என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, July 28, 2012

பின்னி மில்


ஒருகாலத்தில் மெட்ராஸ் மாநகரின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கியது பின்னி மில். இன்று குடோனாகவும், படப்பிடிப்புத் தளமாகவும் விளங்கும் இந்த மில்லிற்கு கிட்டத்தட்ட 250 ஆண்டு வரலாறு இருக்கிறது. கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் மெட்ராசில் வணிகத்தை தொடங்கிய உடன் அவர்களோடு வியாபாரம் செய்வதற்காக இங்கிலாந்தில் இருந்து வந்த ஆங்கிலேயர்களில் ஒருவர்தான் சார்லஸ் பின்னி.

உரிமம் ஏதும் இல்லாமல் 1769இல் மெட்ராஸ் வந்திறங்கினார் சார்லஸ் பின்னி. வாலாஜா நவாப்புடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட அவர், மெல்ல மெட்ராஸ் மண்ணில் காலூன்ற முயற்சித்தார். இவரது குடும்பத்தினர் தொடர்ந்து நவாப்பிடம் பணியாற்றினர். அந்த வரிசையில் நவாப் சேவையைத் தொடர்வதற்காக சென்னை வந்தவர் ஜான் பின்னி. இவர்தான் பின்னாளில் பிரம்மாண்ட விருட்சமாய் வளர்ந்த பின்னி மில்லிற்கு வித்திட்டவர்.
ஜான் பின்னி

இன்று மவுண்ட் ரோடில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமையகம் இருக்கும் இடத்தில் இவர் ஒரு அலுவலகத்தை தொடங்கினார். மெட்ராஸ் வரும் கப்பல்களில் இருந்து பொருட்களை ஏற்றி இறக்கும் வேலையில் இந்நிறுவனம் ஈடுபட்டிருந்தது. சிறிது காலம் கழித்து இந்த நிறுவனம் அருகிலேயே தற்போது தாஜ் கன்னிமரா ஹோட்டல் இருக்கும் இடத்திற்கு மாறியது. பின்னர் 1812இல் பாரிமுனையில் உள்ள ஆர்மீனியன் சாலைக்கு சென்றுவிட்டாலும், 1820 வரை ஜான் பின்னி இங்கிருந்த வீட்டில்தான் வசித்து வந்தார். இதன் நினைவாக இன்றும் அந்த சாலை பின்னி ரோடு என்றே அழைக்கப்படுகிறது.

இதனிடையே 1800இல் ஜான் பின்னி, டெனிசன் என்பவருடன் கூட்டு சேர்ந்தார். எனவே நிறுவனத்திற்கு பின்னி அண்ட் டெனிசன் எனப் பெயரிடப்பட்டது. துறைமுகத்திற்கு அருகில் இருப்பதால் ஆர்மீனியன் தெருவிற்கு இடம்பெயர்ந்த பிறகு, 1814இல் இது பின்னி அண்ட் கோ என பெயர் மாற்றப்பட்டது. கப்பலில் இருந்து சரக்குகளை கரைக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்காக இந்த நிறுவனம் 30க்கும் மேற்பட்ட சிறிய படகுகளை வைத்திருந்தது. அதேபோல தரைக்கு வந்த சரக்குகளை கையாள்வதற்காக பேருந்து சேவையையும் வழங்கியது.

வியாபாரத்தை பெருக்க நினைத்த பின்னி, வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையிலும் நுழைந்தார். இறுதியாக பின்னி கையில் எடுத்ததுதான், அவருக்கு பெரும் புகழ் ஈட்டித் தந்த துணி வியாபாரம். பின்னி அண்ட் கோ நிறுவனம், வட சென்னையின் பெரம்பூர் பகுதியில் 1877இல் பக்கிங்ஹாம் மில்லை (இன்றைய பின்னி மில்) ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து 1882இல் கர்நாடிக் மில் தொடங்கப்பட்டது. ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலை வழங்கிய இந்த மில்கள் 1920இல் இணைப்பட்டன. இதன்மூலம் சுமார் 14,000 தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனமாக பின்னி விளங்கியது.
பின்னியின் ஆர்மீனியன் தெரு அலுவலகம்
பின்னியின் தயாரிப்புகள் உள்ளூர் மட்டுமின்றி உலக அளவில் விற்பனையில் பின்னி எடுத்தன என்றுதான் சொல்ல வேண்டும். தயாரிப்புகள் தரமானதாக இருந்ததால், அடுத்த சில ஆண்டுகளிலேயே பின்னி அண்ட் கோ, துணி வியாபாரத்தில் முன்னோடி நிறுவனமாக மாறியது. இதனிடையே 1884இல் பெங்களூரில் பெங்களூர் காட்டன், சில்க் - உல்லன் மில்ஸை இந்நிறுவனம் தொடங்கியது. அந்த காலத்தில் இந்தியாவில் இருந்த பிரிட்டீஷ் அரசாங்கம் பின்னி அண்ட் கோவின் தயாரிப்புகளைத் தான் அதிகளவில் கொள்முதல் செய்தது. பொதுமக்கள் மத்தியிலும் பின்னி துணிகளுக்கு நல்ல மதிப்பு இருந்தது.

இப்படி வியாபாரத்தில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த பின்னிக்கு, இருபதாம் நூற்றாண்டு அத்தனை இனிமையானதாக இல்லை. மெட்ராசில் இயங்கி வந்த அர்புத்நாட் வங்கி (Arbuthnot Bank) 1906இல் திவாலானது பின்னிக்கு ஒரு பேரிடியாக அமைந்தது. இதனால் ஏற்பட்ட பொருள் இழப்பில் இருந்து மெல்ல மீள்வதற்குள் அடுத்த அடி 1947இல் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தபோது விழுந்தது. சுதந்திரம் கொடுத்த கையோடு ஆங்கிலேயர்கள் கப்பல் ஏறி சென்றுவிட பின்னியின் வியாபாரம் தொய்வடைந்தது.

இதனிடையே பின்னி மில்கள் 1970களின் பிற்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் கடுமையாக சேதமடைந்தன. பின்னர் சுமார் 200 ஆண்டுகளாக மெட்ராசின் வர்த்தக வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய பின்னி மில், பல்வேறு காரணங்களால் 1996இல் தனது இயக்கத்தை ஒரேயடியாக நிறுத்திக் கொண்டது. இதில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். 2001இல் இந்த மில்கள் விற்கப்பட்டுவிட்டன.

தொழிற்சங்கங்களின் வரலாற்றிலும் பின்னிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. 1915இல் ஜவுளி வியாபாரியான செல்வபதி செட்டியாரால் பின்னி மில்லில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்கம்தான், தென்னிந்தியாவின் முதல் தொழிற்சங்கம். அவரின் தூண்டுதலின் பேரில்தான் சென்னையில் முதன்முதலாக மே தினம் கொண்டாடப்பட்டது. திரு வி.க தலைமையில் 1921இல் பின்னி மில்லில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இந்திய தொழிற்சங்க வரலாற்றில் மிகவும் முக்கியமானது.

இப்படி உண்மையான தொழிலாளர் போராட்டங்களை பார்த்த பின்னி மில், இன்று படப்பிடிப்புகளுக்காக அரங்கேறும் சண்டைக் காட்சிகளை பார்த்தபடி சென்னை வரலாற்றின் மௌன சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது.

நன்றி - தினத்தந்தி

* மாதவரத்தில் இருக்கும் பின்னி காலனி, புளியந்தோப்பில் இருக்கும் பின்னி கார்டன்ஸ், போயஸ் கார்டன் பகுதியில் இருக்கும் பின்னி ரோடு ஆகியவை இன்றும் பின்னியை நினைவு கூர்கின்றன.

* திருவி.க., பி.பி. வாடியா போன்ற தலைவர்களின் போராட்டங்களின் விளைவாகத் தான் 12 மணி நேரமாக இருந்த வேலைநேரம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டது.  

* பி அண்ட் சி நிர்வாகத்தால் நடத்தப்பட்ட பின்னி உயர்நிலைப் பள்ளியில் அரை நாள் படிப்பு அரை நாள் தொழில் என்ற முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது.

Saturday, July 21, 2012

சேப்பாக்கம் அரண்மனை


சென்னை மாநகரில் ஒரு பரந்துவிரிந்த விசாலமான அரண்மனை இருந்தது, இன்னும் இருக்கிறது என்ற தகவல் நிறைய பேருக்கு ஆச்சர்யமளிக்கக் கூடும். மெட்ராஸ் என்ற நிலப்பரப்பே கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் வந்த பிறகுதானே மக்கள் புழக்கம் நிறைந்த பகுதியாக மாறியது... அப்படி இருக்க, இங்கு எந்த ராஜா அரண்மனை கட்டினான்? ஏன் கட்டினான்? என நீங்கள் கேட்பது புரிகிறது. இதற்கான பதிலை அறிந்துகொள்ள நாம் சுமார் 250 ஆண்டுகள் பின்னோக்கிப் போக வேண்டும்.

18ஆம் நூற்றாண்டில் வட ஆற்காடு, தென்னாற்காடு, திருச்சி, திருநெல்வேலி, நெல்லூர் உள்ளிட்ட பகுதிகள் கர்நாடக நவாபின் ஆட்சியின் கீழ் இருந்தன. இவரது தலைநகரம் ஆற்காட்டில் இருந்ததால் இவரை ஆற்காடு நவாப் என மக்கள் அழைத்தனர். 1749இல் இந்த நவாப் பதவிக்காக ஒரு போர் நடந்தது. நவாப்பின் வாரிசுகளுக்கு இடையில் நடந்த போரில் ஒரு தரப்பை பிரெஞ்சுக்காரர்களும், மற்றொரு தரப்பை ஆங்கிலேயர்களும் ஆதரித்தனர். இதில் ராபர்ட் கிளைவ் தலைமையிலான பிரிட்டீஷ் படை வெற்றி பெற்றதால், அவர்கள் ஆதரித்த வாலாஜா நவாபான முகமது அலி ஆற்காடு அரியணையில் ஏறினார்.

ஒருவழியாக அரியாசனத்தில் அமர்ந்துவிட்டாலும், அரசியல் ஆபத்துகள் காரணமாக ஆங்கிலேயர்கள் வசிக்கும் ஜார்ஜ் கோட்டைக்கு இடம்பெயர்வதுதான் பாதுகாப்பானது என்ற முடிவுக்கு வந்தார் முகமது அலி. இதற்கு ஆங்கிலேயர்களும் ஒப்புக் கொண்டதால் கோட்டைக்குள்ளேயே நவாபுக்காக அரண்மனை கட்டும் பணி தொடங்கியது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த திட்டம் ஆரம்பத்திலேயே நின்றுவிட்டது. இதனைத் தொடர்ந்து நவாப் அரண்மனைக்காக சேப்பாக்கத்தில் 117 ஏக்கர் நிலம் தனியாரிடம் இருந்து வாங்கப்பட்டது.
1890களில் சேப்பாக்கம் அரண்மனை

அரண்மனை கட்டும் பணி பால் பென்ஃபீல்ட் (Paul Benfield) என்ற கிழக்கிந்திய பொறியாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு அவர் 1768இல் கட்டி முடித்ததுதான் பிரம்மாண்டமான சேப்பாக்கம் அரண்மனை. நவாப் தனது மெகா குடும்பத்துடன் வாழ்ந்து வந்த இதுதான் பின்னாட்களில் பிரபல கட்டட பாணியாக மாறிய இந்தோ-சராசனிக் பாணியில் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கட்டடம். ஹூமாயுன் மஹால், கலஸ் மஹால் என இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்த கட்டடம், மெரினாவிற்கு மேலும் மெருகூட்டியது என்றே சொல்ல வேண்டும்.

நவாப் முகம்மது அலிக்கு கை தாராளம். ஆடம்பரப் பிரியர் வேறு. எனவே காசு இல்லாவிட்டாலும் கலங்காமல் ஆங்கிலேயர்களிடம் தொடர்ந்து கடன் வாங்கி 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்று வாழ்ந்திருக்கிறார். விளைவு, ஒருகட்டத்திற்கு மேல் இனி இது தாங்காது என முடிவெடுத்த ஆங்கிலேயர்கள், நவாப் பட்ட கடனுக்காக கர்நாடகத்தில் வரி வசூலிக்கும் உரிமையை பெற்றுக் கொண்டனர். இதனிடையே நவாப் முகம்மது அலி இறந்துவிட, அவரது மகன் உம்தத்-உல்-உம்ராவின் தலையில் கடன் சுமை இறங்கியது. 1801இல் அவரும் இறந்ததும், கவர்னர் ஜெனரல் வெல்லெஸ்லி பிரபு, கர்நாடகம் முழுவதையும் கிழக்கிந்தியக் கம்பெனி அரசுடன் இணைத்துவிட்டார். எனவே நாடு இல்லாத நவாப்புகளான வாரிசுகள் சேப்பாக்கம் மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டது தான் தற்போது ராயப்பேட்டையில் இருக்கும் அமீர் மஹால்.
நவாப் முகம்மது அலி

1855இல் சேப்பாக்கம் அரண்மனையை பிரிட்டீஷ் அரசு ஏலம் விட்டது. ஆனால் இதை ஏலத்தில் எடுக்கும் அளவிற்கு யாரிடமும் பணம் இல்லை. எனவே அரசே இதை கையகப்படுத்தி, அரசு அலுவலகமாக மாற்றியது. இதனிடையே 1860இல், பிரபல கட்டடக் கலைஞரான ராபர்ட் சிஸ்ஹோம் (Robert Fellowes Chisholm) ஹூமாயுன் மற்றும் கலஸ் மஹால்களுக்கு இடையில் ஒரு கோபுரத்தை நிர்மாணித்தார். கர்நாடக பகுதி முழுவதையும் பிரிட்டீஷார் கைப்பற்றியதன் நினைவாக இது எழுப்பப்பட்டது.

பின்னர் சிஸ்ஹோம், இந்த அரண்மனைக்கு முன்புறம், மெரினாவைப் பார்த்தபடி, ஸ்காடிஷ் பாணியிலான பொதுப்பணித் துறை கட்டடம், வாலாஜா சாலையைப் பார்த்தபடி, இந்தோ-சராசனிக் பாணியிலான ஆவணக் காப்பகம் மற்றும் வருவாய்துறை கட்டடங்களைக் கட்டினார். இதனால் சேப்பாக்கம் அரண்மனை இந்த கட்டடங்களுக்குள் மெல்ல மறைய ஆரம்பித்தது. பின்னர் 1950களில் எழிலகம் கட்டப்பட்டதும் கொஞ்ச நஞ்சம் தெரிந்த அரண்மனையும் முற்றிலுமாக மறைந்துவிட்டது.

ஒருகாலத்தில் அரண்மனைக்கு விருந்தினர்கள் வந்தால் அவர்களை துப்பாக்கி குண்டுகள் முழங்க வரவேற்ற மைதானத்தில், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் செனட் இல்லம் கட்டப்பட்டுவிட்டது. அதேபோல நவாப்பின் நீச்சல் குளமும் இடிக்கப்பட்டு பல்கலைக்கழக கட்டடங்கள் முளைத்துவிட்டன. அரண்மனையின் பிரதான அரைவட்ட நுழைவு வாயில் வாலாஜா சாலையில் இருந்திருக்கிறது. முக்கிய நிகழ்வுகளின்போது, இங்கிருந்த மாடத்தில் இருந்தபடி இசைக்கலைஞர்கள் தங்களின் இசையால் காற்றில் இனிமை சேர்த்திருக்கிறார்கள்.

இன்றைய திருவல்லிக்கேணி காவல்நிலையம் கூட சேப்பாக்கம் அரண்மனையின் ஒரு பகுதிதான். குதிரைக்காரர்களுக்கும், விருந்தினர்களின் உதவியாளர்களுக்கும் உணவு பரிமாறும் இடமாக இது இருந்திருக்கிறது. அதேபோல அரண்மனையின் பின்புறம் யானைக்குளம் ஒன்று இருந்திருக்கிறது. அரண்மனை யானைகளை இங்குதான் குளிப்பாட்டி இருக்கிறார்கள். இன்று குளமும் இல்லை, அதில் குளித்த யானைகளும் இல்லை. ஆனால் மெட்ராசின் ஒரே ஒரு அரண்மனையைச் சுற்றி இதுபோன்ற இனிய நினைவுகள் மட்டும் நிறைந்திருக்கின்றன.

நன்றி - தினத்தந்தி

* 2007 மார்ச்சில் இங்கு இயங்கி வந்த தோட்டக்கலை இயக்குநர் அலுவலகத்தின் முதல் மாடியின் கூரை இடிந்து விழுந்தது.

* 2012 ஜனவரியில் கலஸ் மஹாலின் ஒரு பகுதியை தீ தின்றுவிட்டது.

* பராமரிப்பின்றி சிதிலமடைந்திருக்கும் இந்த அரண்மனையை உரிய முறையில் சீரமைக்க அரசு ஆவண செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Saturday, July 14, 2012

சர் தாமஸ் மன்றோ


அண்ணாசாலையில் ஒரு குதிரை மீது சேணம் இல்லாமல் கம்பீரமாக அமர்ந்திருக்கும் மன்றோவின் சிலையைப் பார்க்கும் போதெல்லாம், யார் இந்த மனிதர், அப்படி என்ன சாதித்துவிட்டார் என்று சுதந்திர இந்தியாவில் ஒரு ஆங்கிலேயரின் சிலையை தொடர்ந்து இருக்க அனுமதித்திருக்கிறோம் என்ற கேள்வி எழும். இதற்கான விடையைத் தேடியபோது, உண்மையிலேயே ஆச்சரியமான ஒரு மனிதரின் வரலாறு கிடைத்தது.

இங்கிலாந்தில் இருந்து 1780களில் சென்னைக்கு ஒரு சாதாரண படை வீரராக வந்தவர் தாமஸ் மன்றோ. 1792 இல் திப்பு சுல்தானுக்கு எதிரான போரில் துணை நிலை ஆளுநராக பணியாற்றினார் மன்றோ. அதில் வெற்றி பெற்றதால், பாரமகால் பகுதி முழுவதும் (தற்போதைய சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகள்) நிர்வகிக்கும் உரிமை தளபதி அலெக்ஸாண்டர் ரிட், தாமஸ் மன்றோ ஆகிய இருவரிடமும் ஒப்படைக்கப்பட்டது.

ஆட்சி செலுத்தும் உரிமை பெற்றதால் அந்த பகுதியில் வரிவசூல் செய்யும் அதிகாரமும் இவர்களிடம் வந்தது. இந்த நிலையில், தாமஸ் மன்றோ தனது ஆளுகைக்குட்பட்ட பகுதி முழுவதும் ஆய்வு செய்து நிலத்திலிருந்து பெறப்படும் வரிவசூல் மிகவும் அதிகம் என்ற முடிவுக்கு வந்தார். எனவே விவசாயிகளுக்கு நிலத்தை அளித்து, அதற்கான வரியை அரசாங்கம் நேரடியாக வசூல் செய்யும் ரயத்துவாரி என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் விவசாயிகள் இடைத் தரகர்களிடம் சிக்கி சீரழியும் வேதனை முடிவுக்கு வந்தது.

1807 ஆம் ஆண்டு மன்றோ இங்கிலாந்து சென்றபோது, இந்தியாவில் அவர் சொன்னபடி வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்கள் மன்றோவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டதால் ரயத்துவாரி முறை சென்னை மாகாணத்தில் செயல்பாட்டிற்கு வந்தது.

1814 ஆம் ஆண்டு சென்னை திரும்பிய மன்றோ மாவட்ட நிர்வாகம் மற்றும் நிதி ஆகிய இரண்டு துறைகளை சீர்திருத்தும் குழுவின் தலைவராக பொறுப்பேற்றார். 1820 ஆம் ஆண்டு அவர் சென்னை மாகாணத்தின் ஆளுநராகப் பதவி உயர்வு பெற்றார். அவருடைய ஆட்சியின்பொழுது மாவட்ட நிர்வாக முறையில் நிறைய ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

மன்றோ பற்றி ஒரு சுவையான செவி வழிச் செய்தியும் சொல்லப்படுகிறது. கி.பி.19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு முன்பு மானியமாக வழங்கப்பட்ட நிலங்களை எல்லாம் மீண்டும் அரசுடைமை ஆக்கும் சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்ரீ ராகவேந்திரரின் பிருந்தாவனம் அமைந்துள்ள மந்த்ராலய கிராமத்தை அரசுடைமை ஆக்குவதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த கிராமம் நவாப் சித்தி மசூத்கான் என்பவரால் திவான் செங்கண்ணரின் மூலம் ஸ்ரீ ராகவேந்திரருக்கு தானமாக அளிக்கப்பட்டது. எனவே இதனை ஒப்படைக்க முடியாது என பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுபற்றி நேரில் விசாரிக்க மன்றோ அனுப்பி வைக்கப்பட்டார். தனது காலணிகளையும் தொப்பியையும் அகற்றி விட்டு பிருந்தாவனத்திற்குள் சென்றார் மன்றோ. சிறிது நேரத்திற்கெல்லாம் மன்றோ ராகவேந்திரரின் நினைவிடம் முன்பு நின்று தனியாக பேச ஆரம்பித்துவிட்டாராம். பின்னர்
தன் உரையாடலை முடித்துக் கொண்ட மன்றோ பிருந்தாவனத்தை வலம் வந்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். காரணம், ராகவேந்திரரே அவர் முன் தோன்றி பேசியதாக நம்பப்படுகிறது.

ராகவேந்திரர் தோன்றியது உண்மையோ இல்லையோ ஆனால் பின்னர் தனது இருப்பிடத்திற்கு திரும்பிய மன்றோ, பிருந்தாவனத்தை அரசுடமை ஆக்கத் தேவையில்லை என அறிக்கை தந்துவிட்டார் என்பதற்கு ஆவணங்கள் இருக்கின்றன. இதுபற்றிய குறிப்பு மதராஸ் அரசாங்க கெஜட்டில் பக்கம் 213ல்ஆதோனி தாலுகா’ எனும் தலைப்பின் கீழ் விளக்கமாக தரப்பட்டிருக்கிறது.

சர் தாமஸ் மன்றோ இந்தியர்களின் மதவழிபாடுகளுக்கும் சடங்குகளுக்கும் அதிக மரியாதை அளித்தவர். இதன் காரணமாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஒரு அறக்கட்டளையினை உருவாக்கி சித்தூர் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களின் வரிவசூல் முழுவதும் அதற்கு சென்றடைய வழிவகை செய்தார். இன்றும் திருப்பதி தேவஸ்தானத்தில் நண்பகல் வழிபாட்டுக்குப் பின்னர் வழங்கப்படும் நைய்வேத்தியம்மன்றோ பெயரில் அவர் ஏற்படுத்திய அறக்கட்டளை வழியே நடைபெற்று வருகிறது.

ஒருமுறை பெல்லாரி மாவட்டத்தில் ஆங்கிலேய துணைக் கலெக்டர் ஒருவர் விவசாயிகளை மதம் மாற்றுவதற்கு முயற்சி செய்தபோது, அப்போது கவர்னராக இருந்த மன்றோ, "மக்களை மதம் மாற்றும் முயற்சி மதகுருமார்கள் சார்ந்த விஷயம். அதிகாரி ஒருவர் மக்களைத் தன் அலுவலகத்தில் கூட்டி, மதப் பிரசாரம் செய்வது அதிகாரத் துஷ்பிரயோகம்' என்று தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். அதேபோல, இந்தியா சுதந்திரம் அடைவதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே, ''இந்தியர்களுக்கு நாம் சுதந்திரம் அளிக்கத்தான் வேண்டும், அவர்களே தங்கள் நாட்டை ஆண்டு கொள்வார்கள்'' என்றும் சொன்னவர் தாமஸ் மன்றோ.

தென்னிந்தியாவை குறிப்பாகத் தமிழகத்தை நேசித்த மன்றோ, நாற்பதாண்டுகளுக்கும் மேலாக இங்கேயே பணிபுரிந்தார். தனது 67-ம் வயதில் தாயகம் திரும்ப விரும்பியதால், இங்கிலாந்து அரசு தர விரும்பிய கவர்னர் ஜெனரல் பதவியையும் வேண்டாம் என மறுத்துவிட்டார். இங்கிலாந்து திரும்பி கடைசி காலத்தில் அமைதியாக ஓய்வெடுக்க வேண்டும் என விரும்பினார் மன்றோ. ஆனால் விதி அவரை இங்கிலாந்து செல்ல விடவில்லை.

அவர் அனைத்து தரப்பு மக்களுடமும் குறிப்பாக ஏழைகளிடம் மிகவும் கருணையோடும் பாசத்தோடும் நடந்து கொண்டார். அந்த அன்பு காரணமாக, நாடு திரும்பும் முன், தான் ஆறாண்டு காலம் கலெக்டராகப் பணிபுரிந்த ஆந்திராவின் கடப்பா பகுதிக்குச் சென்றுவர விரும்பினார் மன்றோ. அப்போது, அந்த பகுதியில் காலரா பரவியுள்ளதாக அதிகாரிகள் எச்சரித்தனர். இருந்தும் அங்கு சென்று மக்களோடு பேசி மகிழ்ந்தார். காலன் காலரா வழியாக வந்தான். 1827-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி காலையில் காலரா தாக்கி அன்றிரவே மன்றோ மரணமடைந்தார்.

அந்த காலத்தில் ஆந்திர மக்கள் மன்றோ மீது இருந்த பெருமதிப்பு காரணமாக தங்களின் குழந்தைகளுக்கு "மன்றோலப்பா' என்று பெயர் சூட்டி மகிழ்ந்திருக்கின்றனர். அப்படி இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட அந்த ஆங்கிலேயரின் கதையை அறிந்த பின், இப்போது அவரது சிலையைப் பார்க்கும்போது மன்றோ இன்னும் கொஞ்சம் கூடுதல் கம்பீரத்துடன் தெரிகிறார்.

நன்றி - தினத்தந்தி

* அண்ணாசாலையில் இருக்கும் மன்றோவின் சிலைக்கான மொத்த செலவும் பொதுமக்கள் நன்கொடையாக அளித்தது.

* ஃபிரான்சிஸ் சாண்ட்ரி என்பவர் செய்த இந்த சிலை, இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டு கப்பல் மூலம் 1839ஆம் ஆண்டு சென்னை கொண்டு வரப்பட்டது.

* ராஜாஜி தன்னை சந்திக்க வரும் அரசியல் தலைவர்களிடம் மன்றோவின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்படி அறிவுறுத்துவாராம்.

Saturday, July 7, 2012

இரட்டைக் கோவில்கள்


சென்னையில் பட்டணம் பெருமாள் கோவில் எங்கிருக்கிறது என்று விசாரித்தால், நிச்சயம் உங்களை ஏற இறங்கப் பார்ப்பார்கள். ஆனால் ஒரு காலத்தில் இந்த நகரின் முக்கிய அடையாளமாகத் திகழ்ந்திருக்கிறது இந்தக் கோவில். அவ்வளவு ஏன், மெட்ராசிற்கு சென்னை என்ற பெயர் வரக் காரணமே இந்த கோவில்தான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

மெட்ராஸ் என்ற மணல்வெளியில் கிழக்கிந்திய கம்பெனியார் குடியேறுவதற்கு முன்பிருந்தே திருவொற்றியூர், மயிலாப்பூர் போன்ற இடங்களில் புராதன கோவில்கள் இருந்தன. ஆனால் இவை எல்லாம் அப்போது மெட்ராஸ் என்ற எல்லைக்குள் வரவில்லை. அந்த வகையில் மெட்ராஸ் நகருக்குள் கட்டப்பட்ட முதல் பெரிய கோவில் சென்ன கேசவப் பெருமாள் கோவில்தான்.

ஃபிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் சந்திரகிரி மன்னரிடம் இருந்து இந்த பகுதியை 1639இல் குடிக்கூலிக்கு பெற உதவியாக இருந்த திம்மண்ணா என்ற வணிகர்தான் இந்த கோவிலைக் கட்டியவர். 1640களில் தாம் கட்டிய இந்த கோவிலை, ஏப்ரல் 24, 1648இல் நாராயணய்யர் என்பவருக்கு திம்மண்ணா தானமாக அளித்ததற்கான ஆவணங்கள் இருக்கின்றன. இந்த கோவில் அப்போது கோட்டைக்கு வெளியே தற்போது உயர்நீதிமன்ற கட்டடம் இருக்கும் இடத்தில் இருந்தது. சென்னையின் பூர்வகுடிகள் வசித்த அந்த பகுதி முழுவதும் கருப்பர் நகரம் என்று அழைக்கப்பட்டது.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அங்கிருந்தபடி சென்னைவாசிகளுக்கு அருள் பாலித்த சென்ன கேசவப் பெருமாளுக்கு 1757இல் ஆபத்து வந்தது. அடிக்கடி கோட்டையைத் தாக்கும் பிரெஞ்சுப் படைகளை சமாளிப்பது பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஒரு யோசனை தான் இந்த ஆபத்தை வரவைத்தது. கோட்டையைச் சுற்றி இருக்கும் அனைத்து கட்டடங்களையும் இடித்து தரைமட்டமாக்கிவிட்டால் எதிரிப் படைகள் தூரத்தில் வரும் போதே உஷாராகிவிடலாம் என்பதுதான் அந்த யோசனை.

இதன்படி கோட்டைக்கு வெளியில் இருந்த கருப்பர்நகரக் குடியிருப்புகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. சென்ன கேசவப் பெருமாளும் இதற்கு விதிவிலக்கல்ல என்று சொல்லிவிட்டது கிழக்கிந்திய கம்பெனி. ஒரு வழியாக கோவிலை இடித்து விட்டார்களே தவிர அதனால் ஏற்பட்ட மக்கள் கொந்தளிப்பை கிழக்கிந்திய கம்பெனிக்காரர்களால் சமாளிக்க முடியவில்லை. எனவே தற்போதைய பூக்கடை பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட கருப்பர் நகரத்தில் சென்ன கேசவப் பெருமாளுக்கு கோவில் கட்டித் தருவது என முடிவு செய்யப்பட்டது.

லார்ட் பிகட்டுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்த மணலி முத்துகிருஷ்ண முதலியார், இன்றைய பூக்கடை பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தை இதற்காக தானமாகக் கொடுத்தார். மேலும் சில இடங்களை அதற்குரிய மாற்று இடங்களைக் கொடுத்து உரியவர்களிடம் இருந்து கிழக்கிந்திய கம்பெனி பெற்றுத் தந்தது. இவ்வாறு சென்ன கேசவப் பெருமாள் கோவிலுக்காக சுமார் 24,000 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. இதுதவிர 1173 பகோடாக்களையும் (அன்றைய பணம்) கம்பெனி தானமாக வழங்கியது. மணலி முத்துகிருஷ்ண முதலியார் தமது பங்காக 5000 பகோடாக்களை அளித்ததோடு உள்ளூர்வாசிகளிடம் இருந்து நன்கொடையும் வசூலித்து மொத்தம் 15,000 பகோடாக்களை சேகரித்தார். இந்த பணத்தைக் கொண்டு 1762இல் கோவில் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

இந்த இடத்தில்தான் கதையில் ஒரு திருப்பம். சென்ன கேசவப் பெருமாளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கூடவே சென்ன மல்லீஸ்வரருக்கும் ஒரு கோவில் கட்டுவது என முடிவு செய்யப்பட்டது. ஆக இரண்டு கோவில்களைக் கட்டும் பணி களைகட்டியது. ஆனால் பல காரணங்களால் இந்த பணிகள் தாமதமாகி 1780 வரை நடைபெற்றன. கிழக்கிந்திய கம்பெனியார் உதவியால் கட்டப்பட்ட இந்த கோவில், கம்பெனி கோவில் என்றும் சில காலம் அழைக்கப்பட்டு வந்தது.

உயர்நீதிமன்றம் இருந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கோவிலில் வைக்கப்பட்டிருந்த மூலவர் தான் இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் ஹைதர் அலியின் படை எடுப்பின்போது, பழைய கோவிலில் இருந்த மூலவரை காப்பாற்றுவதற்காக அதனை கோவில் குருக்கள், திருநீர் மலைக்கு கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் மணலி முத்துகிருஷ்ண முதலி ஈடுபட்டாலும், அவருக்கு அது கிடைக்கவில்லை. எனவே திருநீர்மலைக் கோவிலில் இருந்து ஒரு சிலையைக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்ததாக நரசய்யா தனது மதராசப்பட்டினம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

அன்றில் இருந்து இன்று வரை மணலி முத்துகிருஷ்ண முதலியின் குடும்பத்தினர்தான் இந்த கோவிலை நிர்வகித்து வருகின்றனர். அவரது குடும்பத்தைச் சேர்ந்த மணலி கிருஷ்ணசாமி முதலியார், சரவண முதலியார் உள்ளிட்டவர்களின் கருங்கல் சிலைகள் இந்த கோவில் தூண்களில் நம்மை வரவேற்கின்றன.

ஒரு காலத்தில் ஜூன் மாதம் நடைபெறும் பெரியாழ்வார் திருவிழாவின் போது, நாகஸ்வர கலைஞர் ஒருவரை இங்கு வரவழைத்து 10 நாட்கள் இசைக் கச்சேரி வெகு விமர்சையாக நடத்தப்பட்டிருக்கிறது. 1917ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியாழ்வார் திருவிழாவில் பிரபல நாகஸ்வர கலைஞர் டி.என். ராஜரத்தினம் பிள்ளை இந்த கோவிலில் இசைக் கச்சேரி செய்திருக்கிறார். கோவிலுக்குள் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் தெருவில் நின்றபடி ஏராளமானோர் இந்த மயக்கும் இசையை ரசித்திருக்கிறார்கள்.

இப்படி நாகஸ்வரங்களை ரசித்துக் கொண்டிருந்த சென்ன கேசவப் பெருமாளும், சென்ன மல்லீஸ்வரரும் இப்போது தேவராஜ முதலி தெருவிலும், நைனியப்பன் தெருவிலும் விரைந்து கொண்டிருக்கும் சைக்கிள் ரிக்ஷாக்களின் மணி ஓசையை அமைதியாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நன்றி - தினத்தந்தி

* தேவராஜ முதலி தெருவில் உள்ள சென்ன கேசவப் பெருமாள் கோவிலில் இருந்து என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சென்ன மல்லீஸ்வரர் கோவிலுக்கு செல்ல வழி அமைக்கப்பட்டுள்ளது.
* 1710இல் தயாரிக்கப்பட்ட மெட்ராஸ் வரைபடத்தில் இந்த கோவில், பெரிய கோவில் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
* சென்ன கேசவப் பெருமாள் இருப்பதால் தான் இந்த ஊருக்கு சென்னை என்று பெயர் வந்ததாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.