என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Sunday, February 26, 2012

ஹிக்கின்பாதம்ஸ்

சிறந்த புத்தகம் என்பது மந்திரக் கம்பளம் போல, நாம் நுழைய முடியாத பல இடங்களுக்கு அது நம்மை அழைத்துச் செல்லும். அப்படிப்பட்ட மந்திரக் கம்பளங்கள் மலை போல் குவிந்திருக்கும் இடம்தான் புத்தகக் கடைகள்.

இன்று சென்னையில் நிறைய புத்தகக் கடைகள் வந்துவிட்டன. உலகின் மிக முக்கியமான புத்தகங்கள் அனைத்தையும் இங்கு காண முடிகிறது. புதிய புத்தகங்கள் உலகின் எந்த மூலையில் பதிப்பிக்கப்பட்டாலும் உடனே சென்னையிலும் அதன் பிரதிகள் கிடைக்கின்றன. ஆனால் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் இதெல்லாம் சாத்தியமா?

முயன்று பார்த்து வெற்றியும் கண்ட ஒரு மனிதரைப் பற்றித்தான் இந்த வாரம் பார்க்க இருக்கிறோம். ஏ.ஜே. ஹிக்கின்பாதம்ஸ் என்ற அந்த மனிதர் இங்கிலாந்தில் இருந்து மெட்ராசிற்கு வந்த ஒரு கப்பலில் டிக்கெட் வாங்காமல் வந்தவர் என்று கூறப்படுகிறது. இப்படி டிக்கெட் வாங்கக் கூட காசு இல்லாமல் மெட்ராஸ் வந்த ஹிக்கின்பாதம்ஸ்தான், இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும் இந்தியாவின் மிகப் பழைய புத்தகக் கடையை நிறுவியவர்.

ஹிக்கின்பாதம்ஸ் மெட்ராசில் பார்த்த முதல் வேலை, இங்கிருக்கும் ராணுவ வீரர்களுக்கு பைபிள் விற்பனை செய்வது. அடுத்ததாக இங்கிருந்த வெஸ்லியன் புத்தகக் கடையில் அவருக்கு நூலகர் வேலை கிடைத்தது. புத்தகப் பிரியரான அவருக்கு இந்த வேலை, கரும்பு தின்னக் கூலி கொடுத்தது போல இருந்தது. ஆனால் இது அதிக காலம் நீடிக்கவில்லை. கடுமையான நஷ்டம் காரணமாக கடையை மூடி விட நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் ஹிக்கின்பாதம்ஸிற்கு இதனை விட்டுவிட மனமில்லை. எனவே மிகக் குறைந்த விலைக்கு இந்த கடையை அவரே வாங்கிவிட்டார்.

1844ஆம் ஆண்டு அப்படி உதயமானதுதான் 'ஹிக்கின்பாதம்ஸ்' புத்தகக் கடை. ஆரம்ப நாட்களில் பணியாளர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளும் அளவிற்கு அவருக்கு வசதி இல்லை. எனவே அவரே இங்கும் அங்கும் ஓடி வாடிக்கையாளர்களுக்கு புத்தகங்களை எடுத்துக் காட்டுவார். அவருடைய நினைவாற்றல் அபாரமானது. எந்த புத்தகம் பற்றிக் கேட்டாலும் மிகச் சரியாக சொல்லுவார். இது புத்தகப் பிரியர்களை இந்த கடையை நோக்கி இழுத்தது. வெல்லக் கட்டியை நோக்கி படையெடுக்கும் எறும்புகள் போல, ஹிக்கின்பாதம்ஸில் மொய்த்தார்கள் மெட்ராஸ் வாசகர்கள். மெல்ல மெல்ல இந்த கடையை மெட்ராசின் ஒரு அறிவார்ந்த அடையாளமாக மாற்றினார் ஹிக்கின்பாதம்ஸ்.

ஜான் முர்ரே என்பவர் 1859ஆம் ஆண்டு எழுதிய Guidebook to the Presidencies of Madras and Bombay என்ற புத்தகத்தில் ஹிக்கின்பாதம்ஸ் மெட்ராசின் பெருமைக்குரிய ஒரு புத்தகக் கடை என்று குறிப்பிட்டிருக்கிறார். அதே ஆண்டு மார்ச் மாதம், அப்போதைய மெட்ராஸ் ஆளுநரான டிரெவெல்யான் பிரபு (Lord Trevelyan) மெக்காலே பிரபுவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், மெட்ராஸ் நகரின் அழகான அம்சங்களில் தனது மனதிற்கு பிடித்த ஹிக்கின்பாதம்சும் ஒன்று என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், சாக்ரடீஸ், பிளாட்டோ முதல் விக்டர் ஹூகோ வரை அனைவரையும் ஹிக்கின்பாதம்சில் சந்திக்க முடியும் என்றும் புகழ்ந்திருக்கிறார்.

1858ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து இந்தியாவின் அரசாட்சி இங்கிலாந்து அரசியிடம் கை மாறிய போது, அதனைத் தெரிவிக்கும் பிரசுரங்களை ஹிக்கின்பாதம்ஸ்தான் ஆங்கிலத்திலும், தமிழிலும் அச்சிட்டு மெட்ராஸ் ராஜ்தானி முழுவதும் விநியோகித்தது. 1875இல் வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தபோது, அவரின் அதிகாரப்பூர்வ புத்தக விற்பனையாளராக ஏ.ஜே. ஹிக்கின்பாதம்ஸ் நியமிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். இதனையடுத்து அரசிற்கு தேவையான புத்தகங்களை விற்பனை செய்யும் மிகப் பெரிய வாய்ப்பு ஹிக்கின்பாதம்சிற்கு கிடைத்தது.

இதனிடையே ஹிக்கின்பாதம்ஸ் புத்தகங்களை சொந்தமாக வெளியிடவும் தொடங்கியது. அப்போதைய இங்கிலாந்து பிரதமர் கிளமெண்ட் அட்லி முதல் மைசூர் மகாராஜா ஜெயசாம்ராஜ்ய உடையார் வரை பல பிரபலங்கள் இதன் வாடிக்கையாளர்களாக இருந்தார்கள். பேரறிஞர் அண்ணா ஹிக்கின்பாதம்சிற்கு வரும் பெரும்பாலான புத்தகங்களை வாங்கிவிடுவாராம். ஒருமுறை ஹிக்கின்பாதம்ஸ் நடத்திய கணக்கெடுப்பின்படி, அதிக புத்தகங்களை வாங்கியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தவர்கள் மைசூர் மகாராஜாவும், பேரறிஞர் அண்ணாவும் தான்.

ஏ.ஜே. ஹிக்கின்பாதம்ஸ், 1888 மற்றும் 1889 ஆகிய ஆண்டுகளில் மெட்ராசின் ஷெரீப் என்ற கவுரவத்தையும் பெற்றார். 1891இல் அவரது மறைவிற்கு பிறகு அவரது மகன் சி.எச். ஹிக்கின்பாதம்ஸ் கடையின் நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டார். அவரது நிர்வாகத்தில் ஹிக்கின்பாதம்ஸ் மெட்ராசிற்கு வெளியிலும் விரிவடைந்தது. ரயில் நிலையங்களில் ஹிக்கின்பாதம்ஸ் கடைகள் முளைத்தன.

1904இல் தான் ஹிக்கின்பாதம்ஸ் இன்று இருக்கும் கலைநயமிக்க கட்டடத்திற்கு மாறியது. நல்ல காற்றோட்டம், உயரமான மேல்தளம் என புத்தகங்கள் பூஞ்சை பிடிக்காமல் இருக்கத் தேவையான அனைத்தையும் கருத்தில் கொண்டு இந்த கட்டடம் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை அலங்கரிக்கும் வண்ணமயமான கண்ணாடிகள் ஐரோப்பாவில் இருந்த வரவழைக்கப்பட்டன, தளத்தில் பதிக்கப்பட்டிருக்கும் கற்கள் இத்தாலியில் இருந்து கொண்டு வரப்பட்டன.

1921ஆம் ஆண்டு ஹிக்கின்பாதம்சை, அசோசியேட்டட் பப்ளிஷர்ஸ் நிறுவனம் வாங்கியது. பின்னர் 1945ஆம் ஆண்டு அமால்கமேஷன் குழுமத்தின் எஸ். அனந்தராமகிருஷ்ணன் இதனை விலைக்கு வாங்கினார். இன்று ஹிக்கின்பாதம்ஸிற்கு தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் நிறைய கிளைகள் இருக்கின்றன.

நிர்வாகம் மாறிவிட்டாலும், இவை அனைத்திற்கும் விதை போட்டவர் இங்கிலாந்தில் இருந்து ஒன்றும் இல்லாமல் வந்து தனது கடின உழைப்பால் உயர்ந்த ஏ.ஜே. ஹிக்கின்பாதம்ஸ். அந்த மனிதரை நினைவூட்டியபடி இன்றும் மவுண்ட் ரோட்டில் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது இந்தியாவின் பழமையான புத்தகக் கடையான ஹிக்கின்பாதம்ஸ்.

நன்றி - தினத்தந்தி

* ஹிக்கின்பாதம்ஸ் முதல் புத்தக்கத்தை 1884ஆம் ஆண்டு வெளியிட்டது. புத்தகத்தின் பெயர் - ‘Sweet Dishes: A little Treatise on Confectionary'

* 1989ஆம் ஆண்டு சில சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு கட்டடத்தின் பழமையான தோற்றத்தை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

* மவுண்ட் ரோட்டில் இருக்கும் இந்த இடத்திற்கு பல கோடி ரூபாய்களை கொட்டிக் கொடுக்க பலர் முன்வந்தும், பழமையான இந்த கட்டடத்தை விட்டுக் கொடுக்க இதன் உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர்.

Monday, February 20, 2012

சென்னையில் தொலைபேசி

மெட்ராஸ் மாநகரம் பல்வேறு விஷயங்களிலும் உலகின் மற்ற நகரங்களுக்கு முன்னோடியாக இருந்திருக்கிறது. அப்படி மெட்ராஸ் முந்திக் கொண்ட ஒரு விஷயம்தான் தொலைபேசி. அதாவது கிரஹாம்பெல் தொலைபேசி என்ற கருவியை கண்டுபிடித்த 5 ஆண்டுகளிலேயே மெட்ராசில் தொலைபேசிகள் சிணுங்கத் தொடங்கிவிட்டன.

மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா மற்றும் ரங்கூன் ஆகிய நகரங்களில் தொலைபேசி இணைப்பகங்கள் ஆரம்பிக்க 1881ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அனுமதி அளிக்கப்பட்டது. ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி (ORIENTAL TELEPHONE COMPANY) என்ற இங்கிலாந்து நிறுவனம் இந்த அனுமதியைப் பெற்று இந்தியாவில் டெலிபோன் தொழிலில் காலடி எடுத்துவைத்தது. இந்த நிறுவனம் முதலில் அலுவலகம் தொடங்கியது மெட்ராசில்தான். 19-11-1881 அன்று பாரிமுனையில் உள்ள எர்ரபாலு செட்டித் தெருவில் 37ஆம் நம்பர் கட்டடத்தில் இந்தியாவின் முதல் தொலைபேசி இணைப்பகம் தொடங்கப்பட்டது.

புதிதாக தொலைபேசி இணைப்பகம் தொடங்கப்பட்ட சமயத்தில், சுமார் 4 லட்சம் மக்கள் வசித்த மெட்ராசில், வெறும் 17 பேர் மட்டுமே தொலைபேசியைப் பயன்படுத்தினர். அந்த ஆண்டு இறுதியில் இந்த எண்ணிக்கை 24ஆக உயர்ந்தது. அந்தக் கால வர்த்தகர்கள் இடையே தொலைபேசிக்கு பெரிய வரவேற்பு எதுவும் இல்லை. சாதாரண மக்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். எனவே தொலைபேசி நிறுவனம் பல்வேறு சலுகைகளை வழங்குவதாக விளம்பரங்களை வெளியிட்டது. ஆனால் அதுவும் பெரிதாக எடுபடவில்லை. 1910ஆம் ஆண்டு கூட வெறும் 350 பேரிடம் மட்டுமே தொலைபேசி இருந்தது. அதிலேயே நிறைய கிராஸ் டாக், ஒருவரைத் தொடர்பு கொள்ள முயன்றால் வேறு ஒருவருக்கு அழைப்பு செல்வது போன்ற பிரச்னைகள் இருந்தன.

1922ஆம் ஆண்டு ஓரியண்டல் டெலிபோன் கம்பெனியின் லைசன்சை புதுப்பிக்கும் தருணம் வந்தது. அப்போது அரசு மூன்று முக்கிய நிபந்தனைகளை விதித்தது. அதாவது, உள்நாட்டு நிறுவனத்திற்கு கம்பெனியை கைமாற்ற வேண்டும், தொலைபேசித் தொழில்நுட்பத்தை நவீனமாக்க வேண்டும், இதற்கு ஏதுவாக கட்டணத்தை உயர்த்த வேண்டும் ஆகியவை தான் அந்த நிபந்தனைகள்.

இதன்படி 1923ஆம் ஆண்டு, ரூ.5 லட்சம் முதலீட்டில் மெட்ராஸ் டெலிபோன் கம்பெனி லிமிடெட் தொடங்கப்பட்டது. இதனிடையே மெல்ல மெல்ல சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1224ஆக உயர்ந்தது. இது மட்டுமில்லாமல், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள், துறைமுகம், சால்ட் குவார்ட்ரஸ் ஆகிய இடங்களில் மக்கள் வசதிக்காக பொதுத் தொலைபேசிகளும் அமைக்கப்பட்டன. ஆனால் பொதுமக்கள் இதனைப் பெரிதாக பயன்படுத்தவில்லை.

இந்த நிலையில்தான் லண்டன் தொலைபேசி இணைப்பகத்தைப் போல மெட்ராஸ் இணைப்பகத்தையும் தானியங்கி முறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்கு எர்ரபாலு செட்டித் தெரு அலுவலகம் போதாது என்பதால் 1925ஆம் ஆண்டு சைனா பஜாரில் 21 ஆயிரம் சதுர அடி நிலம் வாங்கப்பட்டது. அங்கு உடனடியாக ஒரு அலுவலகம் கட்டப்பட்டு அந்த ஆண்டு டிசம்பர் மாதமே பால் காய்ச்சப்பட்டது. அதுதான் சென்னையின் 'டெலிபோன் ஹவுஸ்'.

அப்போதெல்லாம் தொலைபேசி ஒயர்கள் தலைக்கு மேலாகத்தான் சென்று கொண்டிருந்தன. கோவில் தேர் திருவிழாக்கள், சுழன்றடிக்கும் காற்று என பல காரணங்களால் இந்த ஒயர்கள் ஆங்காங்கே அறுந்து தொங்கின. இந்த பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காக பூமிக்கு அடியில் கேபிள் பதிப்பது என மெட்ராஸ் டெலிபோன்ஸ் முடிவெடுத்தது. 1927-28 காலகட்டத்தில் இந்த பணி மும்முரமாக நடைபெற்று கிண்டி வரை கேபிள்கள் பதிக்கப்பட்டன. 1932இல் பெரம்பூர், ராயபுரம், துறைமுகம் என சென்னையின் முக்கியப் பகுதிகள் அனைத்தின் வயிற்றிலும் டெலிபோன் வயர்கள் புகுந்து புறப்பட்டன.

1934ஆம் ஆண்டிற்கு முன்பு வரை டெலிபோன் டைரக்டரி என்பது வெறும் ஒருசில தாள்கள் கொண்டதாகவே இருந்தது. 1934 அக்டோபர் மாதம் தான் பல வண்ண விளம்பரங்களுடன் கனமான முதல் டெலிபோன் டைரக்டரி வெளியிடப்பட்டது. பின்னர் மெல்ல மெல்ல டெலிபோனின் உபயோகத்தை மக்கள் புரிந்துகொண்டனர். எனவே சென்னையில் மவுண்ட் ரோடு, மாம்பலம் ஆகிய இடங்களில் இணைப்பகங்கள் தொடங்கப்பட்டன.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் செயிண்ட் தாமஸ் மவுண்ட் பகுதியில் நிறைய ராணுவத்தினர் தங்கி இருந்ததால், அவர்களின் வசதிக்காக அங்கு ஒரு தொலைபேசி இணைப்பகம் ஆரம்பிக்கப்பட்டது. போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், லண்டனில் தயாரிக்கப்படும் போன்கள் அனைத்தும் போர்த் தேவைகளுக்காக அனுப்பப்பட்டுவிட்டதால், மெட்ராசிற்கு புதிய போன்கள் வருவது அடியோடு நின்றுபோனது. இதனால் மெட்ராஸ் டெலிபோன்ஸ் கிட்டத்தட்ட முடங்கிப் போனது என்றே கூட சொல்லலாம்.

இந்தப் போர் தொலைபேசிகளின் பயன்பாட்டை அரசிற்கு தெளிவாகப் புரிய வைத்தது. எனவே அரசே தொலைபேசி தொழிலை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மெட்ராஸ் டெலிபோன்ஸ் கம்பெனியின் இயக்குநர்கள் கடைசி முறையாக 1943 மார்ச் 26ந் தேதி சென்னையில் உள்ள டெலிபோன் ஹவுசில் கூடிப் பேசி கனத்த இதயத்தோடு கலைந்து போயினர். ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. டெலிபோன் தொழிலை அரசு ஏற்றுக் கொண்டது.

இப்படித் தான் மெட்ராஸ் மாநகரில் தொலைபேசிகள் அறிமுகமாகி, இன்று அனைவர் கைகளிலும் செல்போன்களாக சிணுங்கிக் கொண்டிருக்கின்றன.

நன்றி - தினத்தந்தி

* 1932இல் மெட்ராசில் தொலைபேசிகள் அறிமுகமானதன் 50ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது இந்த நிறுவனத்தின் பங்குகளை வைத்திருந்தவர்களுக்கு சிறப்பு போனஸ்கள் வழங்கப்பட்டன.

* அரசு இந்த தொழிலை ஏற்றுக் கொண்டதும், 1947இல் 1500 இணைப்புகளைக் கொண்ட புதிய மவுண்ட் ரோடு இணைப்பகம் தொடங்கப்பட்டது.

Saturday, February 11, 2012

டிராம் வண்டிகள்

மவுண்ட் ரோட்டில் மாட்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும் ஓடிக் கொண்டிருந்த காலத்தில், மெட்ராஸ்வாசிகளை மெய்சிலிர்க்க வைத்தவைதான் டிராம் வண்டிகள். இன்றைய தலைமுறை 'மதராசபட்டினம்' போன்ற படங்களில் மட்டுமே பார்த்து ரசிக்க முடிந்த டிராம் வண்டிகள், மெட்ராஸ் மாநகரில் சுமார் 80 ஆண்டுகளாக மாங்கு மாங்கென்று ஓடி இருக்கின்றன.

1877இல்தான் மெட்ராஸ்வாசிகளுக்கு டிராம் வண்டி அறிமுகமானது. ஆனால் அப்போதெல்லாம் குதிரை இழுத்துச் செல்லும் டிராம் வண்டிதான் புழக்கத்தில் இருந்தது. மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால், இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. இதற்காக 1892இல் மெட்ராஸ் டிராம்வேஸ் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது. ஒரு லட்சம் பவுண்ட் செலவில் தொடங்கப்பட்ட இந்த கம்பெனி, Messrs Hutchinson & Co என்ற லண்டன் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கியது. ஆனால் 3 ஆண்டுகள் கடின உழைப்பிற்கு பிறகே எலெக்ட்ரிக் டிராம்களை அவர்களால் சென்னையில் இயக்க முடிந்தது.

மே 7, 1895இல் சென்னை நகர வீதிகளில் முதன்முறையாக எலெக்ட்ரிக் டிராம்கள் ஓடின. இந்தியாவிலேயே எலெக்ட்ரிக் டிராம் ஓடுவது அதுதான் முதல்முறை. அவ்வளவு ஏன், அந்த சமயத்தில் லண்டன் போன்ற மாநகரங்களில் கூட எலெக்ட்ரிக் டிராம்கள் அறிமுகமாகவில்லை. எனவே எந்த விலங்கும் இழுக்காமல் தானாக நகரும் இந்த பெட்டி வண்டியை மக்கள் சற்றே மிரட்சியுடன் பார்த்தார்கள். அவர்களின் அச்சத்தைப் போக்குவதற்காக சில காலம் வரை ஓசிப் பயணம் எல்லாம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

சேவையை தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்கள். அதாவது மே 6ந் தேதியுடன் ஓசி பயணம் முடிவு பெறுகிறது, மே 7 முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. ஒரு மைலுக்கு சுமார் 6 பைசா என்ற அளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இன்றைய பேருந்து போல வண்டியில் ஏறியதும் கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கிக் கொள்ள வேண்டும்.

ஓட்டுநரும், கண்டக்டரும் காக்கி யூனிபார்ம் அணிந்திருப்பார்கள். திடீரென டிக்கெட் கலெக்டர் ஏறி, பயணிகள் அனைவரிடமும் டிக்கெட் இருக்கிறதா என பரிசோதிப்பார். கொஞ்ச நேரத்தில் எதிரில் மெதுவாக வரும் டிராம் வண்டியில் அப்படியே இங்கிருந்தபடி தாவிவிடுவார். டிக்கெட் பரிசோதகர்களின் இந்த சாகசங்களை வியந்து பார்க்கவே ஒரு கூட்டம் இருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் 6 அணா கொடுத்து டிக்கெட் வாங்கி விட்டால் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். மாத சீசன் டிக்கெட் முறைகளும் அமலில் இருந்தன. ஒரு குறிப்பிட்ட ரூட்டில் பயணிக்க மாதம் ரூ.6, எந்த ரூட்டில் வேண்டுமானாலும் பயணிக்க ரூ.10 வசூலிக்கப்பட்டது.

சென்னையின் பல வழித்தடங்களில் இந்த டிராம் வண்டிகள் இயக்கப்பட்டன. வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பாரிமுனை, சென்ட்ரல் ரயில் நிலையம், மவுண்ட் ரோடு, ராயப்பேட்டை, மயிலாப்பூர் என பல இடங்களுக்கும் டிராம் வண்டியில் ஏறிச் செல்லலாம். அப்போதெல்லாம் பேருந்துகள் தேசியமயமாக்கப்பட வில்லை. அதுவும் இல்லாமல், பேருந்துகள் கரியால் இயங்கிக் கொண்டிருந்தன. எனவே மின்சாரத்தில் இயங்கும் டிராம் வண்டிகளுக்கு மக்களிடம் நல்ல கிராக்கி இருந்தது. மெட்ராசில் குறுக்கும் நெடுக்குமாக கம்பளிப் பூச்சியைப் போல இந்த டிராம்கள் ஓடிக் கொண்டே இருந்தன. நாள்தோறும் சுமார் ஒரு லட்சம் பேர் இந்த வண்டிகளைப் பயன்படுத்தினார்கள்.

டிராம் வண்டி மக்களுக்கு வசதியாக இருந்ததே தவிர, அந்த லண்டன் நிறுவனத்திற்கு இதனால் எந்த பயனும் இல்லை. காரணம், எலெக்ட்ரிக் டிராம் வண்டிகளை conduit system எனப்படும் முறையில் இயக்க அந்த நிறுவனம் முடிவு செய்திருந்தது. அதாவது டிராம் வண்டி செல்வதற்காக சாலையில் தண்டவாளங்கள் இருக்கும், அதற்கு நடுவே மின்சார சப்ளைக்கு வழி செய்யும் வயர்கள் பதிக்கப்பட்டிருக்கும். ஆனால் சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக, இந்த முறையை கைவிட்டுவிட்டு, தலைக்கு மேல் ஒயர்கள் போட்டு, அதில் இருந்து மின்சாரம் பெற்றுக் கொள்ளும் முறைக்கு ஒப்புக் கொண்டது. இங்குதான் ஆரம்பித்தது சிக்கல்.

இந்த புதிய முறையால் நிறுவனத்திற்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டு, 1900இல் நிறுவனத்தை விற்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது. எலெக்ட்ரிக் கன்ஸ்ட்ரக்ஷ்ன் கம்பெனி லிமிடெட் என்ற இங்கிலாந்து நிறுவனம், இதனை வாங்கி நான்கு ஆண்டுகள் வரை இயக்கிப் பார்த்தது. பின்னர் 1904இல் மெட்ராஸ் எலெக்ட்ரிக் டிராம்வேஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு கை மாற்றியது. அந்த நிறுவனமும் கொஞ்சம் தாக்குப் பிடித்துப் பார்த்தது. ஆனால் கடும் நஷ்டம் காரணமாக அவர்களாலும் 1953ஆம் ஆண்டிற்கு மேல் டிராம்களை இயக்க முடியவில்லை. எனவே அந்த ஆண்டு ஏப்ரல் 11ந் தேதி நள்ளிரவுடன் மெட்ராசின் டிராம்கள் கடைசியாக ஓடி ஓய்ந்தன.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே அறிமுகமாகி, தங்களின் வாழ்வின் ஒரு அங்கமாகவே ஆகிப் போன டிராம்கள் திடீரென நின்று போனதை மக்களால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் இதனைத் தொடர்ந்து இயக்க அந்த நிறுவனமும் தயாராக இல்லை, அரசும் தயாராக இல்லை என ஏப்ரல் மாதம் அறிவித்தார் அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி. நிஜத்தில் இருந்த டிராம்கள், அந்தக் கால மெட்ராஸ்வாசிகளின் நினைவுப் பொருளாக மெல்ல மாறிப் போயின.

நன்றி - தினத்தந்தி

* துறைமுகத்திற்கு சரக்குகள் கொண்டு செல்லவும் டிராம் வண்டிகள் பயன்படுத்தப்பட்டன.

* இந்த வண்டிகளுக்கான மின்சாரம், பேசின் பிரிட்ஜில் இருந்த மின் நிலையத்தில் இருந்து தருவிக்கப்பட்டது.

* இந்தியாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகளுக்கு பிறகே அமெரிக்காவில் டிராம்கள் ஓடத் தொடங்கின.

Sunday, February 5, 2012

செயின்ட் தாமஸ் மவுண்ட்

மவுண்ட் ரோடு, சாந்தோம், செயின்ட் தாமஸ் மவுண்ட்.. என மெட்ராசின் பழமையான பல விஷயங்களுக்கு காரணமானவர் புனித தோமையார் என்று அழைக்கப்படும் செயின்ட் தாமஸ். ஏசுநாதரின் 12 சீடர்களில் ஒருவரான புனித தாமஸ், கிபி 52இல் இந்தியாவின் கேரளப் பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. அங்கு மதப் பிரசாரத்தில் ஈடுபட்ட தாமஸ், பின்னர் கடல் வழியாக மயிலாப்பூருக்கு வந்தார்.

இங்கும் தீவிர மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே சைதாப்பேட்டை அருகில் இருக்கும் சின்னமலையில் சில காலம் மறைந்து வாழ்ந்தார். அப்போது அருகில் இருக்கும் பெரிய மலை என்று அழைக்கப்பட்ட இன்றைய செயின்ட் தாமஸ் மவுண்ட்டிற்கு சென்று ஜபம் செய்வார். அப்படி ஜபம் செய்து கொண்டிருந்தபோது, கிபி 72இல் எதிரிகளால் பின்னால் இருந்து ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. மலையில் மயில் வேட்டையாடுவதற்காக வந்த ஒருவனின் ஈட்டி பாய்ந்து இறந்தார் என்று மார்க்கோ போலோ தனது இந்தியப் பயணக் குறிப்பில் எழுதியிருக்கிறார்.

அப்படி தாமஸ் உயிர்நீத்த இடத்தில் இன்று ஒரு அமைதியான சிறிய தேவாலயம் இருக்கிறது. 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாஸ்கோடகாமா இந்தியாவிற்கான கடல்வழியைக் கண்டுபிடித்த பின்னர் நிறைய போர்த்துகீசிய வணிகர்கள் கேரளத்திற்கும், மயிலாப்பூருக்கும் வணிகம் செய்ய வந்து சென்றனர். அப்படி வந்த வணிகர்கள் சிலர், கடல்மட்டத்தில் இருந்து 300 அடி உயரத்தில் இருக்கும் இந்த பெரிய மலையில் தேவாலயம் ஒன்றை கட்ட விரும்பினர். அதற்காக அவர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டபோது, புனித தாமஸ் வழிபட்ட கற்சிலுவை இரத்தத் திட்டுகளுடன் கிடைத்ததாக கூறப்படுகிறது (இந்த கற்சிலுவையை தாமஸ் தனது கைகளால் செதுக்கினார்). எனவே தாமஸ் கொலையுண்ட அதே இடத்தில் கிபி 1523ஆம் ஆண்டு ஒரு தேவாலயம் கட்டப்பட்டது.

தாமஸ் வழிபட்ட அந்த சிலுவை இன்றும் தேவாலயத்தில் நடுநாயகமாக வீற்றிருக்கிறது. இந்த சிலுவையில் இருந்து இரத்தம் வடிந்ததைப் பார்த்ததாக நிறைய தகவல்கள் இருக்கின்றன. கடைசியாக 1704இல் இந்த இரத்த வியர்வை காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் அருகில் கிபி 50இல் புனித லூக்காவினால் வரையப்பட்ட அன்னை மரியாளின் ஓவியம் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவிலேயே மிகப் பழமையான கிறிஸ்தவ ஓவியமாக கருதப்படும் இதை, இந்தியாவிற்கு வரும்போது தாமஸ் தம்முடன் கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதைப் பற்றி கேள்விப்பட்ட சந்திரகிரி மன்னன், 1559இல் இந்த ஓவியத்தை தனது மாளிகைக்கு கொண்டு வரச் செய்து பார்த்ததாகவும், பின்னர் அரசு பல்லக்கில் வைத்து இதனை பெரிய மலைக்கே திருப்பி அனுப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சில பழமையான வண்ண ஓவியங்களும் இந்த தேவாலயத்தை அலங்கரிக்கின்றன. இயேசு நாதர், அவரின் 12 சீடர்கள், புனித பவுல் என மொத்தம் 14 ஓவியங்கள் இருக்கின்றன. இவை 1727இல் வரையப்பட்டவை. அதாவது சுமார் 300 ஆண்டுகள் பழமையானவை.

மேரி மாதாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயம், 'எதிர்பார்த்த அன்னையின் ஆலயம்' என அழைக்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றபடி ஏசுவை கருவில் சுமந்தபடி அமர்ந்திருக்கும் மேரி மாதாவின் அழகிய சிற்பம் ஒன்று இங்கிருக்கிறது. இதுதவிர புனித தாமஸின் சிறிய எலும்புத் துண்டும் இங்கு ஒரு சிலுவையில் பதித்து வைக்கப்பட்டிருக்கிறது.

மெட்ராசில் ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கிய ஆர்மீனிய வணிகர்கள் இந்த தேவாலயத்திற்கு நிறைய நன்கொடைகளை அளித்திருக்கின்றனர். அவர்களில் மிகவும் முக்கியமானவர் பெட்ரூஸ் உஸ்கான். இந்த புனித தேவாலயத்திற்கு சென்னையில் உள்ள அனைவரும் எளிதில் வரவேண்டும் என்பதற்காக, இவர் தனது சொந்த செலவில் அடையாற்றின் குறுக்கே 1726இல் ஒரு பாலத்தை கட்டிக் கொடுத்தார். அதுதான் அடையாறில் இருக்கும் மர்மலாங் பாலம். இதுமட்டுமின்றி மலை மீது ஏறுவதற்கு வசதியாக 135 படிகளையும் கட்டிக் கொடுத்திருக்கிறார்.

போர்த்துகீசியர்கள் புனித தாமஸின் நினைவாகத்தான் மயிலாப்பூருக்கு அருகில் அமைத்துக் கொண்ட தங்களின் இருப்பிடத்திற்கு சாந்தோம் என்று பெயரிட்டனர். அதாவது புனித தோமா (SAN+THOME) என்று அர்த்தம். ஆங்கிலேயர்கள் ஜார்ஜ் கோட்டையில் குடியேறிய பிறகு, செயிண்ட் தாமஸ் மவுண்ட்டிற்கு வந்து வழிபட வசதியாக ஒரு சாலை வேண்டும் என்று நினைத்ததின் விளைவுதான் இன்றைய மவுண்ட் ரோடு.

இப்படி மெட்ராசின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்திருக்கிறது இந்த மலை. இதன் உச்சியில் இருந்து பரந்து விரிந்திருக்கும் இன்றைய சென்னையைப் பார்க்கும்போது, ஏதோ கால இயந்திரத்தில் அமர்ந்தபடி பல நூற்றாண்டுகள் பின்னோக்கிப் பார்ப்பது போன்றதொரு பரவச அனுபவம் கிடைக்கிறது.


நன்றி - தினத்தந்தி

* போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பால், 1986ஆம் ஆண்டு இங்கு வருகை புரிந்திருக்கிறார்.

* 2011ஆம் ஆண்டு இந்த தேவாலயம் தேசியத் திருத்தலமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

* இந்த மலையைச் சுற்றிலும் நிறைய ஐரோப்பியர்கள் வசித்ததால் இதனை உள்ளூர் மக்கள் பரங்கி மலை (பரங்கியர் வசிக்கும் மலை) என்று அழைத்தனர்.

* சென்னை விமான நிலையத்திற்கு அருகில் அமைந்திருப்பதால், இங்கிருந்தபடி விமானங்கள் ஏறுவதையும், இறங்குவதையும் தெளிவாகப் பார்க்க முடிகிறது.