என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Sunday, April 28, 2013

மசூதி கட்டிய இந்து


ஒரு பெரிய அல்லது வித்தியாசமான விஷயத்தை முதன்முதலில் செய்பவர் சரித்திரத்தில் நினைவு கூரப்படுவார். இதற்காக பல ஆண்டுகள் பாடுபடுபவர்களுக்கு மத்தியில், போகிற போக்கில் நிறைய முதல் விஷயங்களை தெரிந்தோ, தெரியாமலோ செய்து 'முதல்'வனாக இடம்பிடித்து விடுபவர்களும் உண்டு. அப்படிப்பட்ட ஒருவர்தான், 17ஆம் நூற்றாண்டில் மெட்ராசில் வாழ்ந்த காசி வீரண்ணா என்ற வணிகர்.

கிழக்கிந்திய கம்பெனிக்கு மெட்ராஸ் என்ற நிலப்பகுதியை பேரம் பேசி வாங்கித் தந்தவர் பேரி திம்மண்ணா என்ற வணிகர். இதன் மூலம் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக பேரி திம்மண்ணா கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை வணிகராகத் திகழ்ந்தார். இந்த திம்மண்ணாவின் பார்ட்னர்தான் காசி வீரண்ணா.
அந்தக்கால மெட்ராஸ்

காசி வீரண்ணா அந்த காலத்தில் கோல்கொண்டா சுல்தான்களிடம் மிகவும் நெருக்கமாக இருந்தார். வணிகரீதியில் ஏற்பட்ட நட்பு பின்னர் பலப்பட்டுவிட்டதால், கோல்கொண்டா சுல்தான்கள் காசி வீரண்ணாவையும் ஒரு முஸ்லீமாகவே பார்க்கத் தொடங்கிவிட்டனர். அவருக்கு ஹசன் கான் என்று பெயரும் வைத்துவிட்டனர். வீரண்ணாவும் முஸ்லீம்களுடன் மிகவும் பாசமுடனும், அன்புடனும் பழகினார். அந்த ஆழமான அன்பின் வெளிப்பாடுதான் தனது முஸ்லீம் சகோதரர்களுக்காக அவர் பாரிமுனையின் மூர் தெருவில் கட்டித்தந்த மசூதி. காசி வீரண்ணா என்ற இந்துவால் கட்டப்பட்ட அந்த மசூதிதான் மெட்ராசின் முதல் மசூதி. ஆனால் அந்த வரலாற்று சிறப்புமிக்க மசூதி இப்போது இல்லை.

வீரண்ணா மற்றொரு விஷயத்தையும் மெட்ராசில் முதன்முதலாக செய்து காட்டினார். அதுதான் அவர் தொடங்கிய "காசி வீரண்ணா அண்ட் கோ" என்ற கம்பெனி. இதனை காசா வெரோனா அண்ட் கோ (Cassa Verona & Co.,) என்று ஆங்கிலேயர்கள் தங்கள் ஆவணங்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த காலத்தில் இந்தியர் ஒருவருக்கு சொந்தமான முதல் ஜாயிண்ட் ஸ்டாக் கம்பெனி இதுதான்.

போர்த்துகீசியர்கள் சென்ற பிறகு சாந்தோமை வாடகைக்கு எடுக்கும் அளவுக்கு வீரண்ணா செல்வாக்கு மிக்க வணிகராக இருந்தார். டிசம்பர் 12, 1678 என தேதியிடப்பட்ட ஒரு ஆங்கிலேயக் குறிப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 'வெரோனாவுக்கு கோல்கொண்டாவில் இருந்து நவாப் முகம்மது இப்ராஹிம் நேற்று ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். வெரோனாவுக்கு 1300 பகோடாக்களுக்கு சாந்தோம் வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 2500 பகோடாக்கள் தர மற்றொருவர் தயாராக இருக்கிறார். எனவே வெரோனாவிடம் இருந்து சாந்தோமை திரும்பப் பெற்று அவருக்கு வாடகைக்கு விடலாம் என அந்த கடிதத்தில் இருந்தது. ஆனால் சூரிய சந்திரர் உள்ள வரை இந்த ஊர் ஒரு ஃபிர்மான் மூலம் தனக்கு தரப்பட்டுள்ளதாக வெரோனா பதில் எழுதியிருக்கிறார். தவிரவும் பணத்தின் மகிமையை அறிந்திருந்த வெரோனா, பேசுபவர்களின் வாயை மூட 500 பகோடாக்கள் லஞ்சமாகக் கொடுத்தார்' என்று அந்த குறிப்பு சொல்கிறது. இப்படி வியாபாரத்தில் கெட்டியாக இருந்த வீரண்ணா, தொழிலுக்கு ஏற்ப கறார் பேர்வழியாகவும் இருந்தார்.
சர் எட்வர்ட் விண்டர்

1678இல் பூந்தமல்லியின் கவர்னராக இருந்த லிங்கப்ப நாயக், கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து ஒரு பெரும் தொகையை கேட்டார். கம்பெனியின் வணிகராக இருந்த வீரண்ணா, அதெல்லாம் தர முடியாது என்று கறாராக சொல்லிவிட்டார். இதனிடையே வீரண்ணாவின் மனைவி இறந்துவிட்டார். இதற்காக துக்கம் விசாரிக்க வந்த லிங்கப்ப நாயக், ஏன் தன்னை யாரும் வந்து முறையாக வரவேற்கவில்லை என்று கேட்டார். மனைவியைப் பறிகொடுத்த சோகத்தில் இருந்த வீரண்ணா, லிங்கப்ப நாயக்கை வார்த்தைகளால் வறுத்தெடுத்துவிட்டார்.

ஏற்கனவே வீரண்ணா மீது கடுப்புடன் இருந்த லிங்கப்ப நாயக் இந்த பதிலால் கொதித்து கொந்தளித்துப் போனார். இதனை மனதிலேயே வைத்துக் கொண்டிருந்த லிங்கப்பா, 1680இல் வீரண்ணா உயிரிழந்தவுடன், மெட்ராசை கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து பறித்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அது பலிக்கவில்லை. எனவே மெட்ராஸை லிங்கப்பா முற்றுகையிட்டார்.

மெட்ராசிற்குள் உணவுப் பொருட்களும், மற்ற அத்தியாவசியப் பண்டங்களும் வருவது தடைபட்டது. மெட்ராஸ் மக்களுக்கு மெல்ல மூச்சுமுட்ட ஆரம்பித்தது. இந்த முற்றுகையை விலக்கிக் கொள்ள ஆங்கிலேயர்கள் ஆண்டுதோறும் 2000 பகோடா பணம் தர வேண்டும் என லிங்கப்பா நிபந்தனை விதித்தார். ஒருகட்டத்தில் பிரச்னை முற்றியதால், கம்பெனியையே மெட்ராசில் இருந்து செஞ்சிக்கு மாற்றிவிடலாமா என்று கூட ஆலோசிக்கப்பட்டது. வீரண்ணாவின் கோபம் இப்படி மெட்ராசின் இருப்பிற்கே ஆப்பு வைக்கப் பார்த்தது. இதனை சரி செய்ய அப்போது வீரண்ணாவும் உயிருடன் இல்லை. ஆனால் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் தொடர் பேச்சுவார்த்தையின் மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு கண்டனர்.

காசி வீரண்ணா தமது காலத்தில் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்தார். அவர் உயிரிழந்தபோது, அவருக்கு கம்பெனி சார்பில் 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. வீரண்ணா காலத்திலும் மெட்ராசில் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது. வீரண்ணாவின் மறைவைத் தொடர்ந்து அவரது மனைவி (இரண்டாவது மனைவி) உடன்கட்டை ஏற முயன்றார். ஆனால் அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் அதனை அனுமதிக்கவில்லை. மெட்ராசில் 'சதி' (Sathi) எனப்படும் உடன்கட்டை ஏறுதல் அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்ட முதல் நிகழ்வாக இது வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படி வாழும்போது மட்டுமின்றி மரணத்திலும் வரலாறு படைத்த வீரண்ணாவை மெட்ராஸ் இன்றும் நினைவில் வைத்திருக்கிறது. அதற்கு அத்தாட்சிதான் பாரிமுனை பகுதியில் இருக்கும் காசி வீரண்ண செட்டித் தெரு.

நன்றி - தினத்தந்தி

* 1661 முதல் 1665 வரை கம்பெனியின் ஏஜெண்டாக இருந்த சர் எட்வர்ட் விண்டர், மெட்ராசில் குற்றங்களை விசாரித்து நீதி வழங்கும் பொறுப்பை பேரி திம்மண்ணா மற்றும் காசி வீரண்ணா ஆகியோரிடம் ஒப்படைத்திருந்தார். ஆனால் அடுத்து வந்தவர் இந்த பொறுப்பை இவர்களிடம் இருந்து பறித்துவிட்டார்.

* 1679ஆம் ஆண்டு லிங்கப்பா, வீரண்ணாவிற்கு 1500 பகோடாக்கள் கொடுத்து சாந்தோமை தமதாக்கிக் கொண்டார்.

Sunday, April 21, 2013

பேரி திம்மப்பா


பிற்காலத்தில் மிகப்பிரமாண்டமாக விஸ்வரூபம் எடுக்கும் பல விஷயங்கள் மிகச்சிறியதாகத் தான் தொடங்குகின்றன. அதற்கு தொடக்கப்புள்ளி வைப்பவர்களும் சாதாரண எளிய மனிதர்களாகத்தான் இருக்கிறார்கள். மெட்ராஸ் என்ற மாநகரமும் அப்படி சில சாதாரண மனிதர்களால்தான் உருவானது. அவர்களில் முக்கியமான ஒருவர்தான் பேரி திம்மப்பா என்கிற பேரி திம்மண்ணா.

ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே துணி வியாபாரம் செய்து கொண்டிருந்தவர்தான் இந்த பேரி திம்மப்பா. கிழக்கிந்திய கம்பெனி தனது முதல் தொழிற்சாலையை மசூலிப்பட்டினத்தில்தான் அமைத்தது. ஆனால் அங்கு டச்சு மற்றும் போர்த்துகீசியர்களின் தொல்லை அதிகமானதால் கம்பெனிக்கு வேறு இடம்பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஆண்ட்ரூ கோகன் தலைமையில் ஃபிரான்சிஸ் டே என்பவர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.

பேரி திம்மப்பா நன்றாக ஆங்கிலம் பேசும் திறனுடையவராக இருந்ததால், ஃபிரான்சிஸ் டே அவரை தமது துபாஷாக (மொழிபெயர்ப்பாளராக) பணியமர்த்திக் கொண்டார். ஆங்கிலம் மட்டுமே அறிந்திருந்த கிழக்கிந்திய கம்பெனிக்காரர்களுக்கு உள்ளூர் மன்னர்கள் மற்றும் பெரு வணிகர்களோடு வர்த்தகம் செய்ய மொழிபெயர்ப்பாளர்கள் அவசியமாக இருந்தனர். இதனால் அன்றைய காலத்தில் துபாஷிகள் பெரும் செல்வாக்குடன் வலம் வந்தனர்.

கம்பெனிக்காக இடம்தேடி அலைந்த ஃபிரான்சிஸ் டே, சாந்தோமிற்கு அருகே ஒரு பொட்டல் மணல்வெளியை தேர்ந்தெடுத்தார். அப்போது அங்கு சில மீனவ குப்பங்களைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆண்ட்ரூ கோகனும் இந்த இடத்தை ஓ.கே செய்ய, நிலத்திற்கு சொந்தக்காரரான நாயக்க மன்னரின் உள்ளூர் நிர்வாகிகளிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது பேரி திம்மப்பாதான் மொழிபெயர்ப்பாளராகவும், திறமையான தரகராகவும் செயல்பட்டு கிழக்கிந்திய கம்பெனிக்கு இந்த நிலப்பரப்பை குறைந்த விலைக்கு பெற்றுத் தந்தார். இதற்கு பிரதிபலனாக ஆங்கிலேயர்கள் பேரி திம்மப்பாவிற்கு ஒரு பெரிய நிலப்பரப்பை அன்பளிப்பாக அளித்தனர்.

புதிய நிலப்பரப்பில் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் கோட்டை கட்டிக் கொள்ள, கோட்டைக்கு வெளியே தமக்கு அளிக்கப்பட்ட நிலத்தில் குடும்பத்தோடு குடியேறினார் பேரி திம்மப்பா. பின்னர் அவரின் குடும்பத்தினர் பல ஆண்டுகள் ஆங்கிலேயரின் தலைமை வணிகர்களாக விளங்கினர். இதனிடையே பேரி திம்மப்பா கோட்டைக்கு வெளியே ஒரு சிறிய நகரத்தையே உருவாக்கினார். நெல்லூர், மசூலிப்பட்டினம் ஆகிய இடங்களில் இருந்து நெசவாளர்கள், சாயம் தோய்ப்போர் என நெசவுத் தொழிலோடு தொடர்புடைய பலரையும் அழைத்து வந்து குடியேற்றினார். இப்படி கோட்டைக்கு வெளியே உள்ளூர் மக்களால் உருவான நகரை ஆங்கிலேயர்கள் 'கருப்பர் நகரம்' என்று அழைத்தனர். அந்த கருப்பர் நகரத்தின் தந்தை பேரி திம்மப்பாதான்.

பேரி திம்மப்பாவின் அடியொற்றி ஆந்திர மண்ணில் இருந்து நிறைய பேர் இங்கு இடம்பெயர்ந்ததால்தான், அந்த காலத்தில் மெட்ராசில் தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இது அப்படியே பல்கிப் பெருகி சுதந்திர இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களைப் பிரிக்கும்போது, 'மதராஸ் மனதே' என்று தெலுங்குகாரர்கள் உரிமை கொண்டாடியதற்கு ஒரு வகையில் பேரி திம்மப்பாவும் காரணமாக கருதப்படுகிறார்.

உள்ளூர் மக்களுக்காக பேரி திம்மப்பா ஒரு பெரிய கோயிலையும் கட்டினார். தற்போது உயர்நீதிமன்றம் இருக்கும் இடத்தில் அந்த கோயில் இருந்தது. அதுதான் பட்டனம் பெருமாள் கோயில் என்று அழைக்கப்பட்ட சென்னக்கேசவப் பெருமாள் கோயில். பின்னர் பிரெஞ்சுப் படைகளுடனான போரின்போது இந்த கோயில் இடிக்கப்பட்டு, சற்று தள்ளி இப்போதைய பூக்கடை பகுதியில் மீண்டும் கட்டப்பட்டது தனிக்கதை.
சென்ன கேசவ பெருமாள் கோவில்

தாம் கட்டிய பெருமாள் கோயிலை பேரி திம்மப்பா, நாராயணப்ப அய்யர் என்பவருக்கு தானமாக அளித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி 1648இல் எழுதப்பட்ட ஒரு சாசனம் கிடைத்திருக்கிறது. அதில் 'நான் கட்டிய சென்னகேசவப் பெருமாள் கோயில், அதன் மானியம், அதனைச் சார்ந்த நிலங்களை, இதன் மூலம் உங்கள் பெயருக்கு மாற்றித் தருகிறேன். சூரிய, சந்திரர் உள்ள வரை உங்கள் வம்சாவளிக்கு அதன் போக உரிமை இருக்கும். அவர்கள் இந்த கோயிலில் எல்லா பூஜைகளையும் முறைப்படி செய்து வர வேண்டும். தவறினால், கங்கைக் கரையில் கரும்பசுவைக் கொன்ற பாவத்திற்கு ஆளாவார்கள். இது நாராயணப்பையருக்கு பேரி திம்மண்ணாவால் கொடுக்கப்பட்டது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திம்மப்பா பாஷ்யம் நாயுடு, நாராயணப்ப நாயுடு
பேரி திம்மப்பாவிற்கு மகன்கள் யாரும் இல்லை, ஒரே ஒரு மகள்தான். அவரது வழியாக பேரியின் குடும்பம் வளர்ந்தது. பேரி திம்மப்பாவின் கொள்ளு கொள்ளுப் பேரர்களான திம்மப்பா பாஷ்யம் நாயுடு, நாராயணப்ப நாயுடு ஆகியோர் மெட்ராஸ் நகரின் மேம்பாட்டிற்க்காக நிறைய நிதி அளித்திருக்கின்றனர். அவர்களின் நினைவாகத்தான் கீழ்ப்பாக்கம் பகுதியில் பாஷ்யம் நாயுடு பூங்காவும், அப்பா கார்டன் தெருவும் இன்றும் இருக்கின்றன. இவர்கள் மட்டுமின்றி பேரி திம்மப்பாவின் குடும்பத்தில் வந்த பலரது பெயர்களும் சென்னையின் பல தெருக்களுக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் மெட்ராஸ் என்ற மாநகரை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய பேரி திம்மப்பாவிற்கு, ஏனோ யாரும் ஒரு சிலை கூட வைக்கவில்லை.

நன்றி - தினத்தந்தி

* சென்னகேசவப் பெருமாள் கோவிலை நாகபட்டன் என்பவர் 1646இல் நாராயணப்பையருக்கு சாசனமாக அளித்தாகவும் ஒரு ஆவணம் கிடைத்திருக்கிறது. இந்த நாகபட்டன் என்பவர் ஆங்கிலேயர்களுக்கு வெடிமருந்துப் பொடி தயாரித்துக் கொடுப்பவராக இருந்தார்.

* பேரி திம்மப்பாவின் சகோதரரான பேரி சின்ன வெங்கடாத்ரி கிண்டியில் ஒரு பெரிய லாட்ஜ் வைத்திருந்தார். கிண்டி லாட்ஜ் என்று அழைக்கப்பட்ட அந்த கட்டடம் தான் தற்போது தமிழக ஆளுநர் வசிக்கும் ராஜ் பவன். 

Saturday, April 13, 2013

காணாமல் போன கார்ன்வாலிஸ்


புனித ஜார்ஜ் கோட்டைக்குள் இருக்கும் தலைமைச் செயலகத்திற்கு செல்லும்போதெல்லாம் அருகில் இருக்கும் ஒரு பழமையான கூண்டு கண்ணில்படும். வேலைப்பாடு நிறைந்த பிரமாண்டமான அந்த நினைவுக் கூண்டிற்குள் இன்று எந்த சிலையும் இல்லை. ஒருகாலத்தில் இங்கு சிலையாக நின்ற கனவான் யார்? அவர் காணாமல் போனதன் காரணம் என்ன? என்று தேடியபோது ஊரெல்லாம் சுற்றித் திரிந்த ஒரு சிலையின் கதை கிடைத்தது.

கிழக்கிந்தியாவின் படைத்தளபதி மற்றும் கவர்னர் ஜெனரல் என்ற இரட்டைப் பதவியோடு 1786இல் இந்தியா வந்தார் சார்லஸ் கார்ன்வாலிஸ். அவர் மெட்ராஸ் துறைமுகத்தில் வந்திறங்கிய  நேரம் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகம் சீர்குலைந்து போயிருந்தது. கம்பெனி நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்தது. உண்மையில் அதனை சீர்படுத்தத்தான் கார்ன்வாலிஸை அனுப்பி வைத்திருந்தார்கள்.
கார்ன்வாலிஸ்

மெட்ராசில் இருந்து வங்காளம் சென்ற கார்ன்வாலிஸ், சீர்திருத்த சாட்டையை சொடுக்கினார். நிர்வாக மற்றும் சட்டத்துறைகளில் அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் இந்தியாவின் ஆட்சி முறையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தன. இப்படி வேகமாக செயல்பட்டுக் கொண்டிருந்த கார்ன்வாலிஸூக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார் மைசூரின் திப்பு சுல்தான்.

திப்பு சுல்தானை ஒழித்துக்கட்ட கார்ன்வாலிஸ் பல திட்டங்களைத் தீட்டினார். மெட்ராஸ் நோக்கி பெரும் படையோடு நீண்ட நெடும் பயணங்களை மேற்கொண்டார். ஆனால் எதற்கும் சலைக்காத திப்பு, கார்ன்வாலிஸூக்கு கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தார். ஒருவழியாக 1792இல் பல சதிகளின் பின் திப்புவை வளைத்துப் பிடித்தார் கார்ன்வாலிஸ். இதனையடுத்து கிழக்கிந்திய கம்பெனிக்கு ஒரு பெரும் தொகையை தருவதாக திப்பு ஒப்புக் கொண்டார். அது வரை அவரது இரண்டு மகன்களை கார்ன்வாலிஸிடம் பணயமாக ஒப்படைத்தார். இப்படி திப்புவின் பின்னால் அலைந்து கொண்டிருந்ததால், சோர்ந்து போன கார்ன்வாலிஸ், அடுத்த ஆண்டே தாயகம் திரும்பிவிட்டார். பின்னர் சிறிது இடைவெளி விட்டு, 1805இல் அவர் மீண்டும் கவர்னர் ஜெனரலாக இந்தியாவிற்கு வந்தது தனிக்கதை. வந்த சில மாதங்களிலேயே கடுமையான காய்ச்சலால் காசிப்பூர் என்ற இடத்தில் மரணத்தை தழுவிய கார்ன்வாலிஸை அங்கேயே கங்கைக் கரையோரமாக புதைத்துவிட்டார்கள்.
பணயமாக ஒப்படைக்கப்படும் திப்புவின் மகன்கள்
இப்படி இந்திய வரலாற்றில் நிலைத்துவிட்ட லார்ட் கார்ன்வாலிசுக்கு 1799ஆம் ஆண்டு மெட்ராசில் செனடாப் (Cenotaph - எங்கோ புதைக்கப்பட்ட மனிதரின் நினைவாலயம்) ரோட்டில் ஒரு சிலை வைக்கப்பட்டது. கார்ன்வாலிஸ் கடும் வெயில், மழையில் சிக்கி சின்னாபின்னமாகக் கூடாது என்று நினைத்தோ என்னவோ அவரது சிலையை ஒரு கூண்டு வடிவ நினைவுக் கட்டடத்திற்குள் வைத்தனர். ஒரு பெரிய பீடத்தின் மீது அமைக்கப்பட்ட அந்த 14 1/2 அடி உயர சிலையை தாமஸ் பாங்ஸ் என்பவர் வடித்திருந்தார்.
கூண்டுக்குள் இருந்த சிலை

சிலையின் பீடத்தில் திப்பு சுல்தானின் இரண்டு மகன்கள் கார்ன்வாலிசிடம் பணயமாக ஒப்படைக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு வடிக்கப்பட்டிருந்தது. இந்த சிலை அமைக்கப்பட்டிருந்த செனடாப் சாலை அக்காலத்தில் மக்கள் மாலை நேரங்களில் ஓய்வாக நடைபயிலும் இடமாக இருந்தது. அப்போது மெரினா கடற்கரை இப்போதுபோல சீரமைக்கப்பட்டிருக்கவில்லை என்பதால் ஆங்கிலேயர்களுக்கு வாக்கிங் போகும் இடமாக செனடாப் சாலைதான் விளங்கியது. மெரினாவில் நடைபாதை வந்தபிறகு செனடாப்பின் மவுசு குறைந்தது.

இதனிடையே ஒரு நூற்றாண்டு கடந்து செனடாப் சாலையில் காட்சி கொடுத்துக் கொண்டிருந்த கார்ன்வாலிஸை, 1906இல் கோட்டைக்கு இடம்மாற்றினார்கள். இதற்கான காரணம் திட்டவட்டமாகத் தெரியவில்லை. கோட்டையில் உள்ள பரேட் மைதானத்திற்கு எதிரில் இந்த சிலை வைக்கப்பட்டது. அங்கும் கார்ன்வாலிஸால் நிலையாக கால்பதிக்க முடியவில்லை.

1925ஆம் ஆண்டு கார்ன்வாலிஸ் கடற்கரை சாலைக்கு இடம் மாற்றப்பட்டார். வடக்கு கடற்கரைச் சாலையில் இருந்த பெண்டிக் கட்டடத்திற்கு முன்பு அவரது சிலை வைக்கப்பட்டது. ஆனால் உப்புக் காற்றால் சிலை பாதிக்கப்படுவதாகக் கூறி மூன்றே ஆண்டுகளில் அங்கிருந்து தூக்கிவிட்டார்கள். அடுத்ததாக கன்னிமரா நூலகத்திற்கு போனார் கார்ன்வாலிஸ், ஆனால் அதுவும் நிலைக்கவில்லை.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, கார்ன்வாலிஸ் இறுதியாக புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கும் அருங்காட்சியகத்திற்குள் சென்றுவிட்டார். அவர் நின்று கொண்டிருந்த பிரமாண்ட கூண்டு அருங்காட்சியகத்திற்கு வெளியில் நின்றுவிட்டது. அந்த கூண்டினால் ஏற்பட்ட செனடாப் என்ற பெயர் மட்டும், அந்த வீதியில் இன்றும் சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறது, கால ஓட்டத்தில் குடும்பத்தை பிரிந்த குட்டிமகனாய்.

நன்றி - தினத்தந்தி

* அமெரிக்க சுதந்திரப் போரை ஒடுக்குவதற்காக, 1776இல் இங்கிலாந்தால் அனுப்பி வைக்கப்பட்ட கார்ன்வாலிஸ் இறுதியில் தோல்வியையே தழுவினார். இந்த தோல்விக்கு பிறகுதான் அவர் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார்.
* கார்ன்வாலிஸால் பணயமாக பிடித்து வைக்கப்பட்ட திப்பு சுல்தானின் மகன்கள், மெட்ராசில்தான் வைக்கப்பட்டிருந்தனர்.  அவர்கள் இன்றைய மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி இருக்கும்  டவுட்டன் இல்லத்தில்தான் தங்க வைக்கப்பட்டதாக ஒரு தகவல் சொல்கிறது.

Saturday, April 6, 2013

மெட்ராசை மிரட்டிய தாவூத் கான்


காலம் மாறினாலும், சில விஷயங்கள் மட்டும் மாறுவதே இல்லை. லஞ்சம், ஊழல் போன்றவை அவற்றில் முக்கியமானவை. பலருக்கும் லஞ்சம் கொடுத்துதான் ஆங்கிலேயர்கள் மெட்ராசில் கால்வைத்தனர். பின்னர் தங்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் இதே ஆயுதத்தையே அவர்கள் பலமுறை பிரயோகித்தனர்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து பணம் பறித்தவர்கள் நிறைய பேர். அவர்களில் ஆங்கிலேயர்களை தொடர்ந்து மிரட்டி மிரட்டியே ஏராளமாக பொன்னும், பொருளும் பெற்றவர்தான் தாவூத் கான். முகலாய மன்னர் அவுரங்கசீப், தனது ஆளுகைக்குட்பட்ட கர்நாடக பகுதிகளை பார்த்துக் கொள்வதற்காக நவாப் என்ற பதவியை உருவாக்கினார். அப்படி நியமிக்கப்பட்ட முதல் நவாப் ஜூல்பிகர் அலி கான். இந்த ஜூல்பிகரின் உதவியாளராக இருந்தவர்தான் தாவூத் கான்.

ஒருமுறை தாவூத் கான் மெட்ராஸ் நகரை சுற்றிப் பார்க்க வர இருப்பதாக ஜூல்பிகர் அலி கான், அப்போதைய கவர்னரான பிட்டுக்கு கடிதம் எழுதினார். அவுரங்கசீப்பின் படையில் முக்கியத் தளபதியாக இருந்த தாவூத் வருகிறார் என்றால் அதன் பின்னணியில் நிச்சயம் ஏதேனும் சதி இருக்கும் என்று சந்தேகப்பட்ட பிட், ஒருபுறம் வரவேற்பு ஏற்பாடுகளை செய்து கொண்டே, மறுபுறம் நகரின் பாதுகாப்பை அதிகரித்தார்.

1699ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி மெட்ராஸ் வந்த தாவூத், திருவல்லிக்கேணியில் ஸ்டைல்மேட் என்ற தோட்ட மாளிகையில் தங்க வைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் ஒருவாரம் சாந்தோமிலும் தங்கியிருந்தார். சாந்தோம் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதால், அதனை ஒரு பெரிய நகரமாக உருவாக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அவரது கனவை ஆங்கிலேயர்கள் பலிக்கவிடவில்லை.

ஜூல்பிகர் அலி கானைத் தொடர்ந்து 1703ஆம் ஆண்டு நவாப்பான தாவூத் கான், ஆங்கிலேயர்களின் கண்களில் விரலைவிட்டு ஆட்டத் தொடங்கினார். அவரை பகைத்துக் கொள்ள வேண்டாம் என நினைத்த கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள், தாவூத் ஆற்காடு வந்திருந்த போது அவரை சந்திப்பதற்காக நிக்காலோ மானுச் என்ற வெனிஸ் நகரத்து வணிகரை நிறைய பரிசுப் பொருட்களுடன் அனுப்பினர். நிக்காலோ மானுச் அதற்கு பல ஆண்டுகள் முன்பே மெட்ராசில் வந்து தங்கிவிட்டவர். அவருக்கு பாரசீக மொழி நன்றாகத் தெரியும் என்பதாலும், அவர் ஒரு மரியாதைக்குரிய நபராக கருதப்பட்டதாலும் அவரை தூதராக அனுப்பினர்.
தாவூத் ஜார்ஜ் கோட்டையை முற்றுகையிட்டபோது

நிக்காலோ மானுச் இரண்டு பித்தளை துப்பாக்கிகள், கண்ணாடிகள், 50 பாட்டில் ஃபிரெஞ்சு பிராந்தி, உயர் ரக துணிகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை தாவூத்திற்கு வழங்கியதாக குறிப்புகள் சொல்கின்றன. ஆனால் இதெல்லாம் ஒரு பரிசா என்ற ரீதியில் அலட்சியமாக வாங்கி வைத்துக்கொண்ட தாவூத், மெட்ராசிற்கு புதிய கவர்னரை நியமிக்கலாமா என்று யோசிப்பதாகக் கூறி ஆங்கிலேயர்களுக்கு கிலி ஏற்படுத்தினார்.

சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல் சில மாதங்கள் கழித்து ஒரு சிறிய படையோடு சாந்தோமுக்கு மீண்டும் வந்தார். அப்போதும் கிழக்கிந்திய கம்பெனியார் சில பரிசுகளை அவருக்கு அனுப்பி தாஜா செய்ய முயற்சித்தனர். ஆனால் தாவூத் இதனை நிராகரித்துவிட்டார். இதனால் கடுப்பாகிப்போன ஆளுநர் பிட், போருக்கு தயார் என்ற ரீதியில் கானுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். இதனை சற்றும் எதிர்பாராத கான், கம்பெனியின் பரிசுகளை ஏற்றுக்கொள்வதாகவும், அவர்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்வதாகவும் சொல்லி சமரசத்திற்கு முன்வந்தார். இதனைத் தொடர்ந்து ஒரு தடபுடல் விருந்துக்கு ஏற்பாடானது.

சாந்தோமில் இருந்து ஜார்ஜ் கோட்டை வரை வீரர்கள் வரிசைகட்டி கானை வரவேற்றனர். பாண்டு வாத்தியம் முழங்க, 21 குண்டு மரியாதையும் அளிக்கப்பட்டது. 600 வகை பதார்த்தங்கள் இடம்பெற்றிருந்த விருந்தை வெகுவாக ரசித்த கான், மாலை 6 மணிக்கு கோட்டையில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அடுத்தநாள் ஒரு கப்பலை சுற்றிப்பார்க்க தாவூத் விரும்பினார். அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆனால் கப்பலைவிட, கான் அதிக தண்ணியில் இருந்ததால் அவரை கிளப்பி அழைத்துவர முடியவில்லை. இப்படி எல்லாம் கம்பெனிக்காரர்கள் அவரை மதுவிலேயே நீராட்டி ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் போதை நன்கு தெளிந்ததும் எட்டு மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு படையோடு கோட்டை நோக்கி வந்துவிட்டார் தாவூத். இந்த முறை சில பரிசுப்பொருட்களை கேட்டார் கான். ஆனால் கம்பெனி அதனை கொடுக்க மறுத்துவிட்டது. ஆத்திரமடைந்த கான் கோட்டையை முற்றுகையிட்டார். மதராசபட்டினத்திற்கான கடல்வழிப் பொருள் வருகையை தடுத்து நிறுத்தினார். இந்த பகுதியில் கடற்கொள்ளையர்கள் அதிகமாகிவிட்டதால், பாதுகாப்பு கருதி இந்நடவடிக்கையை எடுத்ததாக அறிவித்தார். 1702, பிப்ரவரி 6ஆம் தேதி வெளியான இந்த ஆணையால் மதராசபட்டினத்தின் வணிகம் முடங்கிப் போனது.

இதுபோதாதென்று எழும்பூர், புரசைவாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் கானின் ஆட்கள் கொள்ளை அடிப்பதாக ஒரு தகவல் மெட்ராஸ் முழுவதும் பரவி பீதியை அதிகரித்தது. மக்கள் அங்கும் இங்கும் ஓடி ஒளிய ஆரம்பித்தனர். கருப்பர் நகரத்தையும், தங்கசாலையையும் எடுத்துக்கொள்ளப் போவதாகவும் கான் அதிரடியாக அறிவித்தார். இதுபோன்ற அதிரடிகளால் நிலைகுலைந்து போன கிழக்கிந்திய கம்பெனி, கானுடன் சமரசமாகப்போக முடிவெடுத்தது. இதற்கு கான் ரூ.30 ஆயிரத்தை விலையாகக் கேட்டார். அப்புறம் ஒருவழியாக பேரம் பேசி ரூ.25 ஆயிரத்தைக் கொடுத்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். ஆனால் அது முற்றுப்புள்ளி அல்ல, என்பது சில ஆண்டுகளில் நிரூபணமாகிவிட்டது.

பேராசை பிடித்த கான் 1706இல் மீண்டும் சாந்தோமுக்கு வந்து தேவையானவற்றை கேட்டு வாங்கிக் கொண்டார். இப்படி ஆங்கிலேயர்களை தொடர்ந்து அச்சத்திலேயே வைத்திருந்த தாவூத் கான் 1710ஆம் ஆண்டு கூடுதல் பொறுப்புகள் கொடுத்து டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் மராட்டியர்களுக்கு எதிரான ஒரு போர்க்களத்தில் அவர் இறந்து, அவரது உடலை ஒரு யானையின் வாலில் கட்டி நகர் முழுவதும் இழுத்துச் சென்றார்கள் என்ற தகவலை கேட்டதும்தான் ஆங்கிலேயர்கள் உண்மையிலேயே நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.

நன்றி - தினத்தந்தி

* தாவூத் கான் இரண்டு நாய்களை செல்லமாக வளர்த்துவந்தார். குற்றவாளிகள் மீது இந்த நாய்களை ஏவிவிட்டு கொடூர தண்டனை கொடுத்ததாக நேரில் பார்த்தவர்கள் பதைபதைப்புடன் வரலாற்றில் பதிவு செய்திருக்கிறார்கள்.

* தாவூத் ஒரு குரங்கையும் பாசத்துடன் வளர்த்தார். அது இறந்துபோனதை தாங்க முடியாமல், அதன் பாதுகாவலர்களாக இருந்த இரண்டு பேருக்கு மரண தண்டனை வழங்கினார். அந்த குரங்கின் நினைவாக ஒரு படமும் வரையச் செய்தார்.
தாவூத் வளர்த்த குரங்கின் ஓவியம்
* திருவொற்றியூர், நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, கத்திவாக்கம், சாத்தங்காடு ஆகிய 5 கிராமங்களை 1708ஆம் ஆண்டு தாவூத், ஆங்கிலேயர்களுக்கு வழங்கினார்.


Thursday, April 4, 2013

மெட்ராஸ் அச்சகங்கள்


உலகில் இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பல்வேறு தொழில்நுட்பங்கள் அறிமுகமான சில நாட்களிலேயே மெட்ராஸ் மாநகருக்குள் நுழைந்திருக்கின்றன. எலெக்ட்ரிக் டிராம் போன்ற சில விஷயங்கள் லண்டனில் அறிமுகமாவதற்கு முன்பே மெட்ராசில் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. ஆனால் சில விஷயங்களை மெட்ராஸ் கோட்டைவிட்ட வரலாறும் இருக்கிறது. அவற்றில் முக்கியமானது அச்சுத் தொழில். பின்னர்கூட தற்செயலாகத்தான் அச்சுத் தொழில் மெட்ராசிற்குள் நுழைந்தது.

இதில் விசித்திரம் என்னவென்றால், இந்தியாவிலேயே முதன்முதலாக அச்சில் ஏற்றப்பட்ட மொழி தமிழ்தான். ஆனால் அந்த நிகழ்வு உள்நாட்டில் அரங்கேறவில்லை. போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பனில் தமிழ் எழுத்துருக்கள் தயாரிக்கப்பட்டு, 'கார்ட்டிலா' (The 1554 Cartilha in Roman Script) என்ற நூல் அச்சடிக்கப்பட்டது. இங்கிருந்த சிலரை மதமாற்றம் செய்து லிஸ்பனுக்கு அழைத்துச் சென்று கிறிஸ்தவ பாதிரிமார்கள் இந்த முயற்சியை செய்தனர். இதனையடுத்து 1578இல் 'டாக்ட்ரினா கிறிஸ்தியானா' என்ற 16 பக்க நூல் 'தம்பிரான் வணக்கம்' என்ற பெயரில் தமிழில் அச்சடிக்கப்பட்டிருக்கிறது.
டாக்ட்ரினா கிறிஸ்தியானா

வெளிநாடுகளில் அச்சடிக்கப்பட்டு வந்த தமிழை, இந்தியாவிற்குள் கொண்டுவந்தவர் சீகன்பால்க் (Ziegenbalg). மதமாற்ற முயற்சிகளுக்காக தரங்கம்பாடிக்கு வந்த சீகன்பால்க், 1715இல் பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்து அச்சடித்தார். இதுதான் இந்திய மொழியில் தயாரான முதல் பைபிள்.
சீகன்பால்க்

அச்சுத்தமிழ் இப்படி அலைந்து திரிந்த பிறகு, ஒருவழியாக 1761இல்தான் மெட்ராசிற்கு வந்தது. சென்னையில் முதன்முதலாக அமைந்த அச்சகம், கொள்ளையடித்துக் கொண்டு வரப்பட்டது என்று சொன்னால் நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கும். 1761-இல் புதுச்சேரியைக் கைப்பற்றிய கிழக்கிந்தியக் கம்பெனி தளபதி ஐர்கூட், அங்கு சூறையாடிய பொருட்களை மெட்ராசுக்குக் கொண்டு வந்தார். அவற்றில் ஒரு அச்சகத்திற்கு தேவையான கருவிகளும், முக்கியமாகத் தமிழ் எழுத்துருக்களும் இருந்தன. ஆனால் அப்போது மெட்ராசில் யாருக்கும் இதனை எப்படிப் பயன்படுத்துவது எனத் தெரியவில்லை.

எனவே அந்த பொருட்கள் புனித ஜார்ஜ் கோட்டையில் ஒரு மூலையில் முடங்கிப் போயின. பின்னர் அவற்றை தமிழ் மொழியை அறிந்திருந்த ஃபெப்ரீஷியஸ் என்பவரிடம் கிழக்கிந்தியக் கம்பெனி ஒப்படைத்தது. அப்படித்தான் மெட்ராசின் முதல் அச்சகமான எஸ்.பி.சி.கே பிரஸ் வேப்பேரியில் தொடங்கப்பட்டது. இதுதான் தற்போது சி.எல்.எஸ் பிரஸ் என்று அறியப்படுகிறது. கம்பெனியின் விருப்பப்படியே ஃபெப்ரீஷியஸ் அந்த அச்சகத்தைக் கிறிஸ்தவ மதப் பிரச்சாரப் பிரசுரங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தார்.

அந்நாட்களில் மெட்ராசில் கிறிஸ்தவத்தை பரப்பும் முயற்சிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. மிஷனரிகளின் இந்த மதமாற்ற முயற்சிக்கு, புதிய தொழில்நுட்பமான அச்சடித்தல் மிகவும் உறுதுணையாக இருந்தது. எனவே தரங்கம்பாடியில் இருந்து ஒரு அச்சு இயந்திரத்தை வாங்கி வந்தனர். இதனைக் கொண்டு 1772இல் 'மலபார் புதிய ஏற்பாடு' என்ற நூலைத் தயாரித்தனர். கம்பெனி அதிகாரிகளின் தேவைக்காக 1779, 1786ஆம் ஆண்டுகளில் அகராதிகளையும் ஃபெப்ரீஷியஸ் அச்சடித்துக் கொடுத்தார். இப்படித்தான் அச்சு மெட்ராசில் காலூன்றியது. 

ஆரம்ப நாட்களில் துண்டுப் பிரசுரங்கள் மட்டுமே அச்சடிக்கப்பட்டு வந்தன. காலப்போக்கில் அவை செய்தித்தாளாக பரிணாம வளர்ச்சி அடைந்தன. சென்னையில் முதன்முதலாக செய்தித் தாளைத் தொடங்கியவர் ஆங்கில அரசாங்கத்தில் வேலைபார்த்த ரிச்சர்டு ஜான்ஸன் என்பவர். மெட்ராஸ் கூரியர்என்ற பெயரில் 1785இல் அவர் தொடங்கிய ஆங்கிலப் பத்திரிகை, நான்கு பக்கங்கள் கொண்டதாக இருந்தது. அரசின் ஆதரவோடு நடந்த அந்தப் பத்திரிகைக்கு அரசு விளம்பரங்கள் குவிந்ததால் விரைவில் பக்கங்கள் ஆறாக அதிகரித்தன.
அச்சுத்தமிழ்

மெட்ராஸ் கூரியருக்கு ஆசிரியராக இருந்த ஹக் பாயிட், பின்னர் சொந்தமாக ஹிர்காராஎன்ற பெயரில் ஒரு பத்திரிகையை 1791இல் தொடங்கினார். ஹிர்காராஎன்றால் தூதுவன் அல்லது ஒற்றன் என்று அர்த்தமாம். ஆனால் ஒற்றன் அதிக நாள் ஓடவில்லை. 1794இல் ஹக் காலமாகிவிட, அவர் தொடங்கிய பத்திரிகையும் சேர்த்து புதைக்கப்பட்டுவிட்டது.

அடுத்ததாக 1795இல் ராபர்ட் வில்லியம் என்பவர் ஒரு அச்சகத்தை நிறுவி, கம்பெனியின் அச்சு வேலைகளைப் பெறுவதில் ஜான்ஸனோடு போட்டியிட்டார். அத்தோடு நிற்காமல், மெட்ராஸ் கூரியருக்குப் போட்டியாக மெட்ராஸ் கெஸட்என்ற பத்திரிகையையும் ஆரம்பித்தார். அரசு தனது வேலைகளை இருவருக்கும் பகிர்ந்தளித்து வந்தது.  இதற்கிடையில் ஜான் கோல்டிங்ஹாம் என்பவரும் கம்பெனி அரசுக்காக அதிகாரபூர்வமாக மெட்ராஸ் அரசாங்க கெஸட்டைத் தொடங்கிவிட்டார். 

இதெல்லாம் போதாது என்று மெட்ராஸ் அரசாங்கமே 1800இல் ஒரு அச்சகத்தை நிறுவியது. அதில் இருந்துமெட்ராஸ் அஸைலம் ஆல்மனாக்என்ற பெயரில் ஓர் இதழ் வெளிவரத் தொடங்கியது. இந்தச் சமயத்தில் அரசின் ஒப்புதலைப் பெறாமலேயே இந்தியன் ஹெரால்டுஎன்கிற பத்திரிகையை ஜி. ஹம்ப்ரீஸ் என்ற ஆங்கிலேயர் ஆரம்பித்தார். ஆனால் இதுசற்றே வித்தியாசமான பத்திரிகை. மற்ற பத்திரிகைகள் எல்லாம் அரசின் விளம்பரங்களை வாங்கிக் கொண்டு ஜால்ரா அடித்துக் கொண்டிருந்த காலத்தில், இதுமட்டும் கம்பனி அரசை கடுமையாக விமர்சித்தது. அதற்காக ஹம்ப்ரீஸ் கைது செய்யப்பட்டு நாட்டைவிட்டே வெளியேற்றப்பட்டார்!

ஒரு குறிப்பிட்ட காலம்வரை ஆங்கிலேயர்களே பத்திரிகைகளை நடத்திக் கொண்டிருந்த நிலையில், காஜுலு லக்ஷ்ம நரசு என்ற தெலுங்கு வணிகர்  இந்த போட்டியில் களமிறங்கினார். ஹிந்துக்களின் உரிமைகளை வலியுறுத்தும் நோக்கத்துடன் க்ரெசன்ட்என்ற பெயரில் 1844இல் ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். 1868இல் லக்ஷ்ம நரசு இறந்துவிட, அவரது பத்திரிகையும் நின்று போனது. இதனைத் தொடர்ந்து மெட்ராஸ் டைம்ஸ், தி மெட்ராஸ் மெயில், ஸ்பெக்டேடர், தி ஹிந்து, சுதேசமித்திரன் என பல பத்திரிகைகள் தொடங்கப்பட்டு அச்சுத்தொழில் மெட்ராசில் அரியணை போட்டு அமர்ந்துகொண்டது.

மொத்தத்தில் எதேச்சையாக மெட்ராசிற்குள் நுழைந்த அச்சுத் தொழில் இன்று விஸ்வரூபம் எடுத்து விண்ணில் விரிந்து நிற்கிறது. ஆரம்பத்தில் கொஞ்சம் கோட்டை விட்டாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டதால் மெட்ராஸ் இந்திய அச்சு வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துவிட்டது.

நன்றி - தினத்தந்தி

* அச்சில் ஏறிய முதல் தமிழ் அகராதியை தயாரித்தவர் ராபர்ட் டி நோபிளி என்ற இத்தாலிக்காரர். இவரை தத்துவ போத சுவாமி என தமிழர்கள் அன்புடன் அழைத்தனர்.
* நமசிவாய முதலியார் என்பவர் அச்சு எழுத்துகள் தயாரிக்கும் முறையை சீரமைத்தார். அவர் உருவாக்கிய புதிய எழுத்துருக்கள் 'நமசிவாய எழுத்து வரிசை' என்றே அழைக்கப்பட்டன.
* நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் பர்மாவிலிருந்தும், தாய்லாந்தில் இருந்தும் தமிழகம் திரும்பிய பிறகு, அவர்களில் சிலர் அச்சகங்களையும், பதிப்பகங்களையும் தொடங்கினர்.