என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Thursday, September 30, 2010

அறிவிப்பு

நண்பர்களே,
தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவை கொண்டாடி முடித்திருக்கிறோம். ராஜராஜ சோழனின் அருமை பெருமைகளை பேசியும், எழுதியும் மகிழ்ந்தோம். ஆனால் இந்த பிற்கால சோழப் பேரரசிற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த ஆதித்த சோழனை மறந்துவிட்டோம். அந்த பேரரசனின் சமாதி சென்னைக்கு அருகில் இருக்கிறது என்று கேள்விப்பட்டு, தேடி அலைந்து கண்டுபிடித்துவிட்டேன். அங்கு ஒரு பள்ளிப்படைக் கோவில் சிதிலமடைந்து கிடக்கிறது. அந்த பயணம் பற்றியும், கோவில் பற்றியும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். அது இன்று (01.10.10) வெளியான 'புதிய தலைமுறை' இதழில் பிரசுரமாகி இருக்கிறது. படித்துவிட்டு தங்களின் மேலான கருத்துகளை தெரிவியுங்கள்.

Monday, September 27, 2010

சிவன் நடனமாடும் காடுசிவபெருமானுக்கும் காளிக்கும் ஒருமுறை நடனப் போட்டி நடைபெற்றது. போட்டி உச்சகட்டத்தை எட்டிக்கொண்டிருந்தது. காளியின் கையே ஓங்கியிருந்த நிலையில் சிவனின் காதில் இருந்த தோடு திடீரென கழன்று விழுந்தது. சிவன் நடனமாடியபடியே அதனை தனது இடது கால் விரல்களால் பற்றி எடுத்து காதில் அணிந்துகொண்டார். இவ்வாறு காலை உடம்புடன் ஒட்டியபடி தலை வரை தூக்கி ஆடும் நடனம் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும். பெண்ணான காளியால் இவ்வாறு ஆட முடியாததால் போட்டியில் சிவனிடம் தோல்வியுற்றார். இந்த போட்டி நடந்த இடம் தான் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு. இங்கு சிவனுக்கும், காளிக்கும் தனித்தனியாக கோவில்கள் இருக்கின்றன.

காரைக்கால் அம்மையார் சிவனைத் தரிசிக்க திருவாலங்காட்டிற்கு வந்தபோது, அந்த இடம் முழுவதுமே சிவன் ரூபமாக காட்சியளித்ததால் கால் வைக்கத் தயங்கி, தலையால் நடந்து வந்து சிவனை வழிபட்டதாகவும் ஒரு கதை உண்டு. காரைக்கால் அம்மையார் இந்த தலத்தில்தான் முக்தி பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த கோவிலில் காரைக்கால் அம்மையாருக்கும் ஒரு சந்நிதி உள்ளது. இங்கு எழுந்தருளி இருக்கும் இறைவன் வடாரண்யேசுவரர், ஊர்த்துவ தாண்டவர், தேவர்சிங்கப் பெருமான், ஆலங்காட்டு அப்பர் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் வண்டார் குழலம்மை.

கிழக்கு நோக்கி இருக்கும் இந்த கோவிலின் 5 நிலை ராஜகோபுரம் அழகிய சுதை வேலைப்பாடுகளுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. கோபுர நுழைவு வாயிலுக்கு இடதுபுறம் ஒரு சிறிய சந்நிதியில் அருள்மிகு வல்லப கணபதி காட்சி தருகிறார். வலதுபுறம் உள்ள சந்நிதியில் வள்ளி, தெய்வானையுடன் அருள்மிகு சண்முகர் எழுந்தருளியுள்ளார். நுழைவு வாயிலைத் தாண்டியதும் பலி பீடம், கொடி மரம், நந்தி மண்டபம் மற்றும் 3 நிலைகளையுடைய இரண்டாவது கோபுரம் காட்சியளிக்கிறது. இதிலும் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்த கோபுரத்தை ஒட்டிய மதிற்சுவரின் மேல் இடதுபுறம் காரைக்கால் அம்மையார் வரலாறும், வலதுபுறம் மீனாட்சி திருக்கல்யாண வரலாறும் அழகிய சுதைச் சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றதும் இரண்டாவது சுற்றுப் பிரகாரம் வருகிறது. வலதுபுறத்தில் இறைவி வண்டார் குழலம்மையின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. நேரே இறைவன் கருவறைக்குச் செல்லும் நுழைவு வாயில். இந்த வாயிலின் மேற்புறம் சிவபெருமானின் ஐந்து சபைகளும் வரிசையாக செதுக்கப்பட்டுள்ளன. இதில் இத்தலம் ரத்தின சபை என்றும், இதுவே முதன்மையான சபை என்றும் குறிக்கப்பட்டுள்ளது. நேரே உள்ளே சென்றால் கருவறையில் இறைவன் வடாரண்யேஸ்வரர் லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். வடாரண்யேஸ்வரரை ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்கிறது இந்த கோவிலின் தலப் புராணம். இத்தலத்தில் உள்ள உற்சவர் நடனமாடியபடி காட்சியளிப்பதால் ரத்தின சபாபதி என்று அழைக்கப்படுகிறார்.

நடராஜர் சந்நிதிக்கு மேல் தாமிரத்தினால் விமானம் வேயப்பட்டுள்ளது. நடராஜர் சந்நிதிக்கு எதிரே காளியின் சந்நிதி உள்ளது. இந்த தலத்தின் பெருமையை அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர் பாடியுள்ளனர். கோவிலுக்கு வெளியே மிகப்பெரிய குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் காளிக்கென தனிக்கோவில் உள்ளது. திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது. திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இறங்கியும் கோவிலுக்கு வரலாம். பேருந்து வசதியும் உண்டு.

தமிழக சரித்திரத்தின் முக்கியமான பகுதிகளை வெளிப்படுத்திய செப்பேடுகள் திருவாலங்காட்டில் கிடைத்துள்ளன. ஒரு பெரிய வளையத்தில் சேர்த்து சோழ முத்திரையுடன் தமிழிலும், வடமொழியிலும் பொறிக்கப்பட்ட சாசனங்களுடன் கிடைத்த 22 செப்பேடுகள் சோழ வரலாறு குறித்து பல அரிய தகவல்களைச் சொல்கின்றன. இவை தற்போது சென்னை அரும்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.


Thursday, September 23, 2010

பாவம் பெரிய ஓக்


பெரிய ஓக் என்ற பெயரைக் கேட்டதும் ஏதோ பெரிய நாட்டாமை போல என்று நினைத்துவிடாதீர்கள். எந்த வம்புதும்புக்கும் போகாத சாது பறவைதான் பெரிய ஓக் (பிங்குயினஸ் இம்பென்னிஸ் அல்லது அல்கா இம்பென்னிஸ்). பார்ப்பதற்கு பெரிதாக இருப்பதால் பெரிய ஓக் என்று பெயர் வைத்துவிட்டார்கள். இது பென்குயின் போலவே இருக்கும். உண்மையில் பென்குயின்களுக்கு அந்த பெயர் வரக் காரணமாக இருந்ததே இந்த பெரிய ஓக் தான்.

பெரிய ஓக்குகள் ஒரு காலத்தில், கனடாவுக்கு அப்பாலுள்ள தீவுகளிலும், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, அயர்லாந்து மற்றும் பிரிட்டன் போன்ற இடங்களில் பெருமளவில் காணப்பட்டன. 75 முதல் 85 சென்டி மீட்டர் உயரம் கொண்ட இந்த பறவை சுமார் 5 கிலோ எடை இருக்கும். பெரிய ஓக்குகள் நன்றாக நீந்தக் கூடியவை. சிறகுகளை பயன்படுத்தி நீருக்கடியில் அருமையாக நீந்தும். இவை 25 வயது வரை உயிர்வாழும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். பெரிய ஓக்குகள் ஒரு வருடத்தில் ஒரு முட்டையை மாத்திரமே இடுகின்றன.

சிறிய கழுத்து, குட்டி கால்களுடன் மெல்ல அசைந்து அசைந்து நடந்து வரும் பெரிய ஓக் பெயரளவில் பறவைதான் என்றாலும் இதனால் பறக்க முடியாது. இதுவே இவற்றின் அழிவிற்கு முக்கிய காரணமாகிவிட்டது. சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே பெரிய ஓக்குகள் மனிதர்களுக்கு அறிமுகமாகியிருக்கின்றன. 35 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஸ்பெயின் நாட்டில் உள்ள எல் பிண்டோ குகைகளில் இவற்றின் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன.

8 ஆம் நூற்றாண்டிலிருந்து இவை, உணவுக்காகவும், மெத்தைகள் செய்வதற்காகவும் மனிதர்களால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வந்தன. இவை முற்றிலுமாக அழிந்து போகும் வரை மனிதர்கள் ஓயவில்லை. இவ்வினத்தின் கடைசி ஜோடி, 1844, ஜூலை 3ல் ஐஸ்லாந்துக்கு அப்பாலுள்ள ஒரு தீவில் கொல்லப்பட்டன.

பெரிய ஓக்குகள் வெல்ஷ் மொழியில், அவற்றின் தலையிலுள்ள வெள்ளை நிறத்தை வைத்து, "வெண் தலை" எனப் பொருள்படும் பென் க்வின் என அழைக்கப்பட்டன. இதுவே "பென்குயின்" என்ற பெயருக்கு அடிப்படை. கடற்பயணங்களின் போது பெரிய ஓக்கை ஒத்த பறவைகளைக் கண்ட பயணிகள் அவற்றையும் அதே பெயரிலேயே அழைத்தனர்.

பெரிய ஓக்குகள் பரலோகம் போய்விட்ட நிலையில் இப்போது பென்குயின்கள் மட்டுமே நமது பார்வைக்கு எஞ்சியிருக்கின்றன.

Monday, September 20, 2010

சிரிக்கும் ஆந்தை


"சிரிக்கும் ஆற்றலை இயற்கை மனிதர்களுக்கு மட்டும்தான் கொடுத்திருக்கிறது என்று யார் சொன்னது, எங்களுக்கும்தான் அளித்திருக்கிறது" என்கின்றன நியுசிலாந்து நாட்டில் காணப்படும் ஒரு வகை ஆந்தைகள். இவற்றின் பெயரே சிரிக்கும் ஆந்தைகள்தான். சிரிப்பென்றால் அப்படியொரு சிரிப்பு, பைத்தியம் பிடித்தவன் நிறுத்தாமல் வெறித்தனமாக சிரிப்பது போல இவற்றின் சிரிப்பு இருக்கும் என்கிறார்கள் காதுகொடுத்து கேட்டவர்கள். இவை கூட்டமாக கூடிச் சிரிப்பதைக் கேட்டு அலறி அடித்து ஓடியவர்கள் ஏராளம்.

சுமார் 15 இன்ச் உயரம் இருக்கும் இந்த ஆந்தை, சிவப்பு நிற உடலோடும் வெள்ளை நிற முகத்தோடும் காட்சியளிக்கும். இதனால் இதனை வெள்ளை முக ஆந்தை என்றும் அழைப்பார்கள். இதில் வடக்குத் தீவு ஆந்தைகள், தெற்குத் தீவு ஆந்தைகள் என இருவகைகள் இருக்கின்றன. தெற்குத் தீவு ஆந்தைகள் சற்று பெரியதாக இருக்கும். ஆனால் இரண்டு வகைகளிலும் ஆண் ஆந்தைகள் பெண்களை விட சிறியதாக இருக்கும். இவை பெரும்பாலும் மழை குறைவான, மலைப்பாங்கான இடங்களில் தங்கியிருக்கும். பல்லி, பூச்சிகள், சிறு பறவைகள் போன்றவைதான் இதன் டயட். பாறை இடுக்குகள், பெரிய பாறைகளுக்கு அடியில் போன்ற பாதுகாப்பான இடங்களில் காய்ந்த புற்களைப் பரப்பி அதன் மீது முட்டையிடும். ஒரு சமயத்தில் இரண்டு முட்டைகள்தான் இடும்.

"டாக் வைல் வாக்" விளம்பரம்போல இந்த ஆந்தையார் பறக்கும்போது தான் சவுண்ட் விடுவார். பெரும்பாலும் இருள் சூழ்ந்த நேரத்தில் அல்லது மழை வருவதற்கு முன் அல்லது தூறல் போடும் இரவுகளில் ஆந்தையாரின் கச்சேரியை நாம் ரசிக்கலாம். இது தூரத்தில் இருக்கும் யாரையோ அழைப்பதற்கு கூவுவதற்கு போலவும், ஒரு குட்டி நாய் குரைப்பது போலவும், வேதனை கலந்த வீறிடல் போலவும் இருப்பதாக கேட்டவர்கள் கூறுகிறார்கள்.

1880களுக்கு பிறகு அரிதாகிப் போன இந்த வகை ஆந்தைகள் 1914ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் அழிந்துபோனதாக கருதப்படுகிறது. காரணம் அப்போதுதான் நியுசிலாந்தின் கான்டர்பரி என்ற பகுதியில் கடைசி ஆந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதன் பிறகு சிரிக்கும் ஆந்தையின் அடிவயிற்றைக் கலக்கும் சிரிப்பைக் கேட்டதாக பல இடங்களில் பலர் கூறியிருந்தாலும், அதற்கான நிரூபிக்கக் கூடிய ஆதாரம் எதுவும் இல்லை. ஐரோப்பியர்களின் வருகையால் நியுசிலாந்தில் மரநாய், கீரி, பூனை போன்ற விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்ததும், அவை ஆந்தையின் உணவில் கை வைத்ததும் இவை அழிந்துபோனதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் இன்றும் இரவு நேரத்தில் மலைப் பிரதேசங்களில் பயணிப்பவர்கள் சிரிக்கும் ஆந்தையின் குரலைக் கேட்பதாகக் கூறுகிறார்கள்.

இது தமிழ் சினிமாக்களில் இரவில் சோகமாக பாடிக் கொண்டே செல்லும் ஆவிகளைப் போல, அழிந்து போன ஆந்தைகளின் ஆவிக் கச்சேரியா அல்லது ஆய்வாளர்களின் கண்ணில் படாமல் கண்ணாமூச்சி ஆடும் மீதமிருக்கும் ஆந்தைகளின் அக்மார்க் அலறலா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Thursday, September 16, 2010

மதராசப்பட்டினம்தருமமிகு சென்னையாக இருந்து தற்போது சிங்காரச் சென்னையாக மாற முயற்சித்து வரும் இந்த மாநகரின் பெயர், பல நூற்றாண்டுகளாக மெட்ராஸ்தான். இதனை மெட்ராஸ்பட்னம், மதராபட்னம், மத்ராஸ்படான், மதராஸ்படம், மதரேஸ்பட்னம், மத்தராஸ், மதராஸ், மதரேஸ்படான், மதராஸாபடான், மாத்ரிஸ்பட்னம், மதேராஸ், மதிராஸ் என ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும், டச்சுக்காரர்களும், போர்த்துகீசியர்களும் அவரவர் வசதிக்கேற்ப அழைத்திருக்கிறார்கள். இந்த மெட்ராஸ் அல்லது மதராஸ் என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு நிறைய கதைகள் இருக்கின்றன.

1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி, பிரான்சிஸ் டே என்ற கிழக்கிந்திய கம்பெனி ஏஜெண்ட் சோழமண்டலக் கடற்கரையில் ஒரு துண்டு பொட்டல் நிலத்தை வாங்கினார். ஓராண்டுக்கு பின்னர் பிரிட்டீஷார் அந்த இடத்தில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டினர். கோட்டையை சுற்றி மெல்ல வளர்ந்து விரிவடைந்ததுதான் இன்றைய சென்னை மாநகரம். இதுதான் சென்னையின் 'சுருக்' வரலாறு.

பிரான்சிஸ் டே வாங்கிய நிலம், சில மீனவக் குடும்பங்களும், இரு பிரெஞ்சு பாதிரியார்களும் வசித்த சிறிய கிராமத்திற்கு தெற்கே இருந்தது. அந்த கிராமத்தின் ரோமன் கத்தோலிக்க தலையாரியின் பெயர் மாதராஸன் என்றும், எனவே அந்த கிராமம் மாதராஸ்பட்னம் என்றும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தலையாரியின் வாழைத் தோட்டத்தை, தொழிற்சாலை அமைப்பதற்காக டே வாங்கினார். நிலத்தை கொடுக்க அவர் முரண்டு பிடித்ததால், அங்கு அமையவிருக்கும் தொழிற்சாலைக்கு மாதராஸன்பட்னம் எனப் பெயரிடுவதாக வாக்களித்து, டே நிலத்தை வாங்கினாராம்.

மதராஸ் என பெயர் வந்ததற்கு வேறு ஒரு சுவையான காரணமும் கூறப்படுகிறது. ஆங்கிலேயர்களுக்கு முன்பே சாந்தோம் பகுதியில் போர்த்துகீசியர்கள் வசித்து வந்தனர். இங்கு பிரான்சிஸ் டேவிற்கு ஒரு காதலி இருந்தார். அவருக்கு அருகிலேயே வசிக்க வேண்டும் என்பதாலேயே டே அந்த துண்டு நிலத்தை தேர்வு செய்தார் என்று ஒரு கதை உள்ளது. டேவின் காதலி சாந்தோமில் அந்நாட்களில் செல்வாக்குடன் வாழ்ந்துவந்த மாத்ரா குடும்பத்தை சேர்ந்தவர். கடற்கரை ஓரத்தில் இருந்த நிறைய குப்பங்கள் அவர்களுக்கு சொந்தமாக இருந்தன. எனவே, டே தனது காதலியின் குடும்பப் பெயரை சூட்டியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

எக்மோர் ஆற்றுக்கும் கூவம் ஆற்றுக்கும் இடையில் இருந்த நிலம், சந்திரகிரி ராஜாவிற்கு சொந்தமானது. அதனை வாங்க அவரது உள்ளூர் நாயக்குகளான தாமர்லா சகோதரர்களிடம் பிரான்சிஸ் டே பேரம் பேசினார். அவர்கள் தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கரின் பெயரை, புதிதாக அமையவிருக்கும் குடியிருப்புக்கு சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்நிலத்தை கிழக்கிந்திய கம்பெனிக்கு பட்டா எழுதிக் கொடுத்தனர். இதனால் அந்த பகுதிக்கு சென்னப்பட்டினம் எனப் பெயர் சூட்டப்பட்டது. மதராஸபட்டினம் வடக்கிலும், சென்னப்பட்டினம் தெற்கிலும் இருந்த இருவேறு பகுதிகள். பின்னர் காலப்போக்கில் இரண்டையும் ஒருங்கிணைத்து மதராஸ் என ஆங்கிலேயர்கள் அழைக்கத் தொடங்கினர்.

பிரபலமான இந்த பெயர் காரணங்கள் தவிர வேறு பல காரணங்களும் கூறப்படுகின்றன. சோழமண்டல கடற்கரையில் வரும் இப்பகுதி, சோழப் பேரரசின் சிற்றரசர்களான முத்தரையர்கள்வசம் கொஞ்ச காலம் இருந்ததால், இது முத்தராசபட்டினம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது முத்தராசா, முத்ராஸ், மத்ராஸ் என மருவியிருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

ஆற்காடு நவாப்புகள் மதராஸ்பட்டினத்தில் இருந்த மதராஸா எனும் சமயப் பள்ளிகளுக்கு பல தலைமுறைகளாக காப்பாளர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். மதராஸா என்றால் சமயப்பள்ளி என்று பொருள். அதனால் மதராஸா என்ற சொல்லிலிருந்துதான் மதராஸ் எனும் பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள்.

இதேபோன்று சென்னை பெயருக்கு பின்னாலும் பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஒருகாலத்தில் சென்னையைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகள் செம்மை நிறத்தில் காணப்பட்டன. அதனால் அந்தப் பகுதிக்கு செம்மை என்று பெயர் வைக்கப்பட்டது. நாளடைவில் செம்மை என்பது சென்னையாக மாறிப்போனது என்பது ஒரு கருத்து.

செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மிக அருகிலேயே காளிகாம்பாள் கோயில் இருந்ததால் பக்தர்களுக்கு பல சிரமங்கள் ஏற்பட்டன. அதனால் தம்பு செட்டித் தெருவில் ஒரு புதிய கோயிலைக் கட்டி அம்மனை அங்கு மாற்றினார்கள். ஏற்கனவே, கோட்டைப் பகுதிக்குள் கோயில் இருந்ததால் கோட்டையம்மன் என்ற பெயரும் அதற்கு உண்டு. இந்தக் காளிகாம்பாள் அம்மனுக்கு செந்தூரம் பூசி வழிபட்டார்கள். எனவே அம்மனை சென்னம்மன்என்று அழைத்தார்கள். சென்னம்மன்குடியிருக்கும் அந்த இடம் படிப்படியாக வளர்ச்சி கண்டது. நாளடைவில் சென்னம்மன் சென்னையாக மாறியதாக ஒரு தரப்பினர் சொல்கின்றனர். சென்னம்மன் என்பதை செம் அன்னை என்றும் சிலர் அழைத்தனர். இந்தச் செம் அன்னை தான் சென்னை என மாறியதாக கூறப்படுகிறது.

சென்னைப் பகுதியில் சென்னக் கேசவப் பெருமாள் கோயில் எனும் பெயரில் ஒரு கோயில் இருந்தது. இப்போதும் இருக்கிறது. இந்தக் கோயில் நகரத்தின் முதன்முகப்பில் இருந்ததால், இக்கோயில் இருந்த நகரத்திற்கு சென்னை என்ற பெயர் வந்ததாகச் சிலர் கூறுகின்றனர். சென்னக் கேசவப் பெருமாள் என்பது சரியா, இல்லை சின்னக் கேசவப் பெருமாள் என்பது சரியா எனத் தெரியவில்லை. சின்னஎன்ற சொல் சென்னஎன்று மாறிப் போனதாகவும் செய்திகள் உள்ளன.

இப்படி தனது பெயருக்கு பின்னால் ஏராளமான மர்மங்களை ஒளித்து வைத்தபடி, ஆங்கிலத்தில் மெட்ராஸ் என்றும், தமிழில் சென்னை என்றும் அழைக்கப்பட்டு வந்த இந்நகரம், இனி அனைத்து மொழிகளிலும் சென்னை என்றே அழைக்கப்படும் என 1996ஆல் தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மதராஸ் அதிகாரப்பூர்வமாக சென்னை என்று புதுப்பொலிவு பெற்றது.

Wednesday, September 15, 2010

உயிர்த்தெழுந்த குதிரை


டர்பன் என்ற காட்டுக் குதிரையின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. சுமார் கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தெற்கு பிரான்ஸ், ரஷ்யா, ஸ்பெயின் என ஐரோப்பிய காடுகளில் காற்றைக் கிழித்திக் கொண்டு பறந்து கொண்டிருந்தது இந்த டர்பன் குதிரை. டர்பன் என்றால் துருக்கிய மொழியில் காட்டுக் குதிரை என்று அர்த்தம்.

கட்டுக்கடங்காத இந்த காட்டுக் குதிரையை ரஷ்யாவில் சைந்தியன் என்ற நாடோடிக் குழுவினர் பழக்கிப் பயன்படுத்தி வந்தனர். பிரான்சிலும், ஸ்பெயினிலும் ஆதிமனிதர்கள் வாழ்ந்த குகைகளில் டர்பனின் ஓவியங்கள் காணப்படுகின்றன. பெரிய தலையும், குட்டைக் கால்களையும் கொண்ட டர்பன்களின் உடலில் அடர்த்தியான ரோமங்கள் இருந்தன. இவைதான் ரஷ்யாவின் கடுங்குளிரில் இருந்து அவற்றை பாதுகாத்தன.

ரஷ்ய உயிரியல் பூங்கா ஒன்றில் பராமரிக்கப்பட்டு வந்த டர்பன் ஒன்று, 1909ஆம் ஆண்டு தனது மூச்சை நிறுத்திக் கொண்டு டர்பன் இனக் குதிரைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால், காடுகளில் இருந்த டர்பன்களின் கதை 1875 - 1890 காலகட்டத்திலேயே முற்றிலுமாக முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. காட்டில் இருந்த கடைசி டர்பன், அதனைப் பிடிக்க நடந்த முயற்சியில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தது.

பின்னர் இந்த இனக் குதிரைகளை மீண்டும் உருவாக்க, 1930களில் இருந்து விஞ்ஞானிகள் மூன்று முறை முயற்சித்தனர். ஆனால் மூன்று முயற்சிகளும் முழுமையாக வெற்றி பெறவில்லை. அதேசமயம் இந்த முயற்சிகளின் மூலம் டர்பனின் பல குணாம்சங்கள் பொருந்திய ஹெக், ஸ்ட்ரோபெல் போன்ற குதிரைகள் உருவாக்கப்பட்டன. டர்பன் என்ற காட்டுக் குதிரைகள் இந்த பூமியில் ஒருகாலத்தில் வாழ்ந்தன என்பதை பறைசாற்றியபடி இவை உலா வந்து கொண்டிருக்கின்றன.

Monday, September 13, 2010

நூல்.. நூல்.. நூடுல்ஸ்


இன்றைய குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடும் உணவுகளில் நூடுல்சும் ஒன்று. நூல், நூலாக வளைந்து, நெளிந்து தட்டில் நிறைந்து கிடக்கும் இந்த உணவு, இன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டதல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் நூடுல்ஸை ருசித்திருக்கிறார்கள். ஆனால் இதை யார் கண்டுபிடித்தார்கள் என்பதில் குழப்பம் நிலவுகிறது.

சீனர்கள் இதனை தாங்கள் தான் கண்டுபிடித்ததாக கூறுகிறார்கள். ஆனால் 13ஆம் நூற்றாண்டில் மார்க்க போலோ இத்தாலியில் இருந்து சீனாவிற்கு சென்ற போது இந்த உணவை தன்னுடன் கொண்டு சென்றதாக இத்தாலியர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் உண்மையில் மார்க்க போலோ சீனாவில் நூடுல்ஸை பார்த்து வியந்து, அதனை தன்னுடன் இத்தாலிக்கு எடுத்துச் சென்றதாக சீனர்கள் மறுக்கின்றனர்.

நீண்ட பாலைவனங்களில் பயணிக்கும்போது எளிதில் கெட்டுப் போகாத உணவுகளை கொண்டு செல்ல வேண்டி இருந்ததால், நூடுல்ஸை கண்டுபிடித்ததாக அராபியர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். ஜப்பான், கொரியா, பிரான்ஸ், ஜெர்மன் என பல நாடுகள் நூடுல்ஸ் தங்களுடைய கண்டுபிடிப்பு தான் என சொந்தம் கொண்டாடுகின்றன. இந்த சூழ்நிலையில் தான், சீன தொல்பொருள் ஆய்வாளர்கள் 4000 ஆண்டுகள் பழமையான நூடுல்ஸ் நிறைந்த பாத்திரம் ஒன்றை சீனாவின் வடமேற்கு பகுதியில் கண்டெடுத்திருக்கின்றனர். இதன் மூலம் சீனர்கள் 4000 ஆண்டுகளுக்கு முன்பே நூடுல்ஸை ஒரு கை பார்த்திருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது.

நூடுல்ஸ் நீண்ட நூல் போல் இருப்பதால், இதனை சாப்பிடுவதன் மூலம் தங்கள் ஆயுளும் அதுபோல நீளும் என சீனர்களிடையே ஒரு நம்பிக்கை உள்ளது. அவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கூட கேக்கிற்கு பதிலாக இந்த நூடுல்ஸை தான் பரிமாறுகின்றனர். ஜப்பானிலும் நூடுல்ஸ் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே இருக்கிறது. இப்படியே பல நாடுகளுக்குள்ளும் நுழைந்து, உலக உருண்டையை சுருட்டிவிட்டது நூடுல்ஸ். இன்று ஏறத்தாழ அனைத்து நாட்டு மக்களும் நூடுல்ஸை ரசித்து, ருசித்து சாப்பிடுகின்றனர்.

நூடுல்ஸ் சாப்பிடுவதன் மூலம் ஆயுள் நீளும் என்ற சீனர்களின் நம்பிக்கை உண்மையா எனத் தெரியவில்லை. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக தொடரும் நூடுல்ஸின் ஆயுள் மிக மிக... நீளம் என்பது மட்டும் உண்மை.

Saturday, September 11, 2010

ஐஸ்கிரீமின் கதை


'அடிக்குற வெயிலுக்கு ஒரு ஹாக்கி பாக்கி சாப்பிடலாம் வாங்க' என்று நண்பர்களை கூப்பிடுங்கள். உங்களை ஒருமாதிரி ஏற இறங்கப் பார்ப்பார்கள். அட, நாம ரசித்து ருசித்து சாப்பிடும் ஐஸ்கிரீமின் பெயர் தாங்க அது. ஐஸ்கிரீம் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில் அதை எல்லாரும் ஹாக்கி பாக்கி என்று தான் அழைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஐஸ்கிரீமைப் போலவே அது கண்டுபிடிக்கப்பட்ட கதையும் சுவையானது. இங்கிலாந்து அரசர் முதலாம் சார்லஸ், ஒருமுறை பக்கத்து நாட்டு அரசர்களை அழைத்து விருந்து வைத்தார். அந்த விருந்தின் ஸ்பெஷாலிட்டியே அதில் இடம்பெற்றிருந்த ஒரு விநோத உணவுதான். அதன் ருசியில் எல்லா அரசர்களும் மயங்கிப் போனார்கள். அதை செய்த சமையல் கலைஞரை புகழ்ந்து தள்ளினார்கள்.

இதனால் உச்சி குளிர்ந்து போன முதலாம் சார்லஸ், தனது சமையல்காரருக்கு ஆண்டுக்கு 500 தங்க நாணயங்கள் கொடுத்து கௌரவித்தார். மேலும், இந்த வித்தையை வெளியில் சொல்லக் கூடாது என்றும் கட்டளையிட்டார். ஆனால் சார்லஸ் பதவி இழந்ததும், அந்த விநோத உணவின் ரகசியம் வெளியில் கசிந்துவிட்டது. அதுதான் ஹாக்கி பாக்கி எனப்படும் இன்றைய ஐஸ்கிரீம்.

பின்னர் ஐஸ்கிரீம் ஜெட் வேகத்தில் உலகம் முழுவதும் பரவி விட்டது. சீனப் பேரரசர் ஹாங் தனது அரண்மனையில் ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கென்றே பிரத்யேகமாக 94 சமையல் கலைஞர்களை நியமித்திருந்தாராம்.

அமெரிக்காவில் ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கிண்ணங்களால் சுற்றுப்புறச் சீர்கேடு அதிகமானதால், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. எனவே ஐஸ்கிரீமை வேறு வகையில் எப்படி தயாரிக்கலாம் என பொதுமக்கள் கருத்து கூறலாம் என அமெரிக்க அரசு அறிவித்தது. அப்போது ஒருவர் கொடுத்த அட்வைஸ் தான் இன்றைய 'கோன் ஐஸ்'. இப்படியே பரிணாம வளர்ச்சி பெற்று ஐஸ்கிரீம் பல சுவைகளிலும், வடிவங்களிலும் வரத் தொடங்கிவிட்டது.

Friday, September 10, 2010

பிட்சா பிறந்த கதை


பீட்சா, பிட்சா, பிசா, பிச்சா என பலவிதங்களில் அழைக்கப்படும் பிட்சா நாகரீக இளைஞர்களின் அடையாளங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையில் பிட்சா ஏதோ இன்று நேற்று பிறந்த உணவல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்கள் இதனை உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இத்தாலி ராணியின் கடைக்கண் பார்வை கிட்டிய பிறகுதான் இதற்கு உலகப் புகழ் கிடைத்தது என்பது ஓர் சுவாரஸ்யமான கதை.

1889ஆம் ஆண்டில், ஒருநாள் இத்தாலி ராணி மெர்கரிட்டா, தனது கணவர் ராக் உம்பர்டோவுடன் நகர்வலம் வந்துகொண்டிருந்தார். அப்போது ஏழைகள் பலரும் தட்டையான ரொட்டி ஒன்றை மிகவும் ரசித்து ருசித்து உண்பதை பார்த்தார். தானும் ஒரு ரொட்டியை வாங்கி சாப்பிட்டுப் பார்க்க, அப்படியே அதன் ருசியில் மனம் சொக்கிப் போனார் ராணி மெர்கரிட்டா. பேஷ், பேஷ், ரொம்ப நன்னா இருக்கு, என்றபடியே அதனை அப்படியே அரண்மனைக்குள் அழைத்து வந்துவிட்டார்.

அரண்மனையின் தலைமை சமையல் கலைஞர் ரஃபேல், ஏழைகளின் இந்த எளிய உணவுக்கு மேலும் மெருகூட்டினார். சிவப்பு நிறத் தக்காளி, வெள்ளை நிற பாலாடைக் கட்டி, பச்சைத் துளசி போன்றவற்றை மேலே தூவி இத்தாலியின் தேசியக் கொடி போல பிட்சாவை உருமாற்றி விட்டார். போதாக்குறைக்கு அதற்கு மெர்கரிட்டா பிட்சா என ராணியின் பெயரையும் வைத்து ராணிக்கு ஐஸ் வைத்துவிட்டார். இப்படி உள்ளூரில் பிரபலமான பிட்சா, இரண்டாம் உலகப் போருக்கு பின் உலகை சுற்ற ஆரம்பித்துவிட்டது.

இத்தாலிக்குள் நுழைந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய படை வீரர்களை பிட்சா சிறைபிடித்து விட்டது. ஒரு துண்டை வாயில் போட்டவுடனேயே அதன் சுவைக்கு அந்த வீரர்கள் அடிமையாகிவிட்டார்கள். பின்னர் போர் முடிந்ததும் நாடு திரும்பும் போது பிட்சாவையும் அவர்கள் தங்கள் நாடுகளுக்கு உடன் எடுத்துச் சென்றனர். அவ்வளவுதான் சர்வதேச தரத்திற்கு பிட்சா உயர்ந்துவிட்டது. விளைவு இன்று பட்டிதொட்டிகளில் எல்லாம் பிட்சா ஹட், பிட்சா கார்னர்கள் முளைத்துவிட்டன. பிட்சா பிரியர்கள், பிப்ரவரி 9ஆம் தேதியை உலக பிட்சா தினமாக கொண்டாடும் அளவுக்கு பிட்சா சர்வதேச சூப்பர் ஸ்டாராகிவிட்டது.

Thursday, September 9, 2010

காணாமல் போன மகாராஜா


காட்டு ராஜா என கம்பீரமாக கர்ஜிக்கும் இன்றைய சிங்கங்களுக்கெல்லாம் தாத்தா மார்சுபியல் சிங்கம் (marsupial lion). ஆஸ்திரேலியாவில் சுமார் 46 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வரை பிரம்மாண்டமாக சுற்றித் திரிந்த இந்த வகை சிங்கம், பார்ப்பதற்கு சிறுத்தை போல இருக்கும். உடல் முழுவதும் வட்ட வட்ட புள்ளிகள், கோடுகள் என சிறுத்தையும், புலியும் கலந்துசெய்த கலவை போல காட்சியளிக்கும் இந்த மார்சுபியல் சிங்கம் மிகவும் பயங்கரமானது.

இன்றைய ஆப்ரிக்க சிங்கத்திற்கும், மார்சுபியல் சிங்கத்திற்கும் சண்டை வந்தால், மார்சுபியல் கொடுக்கும் மரண அடியில் ஆப்ரிக்கா அலறி அடித்துக் கொண்டு ஓடிவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதன் பற்களும், நகங்களும் தான் இந்த சிங்கத்தின் பலத்திற்கு முக்கிய காரணம். தாடைகளின் இருபுறமும் கூர்மையாக காட்சியளிக்கும் பற்கள், பெரிய மிருகங்களின் சதையைக் கூட எளிதில் குத்திக் கிழித்துவிடும். அதேபோல இதன் நகங்களும் மிகவும் கூர்மையும் பலமும் வாய்ந்தவை. இவை வேட்டையில் மட்டுமின்றி மார்சுபியல் மரம் ஏறவும் பெரிதும் உதவியிருக்கிறது.

மார்சுபியல் சிங்கம் சராசரியாக 75 செ.மீ. உயரமும், தலை முதல் வால் வரை 150 செ.மீ நீளமும் கொண்டவை. இதன் சராசரி எடை 100 முதல் 130 கிலோ. சில குண்டோதர மார்சுபியல்கள் 160 கிலோ வரை இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். 19ஆம் நூற்றாண்டில், இந்த சிங்கங்களின் எலும்புகள் ஆஸ்திரேலியாவில் நிறைய இடங்களில் கிடைத்தன. ஆனால் 2002இல் தான் இதன் முழுமையான எலும்புக்கூடு ஒரு குகையில் கண்டெடுக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் டிம் வில்லிங் என்ற இயற்கை ஆர்வலர், வடமேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள குகை ஒன்றில் மார்சுபியல் சிங்கங்களின் உருவங்கள் வரையப்பட்டிருந்ததை கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்தார். ஆஸ்திரேலியாவின் ஆதிமனிதர்கள் வரைந்த இந்த படம், மார்சுபியல் சிங்கம் குறித்த பல புதிய தகவல்களை அறிந்துகொள்ள பெரிதும் உதவியாக இருந்தது.

இவ்வளவு பலத்துடன் வலம் வந்த காட்டு மகாராஜா முற்றிலுமாக அழிந்து காணாமல் போன காரணம் என்ன என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

Wednesday, September 8, 2010

பாப்கார்ன்


இன்று நாம் திரைப்படம் பார்க்கும்போது சுவாரஸ்யமாக கொறித்துத் தின்னும் பாப்கார்ன் எப்போது பிறந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? சொன்னால் நம்புவதற்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆம், பாப்கார்னின் வயது சுமார் 6 ஆயிரம் ஆண்டுகள். மெக்சிகோ மக்கள்தான் இந்த சூப்பர் நொறுக்கித் தீனியை கண்டுபிடித்தவர்கள். நியூ மெக்சிகோவில் உள்ள வவ்வால் குகையில் இருந்து 5600 ஆண்டுகள் பழமையான பாப்கார்னை 1948ஆம் ஆண்டு ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர்.

மெக்சிகோவில் கி.பி 300ஆம் ஆண்டைச் சேர்ந்த ஈமக்கலன் ஒன்று கிடைத்திருக்கிறது. சோளக் கடவுள் பாப்கார்ன் போன்ற தலை அலங்காரத்துடன் உள்ள காட்சி இதில் இடம்பெற்றிருக்கிறது. அப்படியே மெக்சிகோவில் இருந்து சீனா, சுமத்திரா, இந்தியா என பாப்கார்ன் உலகம் முழுவதும் பரவிவிட்டது.

கொலம்பஸ் மேற்கிந்தியத் தீவுகளை அடைந்தபோது, அவரது குழுவினரிடம் அங்கிருந்த பழங்குடியினர் பாப்கார்ன் விற்றிருக்கிறார்கள். பழங்காலத்தில் பாப்கார்ன் உணவுப் பொருளாக மட்டுமின்றி அலங்காரத்திற்கும் பயன்பட்டிருக்கிறது. செழிப்புக் கடவுள், மழைக் கடவுள் போன்றவர்களின் நகைகளில் பாப்கார்னைப் பதித்து அலங்கரித்திருக்கிறார்கள். மக்களும் பாப்கார்னைக் கொண்டு தங்களை அலங்கரித்துக் கொண்டுள்ளனர். அந்தக் காலத்தில் சூடான கல்லின் மீதும், சுடு மணலிலும் சோளத்தைப் போட்டு பாப்கார்ன் தயாரித்திருக்கிறார்கள்.

1890களில் அமெரிக்காவின் ஒக்லஹாமா நகரில் திவாலான வங்கி உரிமையாளர் ஒருவர் பாப்கார்ன் மெஷின் ஒன்றை வாங்கி, தியேட்டர் ஒன்றின் அருகே கடை போட்டார். அதில் கிடைத்த வருவாயில் அவர் தாம் இழந்த மூன்று பண்ணைகளை மீண்டும் வாங்கி விட்டாராம். அந்தளவுக்கு பாப்கார்னுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்திருக்கிறது. அந்த வரவேற்பு இன்று வரை தொடர்கிறது.

Tuesday, September 7, 2010

கருப்பு வெள்ளை வாத்து


பக்.. பக்... பக்... என்று வட அமெரிக்கப் பகுதிகளில் பரிதாபமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்தவர் தான் திருவாளர். லேப்ரடார் வாத்து (Labrador Duck). இவருக்கு கருப்பு வெள்ளை வாத்து என்றும் ஒரு பெயர் உண்டு. ஆனால் வளர்ந்த ஆண் வாத்து மட்டும் தான் கருப்பு வெள்ளை நிறத்தில் இருக்கும். சிறிய வாத்துகளும், வளர்ந்த பெண் வாத்துகளும் பிரவுன் நிறத்தில் சிறிதளவு வெள்ளை இறக்கைகளுடன் காட்சியளிக்கும். இருப்பினும் ஆணாதிக்கப் பார்வை வாத்துகளையும் விட்டு வைக்காததன் விளைவு, கருப்பு வெள்ளை பட்டம்.

கடலில் வாழ்ந்த இந்த வகை வாத்துகளுக்கு மீன்கள், நத்தை, சிப்பி மற்றும் கடலில் மிதக்கும் நுண்ணுயிர்கள் தான் டயட். இவற்றை உடைத்து, வடிகட்டி சாப்பிட வசதியாக இவற்றிற்கு மிக அகலமான அலகுகள் இருந்தன. இந்த அலகுகள் தான் இவற்றை மற்ற வாத்துகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டின. இந்த வாத்துகளைப் பற்றி அதிகளவு ஆராய்ச்சிகள் நடைபெறுவதற்குள் இவை பூமியில் இருந்து மறைந்துவிட்டன. 1870களில் இவை அழிந்து போயிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த வகை வாத்துகளை கடைசியாக 1878ல் நியூயார்க்கில் பார்த்ததாக குறிப்புகள் உள்ளன. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று சுற்றிக்கொண்டிருந்த இந்த வாத்துகளின் அழிவிற்கு என்ன காரணம் என உறுதியாகத் தெரியவில்லை.

மனிதர்களால் இவை வேட்டையாடப்பட்டிருக்கலாம் என ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் இந்த வகை வாத்துகளின் இறைச்சி சுவையாக இருக்காது, அது மட்டுமின்றி விரைவில் அழுகியும் விடும். எனவே இறைச்சிக்காக இவை வேட்டையாடப்பட்டிருக்க அதிக வாய்ப்பில்லை. ஆனால் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வட அமெரிக்காவில் இறகு வர்த்தகம் சூடு பறந்து கொண்டிருந்தது. எனவே இறகுகளுக்காக இவை கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது. இவற்றின் முட்டைகளை மனிதர்கள் அதிக அளவில் ஸ்வாகா செய்ததால் இந்த இனம் கருவிலேயே ஆம்லெட்டாகவும், ஆஃப் பாயிலாகவும் ஆகிவிட்டது தனி சோகம். இது போதாதென்று லேப்ரடார் வாத்துகளின் உணவுகளை மனிதர்கள் கபளீகரம் செய்ய ஆரம்பித்து விட்டதால் பட்டினி கிடந்தும் பல வாத்துகள் பரலோகம் போய்விட்டன. இவை அனைத்தும் சேர்ந்து இந்த பாவப்பட்ட பிராணியின் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டன.

Sunday, September 5, 2010

பிஸ்கெட் பிறந்த கதை


உலகம் முழுவதும் அறியப்பட்ட உணவுப் பொருட்களில் பிஸ்கெட்டிற்கு முக்கியமான ஓர் இடம் உண்டு. இன்று எத்தனையோ சுவைகளிலும், வகைகளிலும், வடிவங்களிலும் பிஸ்கெட்டுகள் கிடைக்கின்றன. சாக்லெட் சாப்பிட்டால் பல் சொத்தையாகிவிடும் என்று எச்சரிக்கும் பெரியவர்கள்கூட, அதற்கு மாற்றாக பரிந்துரைப்பது பிஸ்கெட்டுகளைத் தான்.

பிஸ்கெட் என்றால் பிரெஞ்சு மொழியில் இரண்டு முறை சுட்டது என்று அர்த்தம். ஐரோப்பிய கப்பல்கள் அந்த காலத்திலேயே டன் கணக்கில் பிஸ்கெட்டுகளை சுமந்துகொண்டு பயணம் புறப்படுமாம். பிஸ்கெட்டுகள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாது என்பதுதான் காரணம்.

அமெரிக்கர்கள் முதலில் பிஸ்கெட்டை திடீர் ரொட்டி என்று அழைத்தனர். பேக்கிங் சோடா மூலம் தயாரிக்கப்படும் ரொட்டியைத் தான் பிஸ்கெட் எனக் குறிப்பிட்டனர். முதல் உலகப் போரின் போது வீரர்களின் உடல்நலனைக் காக்க நீண்ட நாட்கள் கெட்டுப் போகாத, அதேசமயம் சுவையான பிஸ்கெட்டைக் கண்டுபிடிக்க ஆஸ்திரேலியர்கள் முயற்சித்தனர். அதன் விளைவு தான் அன்ஸாக் (Anzac) வகை பிஸ்கெட்டுகள். இது பிற்காலத்தில் பிரபலமடைந்து விற்பனையில் சக்கைபோடு போட்டது.

1877ல் ஜான் பாமன் என்பவர்தான் முதன்முதலில் இயந்திரம் மூலம் பிஸ்கெட் தயாரித்தார். இவர் தயாரித்த பிஸ்கெட்டுகள் டீ கப்பின் சாஸர் வடிவத்தில் பெரியதாக இருந்தன. இது தான் பிஸ்கெட்டுகளின் அசுர வளர்ச்சிக்கு வித்திட்டது. இன்று பிஸ்கெட் நமது அன்றாட மெனுவில் இடம்பிடித்துவிட்டது.

பிஸ்கெட் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுப்பொருள்தான் என்றாலும், அதை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில், பிஸ்கெட்டை அடிக்கடி சாப்பிட்டால் அதில் உள்ள சர்க்கரை பற்களில் ஒட்டிக் கொள்ளும். நிறைய பேர் பிஸ்கெட்டுடன் டீயும் அருந்துவதால், டீயில் உள்ள சர்க்கரையும் அதனோடு இணைந்து கொள்ளும். அதனால்தான் அதிகம் பிஸ்கெட் சாப்பிடுபவர்களின் பற்கள் கறைபடிந்து காணப்படுகின்றன. சூப்பரான பிஸ்கெட்டை சாப்பிடுவதால் கறை படிந்தால் படியட்டும், 'கறை நல்லது தான்' என்று டயலாக் விடும் அஞ்சா நெஞ்சர்களுக்கு நோ தடா.

Friday, September 3, 2010

பயணிப் புறா


வட அமெரிக்காவின் மலைப் பகுதிகளில் ஒரு காலத்தில் கூட்டம் கூட்டமாக பறந்து கொண்டிருந்தவை தான் பயணிப் புறா (Passenger Pigeon) எனப்படும் காட்டுப் புறாக்கள். நம்ம ஊர் காக்கையைப் போல இவை காணும் இடங்களில் எல்லாம் நிறைந்திருந்தன. வட அமெரிக்காவில் கோடிக்கணக்கில் வாழ்ந்து கொண்டிருந்த இந்த புறாக்கள், கூட்டமாக வானில் பறக்கத் தொடங்கினால் அந்த கண்கவர் ஊர்வலம் முடிய பல மணி நேரம் ஆகுமாம்.

1873ஆம் ஆண்டு, ஏப்ரல் 8ந் தேதி, மிச்சிகன் நகரின் வான்வெளியில் காலை 7.30 மணிக்கு தொடங்கிய புறா ஊர்வலம் ஒன்று மாலை 4.00 மணிக்கு தான் நிறைவு பெற்றதாக உள்ளூர்வாசி ஒருவர் எழுதி வைத்த குறிப்பு இருக்கிறது. அண்ணாந்து பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பயணிப் புறாக்கள் சாரை சாரையாக வந்துகொண்டே இருக்கும் காட்சிகள் அந்நாட்களில் சர்வ சகஜமான ஒன்றாக இருந்திருக்கிறது. வான்வெளியை அடைத்துவிடும் இந்த மெகா ஊர்வலங்களால் அந்த பகுதியே கடும் மேக மூட்டத்திற்கு உள்ளானதைப் போல் மாறிவிடுமாம்.

இப்படி பார்ப்பவர் கண்ணை உறுத்தும் அளவுக்கு பறந்து பறந்து காட்டியது தான் கடைசியில் இவற்றிற்கு எமனாக அமைந்துவிட்டது. வட அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்கள் இந்த புறாக்களை வேட்டையாடத் தொடங்கினர். ஆரம்ப நாட்களில் குடியேறியவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், வேட்டையும் குறைவாக இருந்தது. பின்னர் இது அதிகரிக்க அதிகரிக்க, வேட்டையாடப்படும் பறவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இவற்றை வேட்டையாடுவதும் ஒன்றும் கடினமாக இருக்கவில்லை. வலையை விரித்தால் கொத்து கொத்தாக வந்து சிக்கின. துப்பாக்கியால் சுட்டால் சத்தம் கேட்டே பல புறாக்கள் மூச்சை நிறுத்திக் கொண்டன. கூட்டமாக பறக்கும்போது சும்மா ஒரு கட்டையை வீசி எறிந்தே பல புறாக்களை வீழ்த்தியிருக்கிறார்கள்.

வட அமெரிக்காவில் அக்காலத்தில் இருந்த மொத்த பறவைகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு இந்த பயணிப் புறாக்கள் இருந்திருக்கின்றன. தோராயமாக 5 பில்லியன் பறவைகள் இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். பல பறவைகள் ஒரே மரத்தை ஆக்கிரமித்ததால், அவற்றின் பாரம் தாங்காமல் மரங்களின் கிளைகளும், சமயங்களில் மரங்களுமே முறிந்துவிழுந்த சம்பவங்களும் அரங்கேறியிருக்கின்றன. இப்படி நிறைந்து கிடந்த பயணிப் புறாக்கள், ரயில் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மிக வேகமாக அழிவை நோக்கிச் சென்றன.

இவற்றை அதிகமாக கொன்று குவித்து ரயில் மூலம் நியூயார்க் போன்ற இடங்களுக்கு அனுப்பத் தொடங்கினர். கப்பல் மூலமும் புறா வர்த்தகம் லாபகரமாக நடைபெற்று வந்தது. புறாக்கறி விலை மலிவாகக் கிடைத்ததால், இதற்கு அமெரிக்கர்கள் மத்தியில் ஏகப்பட்ட கிராக்கி. இதனை முழு நேரப் பணியாகவே செய்து புறாக்களை வேக வேகமாக பரலோகம் அனுப்ப ஆரம்பித்தார்கள். 1855ஆம் ஆண்டு நியூயார்க் நகருக்கு மட்டும் 3 லட்சம் புறாக்கள் பார்சல் செய்யப்பட்டன. இது அசுர வேகத்தில் அதிகரித்து 1869ஆம் ஆண்டு மிச்சிகன் நகரில் இருந்து வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதிகளுக்கு 75 லட்சம் புறாக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

பொதுவாக ஒரு பெண் புறா ஆண்டுக்கு ஒரு முட்டை தான் இடும். எனவே அழிக்கப்படும் வேகத்திற்கு, அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியவில்லை. அதேபோல வட அமெரிக்காவில் குடியேறியவர்களால் அவற்றின் உணவு ஆதாரங்களும் வெகுவாகக் குறைந்துவிட்டன. இதுபோன்ற காரணங்களால் பயணப் புறா 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தனது பயணத்தை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. உலகின் கடைசி பயணப் புறாவான மார்த்தா, சின்சினாட்டி உயிரியல் பூங்காவில், 1914ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி மதியம் 1.00 மணிக்கு தன் மூச்சை நிறுத்தியது.

வரிவிலக்கு குதிரை


வரி குதிரை பார்த்திருப்பீர்கள். வரிவிலக்கு குதிரையை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், அது பற்றி கேள்விப்படத் தான் முடியும். பார்க்க முடியாது. காரணம் அந்த வகை குதிரைகள் இப்போது முற்றிலுமாக அழிந்துவிட்டன. இவற்றின் பெயர் குவாகா (னிuணீரீரீணீ). பார்ப்பதற்கு வரிக்குதிரையைப் போன்றே இருக்கும். உடலின் முதல்பாதியைப் பொறுத்தவரை வரிக்குதிரைக்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. பிற்பாதியில்தான் விஷயமே இருக்கிறது. உடலின் பின் பகுதியில் மெல்ல கோடுகள் மறைந்துகொண்டே வந்து ஒரு கட்டத்திற்கு மேல் கோடுகளே இருக்காது. இப்படி பாதி வரிக் குதிரை, பாதி குதிரை கலந்து செய்த கலவைதான் நம்ம குவாகா.
காக்கா கா.. கா.. என்று கத்துவதால் காக்கா என்று பெயர் வந்ததா, இல்லை காக்கா என்று பெயர் வைத்ததால் அது கா.. கா.. என்று கத்துகிறதா என்று கேட்போமே. இது மிஸ்டர் குவாகாவிற்கும் பொருந்தும். இவர் குவா..கா.. என்று கத்துவதால் குவாகா என்று பெயர் வைத்துவிட்டார்கள் என்கிறார்கள். ஆரம்ப காலத்தில் இது ஒரு தனி இனமா அல்லது வரிக்குதிரையில் ஒரு வகையா என ஆராய்ச்சியாளர்களிடையே குழப்பம் இருந்தது. காரணம், வரிக்குதிரை இனத்தில் ஒவ்வொன்றின் கோடுகளும் ஒரு விதமாக இருக்கும். நமது கைரேகையைப் போல ஒவ்வொரு வரிக்குதிரைக்கும் பிரத்யேகமான கோடுகள் உண்டு. இரண்டு வரிக்குதிரைகள் ஒரே மாதிரி இருக்காது. நீண்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு இது வரிக்குதிரை இனத்தில் ஒன்று தான் என்று உறுதிப்படுத்திவிட்டார்கள். ஆனால் அவர்கள் உறுதிப்படுத்துவதற்குள் குவாகாக்களை மனிதர்கள் ஸ்வாகா செய்துவிட்டார்கள் என்பதுதான் மிகப்பெரிய சோகம்.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை தென் ஆப்பிரிக்காவின் கேப் மாகாணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குவாகாக்கள் பெருமளவில் காணப்பட்டன. பின்னர் இறைச்சிக்காகவும், தோலுக்காகவும் குவாகாக்களை மனிதர்கள் வேட்டையாடத் தொடங்கினர். அப்புறம் என்ன, மனிதனின் கண்ணில் பட்ட பாவத்திற்காக பரலோகம் போன விலங்குகளின் பட்டியலில் குவாகாவும் சேர்ந்துவிட்டது. 1870களில் குவாகா இனம் இந்த மண்ணைவிட்டு மறைந்துவிட்டது. ஆம்ஸ்டர்டாம் விலங்கியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வந்த கடைசி குவாகாவும் ஆகஸ்ட் 12, 1883ல் கண்ணை மூடிவிட்டது.
இன்னொரு விஷயம் தெரியுமா? அழிந்துபோன உயிரினங்களில் முதன்முதலில் டிஎன்ஏ டெஸ்ட் எனப்படும் மரபணு பரிசோதனை செய்யப்பட்ட விலங்கு நம்ம குவாகா தான். இந்த சோதனை முடிவுகளை அடிப்படையாக வைத்து குவாகாக்களை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் தென் ஆப்பிரிக்க ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுவிட்டனர். மீண்டும் குவாகாக்கள் உயிர்த்தெழுந்து வந்து குவா..கா.. என்று கத்திக்கொண்டு ஓடும் நாள் விரைவில் வரும் என்று நம்புவோமாக.

Thursday, September 2, 2010

காணாமல் போனவர்கள்

இந்த பூமிப்பந்தில் இருந்து நிறைய அரிய உயிரினங்கள் காணாமல் போய்விட்டன. அவற்றை நாம் காணாமல் போகச்செய்து விட்டோம் என்பதுதான் உண்மை. இப்படி நம்மிடம் இருந்து மறைந்துபோன அந்த மாண்புமிகுக்கள் குறித்து கொஞ்சம் எழுதலாம் என்று தோன்றியது. படித்துவிட்டு கருத்து கூறுங்கள்.

காலை எழுந்தவுடன் நல்ல காப்பி


காலை எழுந்தவுடன் பல உதடுகள் சுவைக்கும் முதல் உணவுப் பொருள் அநேகமாக காப்பியாகத் தான் இருக்கும். பலருக்கு ஒரு கப் காப்பி உள்ளே இறங்கினால் தான் அன்றைய பொழுது சுறுசுறுப்பாக விடியும். உலகிலேயே அதிகமாக விற்று-வாங்கக்கூடிய, நிலத்தின் விளைபொருளாக உள்ளவற்றுள், பெட்ரோலுக்கு அடுத்த இடம் காப்பிக்குதான். உலகில் 50 க்கும் அதிகமான நாடுகளில் ஏறக்குறைய 1 கோடி ஹெக்டர் பரப்பளவில் காபி பயிரிடப்படுகின்றது.

காப்பி என்பது Coffee (காஃவி) என்பதன் தமிழ் வடிவம். தென் எத்தியோப்பியாவில் காஃவா (Kaffa, கா’வ்’வா) என்று ஓர் இடம் உள்ளது. அங்கு விளைந்த ‘பூன் அல்லது ‘பூன்னா (būnn , būnnā) என்ற செடியைத் தான் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் காஃவா என்று அழைத்து, பின்னர் அது காஃபி ஆகிவிட்டது.
பரவலாக வழங்கும் கதையின் படி, ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடையர்கள் சிலர் ஒரு நாள் சில ஆடுகள் அதிக ஆட்டத்துடன் உலவி வந்ததையும், இரவிலும் தூங்காமல் இருந்ததையும் கண்டு வியந்தனர். ஆடுகள் காப்பிச் செடி இலைகளையும் பழங்களையும் உண்டதால்தான் இப்படி அதிக விழிப்புடனும் ஆற்றலுடனும் இருந்தன என்பதை அறிந்ததும், தாங்களும் அவ்வாறே உண்டு காப்பியின் புத்துணர்ச்சியூட்டும் தன்மையை உணர்ந்தனர். இது கி.பி. 9 ஆம் நூற்றாண்டிலேயே நிகழ்ந்திருக்க
வேண்டும் என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

எத்தியோப்பியாவில் இருந்து காப்பி எகிப்துக்கும், ஏமனுக்கும் பரவியது. பின்னர் ஏறத்தாழ 15 ஆம் நூற்றாண்டளவில் பெர்சியா, துருக்கி மற்றும் வட ஆப்பிரிக்காவுக்கும் பரவியது. அங்கிருந்து ஐரோப்பாவிற்கும் பிறநாடுகளுக்கும் பயணமானது. குறிப்பாக நெதர்லாந்து நாட்டினர் பெருவாரியாக காப்பியை இறக்குமதி செய்தார்கள். 1690இல் அரபு நாடுகளின் தடையை மீறி டச்சு மக்கள் காப்பிச் செடியை எடுத்து வந்து வளர்த்தார்கள். பின்னர் டச்சு ஆட்சி செய்த ஜாவா நாட்டில் பயிர் செய்தார்கள். இப்படியே உலகம் முழுவதும் பரவி, தனது மயக்கும் சுவையால் மனிதர்களை கட்டிப் போட்டுவிட்டது காப்பி.