்த மடாலயத்தை உருவாக்கியதாகவும் ஒரு நாட்டுப்புறக் கதை உள்ளது. இதன் அருகிலேயே ஒரு கிறிஸ்துவ தேவாலயமும் உள்ளது. எளிதில் அணுக முடியாத உயரத்தில் தனித்திருந்ததால் எத்தியோப்பியாவின் பல அரிய கையெழுத்துப் பிரதிகளை அக்காலத்தில் இந்த மடாலயத்தில் பாதுகாத்து வந்தனர். அவை இன்னும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த பழங்கால தேவாலயத்தின் தூண்களிலும், உட்புற கூரையிலும் வரையப்பட்டுள்ள அற்புத ஓவியங்களும் எத்தியோப்பியாவின் கலைப் பொக்கிஷங்களாக கருதப்படுகின்றன.

அக்காலத்தில் நூற்றுக்கணக்கான துறவிகள் இந்த மடாலயத்தில் தங்கி தியானத்தில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் மக்கள் இவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்கி வந்தாலும், இந்தத் துறவிகளும் மலையடிவாரத்தில் ஆடு, மாடுகளை மேய்த்தும், தானியங்களை பயிரிட்டும் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டுள்ளனர். தண்ணீர் தேவைக்காக மலை உச்சியிலேயே ஒரு பெரிய நீர்த்தேக்கம் ஒன்றையும் உருவாக்கியுள்ளனர். மற்ற எத்தியோப்பிய மடாலயங்களைப் போல இங்கும் பெண்களுக்கு அனுமதி இல்லை.

நைலின் நதி மூலம்



எத்தியோப்பியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அழகிய பாகிர் தார் நகரில் உள்ளது அந்த பிரம்மாண்ட ஏரி. ‘தானா ஏரி’ என்று அழைக்கப்படும் அந்த ராட்சத ஏரியின் பரப்பளவைக் கேட்டால் அசந்து போய் விடுவீர்கள். சுமார் 3,600 சதுர கிலோ மீட்டர்கள். இந்த ஏரிக்குள் 37 தீவுகள் உள்ளன. இவை அனைத்தையும் விட முக்கியமான விஷயம், இந்த பிரம்மாண்ட ஏரியில் இருந்துதான் உலகின் நீளமான நைல் நதி உற்பத்தியாகிறது.

தானா ஏரியில் உள்ள தீவுகளில் சரித்திர மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த தேவாலயங்களும், மடாலயங்களும் உள்ளன. பல்வேறு நூற்றாண்டுகளைச் சேர்ந்த இந்த தேவாலயங்களில் உலகின் பல அரிய ஓவியங்கள் உள்ளன. அந்த காலத்தில் புறஉலகத் தொடர்பே இல்லாமல் தனித்திருந்ததால் எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற நாட்டின் அரிய கலைப் பொக்கிஷங்களையும், மதச் சின்னங்களையும் இங்கு பாதுகாத்து வைத்தனர். அக்காலத்தில் எத்தியோப்பியாவை ஆண்ட ஐந்து சக்கரவர்த்திகளின் உடல்களின் மிச்சங்களும் இங்குள்ள டாகா இஸ்டஃபேனஸ் என்ற தீவில் வைக்கப்பட்டுள்ளது.
பறவை நேசர்களுக்கும் தானா ஏரி ஒரு சொர்க்க பூமியாகத் திகழ்கிறது. காரணம், இந்த ஏரியின் கரைப் பகுதிகளில் பல்வேறு இனப் பறவைகள் காணப்படுகின்றன. உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் இங்கு ஏராளமான பறவைகள் வருகின்றன. எனவே ஏரி முழுவதும் ஆங்காங்கே காணப்படும் இந்த பல வண்ணப் பறவைகளைப் பார்த்துக் கொண்டே படகில் பயணம் செய்யும் அற்புதமான அனுபவத்திற்காக ஆண்டுதோறும் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

உலகின் நீளமான நைல் நதி இந்த தானா ஏரியில் இருந்துதான் தனது பயணத்தைத் தொடங்குகிறது. இங்கு தொடங்கி சூடானின் பாலைவனங்கள் வழியாகப் பயணித்து எகிப்து வரை செல்கிறது. தானா ஏரியில் இருந்து பிரிந்த இடத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் நைல் நதி வேகம் பிடிக்கத் தொடங்குகிறது. அப்பகுதியில் 40 மீட்டர் அகலத்தில் 45 அடி உயரத்தில் இருந்து பெரும் ஓசையுடன் விழும் நைல் நதியைப் பார்ப்பதே ஓர் திகிலான அனுபவமாக இருக்கிறது.

வேலி போட்ட நகரம்



எத்தியோப்பியாவில் உள்ள மதில் சூழ்ந்த ஹரார் (பிணீக்ஷீணீக்ஷீ) நகரம் வெகு காலம் வரை வெளிநாட்டினரின் கால்களே பதியாத இடமாக இருந்துவந்தது. ஒரு காலத்தில் இந்த நகரத்திற்கு செல்ல வேண்டும் என்றால் கழுதை மீது பல நாட்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இன்று சில மணி நேர சொகுசுப் பயணத்தில் இந்த அற்புதமான நகரை அடைந்து விடலாம். 3342 மீட்டர் சுற்றளவுள்ள மதில் சுவருக்குள் அமைந்துள்ள இந்த நகரத்தில் பழங்கால பள்ளி வாசல்கள், அவற்றின் அற்புதமான கோபுரங்கள், கடைத் தெருக்கள், கல்விச் சாலைகள் என ஒரு தனி உலகமே இயங்கி வந்தது. அவ்வளவு ஏன், இந்த நகருக்கென தனி மொழி மட்டுமின்றி பிரத்யேக ரூபாய் நோட்டுக்களே அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் இருந்தன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த நகருக்குள் வர வேண்டும் என்றால் பிரசித்தி பெற்ற அந்த 3 ஆயிரத்து சொச்சம் மீட்டர் சுற்றுச்சுவருக்குள் நுழைந்து தான் வர வேண்டும். அந்த சுவற்றில் இஸ்லாம் மதத்தின் ஐந்து தூண்களைக் குறிக்கும் வகையில் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட ஐந்து வாசல்கள் உள்ளன. பல நாடுகளில் இருந்து வரும் பயணிகள் இவற்றில் ஏதேனும் ஒன்றின் வழியாகத் தான் ஹரார் நகருக்குள் வருவார்கள். 16-ம் நூற்றாண்டில் நூர் இபின் - முஜாஹிதீன் என்ற உள்ளூர் ஆட்சியாளர் எதிரிகளிடம் இருந்து ஹரார் நகரை பாதுகாப்பதற்காக இந்த சுற்றுச் சுவரை எழுப்பினார்.

ஹரார் நகர் முழுவதையும் நடந்தே கூட சுற்றிப் பார்த்து விடலாம். நகரின் கற்கள் பதித்த வளைந்து வளைந்து செல்லும் குறுகிய பாதையில் நடந்து செல்லும் போது நாம் பல நூற்றாண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இங்குள்ள இரண்டு அருங்காட்சியகங்களில் ஹரார் நகரின் கலை, கலாச்சார, வரலாற்று சிறப்புகளை எடுத்துக்காட்டும் பல்வேறு பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அடிப்படையில் இது ஒரு இஸ்லாமிய நகரம் என்றாலும், உலகின் ரட்சகர் தேவாலயம் என்ற அற்புதமான கிறிஸ்துவ தேவாலயம் ஒன்றும் இங்கு உள்ளது. 1887-ம் ஆண்டு ஹராரை கைப்பற்றிய மெனிலிக் என்ற அரசர், நான்கு படிகளின் மீது எண் கோண வடிவில் இந்த தேவாலயத்தைக் கட்டினார்.

இந்த தேவாலயத்தின் இரண்டு கூரைகளும் கூட எண்கோண வடிவில் தான் கட்டப்பட்டுள்ளது. இந்த கூரைகளின் மீது நெருப்புக் கோழியின் முட்டைகளை வைத்துள்ளனர். நெருப்புக் கோழி தன்னுடைய முட்டைகளை மிகுந்த அக்கறையுடன் பாதுகாக்கும் என்பதால் அதேபோல இங்கு வரும் பக்தர்களும் உலகின் துன்பங்களில் இருந்து அக்கறையுடன் பாதுகாக்கப்படுவார்கள் என்பதை தெரிவிக்கவே கூரை மீது இவை வைக்கப்பட்டிருப்பதாக இங்குள்ள மக்களிடையே ஒரு நம்பிக்கை உள்ளது.

தேவதைகளின் நகரம்


எத்தியோப்பியாவின் கலைப் பொக்கிஷங்களில் ஒன்று லாலிபெலா(லிணீறீவீதீமீறீணீ) நகரம். வோலோ மாகாணத்தின் வடக்கு எல்லையில் கரடுமுரடான மலைகளுக்கு இடையே 2600 அடி உயர சமதளத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. கீழே சாலையில் இருந்து பார்த்தால் மலை மேல் இப்படி ஒரு நகரம் இருப்பதே தெரியாது. ஒரு காலத்தில் தலைநகரமாக புகழ்பெற்று விளங்கிய இந்த நகரம் இப்பொழுது ஒரு சிறிய கிராமம் போல ஆகிவிட்டது. எதிரிகளின் பார்வையில் படாமல் பாதுகாப்பாக இருப்பதற்காக இந்த நகரம் உருவாக்கப்பட்டதாக சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

லாலிபெலா நகர் முதலில் ரோஹா என்ற பெயரில் தான் விளங்கியது. பின்னர் 12-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இப்பகுதியை ஆண்ட அரச பரம்பரையில் லாலிபெலா என்பவர் இளைய மகனாக பிறந்தார். இவர் குழந்தையாக இருக்கும்போது ஒருநாள் இவரைச் சுற்றி தேனீக்கள் கூட்டம் ஒன்று மொய்த்துக் கொண்டிருந்தது. விலங்கினங்கள் எதிர்காலத்தை முன்கூட்டியே உணரக் கூடியவை என எதியோப்பியர்களிடையே ஒரு நம்பிக்கை உண்டு. அதன்படி வருங்காலத்தில் லாலிபெலா சிறந்த மன்னராக வருவார் என்பதை இந்த தேனீக்களின் வருகை குறிப்பதாக அவரது தாயார் மகிழ்ச்சி அடைந்தார். இதை அறிந்ததும் லாலிபெலா அரியணை ஏறாமல் தடுக்க அவரைக் கொல்லும் முயற்சிகள் ஆரம்பமாகிவிட்டன.

பல ஆண்டுகளாக தொடர்ந்த இந்த முயற்சிகள் தொடர்ந்து தோல்வி அடைந்து வந்தன. ஒரு முறை ஏதோ பானத்தை அருந்திய லாலிபெலா ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்தார். தொடர்ந்து 3 நாட்கள் மயக்கத்திலேயே இருந்தார். அப்பொழுது சில தேவதைகள் அவரை கடவுளிடம் அழைத்துச் சென்றதாகவும், கடவுள் அவரை மீண்டும் ரோஹாவிற்கு திரும்பிச் சென்று உலகமே வியக்கும் வகையில் தேவாலயங்களைக் கட்டச் சொன்னதாகவும் இங்கு ஒரு நாட்டுப்புறக் கதை உள்ளது. இந்த தேவாலயங்களை எங்கு, எப்படி கட்ட வேண்டும் என்பதையும் கடவுளே சொன்னாராம். அதன்படி தான் மன்னராக அரியணை ஏறியதும், முதல் வேலையாக லாலிபெலா கலைநயமிக்க தேவாலயங்களை நிர்மாணிக்கத் தொடங்கி விட்டார். இந்த தேவாலயங்கள் மிக வேகமாக கட்டி முடிக்கப்பட்டன. பகலில் கட்டடக் கலைஞர்கள் பாதியில் விட்ட வேலையை, இரவில் தேவதைகள் தொடர்ந்து செய்ததாலேயே இந்த பணி வெகு விரைவில் முடிந்ததாக எதியோப்பியர்கள் நம்புகிறார்கள்.

இந்த கதையை நம்பாதவர்கள் கூட இங்குள்ள தேவாலயங்களைப் பார்த்தால் உண்மையில் இவை தேவதைகள் கட்டியவைதான் என்பதை ஒப்புக் கொள்வார்கள். அதனால் தான் இதனை தேவதைகளின் நகரம் என்று அழைக்கிறார்கள்.

சூரியக் கோட்டை



சுட்டெரிக்கும் ராஜஸ்தான் பாலைவனத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட கோட்டை தான் ஜெய்சல்மீர் கோட்டை. ஜெய்சல்மீர் நகரின் மையப் பகுதியில் இந்த கோட்டை அமைந்துள்ளது. இப்பகுதியை ஆண்ட ரஜபுத்திர மன்னரான ராஜா ராவல் ஜெய்சால் ஏறத்தாழ கிபி 1156-ல் இந்த நகரை உருவாக்கியதாகக் கூறுகிறார்கள். ஈசால் என்ற துறவியின் கட்டளைப் படி, ராஜா ஜெய்சால் இந்த நகரை உருவாக்கியதாகவும் சில நாட்டுப்புறக் கதைகள் புழக்கத்தில் உள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்திலேயே இரண்டாவது மிகப் பழமையான கோட்டை ஜெய்சல்மீர் கோட்டை தான். இதனை சோலார் கிலா (சூரியக் கோட்டை) என இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். சுமார் 250 அடி உயரமான இந்த கோட்டையைச் சுற்றி 30 அடி உயரத்துக்கு சுவர் எழுப்பி கோட்டையைப் பலப்படுத்தியுள்ளனர். இதற்குள் மொத்தம் 99 அரண்மனைகள் உள்ளன. இவற்றில் 92 அரண்மனைகள் கிபி 1633 - 1647 வரையிலான காலகட்டத்தில் கட்டப்பட்டுள்ளன. இவற்றை சுற்றிப் பார்த்தால் பல இடங்கள் ரஜபுத்திர மற்றும் இஸ்லாமிய கட்டடக்

கலையின் கலவையில் கட்டப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும்.
இன்றைக்கும் ஜெய்சல்மீர் நகரின் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் இந்த கோட்டைக்குள் தான் வசிக்கிறார்கள். அதேபோல இந்த கோட்டைக்குள் உள்ள கிணறுகளில் இன்றும் தொடர்ந்து தண்ணீர் கிடைக்கிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் நடைபெறும் பாலைவனத் திருவிழாவைக் காணவும், ஒட்டக சவாரி செய்யவும் ஏராளமான வெளிநாட்டினர் ஜெய்சல்மீர் வருகின்றனர்.

எகிப்து. அரேபியா, பெர்ஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் இந்தியாவிற்குள் வரும் முக்கியப் பாதையாக விளங்கியதால் ஒரு காலத்தில் ஜெய்சல்மீர் செல்வம் கொழிக்கும் நகராக இருந்தது. ஆனால் 19-ம் நூற்றாண்டில் பம்பாய் போன்ற துறைமுகங்களின் வழியாக வணிகர்கள் வரத் தொடங்கியதும், ஜெய்சல்மீர் தனது பழைய பொலிவை இழந்துவிட்டது. குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு இந்த பாலைவனப் பகுதி ராணுவத்தினரின் கூடாரமாக மாறி விட்டது.

மலைக்க வைக்கும் அபு மலை


இந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான அபு மலை, ராஜஸ்தான் மாநிலத்தின் ஆரவல்லி மலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்குள்ள சமண ஆலயங்கள் தான் ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுத்துக் கொண்டிருக்கின்றன. முழுக்க முழுக்க வெண்பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட இந்த ஆலயங்களில் உள்ள சிற்பங்களின் அழகை பார்த்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரிவதில்லை. மொத்தம் இங்கு ஐந்து ஆலயங்கள் அமைந்துள்ளன.

முதல் ஆலயமான விமல் வசாஹி கோயிலை குஜராத் மன்னர் முதலாம் பீமதேவின் அமைச்சர் விமல்ஷா, பதினோராம் நூற்றாண்டில் கட்டினார். ஆயிரக்கணக்கான கலைஞர்கள் தங்கள் கற்பனையையும், கைத் திறனையும் கொட்டி சுமார் பதினான்கு ஆண்டுகள் பாடுபட்டு இந்த கோயிலை உருவாக்கியிருக்கிறார்கள். இதற்காக அருகில் உள்ள அரசூரி மலையில் இருந்து பளிங்குப் பாறைகளை வெட்டி எடுத்து யானைகள் மீது ஏற்றி இங்கு கொண்டு வந்துள்ளனர். இந்த யானைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், இந்த ஆலயத்தின் எதிரே முப்பது யானைகள் அணிவகுத்து நிற்கும் அற்புதமான யானை மண்டபம் ஒன்றையும் கட்டியிருக்கிறார்கள்.

விமல் வசாஹி கோயிலில் சமணர்களின் முக்கிய கடவுளான ஆதிநாதர் எனப்படும் ரிஷபதேவரை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். இந்த கருவறைக்கு முன்னால் கம்பீரமாக காட்சியளிக்கும் ரங் மண்டபத்தில் உள்ள தூண்களும், பளிங்குத் தோரணங்களும், வேலைப்பாடுகள் அமைந்த குவிமாடமும் உலக அதிசயங்களின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவை. இவ்வளவு நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்களை மனிதர்கள் தான் உருவாக்கினார்கள் என்பது நம்புவதற்கு சிரமமாகக் கூட இருக்கிறது.

அடுத்துள்ள லுனா வசாஹி கோயிலை இரண்டாம் பீமதேவின் அமைச்சர்களான வஸ்துபால், தேஜ்பால் ஆகிய இரு சகோதரர்கள் உருவாக்கியுள்ளனர். விமல் வசாஹி கோயிலை விட சற்று சிறியதாக இருக்கும் இந்த கோயிலில் இருபத்து இரண்டாவது தீர்த்தங்கரரான நேமிநாதர் பிரதானமாக வீற்றிருக்கிறார். இங்கும் ரங் மண்டபம், யானை மண்டபம் ஆகிய அனைத்து அதிசயங்களும் காட்சியளிக்கின்றன. மூன்றாவது உள்ள மஹாவீரர் கோவில் எளிமையாகக் கட்டப்பட்டுள்ளது. இதனை 1582-ம் ஆண்டில் கட்டியிருக்கிறார்கள்.

மஹாவீரருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த கோயிலின் மேல் சுவர்களிலும் முன் மண்டபத்திலும் உள்ள ஓவியங்கள் விழிகளை விரிய வைக்கின்றன.
ஆலய வளாகத்தின் இடப்பக்கத்தில் உள்ளது மூன்றடுக்குகளைக் கொண்ட பார்ஷ்வநாதர் ஆலயம். இதன் ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு பக்கங்களிலும் பார்ஷ்வநாதரின் திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து அகமதாபாத் சுல்தான் பேகடாவின் அமைச்சர் பீமாஷா கட்டிய பீத்தள்ஹார் கோயில் உள்ளது. இங்கு பஞ்ச லோகத்தில் வார்க்கப்பட்ட பிரம்மாண்ட ரிஷ்பதேவரின் சிலை உள்ளது. இதில் அதிகளவில் பித்தளையே இருப்பதால் இதனை பீத்தள்ஹார் கோயில் என அழைக்கிறார்கள்.

பூலோகக் கைலாசம்

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது எல்லோரா. இங்குள்ள அற்புத குகைக் கோயில்களை பௌத்தம், சமணம், இந்து மதம் என மூன்று பிரிவினரும் போட்டி போட்டு செதுக்கித் தள்ளி இருக்கிறார்கள். கிபி ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை இங்கு தொடர்ந்து உளிச் சத்தம் ஒலித்துக் கொண்டே இருந்திருக்கிறது.
முதல் 12 குகைக் கோயில்களை புத்த மதத்தினர் உருவாக்கியிருக்கிறார்கள். இங்குள்ள குகைகளில் பெரும்பாலும் புத்தர் மற்றும் போதி சத்துவர்களின் உருவங்கள் கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. பத்தாவது குகையில் பார்ப்பவர்கள் அசந்து போகும் அளவுக்கு அற்புதமான மண்டபம் ஒன்றை வடிவமைத்திருக்கிறார்கள். இதன் அலங்காரமான நுழைவு வாயிலில் தொடங்கி உள்ளே உயரமான கூரையில் செய்யப்பட்டுள்ள நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் வரை அந்த தெய்வீகக் கலைஞர்களின் கைவண்ணத்திற்கு சாட்சியாக விளங்குகின்றன. இந்த மண்டபத்தின் மையத்தில் அமைதியாக காட்சியளிக்கும் புத்தர் சிலை நம்மை அப்படியே அழகில் கட்டிப் போட்டி விடுகிறது. அடுத்துள்ள இரண்டு குகைகளிலும் அந்த காலத்திலேயே இரண்டடுக்கு, மூன்றடுக்கு மண்டபங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து இந்துக்கள் வடிவமைத்த குகைக் கோயில்கள் காட்சியளிக்கின்றன. இங்குள்ள பதினாறாவது குகையில் பூலோக கைலாசம் ஒன்றையே உருவாக்கியிருக்கிறார்கள். அந்த பிரம்மாண்ட ஆச்சர்யத்தைப் பார்க்கும் போது, நாம் பூமியில்தான் இருக்கிறோமா என சந்தேகம் வந்துவிடுகிறது. ஒற்றைப் பாறையைக் குடைந்து ஒரு கோயிலையே வெளிக் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த ஒற்றைப் பாறைக் கோயில் மூன்று தனித்தனி ஆலய மண்டபங்களுடன் கூடிய இரண்டடுக்கு கோயில் என்பதுதான் இதன் சிறப்பம்சம். இங்குள்ள சிற்பங்களில் பத்து தலை ராவணன் கைலாயத்தை உலுக்கும் சிற்பம், இரண்யனை வதம் செய்யும் நரசிம்மர், வாலி - சுக்ரீவன் யுத்தம் போன்ற சிற்பங்கள் இந்திய சிற்பக் கலைக்கே எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

முப்பது முதல் முப்பத்து நான்கு வரை சமணர்களின் குகைக் கோயில்கள். பதினோறாம் நூற்றாண்டில், சமணர்கள் அமைத்த இந்த கோயில்கள் தான் எல்லோராவின் கடைசிக் குகைக் கோயில்கள். இங்குள்ள இந்திர சபை என அழைக்கப்படும் முப்பத்திரண்டாவது குகை சொக்க வைக்கும் அழகுடன் காட்சியளிக்கிறது. சமணர்கள் இந்த குகைகளில் உள்ள தூண்களை மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் அமைத்துள்ளனர். இங்குள்ள பரசுநாதர் சிலையும், மகாவீரர் சிற்பமும் அற்புத கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆனால் எல்லோராவில் காலத்தாலும், பல காரணங்களாலும் சிதைந்து விட்ட சிற்பங்கள், நாம் மீட்டெடுக்க முடியாத கலைப் பொக்கிஷங்களை இழந்துவிட்டதை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கின்றன.

பொக்கிஷத் தீவு

இந்தியாவின் சிற்பக் கலைக்கு தெய்வீக எடுத்துக்காட்டாக விளங்குபவை எலிஃபன்டா குகைக் கோயில்கள். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கரபுரி என்ற தீவில்தான் இந்த அற்புத குகைக் கோயில்கள் அமைந்துள்ளன. மும்பையில் உள்ள கேட் வே ஆஃப் இந்தியாவில் இருந்து சுமார் 10 கிமீ தூரம் கடலில் பயணித்தால் இந்த தீவைச் சென்றடையலாம். கிபி 600-ல் ஆயிரக்கணக்கான சிற்பிகளின் கைவண்ணத்தில் உருவான இந்த அற்புதத்திற்கு காரணமான மன்னன் யார் எனத் தெரியவில்லை. இவை குப்தர்களின் கலைப் படைப்புகளாக இருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

எலிஃபன்டாவில் உள்ள முக்கிய படைப்புகளில் ஒன்று திரிமூர்த்தி சிலை. மூன்று முகங்களைக் கொண்ட இந்த சிலை 8.3 மீட்டர் உயரம் உள்ளது. மூன்று முகங்களும் மூன்று வெவ்வேறு உணர்ச்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது தான் இதன் சிறப்பம்சம். இடப்புறம் உள்ள முகம் தாடி, மீசையுடன் நெற்றிக் கண்ணைத் திறந்த நிலையில் கடும் சீற்றத்துடன் காட்சியளிக்கிறது. இதற்கு நேர் எதிராக வலப்புறம் உள்ள முகம் பெண்மையின் மென்மையுடன் திகழ்கிறது. இடையில் இருக்கும் முகத்திலோ பேரமைதி தவழ்கிறது.

எலிஃபன்டாவின் மற்றொரு சிறப்பம்சம் இங்குள்ள சிவன் சந்நிதி. இதன் கருவறையின் நான்கு திசைகளிலும் வாசல்களை அமைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வாசலின் இரண்டு பக்கங்களிலும் துவாரபாலகர்கள் கம்பீரமாகக் காவல் புரிகின்றனர். கிழக்கில் இந்திரனும், தெற்கில் யமதர்மராஜனும், மேற்கில் வருணனும், வடக்கில் குபேரனும் காட்சியளிக்கின்றனர்.

சிவபெருமானின் திருக்கல்யாணக் கோலத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் சிற்பம் காண்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. அதேபோல அண்டப் பெருவெளியில் ஆனந்த நடனம் ஆடும் நடராஜர் சிற்பம், நளினமும், கம்பீரமும் ஒருசேர காட்சிதரும் அர்த்தநாரீஸ்வரர் சிலை, சிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடும் சொக்க வைக்கும் சிற்பம் ஆகிய அனைத்தும் நம்மை வேறு உலகத்துக்கே அழைத்துச் சென்றுவிடுகின்றன. இன்னும் இன்னும் ஏராளமான கல்லில் வடித்த காவியங்கள் இங்கே காட்சிகளாக விரிந்து கிடக்கின்றன.
எதிரி மன்னர்களின் படையெடுப்புகள், உப்புக் காற்றின் தாக்கங்கள் ஆகிய காரணங்களால் எலிஃபன்டா சிற்பங்களில் பல சீர்குலைந்து காணப்படுகின்றன. இருப்பினும், அனைத்து இடர்பாடுகளையும் தாண்டி இன்றும் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன இந்த காலத்தை வென்ற கற்சிற்பங்கள்.

அசத்தும் அஜந்தா குகைகள்

மகாராஷ்டிராவின் மலைப் பிரதேசங்களில் 1819-ம் ஆண்டு வேட்டையாடச் சென்ற ஆங்கிலேய ராணுவ அதிகாரி ஜான் ஸ்மித் தற்செயலாக கண்டுபிடித்த கலைப் பொக்கிஷங்கள் தான், அஜந்தா குகைக் கோயில்கள். சஹ்யாத்ரி மலைத் தொடரில் வகோரா நதியை ஒட்டி, குதிரை லாடம் போன்ற வடிவத்தில் இந்த குகைக் கோயில்களை அமைத்திருக்கிறார்கள். இங்கு மொத்தம் உள்ள 30 குகைகளை கோயில்கள், துறவி மடங்கள் என இரண்டு விதமாகப் பிரிக்கலாம். இங்குள்ள சிற்பங்களும், ஓவியங்களும் புத்தரின் பெருமைகளைப் பேசும் விதமாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

அஜந்தா குகைகளின் ஆரம்பப் பணிகள் கிமு இரண்டாம் நூற்றாண்டில் தொடங்கியுள்ளன. பின்னர் கிபி ஐந்தாவது, ஆறாவது நூற்றாண்டு வரை அந்தந்த காலத்தைச் சேர்ந்த கலைஞர்கள் தங்களின் கற்பனையையும், கைத்திறனையும் கொட்டி இந்த குகைகளை சொர்க்கபுரியாக மாற்றி இருக்கிறார்கள். இங்கு சுவர்களிலும், தூண்களிலும், கூரைகளிலும் தீட்டப்பட்டுள்ள வண்ண ஓவியங்கள் நம்மை வாய் பிளக்க வைக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை காலத்தால் அழிந்து விட்டாலும், போதிசத்துவர், வஜ்ரபாணி போன்ற சில முக்கிய ஓவியங்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன.

இந்த குகைக் கோயில்களின் சிற்ப வேலைப்பாடுகளும் காண்போரை பிரமிக்க வைக்கின்றன. விரல்களில் தர்மசக்கர முத்திரையுடன் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் மாபெரும் புத்தர், ஒரே பொதுவான தலையுடன் காட்சியளிக்கும் நான்கு மான்கள் ஆகிய சிற்பங்கள் அந்தக் கலைஞர்களின் கற்பனைத் திறனுக்கு சாட்சியாக காட்சியளிக்கின்றன. அதேபோல பதினாறாவது குகையின் கூரையில், பாறையிலேயே மிக நேர்த்தியாக உத்தரம் போல செதுக்கியிருக்கிறார்கள். இருபத்தாறாவது குகையில் வலது கையை தலைக்கு வைத்தபடி படுத்திருக்கும் மகாபரிநிர்வாண புத்தரின் சிலை மிக அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது. புத்தரின் தலை அழுத்துவதால் தலையணையில் ஏற்படும் அழுத்தங்கள் கூட தெரியும் அளவுக்கு நுட்பமாக இந்த சிற்பத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.

மலைப் பாறைகளை குடைந்து அமைக்கப்பட்டிருக்கும் அலங்கார நுழைவாயில்கள், இருபத்தெட்டு தூண்களுடன் கூடிய மிகப் பெரிய பிரார்த்தனைக் கூடம், ஏழு தலை நாகத்தின் கீழ் தனது மனைவியுடன் ஒய்யாரமாக அமர்திருக்கும் நாகராஜா சிற்பம் என இங்கு காணக் கிடைக்கும் காட்சிகள் அனைத்தும் கண்களை வியப்பால் விரிய வைத்துவிடுகின்றன. இப்படி பல அற்புதங்களை தன்னுள் ஒளித்து வைத்திருப்பதால், நூற்றாண்டுகளைக் கடந்த நிலையிலும், அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகின்றன இந்த அஜந்தா குகைக் கோயில்கள்.

காற்று மாளிகை


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ளது இந்த வானுயர்ந்த காற்று மாளிகை. 1799-ம் ஆண்டு மகாராஜா சவாய் பிரதாப் சிங், இந்த ஐந்து அடுக்கு மாளிகையை கட்டினார். லால் சந்த் உஸ்தா என்ற கட்டிடக் கலை நிபுணர் வடிவமைத்த இந்த மாளிகை, ராஜஸ்தானிய கட்டிடக் கலையின் அற்புத சாட்சியாக காட்சியளிக்கிறது. ஜெய்பூர் அரண்மனையின் ஒரு பகுதியாக விளங்கும் இந்த மாளிகையில் இருந்து பார்த்தால் அரண்மனையைச் சுற்றியுள்ள சாலைகளையும், ஜெய்பூர் நகரையும் நன்கு பார்க்க முடியும். மகாராஜா சவாய் பிரதாப் சிங், இந்த மாளிகையை கட்டியதே அதற்குத் தான். ஆம், அரச குடும்பத்து பெண்கள் இந்த மாளிகையில் இருந்தபடியே யார் கண்ணிலும் படாமல், ராஜ வீதிகளில் வரும் ஊர்வலங்களையும், நடைபெறும் நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்க வேண்டும் என்று தான் அவர் இந்த காற்று மாளிகையை கட்டினார்.

காற்று மாளிகையின் முன் நின்று பார்த்தால் ஏதோ அலங்கரிக்கப்பட்ட திரைச்சீலை தொங்க விடப்பட்டதை போலத் தான் இருக்கிறது. பிரமிடு வடிவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த மாளிகையில் ஐந்து தளங்களிலும் சேர்த்து அடுக்கடுக்காக 953 சாளரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் ஒரு சிறிய ஜன்னல் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர ஒவ்வொரு சாளரத்தை சுற்றிலும் பால்கனியும், உச்சியில் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறிய ஜன்னல் வழியாக உட்புகுந்து வரும்போது, வெப்பக் காற்றும் குளிர் காற்றாக மாறிவிடும் வகையில் இந்த ஜன்னல்களை வடிவமைத்துள்ளனர்.

சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறக் கற்களைக் கொண்டு இந்த காற்று மாளிகையை கட்டியிருப்பதால் தூரத்தில் இருந்து பார்க்கும் போது, வானில் சிவப்புத் திரைச்சீலை தொங்குவது போல காட்சியளிக்கிறது. ஜெய்பூர் அரண்மனைக்குள் நுழைந்து வந்தால் இந்த மாளிகையை அடையலாம். இதன் மேல் மாடிகளுக்கு செல்ல படிகள் எதுவும் இல்லை, வெறும் சரிவான பாதை மட்டுமே உள்ளது. அவற்றின் மூலம் தான் மேல் தளங்களுக்கு செல்ல வேண்டும்.
இந்த மாளிகையின் சாளரங்கள் வழியாக ஜெய்பூர் நகரின் அற்புதக் காட்சிகளை கண்டு ரசிக்கலாம். இங்குள்ள அலங்கார சாளரங்கள் மூலம் சூரிய உதயத்தைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை இந்த மாளிகையைக் காண ஏற்ற காலம் என இங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த காற்று மாளிகை தற்போது ராஜஸ்தான் மாநில தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் பராமரிப்பில் உள்ளது.

கொலையில் கலை



‘கிளாடியேட்டர்’ போன்ற ஹாலிவுட் திரைப்படங்களில் காட்டப்பட்ட அந்த பிரம்மாண்ட அரங்கம், ரோமானியர்களின் கலை உணர்வுக்கு சாட்சியாக 2000 ஆண்டுகளைக் கடந்தும் நின்று கொண்டிருக்கிறது. ‘கொலோசியம் ஆஃப் ரோம்’ என்று அழைக்கப்படும் அந்தக் கட்டிடத்தை இப்பொழுது பார்க்கும் போதும் நமக்குள் ஒருவித அச்சம் பரவுவதை தவிர்க்க முடியவில்லை. காரணம் அங்கு
அரங்கேற்றப்பட்ட கணக்கில் அடங்காத கொலைகள்.

கிமு 80-ல் ரோம சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னர்கள் தங்களின் குடிமக்களின் பொழுதுபோக்குக்காக இந்த பிரம்மாண்ட அரங்கத்தை நிர்மாணித்தார்கள். 165 அடி உயரமும், 600 அடி நீளமும் கொண்ட இந்த அரங்கில் சுமார் 50 ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்டு களிக்கலாம். இங்கு அரங்கேற்றப்பட்ட நிகழ்ச்சிகள் என்ன தெரியுமா? இரண்டு அடிமைகள் சாகும் வரை ஒருவருடன் மோதிக் கொள்வது அல்லது அடிமைகள் புலி, சிங்கம் போன்ற பயங்கர விலங்குகளுடன் மோதுவது. ரத்தம் சொட்டச் சொட்ட நடத்தப்பட்ட இதைத் தான் அந்தக் கால ரோமானியர்கள் மயிர்க் கூச்செரிய ரசித்துப் பார்த்தார்கள். இந்த போட்டிகள் அலுத்துப் போகும் போது, அரங்கம் முழுவதும் தண்ணீர் நிரப்பி கடற்போர்களை நடத்துவார்கள். சில சமயங்களில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவது உண்டு.

இந்த பிரம்மாண்ட அரங்கத்தின் கட்டிடக் கலை இன்றைய தொழில்நுட்பங்களுக்கும் சவால் விடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பல அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கிற்குள் நுழைய பல வாசல்களை வைத்திருக்கிறார்கள். எனவே 50 ஆயிரம் பேர் அரங்கில் இருந்தாலும், ஏதேனும் அசம்பாவிதம் நேரிட்டால் ஒரு சில நிமிடங்களில் அனைவரும் அரங்கை விட்டு வெளியேறி விட முடியும். ஆயிரக்கணக்கான ரசிகர்களின் பாரத்தை அரங்கம் தாங்க வசதியாக, பல தூண்களையும், வளைவுகளையும் நிர்மாணித்திருக்கிறார்கள். ரசிகர்கள் வெயிலில் வாடாமல் போட்டிகளை ரசித்துப் பார்க்க, அரங்கின் மேல் தளத்தில் நிழல் ஏற்படுத்தும் விரிப்புகளும் கட்டப்பட்டிருந்தன. அதேபோல போட்டி மைதானத்திற்குள் தரையில் பல ரகசிய திறப்புகளை அமைத்துள்ளனர். இவற்றின் மூலம் சிங்கம், புலி போன்ற விலங்குகள் திடீரென வெளியில் வந்து பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தும்.

அரச குடும்பத்தினர், விருந்தினர்கள், அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் முன் வரிசையில் அமர்ந்து இந்த கொலை விளையாட்டுக்களை ரசித்துப் பார்த்தனர். இதில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட அடிமைகளுக்கு பிரத்தியேக பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. 2000 ஆண்டுகளைக் கடந்த நிலையில், தற்போது சிதிலமடைந்த அந்த அரங்கில் கொலை மறைந்து, கலை மட்டுமே எஞ்சியிருக்கிறது.

கேரளத்து யூதக் கோவில்



கேரள மாநிலம் கொச்சினில் உள்ள அந்த குறிப்பிட்ட பகுதிக்குள் நுழையும் அனைவரும் திடீரென சற்று குழம்பித் தான் போவார்கள். இந்த குழப்பத்துக்கு காரணம் அங்கு உள்ள சினகாக் எனப்படும் யூதக் கோவில். நீங்கள் பாலஸ்தீனத்தில் இருப்பது போன்ற தோற்றதை உருவாக்கும் இந்த யூதக் கோவில்தான், காமன்வெல்த் நாடுகளில் இருப்பதிலேயே மிகப் பழமையானது. கொச்சின் மன்னர் ராம வர்மா தானமாக வழங்கிய நிலத்தில் மட்டன்சேரி அரண்மனைக்கு பக்கத்தில் 1568-ம் ஆண்டு இந்த புராதன கோவில் கட்டப்பட்டது. அங்கு வாழ்ந்த யூதர்கள், டச்சுக்காரர்களின் உதவியுடன் இதைக் கட்டியதால் இதற்கு பரதேசி (வெளிநாட்டினர்) கோவில், கொச்சின் யூதக் கோவில், மட்டன்சேரி கோவில் என பல பெயர்கள் உள்ளன.

படகு மூலம் வேம்பனாடு ஏரியைக் கடந்து சென்றால் யூதத் தெருவில் அமைந்துள்ள இந்த அற்புத கோவிலை சென்றடையலாம். உள்ளே நுழைந்ததும் ஒரு சிறிய அருங்காட்சியகம் போன்ற அறை உள்ளது. இதில் கேரள பூமிக்குள் யூதர்கள் நுழைந்தது முதல் இந்த கோவில் கட்டப்பட்டது வரை பல அரிய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கி.மு. 992-ல் பாலஸ்தீனத்தை சாலமன் மன்னர் ஆண்ட காலத்தில் இருந்தே யூதர்களுக்கும் மலபார் மக்களுக்கும் வர்த்தக தொடர்புகள் இருந்திருக்கின்றன. பின்னர் ரோமானியர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் யூதர்கள் உலகின் பல மூலைகளுக்கும் சிதறிய போது ஒரு பிரிவினர் கேரளாவில் தஞ்சம் அடைந்தனர்.
கட்டிடக் கலையிலும் இந்த யூதக் கோவில் சிறந்து விளங்குகிறது. தரையில் பதிக்கப்பட்டுள்ள அழகிய சீனத்து நீலம் மற்றும் வெள்ளை கற்களில் பல்வேறு ஓவியக் காட்சிகள் வரையப்பட்டுள்ளன. கூரைகளை பெல்ஜியத்தின் பிரம்மாண்ட சரவிளக்குகளால் அலங்கரித்துள்ளனர். அறையின் நடுவில் அலங்கரிக்கப்பட்ட பித்தளைத் தூண்களால் சூழப்பட்ட பிரசங்க மேடை, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்கிறது. பெண்கள் அமர்ந்து கேட்பதற்கு வசதியாக தனியாக பால்கனி ஒன்றும் உள்ளது.

யூதர்களின் புனித நூலாக கருதப்படும் ‘டோரா’ இங்கு பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி 2000 ஆண்டுகளுக்கு முன்னால் மலபார் பகுதியில் வாழ்ந்த யூதர்களுக்கு மலபார் மன்னர் வழங்கிய செப்புப் பட்டயங்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வெள்ளி, சனி மற்றும் யூத விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் இந்த கோவில் பார்வையாளர்களுக்காக திறந்திருக்கிறது.

பண்டைய கிரேக்கர்களின் டூரிங் டாக்கீஸ்



பண்டைய கிரேக்கர்களின் கலை ரசனைக்கும், கட்டிட கலைக்கும் சான்றாக விளங்குகிறது அக்ரோபாலிஸ் மலைச் சரிவில் அமைந்துள்ள கலை அரங்கம். கிரேக்கத்தின் அன்றைய எஃபிடாரஸ் (மீஜீவீபீணீuக்ஷீஷீs) நகரில் கட்டப்பட்டுள்ள இந்த டூரிங் டாக்கீஸ் சுமார் 2500 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. கிரேக்கர்கள் கி.மு. ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து வசந்த காலத்தை கொண்டாட நாடக விழாக்களும், போட்டிகளும் நடத்துவது வழக்கம். டையோனிசஸ் (பீவீஷீஸீஹ்sஷீs) என்ற கிரேக்க கடவுளின் நினைவாக நடத்தப்படும் இந்த விழாக்களை ஏராளமானோர் கண்டுகளிக்க வசதியாக மிகப்பிரம்மாண்டமான கலை அரங்குகள் கட்டப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் எஃபிடாரஸ் நகரில் உள்ள கலை அரங்கம்.

சுமார் 15 ஆயிரம் பேர் அமர்ந்து ரசிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த அரங்கம், அரை வட்ட வடிவில் அமைந்துள்ளது. அக்ரோபாலிஸ் மலை அடிவாரத்தில் பாறைகளை குடைந்து இதனை உருவாக்கியிருப்பதால் நடிகர்களின் குரல்கள் மலையில் மோதி எதிரொலிக்கின்றன. இதனால் எந்த மைக் வசதியும் இல்லாமலேயே கடைசி வரிசை ரசிகர்களும் நாடக உரையாடல்களை கேட்டு மகிழ்ந்தனர். இதற்கு வசதியாக ஒரே சமயத்தில் பல கதாபாத்திரங்கள் பேசுவது போன்ற காட்சிகள் தவிர்க்கப்பட்டன.

நாடக நடிகர்கள் அரங்கின் நடுவில் உள்ள ‘ஆர்கெஸ்ட்ரா’ என்று அழைக்கப்பட்ட திறந்தவெளிப் பரப்பில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நாடகங்களுக்கு பின்னணி இசையும் இசைக்கப்பட்டன. இவ்வளவு அட்டகாசமாக நடைபெற்ற இந்த நாடகங்களில் இருந்த ஒரே குறை, இவற்றில் பெண்கள் நடிக்க அனுமதிக்கப்படவில்லை. பெண் வேடங்களையும் ஆண் நடிகர்களே ஏற்று நடிப்பார்கள். அவ்வளவு ஏன், இந்த நாடகங்களைப் பார்க்க கூட பெண்களுக்கு அக்கால கிரேக்கத்தில் அனுமதி இல்லை.

பண்டைய கிரேக்கத்தின் இந்த பிரம்மாண்ட கலை அரங்கில், இப்போதும் நாடகங்கள் நடத்தப்படுகின்றன. பெண்களும் பங்கேற்கும் நிறைவான நாடகங்கள்.

தடை செய்யப்பட்ட நகரம்

சுமார் 500 ஆண்டுகளாக (1420-1911) மிங் மற்றும் கிங் சாம்ராஜ்யத்தை சேர்ந்த 24 சக்கரவர்த்திகள் பெய்ஜிங்கில் உள்ள தடை செய்யப்பட்ட நகரத்தில் இருந்துதான் சீனாவை ஆண்டார்கள். அரண்மனையின் அனுமதி இல்லாமல் இந்த நகருக்குள் யாரும் நுழையக் கூடாது. மீறுபவர்களுக்கு உயிர் இருக்காது. அதனால் தான் அக்காலத்தில் அனைவரும் இதனை தடை செய்யப்பட்ட நகரம் என அழைத்தனர்.
இந்த நகரம் 3200 அடி நீளமும் 2500 அடி அகலமும் கொண்டது. சுமார் 20 கால்பந்தாட்ட மைதானங்கள் அளவுக்கு விஸ்தீரணமான இந்த நகரை வேகமாக சுற்றிப் பார்த்தாலே குறைந்தது அரை நாள் ஆகி விடும்.

9 ராசியான எண் என கருதப்படுவதால் இந்த நகரத்தில் ஒரு காலத்தில் 9,999 அறைகள் இருந்ததாம். படத்தில் காணப்படும் “உயர்ந்த ஒற்றுமைக்கான அறை” என்று அழைக்கப்படும் இந்த கட்டிடம் தான் நகரிலேயே மிகப்பெரிய புகழ்பெற்ற கட்டிடமாக விளங்கியது. இங்கு தான் அரசு சம்பிரதாயங்களும் விழாக்களும் கோலாகலமாக நடத்தப்பட்டன.

இந்த தடை செய்யப்பட்ட நகரத்தில் அரசர், அரச குடும்பத்தினர், அவர்களின் பணியாளர்கள் என சுமார் 6000 பேர் வசித்தனர். இதில் வசித்து வந்த கடைசி சக்ரவர்த்தியான புயீ, 1924ஆம் ஆண்டு இங்கிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்.

எகிப்தில் ஒரு தாஜ்மகால்

யமுனை நதிக்கரையோரம் அமைந்திருக்கும் தாஜ்மகாலைப் போலவே ஆப்ரிக்காவின் நைல் நதிக்கரை ஓரத்திலும் ஒரு அழியாத காதல் சின்னம் காலத்தை வென்று நின்று கொண்டிருக்கிறது. சுமார் 3300 ஆண்டுகளுக்கு முன்னால் கி.மு 1290 முதல் 1224 வரை எகிப்தை ஆண்டை இரண்டாம் ராமசேஸ் மன்னன் தன் மனைவி நெஃபர்டேரி நினைவாக (இதை சில சரித்திர ஆராய்ச்சியாளர்கள் மறுக்கின்றனர்), நைல் நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ள மலைகளைக் குடைந்து இந்த அற்புத குகைக் கோவில்களை உருவாக்கினான்.

அபு சிம்பெல் கோவில்கள் என்று அழைக்கப்படும் இவற்றில் மொத்தம் இரண்டு கோவில்கள் உள்ளன. இதில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது மன்னர் கோவில் என்றும், சிறியதாக உள்ளது அரசி கோவில் என்றும் வழங்கப்படுகிறது. பெரிய கோவிலின் வாயிலில் மன்னர் ராமசேஸின் 20 அடி உயர சிற்பங்கள் நான்கு உள்ளன. இவற்றுடன் ராஜ மாதா, அரசி நெஃபர்டேரி ஆகியோரின் சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன.
அதேபோல வாயிலின் மேல் ராஜாளி தலையுடன் கூடிய சூரியக் கடவுள் ராவின் சிலை உள்ளது. உள்ளே நுழைந்ததும் கூரையைத் தாங்கிப் பிடித்தபடி மன்னர் ராமசேஸின் 8 சிற்பங்களும், சுவர்களில் மன்னரின் போர்க்கள வெற்றிகளைக் குறிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அடுத்த அறையில் மன்னர் ராமசேஸும் அரசி நெஃபர்டேரியும் கடவுள்களுக்கு முன்னால் நிற்பது போல அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்து உள்ள கர்ப்பகிரகத்தில் மன்னர் உள்பட கடவுளர்கள் தங்கள் ஆசனங்களில் அமர்ந்துள்ள அற்புதமான சிற்பங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 22 மற்றும் அக்டோபர் 22 ஆகிய தேதிகளில் சூரிய உதயத்தின்போது, சூரியனின் ஒளிக்கற்றைகள் இந்த குகைக் கோவிலுக்குள் ஊடுருவி இந்த சிலைகளின் முகத்தில் படுவது போல அமைத்திருக்கிறார்கள்.
1960களில் எகிப்தில் அஸ்வன் அணை கட்ட முயன்றபோது இந்த குகைக் கோவில்களுக்கு சேதம் ஏற்படும் நிலை உருவானது. எனவே ஒரு சர்வதேச குழு அமைக்கப்பட்டு அவர்கள் இந்த கோவில்களை மேடான இடத்திற்கு நகர்த்தினார்கள். ஆமாம், ஒட்டுமொத்த மலையை அப்படியே பாளம் பாளமாக பெயர்த்து பாதுகாப்பான ஓர் இடத்தில் முன்பிருந்தது போலவே அமைத்துவிட்டார்கள். இதற்கு 40 மில்லியன் டாலர் பணமும், நான்கு ஆண்டுகளும் செலவானது.

கடும் உழைப்பில் விளைந்த அற்புதங்கள் அவ்வளவு சீக்கிரம் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதில்லை என்பதை இன்றும் உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கின்றன இந்த அபு சிம்பெல் கோவில்கள்.

Sunday, August 8, 2010

அச்சச்சோ அசோகா

அசோகச் சக்கரவர்த்தி அவைக்குள் நுழைந்ததும் அனைவரும் எழுந்து நின்றனர்.

அவன் மட்டும் அலட்சியமாக அமர்ந்திருந்தான்.

கலிங்கத்தின் மீது போர் தொடுப்பது குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டது.

அவனுக்கு அதில் எந்த அக்கறையும் இருந்ததாகத் தெரியவில்லை. வலது ஓரத்தில் நின்று கொண்டிருந்த சாமரம் வீசும் பெண்ணின் கழுத்துக்கு கீழே பார்வையை ஓடவிட்டுக் கொண்டிருந்தான்.

திடீரெனத் திரும்பிய அசோகரின் பார்வை அவன் மீது நிலைத்தது. அந்த விழிகளில் கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.

அவன் அதற்கும் மசியவில்லை. காலைத் தூக்கி நாற்காலி மீது வைத்துக் கொண்டு கொட்டாவி விட்டான்.

வேறு பக்கம் பார்வையைத் திருப்பிய அசோகர், கலிங்கப் போர் பற்றி தோள்கள் தினவெடுக்க உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார்.

அப்போது அவன் செய்த காரியம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. காதில் செருகியிருந்த பீடியை எடுத்து பற்ற வைத்துக் கொண்டு குப்குப்பென்று புகைவிட்டான். அந்த இடம் முழுவதும் பீடி நாற்றம் சூழ்ந்து கொண்டது.

யார்யா அது பீடி புடிக்கிறது. வெளிய போய் புடிய்யா என பின்னால் இருந்து குரல்கள் வந்ததும், சலிப்புடன் எழுந்து தியேட்டர் கதவை திறந்துகொண்டு வெளியில் போனான் அவன்.

சரியான நேரத்தில்

நானும், வேணுவும் குதிரைகளில் வேகமாக பறந்து கொண்டிருந்தோம். நாங்கள் எங்கு இருக்கிறோம், எப்போது இந்த குதிரைகள் மீது ஏறினோம் என்பதெல்லாம் நினைவில்லை. அவை இப்பொழுது முக்கியமும் இல்லை. அவற்றை யோசித்துக் கொண்டிருந்தால், அதற்குள் அவர்கள் தப்பித்து விடுவார்கள். எங்களுக்கு சுமார் 100 அடி முன்னால் மின்னல் வேகத்தில் பறந்துகொண்டிருந்த சாரட்டு வண்டியின் உள்ளே இருந்து ஒரு தேவதை அடிக்கடி வெளியில் எட்டிப் பார்த்து தன்னை காப்பாற்றும்படி அபயக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தால். உள்ளே இருந்து யாரோ அவளை அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு சண்டையிடுவதில் பழக்கம் இல்லை. சிஏ பவுண்டேஷன். இன்டர் என மாய்ந்து மாய்ந்து படிப்பதற்கே நேரம் சரியாக இருந்ததால், தற்காப்புக் கலைகளின் பக்கம் தலைவைத்து கூட படுத்ததில்லை. வேணுவும் என் அலுவலகத்தில் தான் அக்கவுன்டன்டாக பணியாற்றுகிறான். அவனுக்கும் இதெல்லாம் தெரியாது. இருந்தாலும் ஏதோ குருட்டு தைரியத்தில் இருவரும் குதிரையை விரட்டிக் கொண்டிருந்தோம். அந்த தேவதையை நிச்சயம் காப்பாற்றிவிட முடியும் என்று அடிமனதில் மட்டும் ஒரு பலமான நம்பிக்கை இருந்தது.

காட்டுப்பகுதியில் வேகமாக சென்றுகொண்டிருந்த சாரட் வண்டி திடீரென ஒற்றையடிப் பாதை வழியாக பயணித்து பிரதான சாலை ஒன்றில் ஏறியது. நாங்களும் விடாமல் துரத்தினோம். தூரத்தில் காணப்பட்ட ஒரு கோட்டையை நோக்கி அவர்கள் சென்று கொண்டிருப்பதை அப்பொழுது தான் கவனித்தோம். இந்த வண்டியைப் பார்த்ததும் கோட்டைக் கதவுகள் திறந்தன. கோட்டை மதில் மேல் இருந்தவர்கள் எங்களைப் பார்த்துவிட்டார்கள். உடனே உள்ளே இருந்து 10 குதிரைகளில் வாளும், ஈட்டியும் ஏந்திய வீரர்கள் எங்களை நோக்கி விரைந்து வந்தார்கள். திரும்பிப் போயிடலாம் கோபால் என்றான் வேணு. அந்த தேவதையை காப்பாற்றாமல் போக என் மனம் இடம்கொடுக்கவில்லை. வருவது வரட்டும் என தொடர்ந்து முன்னேறினேன்.

யார் நீங்கள் என குரல் கொடுத்த படி எங்களை நெருங்கி வந்தவர்கள், என்னை உற்றுப் பார்த்ததும் சடசடவென்று குதிரைகளில் இருந்து கீழிறங்கினார்கள். அவர்களில் தலைவன் போல் இருந்தவன், இளவரசே தாங்களா என்றபடி நெடுஞ்சாணாக விழுந்து வணங்கினான். ஆம், முதலில் அந்த பெண்ணை விடுவியுங்கள் என்றேன். வேணு எல்லாவற்றையும் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். விடுதலை பெற்ற தேவதை கண்ணீரும், நன்றியும் மிதக்கும் கண்களுடன் என்னருகில் வந்து மெல்ல வாய் திறந்தாள்...

என்னங்க எழுந்திருங்க, ஆபிஸ்ல ஆடிட்டிங் இருக்கு சீக்கிரம் போகனும்னு சொல்லிட்டு, குறட்டை விட்டு தூங்கிக்கிட்டு இருக்கீங்களே என என் தர்மபத்தினியின் குரல் கேட்டது. சே... அந்த தேவதை என்ன சொல்ல வந்தாள்னு இப்ப எப்படி தெரிஞ்சிக்கிறது.

கிப்ரிஷ்

அதைப் படித்ததில் இருந்து உடனே செயல்படுத்திப் பார்த்துவிட வேண்டும் என எனக்கு வாய் பரபரக்க ஆரம்பித்து விட்டது. ஆனால் நினைத்த உடனே அதை அவ்வளவு சுலபத்தில் செயல்படுத்திவிட முடியாது. அதற்கென நேரம், காலம் பார்க்கத் தேவையில்லை என்றாலும், நிச்சயம் வசதியான இடம் பார்த்துதான் ஆரம்பிக்க வேண்டும். இல்லையென்றால் மானமே போய்விடும்.

அம்மா ஞாபகமா இருந்தது, உடனே வந்துட்டேன் என சாக்கு சொன்னாலும் உண்மையில் நான் ஊருக்கு வந்ததே அதை செயல்படுத்திப் பார்க்கத் தான். விஷயம் இதுதான், கொஞ்ச நாட்களாகவே எனக்கு தியானத்தின் மீது ஒரு கண் விழ ஆரம்பித்திருக்கிறது. ஆனால் கண்ணை மூடிக் கொண்டு ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் மணிக்கணக்கில் உட்கார்வதெல்லாம் என்னால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்கள். அப்போதுதான் நாலடியார் (கொஞ்சம் குள்ளமாக இருப்பான்) ஓஷோ புத்தகம் ஒன்றைக் கொடுத்தான். அதில் பல்வேறு தியான முறைகள் விளக்கப்பட்டிருந்தன. அவற்றில் என்னை மிகவும் கவர்ந்தது தான் ‘கிப்ரிஷ்’.

கிப்ரிஷ் என்றால் அர்த்தமற்ற சத்தம் என்று அர்த்தம். அதாவது எந்தவித அர்த்தமும் இல்லாமல் மனதில் தோன்றியதை எல்லாம் வாய் விட்டு சத்தமாக கத்த வேண்டும். இப்படி தொடர்ந்து சிறிது நேரம் கத்திக் கொண்டே இருந்தால் மனதில் அடைந்து கிடக்கும் உணர்வுகள் கட்டவிழ்ந்து எழுத்துக்களாய் கரைந்து போகும். மனம் லேசாகி வானில் பறக்கும், இதுவரை அனுபவித்திராத ஒரு புதிய அமைதி பிறக்கும் என அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் படித்ததில் இருந்து உடனே அதை செய்து பார்க்க வேண்டும் என துடிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆனால் நான் இருக்கும் திருவல்லிக்கேணி மேன்ஷனில் வாய்விட்டு கத்த முடியுமா? மெரினாவில் கத்தலாம் என்றாலும் எல்லா இடத்திலும் ஆட்கள் இருக்கிறார்கள். கிப்ரிஷ் சோதனைக்கு சரியான இடம் நம்ம ஊர் வயல்வெளிதான் என மின்னல் வெட்டியதும் வண்டியேறிவிட்டேன்.

நண்பனைப் பார்த்துவிட்டு வருவதாக சொல்லி காலையிலேயே சைக்கிள் எடுத்துக் கொண்டு கிளம்பினேன். ஊரைத் தாண்டி யாருமற்ற வயல்வெளியில் சாலையோரமாக சைக்கிளை நிறுத்திவிட்டு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இரண்டு புறமும் பார்த்தேன். ஆட்கள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். லே-அவுட் போடப்பட்ட புதர்கள் நிறைந்த அந்த பொட்டல்வெளியில் சிறிது தூரம் நடந்ததும், நான் எதிர்பார்த்த அந்த இடம் வந்தேவிட்டது. எனக்கான சோதனைக் களம்.

ஆழமாக மூன்று முறை மூச்சை இழுத்துவிட்டேன். ஆரம்பித்தேன் கிப்ரிஷ்ஷை. ஆ...ஊ...ஏய்....மாய்....கோய்... இரண்டே நிமிடம்தான். அடர்ந்த முட்புதருக்குள் இருந்து விருட்டென எழுந்தார் ஓர் விருமாண்டி. தோளில் தொங்கிய டவுசர் அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை அப்பட்டமாக விளக்கியது. கண்ணை உருட்டி என்னை வெறியுடன் வெறித்துப் பார்த்தவர், நாக்கை மடித்து என்னைப் போலவே கிப்ரிஷ்ஷில் ஏதோ சத்தமாக சொல்லிவிட்டு விறுவிறுவென நடையைக் கட்டினார். நான் சைக்கிளை எடுத்துக் கொண்டு சத்தமில்லாமல் வீடு வந்து சேர்ந்தேன்.

கூவம்... நதிமூலம்....





அக்மார்க் சென்னைவாசியான நான் சிறுவயதில் இருந்து கூவம் ஆற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு தான் அழுக்கோடும், துர்நாற்றத்தோடும் ஓடிக்கொண்டிருந்தாலும் அல்லது தேங்கி நின்றுகொண்டிருந்தாலும் அதன் மீது எனக்கு எப்போதுமே ஓர் பிரமிப்பு உண்டு. சென்னையில் பெரும்பாலும் எங்கு சென்றாலும் திடீரென குறுக்கிட்டு ஹாய் சொல்லும் இந்த பிரம்மாண்ட ஆறு? (சாக்கடை!) எங்கிருந்து வருகிறது என பல சமயங்களில் யோசித்ததுண்டு. ஆனால் இதற்காக ஒருநாள் நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டி வரும் என்று அப்போது நிச்சயமாக கற்பனை கூட செய்ததில்லை.

சென்னையின் வரலாற்றை கூவத்தை தவிர்த்துவிட்டு எழுத முடியாது என்பது புரிந்தவுடன், கூவம் தொடங்கும் இடத்தை நேரில் சென்று பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தேன். ஒரு சனிக்கிழமை காலை நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு எனது மோட்டார் சைக்கிளில் கூவத்தின் ஊற்றுக்கண்ணைத் தேடிப் புறப்பட்டேன். அதற்கு முன்னர் அது பற்றி சில தகவல்களை சேகரித்தேன். கூவம் ஆறு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூவம் என்ற கிராமத்தில் தனது பயணத்தை தொடங்குகிறது. இந்த கிராமத்தில் பழமையான சிவன் கோவில் ஒன்று உள்ளது. இங்குள்ள சிவனுக்கு பல நூற்றாண்டுகளாக கூவம் ஆற்றில் இருந்து கொண்டு வரப்படும் நீரில் தான் அபிஷேகம் செய்யப்படுகிறது. அந்த அளவுக்கு கூவம் ஆறு இவ்விடத்தில் தூய்மையாக இருக்கும். இவைதான் நான் சேகரித்த தகவல்கள்.

கூவம் கிராமத்திற்கு எப்படி செல்வது என நண்பர்கள் சிலரிடம் விசாரித்தேன். திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் டெல்ஃபை டிவிஎஸ் நிறுவனம் தாண்டியதும் வரும் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி சில கிலோமீட்டர்கள் பயணித்தால் மப்பேடு என்ற இடம் வரும், அங்கிருந்து சுமார் 4 கி.மீ சென்றால் கூவம் கிராமம் வந்துவிடும் என்றார்கள். அதேவழியைப் பின்பற்றி மப்பேடு பகுதியை நெருங்கும்போதே சாலையோரத்தில் ஒரு புராதன கோவில் கண்களில்பட்டது. கூவம் கோவில் இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டதா என்ற சந்தேகத்துடன் அந்த கோவிலுக்குள் சென்றோம். ஆனால் அது மப்பேட்டில் உள்ள சிங்கீஸ்வரர் ஆலயம் என்றார் கோவில் சிவாச்சாரியார். ராஜராஜ சோழனின் தமையன் ஆதித்த கரிகாலன் கிபி 967இல் கட்டிய கோவில். பொன்னியின் செல்வனில் மர்மமான முறையில் கொலை செய்யப்படுவாரே அதே ஆதித்த கரிகாலன்தான். கோவிலை சுற்றிப் பார்த்துவிட்டு கூவம் நோக்கி வண்டியை விரட்டினோம்.

கூவம் எல்லையில் நெடுஞ்சாலையில் இருந்து ஒரு கிளைச் சாலை பிரிந்து ஊருக்குள் செல்கிறது. வழி நெடுகிலும் பசுமையான வயல்கள் எங்களை தலைசாய்த்து வரவேற்றன. ஒருவழியாக கூவம் திருபுராந்தக சுவாமி கோவிலை மதியம் 12 மணியளவில் சென்றடைந்தோம். கோவில் சிவாச்சாரியார் இப்போதுதான் நடையை சார்த்திவிட்டு கிளம்பினார் என்றார்கள். இந்த கோவிலில் உள்ள திருபுராந்தகசுவாமியை அர்ச்சகர்கள் கூட தொட்டு பூஜை செய்வது கிடையாது. எனவே அவர் தீண்டாத் திருமேனி ஆண்டவர் என்று வழங்கப்படுகிறார் என்றும், இந்த லிங்கம் காலநிலைக்கு ஏற்ப நிறம் மாறும் தன்மையுடையது என்றும் கேள்விப்பட்டிருந்தேன். எனவே திருபுராந்தகரை பார்க்க வேண்டும் என ஆவலுடன் சென்றிருந்தேன். தீண்டாத் திருமேனி ஆண்டவரை காணும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், கோவிலை சுற்றிப் பார்க்கலாம் என்றது சற்று ஆறுதலாக இருந்தது.

சுற்றி வரும் போது கண்ணில்பட்ட கிணறும், அபிஷேக நீர் குடிக்காதீர்கள் என்ற அறிவிப்பும் லேசாக உறுத்தியது. சுவாமிக்கு கூவம் ஆற்றில் இருந்து வரும் நீரில்தான் அபிஷேகம் நடைபெறுவதாக கேள்விப்பட்டேனே என்று உள்ளூர்வாசி ஒருவரிடம் என் சந்தேகத்தை வெளிப்படுத்தினேன். 'அதெல்லாம் ஒருகாலத்தில அப்படி இருந்ததுங்க, இப்ப ஆத்துல தண்ணியே கெடையாது. அப்படி இருந்தாலும் 4 கிலோ மீட்டர் போய் தண்ணி எடுத்துவர ஆள் இல்லை. அதான் கோவில் கிணத்து தண்ணியையே பயன்படுத்துறோம்' என்றார். விசேஷ காலங்களில் மட்டும் ஆற்றில் மணலைத் தோண்டி ஊற்றெடுக்கும் தண்ணீரை எடுத்து வருவோம் என்றார். சோழர்களால் கட்டப்பட்ட இந்த கோவில் எந்த ஆண்டு கட்டப்பட்டது என்பது குறித்து எந்த குறிப்பும் இல்லை. இது திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற ஸ்தலம்.

கோவிலுக்கு அருகில் ஒரு சிறிய அழகிய குளம் இருக்கிறது. இந்த குளத்தில் தவளைகள் இருக்காது என்பது இதன் சிறப்பம்சம் என்றார்கள். நானும் சிறிது நேரம் தவளைகளை தேடிப் பார்த்தேன். ஆனால் ஒன்று கூட கண்ணில்படவில்லை. தவளைகளை கணக்கெடுப்பதை விட்டுவிட்டு வந்த வேலையைப் பார்ப்போம் என்று கூவம் ஆற்றைப் பார்க்கப் புறப்பட்டோம். வழியில் ஒருவரிடம் கூவம் ஆறு எங்கு புறப்படுகிறது, அதன் தோற்றத்தை பார்க்க எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டோம்.

கூவம் ஏரியில் இருந்து தான் கூவம் ஆறு புறப்படுகிறது. ஆனால் பல ஆண்டுகளாக ஏரியில் தண்ணீர் கிடையாது. நரசிங்கபுரம் என்ற ஊருக்கு போனால் அந்த ஏரியைப் பார்க்கலாம் என்றார். உடனே அங்கிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நரசிங்கபுரம் கிராமத்திற்கு போனோம். அங்கிருந்த சிலரிடம் கூவம் ஆறு இங்கிருந்துதான் தொடங்குகிறதா என்று கேட்டால் அதெல்லாம் தெரியாது, இங்க ஒரு ஏரி இருக்கு அவ்வளவுதான் என்று கூறிவிட்டு வேலையைப் பார்க்கப் போய்விட்டார்கள். நாங்கள் ஏரியைப் பார்க்கப் போனோம். மிகப் பரந்த ஒரு பொட்டல்வெளி எங்களை வரவேற்றது. கூவம் ஏரிக்குள் தமிழ்நாடு மின்சார வாரியம் வரிசையாக கம்பங்களை நட்டுவைத்திருக்கிறது. ஆடு, மாடுகள் மேய்கின்றன. எப்போதோ நிறைந்து கிடந்த பழைய நினைவுகளை அசைபோட்டபடி கூவம் ஏரி அமைதியாக எங்களைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தது. அதில் இருந்த வேதனை உள்ளுக்குள் என்னவோ செய்தது. நான் தேடி வந்த தூய்மையான கூவத்தின் பிறப்பிடம் இதுதான் என்று மனது நம்ப மறுத்தது.

கனத்த மனதுடன் வெளியில் வந்தபோது எதிர்ப்பட்ட சிலரிடம் கூவம் ஆறு எங்கிருந்து தொடங்குகிறது என்று மீண்டும் அதே கேள்வியைக் கேட்டேன். ஆனால் இம்முறை வேறு ஒரு புதிய பதில் வந்தது. இங்கிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவு போனால் கேசவரம் அணைக்கட்டு வரும், அங்குதான் கொற்றலை எனப்படும் குசஸ்தலை ஆறும், கூவம் ஆறும் பிரிகிறது. அதுதான் கூவத்தின் பிறப்பிடம் என்றார்கள். கூவத்தின் ஊடாகவே பயணிக்க வேண்டுமென்றால் இங்கிருந்து மாரிமங்கலம் போய், அனக்கட்டாபுத்தூர் வழியாக உறியூர் என்ற ஊருக்கு போங்கள். அங்குதான் அந்த அணை இருக்கிறது என்றார் ஒரு பெரியவர்.

மனந்தளராத விக்கிரமாதித்தனைப் போல கூவத்தின் பிறப்பிடத்தை பார்க்காமல் ஊர் திரும்புவதில்லை என்ற உறுதியுடன் பயணத்தை தொடர்ந்தோம். வறண்டு பாலைவனமாகக் கிடக்கும் கூவம் ஆற்றின் கூடவே பயணித்தோம். ஆங்காங்கே ஆழ்துளைகளைப் போட்டு தண்ணீரை உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியே பயணித்து மாரிமங்கலத்திற்குள் நுழையும்போது காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள் வந்துவிட்டதாக பெயர்ப் பலகைகள் அறிவித்தன. அடுத்து உறியூரைக் குறிவைத்து முன்னேறினோம். ஒரு இடத்தில் ஆற்றில் இறங்கி ஏறியதும் உறியூர் வந்துவிட்டது. அது வேலூர் மாவட்டம் என்றது அங்கிருந்த பெயர்ப் பலகை. மரத்தடியில் அமர்ந்திருந்த சிலரிடம் கூவம் இங்கிருந்துதான் புறப்படுகிறதா என்று கேட்டோம். 'ஐயையோ, அது கூவம் கிராமத்தில இருந்துல்ல வருது' என்று எங்களை பரிதாபமாகப் பார்த்தார்கள். 'சரிங்க, கேசவரம் அணை எங்கிருக்கு?' என்று கேட்டோம். இன்னும் 3 கிலோமீட்டர் போங்க என்றார்கள். உறியூரில் இருந்தும் 3 கிலோ மீட்டரா? வெயில் மண்டையைப் பிளந்தது, நாக்கு தள்ளியது. இருப்பினும் தொடர்ந்து முன்னேறினோம்.

கடைசியில் ஒருவழியாக கேசவரம் அணைக்கட்டை அடைந்துவிட்டோம். ஆனால் இங்கும் ஒரு சொட்டு நீரைக் கூடப் பார்க்க முடியவில்லை. மழைக்காலங்களில் குசஸ்தலை ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் இங்கு இரண்டாகப் பிரித்துவிடப்படுகிறது. ஒன்று புழல் நீர்த்தேக்கத்திற்கும், மற்றொன்று பூண்டி நீர்த்தேக்கத்திற்கும் செல்கிறது. இதில் பூண்டிக்கு செல்லும் ஆறு, கூவம் கிராமத்திற்கு அருகில் வரும்போது கூவம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீருடன் சேர்ந்து கூவம் ஆறாக உருவாகி சென்னையை நோக்கி நகர்கிறது. கூவம் ஆறு என்பது கூவம் கிராமத்தில் தொடங்குகிறது என்றாலும், அதற்கான பிள்ளையார் சுழி கேசவரம் அணைக்கட்டில் போடப்படுகிறது என்பதுதான் அரசு ஆவணங்களிலும் கூறப்பட்டுள்ள தகவல். மொத்தத்தில், கூவத்தின் தொடக்கமாக கூறப்படும் இரண்டு இடங்களையும் பார்த்துவிட்டோம்.

திரும்பும் வழியில் தாகத்தை தணிக்க தண்ணீர் பாக்கெட் வாங்கிக் குடித்த போது, பல நூற்றாண்டுகளாக ஓடிக் கொண்டிருந்த ஒரு ஆற்றைத் தேடி வந்து தண்ணீரையே பார்க்காமல் திரும்பும் அவலம் முகத்தில் அறைந்தது.


நன்றி: புதிய தலைமுறை

ஆதிமனிதனின் வீட்டிற்கு ஒரு விசிட்

சென்னை நகரின் உருவாக்கம், பிரம்மாண்ட வளர்ச்சி, அதன் அரசியல், அங்கு வாழ்ந்த, வாழும் மனிதர்கள், அவர்களின் கலாச்சாரம், பண்பாடு, புராதன கட்டடங்கள், அவை சொல்லும் சுவாரஸ்யமான கதைகள் என சென்னையின் முழு பரிமாணத்தையும் உள்ளடக்கிய ஒரு புத்தகம் எழுதும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். இவை குறித்து ஏற்கனவே பல புத்தகங்கள் வந்திருந்தாலும் அவற்றில் சொல்லப்படாமல் விடுபட்டுப் போன சுவையான, பயனுள்ள, மறைக்கப்பட்ட பல விஷயங்கள் இருப்பதாக உணர்கிறேன். எனவே அவற்றையும் பதிவு செய்யும் முயற்சிதான் இது. இதன் ஒரு பகுதியாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அலைந்து திரிந்து தகவல்களை திரட்டிக் கொண்டிருக்கிறேன். இந்த பணியில் ஈடுபட்டிருக்கும்போது எனக்கு எதிர்பாராமல் ஒரு புதையல் கிடைத்தது.

கலைஞர் தொலைக்காட்சியின் திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் திரு. அருள்பிரேம் தாஸுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, சுமார் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆதிமனிதர்கள் வாழ்ந்த குகை ஒன்று திருவள்ளூர் மாவட்டத்தில் இருப்பதாகவும், அதை சென்று பார்ப்பது ஒரு பரவச அனுபவமாக இருக்கும் என்றும் கூறினார். உடனே புறப்படுவது என்று முடிவெடுத்து அடுத்த நாள் (03-10-09, சனிக்கிழமை) காலை பயணத்தை தொடங்கினேன். காட்டுப் பகுதிக்குள் சுமார் 4 கி.மீ நடக்க வேண்டியிருக்கும், தனியாக போகாதீர்கள் என்று எச்சரித்திருந்ததால் எனது மைத்துனர் திரு. சந்திரசேகரையும் உடன் அழைத்துக் கொண்டு கிளம்பினேன்.

சந்துருவின் பைக்கை எடுத்துக்கொண்டு எங்களின் மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கினோம். பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அருகில் ஆதிமனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் அகழ்வைப்பகம் ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டு முதலில் அங்கு சென்றோம். ஓடு வேய்ந்த ஒரு சிறிய கட்டடம். பெரியவர்களுக்கு ரூ. 5 கட்டணம் வசூலிக்கிறார்கள். சிறுவர்களுக்கு கட்டணம் ரூ. 3. வெளிநாட்டினராக இருந்தால் கட்டணம் ரூ. 50 (சிறுவர்களுக்கு ரூ. 25). வெள்ளிக்கிழமை விடுமுறை.

தொல் பழங்காலத்தைப் பற்றி மட்டும் தனியாக விளக்கும் வகையில் அமைந்துள்ள தொல்லியல் அகழ்வைப்பகம் இந்தியாவிலேயே இது ஒன்றுதானாம். இந்தியாவிலேயே பூண்டிக்கு அருகில் உள்ள அதிரம்பாக்கத்தில் தான் அதிக அளவில் பழைய கற்கால கருவிகள் கிடைத்திருப்பதால் இந்த அகழ்வைப்பகத்தை இப்பகுதியில் அமைத்துள்ளனர்.

இங்கு பழைய கற்கால (Paleolithic Age) கருவிகள் உரிய விளக்கங்களுடன் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல நுண்கற்காலம் (Microlithic Age), புதிய கற்காலம் (Neolithic Age), பெருங்கற்காலம் (Megalithic Age) ஆகியவற்றைச் சேர்ந்த பிற தொல்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அகழ்வைப்பகத்தின் காப்பாட்சியர் திரு. துளசிராமனிடம் நாங்கள் ஆதிமனிதர்களின் குகையைக் காண வந்திருப்பது பற்றி கூறினோம். மிகுந்த உற்சாகத்துடன் எங்களை வரவேற்ற அவர், அகழ்வைப்பகத்தில் உள்ள பொருட்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் நிதானமாகவும், விரிவாகவும் விளக்கினார். இங்கு கற்கால மனிதர்கள் பயன்படுத்திய பலவகை கைக்கோடாரிகள், கிழிப்பான்கள், சுரண்டிகள், வட்டுகள், துளைப்பான்கள், சிறு கத்திகள், அம்பு முனைகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சுமார் 80 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லுயிர் எச்சங்களும் இங்கு காணக் கிடைப்பது இந்த அகழ்வைப்பகத்தின் சிறப்பம்சம். இந்த வரிசையில் மிகப் பெரிய நத்தை ஒன்று கண்ணாடி பெட்டிக்குள் அமைதியாக சுருண்டபடி நம்மைப் பார்த்து 'என்னடா பேராண்டி, எப்படி இருக்கிறே?' என்கிறது.

அகழ்வைப்பக கட்டடத்திற்கு வெளியே 'தொல்மாந்தர் வாழ்வகம்' என்ற பெயரில் பழைய கற்கால மனிதர்களின் ஆளுயர மாதிரி சிலைகள் நான்கும், பாறை குகை மாதிரி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

திரு. துளசிராமனிடம் விடைபெறும் போது, சிறப்பு ஆணையர் திரு. ஸ்ரீ. ஸ்ரீதரை பதிப்பாசிரியராகக் கொண்டு, தான் எழுதிய 'தமிழகத் தொல் பழங்காலமும் பூண்டி அகழ்வைப்பகமும்' என்ற நூலில் ஆதிமனிதர்களின் வாழ்க்கை முறை, தமிழக அகழ்வாராய்ச்சிப் பணிகள் பற்றிய பல அரிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அந்த புத்தகத்தை வாங்கிக் கொண்டோம். (விலை ரூ.30). மேலும் நாங்கள் பார்க்கப்போகும் குடியம் குகை (குடியம் என்ற ஊருக்கு அருகில் இருப்பதால் இந்த பெயர்) அல்லிகுழி மலைத்தொடரில் அமைந்திருப்பதாகவும், அதைப் போல 16 குகைகள் அந்த மலைத்தொடரில் இருக்கின்றன என்றும் கூறினார். ஆனால் மற்ற குகைகளை இனங்காணுவது கடினம் என்றார்.

அங்கிருந்து குடியம் குகையைத் தேடிப் புறப்பட்டோம். ஊத்துக்கோட்டை செல்லும் சாலையில் சீத்தஞ்சேரி என்ற இடத்தில் இடப்பக்கம் திரும்ப வேண்டும் என்று சொல்லியிருந்தார் திரு. அருள்பிரேம் தாஸ். அதேபோல் திரும்பி தூரத்தில் தெரியும் மலைகளை நோக்கி சென்றுகொண்டே இருந்தோம். முடிவே இல்லாதது போல சாலை நீண்டு கிடந்தது. இடையிடையே மிகச் சிறிய கிராமங்கள் குறுக்கிட்டன.

வழியில் தொல்லியல் துறை வைத்துள்ள போர்டு நம்மை வலப்பக்கம் செல்லும்படி வழிகாட்டியது. ஒரு சிறிய கிராமத்திற்குள் நுழைந்தோம். சாலையோரத்தில் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த சிறுவர்களிடம் கொஞ்சம் தண்ணீர் வாங்கி தாகத்தை தணித்துக் கொண்டோம். இந்த பாட்டிலை கொண்டு போங்கண்ணா... என்று ஒரு பாட்டில் தண்ணீரை நீட்டினார்கள் அந்த பெரிய மனதுக்காரர்கள். பரவாயில்லை, தாகம் தீர்ந்துவிட்டது என்று தெம்பாக கிளம்பினோம். மிகப்பெரிய தவறு செய்கிறோம் என்று அப்போது எங்களுக்கு உறைக்கவில்லை.

இன்னும் சிறிது தூரம் சென்றதும் சாலை முடிவுற்றது. அருகில் இருந்த வீட்டில் குகைக்கு வழி கேட்டோம். மனிதர்கள் போன வழித்தடம் இருக்கும் அதைப் பின்பற்றி போக வேண்டியதுதான் என்றார் அந்த வீட்டுக்காரர். இரு சக்கர வாகனத்தில் வந்திருப்பதால் இன்னும் சிறிது தூரம் வரை வண்டியிலேயே போகலாம். முடிந்த வரை போங்கள், பிறகு இறங்கித்தான் நடக்க வேண்டும் என்றார். இங்கிருந்து குகைக்கு வெறும் நான்கு கிலோ மீட்டர் தான் என்று சொல்லிவிட்டு, பாதியில் விட்டு வந்த தொலைக்காட்சித் தொடரை பார்க்க மீண்டும் உள்ளே சென்றுவிட்டார்.

மதியம் 1 மணி. வெயில் மண்டையைப் பிளந்தது. மிகப் பெரிய காடு வாயை அகல திறந்துகொண்டு எங்களை விழுங்க காத்திருப்பது போல் இருந்தது. வனவிலங்குகள் இருக்குமா என்று கேட்டதற்கு அதெல்லாம் ஒன்றும் கிடையாது, கரடி, நரி மட்டும் இருக்கும், தைரியமா போங்க என்று வழியில் சிலர் சொன்னது இப்போது ஞாபகம் வந்தது. லேசான பயம் கலந்த விறுவிறுப்புடன் உள்ளே நுழைந்தோம். வாயில் இருந்து தொண்டைக்கு போவது போல் பாதை குறுகியது, வெயிலும், அதனால் வெளிச்சமும் சற்று குறைந்தது. கரடுமுரடான கூழாங்கற்கள் நிறைந்த ஒற்றையடிப் பாதையில் சந்துரு வாகனத்தை லாவகமாக செலுத்திக் கொண்டு போனார். பாறைகளால் போடப்பட்ட ஒற்றையடிப் பாதையில் குலுங்கியடி மெதுவாக ஊர்ந்து சென்றோம். ஓரிடத்தில் ஒரு ஸ்பிளண்டர் வாகனம் நின்று கொண்டிருந்தது. எங்களுக்கு முன் ஒரு சாகச விரும்பி வந்து சைட் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியிருந்தார். அன்னாரின் அடியொற்றி நாங்களும் எங்கள் வாகனத்தை அங்கேயே பார்க் செய்தோம். காட்டிற்குள் பார்க் என்று கிண்டலடித்தபடி நடக்கத் தொடங்கினோம்.

கூழாங்கல் பாதை எங்களை வழிநடத்தி அழைத்துச் சென்றது. மிகவும் அடர்த்தியான காடு என்று சொல்ல முடியாது. ஆனால் சில இடங்களில் 10 அடி தொலைவிற்கு அப்பால் இருப்பது தெரியாத அளவு புதர்கள் அடர்ந்திருந்தன. ஏதோ பெயர் தெரியாத குருவி விட்டுவிட்டு கத்தும் சத்தம் மட்டும் கேட்டது. உயரமான புதர்கள் நிறைந்த காடாக இருக்கிறது. நமக்கு பரிச்சயமான மரங்கள் எதுவும் காணப்படவில்லை. பூஞ்சை பிடித்த நிலையில் இருந்த சில சப்பாத்தி கள்ளிச்செடிகள் பால்யத்தை நினைவூட்டின.

மெல்ல சுற்றிப் பார்த்தால் நான்கு புறமும் பெரிய பெரிய குன்றுகளுக்கு இடையில் நின்று கொண்டிருப்பது புலப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்தோம். நடக்க, நடக்க பாதை நீண்டது. நாக்கு வறண்டது. தண்ணீர் பாட்டில் தானத்தை ஏற்காதது எவ்வளவு பெரிய தவறு என்பது இப்போது நன்றாகவே புரிந்தது. வியர்த்து வழிந்தாலும் விடாமல் நடந்தோம். சில இடங்களில் இரண்டு பாதைகள் பிரிந்தன. எதில் போவது எனத் தெரியவில்லை. மேலே ஒரு சுனை இருப்பதாக கேள்விப்பட்டிருந்தோம். அதற்கான வழியாக அவை இருந்திருக்கலாம். ஆனால் நாங்கள் குகையைப் பார்ப்பதிலேயே ஆர்வமாக இருந்தோம். வழிகாட்டவும் ஆளில்லை. குடியம் குகையில் ஒரு அம்மன் சிலையை வைத்து அங்குள்ள மக்கள் வழிபடுவதாகவும், அதற்காக அந்த குகைக்கு மனிதர்கள் அடிக்கடி வந்து போவதாகவும் கேள்விப்பட்டிருந்தோம். இந்த தகவல் தான் எங்களுக்கு வழி கண்டுபிடிக்க பெரிதும் உதவியது.

இரண்டு பாதைகள் பிரியும் இடங்களில் சிறிது தூரம் சென்று பார்ப்போம். கூழாங்கல் பாதையில் கால்தடத்தை வைத்து வழி கண்டுபிடிக்க முடியாது. சிகரெட் அட்டை, ஸ்வீட் பாக்ஸ் மூடி என ஏதேனும் வழியில் தென்படும். அந்த பாதையில் தொடர்ந்து நடப்போம். சில இடங்களில் சிறு பாறைகளைக் குவித்துவைத்து பொங்கல் வைத்த அடையாளங்கள் தென்பட்டன. குகையை நெருங்கிவிட்டோம் என்ற எண்ணம் தோன்றியதும் உள்ளத்தில் இனம்புரியாத படபடப்பு. ஒரு இடத்தில் பாதை வளைந்தது, அந்த சிறிய கொண்டைஊசி வளைவில் நுழைந்து திரும்பியபோது, லட்சக்கணக்கான ஆண்டுகளை கண்ட அந்த குகை எங்கள் முன் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது. ஒரு கணம் மூச்சுவிட மறந்துவிட்டோம். நமது மூதாதையர்கள் வாழ்ந்த அந்த குகைக்குள் காலடி எடுத்து வைக்கும்போது வார்த்தைகளில் வடிக்க முடியாத ஒரு பரவசம்.

5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வேட்டையாடுவதை தொழிலாக கொண்ட மனிதர்கள் வாழ்ந்த குகை. மரப்பட்டைகளையும், விலங்குகளின் தோலையும் ஆடையாக அணிந்திருந்த அவர்களுக்கு நெருப்பின் பயன்பாடு கூடத் தெரியாது. தங்கள் கூட்டத்தில் யாராவது இறந்துவிட்டால் அவர்களின் உடலை இயற்கையாக அழியும்படி அப்படியே விட்டுவிடும் அளவிற்கு இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மனிதர்களின் குகை. அப்படியே கண்களை மூடி 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வேகமாகப் பயணித்தேன். குகைக்குள் அமர்ந்திருந்த அந்த கற்கால மனிதர்கள் கள்ளம் கபடமில்லாமல் சிரித்தபடி என்னை கனிவுடன் பார்த்தனர். இதையாவது விட்டுவிடுங்கள் என்று மன்றாடுவது போலவும் அந்த பார்வை இருந்தது. அந்த குகையின் எளிய கம்பீரமும், காடு கொடுத்த கனத்த மௌனமும் எங்களை சூழ்ந்துகொண்டன.

குகைக்குள் நுழைந்தபோது தாயின் அரவணைப்பில் இருப்பது போல இருந்தது. எதிரில் உள்ள பாறைகளில் வெயில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, இந்த குகையில் மட்டும் குளிர்ச்சி நிறைந்திருந்தது. சுமார் 200 பேர் அமரக் கூடிய அளவிற்கு உள்ளே இடமிருந்தது. மூன்று புறமும் பெரிய பெரிய பாறைகள் அணிவகுத்திருப்பதால் மிகவும் பாதுகாப்பான இடம் என இதனைத் தேர்வு செய்திருப்பார்கள் போலிருக்கிறது.

சிலர் இந்த குகைக்குள் ஒரு அம்மன் சிலையை வைத்து, மதமற்ற மனிதர்கள் வாழ்ந்த இடத்தை ஒரு மதத்திற்கு உரியதாய் மாற்ற முயற்சித்திருக்கிறார்கள். அந்த அம்மனுக்கு அடிக்கடி வழிபாடு நடப்பது அங்கிருக்கும் பொருட்களைப் பார்க்கும் போது புரிகிறது. குகையின் வெளிப்புறத்தில் பெரிய பெரிய தேன் கூடுகள் காற்றில் மெல்ல அசைந்து நமக்கு பீதியூட்டின. குகையின் உட்புறமும் நிறைய தேன் கூடுகள் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. சிறிது நேரம் குகைக்குள் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தோம். வாழ்வின் அரிய பெரிய தத்துவங்களை அந்த குகை நொடிப்பொழுதில் அநாயாசமாக எடுத்து வீசியது. அங்கு வெறுமனே அமர்ந்திருப்பதே ஒரு பெரிய வாழ்வானுபவத்தை கொடுத்தது.

தாத்தா, பாட்டி வீட்டிற்கு வந்த சிறுவர்கள், விடுமுறை முடிந்ததும் வேறு வழியின்றி வீடு திரும்புவதைப் போல, மனமே இல்லாமல் அங்கிருந்து கிளம்பினோம். நிறைவும், ஏக்கமும் கலந்த கலவையாக மனம் மாறிப் போனதை உணர முடிந்தது. ஒரு பட்டாம்பூச்சி வழிகாட்டியபடியே முன்னால் பறந்து சென்றது. தங்கள் வீட்டிற்கு வந்த விருந்தினர்களை அந்த ஆதிமனிதர்களே மிகுந்த கருணையோடு காட்டிற்கு வெளியே வரை வந்து வழியனுப்புவது போல அது இருந்தது.