என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Sunday, August 8, 2010

கிப்ரிஷ்

அதைப் படித்ததில் இருந்து உடனே செயல்படுத்திப் பார்த்துவிட வேண்டும் என எனக்கு வாய் பரபரக்க ஆரம்பித்து விட்டது. ஆனால் நினைத்த உடனே அதை அவ்வளவு சுலபத்தில் செயல்படுத்திவிட முடியாது. அதற்கென நேரம், காலம் பார்க்கத் தேவையில்லை என்றாலும், நிச்சயம் வசதியான இடம் பார்த்துதான் ஆரம்பிக்க வேண்டும். இல்லையென்றால் மானமே போய்விடும்.

அம்மா ஞாபகமா இருந்தது, உடனே வந்துட்டேன் என சாக்கு சொன்னாலும் உண்மையில் நான் ஊருக்கு வந்ததே அதை செயல்படுத்திப் பார்க்கத் தான். விஷயம் இதுதான், கொஞ்ச நாட்களாகவே எனக்கு தியானத்தின் மீது ஒரு கண் விழ ஆரம்பித்திருக்கிறது. ஆனால் கண்ணை மூடிக் கொண்டு ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் மணிக்கணக்கில் உட்கார்வதெல்லாம் என்னால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்கள். அப்போதுதான் நாலடியார் (கொஞ்சம் குள்ளமாக இருப்பான்) ஓஷோ புத்தகம் ஒன்றைக் கொடுத்தான். அதில் பல்வேறு தியான முறைகள் விளக்கப்பட்டிருந்தன. அவற்றில் என்னை மிகவும் கவர்ந்தது தான் ‘கிப்ரிஷ்’.

கிப்ரிஷ் என்றால் அர்த்தமற்ற சத்தம் என்று அர்த்தம். அதாவது எந்தவித அர்த்தமும் இல்லாமல் மனதில் தோன்றியதை எல்லாம் வாய் விட்டு சத்தமாக கத்த வேண்டும். இப்படி தொடர்ந்து சிறிது நேரம் கத்திக் கொண்டே இருந்தால் மனதில் அடைந்து கிடக்கும் உணர்வுகள் கட்டவிழ்ந்து எழுத்துக்களாய் கரைந்து போகும். மனம் லேசாகி வானில் பறக்கும், இதுவரை அனுபவித்திராத ஒரு புதிய அமைதி பிறக்கும் என அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் படித்ததில் இருந்து உடனே அதை செய்து பார்க்க வேண்டும் என துடிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆனால் நான் இருக்கும் திருவல்லிக்கேணி மேன்ஷனில் வாய்விட்டு கத்த முடியுமா? மெரினாவில் கத்தலாம் என்றாலும் எல்லா இடத்திலும் ஆட்கள் இருக்கிறார்கள். கிப்ரிஷ் சோதனைக்கு சரியான இடம் நம்ம ஊர் வயல்வெளிதான் என மின்னல் வெட்டியதும் வண்டியேறிவிட்டேன்.

நண்பனைப் பார்த்துவிட்டு வருவதாக சொல்லி காலையிலேயே சைக்கிள் எடுத்துக் கொண்டு கிளம்பினேன். ஊரைத் தாண்டி யாருமற்ற வயல்வெளியில் சாலையோரமாக சைக்கிளை நிறுத்திவிட்டு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இரண்டு புறமும் பார்த்தேன். ஆட்கள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். லே-அவுட் போடப்பட்ட புதர்கள் நிறைந்த அந்த பொட்டல்வெளியில் சிறிது தூரம் நடந்ததும், நான் எதிர்பார்த்த அந்த இடம் வந்தேவிட்டது. எனக்கான சோதனைக் களம்.

ஆழமாக மூன்று முறை மூச்சை இழுத்துவிட்டேன். ஆரம்பித்தேன் கிப்ரிஷ்ஷை. ஆ...ஊ...ஏய்....மாய்....கோய்... இரண்டே நிமிடம்தான். அடர்ந்த முட்புதருக்குள் இருந்து விருட்டென எழுந்தார் ஓர் விருமாண்டி. தோளில் தொங்கிய டவுசர் அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை அப்பட்டமாக விளக்கியது. கண்ணை உருட்டி என்னை வெறியுடன் வெறித்துப் பார்த்தவர், நாக்கை மடித்து என்னைப் போலவே கிப்ரிஷ்ஷில் ஏதோ சத்தமாக சொல்லிவிட்டு விறுவிறுவென நடையைக் கட்டினார். நான் சைக்கிளை எடுத்துக் கொண்டு சத்தமில்லாமல் வீடு வந்து சேர்ந்தேன்.

1 comment:

  1. நத்திங் பட் ஸ்வீட் என ஆங்கிலத்தில் சொல்வார்கள். உங்களது பதிவுகள் அப்படித்தான் இருக்கிறது.
    எங்களைப் போன்ற ஆட்களெல்லாம், எதையாவது எழுத ஆரம்பித்தால், ஏதாவது ஒரு நோக்கத்தில் ஆரம்பித்து, முடிக்க வேண்டும் என நினைப்போம். அப்படியெல்லாம் ஒரு அவசியமும் இல்லை. எந்த ஒரு நோக்கமுமின்றி, என்ன சொல்ல வருகிறார் என்ற ஆராய்ச்சி இன்றி, நிகழ்பவற்றை வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தானே செய்கிறது. நிகழ்வதை சுவாரஸ்யமான நடையில் கொடுத்திருக்கிறீர்கள். மேற்கண்ட மூன்று படைப்புகளுக்கும் எனது ஒரே பின்னூட்டம் இது.
    கிப்ரிஷ் முயற்சி பாராட்டத்தக்கது. நீங்கள் அதற்காகத் தேர்வு செய்த இடத்தை இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாகத் தேர்வு செய்திருக்கலாம். ஒரு விருமாண்டியால் அந்த மிக ஆழமான ஒரு ஆன்மீக முயற்சி தோல்வி அடைந்தது கொஞ்சம் வருத்தத்திற்குரியதுதான். மீண்டும் ஒரு முறை முயற்சிக்கவும்.
    இந்தப் பின்னூட்டத்தை போடுவதற்குள் நான் படாத பாடு பட்டு விட்டேன். குறைந்த பட்சம் 300 எழுத்துக்கள் கேட்கிறது. உங்களுடைய சும்மா பதிவுக்கு நான் சும்மா எதாவது எழுதலாம் என்றுதான் பின்னூட்டம் எழுத துவங்கினேன். அது இவ்வளவு பெரிய ஆபத்தில் போய் முடியும் என நான் நினைக்கவில்லை. ஏதோ கிப்ரிஷ் மாதிரி தொடர்ந்து நிறைய எழுத்துக்களை எழுதிக்கொண்டிருக்கிறேன். அப்பாடா 300 எழுத்துக்கள் வந்து விட்டதா?
    க.சிவஞானம்

    ReplyDelete