என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Sunday, November 28, 2010

தங்கத் தேரை

அமெரிக்க கண்டத்தில் உள்ள கோஸ்டா ரிக்கா நாட்டு காடுகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தத்தித் தத்தி ஓடிக் கொண்டிருந்த அழகான குட்டியூண்டு தேரைதான் Golden Toad எனப்படும் தங்கத் தேரை. பார்ப்பதற்கு கண்ணைப் பறிக்கும் ஆரஞ்சு வண்ணத்தில் பளபளவென மின்னியதால் இதற்கு இந்தப் பெயரை வைத்துவிட்டார்கள். இதில் கூட ஆண் தேரைதான் ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும். பெண் தேரை மஞ்சள் நிறத்தில் கருப்பு புள்ளிகளுடன் காட்சியளிக்கும்.

கோஸ்டா ரிக்கா நாட்டின் மாண்ட்வர்டி (Monteverde) நகரின் மேல் அமைந்திருந்த காடுகளில், இந்த வகை தேரைகள் அதிகளவில் வாழ்ந்து வந்தன. 1966ஆம் ஆண்டு ஜா சாவேஜ் (Jay Savage) என்ற ஆய்வாளர்தான் இப்படி ஒரு அழகிய உயிரினம் காட்டுக்குள் தாவிக் கொண்டிருப்பதை உலகிற்கு அறிவித்தார். முதல்முறை இவற்றைப் பார்த்த ஜா சாவேஜ் தன் கண்களையே நம்பவில்லை. சில தேரைகளைப் பிடித்து யாரோ எனாமல் பெயிண்டில் முக்கி எடுத்து வெளியில் விட்டிருக்கிறார்களோ என்று சந்தேகப்பட்டதாக அவரே தனது குறிப்பில் கூறியிருக்கிறார். திடீரென பார்க்கும்போது காட்டில் சிதறிக் கிடக்கும் தங்க நகைகள் போல் அவை காட்சியளித்ததாக மார்த்தா கிரம்ப் என்ற ஆய்வாளர் தனது புத்தகம் ஒன்றில் எழுதியுள்ளார்.

இந்த வகை தேரைகள் பார்ப்பதற்கு மிகவும் சிறியதாக இருக்கும். ஆண் தேரை 5 சென்டிமீட்டர் நீளம்தான் இருக்கும். பெண் தேரை அதைவிட சற்று கூடுதல் நீளமாக இருக்கும், அவ்வளவுதான். இவை அதிகம் வெளியில் தலைகாட்டாது. நிழல் உலக தாதாக்கள் போல இவை பெரும்பாலும் அண்டர்கிரவுண்டில் தான் இருக்கும். இனப் பெருக்கத்திற்காக ஆண்டில் சில வாரங்கள் மட்டுமே வெளியில் வரும்.

கோஸ்டா ரிக்கா காடுகளில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மழை பெய்யும். இந்த காலகட்டத்தில் ஆண் தேரைகள் கூட்டம் கூட்டமாக வெளியில் வந்து பெண் தேரைகளுக்காக காத்திருக்கும். இனப்பெருக்கம் முடிந்ததும், மழையால் தேங்கியிருக்கும் குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில் முட்டையிட்டுவிட்டு அவை மீண்டும் பாதாள லோகத்திற்கு திரும்பிவிடும். இரண்டு மாதங்கள் கழித்து இந்த முட்டைகளில் இருந்து குட்டிக் குட்டி தங்கக் கட்டிகள் எட்டிப் பார்க்கும்.

1989ஆம் ஆண்டில் இருந்து இவற்றில் ஒரு தேரை கூட யார் கண்ணிலும் படவில்லை. எனவே இவற்றை அழிந்துபோன உயிரினம் என சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பு அறிவித்துவிட்டது. இவற்றின் அழிவிற்கு யார் காரணம் தெரியுமா? நாம் தான். நாம் பூமியை வெப்பமடைய வைத்ததுதான் இந்த குட்டி ஜீவன்களை சாகடித்துவிட்டது.

1987ஆம் ஆண்டு கோஸ்டா ரிக்கா காடுகளில் கடுமையான வெப்பம் நிலவியது. போதுமான மழை இல்லாததால் காடு காய்ந்து நீர்நிலைகள் எல்லாம் வற்றிவிட்டன. தண்ணீர் இல்லாததால் அவற்றால் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க முடியவில்லை. அப்போது தொடங்கிய அதன் அழிவுக் காலம், இரண்டு ஆண்டுகளில் வேகமெடுத்து 1989ஆம் ஆண்டு தங்கத் தேரைகள் முற்றிலுமாக அழிந்துவிட்டன.

பூமிக்கு அடியில் ஒன்றிரண்டு தேரைகளாவது இருக்காதா என்ற எதிர்பார்ப்பில் இன்றும் கோஸ்டா ரிக்கா காடுகளில் ஆய்வாளர்கள் அந்த தங்கப் புதையலைத் தேடி வருகிறார்கள். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்?

Thursday, November 11, 2010

ஜப்பானின் 'எந்திரி'


திரையில் பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட எந்திரனைப் பார்த்து நாம் வியந்து கொண்டிருக்கையில், ஜப்பானியர்கள் உண்மையான எந்திரனை சாரி.. எந்திரியை.. இல்லை.. இல்லை... ஒரு சூப்பர் சுந்தரியை உருவாக்கியிருக்கிறார்கள்.

Geminoid F எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ உண்மையான பெண் போலவே இருக்கிறது. அது மட்டுமல்லாமல் சாதாரண மனிதர்களைப் போல மூச்சு விடுகிறது, கண் சிமிட்டுகிறது, பேசுகிறது. இது அனைத்தையும் விட ஹை-லைட் சயனோரா என்ற நாடகத்தில் நடிக்கிறது.

தீராத நோயால் அவதிப்படும் பெண்ணிற்கு ஆறுதல் கூறி, கவனமுடன் பார்த்துக் கொள்ளும் செவிலித் தாய் போன்ற பாத்திரத்தில் இந்த ரோபோ அம்மணி பிச்சு உதறுகிறார்.

ஒசாகா பல்கலைக்கழகத்தை சேர்ந்த Hiroshi Ishiguro என்ற பிரபல ரோபோ வடிவமைப்பாளர் 12 லட்சம் டாலர்கள் செலவில் இதனை உருவாக்கியுள்ளார். திரைக்கு பின்னால் இருக்கும் நடிகரின் அங்க அசைவுகளை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் இந்த ரோபோவின் இயக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக இதன் உடலில் 12 மோட்டார்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதனைக் கொண்டு இந்த ரோபோ ஒரு தேர்ந்த நடிகரைப் போல நடிக்கிறது. இதற்கு ஜப்பானியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

மொத்தத்தில், இந்த எந்திர சுந்தரியின் வருகையால் டிக்கெட் விற்பனை சக்கை போடு போடுவதால், நாடக ஏற்பாட்டாளர்கள் பயங்கர குஷியில் இருக்கிறார்கள்.

Monday, November 8, 2010

டிரைனோசரஸ் ரெக்ஸ்


ஜூராசிக் பார்க் படங்களில் நாம் பார்த்து வாயைப் பிளந்த டைனோசர்களிலேயே மிகப் பெரியது டிரைனோசரஸ் ரெக்ஸ். மிகப் பெரியது என்றால் எவ்வளவு பெரியது தெரியுமா? சராசரியாக ஒரு டிரைனோசரசின் நீளம் 43 அடி, உயரம் (எழுந்து நிற்கும் போது இடுப்பின் உயரம்) 13 அடி. எடையோ சுமார் 7 மெட்ரிக் டன்கள். இப்படி வஞ்சனை இல்லாமல் ஓங்குதாங்காக வளர்ந்ததால்தான் இதற்கு ஆய்வாளர்கள் டிரைனோசரஸ் ரெக்ஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். டிரைனோசரஸ்களில் நிறைய வகைகள் இருக்கின்றன. இவற்றில் ரெக்ஸ் தான் பெரியது. டிரைனோசரஸ் ரெக்ஸ் என்றால் கொடுங்கோலாட்சி புரியும் பல்லிகளின் அரசன் என்று பொருள்.

சுமார் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்னால் வடஅமெரிக்காவின் மேற்குப் பகுதியில் இவை பெருமளவில் வாழ்ந்து வந்ததாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. டைனோசர் இனம் அழியும்போது கடைசி வரை தாக்குப் பிடித்து வாழ்ந்தது இந்த டிரைனோசரஸ் ரெக்ஸ்தான். இதற்கு இரண்டு குட்டையான கைகளும், இரண்டு நீண்ட கால்களும் இருந்தன. கைகளில் தலா இரண்டு விரல்கள்தான் இருக்கும். ஆதிகாலத்தில் டைனோசர்களுக்கு கைகளில் நான்கு விரல்கள் இருந்தன. ஆனால் காலப்போக்கில் இது மூன்றாகி பின்னர் டிரைனோசரஸ் ரெக்ஸ் காலத்தில் இரண்டாகிவிட்டது.

மிஸ்டர் ரெக்ஸிடம் இருக்கும் மிரட்டல் அம்சங்களில் முக்கியமானது அவரது 5 அடி நீளத் தலை. அசந்தால் ஒரு மனிதனை அப்படியே ஸ்வாகா செய்துவிடுவார். இவரின் உறுதியான பற்கள் டைனோசர் போன்ற மிகப் பெரிய விலங்குகளின் எலும்புகளை கூட பொடிப்பொடியாக்கிவிடும். அசைவமான மிஸ்டர் ரெக்ஸ் தனது உணவை சொந்தமாக வேட்டையாடி சாப்பிடுவாரா, அல்லது பிற விலங்குகளை மிரட்டி அவற்றின் உணவை ஆட்டையை போடுவாரா என்பதில் ஆய்வாளர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. இதேபோல ரெக்ஸால் வேகமாக ஓட முடியுமா என்பதிலும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இதுவரை கிடைத்த கால் எலும்புகளின் தகவல்களைக் கொண்டு, 2007ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் ரெக்ஸ் அதிகப்படியாக மணிக்கு 18 மைல் வேகத்தில்தான் ஓடியிருக்க முடியும் எனத் தெரிய வந்துள்ளது.

டிரைனோசரஸ் ரெக்ஸின் எலும்புகள் உலகம் முழுவதும் பல அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் நியூயார்க், மெக்சிகோ, சிகாகோ ஆகிய இடங்களில் டிரைனோசரஸ் ரெக்சின் எலும்புகளை ஒன்றிணைத்து அதன் முழுமையான எலும்புக்கூட்டை உருவாக்கி வைத்துள்ளனர். இயற்கைப் பேரழிவுகளால் மண்ணில் இருந்து மறைந்துவிட்ட இந்த பிரம்மாண்ட உயிரினத்தை தினமும் ஏராளமானோர் விழிகளில் வியப்பு மிதக்க பார்த்துச் செல்கின்றனர்.

Monday, November 1, 2010

அடுக்குமாடிகளான ஒண்டுக்குடித்தனங்கள்


சென்னை என்றதும் அன்றைய சினிமாக்களில் சென்ட்ரல் ரயில் நிலையத்தையோ, எழும்பூர் ரயில் நிலையத்தையோ காட்டுவார்கள். அடுத்து மவுண்ட் ரோடு, எல்.ஐ.சி என பயணித்து மயிலாப்பூரிலோ, மந்தைவெளியிலோ ஏதாவது ஒரு ஒண்டுக்குடித்தனத்தில் போய் கேமரா நிற்கும். பாலச்சந்தர் படங்கள் காட்டிய ஒண்டுக்குடித்தனங்களை நாம் என்றுமே மறக்க முடியாது.

ஒண்டுக்குடித்தனங்கள் என்பது ஒரு தனி உலகம். அது தனக்கான பிரத்யேக சந்தோஷங்கள், சர்ச்சைகள், சண்டை, சச்சரவுகள், பாசப் பிணைப்புகளைக் கொண்டது. இன்றைய இளசுகள் எதிர்பார்க்கும் பிரைவசி எல்லாம் அன்றைய ஒண்டுக்குடித்தனங்களில் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. புறாக் கூண்டுகள் போன்ற சின்னஞ்சிறிய அறைகளில் மனிதர்கள் அடைந்து கிடந்தார்கள். காலையில் நீண்ட வரிசையில் கழிப்பறை முன் தவிப்புடன் தவம் கிடப்பது முதல் மாலையில் கல்யாணக் கூட்டம் போல முற்றத்தில் அமர்ந்து ஊர்வம்பு பேசுவது வரை ஒண்டுக்குடித்தனம் தனக்கெனத் தனி அடையாளங்களைக் கொண்டிருந்தது.

இப்படி எலிப் பொந்தில் அடைந்து கிடந்தவர்கள் எல்லோருக்கும் கிராமங்களில் நல்ல காற்றோற்றத்துடன் கூடிய வீடுகள் இருந்தன. பசுமையான வயல்வெளி, சிலுசிலுக்கும் தென்றல் காற்று, பச்சைப் பசேலென்ற காய்கறி என அனைத்து சுகங்களையும் விட்டுவிட்டு அரசாங்க வேலை தேடி சென்னைப்பட்டினத்திற்கு வந்த நடுத்தர வர்க்கத்தினர்தான் இவர்கள்.

பட்டினத்தை நோக்கி படையெடுக்கும் இந்த போக்கு 1920களில் தொடங்கி 40களில் உச்சகட்டத்தை எட்டியது. ஆங்கிலேய அதிகாரிகளுக்கு குமாஸ்தா வேலை பார்க்க பட்டினம் வந்து படாதபாடுபட்டது இந்த ஒண்டுக்குடித்தன வர்க்கம். தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்து அணிஅணியாய் வந்து குவிந்த இவர்களால் சென்னை மாநகரம் மூச்சுத் திணறியது. ஒண்டுக்குடித்தனங்கள் வேகமாகப் பெருகின.

ஒரே இடத்தில் கூட்டம் குவியும்போது ஏற்படும் எல்லா அவலங்களும் ஒவ்வொன்றாக அரங்கேறின. போக்குவரத்து அதிகரித்தது, சுற்றுச்சூழல் வெகு வேகமாக மாசுபட்டது, கழிவுநீர் பாதை அடைப்பு ஏற்படுவது தினசரி வாடிக்கையானது. மழைக் காலங்களில் வீடுகளுக்குள் சாக்கடை பாய்ந்தது, தெருக்கள் குளமாயின. மயிலாப்பூர் கொசுக்கள் அலேக்காக தூக்கிக் கொண்டு போன அனுபவம் எல்லாம் நிறைய பேருக்கு ஏற்பட்டது.

மக்கள் மெல்ல மாற்றத்திற்காக ஏங்கத் தொடங்கினர். மாநகரின் நெருக்கடியில் விழி பிதுங்கியவர்கள் தப்பியோட வழி தேடினர். அப்போது நகருக்கு வெளிப்புறத்தில் இருந்த கிராமங்கள் அவர்களின் கண்களில்பட்டன. புறநகரம் என்ற ஒன்று உருவானது. அமைந்தகரை, சைதாப்பேட்டை, மயிலாப்பூர் போன்ற இடங்களில் ஒண்டுக்குடித்தனங்களில் காலத்தைத் தள்ளி களைத்துப் போனவர்கள் தாம்பரம் பக்கமும், திருவள்ளூர் பக்கமும் நகரத் தொடங்கினர். குரோம்பேட்டை, நங்கநல்லூர், தாம்பரம், வண்டலூர், அம்பத்தூர், ஆவடி போன்ற புறநகர்ப் பகுதிகள் அசுர வேகத்தில் வளர்ந்தன. இங்கிருந்த விளைநிலங்கள் எல்லாம் குடியிருப்புகளாக மாறின. விளைநிலங்கள் காலியானதும், ஏரிகளை மனிதர்கள் விழுங்கினார்கள்.

1950களில் தொடங்கிய இந்த இடப்பெயர்ச்சி 70களில் வேகம் பிடித்தது. இந்த காலகட்டத்தில் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்தும் வளர்ச்சி கண்டதால், புறநகர்களில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வந்து செல்வதும் பெரிய காரியமாக தோன்றவில்லை. எனவே ஓய்வு பெற்றவர்கள் மட்டுமின்றி பணியில் இருப்போரும் புறநகரங்களுக்கு இடம்பெறத் தொடங்கினர். நடுத்தர மக்கள் தங்கள் சொந்த வீட்டுக் கனவை புறநகர்களில் நனவாக்கிப் பார்த்தார்கள். இப்படியாக ஒண்டுக்குடித்தனங்கள் மெல்ல மெல்ல குறைந்து கடைசியில் காணாமல் போய்விட்டது.

ஆனால் அது தனது முகத்தை மாற்றிக் கொண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளாக முளைக்கத் தொடங்கியது. ஒண்டுக்குடித்தனங்கள் காலி செய்யப்பட்டு அங்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டன. ஃபிளாட் வாழ்க்கை என்ற மோகம் மக்களிடையே பரவியது. புறநகரையும் இது விட்டு வைக்கவில்லை. இந்த நவீன ஒண்டுக்குடித்தனத்தில் மனிதர்கள் தீவுகளாகிப் போனார்கள். பக்கத்து ஃபிளாட்டில் யார் வசிக்கிறார்கள் என்பதையே தெரிந்துகொள்ளாமல் வாழக் கற்றுக் கொண்டார்கள். ஒண்டுக்குடித்தன காலத்தில் தூர்தர்ஷன் மட்டுமே இருந்தது. தொலைக்காட்சிப் பெட்டியும் ஒரு சில வீடுகளில் மட்டுமே இருந்தது. அதனால் மக்கள் ஒன்றுகூடி நிகழ்ச்சிகளை ரசித்தார்கள், சேர்ந்து சிரித்தார்கள், சேர்ந்தே அழுதார்கள். ஃபிளாட் கலாச்சாரத்தில் ஒரு வீட்டிலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட டிவிக்கள் இருக்கின்றன, நூற்றுக்கணக்கான சேனல்கள் இருக்கின்றன. அடுத்தவர்களுடன் பேசுவதற்கான தேவையோ, வாய்ப்போ குறைந்துவிட்டது.

'அம்மா, உறை மோர் கேட்டாங்க' என்று பக்கத்து வீட்டிற்குள் கிண்ணத்துடன் நுழையும் குழந்தைகள் பிளாட் கலாச்சாரத்தில் காணாமல் போய்விட்டார்கள். வீடியோ கேம்களில் ஆழ்ந்துவிடுவதால் அவர்கள் ஒன்றுகூடி விளையாடுவதும் அரிதாகிவிட்டது. பள்ளி மட்டும் மற்றவர்களுடன் பழகும் வாய்ப்பை அளிக்கிறது. பல சிரமங்கள் இருந்தாலும், விட்டுக் கொடுத்தல், அனுசரித்துப் போதல், மற்றவர்களுக்கு உதவுதல் என ஒண்டுக்குடித்தனங்கள் நமக்கு நிறைய வாழ்க்கைப் பாடங்களை கற்றுக் கொடுத்தன. ஆனால் ஃபிளாட்டுகள் சுயநலம் தவறு அல்ல என பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றன.

ஒண்டுக்குடித்தனங்களைப் பார்த்த சென்னை, இப்போது ஃபிளாட் காடுகளாக காட்சியளிக்கிறது. அடுத்த மாற்றம் என்ன? எப்போது?