என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Wednesday, August 11, 2010

நைலின் நதி மூலம்எத்தியோப்பியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அழகிய பாகிர் தார் நகரில் உள்ளது அந்த பிரம்மாண்ட ஏரி. ‘தானா ஏரி’ என்று அழைக்கப்படும் அந்த ராட்சத ஏரியின் பரப்பளவைக் கேட்டால் அசந்து போய் விடுவீர்கள். சுமார் 3,600 சதுர கிலோ மீட்டர்கள். இந்த ஏரிக்குள் 37 தீவுகள் உள்ளன. இவை அனைத்தையும் விட முக்கியமான விஷயம், இந்த பிரம்மாண்ட ஏரியில் இருந்துதான் உலகின் நீளமான நைல் நதி உற்பத்தியாகிறது.

தானா ஏரியில் உள்ள தீவுகளில் சரித்திர மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த தேவாலயங்களும், மடாலயங்களும் உள்ளன. பல்வேறு நூற்றாண்டுகளைச் சேர்ந்த இந்த தேவாலயங்களில் உலகின் பல அரிய ஓவியங்கள் உள்ளன. அந்த காலத்தில் புறஉலகத் தொடர்பே இல்லாமல் தனித்திருந்ததால் எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற நாட்டின் அரிய கலைப் பொக்கிஷங்களையும், மதச் சின்னங்களையும் இங்கு பாதுகாத்து வைத்தனர். அக்காலத்தில் எத்தியோப்பியாவை ஆண்ட ஐந்து சக்கரவர்த்திகளின் உடல்களின் மிச்சங்களும் இங்குள்ள டாகா இஸ்டஃபேனஸ் என்ற தீவில் வைக்கப்பட்டுள்ளது.
பறவை நேசர்களுக்கும் தானா ஏரி ஒரு சொர்க்க பூமியாகத் திகழ்கிறது. காரணம், இந்த ஏரியின் கரைப் பகுதிகளில் பல்வேறு இனப் பறவைகள் காணப்படுகின்றன. உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் இங்கு ஏராளமான பறவைகள் வருகின்றன. எனவே ஏரி முழுவதும் ஆங்காங்கே காணப்படும் இந்த பல வண்ணப் பறவைகளைப் பார்த்துக் கொண்டே படகில் பயணம் செய்யும் அற்புதமான அனுபவத்திற்காக ஆண்டுதோறும் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

உலகின் நீளமான நைல் நதி இந்த தானா ஏரியில் இருந்துதான் தனது பயணத்தைத் தொடங்குகிறது. இங்கு தொடங்கி சூடானின் பாலைவனங்கள் வழியாகப் பயணித்து எகிப்து வரை செல்கிறது. தானா ஏரியில் இருந்து பிரிந்த இடத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் நைல் நதி வேகம் பிடிக்கத் தொடங்குகிறது. அப்பகுதியில் 40 மீட்டர் அகலத்தில் 45 அடி உயரத்தில் இருந்து பெரும் ஓசையுடன் விழும் நைல் நதியைப் பார்ப்பதே ஓர் திகிலான அனுபவமாக இருக்கிறது.

3 comments:

 1. நல்ல பதிவுகள்.. இன்றுதான் பார்க்கிறேன் .. தொடர்ந்து எழுதுங்கள்

  ReplyDelete
 2. பூமி ரொம்ம புதுமை தாங்க
  plz remove word verification

  ReplyDelete
 3. அப்படியே நம்ம காவிரியின் நதிமூலத்தையும்,
  அதில் தமிழனின் உரிமையும் பதிவு செய்யுங்கள்...

  ReplyDelete