என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Friday, July 12, 2013

மெட்ராசின் கதை

இன்று நாம் சென்னை என்று அழைக்கும் இந்த நகரம், சுமார் 375 ஆண்டுகளுக்கு முன் வங்கக் கடலோரம் ஒரு சின்னஞ்சிறிய கிராமமாக இருந்தது. கடற்கரை அருகில் குட்டி குட்டி மீனவக் குப்பங்கள் இருந்தன. தங்களின் கம்பெனிக்காக இடம் தேடி அலைந்த கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதியான பிரான்சிஸ் டேவின் கண்ணில் இந்த பகுதி தென்பட்டதில் இருந்துதான் மெட்ராஸ் என்ற பிரம்மாண்ட நகரத்தின் கதை தொடங்குகிறது.
1673இல் ஜார்ஜ் கோட்டையின் வரைபடம்

இந்த பகுதியை ஆண்ட நாயக்க மன்னரின் பிரதிநிதியிடம் இருந்து வியாபாரம் செய்ய அனுமதி பெற்ற கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள், கடற்கரையோரம் கோட்டை கட்டி குடியேறினர். 1639இல் கட்டப்பட்ட அந்த கோட்டைதான் மெட்ராசின் வளர்ச்சிக்கு அஸ்திவாரம் போட்டது. கோட்டைக்குள் ஆங்கிலேய குடியிருப்புகள் வந்ததும், கோட்டையைச் சுற்றி ஒரு சிறிய பட்டணமும் உருவானது. ஆங்கிலேயர்களுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் உள்ளூர் மக்கள் இங்கு குடியேறினர்.

கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் வியாபாரம் செய்வதற்காகத்தான் இங்கு வந்தனர் என்பதால் அவர்களோடு வாணிபம் செய்ய நிறைய உள்ளூர் வியாபாரிகள் கோட்டையை சுற்றிச்சுற்றி வந்தனர். இதனால் கோட்டைக்கு உள்ளும், புறமும் நடமாட்டம் அதிகரித்தது. 1646இல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, அப்போதைய மெட்ராசின் ஜனத்தொகை சுமார் 19 ஆயிரமாக இருந்தது.
அந்தக்கால எஸ்பிளனேட் பகுதி

கம்பெனியின் வியாபாரம் வேகமாகப் பெருக, அதற்கேற்ப ஆட்களின் போக்குவரத்தும் அதிகரித்தது. எனவே கோட்டையின் எல்லையை விஸ்தரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமானது. கோட்டைக்கு உள்ளேயும், வெளியேயும் வெள்ளையர் நகரம், கருப்பர் நகரம் என இரண்டு நகரங்கள் உருவாயின.

கம்பெனியின் வியாபாரம் பெரும்பாலும் துணி சார்ந்ததாக இருந்ததால், அதற்கு தேவையான ஆட்களை மெட்ராசில் குடியேற்றம் செய்யும் பணிகள் தொடங்கின. நெசவாளர்களை ஊக்குவிப்பதற்காக கம்பெனி செலவிலேயே வீடு கட்டிக் கொடுக்கப்பட்டு, அங்கேயே பரம்பரை பரம்பரையாக வாழ அனுமதியும் வழங்கப்பட்டது. இதனால் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் மெட்ராஸ் நோக்கி படையெடுத்தனர். இப்படித்தான் வண்ணாரப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, காலடிப்பேட்டை போன்ற புதிய பகுதிகள் உருவாகின.

ஏற்கனவே இருந்த எழும்பூர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் போன்ற கிராமங்கள் காலப்போக்கில் சென்னையுடன் இணைக்கப்பட்டன. மெட்ராஸ் மெல்ல ஒரு நகரமாக உருமாற ஆரம்பித்ததும், துணி வியாபாரத்தை தாண்டி மற்ற வியாபாரங்களும் சூடிபிடித்தன. கப்பல் போக்குவரத்து அதிகரித்ததால் துறைமுகம் கட்டப்பட்டது. உலகின் மற்ற பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசி, ரயில், சினிமா போன்ற விஷயங்கள் அடுத்த சில ஆண்டுகளிலேயே மெட்ராசிற்கு அறிமுகமாயின. மே 7, 1895இல் சென்னை நகர வீதிகளில் முதன்முறையாக எலெக்ட்ரிக் டிராம்கள் ஓடின. இந்தியாவிலேயே எலெக்ட்ரிக் டிராம் ஓடுவது அதுதான் முதல்முறை. அந்த சமயத்தில் லண்டன் போன்ற மாநகரங்களில் கூட எலெக்ட்ரிக் டிராம்கள் அறிமுகமாகவில்லை.
1905இல் அண்ணாசாலை

மெட்ராசை ஆண்ட தாமஸ் மன்றோ போன்ற ஆளுநர்கள், இங்கு வந்து குடியேறிய தாமஸ் பாரி, பெட்ரூஸ் உஸ்கான் போன்ற பெரு வணிகர்கள், பச்சையப்ப முதலியார், சர் பிட்டி தியாகராயர் போன்ற உள்ளூர் பெரிய மனிதர்கள் முதல் சென்னைக்கென பிரத்யேகமான மெட்ராஸ் பாஷையை அறிமுகப்படுத்திய சாதாரண ரிக்ஷாக்காரர்கள் வரை எத்தனையோ பேர் சேர்ந்து செதுக்கியதுதான் இன்றைய சென்னை. இந்த நகரம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதல்ல. காலத்தின் தேவை கருதி தன்னைத்தானே விஸ்தரித்துக் கொண்டது.

மெட்ராசின் பழமையைப் பறைசாற்றியபடி நூற்றாண்டுகள் கடந்து நின்றுகொண்டிருக்கும் ஒவ்வொரு இந்தோ சராசனிக் பாணி கட்டடத்திற்கு பின்னும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. ஒவ்வொரு சாலைக்கு அடியிலும் ஒரு வரலாறு நிலத்தடி நீராய் ஈரம் மாறாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. கால ஓட்டத்தில் எத்தனையோ மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு இன்றும் இளமை மாறாமல் அதே துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சென்னை நகரத்திடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன.

மொத்தத்தில் மூன்று நூற்றாண்டுகளைக் கடந்த இந்த மாநகரத்தின் கதை, அனைவருக்குமான ஒரு சிறந்த வாழ்வியல் பாடம்.

நன்றி - தினத்தந்தி

கடந்து வந்த பாதை

* 1640 - புனித ஜார்ஜ் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது
* 1688 - மெட்ராஸ் மாநகராட்சி உதயமானது
* 1693 - எழும்பூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை ஆகிய ஊர்கள் மெட்ராசுடன் இணைக்கப்பட்டன
* 1746 - மெட்ராஸ் பிரெஞ்சுக்காரர்கள் வசம் சென்றது
* 1749 - மீண்டும் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
* 1768 - ஆற்காடு நவாப் சேப்பாக்கம் அரண்மனையைக் கட்டினார்
* 1772 - நகரத்தின் முதல் குடிநீர் திட்டமான ஏழுகிணறு திட்டம் ஆரம்பமானது
* 1785 - முதல் தபால் நிலையம் செயல்படத் தொடங்கியது
* 1841 - ஐஸ்கட்டிகளை சேமித்து வைப்பதற்காக ஐஸ் ஹவுஸ் கட்டப்பட்டது
* 1856 - முதல் ரயில் ராயபுரத்தில் கிளம்பி ஆற்காடு சென்றது
* 1882 - சென்னையில் முதல் டெலிபோன் ஒலித்தது
* 1889 - உயர்நீதிமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது
* 1895 - மெட்ராசில் டிராம் வண்டிகள் ஓடத் தொடங்கின
* 1910 - மெட்ராஸ் வானில் முதல் விமானம் பறந்தது

* 1947 - புனித ஜார்ஜ் கோட்டையில் இந்திய தேசியக் கொடி ஏறியது

Saturday, July 6, 2013

ஒய்.எம்.சி.ஏ

பிரபல விளையாட்டு மைதானங்களுக்கு நிகராக எப்போதும் பிசியாக இருக்கும் மைதானம் ஒன்று சென்னையில் உள்ளதென்றால் அது ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானமாகத்தான் இருக்க முடியும். அரசியல் விழாக்களுக்கும், பொருட்காட்சி நிகழ்வுகளுக்கும் ஏற்ற இடமாகத் திகழும் இந்த மைதானத்திற்கு பின்னே ஒரு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது.
ஒய்.எம்.சி.ஏ கட்டடம்

மெட்ராஸ் ஒய்.எம்.சி.ஏ., டேவிட் (Mr.David McConaughy) என்பவரால் 1890ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் ஒய்.எம்.சி.ஏ இயக்கம் அதற்கும் 50 ஆண்டுகளுக்கு முன்பே இங்கிலாந்தில் உதயமாகிவிட்டது. தொழிற்புரட்சிக்கு பிந்தைய இங்கிலாந்தில், துணி விற்பனை நிறுவனம் ஒன்றில் உதவியாளராக இருந்த 21 வயதான ஜார்ஜ் வில்லியம் என்பவரின் முயற்சியால் உருவானதுதான் இந்த இயக்கம். இவர் தன்னுடன் வேலை செய்யும் 12 ஊழியர்களை சேர்த்துக் கொண்டு 1844இல் லண்டனில் பைபிள் வகுப்புகளைத் தொடங்கினார். இளம் கிறிஸ்தவர்களிடையே நல்லொழுக்கங்களை போதிப்பதே இந்த வகுப்பின் நோக்கமாக இருந்தது. தற்போது 125க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் நாலரை கோடி உறுப்பினர்களை கொண்டிருக்கும் ஒய்.எம்.சி.ஏ (YMCA - Young Men’s Christian Association) இப்படிதான் கருவாகி உருவானது.

இந்தியாவில் ஒய்.எம்.சி.ஏ இயக்கம் 1857இல் கல்கத்தாவில்தான் காலூன்றியது. இதைத் தொடர்ந்து கொழும்பு, திருவனந்தபுரம், பம்பாய், மெட்ராஸ் என ஆசியாவின் பல பகுதிகளிலும் ஒய்.எம்.சி.ஏ ஆரம்பிக்கப்பட்டது. அந்த வரிசையில் 1890இல் மெட்ராஸ் வந்த டேவிட் என்ற இளம் அமெரிக்கர், இங்கு ஒய்.எம்.சி.ஏ இயக்கத்தை தொடங்கினார். அடுத்த ஆண்டு இவர் மேற்கொண்ட முயற்சியால் இந்தியாவில் உள்ள ஒய்.எம்.சி.ஏ அமைப்புகளின் கூட்டம் சென்னையில் கூடியது. ஒய்.எம்.சி.ஏ.வின் தேசிய கவுன்சிலை உருவாக்குவது என இதில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இந்த கவுன்சிலின் தலைமையகம் முதல் ஓராண்டு காலம் மெட்ராசில் இருந்து செயல்பட்டது. பின்னர் இது கல்கத்தாவிற்கு மாற்றப்பட்டது.

மெட்ராஸ் ஒய்.எம்.சி.ஏ.விற்கென பாரிமுனையின் எஸ்பிளனேட் பகுதியில் 1895இல் ஒரு பிரம்மாண்ட கட்டடம் கட்டும் பணி தொடங்கியது. ஜெய்ப்பூர் அரண்மனை பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த கண்கவர் கட்டடத்தை ஹார்டிங் (G.S.T Harding) என்பவர் வடிவமைத்துக் கொடுத்தார். இதன் கட்டுமானப் பணிக்காக ஜான் வானாமேக்கர் என்பவர் அந்த காலத்திலேயே 40,000 டாலர் நன்கொடை அளித்தார். இந்த ஜான், அப்போது அமெரிக்காவின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாக இருந்தார்.

பைபிள் வகுப்புகள், பிரசங்கங்கள் என கிறிஸ்தவ செயல்பாடுகளில் மட்டும் ஒய்.எம்.சி.ஏ கவனம் செலுத்தி வந்த நிலையில், 1919இல் மெட்ராஸ் வந்து சேர்ந்தார் ஹாரி க்ரோ பக் (Harry Crowe Buck). அடுத்த ஆண்டே எஸ்பிளனேட் கட்டடத்தில் இவர் ஒரு உடற்பயிற்சி பள்ளியை ஆரம்பித்தார். ஆரம்பிக்கப்பட்ட புதிதில் இந்த பள்ளியில் வெறும் 5 மாணவர்கள் மட்டுமே பயின்றனர். அந்த மாணவர்களுக்கு பக் அளித்த சிறப்பான பயிற்சிகளைப் பார்த்த மெட்ராஸ் அரசு, அவரை அரசின் உடற்கல்வி ஆலோசகராக 1922இல் நியமித்தது.

1924இல் இந்தியாவில் இருந்து ஒலிம்பிக்கில் பங்கேற்கச் சென்ற அணியில், ஒய்.எம்.சி.ஏ பள்ளியின் மாணவர்களும் இடம்பிடித்தனர். பாரீஸ் நகரில் நடைபெற்ற இந்த ஒலிம்பிக் போட்டியில் பக் தான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார். பள்ளி வேகமாக வளரத் தொடங்கியதால் எஸ்பிளனேட் இடம் போதுமானதாக இல்லை. எனவே 1928இல் ராயப்பேட்டையில் உள்ள வெஸ்லி பள்ளி மைதானத்திற்கு உடற்பயிற்சிக் கல்லூரி இடம்மாறியது. காலப்போக்கில் அந்த இடமும் போதுமானதாக இல்லாததால், அடையாறு ஆற்றங்கரையில் சைதாப்பேட்டையில் ஒரு பரந்து விரிந்த இடத்தை பக் தேர்வு செய்தார். இப்படித்தான் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சிக் கல்லூரி உருவானது.

65 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்திலேயே பக்கும் குடும்பத்துடன் குடியேறி விட்டார். ஆரம்ப நாட்களில் வெறும் கீற்றுக் கொட்டகைகளில் வகுப்புகள் நடத்தப்பட்டன. பின்னர் 1933இல் அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் சர் ஜார்ஜ் ஸ்டான்லி அடிக்கல் நாட்ட, கட்டடங்கள் கட்டும் பணி தொடங்கியது. காலப்போக்கில் இந்த உடற்பயிற்சிக் கல்லூரியில் பெண்களும் சேர ஆரம்பித்தனர். ஆசியாவின் பழமையான இந்த உடற்பயிற்சிக் கல்லூரியை வளர்ப்பதற்காக தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த ஹாரி க்ரோ பக் 1943, ஜூலை 24 அன்று தனது கடைசி மூச்சு வரை இந்த வளாகத்தில்தான் இருந்தார். அவரது நினைவிடம் இன்றும் நந்தனம் வளாகத்தில் இருக்கிறது.

ஒய்.எம்.சி.ஏ.வைப் போலவே பெண்களுக்கென தொடங்கப்பட்ட ஒய்.டபிள்யூ.சி.ஏ (YWCA - Young Women's Christian Association) ஆரம்ப நாட்களில் மெட்ராஸ் கிறிஸ்தவ மகளிர் அமைப்பு என அழைக்கப்பட்டது. இங்கு பெண்களுக்கான பைபிள் வகுப்புகள், தையல் பயிற்சிகள், தேநீர் விருந்துகள் நடைபெற்றன. இதே காலகட்டத்தில் மன்னரின் மகள்கள் (King's Daughters) என்ற அமைப்பும் மெட்ராசில் செயல்பட்டது. மெட்ராஸ் ஒய்.எம்.சி.ஏ.வைத் தொடங்கிய டேவிட்டின் மனைவி லில்லி இந்த அமைப்பை ஏற்படுத்தினார். பின்னர் இந்த இரு அமைப்புகளும் 1892இல் ஒருங்கிணைக்கப்பட்டு ஒய்.டபிள்யூ.சி.ஏ உருவானது.
ஒய்.டபிள்யூ.சி.ஏ

ஒய்.எம்.சி.ஏ, ஒய்.டபிள்யூ.சி.ஏ ஆகிய இரண்டும் கிறிஸ்தவ இளம்தலைமுறையினருக்காக ஆரம்பிக்கப்பட்டாலும், பின்னாட்களில் அனைவரும் பயன்பெறத்தக்க வகையில் பல்வேறு சமூக மேம்பாட்டு செயல்களில் முத்திரை பதித்தன. மொத்தத்தில் மெட்ராஸ் வரலாற்றின் சில பயனுள்ள பக்கங்களை ஒய்.எம்.சி.ஏ தனது சேவையால் நிரப்பி இருக்கிறது என்பதே நிஜம்.

நன்றி - தினத்தந்தி

* மாற்றுத்திறனாளி மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்த, முதன்முதலில் நடவடிக்கை எடுத்த கல்லூரிகளில் ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சிக் கல்லூரி மிக முக்கியமானது.

* பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ரம்மியமான சூழலில் அமைந்துள்ள கிளைவ் இல்லத்தில்தான் ஒய்.டபிள்யூ.சி.ஏ தற்போது செயல்பட்டு வருகிறது.


Sunday, June 30, 2013

மெட்ராஸ் சாலைகள்

எந்த ஒரு நகரின் வளர்ச்சிக்கும் அங்கிருக்கும் சாலைகள் மிக முக்கிய காரணமாக இருக்கின்றன. மெட்ராசும் இதற்கு விதிவிலக்கல்ல. மெட்ராசில் ஆங்கிலேயர்கள் காலடி வைத்து சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சாலைகள் முறையாக அமைக்கப்பட்டன. அதுவரை மனிதர்கள் நடந்து செல்லவும், மாட்டு வண்டிகளில் செல்லவும் போதுமான அளவில்தான் சாலைகளின் அகலமும், தரமும் இருந்தன.

இன்று வாகனங்கள் மின்னல் வேகத்தில் விரையும் மவுண்ட் ரோடு எனப்படும் அண்ணா சாலையும், பூந்தமல்லி நெடுஞ்சாலையும் ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பிருந்தே மக்கள் பயன்பாட்டில் இருந்தன. மெட்ராஸ் என்ற நிலப்பகுதியை சுற்றியிருந்த திருவொற்றியூர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி போன்ற கிராமங்கள் பல நூற்றாண்டுகளாக இருக்கின்றன என்பதற்கு இங்குள்ள புராதன கோவில்களே சாட்சி. இங்குள்ள மக்கள் செங்கல்பட்டு, பூந்தமல்லி உள்பட தொண்டை மண்டலத்தின் பிற பகுதிகளுக்கு செல்ல இந்த சாலைகளைத் தான் பயன்படுத்தினர். இருந்தாலும் சாதாரண புறவழிச்சாலையாக இருந்த இவை, மாநகரின் முக்கிய சாலைகளாக பரிணாம வளர்ச்சி அடைந்தது ஆங்கிலேயர்களின் வருகைக்கு பிறகுதான்.
மவுண்ட் ரோடு 1905இல்

1856இல் பொதுப்பணித்துறை வேலைகளை கவனிக்க ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷனின் அறிக்கை அப்போதைய மெட்ராஸ் சாலைகளின் நிலை எப்படி இருந்தது என்பதை தெளிவாகக் கூறுகின்றன.

'இங்கிலாந்தைவிட இரண்டரை மடங்கு அதிக நிலப்பரப்பும், மக்கள்தொகையும் கொண்ட இந்த ராஜதானிக்கு, 3400 மைல்களுக்குத்தான் தெருக்கள் இருக்கின்றன. அவை கூட உண்மையில் சரியாக அமைக்கப்பட்ட வீதிகள் அல்ல. வெறும் கை வண்டி அல்லது மாட்டு வண்டிகள் செல்லக்கூடிய வழிகள்தான். கோடைகாலத்தில் தரை கெட்டியாக இருக்கும்போது மட்டும்தான் அவற்றை பயன்படுத்த முடியும். பாலங்களும் சரியாக கட்டப்படவில்லை. இவை அனைத்துமே மராமத்து பார்க்க வேண்டியவை' என்று அந்த கமிஷன் தெரிவித்திருக்கிறது.

இந்த கமிஷன் வருவதற்கு முன்பே மவுண்ட் ரோடு வந்துவிட்டது. ஜார்ஜ் கோட்டையில் இருந்து செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரை சுமார் 15 கிலோ மீட்டர்களுக்கு நீ......ண்டு கிடக்கும் இந்த சாலை காலப்போக்கில் அசுர வளர்ச்சி அடைந்தது. ஏசுநாதரின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையார், கிபி 72இல் செயிண்ட் தாமஸ் மவுண்டில்தான் கொல்லப்பட்டார். இதனையடுத்து கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த மலை வழிபாட்டுத் தலமாக இருந்து வருகிறது. எனவே மெட்ராஸ் வந்த ஆங்கிலேயர்களும் கூட்டம் கூட்டமாக இங்கு வந்து வழிபடத் தொடங்கினர்.
போக்குவரத்து நெரிசல் இல்லாத மவுண்ட் ரோடு

இதனிடையே 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் மெட்ராஸ் ஆளுநர்கள் கிண்டியில் உள்ள அரசினர் இல்லத்தில் அடிக்கடி வந்து தங்க ஆரம்பித்ததால், இந்த பகுதியில் போக்குவரத்து அதிகரித்தது. எனவே சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக மவுண்ட் ரோடு சீரமைக்கப்பட்டது. அரசு மட்டுமின்றி சில தனி நபர்களும் மவுண்ட் ரோட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளனர்.

மெட்ராசில் அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய ஆர்மீனிய வணிகரான பெட்ரூஸ் உஸ்கான், செயிண்ட் தாமஸ் தேவாலயத்திற்கு வருபவர்களின் வசதிக்காக தனது சொந்த செலவில் அடையாற்றின் குறுக்கே 1726இல் ஒரு பாலத்தை கட்டிக் கொடுத்தார். அதுதான் அடையாறு மர்மலாங் பாலம். பின்னர் இந்த பாலம் சேதமடைந்துவிட்டதால் 1950-களில் இதன் அருகிலேயே தற்போது இருக்கும் மறைமலை அடிகள் பாலம் கட்டப்பட்டது.

இந்தியாவின் தற்போதைய வரைபடத்திற்கு ஆணிவேராக இருந்ததே மவுண்ட் ரோடுதான். காரணம், இந்தியாவின் நீள அகலத்தை அளப்பதற்காக 1802ஆம் ஆண்டு தொடங்கிய 'இந்தியாவின் பெரும் முக்கோணவியல் அளவீடு' (The Great Trigonometrical Survey of India) பணிக்கு மவுண்ட் ரோட்டில்தான் பிள்ளையார் சுழி போடப்பட்டது. ஜார்ஜ் கோட்டையை செயிண்ட் தாமஸ் மவுண்டுடன் இணைக்கும் 7 மைல் நீளம் கொண்ட நேர்க் கோட்டை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த வேலை ஆரம்பமானது.

மெட்ராசின் மற்றொரு முக்கிய சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை. சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களின் வருகைக்கு பிறகு இந்த சாலையின் பயன்பாடு அதிகரித்தது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்திறங்கும் பயணிகள் தங்குவதற்காக ராஜா சர் ராமஸ்வாமி முதலியார் சத்திரம், அப்துல் ஹகீம் சாகிப் சத்திரம் (சித்திக் செராய்) ஆகியவை இங்கு கட்டப்பட்டன. இந்த இரண்டு சத்திரங்களும் இன்று வணிக வளாகமாக உருமாறி இருக்கின்றன. சித்திக் செராயில் ஒரு பெரிய மசூதி இருக்கிறது.
பாரிமுனை 1890இல்

இவை மட்டுமின்றி விக்டோரியா ஹால், மூர் மார்க்கெட், ரிப்பன் மாளிகை, அரசு பொது மருத்துவமனை, தினத்தந்தி அலுவலகம், பச்சையப்பன் கல்லூரி, ஆண்ட்ரூஸ் தேவாலயம், ஆங்கிலோ-இந்தியன் பள்ளி என பல முக்கிய கட்டடங்கள் இந்த சாலையின் பயன்பாட்டை அதிகரித்தன.

ஆரம்ப நாட்களில் கோட்டைக்குள்ளேயே இருந்து மூச்சு முட்டிய ஆங்கிலேயர்கள், பின்னர் மெல்ல வெளியில் வந்து பெரிய பெரிய தோட்ட வீடுகளைக் கட்டி குடியேற ஆரம்பித்தனர். தேனாம்பேட்டை, வேப்பேரி, புரசைவாக்கம், சேத்துபட்டு என அவர்கள் வீடு கட்டிய இடங்களில் எல்லாம் சாலைகள் முளைத்தன. இப்படித்தான் இன்றைய சென்னையின் பல சாலைகள் உருப்பெற்றன.

அறிஞர்களின் சிலைகள் வரிசை கட்டி நிற்கும் பிரம்மாண்டமான கடற்கரைச் சாலையில் தொடங்கி சென்னையின் சின்ன சின்ன தெருக்கள் வரை ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. இந்த கதைகளை சுமந்தபடி மாட்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும் ஓடிக் கொண்டிருந்த சாலைகளில், டிராம்கள் அறிமுகமாகி ஓடி ஓய்ந்துவிட்டன. அடுத்து சாலைகளை ஊடறுத்து ஓட மெட்ரோ ரெயில்கள் தயாராக இருக்கின்றன. மொத்தத்தில் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் இணைத்தபடி, வரலாறுகளால் நிறைந்து கிடக்கின்றன மெட்ராஸ் சாலைகள்.

நன்றி - தினத்தந்தி

* எழும்பூர் பாந்தியன் சாலையை உள்ளடக்கிய 43 ஏக்கர் நிலம்
1778இல் ஹால் பிளம்மர் என்பவருக்கு மெட்ராஸ் அளுநரால் வழங்கப்பட்டது.

* நுங்கம்பாக்கத்தில் ஒருகாலத்தில் மாட்டு வண்டிகள் பயணிக்கும் ஒற்றையடி பாதையாக இருந்ததுதான் ஸ்டெர்லிங் ரோடு. சாதாரண சிப்பாயாக இருந்து, படிப்படியாக முன்னேறி செஷன்ஸ் நீதிபதியாகிவிட்ட ஸ்டெர்லிங்கின் (L. K. Sterling) நினைவாக இந்த பெயர் சூட்டப்பட்டது. இப்படி பல ஆங்கிலேயர்களின் நினைவுகளைத் தாங்கியபடி நிறைய சாலைகள் இன்றும் இருக்கின்றன.


Sunday, June 23, 2013

கந்தசாமி கோயில்

போக்குவரத்து நெரிசல்மிக்க இன்றைய சென்னையிலும் அமைதி தவழும் சில இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் முக்கியமானது பாரிமுனையில் உள்ள கந்தகோட்டம் எனப்படும் கந்தசாமிக் கோயில்.
கந்தசாமி கோயில்

பாரிமுனை ராசப்ப செட்டித் தெருவில் அமைந்துள்ள இந்த கோயில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. வேலூர் மாரி செட்டியார் என்பவர்தான் இந்த கோயில் உருவாகக் காரணமானவர். கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தகராக இருந்த மாரி செட்டியார், ஒரு தீவிர முருக பக்தர். அவர் திருப்போரூரில் உள்ள முருகனை அடிக்கடி சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். குறிப்பாக கிருத்திகை நாளில் கண்டிப்பாக திருப்போரூரில் இருப்பாராம்.

அப்படி ஒருமுறை அவர் தனது நண்பர் கந்தப்பா ஆசாரியுடன் திருப்போரூர் சென்றபோது, ஒரு இடத்தில் ஓய்வெடுத்தாராம். அப்போது தெய்வத்தின் அருளால் அவர்களுக்கு அங்கிருந்த வேப்ப மரத்தின் அடியில் இருந்த புற்றுக்குள் இருந்து ஒரு முருகன் சிலை கிடைத்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அந்த சிலையை எடுத்துவந்து ஏற்கனவே முத்தையால்பேட்டையில் பிள்ளையார் கோயில் இருந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தனர். இந்த சம்பவம் 1673ஆம் ஆண்டு நடைபெற்றதாக ஆங்கிலேயே குறிப்புகளில் காணப்படுகிறது.

இதனிடையே இந்த கோயில் இங்கு எப்படி வந்தது என்பதற்கு கிட்டத்தட்ட இதேபோல ஒரு தல வரலாறு கூறப்படுகிறது. அதன்படி, இந்த பகுதியில் வசித்த சிவாச்சாரியார் ஒருவர் அருகிலுள்ள திருப்போரூர் தலத்திற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம்அவருடன் சில ஆச்சார்யார்களும் வந்து கொண்டிருந்தனர்வழியில் பலத்த மழைபெய்துவெள்ளம் பெருக்கெடுத்ததால் அவர்களால் ஊருக்கு திரும்ப முடியவில்லைஎனவே, வழியில் ஓர் மடத்தில் தங்கினர்
முத்துக்குமார சுவாமி

அன்றிரவு சிவாச்சாரியாரின் கனவில் காட்சிதந்த முருகன்தான் அருகிலுள்ள புற்றில் குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு கோயில் கட்டும்படியும் கூறினாராம். கண்விழித்த சிவாச்சாரியார் அங்கிருந்த புற்றில் முருகன், சிலை வடிவில் இருந்ததைக் கண்டார். அந்த சிலையை எடுத்துக் கொண்டுஊருக்கு புறப்பட்டார்வழியில் ஓரிடத்தில் சிலையை வைத்துவிட்டு சிறிதுநேரம் ஓய்வெடுத்தனர்பின் சிலையை எடுக்க முயன்றபோது முடியவில்லைஎனவேஅந்த இடத்திலேயே முருகனுக்கு கோயில் கட்டப்பட்டது. சுவாமி இந்த இடத்தில் தானாக விரும்பி நின்றவர் என்பதால் பீடம் இல்லாமல் தனித்துதரையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் என்கிறார்கள்இதற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை.

சரி, மீண்டும் மாரி செட்டியாரிடம் வருவோம். தான் கொண்டு வந்த சிலையை வைப்பதற்காக மாரி செட்டியார் ஒரு சிறிய கோயிலைக் கட்டினார். இதற்காக அவர் தனது மனைவியின் நகைகளை அடகு வைத்துக் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. கோயிலுக்கான இடம் மட்டும் முத்தையாலு நாயக்கரால் கொடுக்கப்பட்டதாம்.

சுமார் 100 ஆண்டுகள் கடந்த பின்னர் 1780ஆம் ஆண்டில் இந்த கோயில் பதினெண் செட்டியார்களால் திருத்தி அமைக்கப்பட்டது. இன்னும் 100 ஆண்டுகள் கடந்த பிறகு, 1860இல்தான் இந்த கோயில் நன்கு விஸ்தரிக்கப்பட்டு கற்கோயிலாக மாற்றப்பட்டது. அதுவரை ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகள், இது சாதாரண செங்கற் கோயிலாகத்தான் இருந்தது. 1869ஆம் ஆண்டு வையாபுரி செட்டியார் என்பவர் இந்த கோயிலுக்கு ரூ66,000 நன்கொடையாக வழங்கினார். அவர் இந்த கோயிலுக்காக ஒரு தேரும் செய்ய வைத்ததாக நரசய்யா தனது மதராசபட்டினம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

1880ஆம் ஆண்டு அக்கம்மாபேட்டை கோவிந்த செட்டியார் என்பவர் நாராயண செட்டியாருடன் இணைந்து கோயிலின் அருகில் இருந்த நிலத்தை கோயிலுக்காக அளித்தார். அந்த நிலத்தில் தான் வசந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பின்னர் 1901ஆம் ஆண்டு காளி ரத்தின செட்டியார் என்பவர் ரூ.50,000 நன்கொடை கொடுத்திருக்கிறார். அந்த காசில்தான் கோயிலின் ராஜகோபுரம் கட்டப்பட்டது. இதுமட்டுமின்றி கோயிலுக்காக காளி ரத்தினம் செட்டியார் ஒரு கிண்ணம் நிறைய வைரங்களும், விலை உயர்ந்த கற்களும் கொடுத்தாராம்.

இந்த கோயிலுக்கும் வள்ளலாருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வள்ளலார் சென்னையில் வசித்த போது தமிழ் கற்பதற்காக இந்த கோயிலுக்கு அருகில் உள்ள சபாபதி முதலியார் வீட்டுக்கு வருவார். பல நேரங்களில் தமிழ் கற்கப் போகாமல் முருகனைத் தரிசிக்கக் கோயிலிலேயே தங்கிவிடுவாராம். மன முருகிப் பாடலும் பாடுவார்.

திருவருட்பாவில் இடம்பெற்றுள்ள ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்என்ற பாடலில் கந்த கோட்ட முருகனைப் புகழ்ந்து பாடியுள்ளார் வள்ளலார். தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளேஎன்று கந்த கோட்டத்து முருகனை புகழ்ந்து பாமாலை சூட்டியுள்ளார். வள்ளலாரைப் போன்றே சிதம்பரசாமிபாம்பன் குமரகுருபரதாச சுவாமிகள்தண்டபாணி சுவாமிகள் போன்றோரும் இங்கு வந்து பாடியுள்ளனர்.

இந்த கோயிலில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்பதற்காக, முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்த காலத்திலேயே மெட்ராசின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்களாம். கந்த சஷ்டி, வைகாசி வசந்த உற்சவம், ஆடிக் கிருத்திகை, பங்குனி உத்திரம் போன்றவையும் இங்கு மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.
கோயில் குளம்

8 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த கோயிலில் சரவண பொய்கை என்ற பெயரில் ஒரு அழகிய குளம் இருக்கிறது. இது கட்டப்பட்ட காலத்தில் இருந்து இதில் உள்ள நீரின் அளவு கூடாமல், குறையாமல் அப்படியே இருப்பதாக சொல்கிறார்கள். இந்த குளத்தில் கை நிறைய பொறியை அள்ளி வீசினால், மீன்கள் கூட்டம் கூட்டமாக வந்து பொறியை கவ்விக் கொண்டு மின்னல் வேகத்தில் நீருக்குள் மறைகின்றன. இங்கு ஒவ்வொரு முறை வரும்போதும், அந்தக் கால மெட்ராஸ் பற்றிய எனது நினைவுகளும் இந்த மீன்களைப் போலவே மூளை நியூரான்களில் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு ஒரே நேரத்தில் பாயும் பரவசத்தை அனுபவிக்க முடிகிறது.

நன்றி - தினத்தந்தி

* உற்சவர் முத்துக்குமார சுவாமி தனிக்கொடிமரத்துடன் உள்ளார்இவர் முகத்தில் புள்ளிகளுடன் மிகவும் அழகு பொருந்தியவராக காட்சி தருகிறார்விசேஷ காலங்களில் இவருக்கே பிரதான பூஜை நடத்தப்படுகிறது

* தோல் நோய் மற்றும் கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சரவணப் பொய்கையில் வெல்லம் கரைக்கின்றனர்


Friday, June 14, 2013

ராயபுரம் நெருப்புக் கோவில்

தனிமனிதத் தேவைகள் காரணமாக எழும் சில விஷயங்கள் வரலாற்றில் நின்று நிலைத்து விடுகின்றன. அப்படி மெட்ராசில் பார்சி இனத்தவரின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்வதுதான் ராயபுரத்தில் இருக்கும் நெருப்புக் கோவில்.
ராயபுரம் நெருப்புக் கோவில்

உலகின் பழமையான இனங்களில் பார்சி இனம் முக்கியமானது. கி.மு. 1200க்கு முன்பே இந்த இனம் தோன்றியதாகக் கூறப்படுகிறது. பாரசீகத்தை (தற்போதைய ஈரான், ஈராக்) பூர்வீகமாகக் கொண்ட இவர்கள், ஜொராஷ்டிரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளை அடுத்து, இவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் புலம்பெயரத் தொடங்கினர்.

அந்த வகையில் 1795ஆம் ஆண்டில் மெட்ராஸ் மண்ணில் பார்சிகள் முதன்முதலில் காலடி எடுத்து வைத்தனர். விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில் சிறு குழுவாக இருந்த அவர்கள், ராயபுரத்தில் தேவாலயத்திற்கு எதிரில் இடம் வாங்கி, வீடு கட்டிக் குடியேறினர். அவர்களைத் தொடர்ந்து மேலும் சில பார்சிகள் மெட்ராஸ் வந்தனர். அவர்களில் ரஸ்தோம்ஜி, நவ்ரோஜி ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு நிறுவனத்தை தொடங்கினர். அதற்காக அப்போதைய ஜார்ஜ் கோட்டை ஆளுநரிடம் இருந்து ராயபுரம் பகுதியில் 24 கிரவுண்ட் நிலத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தனர்.

மெட்ராசில் இப்படி மெல்ல காலூன்றிய பார்சிகள், 1876இல் தங்களுக்கென பார்சி பஞ்சாயத்து என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தினர். இதன் முதல் கூட்டத்தில் 11 பேர் கலந்துகொண்டதாக ஆவணங்கள் கூறுகின்றன. பார்சி இன மக்கள், நெருப்பை கடவுளாக வழிபடுபவர்கள். ஆனால் இவர்கள் வழிபாடு நடத்துவதற்காக, அப்போது மெட்ராசில் எந்த கோவிலும் இல்லை. எனவே பார்சிகளுக்கென ஒரு கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை மெல்ல வலுப்பெறத் தொடங்கியது.

இதற்காக நிதி வசூலிக்கும் வேலையும் ஆரம்பமானது. பார்சிகளின் கோரிக்கையை ஏற்று பூனாவில் இருந்த சர் தின்ஷா பெட்டிட் என்பவர் 1896இல் ரூ3600 நன்கொடையாக அளித்தார். அந்த காலத்தில் இவ்வளவு பெரிய தொகை கிடைத்ததும் கோவில் கட்டும் முயற்சி தீவிரமடைந்தது. பார்சி பஞ்சாயத்தின் அப்போதைய தலைவராக இருந்த சொராப்ஜி பிராம்ஜி தன் பங்கிற்கு ரூ1000 நன்கொடையாக அளித்ததும், அதுவரை சேர்ந்த பணத்தைக் கொண்டு ராயபுரத்தில் கோவிலுக்கென ஒரு இடம் வாங்கப்பட்டது.

ஆனாலும் கோவில் கட்டும் பணி இழுத்துக் கொண்டே போனது. இந்நிலையில் பிரோஜ் கிளப்வாலா என்பவரின் 13 வயது மகன் ஜல், 1906ஆம் ஆண்டு திடீரென மரணமடைந்தான். பார்சிகள் இறுதிச் சடங்கை நெருப்புக் கோவிலில் செய்வது வழக்கம். ஆனால் ஜல்லின் இறுதிச் சடங்குகளை செய்ய, முறையான பூசாரியோ, கோவிலோ அப்போது மெட்ராசில் இல்லை. இதனால் மனமுடைந்துபோன பிரோஜ் கிளப்வாலா, தனக்கு ஏற்பட்ட நிலை இனி யாருக்கும் வரக் கூடாது எனக் கருதி நெருப்புக் கோவில் கட்டும் பணியை துரிதப்படுத்தினார். இதனையடுத்து அடுத்த ஆண்டே ராயபுரத்தில் நெருப்புக் கோவில் ஒன்றை கட்டிக் கொடுத்ததுடன், பூசாரியை நியமிப்பதற்கென தனியாக ரூ2000 நன்கொடையும் வழங்கினார்.

1909ஆம் ஆண்டு பிப்ரவரி 9ந் தேதி இந்த கோவிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பார்சி பஞ்சாயத்தின் அப்போதைய தலைவர் நவ்ரோஜி ஒரு சிவில் என்ஜினியர் என்பதால், அவரே கோவிலுக்கான வரைபடத்தை தயாரித்துக் கொடுத்தார். இதனையடுத்து 1910ம் ஆண்டு மத்தியில் கட்டி முடிக்கப்பட்ட நெருப்புக் கோவிலுக்கு ஜல் பிரோஜ் கிளப்வாலா தர்-இ-மெகர் என்று பெயரிடப்பட்டது. எர்வாட் தோசாபாய் பாவ்ரி என்பவர் இந்த கோவிலின் முதல் பூசாரியாக பணியாற்றினார். அவருக்கு மாதந்தோறும் ரூ40 சம்பளமாக வழங்கப்பட்டது.
ஜல் பிரோஜ் கிளப்வாலா தர்-இ-மெகர்
இந்தக் கோவில் பிறகு பார்சி சமூகத்தவர்கள் சந்திப்பதற்கான இடமாகவும் மாறியது. இந்த நெருப்புக் கோயிலில் 100 ஆண்டுகளைக் கடந்தும் நெருப்பு அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கிறது. இங்கு ஒரு நாளைக்கு ஐந்து முறை விளக்கு ஏற்றுகிறார்கள்.

முதல் உலகப் போரின்போது ஜெர்மானிய போர்க்கப்பலான எம்டன், மெட்ராஸ் மீது குண்டுகளை வீசியது. எம்டன் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்ற பீதி காரணமாக மெட்ராசில் இருந்து ஏராளமானோர் அவசர அவசரமாக வெளியேறினர். அத்தகைய இக்கட்டான நிலையிலும் இந்த கோவிலின் பூசாரியாக இருந்த பெஷோதான் என்பவர் வெளியேற மறுத்துவிட்டாராம். கோவிலில் இருக்கும் நெருப்பு அணையாமல் தொடர வேண்டும் என்பதற்காக தனது உயிரையும் பணயம் வைத்து கோவிலிலேயே இருந்தாராம்.
அணையாத நெருப்பு

இப்படி பலரும் போற்றிப் பாதுகாத்த அந்த நெருப்பு இன்றும் அணையாமல் தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது. சற்று கூர்ந்து பார்த்தால், மெட்ராசின் வர்த்தக வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பை அளித்த பார்சிகளின் நினைவும் அந்த நெருப்பில் சுடர்விடுவதை உணர முடிகிறது.

நன்றி - தினத்தந்தி

* தமிழ்நாட்டில் உள்ள ஒரே நெருப்புக் கோயில் இதுதான். மும்பையில் 55 நெருப்புக் கோவில்கள் இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 100 நெருப்புக் கோவில்கள் உள்ளன.

* சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தாதாபாய் நௌரோஜி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கணவர் ஃபெரோஸ் காந்தி, ரத்தன் டாடா ஆகியோர் பார்சி இனத்தைச் சேர்ந்தவர்கள்.