என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, January 26, 2013

மெட்ராஸ் உயிரியல் பூங்கா


'நான் ஒருத்தன் பெருசா என்ன பண்ணிட முடியும்?' என அங்கலாய்ப்பவர்கள் ஒருமுறை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்று வாருங்கள். ஆயிரக்கணக்கான விலங்குகளுடன் ஏக்கர் கணக்கில் பரந்துவிரிந்திருக்கும் இந்த பிரம்மாண்ட பூங்காவிற்கு அடித்தளம், ஒரு தனிநபரின் முயற்சி என்பதை கேட்கும்போது நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கும். இதுபோன்று மேலும் பல அரிய பெரிய விஷயங்களை சத்தமில்லாமல் செய்துவிட்டுப் போன சாதனை மனிதர்தான் எட்வர்ட் கிரீன் பால்ஃபர் (Edward Green Balfour).
எட்வர்ட் பால்ஃபர்
எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்த பால்ஃபருக்கு, குடும்ப நண்பர் மூலம் மெட்ராசில் துணை சர்ஜன் வேலை கிடைத்தது. இதற்காக 1834இல் மெட்ராஸ் புறப்பட்ட பால்ஃபர், வழியில் மொரீஷியஸ் சென்றார். இந்த பயணம் அவரது வாழ்வை மட்டுமின்றி மெட்ராசின் வாழ்வையும் மாற்றப் போகிறது என்பது அப்போது அவருக்குத் தெரியாது. அங்கு மரங்கள் வெட்டப்பட்டு சுற்றுச்சூழல் களையிழந்து கிடந்தது பால்ஃபரின் ஆழ்மனதில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது.

1836இல் இந்தியாவில் கால்பதித்த பால்ஃபர், மருத்துவராக நாடு முழுவதும் சுற்றினார். இந்த பயணத்தின்போது இந்தி, பாரசீகம் உள்ளிட்ட மொழிகளை ஆர்வமாக கற்றுக் கொண்டார். இதனால் உள்ளூர் மக்களுடன் பேசிப் பழக வசதியாக இருக்கும் எனக் கருதி, இவரை சிறிய கிராமப் பகுதிகளில் பணியாற்ற அனுப்பினர். இதுமட்டுமின்றி அரசுக்கு மொழிபெயர்ப்பாளராகவும் அடிக்கடி பால்ஃபர் பயன்பட்டு வந்தார்.

இந்த பணிக்கு இடையில், பால்ஃபர் இந்தியா குறித்த பல்வேறு புள்ளிவிவரங்களைத் திரட்டினார். இவற்றைக் கொண்டு, வெவ்வேறு தட்பவெட்ப நிலையில் படையினரின் உடல்நலனைப் பேணுவது எப்படி? பருவ மாற்றத்தில் மரங்களின் பங்கு என்ன? என்பது போன்ற கட்டுரைகளை வெளியிட்டார். அவர் ஒரு மருத்துவராகவும் இருந்ததால், பருவநிலை மாற்றம் உடலில் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் குறித்து விஞ்ஞான ரீதியில் விரிவாக விளக்க முடிந்தது.

இதுமட்டுமின்றி மொரீஷியசில் பார்த்ததை வைத்து, மரங்கள் அழிக்கப்பட்டால் அது பஞ்சத்திற்கு வழிவகுக்கும் என்பதையும் அவர் அரசுக்கு தெரியப்படுத்தினார். ஏற்கனவே பல பஞ்சங்களைப் பார்த்து பதறிப் போயிருந்த கிழக்கிந்திய கம்பெனி, பால்ஃபரின் பரிந்துரையை உடனடியாக ஏற்றுக் கொண்டது. இப்படித்தான் மெட்ராஸ் வனத்துறை என்ற ஒன்று தொடங்கப்பட்டது.

சென்னை அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராக இருந்த பால்ஃபர், ஒரு புலி, ஒரு சிறுத்தை என இரண்டு விலங்குகளை அதே வளாகத்தில் கூண்டில் பார்வைக்கு வைத்தார். இந்த விலங்குகளைப் பார்க்க வெகு தொலைவில் இருந்தெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். இன்னும் சில விலங்குகளை பார்வைக்கு வைத்ததும், கூட்டம் அதிகரித்தது. விலங்குகளின் எண்ணிக்கை அதிகம் இருக்கும்போது, அருங்காட்சியகத்திற்கு வரும் கூட்டமும் அதிகரிக்கிறது என்பதை கணக்கெடுப்புகள் மூலம் உறுதிப்படுத்திக் கொண்ட பால்ஃபர், மெட்ராசில் உயிரியல் பூங்கா ஒன்று வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்தார். இப்படித்தான் 1855இல் 'மெட்ராஸ் உயிரியல் பூங்கா' தொடங்கப்பட்டது. இதுதான் இந்தியாவின் முதல் வனவிலங்கு பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது. 

கர்நாடகத்தின் கடைசி நவாப்பான குலாம் கவுஸ் கானுடன் (Nawab Ghulam Ghouse Khan) பால்ஃபருக்கு நல்ல நட்பு இருந்தது. இதைப் பயன்படுத்தி நவாப்பிடம் இருந்த காட்டு விலங்குகளை அருங்காட்சியகத்துக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். நவாப்பும் அனுப்பி வைக்க, 1856ஆம் ஆண்டு இந்த அருங்காட்சியகத்தில் 360 விலங்குகள் இருந்தன. மிகப்பெரிய நீர்வாழ்விலங்குகள் காட்சியகம் (Aquarium) ஒன்றும் அரசு அருங்காட்சியகத்தில் இருந்தது.

பின்னர் மாநகர சபை விலங்கினக் காட்சிசாலைக்கு பொறுப்பேற்றதும், 1861ஆம் ஆண்டு, தற்போது சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் இருக்கும் இடத்திற்கு மெட்ராஸ் உயிரியல் பூங்கா இடம்மாறியது. அப்போது இங்கு 116 ஏக்கரில் பீப்பிள்ஸ் பார்க் இருந்தது. இதன் ஒருபகுதியைத் தான் விலங்கியல் காட்சியகமாக மாற்றினர். சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக உயிரியல் பூங்கா இங்குதான் இருந்தது. மூர் மார்க்கெட்டுக்கு வருபவர்கள் இந்த விலங்குகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு செல்வர், கட்டணமெல்லாம் கிடையாது.
வண்டலூர் பூங்காவில் உள்ள பறவைகள்
1975இல் பூங்காவும் வளர்ந்துவிட்டது, மெட்ராசும் நன்கு வளர்ச்சி பெற்றுவிட்டது. எனவே பூங்காவை விரிவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால் நகரின் மையப் பகுதியில் இதற்கு மேல் இடம் ஒதுக்க முடியாததால், இங்கிருந்த வனவிலங்குகள் எல்லோரும் மெகா ஊர்வலமாகப் புறப்பட்டு புறநகர் பகுதியான வண்டலூருக்கு சென்றனர். 1985 ஜூலை 24ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை முறைப்படி திறந்துவைத்தார்.

இப்படித்தான் பால்ஃபர் என்ற ஒற்றை மனிதர் போட்ட விதை, இன்று 1200 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. அதன் நிழலில் ஆயிரக்கணக்கான விலங்குகள் அமைதியாக இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன.

நன்றி - தினத்தந்தி

* வண்டலூர் ஆரம்பத்தில் புதர்க்காடாகத்தான் இருந்தது. உயிரியல் பூங்கா அதிகாரிகளும், அக்கம்பக்கத்து கிராமத்தினரும் சேர்ந்து நிறைய மரக்கன்றுகளை நட்டு, பெரிய மரங்கள் ஓங்கி நிற்கும் வனமாக மாற்றி இருக்கின்றனர்.
* உள்ளூர் மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த பால்ஃபர், ஆங்கில மருத்துவத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் கற்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
* பால்ஃபரின் நினைவுப் போற்றும் வகையில் இன்றும் சென்னையில் ஒரு தெரு அவரது பெயரைத் தாங்கி நிற்கிறது.

Sunday, January 20, 2013

பிரபல தெருக்களின் பிதாமகன்கள்


சமுதாயத்திற்காக உழைத்து மக்கள் மனதில் நின்றவர்களை வருங்கால சந்ததியினர் மறக்காமல் இருப்பதற்காக அவர்களின் பெயர்களை தெருக்களுக்கு சூட்டுவது வழக்கம். ஆனால் சென்னையில் பல பிரபல தெருக்கள் இன்றும் நாம் கேள்விப்படாத ஆங்கிலேயர்களின் பெயர்களைத் தாங்கி நிற்கின்றன. உண்மையில், இவர்கள் யார்? சமூகத்திற்கு என்ன செய்தார்கள்? என்று தேடியபோது நிறைய சுவாரஸ்யத் தகவல்கள் கிடைத்தன.

அவற்றை ஆராய்வதற்கு முன் நாம் ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். கிழக்கிந்திய கம்பெனி இருந்த காலத்தில், சென்னையில் இவ்வளவு பேர் இல்லை. எனவே ஆங்கிலேயர்கள் மிகப்பெரும் நிலப்பரப்புகளில் தோட்ட வீடுகள் அமைத்து வசதியாக வாழ்ந்திருக்கிறார்கள். காலப்போக்கில் அங்கு மற்றவர்களும் குடியேறும்போது, அப்பகுதி அந்த தோட்ட வீட்டுக்காரரின் பெயரில் அழைக்கப்பட்டு அப்படியே நிலைத்துவிடுகிறது.

இதற்கு சிறந்த உதாரணம் போயஸ் கார்டன். போ (poe) என்பவர் கதீட்ரல் சாலைக்கு தென்புறம் ஒரு பெரிய தோட்ட வீட்டில் வாழ்ந்திருக்கிறார். இதனால் அது போவின் தோட்டம் (poe's garden) என்று அழைக்கப்பட்டது. இது காலப்போக்கில் அப்படியே தமிழில் உச்சரிக்கப்பட்டு 'போயஸ் கார்டன்' ஆகிவிட்டது. ஜான் சைமன் என்ற ஆங்கிலேயர் 1833ஆம் ஆண்டு எழுதிய டைரிக் குறிப்பில், இதுபற்றி குறிப்பிட்டிருக்கிறார். சைமன் தனது குறிப்பில் மேலும் சில ஆங்கில கனவான்களின் இருப்பிடங்கள் பற்றிய தகவல்களையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

சென்னையின் பிரபல சாலைகளான ஹாடோஸ் ரோடும், ஹாரிங்டன் ரோடும் இரண்டு அரசு ஊழியர்களின் பெயர்களைத் தாங்கி நிற்கின்றன. ஜார்ஜ் ஜான் ஹாடோ (George John Haddow) 1805ஆம் ஆண்டு முதல் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றியவர், 1827ஆம் ஆண்டுவாக்கில் இவர் வசித்த தெருதான் தற்போது ஹாடோஸ் ரோடு என அழைக்கப்படுகிறது. அதேபோல, 1784இல் கிழக்கிந்திய கம்பெனியில் இணைந்த வில்லியம் ஹாரிங்டனுக்கு (William Harrington) 1796இல் சேத்துப்பட்டில் 10 ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டது. அந்த நிலத்தில்தான் பயணிக்கிறது இன்றைய ஹாரிங்டன் ரோடு. ஹால்ஸ் ரோடு, ஹாரிஸ் சாலை, சேமியர் சாலை, டெய்லர்ஸ் ரோடு என பல சாலைகளின் கதையும் கிட்டத்தட்ட இதேதான்.

நுங்கம்பாக்கத்தின் பிரதான சாலையான ஸ்டெர்லிங் ரோடு ஒருகாலத்தில் மாட்டு வண்டிகள் பயணிக்கும் ஒற்றையடி பாதையாக இருந்தது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்த பகுதியில் ஒரு இடத்தை வாங்கினார் ஸ்டெர்லிங் (L. K. Sterling). ஆங்கிலேயப் படையில் சாதாரண சிப்பாயாக சேர்ந்த இவர், படிப்படியாக முன்னேறி செஷன்ஸ் நீதிபதியாகிவிட்டார். அந்த நீதிமானின் நினைவாகத் தான் இன்றும் நீண்டு கிடக்கிறது ஸ்டெர்லிங் சாலை.

ராயப்பேட்டை மணிக்கூண்டிற்கு அருகில் தொடங்குகிறது வைட்ஸ் சாலை (Whites Road). சுதந்திரத்திற்கு பிறகும் ஏன் இன்னும் இந்த வெள்ளைக்கார சாலை இருக்கிறது என்று விசாரித்ததில், வைட் (J. D. White) என்ற ஆங்கிலேயர், கம்பெனி தனக்கு அளித்த நிலத்தில் இங்கு வீடு கட்டி குடியிருந்தது தெரியவந்தது. இந்த வைட் சாலையை அண்ணா சாலையுடன் இணைக்கிறது பட்டூலாஸ் சாலை. இதற்கு காரணகர்த்தா ஆங்கிலப் படையில் கேப்டனாக இருந்த எர்ஸ்கின் பட்டூலா (Archibald Erskine Patullo). இவரும் இந்த பகுதிவாசிதான்.

இதேபகுதியில் இருக்கிறது வுட்ஸ் ரோடு (Wood's Road). ஆங்கிலேய அரசின் தலைமைச் செயலாளராக இருந்த எட்வர்ட் வுட்டின் வீடு இங்கு இருந்ததே இதற்கு காரணம். 1822இல் எட்வர்ட் இந்த வீட்டில் தங்கி இருந்தார். பின்னர் அந்த வீடு கேஸ்டல் ஹோட்டலாக (Castle Hotel) மாறிவிட்டது. ஸ்பென்சர் பிளாசாவுக்கு அருகில், பின்னி நிறுவனத்தின் ஜான் பின்னி வாழ்ந்த வீடு இருந்த தெரு, இன்றும் பின்னி சாலை என்றுதான் அழைக்கப்படுகிறது. இப்படி முக்கியப் புள்ளிகள் வசித்த தெருக்களுக்கு எல்லாம் அவர்களின் பெயர்களை வஞ்சனை இல்லாமல் வைத்துவிட்டார்கள் ஆங்கிலேயர்கள்.

சென்னையில் ஒரு சிலரின் பதவி கூட தெருப் பெயராக மாறி இருக்கிறது. இதற்கு நல்ல உதாரணம், எழும்பூரில் இருக்கும் கமாண்டர் இன் சீஃப் (Commander-in-Chief) சாலை. 19ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் இங்கிருந்த ஒரு வீட்டில், ஒரு பெயர் தெரியாத கமாண்டர் இன் சீஃப் வாழ்ந்து, இந்த பெயருக்கு காரணமாகிவிட்டார். இந்த வீடு பின்னர் விக்டோரியா ஹோட்டலாக மாறிவிட்டது.

ஒருகாலத்தில் சென்னையில் அனைத்து தெருக்களுமே ஆங்கிலேயர்களின் பெயர்களுடன்தான் இருந்தன. பின்னர் இவற்றில் பலவற்றை மாற்றி தமிழ் அறிஞர்கள், கலைஞர்கள் மற்றும் சமூகப் போராளிகளின் பெயர்களை வைத்தனர். இருப்பினும் இதில் தப்பிப் பிழைத்து இன்றும் தாக்குப் பிடிக்கிறார்கள் சில ஆங்கிலக் கனவான்கள். கொஞ்சம் நின்று நிதானித்துப் பார்த்தால், இதுபோன்ற ஒவ்வொரு பெயர்ப் பலகைக்கு பின்னும் ஒரு கதை கருப்பு வெள்ளையில் ஓடிக் கொண்டிருப்பது தெரியும்.

நன்றி - தினத்தந்தி

* ஹென்ரி சுலைவன் கிரீம் என்ற அரசு ஊழியர் வாழ்ந்த சாலைதான் கிரீம்ஸ் ரோடு. கிரீமின் சாலை (Graeme's Road) என்பதுதான் இப்படி மருவிவிட்டது.

* சாந்தோம் பகுதியில் இருந்த ஹாமில்டன் பாலம் (Hamilton Bridge) நம்மாட்கள் வாயில் நுழையாததால் அம்பட்டன் வாராவதி ஆகிவிட்டது. பின்னர் இது மீண்டும் மொழிமாற்றப்பட்டு பார்பர்ஸ் பிரிட்ஜ் (Barbers Bridge) ஆனது தனிக்கதை.

Sunday, January 13, 2013

நேப்பியர் பாலம்


வாழ்க்கை மிகவும் விசித்திரமானது. அது சில நேரங்களில் எதிரெதிரான இரண்டு விஷயங்களை ஒன்றாக கட்டிப் போட்டுவிடுகிறது. அப்படி ஒரு விநோத விளையாட்டின் சாட்சிதான் நேப்பியர் பாலம். மெட்ராசில் முதன்முதலில் கட்டப்பட்ட பாலங்களில் இன்றும் நிலைத்து நிற்கும் இந்த பாலத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமானது.
நேப்பியர் பாலம் 1895இல்
1819இல் ஸ்காட்லாந்தில் ஒரு பிரபுக் குடும்பத்தில் பிறந்த ஃபிரான்சிஸ் நேப்பியர், இங்கிலாந்தில் உள்ள டிரினிடி கல்லூரியில் சேர்ந்தார். பெற்றோர் சேர்த்துவிட்டார்களே தவிர அவரால் படிப்பை தொடர முடியாததால் பாதியிலேயே வெளியேறிவிட்டார். ஆனால் தனியாக ஆசிரியரை அமர்த்தி சில வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொண்டார். அதுதான் அவருக்கு பிற்காலத்தில் பெரிதும் கை கொடுத்தது.

வெளிநாட்டு மொழிகள் அறிந்தவர் என்பதால் இங்கிலாந்தின் தூதராக அவர் பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டார். வியன்னா,  இத்தாலி, அமெரிக்கா, ரஷ்யா என உலகமெல்லாம் சுற்றிக் கொண்டிருந்தவரை இங்கிலாந்து அரசு கடைசியில் மெட்ராசிற்கு அனுப்பியது. 1866இல் மெட்ராஸ் ஆளுநராக நியமிக்கப்பட்டார் லார்ட் நேப்பியர்.

நேப்பியர் பதவி ஏற்ற சிறிது காலத்திலேயே அவர் ஒரு மிகப்பெரிய பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இன்றைய ஒரிசாவில் உள்ள கஞ்சம் (Ganjam) மாவட்டத்தில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அன்றைய மெட்ராஸ் மாகாணத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால், பஞ்சத்தால் தவித்த கஞ்சம் மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை நேப்பியர் தலையில் விழுந்தது. ஆனால் நேப்பியர் இதனை திறமையாகவே சமாளித்தார்.

உலகம் முழுவதும் சுற்றிப் பெற்ற அனுபவமும், நட்பும் அவருக்கு கை கொடுத்தது. கிரீமிய யுத்தத்தில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளித்ததன் மூலம் கை விளக்கேந்திய காரிகை என வரலாற்றில் போற்றப்படும் பிரபல செவிலியர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல், நேப்பியரின் நெருங்கிய நண்பர். மக்கள் பஞ்சத்தால் மடிந்தபோது, அவருக்கு கடிதம் எழுதி ஆலோசனை கேட்டார் நேப்பியர். நைட்டிங்கேலின் ஆலோசனைகளை உடனே செயல்படுத்தவும் செய்தார். இது பஞ்சத்தை எதிர்கொள்ள மிகவும் உதவியது.
நேப்பியர் அருங்காட்சியகம்
பென்னாறு அணை நேப்பியர் காலத்தில்தான் கட்டப்பட்டது. இதேபோல விவசாயத்தை வளப்படுத்த நிறைய பாசனத் திட்டங்களை நேப்பியர் செயல்படுத்தினார். 1872இல் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த ரிச்சர்ட் பூர்ட், அந்தமானில் கொல்லப்பட்ட பிறகு சிறிது காலம் தற்காலிக வைஸ்ராயாக நேப்பியர் நியமிக்கப்பட்டார். பின்னர் ஒரு புதிய வைஸ்ராய் கிடைத்ததும், நேப்பியர் இந்திய சேவைகளை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிவிட்டார்.

இதனிடையே நேப்பியர் மெட்ராஸ் ஆளுநராக இருந்தபோது, 1869இல் கட்டப்பட்டதுதான் நேப்பியர் பாலம். அந்த காலத்தில் இதனை இரும்புப் பாலம் என்று அழைத்தனர். மெரினாவையும், புனித ஜார்ஜ் கோட்டையையும் இணைக்கும் வகையில், 149 மீட்டர் நீளத்தில், 6 வளைவுகளுடன் பிரம்மாண்டமாக இந்த பாலம் கட்டப்பட்டது. அதெல்லாம் சரி, எதற்காக இப்படி ஒரு பாலத்தை கட்டினார்கள் என்ற கேள்விக்கு விடை தேடிய போது ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்தது.

இப்போது நேப்பியர் பாலம் இருக்கிற இடத்துக்கு அருகே அந்த காலத்தில் நரிமேடு என்று ஒரு குன்று இருந்தது. ஜோக் ஹில் என்று அழைக்கப்பட்ட அந்தக் குன்றில் பீரங்கியை நிறுத்தி குறி வைத்தால் கோட்டையைத் தரைமட்டம் ஆக்கிவிட முடியும்.
எனவே கோட்டைக்கு அருகில் இப்படியொரு ஆபத்து வேண்டாம் என நினைத்த வெள்ளையர், குன்றை அகற்றுவது என முடிவெடுத்தனர். எனவே அந்தக் குன்றின் மண்ணை மாட்டு வண்டிகளில் எடுத்துச் சென்று ஒரு இடத்தில் கொட்டினர். அப்படி மண் அடிக்கப்பட்ட பகுதிதான் இன்று மண்ணடி என்று அழைக்கப்படுகிறது.

இப்படி குன்று காணாமல் போன பிறகுதான் அங்கு நேப்பியர் பாலம் முளைத்தது. மெட்ராசில் உள்ள அழுக்குகளை எல்லாம் சுமந்துகொண்டு, தள்ளாடி அசைந்துவரும் கூவம் ஆறு, இந்த பாலத்திற்கு அடியில் நுழைந்துதான் வங்கக் கடலோடு கலக்கிறது. லார்ட் நேப்பியர் சுத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். நகர சுகாதாரம் பற்றி சிறப்பு பயிற்சி பெறுவதற்காக அதிகாரிகள் சிலரை இங்கிலாந்திற்கு அனுப்பியவர். இப்படி சுத்தம், சுகாதாரம் என வாழ்ந்தவரின் நினைவாக நிற்கும் நேப்பியர் பாலம், கூவத்தின் கருப்புத் திரவம் கருநீல வங்கக் கடலில் கலக்கும் கண்கொள்ளா காட்சியை இன்று அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆம், வாழ்க்கை விசித்திரமானதுதான்.

நன்றி - தினத்தந்தி

* நேப்பியர் பாலம் 1999ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.
* சிந்தாதிரிப்பேட்டையில் நேப்பியரின் நினைவாக தொடங்கப்பட்ட நேப்பியர் பூங்கா தான், இன்றைய மே தினப் பூங்கா.
* நேப்பியர் பெயரில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஒரு அருங்காட்சியகம் இருக்கிறது. 

தி.நகர் தந்த பிட்டி. தியாகராயர்


சென்னையில் ஷாப்பிங் போக வேண்டும் என்றதுமே நினைவுக்கு வருவது தி.நகர்தான். ஆனால் எந்நேரமும் தி.நகரிலேயே தவம் கிடப்பவர்களுக்கு கூட தியாகராய நகர் என்ற பெயருக்கு காரணமான அந்த தியாகராயர் பற்றி அதிகம் தெரிவதில்லை. உண்மையில் தியாகராயரும் ஒரு நடமாடும் தி.நகர் சிறப்பு அங்காடியாகத்தான் இருந்திருக்கிறார். காரணம், பல அரிய பண்புகளை அந்த அற்புத மனிதரின் வாழ்வில் இருந்து நாம் ஷாப்பிங் செய்துகொள்ள முடிகிறது.
பிட்டி. தியாகராயர்
சென்னை கொருக்குப்பேட்டையில் ஒரு பணக்கார வணிகக் குடும்பத்தில் 1852ஆம் ஆண்டு ஏப்ரல் 27ந் தேதி தியாகராயர் பிறந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்ற அவர், காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து தீவிரமாக பணியாற்றினார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு சென்னையில் நடைபெற்றபோது, அவர்தான் அதனை முன்னின்று நடத்தினார்.

நெசவு மற்றும் தோல் பதனிடும் தொழிலில் அவரது குடும்பம் ஈடுபட்டிருந்தது. இது தவிர வேறு பல தொழில்களும் அவர்களுக்கு இருந்தன. பிட்டி நெசவு ஆலை என்ற பெயரில் சுமார் நூறு தறிகளைக் கொண்ட நெசவாலையை ஏற்படுத்திய தியாகராயர், கைத்தறி நெசவில் குஞ்சம் இழுத்து நெய்யும் முறையை அறிமுகப்படுத்தினார். அதற்கு முன்பெல்லாம் நாடாவை கைகளில் தள்ளிதான் நெய்தார்கள்.  இங்கு தயாரிக்கப்பட்ட பிட்டி மார்க் கைக்குட்டைகள் உலகப் புகழ் பெற்றவையாக விளங்கின.

காந்தியடிகள் சென்னைக்கு வந்தபோது பிட்டி நெசவாலைக்கு வருகை தந்து பார்வையிட்டார். ஒரு தறியில் அமர்ந்து நெய்தும் பார்த்தார். இந்த நவீன உத்திகளைக் கற்றுக் கொள்வதற்காகத் தன்னுடைய மகன்கள் மணிலால், மதன்லால் ஆகிய இருவரையும் ஆறு மாத பயிற்சிக்காகவும் தியாகராயரிடம் அனுப்பி வைத்தார்.

காந்தியிடம் மிகுந்த மரியாதை இருந்தாலும், அவரது பல கொள்கைகளில் இருந்து தியாகராயர் முரண்பட்டார். ஒருகட்டத்தில் இனிமேல் காங்கிரசில் இருக்க முடியாது என முடிவெடுத்து வெளியேறினார். 'தென் இந்தியர் நல உரிமைச் சங்கம்' என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கினார். இதன் சார்பில் 'நீதி' (Justice) என்ற பெயரில் ஒரு இதழையும் நடத்தினார். இதனால் அந்த அமைப்பையே நீதிக்கட்சி (Justice Party) என்று மக்கள் அழைக்கத் தொடங்கினர்.
நீதிக்கட்சி பிரமுகர்களுடன் தியாகராயர்
சர்.பி. தியாகராயரின் தன்னலமற்ற விடாமுயற்சியால், 1921ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி அறுதிப் பெரும்பான்மைப் பெற்றது. அப்போதைய ஆளுநர் வெலிங்டன் பிரபு, நீதிக்கட்சியின் தலைவரான தியாகராயரை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால், முதலமைச்சர் பதவியை ஏற்க விரும்பவில்லை என்று கூறி, கடலூர் வழக்கறிஞர் சுப்பராயலு ரெட்டியாரை முதலமைச்சராக பொறுப்பேற்கச் செய்தார், தியாகராயர்.

இவர் 1892 முதல் 1925 வரை சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராகப் பணி ஆற்றினார்.  1920 ஆம் ஆண்டு உள்ளாட்சி மன்ற சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் தியாகராயர்தான்.  தொடர்ந்து 1922 வரை மூன்று முறை சென்னை மேயராகப் பதவி வகித்த தியாகராயரைப் போற்றும் வகையில் ரிப்பன் மாளிகையின் வாயிலில் இவருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. 1959-ஆம்  திராவிட முன்னேற்றக் கழகம் சென்னை மாநகராட்சியின் நிர்வாகப் பொறுப்பை முதன்முதலில் ஏற்றபோது, பேரறிஞர் அண்ணாவின் ஆணைப்படி இவரது சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டுதான் திமுக உறுப்பினர்கள் மாமன்றத்தினுள் நுழைந்தனர்.

மாநகராட்சி சார்பில் ஏராளமான பள்ளிகளைத் தொடங்கிய தியாகராயர், அங்கு பயிலும் மாணவர்களுக்கு இலவச மதிய உணவு, இலவச பாடப் புத்தகங்கள் ஆகியவற்றை வழங்கி இன்றைய அரசுகளின் பல நல்ல திட்டங்களுக்கு முன்னோடியாக விளங்கினார். தமது சொந்தப் பணத்தில் பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவினார். வடசென்னையில் உள்ள தியாகராயர் கல்லூரி இவர் தொடங்கியதே. 

சென்னை மற்றும் ஆந்திரா பல்கலைக் கழகங்களை நிறுவவும் பெரும் தொண்டாற்றினார். செட்டிநாடு அரசர் அண்ணாமலை செட்டியாருடன் இணைந்து அண்ணாமலை பல்கலைக் கழகம் உருவாக உறுதுணையாக இருந்தார். பாடசாலைகளைப் போலவே தொழில்நுட்பப் பயிற்சி பள்ளிகளையும் தொடங்கினார். 

சுயமரியாதைக் கொள்கையில் ஈடுபாடு கொண்டிருந்தாலும் தியாகராயர், கடவுள் திருப்பணிகளிலும் நிகரற்று விளங்கினார்.  மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தை பத்தாயிரம் ரூபாய்  செலவு செய்து திருப்பணி செய்து குடமுழுக்கிற்கு ஏற்பாடு செய்தார். பார்த்தசாரதி கோவிலுக்கும் திருப்பணி செய்வித்தார்.  வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்ரீஇராமலிங்க சவுடேஸ்வரி கோயிலின் உற்சவ சிம்ம வாகனத்தின் கண்களில் பதிப்பதற்காக இரண்டு கண்ணாடி கண் விழிகளை லண்டனிலிருந்து வரவழைத்தார். 

எப்போதும் வெள்ளை உடையில் பளிச்சென காட்சியளிக்கும் தியாகராயர், 'வெள்ளுடை வேந்தர்' என அன்புடன் அழைக்கப்பட்டார். 1905ஆம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் 5ஆம் ஜார்ஜ் சென்னை வந்தபோது, மாநகராட்சி மேயராக இருந்த சர். பிட்டி. தியாகராயர், அதே வெள்ளுடையில் இளவரசரை வரவேற்க அப்போதைய கவர்னர் ஒப்புதல் அளித்தார். ஆங்கிலேய ஆட்சியில் ஒரு தமிழருக்கு இந்த அனுமதி கிடைப்பது அரிதான விஷயமாக இருந்தது.


1925இல் தியாகராயர் இறந்தபோது இவரது நினைவாக சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்ட நகருக்கு தியாகராய நகர் (தி.நகர்) எனப் பெயர் சூட்டப்பட்டது. பிட்டி தியாகராயர் அரங்கம் எனும் பெயரில் தி.நகரில் அரங்கம் ஒன்றும் இருக்கிறது. பெங்களூரிலும் இவரது நினைவாக தியாகராய நகர் என ஒரு நகர் இருக்கிறது.

 நன்றி - தினத்தந்தி

* இந்திய அரசு தியாகராயரைப் போற்றும் வகையில் தபால் தலை வெளியிட்டிருக்கிறது. தபால் தலையின் பின்னணியில் தறி நெய்யும் நெசவாளியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

* யஞ்யராமன் என்ற பிராமணர் தாழ்த்தப்பட்டவர்களுக்காகத் தொண்டு செய்ய சேரிப் பகுதியில் போய் தங்கியதால், சாதி நீக்கம் செய்யப்பட்டு வேலையையும் இழந்தார். தியாகராயர் அவரைப் பச்சையப்பன் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணி நியமனம் செய்தார்.