என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Sunday, August 26, 2012

இத்தாலிய சித்த வைத்தியர்


மெட்ராஸ் நகரில் குடியேறிய ஆங்கிலேயர்களில் சிலர் தமிழ் மொழி மீது பற்று கொண்டு தமிழறிஞர்களாக மாறிய கதைகளை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் இத்தாலியில் இருந்து இந்த மண்ணிற்கு வந்த ஒரு மனிதர் சிறந்த சித்த வைத்தியர் எனப் பேர் எடுத்த கதையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்த புகழ்பெற்ற சித்த வைத்தியர்தான் நிக்காலோ மானுச்சி.
நிக்காலோ மானுச்சி

இத்தாலியின் பிரபல வெனீஸ் நகரில் 1639இல் பிறந்த நிக்காலோ மானுச்சி தனது 14வது வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். ஒரு ஆங்கிலேயருக்கு உதவியாளனாக ஆசியா செல்லும் கப்பலில் ஏறினார் மானுச்சி. பல நாடுகளை சுற்றிக் கொண்டு கப்பல் இந்தியா வந்தடைவதற்குள் அவரது முதலாளி பரலோகம் சென்றடைந்துவிட்டார். மானுச்சிக்கு பிழைக்க வழி தெரியவில்லை.

அப்போது இந்தியாவில் ஷாஜஹானின் மகன்கள் தாரா சிக்கோவுக்கும், அவுரங்கசீப்புக்கும் இடையில் அரியணைக்காக அடிதடி அரங்கேறிக் கொண்டிருந்தது. இருதரப்பும் ஆள் சேர்த்துக் கொண்டிருந்தார்கள். இதைப் பயன்படுத்தி தாராவின் படையில் துப்பாக்கி வீரனாக சேர்ந்துகொண்டார் மானுச்சி. ஆனால் இறுதியில் அவுரங்கசீப் வெற்றி பெற்றதால், துப்பாக்கியை தூக்கி தூர வைத்துவிட்டு, மருந்து பெட்டியை கையில் எடுத்துக் கொண்டார் மானுச்சி. இதை வைத்து அவர் ஏதோ பெரிய மருத்துவர் என்று நினைத்துவிடாதீர்கள். அந்த காலத்தில் ஐரோப்பாவில் இருந்து வந்த பலர் மருத்துவர்களாக இருந்ததால் ஐரோப்பியர்கள் எல்லோருக்கும் மருத்துவம் தெரியும் என்று நம்ம மக்கள் நம்பினார்கள். விளைவு, போலி மருத்துவர்கள் பட்டியலில் மானுச்சியும் சேர்ந்து கொண்டார்.

போலி மருத்துவராக தொடங்கினாலும் தனது ஆர்வத்தினாலும், அயராத உழைப்பினாலும் மருத்துவத்தை வேகமாக கற்றுக் கொண்டார் மானுச்சி. இவர் கற்றுக் கொள்ள எத்தனை பேரை காவு கொடுத்தார் என்ற தகவல் கிடைக்கவில்லை. எப்படியோ 1670 முதல் 1678 வரை லாகூரில் சிறந்த மருத்துவர் எனப் பெயர் எடுத்து விட்டார். ஐரோப்பிய மருத்துவம் மட்டுமின்றி முகலாய பாணி மருத்துவத்தையும் சேர்த்து பார்த்ததே இதற்கு முக்கிய காரணம்.

பின்னர் அவுரங்கசீப்பின் தக்காண ஆளுநர் ஷா ஆலமின் அரசவையில் சிறிது காலம் பணியாற்றினார். ஆனால் 1686இல் ஷாவுடன் மனக்கசப்பு ஏற்பட்டதால் அங்கிருந்து வெளியேறி பிரெஞ்சுப் படைகள் வசமிருந்த புதுச்சேரிக்கு வந்தார். காரணம் அப்போதைய பிரெஞ்சு ஆளுநர் பிரான்கோய்ஸ் மார்ட்டின் இவரின் நண்பர். அவரிடம் தாம் ஐரோப்பா திரும்பப் போவதாக சொன்னார் மானுச்சி. அப்போதுதான் அவரது வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்பட்டது.

இதற்குள் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் கழித்திருந்தார் மானுச்சி. இவர் பயங்கர சாப்பாட்டுப் பிரியர் வேறு. எனவே இந்திய உணவுகளை செம பிடி பிடித்து நாக்குக்கு இந்திய சுவையை ஏற்றியிருந்தார். இதெல்லாம் அவரது நண்பர் மார்ட்டினுக்குத் தெரியும். எனவே 'இனிமேல் ஐரோப்பா சென்று உன்னால் வாழ முடியாது நண்பா, பேசாம இங்கேயே ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிடு' என்று யோசனை சொன்னார். அதோடு நிற்காமல் ஒரு பெண்ணையும் பார்த்துக் கொடுத்தார்.

எலிசபெத் கிளார்க் என்ற அந்தப் பெண் ஒரு விதவை. மெட்ராசின் கருப்பர் நகரத்தில் பிராட்வேயில் தனது ஆங்கிலேய கணவர் விட்டுச் சென்ற ஒரு பெரிய தோட்ட வீட்டில் வசித்துக் கொண்டிருந்தார். மானுச்சி எலிசபெத்தை மணந்துகொண்டு, அந்த தோட்ட வீட்டிற்கு உரிமையாளராகிவிட்டார். இப்படித் தான் மெட்ராஸ் மாப்பிள்ளை ஆனார் மானுச்சி.

பின்னர் மானுச்சி பரங்கி மலை அடிவாரத்தில் ஒரு தோட்ட வீட்டிற்கு குடிபோனார். இந்த வீட்டில் இருந்தபடிதான் அவர் தனது புகழ்பெற்ற Storia Do Mogor (முகலாயர்களின் சரித்திரம்) என்ற புத்தகத்தை எழுதினார். ஐந்து தொகுதிகளைக் கொண்ட இந்த புத்தகம் அன்றைய முகலாய ஆட்சி எப்படி நடைபெற்றது என்பதை அறிந்துகொள்ள பெரிதும் உதவுகிறது. தான் நேரில் பார்த்ததை மட்டுமே இந்த புத்தகத்தில் எழுதியிருப்பதாக மானுச்சி சொல்கிறார். ஆனால் ஷாஜஹானுக்கு முன் இருந்த முகலாய பேரரசர்கள் பற்றிய மானுச்சியின் தகவல்களில் நிறைய பிழைகள் இருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

மெட்ராசில் வசித்தபோது மானுச்சிக்கு ஒரு மகன் பிறந்தான். ஆனால் அவன் இளம் வயதிலேயே இறந்துவிட்டான். அவரது மனைவி எலிசபெத்தும் 1706ஆம் ஆண்டு மரணமடைந்துவிட்டார். இதனால் மனமுடைந்துபோன மானுச்சி, மெட்ராசில் இருந்து புறப்பட்டு மீண்டும் புதுச்சேரிக்கே சென்றுவிட்டார். தனது இறுதிக் காலம் வரை அவர் அங்கேயே இருந்தார். இதனிடையே மானுச்சி அன்றைய முகலாய மற்றும் ஐரோப்பிய ஆட்சியாளர்களுக்கு இடையே பலமுறை தூதுவராக செயல்பட்டார்.

ஆட்சியாளர்களுக்கு இடையிலான பல பிணக்குகள் இவரது தலையீட்டால் சரி செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் பல போர்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. இவர் இந்திய பாணியில் உடை அணிந்ததாலும், பெர்ஷியா, பிரெஞ்சு, ஆங்கிலம் எனப் பல மொழிகள் தெரிந்தவராக இருந்ததாலும் இரு தரப்பினரும் இவரை தங்களுக்கு நெருக்கமானவராக நினைத்தனர். மேலும் மக்கள் மத்தியில் இருந்த நல்ல பெயரும் இவரை ஒரு மரியாதைக்குரிய மனிதராக கருத வைத்தது.

இவ்வாறு அரசியல் தூதர், சித்த வைத்தியர் என மானுச்சி பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும், 17 மற்றும் 18 நூற்றாண்டு இந்தியாவை அறிந்துகொள்ள உதவும் பல பயனுள்ள குறிப்புகளை அளித்த வரலாற்று ஆசிரியராகவே உலகம் அவரைப் பார்க்கிறது. இந்த உலகப் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் முன்னூறு ஆண்டுகளுக்கு முன் உலவிய பிராட்வேயும், பரங்கி மலையும் இன்றும் அவரது நினைவுகளை அமைதியாக அசைபோடுகின்றன.

நன்றி - தினத்தந்தி

* காய்ச்சலை குணப்படுத்த பாதரச கலவையால் ஆன ஒரு கல்லை மானுச்சி பயன்படுத்தினார். இதனை அக்காலத்தில் மக்கள் மானுச்சி கல் என்றே அழைத்தார்கள்.

* மானுச்சிக்கு புலாவ் உணவு மிகவும் பிடிக்கும். இதுபற்றி தனது புத்தகத்தில் நாவில் எச்சில் ஊறும் அளவுக்கு உருகி உருகி எழுதி இருக்கிறார்.

Saturday, August 18, 2012

மெட்ராஸ் பஞ்சம்


சுமார் 375 ஆண்டு வரலாறு கொண்ட மெட்ராஸ் மாநகரம் நல்லது, கெட்டது என நிறைய விஷயங்களைப் பார்த்துவிட்டது. மெட்ராசையே தலைகீழாகப் புரட்டிப் போட்ட நிகழ்வுகள் எல்லாம் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானவை இந்த நகரம் சந்தித்த பஞ்சங்கள். பஞ்சத்தால் பறிபோன உயிர்களும், பஞ்சத்தோடு போராடிய உயிர்களும் நிறைய பாடங்களை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றன.

1640இல் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் மதராசபட்டினத்தில் கோட்டை கட்டி குடியேறினர். அடுத்த ஏழே ஆண்டுகளில் மிகக் கொடியதொரு பஞ்சத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அப்போது மெட்ராஸ் என்ற நகரம் இந்தளவு விரிவடைந்திருக்கவில்லை. இப்போது இருப்பதில் சிறிதளவே நகரின் மொத்த பரப்பளவாக இருந்தது.

1647, ஜனவரி 21ஆம் தேதியிடப்பட்ட ஒரு ஆங்கிலேயக் குறிப்பு இந்த பஞ்சத்தை பற்றி அறிந்துகொள்ள உதவுகிறது. ''இந்த சிறிய ஊரிலேயே 3000க்கும் குறைவில்லாமல் மனிதர்கள் இறந்திருக்கின்றனர். போர்த்துகீசியக் காலனியிலோ 15,000 மனிதர்கள் இறந்துவிட்டனர். இப்போது நம்மிடம் இருக்கும் நெசவாளர்கள், தச்சர்கள் எல்லாம் மூன்றில் ஒரு பங்காக குறைந்துவிட்டனர். 25 ஆங்கிலப் படை வீரர்கள் இறந்துவிட்டனர், பலர் நோயுற்றுள்ளனர்'' என்று அந்த குறிப்பு சொல்கிறது.

இந்த பஞ்ச காலத்தில் கோட்டைக்கு வெளியே சாந்தோம் போன்ற பகுதிகளில் இருந்த பல ஆங்கிலேயர்களும் கோட்டைக்குள் தஞ்சம் புகுந்துவிட்டனர். எனவே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கோட்டையில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. இதனை சமாளிக்க சூரத்தில் இருந்து அரிசியை வரவழைத்திருக்கிறார்கள். ஒருவழியாக ஓராண்டில் இந்த பஞ்சத்தை சமாளித்து இயல்பு நிலைக்கு மீண்டிருக்கிறார்கள்.

அடுத்த பஞ்சம் 1658இல் தலையெடுத்தது. அப்போது கோல்கொண்டா, சந்திரகிரி வீரர்களும் மெட்ராசில் இருந்தால் அனைத்து பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவியது. இதேநேரத்தில் வடநாட்டிலும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இதையும் ஒருவழியாக சமாளித்த நிலையில் 17ஆம் நூற்றாண்டின் கடைசிப் பஞ்சம் 1686இல் வந்தது. ஏற்கனவே இரண்டு பஞ்சங்களைப் பார்த்துவிட்டதால், கிழக்கிந்திய கம்பெனிக்காரர்களுக்கு இதனை சமாளிப்பதில் சற்று அனுபவம் கிடைத்துவிட்டது. நிவாரணப் பணிகளை எப்படி மேற்கொள்வது என அவர்கள் ஓரளவு கற்றுக் கொண்டனர்.

அடுத்து 18ஆம் நூற்றாண்டிலும் பஞ்சங்களுக்கு பஞ்சமில்லை. இதுபோன்ற பஞ்சங்களால் கிராமப்புற மக்கள் பிழைக்க வழி தேடி மெட்ராஸ் நோக்கி படையெடுத்தனர். பல இடங்களில் பொருட்கள் சூறையாடப்பட்டன. வியாபாரிகள் பொருட்களை பதுக்கிவைத்து கொள்ளை லாபம் சம்பாதித்தனர். இவற்றைத் தடுக்க சில ஆணைகள் இடப்பட்டும் பெரிதாக எந்த பலனும் இல்லை. இந்த ஆணைகள் ஆங்கிலேய வணிகத்தை பாதிக்கும் என உணரப்பட்டதால் சிறிது காலத்திலேயே அவை விலக்கிக் கொள்ளப்பட்டன.

1781இல் வந்த பஞ்சம்தான் மிகவும் கொடுமையானதாக கருதப்படுகிறது. காரணம், அப்போது ஹைதர் அலியின் படையெடுப்பையும் சேர்த்து சமாளிக்க வேண்டி இருந்ததால் துயரின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. அந்த ஆண்டு இறுதியில் மதராசப்பட்டினத்தில் 42 நாட்களுக்குத் தேவையான உணவு தானியங்கள் மட்டுமே இருந்தன. எனவே ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என கணக்கெடுக்கப்பட்டு முதன்முறையாக ரேஷன் முறை அமலுக்கு வந்தது.

இதனிடையே சோற்றுக்கு வழியில்லாமல் பரிதவிக்கும் மக்களுக்கு உதவுவதற்காக இன்றைய ஸ்டான்லி மருத்துவமனை இருக்கும் இடத்தில் ஒரு கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டது. பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து கஞ்சி வாங்கி குடித்து தங்களின் பசியைப் போக்கிக் கொண்டனர். அடுத்த ஓராண்டில் இந்த இடம் ஒரு சத்திரமாக மாறியது. நிறைய முதியவர்கள் இருந்ததால், அவர்களுக்கு மருத்துவ வசதியும் தேவைப்பட்டது. எனவே இங்கு ஒரு சிறிய மருத்துவமனையும், தொழுநோயாளிகளுக்கான இல்லமும் தொடங்கப்பட்டது. 1799இல் தொடங்கப்பட்ட இதுதான் உள்ளூர்வாசிகளுக்கென பிரத்யேகமாக உருவான சென்னையின் முதல் நவீன மருத்துவனை. உள்ளூர்வாசிகள் கஞ்சித்தொட்டி மருத்துவமனை என்று அழைத்த இதுதான் பின்னாட்களில் ஸ்டான்லி மருத்துவமனையாக உயர்ந்தது.

19ஆம் நூற்றாண்டிலும் அடிக்கடி பஞ்சங்கள் வந்துபோகத் தவறவில்லை. 1824இல் பஞ்சம் வந்தபோது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. மெட்ராசில் ஒரே ஒரு கடையில்தான் தானியம் விற்கப்பட்டதாம். பல இடங்களில் கலகங்கள் வெடித்ததால் ராணுவத்தை வைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

1876-78 காலகட்டத்தில் மெட்ராஸ் ராஜ்தானி முழுவதும் கடும் பஞ்சம் தலைவிரித்தாடியது. சிறந்த நிர்வாகியான பக்கிங்ஹாம் இளவரசர் ரிச்சர்ட், இந்த பஞ்சத்தை திறமையாகவே கையாண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். பஞ்ச காலத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை வேகமாக கொண்டு செல்ல வசதியாக, மரக்காணத்தில் இருந்து காக்கிநாடா வரை கால்வாய் வெட்டினார். சென்னையில் கூவம் நதி ஓடிக் கொண்டிருக்கும் பக்கிங்ஹாம் கால்வாய் பிறந்தது இப்படித்தான்.

இதுமட்டுமின்றி மேலும் பல புதிய முயற்சிகளும், நிர்வாக சீர்திருத்தங்களும் பஞ்சங்களின் பயனாகவே விளைந்தன. மொத்தத்தில் மெட்ராஸ் மாநகரம் தோன்றிய காலம் முதல் தொடர்ந்து பல பஞ்சங்களை சந்தித்து பல பாடங்களை சேகரித்து வைத்திருக்கிறது. இந்த பாடங்களே இந்த மாநகரை இன்றும் காக்கின்றன.

நன்றி - தினத்தந்தி

* பஞ்ச காலத்தில் தானியங்களை பதுக்கியதற்காக நல்லண்ணா என்ற வியாபாரிக்கு பொதுமக்கள் முன்னிலையில் 25 சவுக்கடிகள் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

* பஞ்சங்களால் 1825 முதல் 1854 வரை மெட்ராஸ் கடும் பொருளாதார பின்னடைவை சந்தித்தது.

Sunday, August 12, 2012

ஆளுநர் மாளிகை


மாநகரின் நெரிசல்களில் இருந்து தப்பித்து ஏதாவது காட்டுப் பகுதியில் அமைதியாக ஓய்வெடுத்தால் எப்படி இருக்கும் என்ற ஏக்கம் அனேகமாக சென்னைவாசிகள் எல்லோருக்கும் இருக்கும். இந்த கனவை நனவாக்கும் ஒரு காட்டுப் பகுதி சென்னை நகருக்குள்ளேயே இருக்கிறது. ஆனால் நாம் அங்கு சென்று ஓய்வெடுக்க முடியாது. அதுதான் கிண்டியில் அமைந்திருக்கும் ராஜ் பவன் எனப்படும் ஆளுநர் மாளிகை.

ராஜ் பவன் தொடங்கி தரமணி வரை நீளும் கிண்டி ரிசர்வ் காடு தான் சென்னை நகரில் இன்று எஞ்சியிருக்கும் ஒரே காட்டுப் பகுதி. நடுவே ஐ.ஐ.டி வளாகம், காந்தி மண்டபம், ராஜாஜி, பக்தவத்சலம், காமராஜ் ஆகியோரின் நினைவு மண்டபங்கள், குழந்தைகள் பூங்கா, பாம்புப் பூங்கா, புற்றுநோய் மையம் ஆகியவை காட்டை சற்றே அழித்துவிட்டபோதும் இன்னும் இது பெரிய காடுதான். சென்னை மாகாண ஆளுநர்கள் இந்த காட்டுக்கு இடம்பெயர்ந்த கதை ரொம்பவே சுவாரஸ்யமானது.
கிண்டி ஆளுநர் மாளிகை
ஆரம்ப நாட்களில் சென்னையின் ஆளுநர் புனித ஜார்ஜ் கோட்டைக்குள்தான் இருந்தார். முதன்முதலாக கோட்டைக்கு வெளியே தனிக்குடித்தனம் போனவர் கவர்னர் ஸ்ட்ரேய்ன்ஷம் மாஸ்டர். கோட்டைக்குள் கூட்டம் அதிகமாகிவிட்டதால், இன்று சட்டக்கல்லூரி இருக்கும் இடத்தில் ஒரு தோட்ட வீட்டிற்கு அவர் இடம்பெயர்ந்தார். பின்னர் இந்த பகுதியில் கருப்பர் நகரம் வேகமாக வளர்ந்ததால், 1680களில் அவர் கூவம் நதிக்கரையில் உள்ள ஒரு தோட்ட வீட்டிற்கு மாறியதாக கூறப்படுகிறது. ஆனால் இவரைத் தொடர்ந்து வந்த ஆளுநர்கள் இந்த வீட்டை அதிகமாக பயன்படுத்தவில்லை.

இதனிடையே 1746இல் சென்னையை முற்றுகையிட்ட பிரெஞ்சுப் படைகள், இந்த வீட்டை இடித்து தரைமட்டமாக்கிவிட்டன. சென்னை மீண்டும் பிரிட்டீஷார் வசம் வந்ததும், ஆளுநருக்கு வீடு தேடும் படலம் தொடங்கியது. அப்போதுதான் இன்று புதிய தலைமைச் செயலகம் இருக்கும் அரசினர் தோட்டத்தில் அன்று இருந்த ஒரு சிதிலமடைந்த வீடு விலைக்கு வாங்கப்பட்டது. அண்டோனியோ தி மதீராஸ் என்ற செல்வச் சீமாட்டிக்கு இந்த இடம் சொந்தமானதாக இருந்தது. கஷ்ட காலத்தில் கிழக்கிந்திய கம்பெனிக்கே நிதி உதவி செய்தவர் இந்த மதீராஸ். இவரது குடும்பத்தின் நினைவாகத்தான் சென்னைக்கு மதராஸ் என்ற பெயர் வந்தது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

1753இல் அப்போதைய ஆளுநர் தாமஸ் சாண்ட்ரிஸ் இந்த வீட்டை வெறும் ரூ.75,000க்கு வாங்கினார். பின்னர் காலப்போக்கில் கர்நாடக நவாப்பின் பண்ணையின் சில பகுதிகள் இணைக்கப்பட்டு இந்த இடம் மெல்ல விஸ்தரிக்கப்பட்டது. இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க அன்றைய அரசு அதிகாரிகள் கவர்னருக்காக நகருக்கு வெளியே ஒரு பரந்து விரிந்த தோட்ட வீடு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தனர். அப்போது அவர்கள் கண்ணில்பட்டதுதான் கிண்டி லாட்ஜ்.
கிண்டி லாட்ஜ்
இன்றைய ராஜ் பவன் 1670களில் கிண்டி லாட்ஜ் என்று அழைக்கப்பட்டது. புனித தோமையார் மலைக்கு இந்த வழியாக சென்ற கவர்னர் வில்லியம் லாங்ஹார்ன் கிண்டி காட்டுப் பகுதியின் அழகில் மனதைப் பறிகொடுத்ததால் இங்கு ஒரு வீடு கட்டி, அதனைச் சுற்றி தோட்டம் அமைத்தார். வார இறுதி நாட்களில் இங்கு தங்கி ஓய்வெடுப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். பின்னர் 1678இல் ஒரேயடியாக இங்கிலாந்துக்கு புறப்பட்ட கவர்னர், சின்ன வெங்கடாத்ரிக்கு இந்த வீட்டை விற்றுவிட்டார். ஆங்கிலேயர்களுக்கு மெட்ராஸ் என்ற நிலப்பகுதியை பெற்றுத் தந்த பேரி திம்மப்பாவின் இளைய சகோதரர்தான் இந்த சின்ன வெங்கடாத்ரி.

ஆனால் சின்ன வெங்கடாத்ரிக்கும் இந்த வீட்டிற்கும் ராசியில்லை. கிழக்கிந்திய கம்பெனியோடு சில பிரச்னைகள் வந்தபோது, கம்பெனியை சரி கட்டுவதற்காக இந்த வீட்டை அடிமாட்டு விலைக்கு கொடுத்துவிட்டார். பின்னர் சில பல கைகள் மாறி கடைசியில் அரசு வங்கியிடம் அடமானத்திற்கு வந்தது இந்த வீடு. 1821இல் இந்த வீட்டையும், இதற்கு அருகில் ஷாமியர் என்ற ஆர்மீனியரின் சொத்தையும் அரசாங்கம் வாங்கிக் கொண்டது. அப்போது ஆளுநராக இருந்த சர் தாமஸ் மன்றோ, இடையூறு இல்லாமல் பொதுவிஷயங்களை கவனிக்க ஒரு இடம் தேவை என்று விரும்பியதால், இந்த வீடு வாங்கப்பட்டது.

தாமஸ் மன்றோ இங்கிருந்தபடி தனது அலுவல்களைப் பார்த்தார். இப்படித்தான் ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லம் என்ற கவுரவம் கிண்டி லாட்ஜிற்கு கிடைத்தது. இவருக்கு கோட்டைக்குள்ளேயும் ஒரு வீடு இருந்தது. பின்னர் ராஜ் பவன் மெல்ல விஸ்தரிக்கப்பட்டது. 1837இல் ஆளுநராக பொறுப்பேற்ற லார்ட் எல்ஃபின்ஸ்டன்தான் ராஜ்பவனை இன்றைய நிலைக்கு கொண்டு வந்தவர். இந்த வீட்டிற்கும் மவுண்ட் ரோட்டுக்கும் இடையில் சைதாப்பேட்டை வழியாக சாலை அமைத்தவர் இவர்தான். அடுத்தடுத்து வந்த ஆளுநர்களும் தங்கள் பங்கிற்கு ஆளுநர் மாளிகையை மெருகேற்றினர். ஆனாலும் இது கோட்டையில் இருந்து அதிக தூரத்தில் இருந்ததால், மவுண்ட் ரோடு அரசினர் இல்லம்தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும் வரை கவர்னரின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்தது.

ஆனால் சுதந்திர இந்தியாவில் தமிழக ஆளுநர்கள் இங்குதான் வசித்து வருகின்றனர். எனவே இன்றும் அரசியலோடு பின்னிப் பிணைந்திருக்கிறது இந்த ஆங்கிலேயக் கட்டிடம். மொத்தத்தில் காலச்சக்கரத்தில் 300 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும், இந்த ஆளுநர் மாளிகையின் ஒவ்வொரு கல்லும் ஏராளமான கதைகளால் நிறைந்து கிடக்கிறது.

நன்றி - தினத்தந்தி

* அரிய வகை மான்கள், விதவிதமான பறவைகள் ஆகியவற்றை இங்கு தாராளமாகப் பார்க்கலாம்.

* கோடை காலத்தில் மெட்ராஸ் கவர்னர்கள் ஊட்டிக்கு மலை ஏறியதால், அங்கும் ஒரு ராஜ் பவன் கட்டப்பட்டது.

Saturday, August 4, 2012

சேத்துப்பட்டு


சென்னையின் முக்கிய பகுதியாக இருக்கும் சேத்துப்பட்டின் பெயரைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு மழைக்காலம் ஞாபகம் வந்துவிடும். ஒரு சிறிய மழைக்கே சென்னை தெருக்கள் சேறும் சகதியுமாகி விடுவதைப் பார்க்கிறோம். அப்படி ஒரு சேற்றுப்பகுதிதான் பேச்சுவழக்கில் சேத்துப்பட்டு என மாறியிருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இதுபற்றி ஆராய்ந்தபோது, நிறைய சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.

முதல் சுவாரஸ்யம், இந்த பகுதிக்கு ஏன் சேத்துப்பட்டு எனப் பெயர் வந்தது என்பது பற்றியது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை இது ஒரு அக்மார்க் கிராமமாகத் தான் இருந்திருக்கிறது. பின்னர், கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் மெட்ராசில் மெல்ல வேர் பரப்ப ஆரம்பித்தபோது கோட்டைக்கு அருகில் இருந்த கிராமங்களை வாங்கத் தொடங்கினர். திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர் ஆகிய கிராமங்களின் வரிசையில் மெட்ராசுடன் இணைந்ததுதான் சேத்துப்பட்டு. ஆனால் அப்போது இதன் பெயர் என்ன என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை.
சேத்துப்பட்டு கிராமம்

இப்படி வாங்கப்பட்ட பகுதியில் ஆங்கிலேயர்கள் பெரிய பெரிய மாளிகைகளையும் தோட்ட வீடுகளையும் கட்டி வசிக்கத் தொடங்கினர். இப்படி ஏறத்தாழ 200 ஆண்டுகாலம் இந்த பகுதியில் நிம்மதியாக வாழ்ந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகு மூட்டை முடிச்சுகளோடு இங்கிலாந்திற்கு கப்பல் ஏறினர். அப்போது இங்கிருந்த அவர்களின் வீடுகளை செல்வச் சீமான்களான செட்டியார்கள் அதிகளவில் வாங்கினர். இதனால் செட்டியார்கள் நிறைந்த பகுதியாக இது மாறியதால் செட்டியார்பேட்டை அல்லது செட்டிப்பேட்டை என அழைக்கப்பட்டு அதுவே காலப்போக்கில் சேத்துப்பட்டு என நிலைத்திருக்கிறது.

இங்கு வசித்த செட்டியார்களில் மிகவும் முக்கியமானவர், 19ஆம் நூற்றாண்டில் சென்னையின் மிகப் பெரிய கட்டட காண்ட்ராக்டரான நம்பெருமாள் செட்டி. விக்டோரியா ஹால், சென்னை உயர்நீதிமன்றம்சட்டக்கல்லூரிஎழும்பூரில் உள்ள சிற்பக் கலை கல்லூரிஅருங்காட்சியகம்கன்னிமாரா நூலகம் என மெட்ராஸ் மாநகரின் பல முக்கிய கட்டடங்கள் இவரது கைவண்ணத்தில் உருவானவைதான்.

இந்தோ சராசனிக் பாணியில் கட்டடங்களை வடிவமைத்த பிரபல ஆங்கிலேய கட்டடக் கலைஞர்கள் அனைவருமே தங்களின் கனவுகளுக்கு உருவம் கொடுக்கும் பொறுப்பை நம்பெருமாள் செட்டியிடம் தான் ஒப்படைத்தார்கள். இந்த பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காகவே இவர் பச்சையப்பன் கல்லூரிக்கு அருகில் ஒரு பிரத்யேக செங்கல் சூளையை வைத்திருந்தாராம். இதேபோல கட்டடப் பணிக்கு தேவையான மற்ற பொருட்களும் தரமானதாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார் நம்பெருமாள் செட்டி. இதற்காக சில பொருட்களை வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்து பயன்படுத்தி இருக்கிறார்.

"தாட்டிகொண்ட நம்பெருமாள்' செட்டி என அழைக்கப்பட்ட இவர், ஆரம்ப காலத்தில் ஜார்ஜ் டவுனில் உள்ள தனது பரம்பரை வீடான ஆனந்த பவனத்தில் (தற்போது மைசூர் கஃபே) தான் வசித்து வந்தார். பின்னர் 1905இல் சேத்துப்பட்டில் 'க்ரையாண்ட்' என்ற வீட்டை விலைக்கு வாங்கி குடியேறினார். ஹாரிங்டன் சாலையில் உள்ள இந்த வீட்டுடன் சேர்த்து நம்பெருமாள் செட்டிக்கு சொந்தமாக 99 வீடுகள் இருந்தன. 100வது வீட்டை வாங்கினால் துரதிர்ஷ்டம் வந்துவிடும் என நம்பியதால், செட்டியார் செஞ்சுரி அடிக்கவில்லை என சொல்லப்படுகிறது. சேத்துப்பட்டு பகுதியில் இவருக்கு மொத்தம் 2000 கிரவுண்டு நிலம் இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட சேத்துப்பட்டின் பெரும்பகுதியை வாங்கிப் போட்டதாலேயே இவரின் நினைவாக அந்த பகுதிக்கு சேத்துப்பட்டு எனப் பெயர் வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கணிதமேதை ராமானுஜம் தனது இறுதி மூச்சை இங்குதான் சுவாசித்தார் என்பது சேத்துப்பட்டிற்கு பெருமை சேர்க்கும் மற்றொரு விஷயம். காசநோய் அதிகமாகி இங்கிலாந்தில் இருந்து திரும்பிய ராமானுஜத்தை நம்பெருமாள் செட்டியார் தனது க்ரையண்ட் இல்லத்தில் தங்க வைத்து சிறப்பு வைத்தியங்களுக்கு  ஏற்பாடு செய்தார். பின்னர் ராமானுஜத்தின் வசதிக்காக க்ரையண்டிற்கு எதிரில் இருந்த கோமேத்ரா என்ற தன்னுடைய இன்னொரு வீட்டில் தங்க வைத்தார். ஆனால் சிறிது காலத்திலேயே ராமானுஜம் காலமானார். ராமானுஜம், கடல் கடந்து வெளிநாடு சென்றதால், அவரது உடலைக்கூட உறவினர்கள் ஏற்கவில்லை. எனவே, நம்பெருமாள் செட்டிதான் ராமானுஜத்தின் ஈமச் சடங்குகளை செய்தார்.

சேத்துப்பட்டு ஏரி
அன்றைய மெட்ராசில் வெளிநாட்டுக் கார் (French Dideon) வைத்திருந்த முதல் இந்தியர் செட்டியார்தான். கார் என்ன பெரிய விஷயம், அவர்தன் சொந்த உபயோகத்திற்காக, நான்கு பெட்டிகள் கொண்ட தனி ரயிலே வைத்திருந்தார். திருவள்ளூரில் இருக்கும் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு சென்று வருவதற்கு செட்டியார் இந்த ரயிலை பயன்படுத்தினார்.

சேத்துப்பட்டின் மற்றொரு முக்கிய விஷயம், 15 ஏக்கருக்கும் அதிகமாக பரந்துவிரிந்திருக்கும் ஏரி. அனேகமாக சென்னைக்குள் இருக்கும் பெரிய நீர்நிலை இதுவாகத் தான் இருக்கும். ஆக்ரமிப்புகள் காரணமாக தற்போது இதில் சிறிதளவே நீர் இருக்கிறது. ஆங்கிலேயர்கள் ஓய்வு நேரத்தில் இந்த ஏரியில் மீன் பிடித்து உல்லாசமாக பொழுது போக்கியிருக்கிறார்கள். ஆனால் இப்போது அதெல்லாம் பழங்கதையாகிவிட்டன.

மொத்தத்தில் கடந்த நூற்றாண்டு வரை இயற்கை எழில் சூழ, ரம்மியமாகத் திகழ்ந்த இந்த சேத்துப்பட்டு பகுதி, இப்போது போக்குவரத்து நெரிசல் மிகுந்த கான்கிரீட் காடாகக் காட்சி அளிக்கிறது. இருப்பினும் இன்றும் எஞ்சி இருக்கும் ஒரு சில பழங்கால கட்டடங்கள் அந்த அழகிய நினைவுகளை அசைபோட உதவுகின்றன.

நன்றி - தினத்தந்தி

* நம்பெருமாள் செட்டியின் சேத்துப்பட்டு வீடு இப்போதும் அவரது குடும்பத்தினர் வசம் உள்ளது. இங்கு சீனா, ஜப்பான், இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட பீங்கான் கலைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

* சென்னையின் பழைய வண்ணான்துறைகளில் முக்கியமான சேத்துப்பட்டு வண்ணான்துறை, இந்தியாவின் இரண்டாவது பெரிய வண்ணான்துறையாக கருதப்படுகிறது.

* ராமானுஜம் காசநோயால் இறந்த சேத்துப்பட்டில், காசநோய் ஆராய்ச்சி மையம் ஒன்று இருக்கிறது.