என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Thursday, December 2, 2010

ரம்பையின் (நடிகை ரம்பா அல்ல) இளமை ரகசியம்






ஏதோ ஒரு பெயர் தெரியாத பழைய திரைப்படத்தில் தேவலோகத்தில் ரம்பா, ஊர்வசி, மேனகா எல்லாம் அட்டகாசமாக ஆடிக் கொண்டிருந்தார்கள். இந்திரன் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த ரம்பா, ஊர்வசிக்கெல்லாம் வயசே ஆகாதா? எப்பப் பார்த்தாலும் அப்படியே இருக்காங்களே என்றேன். அப்படியே இளமையா இருக்கணும்னுதான் ரம்பா, ஊர்வசி, மேனகா எல்லாம் பூலோகத்திற்கு வந்து வரம் வாங்கிட்டு போனாங்க என்றார் என் நண்பரின் பாட்டி. எந்த ஏரியாவில வரம் வாங்கினாங்க பாட்டி என்றேன்.

கிண்டல் பண்ணாதேடா, இலம்பையங்கோட்டூர்னு ஒரு ஊர் இருக்கு. அங்கே தான் இவங்கல்லாம் வந்து தவம் இருந்து இளமை வரம் வாங்கிட்டு போனாங்க, அவங்க வந்துபோன கோவில் கூட இன்னும் அங்கே இருக்கு தெரியுமா என்று எங்களை அடுத்தடுத்து வியப்பில் ஆழ்த்தினார் பாட்டி. சரி தான், ரம்பை வந்துபோன கோவிலை பார்த்துவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தேன்.

ஒருநாள் அதிகாலையிலேயே நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு, ரம்பையின் பாதச்சுவடிகளை ஃபாலோ பண்ண ஆரம்பித்தேன். இந்த ஊர் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கிறது என்றார்கள். அங்குள்ள திருவிற்கோலம் எனப்படும் கூவம் சிவன் கோவிலிலிருந்து தென்மேற்கே 4 கி மி. போனால் இந்த ஊரை அடையலாம் என்றார்கள். ஏற்கனவே நான் கூவம் கிராமத்திற்கு (இங்கிருந்துதான் சென்னையின் ஜீவநதி கூவம் புறப்பட்டு வருகிறது) போயிருப்பதால் அது வரை எந்த சிக்கலும் இல்லாமல் போய்விட்டேன்.

அங்கு சென்று விசாரித்தபோது இலம்பையங்கோட்டூரா அப்படி எதுவும் இங்கே கிடையாதே என்று இடியை இறக்கினார் ஒருவர். பயணம் அவ்வளவுதானோ என்ற அச்சத்துடன் வேறொரு பெரியவரை விசாரித்தோம். அவங்க செட் ஆளைப் பற்றி தெரிந்திருக்கும் என்ற நப்பாசை தான். நம்ம கணக்கு சரியாக இருந்தது. இலம்பையங்கோட்டூரைத் தான் இப்போ எலுமியன்கோட்டூர்னு சொல்றாங்க, இன்னும் 4 கிலோ மீட்டர் போங்க ஊர் வந்துடும் என்று வயிற்றில் பால் வார்த்தார். அப்பாடா, தப்பிச்சோம்.

அழகான வயல்வெளிகளுக்கு இடையில் கொக்குகள் வானில் பறக்க, ஒற்றையடிப் பாதையில் வண்டியில் பறந்தோம். அப்படியே வளைந்து நெளிந்து சென்றதில் ஒரு சிற்றூர் எதிர்ப்பட்டது. அடிபம்பில் துணி துவைத்துக் கொண்டிருந்த ஒரு நவீன ரம்பையிடம், அக்கால ரம்பை வந்துபோன கோவில் பற்றி விசாரித்தோம். அப்படியே கிழக்கால போங்க என்று கையை வீசினார். தூரத்தில் இருந்து பார்க்கும் போதே ஒரு சிதிலமடைந்த பழங்காலக் கோவில் தெரிந்தது.

ரம்பா, ஊர்வசி, மேனகா எல்லாம் வந்துபோன கோவில் என்பதால் உள்ளே காலை வைத்ததும் இதயத்தில் சிலிர்க்கிறதாஎன்று பார்த்தேன். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் கோவிலின் புராதனம் நம்மை மெல்ல சூழ்ந்து கொள்கிறது. ஒரு கனத்த மௌனத்தை உணர முடிந்தது. ஒரு இனம் புரியாத அமைதி நெஞ்சில் பரவியது. கோவில் குருக்களின் வீடும், பசு மடம் ஒன்றும் கோவில் வளாகத்திற்குள்ளேயே இருக்கிறது. குருக்கள் கோவிலின் தல வரலாற்றை விளக்கினார். அதை முதலில் சுருக்கமாக பார்த்துவிடுவோம்.

திரிபுர சம்ஹாரத்தின்போது சிவ பெருமான் தேரேறி புறப்பட, அவருடன் சென்ற தேவர்கள் தன்னை வழிபடாமல் சென்றதால் விநாயகர் தேரின் அச்சை முறித்து விட்டார். தேர் நிலைகுலைந்து சாய்ந்தது. ஆனால் தேர் கீழே விழாமல் மகாவிஷ்ணு அதைத் தாங்கிப் பிடித்தார். அப்போது சிவபெருமான் கழுத்தில் அணிந்திருந்த கொன்றை மாலை விழுந்த இடத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். அந்த இடம்தான் இலம்பையங்கோட்டூர் திருத்தலம்.

தேவலோக மங்கைகளான ரம்பா, ஊர்வசி, மேனகா ஆகியோர் மாறாத இளமை வேண்டுமென்று இத்தல இறைவனை பூஜித்து வரம் பெற்றனர். இரம்பை வழிபட்டதால் இறைவனுக்கு அரம்பேஸ்வரர் என்ற பெயரும் உண்டாயிற்று. இரம்பை வழிபட்ட இத்தலம் இரம்பைக்கோட்டூர் என்று ஆகி, நாளடைவில் மருவி இலம்பயங்கோட்டூர் என்று மாறி தற்போது எலுமியன்கோட்டூர் என்று வழங்கப்படுகிறது. இங்குள்ள சிவன் மீது திருஞானசம்பந்தர் பதிகம் பாடியுள்ளார்.

இந்த ஆலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு முகப்பு வாயில் மட்டுமே இருக்கிறது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடமும், அதிகார நந்தி மண்டபமும் இருக்கின்றன. இத்தலத்தில் கொடிமரம் எதுவும் இல்லை. வளிப் பிரகாரத்தில் இடதுபுறம் இரம்பை வழிபட்ட அரம்பேஸ்வரர் 16 பட்டைகளுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறையில் இறைவன் தெய்வநாதேஸ்வரர் எனப்படும் அரம்பேஸ்வரர் கிழக்கு நோக்கி லிங்க உருவில் இருக்கிறார். ஆலயத்திற்கு ஒரு பிரகாரம் மட்டுமே உள்ளது. பிரகாரத்தை வலம் வருகையில் குருந்த விநாயகர் சந்நிதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகர் சந்நிதி, பைரவர் சந்நிதி ஆகியவை உள்ளன. கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், அவரை அடுத்து தட்சிணாமூர்த்தி, கருவறை பின்புறம் லிங்கோத்பவருக்கு பதில் அவ்விடத்தில் மகாவிஷ்ணு, அடுத்து பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

இங்குள்ள தட்சிணாமூர்த்தி யோக தட்சிணாமூர்த்தியாக சின் முத்திரையை இதயத்தில் வைத்து காணப்படுகிறார். வலது காலை மடித்து பீடத்தில் வைத்து, இடது கையை ஆசனத்தில் அழுத்திக் கொண்டு, கண்களை மூடிக் கொண்டு மிக அமைதியாக அமர்ந்திருக்கின்ற இவரது சிற்பம் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது. இத்தல இறைவன் ஒரு சுயம்பு, மூலவர் தீண்டாத் திருமேனி. பெரிய ஆவுடையார் அடிப்பாகம் பத்மம் போன்ற அமைப்பில் காணப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு வெளியே இரு புறமும் மல்லிகை தீர்த்தமும், சந்திர தீர்த்தமும் அமைந்துள்ளன. தட்சனால் சாபம் பெற்ற சந்திரன் இங்குள்ள மல்லிகை தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கியதாக கூறப்படுகிறது.

தேவர்கள் வழிபட்ட இந்த தெய்வநாதேஸ்வரரை வணங்கினால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யோக தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்கிறார்கள். நாங்கள் போன போது, ஆலயத்தில் திருப்பணி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

ரம்பா, ஊர்வசி, மேனகா போல இளமை மாறாமல் இல்லாவிட்டாலும், இருக்கிற வரை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டு வெளியில் வந்தோம். ரம்பா ஊரை பார்த்துட்டோம் டோய்னு... இனி எல்லார் கிட்டேயும் சொல்ல வேண்டியதுதான்.