என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, April 28, 2012

டவுட்டன் இல்லம்வகுப்புகளில் உட்கார்ந்திருப்பதை சிறையில் இருப்பதைப் போல இருக்கிறது என்று சில மாணவர்கள் கமெண்ட் அடிப்பதை கேட்டிருப்போம். ஆனால், காலம் இதை உண்மையாக்கிக் காட்டியிருக்கிறது. சென்னையில் சிலரை கைது செய்து வைக்கப் பயன்பட்ட ஒரு பழைய கட்டடத்தில் இன்று ஒரு கல்லூரி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த கட்டடம்தான் சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் டவுட்டன் இல்லம். அந்த கல்லூரி தான் மகளிர் கிறிஸ்துவக் கல்லூரி.


அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கும் பல்லாயிரம் மைல் தொலைவில் தென்னிந்தியாவில் இருக்கும் இந்த கட்டடத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. இரண்டுமே ஒரே காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஒரேவிதமான கட்டட அமைப்பில் கட்டப்பட்டவை. ஐரோப்பிய அதிகாரிகள் மெட்ராஸ் வரும்போது தங்குவதற்காக 1798இல் இந்த கட்டடம் கட்டப்பட்டது. முன் பகுதியில் பிரம்மாண்டமான தூண்களையும், பின்னால் பிறைநிலா வடிவிலான படிக்கட்டுகளையும் கொண்ட இந்த அழகிய கட்டடத்தை பெஞ்சமின் ரோபெக் (Benjamin Roebeck) என்ற புகழ்பெற்ற கட்டடக் கலைஞர் வடிவமைத்தார்.

அந்த காலத்தில் நுங்கம்பாக்கம் கிராமமாக இருந்தது. முன்புறம் பசுமையான நெல் வயல்கள், பின்புறம் தெள்ளத் தெளிவாக (அப்போது அப்படித்தான் இருந்தது) ஓடிக் கொண்டிருக்கும் கூவம் நதி என ரம்மியமான சூழலில் இந்த வீடு அமைந்திருந்தது. 1837ஆம் ஆண்டு வரை இது பெயரில்லாத கட்டடமாகத் தான் இருந்தது. பிறகுதான் இது டவுட்டன் இல்லம் என நாமகரணம் சூட்டிக் கொண்டது. காரணம், லெப்டினன்ட் ஜெனரலாக இருந்த ஜான் டவுட்டன் (Lt. General John Doveton) என்பவர் அப்போதுதான் இந்த வீட்டை விலைக்கு வாங்கினார். அவருக்கு பிறகு நிறைய ஆங்கிலேய அதிகாரிகள் இதில் தங்கினர். ஆனால் டவுட்டனின் பெயர் ஏனோ அப்படியே நிலைத்துவிட்டது.
இந்த டவுட்டன் என்ற பெயரில் ஏதோ ஈர்ப்பு சக்தி இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அது ஒரு பாரம்பரியமிக்க இந்து பிராமணக் குடும்பம் வரை பாய முடிந்தது. டவுட்டன் தனது இறுதிக் காலத்தில் இந்த வீட்டை தனக்கு நெருக்கமான ஒரு பிராமணக் குடும்பத்திற்கு உயில் எழுதி வைத்தார். அதில் இருந்து அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களுக்கு பின்னால் டவுட்டன் என்ற பெயரையும் சேர்த்துக் கொண்டனர். டவுட்டனுக்கும் அந்த பிராமணக் குடும்பத்திற்கும் இடையிலான பிணைப்பிற்கு என்ன காரணம் எனத் தெளிவாகத் தெரியவில்லை.

1792இல் மூன்றாவது மைசூர் போர் முடிவுக்கு வந்தபோது, ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி திப்பு சுல்தான் கிழக்கிந்திய படைக்கு ஒரு பெருந்தொகை தர வேண்டும் என முடிவானது. அதுவரை அவரது இரண்டு மகன்களை கார்ன்வாலிஸ் பிரபு பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தார். அந்த சிறுவர்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு டவுட்டனிடம்தான் ஒப்படைக்கப்பட்டது. அந்த சிறுவர்கள் இந்த டவுட்டன் இல்லத்தில்தான் தங்க வைக்கப்பட்டனர் என்று ஒரு தகவல் சொல்கிறது. ஆனால் 1837இல் தான் டவுட்டன் இங்கு வந்ததால், இதற்கான வாய்ப்பு குறைவு என்றே கருதப்படுகிறது.


ஆனால் வேறு ஒரு அரச குடும்பத்தை சேர்ந்தவர் இந்த இல்லத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். அவர்தான் பரோடா இளவரசர் மல்ஹர் ராவ். அவரது ஊரில் இருந்த ஒரு ஆங்கிலேய அதிகாரியை கொல்ல முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் மெட்ராஸிற்கு அனுப்பப்பட்டு, 1875இல் இந்த இல்லத்தில் சில காலம் சிறை வைக்கப்பட்டார்.  

இந்த இல்லத்தில் கடைசியாக தங்கிய ஆங்கிலேயர் மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதி சர் ரால்ஃப் பென்சன் (Sir Ralph Benson). கூவத்தின் அழகில் மனதைப் பறிகொடுத்த இவர், வெள்ளியை உருக்கி ஊற்றியதைப் போல இருக்கிறது ("placid and silvery Cooum") இந்த நதி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

1913இல் அவர் மெட்ராஸில் இருந்து கிளம்பிய பின்னர், பெண்கள் கிறிஸ்துவக் கல்லூரி இந்த வீட்டை விலைக்கு வாங்கியது. இந்தியப் பெண்களுக்கு உயர்கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கில் 1915ஆம் தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரி, அடுத்த ஆண்டே புகழ்பெற்ற இந்த கட்டடத்திற்கு இடம்பெயர்ந்துவிட்டது. 41 மாணவிகளுடனும், 7 ஆசிரியர்களுடனும் தொடங்கப்பட்ட இந்த கல்லூரியில், இன்று சுமார் 3 ஆயிரம் மாணவிகள் பயில்கின்றனர்.

இந்த கல்லூரி வளாகத்திற்குள் இன்று நிறைய கட்டடங்கள் முளைத்துவிட்டன. இதில் கல்வி பயில வரும் இளம்பெண்களை, வயதான தாத்தா பேத்திகளை வாஞ்சையுடன் பார்ப்பதைப் போல பார்த்தபடி நின்றுகொண்டு நிற்கிறது, 200 ஆண்டுகளைக் கடந்த டவுட்டன் இல்லம்.


நன்றி - தினத்தந்தி


* 1914இல் இந்திய தேசிய காங்கிரசின் கூட்டம் ஒன்றும் இந்த கட்டடத்தில் நடந்திருக்கிறது.
* மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் மகளிர் கிறிஸ்துவக் கல்லூரிக்கு வருகை தந்துள்ளனர்.

Sunday, April 22, 2012

சென்னை பொது தபால் நிலையம் (ஜி.பி.ஓ)

இன்று உறவுப் பாலங்களுக்கு உரம் சேர்க்க இ-மெயில், எஸ்.எம்.எஸ், சாட்டிங் என தொழில்நுட்பம் நிறைய வசதிகளை செய்து கொடுத்திருக்கிறது. ஆனால் இவையெல்லாம் இல்லாத காலத்தில் தபால்கள் மட்டுமே உறவுகளையும், உணர்வுகளையும் சுமந்தபடி தூது சென்று கொண்டிருந்தன. அந்த தபால்கள் மெட்ராஸ் மாநகரில் முதன்முதலில் எப்படி முளைத்து பின் விஸ்வரூபம் எடுத்தன என்பது ஒரு சுவாரஸ்யமான கதை.

1639ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியார் மெட்ராசில் கோட்டை கட்டி குடியேறிவிட்டாலும், ஆரம்ப காலத்தில் அவர்களிடம் சரியான தபால் முறைகள் எதுவும் இல்லை. 1736ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதிதான் இதற்கான பிள்ளையார் சுழி போடப்பட்டது. மெட்ராஸ் ராஜ்தானியில் இருந்து பிற இடங்களுக்கு அனுப்பப்படும் பல கடிதங்கள் அல்லது பார்சல்கள் உரியவர்களை சென்று சேராததை அடுத்து, இது குறித்து விவாதிப்பதற்காக ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதனை மெட்ராஸ் ராஜ்தானிக்கு உட்பட்ட அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. அதன்படி அன்று முதல் அனுப்பப்படும் கடிதங்கள் அல்லது பார்சல்களின் மீது எண்களை குறிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அந்த பார்சல் ஒரு இடத்தை அடைந்ததும், அங்கிருந்து அடுத்த இடத்திற்கு அது பட்டுவாடா செய்யப்படும் தேதி, நேரம் ஆகியவை பார்சலின் மீதுள்ள வில்லையில் குறிக்கப்பட்டு பின்னரே அனுப்பப்படும். அங்கும் இதே முறை கடைபிடிக்கப்படும். இப்படி பல இடங்கள் மாறி உரிய இடத்தை அடையும்போது, அந்த பார்சல் எங்கெங்கிருந்து எப்போது புறப்பட்டு வந்திருக்கிறது என்ற தகவலை அறிந்துகொள்ள முடியும். கடைசியாக பார்சலைப் பெற்றவர் அதற்கு முன் அது எங்கிருந்து வந்ததோ அந்த அதிகாரியிடம் இதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதன்மூலம் காலதாமதம் ஏற்பட்டாலோ, பார்சல் வராவிட்டாலோ, எந்த இடத்தில் பிரச்னை என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். சுமார் 40 ஆண்டு காலம் இதே முறைதான் பின்பற்றப்பட்டது.

1774இல்தான் முதன்முறையாக தனியார் கடிதங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஒரு கடிதம் எத்தனை மைல்கள் பயணப்படுகிறது என்பதை வைத்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக இப்போது நாம் ஸ்டாம்ப் பயன்படுத்துவது போல, அந்த காலத்தில் செப்பு வில்லைகளை கடிதத்தின் மீது ஒட்டி அனுப்புவார்கள்.

1785ஆம் ஆண்டு தபால் அலுவலகத்திற்கான விதிமுறைகள் திருத்தப்பட்டன. அடுத்த ஆண்டு மெட்ராசில் இருந்து பம்பாய், கல்கத்தா ஆகிய நகரங்களுக்கு கடிதங்களை கொண்டு செல்லும் மெயில் சேவை தொடங்கப்பட்டது. ஆனால் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் இந்த சேவை கிடைக்கும். இதேஆண்டில்தான் மெட்ராஸ் ஜெனரல் போஸ்ட் ஆபிஸ் தொடங்கப்பட்டது. அப்போதைய மெட்ராஸ் ஆளுநரின் உதவியாளரான கேம்ப்பெல் என்பவர் முதல் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.

இவருக்கு கீழ் ஒரு துணை போஸ்ட் மாஸ்டர் ஜெனரலும், ஒரு கிளார்க்கும், தபால்களை பிரிப்பதற்கு 5 பேரும், ஒரு தலைமை பியூனும், பத்து தபால்காரர்களும் இருந்தனர். இவர்கள்தான் அன்று மெட்ராஸூக்கு வந்த அனைத்து கடிதங்களையும் கையாண்டனர். தலைமைத் தபால் நிலையம் முதலில் கோட்டைக்குள் செயல்பட்டு பின்னர் பிராட்வே போய் இறுதியாக தற்போதைய இடத்தை வந்தடைந்தது.

மெட்ராசில் கடிதப் போக்குவரத்து அதிகரித்ததை அடுத்து தபால் நிலையத்திற்கென தனியாக ஒரு பெரிய கட்டடம் வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்காக இந்திய அரசும், மெட்ராஸ் அரசும் இணைந்து ரூ.2 லட்சம் ஒதுக்கின. பம்பாய் மற்றும் கல்கத்தாவில் தலைமை தபால் நிலையங்கள் கட்ட பணம் கொடுத்துவிட்டதால் அதற்கு மேல் ஒதுக்க நிதி இல்லை என இந்திய அரசு தெரிவித்துவிட்டது. எனவே 1873ஆம் ஆண்டே தபால் நிலையத்திற்கான இடத்தை தேர்வு செய்துவிட்டபோதிலும், பணம் இல்லாததால் 1880 வரை பணிகள் சூடுபிடிக்கவில்லை.

பின்னர் 1884இல் ஒருவழியாக கடற்கரைச் சாலையில் மொத்தம் ரூ.6,80,000 செலவில் பிரம்மாண்டமான மூன்று மாடிக் கட்டடம் கட்டப்பட்டது. மெட்ராஸ் வர்த்தக சபை இதில் கணிசமான தொகையை வழங்கியது. 352 அடி நீளமும், 162 அடி அகலமும், 125 அடி உயர இரட்டை கோபுரங்களையும் கொண்ட இந்த அழகிய கட்டடத்தை அப்போதைய அரசின் மூத்த கட்டட ஆலோசகரான ராபர்ட் சிஸ்ஹோம் வடிவமைத்துக் கொடுத்தார். அன்று முதல் இன்று வரை மெட்ராஸ் மாநகரின் மிக அழகிய கட்டடங்களில் ஒன்றாக இந்த இந்தோ-சராசனிக் பாணி கட்டடம் திகழ்ந்து வருகிறது.

இதனிடையே 1853ஆம் ஆண்டு மெட்ராசில் இருந்து ரயில் மூலம் கடிதங்களை அனுப்பும் முறை தொடங்கியது. அதற்கு அடுத்த ஆண்டுதான் முதன்முதலில் மெட்ராசில் தபால் தலை அறிமுகப்படுத்தப்பட்டது. 1864ஆம் ஆண்டு மெட்ராஸ் மாநகரில் மொத்தம் 9 தபால் அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. 1870-1880 காலகட்டத்தில் பல புதிய விஷயங்கள் தபால் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டன. அலுவலக கடிதங்களுக்கு அதிக கட்டணம், வி.பி.தபால்கள், மணியார்டர் போன்றவை நடைமுறைக்கு வந்தன.

1872இல் கப்பல் மூலம் 15 நாட்களுக்கு ஒருமுறை மெட்ராசில் இருந்து பர்மாவின் ரங்கூன் நகருக்கு கடிதங்கள் கொண்டு செல்லப்பட்டன. 1886இல் மெட்ராசில் இருந்து இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள துறைமுகங்களுக்கு இதேபோன்ற சேவை தொடங்கியது.

1915ஆம் ஆண்டு வரை, மெட்ராஸ் மாநகரில் குதிரை வண்டிகள் மூலம் தான் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்பட்டன. பின்னர் சோதனை முறையில் இரண்டு மோட்டார் வாகனங்கள் தபால் துறைக்கு வழங்கப்பட்டன. அவை அதிக பயன் அளித்ததால், 1918ஆம் ஆண்டு குதிரைகளின் இடத்தை மோட்டார் வாகனங்கள் முழுமையாக பிடித்துக் கொண்டன.

பின்னர் வேகமெடுத்த தபால் துறை பல்வேறு சேவைகள் மூலம் மெட்ராஸ்வாசிகளின் வாழ்வின் பிரிக்க முடியாததொரு அங்கமாகிப் போனது. ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தபால் நிலையங்களின் அவசியம் தற்போது குறைந்துவிட்டாலும், உறவுகளிடம் இருந்து வந்த கடிதங்களை ஆர்வமுடன் பிரித்து படித்த, அந்த பழைய நினைவுகள் மட்டும் அப்படியே நெஞ்சில் நிழலாடுகிறது.

நன்றி - தினத்தந்தி

* 2000ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜெனரல் போஸ்ட் ஆபிஸ் கட்டடத்தின் ஒரு பகுதியை தீ தின்றதால், இது மீண்டும் புனரமைக்கப்பட்டது.
* 2011ஆம் ஆண்டு பெருமழை காரணமாக இந்த கட்டடத்தின் ஒரு பகுதி கூரை இடிந்து விழுந்தது.
* 1852இல் தான் ஆசியாவிலேயே முதன்முறையாக தற்போதைய பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் ஸ்டாம்ப் அறிமுகமானது
* தற்போது இந்தியாவில் மொத்தம் 1,55,333 தபால் நிலையங்கள் இருக்கின்றன.

Saturday, April 14, 2012

பாரத் இன்ஷூரன்ஸ் கட்டடம்
ஆடைகள் கிழிந்து அலங்கோலமான நிலையில், கிளைமேக்சில் கதாநாயகனால் காப்பாற்றப்படும் கதாநாயகி போல நின்று கொண்டிருக்கிறது பாரத் இன்ஷூரன்ஸ் கட்டடம். இப்படி கடைசி நேரத்தில் காக்கப்பட்ட இந்த காப்பீட்டு கட்டடம்தான், மெட்ராஸ் மாநகரின் முதல் உயரமான கட்டடம் எனக் கருதப்படுகிறது.

மவுண்ட் ரோடும், ஜெனரல் பேட்டர்ஸ் சாலையும் சந்திக்கும் இடத்தில் பிரம்மாண்டமாய் காட்சியளிக்கும் இந்த கட்டடத்தின் கதை 1868இல் தொடங்குகிறது. காரணம், அப்போதுதான் இந்த கதையின் நாயகன் ஸ்மித் (W.E. Smith) மெட்ராஸ் வந்தார். மருந்தாளரான ஸ்மித், மெட்ராசில் சில மருந்துக் கடைகளை வைத்து வியாபாரம் செய்துவந்தார். பின்னர் ஊட்டிக்கு இடம் மாறினார். அங்கும் நிறைய மருந்துக் கடைகளைத் தொடங்கினார். மருந்து விற்பனையில் மகத்தான வெற்றி கண்ட ஸ்மித், மீண்டும் மெட்ராஸ் திரும்பினார். ஆனால் இம்முறை ஒரு பிரம்மாண்ட திட்டத்துடன் களமிறங்கினார்.

மவுண்ட் ரோட்டில் பாரத் இன்ஷூரன்ஸ் கட்டடம் இருக்கும் இடத்தில் ஸ்மித், ஒரு பெரிய கடையை ஆரம்பித்தார். மருந்து தயாரிப்பு மற்றும் ஒட்டுமொத்த வியாபாரம் செய்யும் இடமாக அது மாறியது. இதுமட்டுமின்றி, அறுவை சிகிச்சை உபகரணங்கள் விற்பனை, சோடா தயாரிப்பு ஆகியவையும் இங்கு நடைபெற்றன. விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றதால் கடையை விரிவுபடுத்த நினைத்தார் ஸ்மித். இதற்காக பெரிய கட்டடம் ஒன்றை கட்ட விரும்பிய அவர், தென்னிந்தியாவின் மிகப்பெரிய மருந்து கம்பெனியின் தலைமைக் கட்டடம் அனைவராலும் பேசப்படும் வகையில் இருக்க வேண்டும் என கனவு கண்டார். அந்த கனவை நனவாக்கும் வேலை 1894இல் தொடங்கியது.

மூன்று வருட கடின உழைப்பில் மெட்ராஸ் மாநகருக்கு அழகு சேர்க்கும் வகையில் ஒரு அருமையான கட்டடம் உருவானது. 1897ஆம் ஆண்டு அந்த கட்டடம் தொடங்கி வைக்கப்பட்டபோது அதன் பெயர் கார்டில் கட்டடம் (Kardyl Building). மெட்ராஸ் பொதுப்பணித் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஸ்டீபன்ஸ் (J.H. Stephens) என்பவர்தான் இதனை வடிவமைத்தார். அப்போது மெட்ராசில் இந்தோ - சராசனிக் பாணி கட்டடங்கள் அதிக அளவில் கட்டப்பட்டு வந்ததால், அந்த பாணியை அடிப்படையாக வைத்து, அதனுடன் வேறு சில கட்டட பாணிகளையும் கலந்து பிரம்மாண்டமான அரண்மனை போன்ற இந்த கட்டடத்தை வடிவமைத்தார்.

உள்ளே நுழைந்ததும் 60 அடி நீளம், 40 அடி அகலத்தில் ஒரு விசாலமான ஷோரூம் இருந்தது. மருத்துவர்களுக்கான அறைகள் முதல் மாடியில் மவுண்ட் ரோட்டைப் பார்த்தவாறு அமைந்திருந்தன. அவர்களின் உதவியாளர்களுக்கான அறைகள், அதே மாடியில் ஜெனரல் பேட்டர்ஸ் சாலையை நோக்கியவாறு இருந்தன. ஒரு காபிக் கடையும், மதுபான விடுதியும் கூட இந்த கட்டடத்தில் இடம்பிடித்திருந்தன. கட்டடத்தின் பின்பகுதியில் சோடா கம்பெனி செயல்பட்டு வந்தது. கட்டடத்தின் உள்பகுதியில் வண்ண வண்ண கண்ணாடிகளுடன் கூடிய போலிக் கூரை (False ceiling) காண்போரை கவர்ந்திழுத்தது. அகலமான மரப் படிக்கட்டுகளும், ஆங்காங்கே அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட இரும்புச் சட்டங்களும் இந்த கட்டடத்தின் அழகை அதிகரித்தன.

மருந்து விற்பனையில் கோலோச்சி வந்த ஸ்மித்திற்கான போட்டி மவுண்ட் ரோட்டின் எதிர்புறத்தில் இருந்து புறப்பட்டது. சாலையின் எதிர்புறம் அமைந்த ஸ்பென்சர் நிறுவனம் மெல்ல மருந்து விற்பனையில் ஸ்மித்தை முந்தத் தொடங்கியது. இறுதியில் 1925இல் ஸ்மித், தனது வியாபாரம், கட்டடம் என அனைத்தையும் ஒட்டுமொத்தமாக ஸ்பென்சர் நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். ஸ்பென்சர் நிறுவனம் அந்த கட்டடத்தின் ஷோரூம் உள்பட பல பகுதிகளை வாடகைக்கு விட்டது.

1934இல் பாரத் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஸ்பென்சர்சிடம் இருந்து இந்த கட்டடத்தை வாங்கியது. லாகூரைச் சேர்ந்த லாலா ஹரிகிஷன்லால் என்பவர்தான் பாரத் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த கட்டடத்தை வாங்கிய இரண்டே ஆண்டுகளில் பாரத் நிறுவனம் ஹரிகிஷனிடம் இருந்து டால்மியாவின் கைக்கு மாறியது. இதனிடையே 1956ஆம் ஆண்டு ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் அரசுடமையாக்கப்பட்டபோது, நாட்டில் இருந்த பல காப்பீட்டு நிறுவனங்கள் அரசின் எல்ஐசி வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பட்டியலில் பாரத் இன்ஷூரன்சும் தப்பவில்லை. இப்படித்தான் எல்ஐசிக்கு சொந்தமானது இந்த கட்டடம்.

இதுநடப்பதற்கு முன்னர் பழைய கட்டடத்தின் முன்பகுதியில் தோட்டம் இருந்த இடத்தில் ஒரு புதிய கட்டடம் கட்டப்பட்டது. பைரன், அபோட், டேவிஸ் (Prynne, Abbott and Davis) போன்ற அந்தக் கால மெட்ராசின் புகழ்பெற்ற கட்டடக் கலைஞர்கள் இதனை வடிவமைத்தனர். இதுதான் பாரத் இன்ஷூரன்ஸ் கட்டடம் என்ற பெயரைத் தாங்கியபடி, இன்று மவுண்ட் ரோட்டை நோக்கி நின்று கொண்டிருக்கும் கட்டடம்.

முறையான பராமரிப்பு இல்லாததால் இந்த ஒட்டுமொத்த கட்டடமும் சிதிலமடைந்தது. எனவே இதில் வசிக்கும் அனைவரும் வெளியேறும்படி 1998ஆம் ஆண்டு எல்ஐசி கேட்டுக் கொண்டது. பின்னர் இந்த கட்டடத்தையும் இடிக்க முற்பட்டது. ஆனால் பாரம்பரிய விரும்பிகள், நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி முறையிட்டதால் கடைசி நேரத்தில் தப்பிப் பிழைத்தாலும், உயிர் இருந்தும் கோமா நிலையில் இருக்கும் நோயாளி போலத் தான் இன்று இருக்கிறது இந்த கட்டடம்.

மொத்தத்தில், ஒரு காலத்தில் மெட்ராஸ் நகருக்கு தனது கம்பீரத்தால் அழகு சேர்த்த கட்டடம், இன்று எப்போது இடிந்து விழும் எனத் தெரியாத அவல நிலையில் பரிதாபமாக நின்று கொண்டிருக்கிறது.

நன்றி - தினத்தந்தி

* முன்புறம் உள்ள பாரத் இன்ஷூரன்ஸ் கட்டடம், ஐக்கிய நாடுகள் சபை கட்டடத்தின் சாயலில் கட்டப்பட்டுள்ளது.

* மெட்ரோ ரயில் பணிகளுக்காக இந்த பாரம்பரியக் கட்டடத்தின் சில பகுதிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Saturday, April 7, 2012

ஹோட்டல் தி'ஏஞ்ஜிலிஸ்


நிலாவில் கால்பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங், சூடா ஒரு டீ சாப்பிடலாம் என டீக்கடை தேடினால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இருந்தது சுமார் 372 ஆண்டுகளுக்கு முன் மெட்ராசில் கால்பதித்த கிழக்கிந்திய கம்பெனிக்காரர்களின் நிலை. இங்கிருக்கும் இட்லியும், சாம்பாரும் அவர்களுக்கு பிடித்திருந்தாலும், இத்தனை ஆண்டுகளாக சாப்பிட்டுப் பழகிய சாண்ட்விச்சை எப்படி திடீரெனத் துறக்க முடியும்? கனவுகளில் துரத்தும் பீட்சாவுக்கும், பர்கருக்கும் என்ன பதில் சொல்வது?

இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, அவர்கள் தங்கள் நாட்டு சமையல்காரர்களை அழைத்து வந்து தேவையான உணவுகளை தயாரித்து சாப்பிடத் தொடங்கினர். வசதி படைத்த அதிகாரிகளுக்கு இது சரிப்பட்டு வரும். ஆனால், கிழக்கிந்திய கம்பெனியில் வேலை பார்த்த அனைவரும் இப்படி சமையல்காரரை அழைத்து வர முடியுமா? திருமணம் ஆகாமலோ, மனைவி உடன் இல்லாமலோ தனியாக வசித்த ஆங்கிலேயர்களின் கதி என்ன? இப்படி ஏங்கித் தவித்த நாக்குகளின், தாகம் தணிக்க வந்தவர்தான் கியாகொமோ திஏஞ்ஜிலிஸ் (Giacomo D'Angelis).

ஹோட்டல் தி' ஏஞ்ஜிலிஸ்

இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் மற்றும் சாண்டோஸ் பகுதி இளவரசரான ரிச்சர்ட் பிளான்டாஜிநெட் காம்ப்பெல் (அடப்போங்கப்பா).... (Richard Plantagenet Campbell Temple-Nugent-Brydges-Chandos-Grenville) 1875ஆம் ஆண்டு மெட்ராசின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவ்வளவு நீளமான பெயரை சுமந்து கொண்டு மெட்ராஸ் வந்த ரிச்சர்ட், உஷாராக தனது நட்பு வட்டத்தில் இருந்த கியாகொமோ தி'ஏஞ்ஜிலிஸ் என்ற இத்தாலிக்காரரையும் உடன் வரும்படி அழைப்பு விடுத்தார். காரணம், தி'ஏஞ்ஜிலிஸ் இத்தாலிய மற்றும் பிரெஞ்சு உணவுகளை தயாரிப்பதில் விற்பன்னர். பிரான்சு சென்று இதற்கென பிரத்யேகமாக படித்தவர்.

ஆளுநரின் அழைப்பை ஏற்று குடும்பத்துடன் மெட்ராஸ் வந்தார் தி'ஏஞ்ஜிலிஸ். அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் இவரின் மேற்பார்வையில்தான் சமையல் அரங்கேறியது. தன்னுடைய வயிற்றுக்காக முன்கூட்டியே யோசித்து தி'ஏஞ்ஜிலிஸை அழைத்து வந்த பக்கிங்ஹாம் இளவரசருக்கு விதி வித்தியாசமான சவாலை முன்வைத்தது.

1876-78 காலகட்டத்தில் மெட்ராஸ் ராஜ்தானி முழுவதும் கடும் பஞ்சம் தலைவிரித்தாடியது. சிறந்த நிர்வாகியான பக்கிங்ஹாம் இளவரசர் ரிச்சர்ட், இந்த பஞ்சத்தை திறமையாகவே கையாண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். பஞ்ச காலத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை வேகமாக கொண்டு செல்ல வசதியாக, மரக்காணத்தில் இருந்து காக்கிநாடா வரை கால்வாய் வெட்டினார். சென்னையில் கூவம் நதி ஓடிக் கொண்டிருக்கும் பக்கிங்ஹாம் கால்வாய் பிறந்தது இப்படித்தான்.

1880இல் பணி முடிந்து பக்கிங்ஹாம் இளவரசர் இங்கிலாந்துக்கு திரும்பிச் சென்றுவிட்டார். ஆனால் தி'ஏஞ்ஜிலிஸுக்கு மெட்ராசை விட்டுச் செல்ல மனமில்லை. மெட்ராசின் மையப் பகுதியான மவுண்ட் ரோட்டில் ஒரு சிறிய கடையை ஆரம்பித்தார். பின்னர் அதை மெல்ல மெல்ல ஒரு உணவகமாக மாற்றினார். இப்படித்தான்  மவுண்ட் ரோட்டில் இன்று பாட்டா ஷோரூம் இருக்கும் இடத்தில், 1906ஆம் ஆண்டு தி'ஏஞ்ஜிலிஸ் ஹோட்டல் தொடங்கப்பட்டது.

சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு அருகில் இருப்பதாலும், எதிரிலேயே அரசினர் இல்லம் இருந்ததாலும் தி'ஏஞ்ஜிலிஸ் இந்த இடத்தை தேர்வு செய்தார். அவரது ஹோட்டல் அந்த காலத்தில் மெட்ராசிற்கு வரும் ஆங்கிலேயர்களுக்கு சொர்க்கபுரியாகவே திகழ்ந்தது. வேறெங்கும் கிடைக்காத விதவிதமான மேற்கத்திய உணவுகள், தங்குவதற்கு விசாலமான அறைகள், விளையாடி மகிழ பில்லியர்ட்ஸ் மேஜைகள் என விருந்தினர்களுக்கு தேவையான அனைத்தும் இங்கு கிடைத்தன. அந்த காலத்திலேயே இந்த ஹோட்டலில் லிப்ட் வசதி இருந்தது. ஒவ்வொரு அறையிலும் மின்விசிறிகள் இருந்தன, மாமிசத்தை பதப்படுத்தி வைக்க குளிர்பதன அறைகள் கூட இங்கிருந்தன.

ஓரே சமயத்தில் 100 பேர் உணவருந்தக் கூடிய வகையில் முதல் தளத்தில் விசாலமான டைனிங் ஹால் இருந்தது. வங்கக் கடல் காற்று வருடிக் கொடுக்க, மாலை வேளையில் மேற்கத்திய இசையை ரசித்தபடியே ஏகாந்தத்தில் மிதக்க வசதியாக, பின்புறம் தோட்டத்தில் மரங்களின் நிழலில் மேஜை போட்டு சிற்றுண்டிகள் பரிமாறப்பட்டன. சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து வாடிக்கையாளர்களை அழைத்து வரவும், மீண்டும் கொண்டு சென்று விடவும் பேருந்து வசதியையும் இந்த ஹோட்டல் வழங்கியது. அதே பேருந்தில் வாடிக்கையாளர்கள் சென்னை நகரையும் சுற்றிப் பார்த்து வரலாம்.

இப்படி வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்து கொடுத்ததால், இந்த ஹோட்டலுக்கு அன்றைய ஆங்கிலேய அதிகாரிகள் வட்டத்தில் பலத்த வரவேற்பு இருந்தது. மெட்ராசின் ஆளுநராக யார் வந்தாலும், அரசின் உணவு ஆர்டர்கள் தி'ஏஞ்ஜிலிஸ் வசமே ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில் 1934ஆம் ஆண்டு விடுமுறையைக் கழிக்க இத்தாலி சென்றிருந்த, தி'ஏஞ்ஜிலிஸ் அங்கேயே காலமானார். இதனையடுத்து இந்த ஹோட்டல் பொசோட்டோ என்ற இத்தாலியரின் வசம் வந்தது. பின்னர் ஹோட்டல் பொசோட்டோ பிரதர்ஸ் (HOTEL BOSOTTO BROS) என்ற பெயரில் செயல்படத் தொடங்கியது. இரண்டாம் உலகப் போரின்போது, பொசோட்டோ தனது தாயகத்திற்கு திரும்பி விட்டதால், 1950ஆம் ஆண்டு முசலப்ப சவுத்ரி என்பவர் ரூ.15,000 கொடுத்து இந்த ஹோட்டலை வாங்கினார். இப்படி அடுத்தடுத்த கைகளுக்கு மாறி, இன்று கால்களை அலங்கரிக்கும் பாட்டா ஷோரூம் ஆகியிருக்கிறது ஹோட்டல் தி'ஏஞ்ஜிலிஸ். மொத்தத்தில் கால ஓட்டத்தில் எத்தனையோ கால்கள் வந்துபோன இந்த இடம், இன்று கால்களுக்காகவே வந்துபோகும் இடமாக மாறி இருக்கிறது.


நன்றி - தினத்தந்தி

* 1884இல் ஊட்டியில் இயங்கி வந்த ஹோட்டல் ஒன்றை (Dawson Ootacamund) விலைக்கு வாங்கி சிறிது காலம் நடத்தி வந்தார் தி'ஏஞ்ஜிலிஸ்.

* தி'ஏஞ்ஜிலிஸ் தான் மெட்ராஸ் வான்வெளியில் முதல் விமானத்தை ஓட்டியவர். இந்த விமானத்தை இவரே வடிவமைத்தார்.

Sunday, April 1, 2012

பி ஆர் அண்ட் சன்ஸ்

1843இல் மெட்ராஸ் வந்த ஸ்காட்லாந்து சகோதரர்களோடு தொடங்குகிறது பி ஆர் அண்ட் சன்ஸ் (P.Orr & Sons) நிறுவனத்தின் கதை. சில நிமிடங்களில் கரைந்து மறைந்துவிடக் கூடிய ஐஸ் வியாபாரத்தில் ஆரம்பித்த அவர்களுக்கு, காலத்தால் கரைக்க முடியாதபடி மெட்ராஸ்வாசிகளின் நினைவுகளில் என்றுமே பெண்டுலம் ஆடப் போகிறோம் என்பது அப்போது தெரியாது.

சகோதரர்கள் பீட்டர் ஆரும் (Peter Orr) அலெக்சாண்டர் ஆரும் (Alexander Orr) நரைக்கத் தொடங்கிய நாற்பதுகளில் மெட்ராஸ் வந்தனர். மூத்தவர் பீட்டர் ஆர், கடிகாரம் தயாரிப்பதில் வல்லவர், இளையவர் அலெக்சாண்டர் ஆர் ஒரு வழக்கறிஞர். ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து ஆரம்பத்தில் மெட்ராசில் 4 அணாக்களுக்கு ஒரு பவுண்ட் ஐஸ் விற்றார்கள். பின்னர் இங்கிருந்த ஜியார்ஜ் கார்டன் அண்ட் கோ (George Gordon & Co) என்ற கடிகார நிறுவனத்தில் சேர்ந்தனர்.

நிறுவனரான கார்டன் 1849இல் ஓய்வு பெற முடிவு எடுத்தபோது, அவரிடம் இருந்து இந்த நிறுவனத்தை வாங்கிக் கொண்டனர். பின்னர் கடிகார விற்பனையில் முன்னணி நிறுவனம் என்ற பெயரைப் பெறுவதற்காக சகோதரர்கள் இருவரும் கடுமையாக உழைத்தனர். புத்திசாலி பொறியாளரான பீட்டர் ஆர், கடிகாரத் தயாரிப்பு மட்டுமின்றி, வேறு சில விஷயங்களிலும் தமது திறனை காட்டத் தொடங்கினார். அப்படி அவர் உருவாக்கியதுதான், நீராவியில் இயங்கும் சாமரம் வீசும் இயந்திரம்.

மூத்தவர் பீட்டர் ஆரின் மகன்களான ஜேம்சும், ராபர்ட்டும் கடிகாரத் தயாரிப்பில் சுவிட்சர்லாந்தில் பயிற்சி பெற்று திரும்பியதும், 1850களில் இந்நிறுவனத்தில் சேர்ந்தனர். 1863இல் இதன் பங்குதாரர்களாகவும் உயர்ந்தனர். இப்படித்தான் பி ஆர் அண்ட் சன்ஸ் என்ற பெயர் வந்தது. 1866இல் பீட்டர் இங்கிலாந்து திரும்பிவிட, 1869இல் ஜேம்ஸ் இறந்துவிட, நிறுவனம் மொத்தமாக ராபர்ட்டின் வசம் வந்தது. ராபர்ட் பி ஆர் அண்ட் சன்ஸ் பெயரை இந்தியாவில் பிரபலப்படுத்தியதோடு அல்லாமல் கடல் கடந்தும் புகழைப் பரப்பினார்.

இந்நிலையில் 1879இல்தான் பிராட்வேயில் இருந்த நிறுவனம் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக மவுண்ட் ரோட்டில் ஒரு அழகிய கட்டடம் கட்டும் பணி அப்போதைய மெட்ராஸ் அரசின் மூத்த கட்டட ஆலோசகரான ராபர்ட் சிஸ்ஹோமிடம் (Robert Chisholm) ஒப்படைக்கப்பட்டது. பிரசிடென்சி கல்லூரி, மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் செனட் இல்லம் போன்ற பல கட்டடங்கள் இவரது கை வண்ணத்தில் உருவானவைதான்.

இந்தோ-சராசனிக் பாணியில் கைதேர்ந்த ராபர்ட் சிஸ்ஹோம், அதனுடன் கால் கிலோ கேரள பாணியையும் சேர்த்து கூரைத் தொப்பி எல்லாம் போட்டு, பி ஆர் அண்ட் சன்ஸுக்காக ஒரு அருமையான கட்டடத்தை கட்டிக் கொடுத்தார். உள்ளே நுழைந்ததும் 60 அடி நீளத்திற்கு பிரம்மாண்டமான ஷோ ரூம், மேலே கண்ணைக் கவரும் சர விளக்குகளுடன் வாடிக்கையாளர்களை வரவேற்றது. பின் பகுதியில், கடிகாரங்களை பழுது நீக்க ஒரு வொர்க் ஷாப் அமைக்கப்பட்டது. மெட்ராஸ்வாசிகளுக்கு மிகத் துல்லியமான நேரத்தை தெரிவிக்க, கட்டடத்தின் முகப்பு கோபுரத்தில் மூன்று முக கடிகாரம் ஒன்றும் பொருத்தப்பட்டது. இந்த கட்டடத்தில்தான் சுமார் 130 ஆண்டுகளைக் கடந்தும் பி ஆர் அண்ட் சன்ஸ் செயல்பட்டு வருகிறது.

கடிகாரம் மட்டுமின்றி தங்க, வைர நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள் ஆகியவற்றின் விற்பனையிலும் பி ஆர் அண்ட் சன்ஸ் அந்நாட்களில் கொடி கட்டிப் பறந்தது. இங்கிருந்த வொர்க் ஷாப்பில் மிக நேர்த்தியான தங்க, வைர நகைகளும், வெள்ளிப் பாத்திரங்களும் செய்யப்பட்டன. 1880களில் இந்நிறுவனத்தின் வைரத்திற்கு இந்தியா முழுவதும் மிகப் பெரிய வரவேற்பு இருந்தது. ஐதராபாத் நிஜாம் முதல் வேல்ஸ் இளவரசர் வரை பலர் இதன் வாடிக்கையாளர்களாக இருந்தனர். ரங்கூன் கிளையில் இருந்து மவுண்ட் ரோடு அலுவலகத்திற்கு விலை உயர்ந்த கற்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இரண்டாம் உலகப் போரின் போதுதான் இது தடைபட்டது.

அதேசமயம் போரையும் இந்நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. நகைகள் போன்ற விஷயங்களை நிறுத்திவிட்டு, அதற்கு பதில் போர்க் காலத்தில் தேவையான ஏரோப்ளேன் மீட்டர் போன்ற உபகரணங்களை தயாரிக்கும் பணியில் இறங்கியது. போரில் சேதமான ஆயுதங்களை பழுது நீக்கித் தரும் பணியும் பின்னால் இருந்த வொர்க் ஷாப்பில் மும்முரமாக நடைபெற்றது. போருக்கு முன்பு நகைகள் மட்டுமின்றி, சர்வே உபகரணங்கள், துணிவகைகள், சமையல் பாத்திரங்கள், பேனா, சைக்கிள், கார் என பலதரப்பு பொருட்களும் இங்கு கிடைத்தன. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இதில் ஒவ்வொரு பொருளாக மெல்ல விடை பெறத் தொடங்கியது.

இதனிடையே இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் மாறினார்கள். அனந்தராமகிருஷ்ணனின் அமால்கமேஷன் குழுமத்தின் கைக்குப் போன நிறுவனம், 1967இல் அவரது நண்பர் கருமுத்து தியாகராஜ செட்டியாரின் வசம் சென்றது. பின்னர் மெல்ல மெல்ல பி ஆர் அண்ட் சன்ஸ் தனது பழைய கடிகாரத் தொழிலுக்கே திரும்பியது.

ஒரு காலகட்டத்தில் மெட்ராசில் இருந்த பெரும்பாலான வீடுகள் மற்றும் அலுவலகங்களை பி ஆர் அண்ட் சன்ஸ் கடிகாரங்களே அலங்கரித்துக் கொண்டிருந்தன. இப்படி வாட்ச் சக்கரங்களுக்கு வாழ்வை அர்ப்பணித்த பி ஆர் சகோதரர்கள், காலச் சக்கரத்தால் மறக்கடிக்கப்படாமல் இன்றும் நமது நினைவுகளில் சுற்றிச் சுழன்று கொண்டே இருக்கிறார்கள்.

நன்றி - தினத்தந்தி

* 1949இல் இதன் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட ராஜாஜி, இளைஞர்களின் கைத்திறனை வளர்ப்பதில் இந்நிறுவனம் பெரும் பங்காற்றி வருவதாகப் பாராட்டினார்.

* கனடாவில் உள்ள ராயல் ஒண்டாரியோ அருங்காட்சியகத்தில் பி ஆர் அண்ட் சன்ஸ் தயாரித்த காபி கப் ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

* மெட்ரோ ரயில் பணிகளுக்காக இந்நிறுவனத்தின் வொர்க் ஷாப் இடிக்கப்படும் என்ற அறிவிப்பு, சமூக ஆர்வலர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.