என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, June 30, 2012

ஏழு கிணறு


சென்னை மக்கள் குடங்களை தூக்கிக் கொண்டு தண்ணீர் லாரிகளை துரத்தும் காட்சிகளை நாம் நிறையவே பார்த்திருக்கிறோம். இந்த பிரச்னை இன்று நேற்று உருவானதல்ல, மெட்ராஸ் என்ற நகரம் உருப்பெறத் தொடங்கிய காலத்திலேயே தண்ணீர் பிரச்னையும் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது.

1639இல் சென்னையில் காலடி வைத்த கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் வங்கக் கடலுக்கு அருகில் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினர். கோட்டைக்குள்தான் கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரிகளும், ஊழியர்களும் ஆரம்ப நாட்களில் வசித்தனர். இங்கு இவர்கள் சந்தித்த பிரச்னைகளில் முக்கியமானது குடிநீர். கடலுக்கு அருகில் இருப்பதால், ஜார்ஜ் கோட்டையில் எங்கு தோண்டினாலும் உப்பு நீர்தான் கிடைத்தது. குளுகுளு இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களை, மெட்ராஸ் வெயில் ஒருபுறம் வாட்டி வதைக்க, தாகம் தணிக்க நல்ல தண்ணீர் கிடைக்காதது மற்றொருபுறம் பாடாய்படுத்தியது.

அந்த காலத்தில் கோட்டைக்கு வெளியில் இருந்த சென்னைவாசிகள் குளம், குட்டைகளில் இருந்தும், கிணறுகளில் இருந்தும் நீர் இறைத்துக் குடித்தனர். ஆங்கிலேயர்களும் ஆரம்பத்தில் இதனையே பயன்படுத்தினர். அருகில் உள்ள பெத்தநாயக்கன் பேட்டையிலிருந்து மாட்டு வண்டிகளிலும், தலை சுமையாகவும் கோட்டைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. ஆனால் இவ்வாறு தண்ணீர் கொண்டு வருவதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருந்ததால் இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து, ALL IS WELL என்று சொல்ல வேண்டுமானால், நமக்கென தேவை ஒரு WELL என்று யோசனை சொன்னார் கேப்டன் பேகர் என்ற ஆங்கிலேயப் பொறியாளர். அவரது யோசனையின் பேரில்தான் இன்றைய மின்ட் பகுதியில் ஏழு கிணறுகள் தோண்டப்பட்டன. உண்மையில் மொத்தம் பத்து கிணறுகள் வெட்டப்பட்டன. ஆனால் ஏழு கிணறுகளில்தான் ஊற்று நன்றாக இருந்ததால், அந்த பெயரே நிலைத்துவிட்டது.

கோட்டையிலிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள இந்த கிணறுகளில் இருந்து ஏற்றம் மூலம் நீர் இறைக்கப்பட்டு, குழாய் வழியாக கோட்டைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. 1772இல் செயல்படுத்தப்பட்ட இதுதான் இந்தியாவிலேயே குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்ட முதல் திட்டம். இந்த கிணறுகளுக்கு காப்பாளராக ஜான் நிக்கோலஸ் என்பவர் நியமிக்கப்பட்டார்.

இவர் இந்த பதவியை எப்படிப் பெற்றார் என்பது ஒரு சுவாரஸ்யமான தனிக்கதை. மெட்ராஸ் மீது ஹைதர் அலி  படையெடுத்து வந்தபோது, கோட்டைக்கு குடிநீர் வழங்கும் கிணறுகளில் விஷம் கலக்க முயற்சிக்கப்பட்டதாம். அப்போது கிழக்கிந்திய படையில் பணிபுரிந்த ஜான், அவ்வாறு விஷம் கலக்க முயன்ற ஹைதர் அலியின் போர் வீரனை வீழ்த்தி அவனிடம் இருந்த குத்துவாளை பறித்ததாக கூறப்படுகிறது. அந்த குத்துவாள் தற்போதும் ஜான் குடும்பத்தினர் வசம் இருக்கிறது. இவ்வாறு கோட்டைக்கான குடிநீர் ஆதாரத்தை காப்பாற்றியதால், ஏழு கிணறுகளை பாதுகாக்கும் உரிமை 125 ஆண்டுகளுக்கு ஜான் குடும்பத்தினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்காக ஜானுக்கு மாதம் 10 பக்கோடா ஊதியத்தோடு, வாடகை இல்லாமல் தங்கிக்கொள்ள ஒரு வீடும், ஒரு குதிரையும், பல்லக்கு ஒன்றும் வழங்கப்பட்டிருக்கிறது. இவரது மறைவிற்கு பிறகு இவரது சந்ததியினர் அடுத்தடுத்து இந்த பணியை செவ்வனே செய்து வந்திருக்கின்றனர். 1925இல் பொதுப்பணித் துறை இந்த கிணறுகளை வசப்படுத்தியபோது, இதன் காப்பாளராக இருந்த எவ்லின் நிக்கோலஸ் (Evelyn Nicholas), பனித்த கண்களோடும், கனத்த இதயத்தோடும் தன் குழந்தைகளை பிரிவதைப் போல, இந்த கிணறுகளைப் பிரிந்து சென்றிருக்கிறார்.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்த கிணறுகளோடு வாழ்ந்து மறைந்த நிக்கோலஸ் குடும்பத்தினரின் கல்லறைகள் சென்னையில்தான் இருக்கின்றன. ராயபுரம் செயின்ட் ரோக்ஸ் (St. Roque’s cemetery) கல்லறைக்கு சென்றால், இந்த குடும்பத்தினர் அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். இப்படி நிக்கோலஸ்களால் நிறைந்திருப்பதால், இந்த பகுதியை நிக்கோலஸ் சதுக்கம் என்றும் உள்ளூர்வாசிகள் அழைக்கிறார்கள்.

இவ்வாறு 1772இல் தொடங்கப்பட்ட ஏழு கிணறு திட்டம், கோட்டையில் இருந்த ஆங்கிலேயர்கள் மட்டுமின்றி, வெளியில் இருந்த பூர்வகுடிகளின் தாகத்தையும் தீர்த்து வைத்தது. இந்த கிணறுகளில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 1,40,000 கேலன் (ஒரு கேலன் = 3.79 லிட்டர்) தண்ணீர் இறைத்திருக்கிறார்கள். புழல் நீர்த்தேக்கம் கட்டப்பட்டு, அது சென்னையின் குடிநீர் ஆதாரமாக மாறும் வரை, இந்த ஏழு கிணறுகள்தான் மெட்ராஸ் என்ற மாநகரின் தாகம் தீர்த்த அமுத சுரபியாக விளங்கி இருக்கிறது. ராணுவ குடியிருப்பு பகுதிக்குள் இருக்கும் இந்த கிணறுகளில் சில, இப்போதும் தொடர்ந்து தண்ணீர் வழங்குகின்றன. ஒரு நீரேற்று நிலையமும் இங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இனி இதில் விஷம் கலக்க ஹைதர் அலியின் படை இல்லை என்ற போதும், இந்த கிணறுகளை கூரை போட்டு மூடி இருப்பதோடு, சிறிய கதவுகளை அமைத்து பூட்டியும் வைத்திருக்கிறார்கள். பூட்டப்பட்ட இந்த கிணறுகளுக்குள் தண்ணீரோடு, 200 ஆண்டுகளுக்கும் மேலான மெட்ராசின் நினைவுகளும் தளும்பிக் கொண்டே இருக்கின்றன.

நன்றி - தினத்தந்தி
   
*  ஏழு கிணறு வெட்டிய கேப்டன் பேகரின் நினைவாக அவரது பெயர் பிராட்வே பகுதியில் ஒரு தெருவுக்கு வைக்கப்பட்டுள்ளது.

* இந்த கிணறுகள் இருப்பதால், தங்கசாலையை ஒட்டி இருக்கும் இந்த பகுதியே ஏழு கிணறு பகுதி என்று அழைக்கப்படுகிறது.

Saturday, June 23, 2012

எல்லீசன் என்ற தமிழன்!


சென்னை மாநகரில் நிறைய தெருக்கள் இன்றும் ஆங்கிலேயப் பெயர்களைத் தாங்கி நிற்கின்றன. அந்த வரிசையில் சாந்தி திரையரங்கிற்கு பின்புறம் திருவல்லிக்கேணியில் இருந்து அண்ணாசாலை வரை நீளும் சாலைக்கு எல்லீஸ் என்பவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. யார் இந்த எல்லீஸ் என்று வரலாற்றுப் பக்கங்களில் தேடியபோது, ஒரு சுவாரஸ்யமான மனிதரின் கதை கிடைத்தது.

கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றுவதற்காக இங்கிலாந்தில் இருந்து வந்த எத்தனையோ பேரில் ஒருவர்தான் ஃப்ரான்சிஸ் வைட் எல்லீஸ் (Francis Whyte Ellis). 1796இல் இந்தியா வந்த அவர், பல்வேறு பொறுப்புகளை வகித்து, படிப்படியாக முன்னேறி 1810இல் மெட்ராஸ் மாகாணத்தின் ஆளுநரானார்.

இங்கிலீஷ் பேசிப் பழகிய எல்லீசுக்கு தமிழ் மொழியைக் கேட்டதும் காதில் தேன் பாய்ந்திருக்கிறது. தமிழ் மீது எக்கச்சக்கமாக காதல்வசப்பட்டுப் போன அந்த வெள்ளைக்காரர், ராமச்சந்திரக் கவிராயர் என்பவரிடம் ட்யூஷன் படிக்க ஆரம்பித்து விட்டார். விருப்பம் இருந்ததால் விறுவிறுவென தமிழ் கற்ற எல்லீஸ், செய்யுள் இயற்றும் அளவுக்கு புலமை பெற்றுவிட்டார்.

தமிழ் கற்ற காலத்தில் திருவள்ளுவரின் தீவிர ரசிகராகிவிட்டார் எல்லீஸ். இரண்டே இரண்டு வரிகளில் இந்த மனிதர் எவ்வளவு அரிய பெரிய கருத்துகளை எல்லாம் சொல்லிவிட்டார் என்று அதிசயித்த எல்லீஸ், இதை ஆங்கிலேயர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 1812ல் வெளியான அவரின் ஆங்கிலேய அறத்துப்பால்தான், திருக்குறளின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு. இதுபோதாதென்று பல தமிழ் நூல்களையும் படித்து, திருக்குறளுக்கு ஒரு எளிமையான விளக்கவுரையையும் எழுதினார் எல்லீஸ்.

தமிழ் மட்டுமின்றி பிற தென்னிந்திய மொழிகளின் முக்கியத்துவத்தையும் உணர்ந்த அவர், இங்கு பணியாற்ற வரும் ஆங்கிலேயே அதிகாரிகள் இந்த மொழிகளை அறிந்திருப்பது அவசியம் என்று வலியுறுத்தினார். இதற்காக 1812இல் புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகியவற்றை கற்பிக்கும் கல்லூரி ஒன்றை தொடங்கினார்.

அதேசமயம் எல்லீஸ், மக்கள் பணியிலும் கவனம் செலுத்தத் தவறவில்லை. 1818-ல் பெரும் தண்ணீர்ப் பஞ்சம் வந்தபோது, எல்லீஸ் சென்னையில் 27 கிணறுகளை வெட்டி இருக்கிறார். அவற்றுள் ஒன்று சென்னை இராயப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயிலில் இருக்கிறது. இந்த கிணற்றில் எல்லீசின் திருப்பணி பற்றி சொல்லும் ஒரு நீண்ட பாடல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த கல்வெட்டின் விவரங்களை எனக்கு விரிவாக விளக்கினார், சென்னை அருங்காட்சியக நாணயவியல் துறை காப்பாட்சியர் திரு. சுந்தரராஜன். அதில் திருக்குறள் படித்ததன் பயனாகவே 27 கிணறுகளை வெட்டியதாக எல்லீஸ் குறிப்பிட்டிருக்கிறார். அந்த கல்வெட்டில் தம்மை சென்னப் பட்டணத்து எல்லீசன்என்று  அறிவித்துக் கொள்கிறார் எல்லீஸ். அத்துடன், ‘நட்சத்திர யோக கரணம் பார்த்து சுபதினத்தில் இருபத்தேழு துறவு கண்டு புண்யாகவாசகம் பண்ணுவித்தேன்என்றும் அறிவிக்கிறார். இந்தக் கல்வெட்டு தற்சமயம் மதுரை திருமலை நாயக்கர் மஹால் தொல்லியல் துறை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

திருக்குறள் மீது இருந்த பற்று காரணமாக, எல்லீஸ் திருவள்ளுவர் உருவம் பொறித்த, பொன்னாலான இரட்டை வராகன் நாணயத்தை வடிவமைத்து ஒப்புதலுக்காக கல்கத்தாவிற்கு அனுப்பினார். ஆனால் பல்வேறு காரணங்களால் தாமதமானதால், அது மக்கள் புழக்கத்திற்கு வரவே இல்லை.

இதனிடையே எல்லீஸ் 1819ஆம் ஆண்டு தமது 41ஆவது வயதிலேயே காலரா வந்து காலமானார். வயிற்று வலி மருந்து என்று நினைத்து தவறுதலாக எதையோ குடித்ததால் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இறந்தாலும் தமிழை அவர் பிரியவில்லை என்பதை திண்டுக்கல்லில் உள்ள அவரது கல்லறை உணர்த்துகிறது. அதில் கீழ்கண்டவாறு ஒரு செய்யுள் பொறிக்கப்பட்டுள்ளது.

'திருவள்ளுவப் பெயர்த் தெய்வம் செப்பிய 
அருங்குறள் நூலுள் அறப்பா லினுக்குத்
தங்குபல நூலுதா ரணங்களைப் பெய்து
இங்கிலீசு தன்னில் இணங்க மொழிபெயர்த்தோன்'.


இவ்வாறு எல்லீஸ் தனது கல்லறையிலும் தமிழை பறைசாற்றிக் கொண்டிருக்கிறார். மொத்தத்தில் எங்கேயோ, பிறந்து வளர்ந்த இந்த ஆங்கிலேயர், பிழைக்க வந்த நாட்டில் தமிழால் ஈர்க்கப்பட்டு தனது இறுதி நாட்களில் தமிழராகவே மாறிவிட்டார் என்பதே உண்மை. இந்த கதையை அறிந்தபின் எல்லீஸ் சாலையில் செல்லும்போதெல்லாம், அங்கிருக்கும் ஏதோ ஒரு  கடையில் அமர்ந்து எல்லீஸ் அமைதியாக டீ குடித்தபடி திருக்குறள் படித்துக் கொண்டு இருப்பதைப் போலவே தோன்றுகிறது.

நன்றி - தினத்தந்தி

* தமிழறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர் என்ற நூலில், தமிழர் பண்பாடு, தமிழர்களின் சமய நம்பிக்கை ஆகியவற்றில் எல்லிஸுக்கு இருந்த ஆழ்ந்த ஈடுபாடு பற்றி தெரிவித்திருக்கிறார்.

* தமிழ்ச் சங்கம் ஒன்றை நிறுவித் தமக்குக் கிடைத்த சுவடிகளை எல்லீஸ் அச்சிட்டு வெளியிட்டார் என்று அயோத்திதாசப் பண்டிதர் குறிப்பிட்டிருக்கிறார்.

* தமிழின் யாப்பியலைப் பற்றி எல்லீஸ் எழுதி வெளியாகாதிருந்த ஒரு நூலை, தாமசு டிரவுட்மன் என்ற ஆய்வாளர் இங்கிலாந்தில் கண்டுபிடித்துள்ளார்.

எல்லீசன் கல்வெட்டு

வாரியும் சிறுக வருபடைக் கடலோன்
ஆர்கடல் அதிர ஆர்க்கும் கப்பலோன்
மரக்கல வாழ்வில் மற்றொப் பிலாதோன்
தனிப்பெரும் கடற்குத் தானே நாயகன்
தீவுகள் பலவும் திதிபெறப் புரப்போன்
தன்னடி நிழற்குத் தானே நாயகன் 
தாயினும் இனியன் தந்தையிற் சிறந்தோன்
நயநெறி நீங்கா நாட்டார் மொழிகேட்டு
உயர்செங் கோலும் வழாமை யுள்ளோன் 
மெய்மறை யொழுக்கம் வீடுற அளிப்போன்
பிரிதன்னிய சகோத்திய விபானிய மென்று
மும்முடி தரித்து முடிவில் லாத
தீக்கனைத் தும்தனிச் சக்கர நடாத்தி
ஒருவழிப் பட்ட ஒருமை யாளன்
வீரசிங் காதனத்து வீற்றிருந் தருளிய
சோர்சென்னும் அரசற்கு 57 ஆம் ஆண்டில் 
காலமும் கருவியும் கருமமும் சூழ்ந்து
வென்றியொடு பெரும்புகழ் மேனிமேற் பெற்ற
கும்பினி யார்கீழ்ப் பட்டகனம் பொருந்திய
யூவெலயத் என்பவன் ஆண்டவனாக
சேர சோழ பாண்டி யாந்திரம் 
கலிங்க துளுவ கன்னட கேரளம் 
பணிக்கொடு துரைத்தனம் பண்ணும் நாளில்
சயங்கொண்ட தொன்டிய சாணுறு நாடெனும் 
ஆழியில் இழைத்த அழகுறு மாமணி
குணகடல் முதலா குடகடல் அளவு
நெடுநிலம் தாழ நிமிர்ந்திடு சென்னப்
பட்டணத்து எல்லீசன் என்பவன் யானே
பண்டார காரிய பாரம் சுமக்கையில் 
புலவர்கள் பெருமான் மயிலையம் பதியான்
தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்
திருக்குறள் தன்னில் திருவுளம் பற்றி 
'இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு'
என்பதின் பொருளை என்னுள் ஆய்ந்து
ஸ்வஸ்திஸ்ரீ சாலி வாகன சகாப்தம் 
வருஷம் 1740க்குச் செல்லாநின்ற
இங்கிலீசு 1818ம் ஆண்டில் 
பிரபவாதி வருஷத்துக்கு மேற் செல்லாநின்ற
பஹீத்திர யோக கரணம் பார்த்து
சுபதினத்தில் இதனோடு இருபத்தேழு
துறவு கண்டு புண்யாகவாசகம்
பண்ணுவித்தேன் 1818.

Saturday, June 16, 2012

ஸ்டான்லி மருத்துவமனை


வடசென்னை மக்களின் வாழ்வோடு இரண்டரக் கலந்துவிட்ட ஸ்டான்லி மருத்துவமனை சுமார் இருநூறு ஆண்டுகள் பழமையானது. கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் 17ஆம் நூற்றாண்டில் மெட்ராசில் குடியேறிய பிறகு, அவர்களுக்கு வேலை செய்வதற்காக நிறைய பேர் கோட்டையை சுற்றி உள்ள பகுதிகளுக்கு வரத் தொடங்கினர். அப்படி வந்தவர்களால் உருவானதுதான் அன்றைய கருப்பர் நகரம் என அழைக்கப்பட்ட இன்றைய ஜார்ஜ் டவுன் பகுதி.

ஆங்கிலேயர்கள் சென்னையில் காலூன்றியதும், தங்களுக்கான தேவைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக பூர்த்தி செய்து கொண்டே வந்தனர். அந்த வரிசையில் நோய்வாய்ப்பட்ட ஆங்கிலேயர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கோட்டைக்குள் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் அதேசமயம் கோட்டைக்கு வெளியில் இருக்கும் சென்னையின் பூர்வ குடிகளுக்கு மருத்துவம் பார்க்க நவீன மருத்துவர்கள் என்று யாரும் இல்லை. நாட்டு மருத்துவர்கள் தான் அவர்களின் நோய்களுக்கு மருந்து கொடுத்து வந்தனர். எனவே அவர்களுக்கென ஒரு நவீன மருத்துவமனைக்கான தேவை மெல்ல உணரப்பட்டது.

இந்த சூழலில்தான் 1781இல் மெட்ராசில் மிக மோசமான பஞ்சம் தலைவிரித்தாடியது. சென்னையின் சொந்த மக்கள் சோற்றுக்கு வழியில்லாமல் பரிதவித்தனர். இவர்களுக்கு உதவுவதற்காக இன்றைய ஸ்டான்லி மருத்துவமனை இருக்கும் இடத்தில் ஒரு கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டது. பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து கஞ்சி வாங்கி குடித்து தங்களின் பசியைப் போக்கிக் கொண்டனர். அடுத்த ஓராண்டில் இந்த இடம் ஒரு சத்திரமாக மாறியது.


 
பஞ்சத்தால் வாடியவர்கள் குறிப்பாக முதியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த இந்த இடம், மணியக்காரர் சத்திரம் என அறியப்பட்டது. நிறைய முதியவர்கள் இருந்ததால், அவர்களுக்கு மருத்துவ வசதியும் தேவைப்பட்டது. எனவே கிழக்கிந்திய கம்பெனி மருத்துவரான ஜான் அண்டர்வுட்டின் (John Underwood) முயற்சியால் இந்த இடத்தில் ஒரு சிறிய மருத்துவமனையும், தொழுநோயாளிகளுக்கான இல்லமும் தொடங்கப்பட்டது. 1799இல் தொடங்கப்பட்ட இதுதான் உள்ளூர்வாசிகளுக்கென பிரத்யேகமாக உருவான சென்னை மாநகரின் முதல் நவீன மருத்துவனை. இதனை உள்ளூர்வாசிகள் கஞ்சித்தொட்டி மருத்துவமனை என்று அழைத்தார்கள்.

காலப்போக்கில் இதற்கு அருகில் வெங்கடகிரி சத்திரம், ராஜா சர் ராமசாமி முதலியார் மகப்பேறு மருத்துவமனை என சில சிறிய கட்டடங்கள் தோன்றின. இவை அனைத்தும் மணியக்காரர் சத்திரத்தின் தலைமையில் இயங்கி வந்தன. இந்த சிறிய மருத்துவமனையில் ஒரு மருத்துவர், மருந்து கொடுப்பவர் ஒருவர், கண்காணிப்பாளர் ஒருவர் என மூன்று பேர் பணியாற்றி வந்ததாக 1889ஆம் ஆண்டு ஆவணங்கள் சொல்கின்றன.

இதனிடையே 1836இல் மெட்ராஸ் பல்கலைக்கழகம், இந்த மருத்துவமனையில் சில மருத்துவப் படிப்புகளை தொடங்கியது. 1903இல் மருத்துவமனை உதவியாளர் என்ற படிப்பும் புதிதாக சேர்க்கப்பட்டது. இங்கு பயின்று வெளிவரும் மாணவர்களுக்கு, 1911ஆம் ஆண்டு முதல் சான்று பெற்ற மருத்துவர் (Licensed Medical Practitioner) என்ற சான்றிதழ் கொடுக்கும் முறை உருவானது.

இப்படி மருத்துவப் படிப்புகள் அதிகரித்துக் கொண்டே வந்த வேளையில், இதனை நவீன மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றது. இதனையடுத்து 1913ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பென்ட்லாண்ட் பிரபு புதிய மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டினார். ஆனால் அடுத்த வருடமே முதல் உலகப் போர் வந்துவிட்டதால், மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் முடங்கின. இருப்பினும் உலகப் போரால் காயமுற்ற வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இங்கிருக்கும் மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் அரும்பணியாற்றினர். சிலர் போர்முனைக்கே சென்றும் மருத்துவம் பார்த்து தங்களின் உயிரையும் பறிகொடுத்தனர். அவர்களை கவுரவிக்கும் வகையில் ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்திற்குள் ஒரு நினைவுத் தூண் வைக்கப்பட்டுள்ளது.

பின்னர் ஒருவழியாக 1917இல் புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டன. அப்போதெல்லாம் இது ராயபுரம் மருத்துவமனை மற்றும் மருத்துவப் பள்ளி என்றுதான் அழைக்கப்பட்டது. பின்னர் 1934ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி தான் இது ஸ்டான்லி மருத்துவப் பள்ளி என பெயர் மாற்றப்பட்டது. அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் சர் பிரெட்ரிக் ஸ்டான்லியின் நினைவாக இந்தப் பெயர் வைக்கப்பட்டது.

பின்னர் 1938இல் இந்த மருத்துவப் பள்ளி மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் மருத்துவத் துறை அமைச்சராக இருந்த டாக்டர் டிஎஸ்எஸ் ராஜம் தான் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்தார். இவரே ஸ்டான்லி மருத்துவப் பள்ளியின் மாணவர் என்பதுதான் இதில் விசேஷமானது.

பின்னர் காலப்போக்கில் மருத்துவத்துறை வேகமாக முன்னேற, அந்த முன்னேற்றங்கள் அனைத்தும் ஸ்டான்லி மருத்துவமனையிலும் எதிரொலித்தன, தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டும் இருக்கின்றன. மொத்தத்தில், மக்களின் பசியாற்றும் சாதாரண கஞ்சித் தொட்டியில் இருந்து உருவான இந்த மருத்துவமனை, இன்று உலக அளவில் சத்தமில்லாமல் பல சாதனைகளைப் புரிந்துகொண்டிருக்கிறது.

நன்றி - தினத்தந்தி

சுத்தத்திற்கு முன்னுரிமை

ஸ்டான்லி மருத்துவனையின் சுத்தம் பற்றி நிறைய கதைகள் சொல்லப்படுகின்றன. ஒருமுறை லெப்டினன்ட் கர்னல் டி.ஜி. ராய் என்ற மருத்துவர் ரவுண்ட்ஸ் வரும்போது வெலிங்டன் வார்டில் இருந்த இத்தாலிய மார்பிள் தரையில் வழுக்கி விழுந்து விட்டாராம். இருப்பினும் விழுந்து எழுந்த கையோடு, அந்த தரையை அவ்வளவு பளபளப்பாக துடைத்து வைத்த ஊழியரை அழைத்து வெகுவாகப் பாராட்டினாராம். அந்தளவு அன்றைய மருத்துவர்கள் சுத்தத்தில் மிகவும் கவனமாக இருந்திருக்கின்றனர்.

---------

* ஸ்டான்லி மருத்துவமனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக உள்ளனர். ஒரு நாளைக்கு சுமார் 8000 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

* ஸ்டான்லி மருத்துவமனை கை மற்றும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையிலும், இரைப்பை, குடல் சார்ந்த சிகிச்சையிலும் இந்திய அளவில் சிறந்து விளங்குகிறது. 

Saturday, June 9, 2012

ஆவணக் காப்பகம்


திருவள்ளுவர் வீட்டு விலாசம், ஔவையாரின் மெடிக்கல் ரிப்போர்ட் போன்ற ஆவணங்கள் எல்லாம் காணக் கிடைத்தால் எவ்வளவு பரவசமாக இருக்கும். ஆனால் நம்மிடம் இந்த ஆவணப்படுத்துதல் என்ற பழக்கம் குறைவாக இருந்ததால், தமிழரின் பெருமைமிகு பாரம்பரியம் குறித்த நிறைய தகவல்கள் அறியப்படாமலே இருக்கின்றன. இலக்கிய சான்றுகள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் மூலம் தெரிய வந்தவை சில மட்டுமே. ஆனால் அன்றைய சாமானிய மக்களின் வாழ்க்கை முறை பற்றிய எக்கச்சக்கமான தகவல்கள் காலக்கரையானால் அழிக்கப்பட்டுவிட்டன.

ஆனால் மெட்ராஸ் என்ற பொட்டல்வெளியில் கிழக்கிந்திய கம்பெனியார் குடியேறிய காலத்தில் (1639) இருந்து நிகழ்ந்தவை பற்றிய தகவல்கள் நம்மிடம் இருக்கின்றன. இதற்கு வித்திட்டவர் சர் வில்லியம் லாங்கோர்ன் (Sir William Langhorne). 1672இல் மெட்ராஸ் ஆளுநராக நியமிக்கப்பட்ட வில்லியம், "வரலாறு முக்கியம் அமைச்சரே" என்பதை நன்கு உணர்ந்திருந்தார். எனவே, கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணங்களை முறையாக தொகுத்து பாதுகாக்க உத்தரவிட்டார்.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இங்கிருந்த கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளுக்கும், இங்கிலாந்து அதிகாரிகளுக்குமான கடிதப் போக்குவரத்து போன்ற ஆவணங்கள்தான் முதலில் சேகரிக்கப்பட்டன. இவை அனைத்துமே ஆங்கிலேயர்களால் ஆங்கிலேயர்களுக்கு எழுதப்பட்டவை என்பதால் இதில் தமிழர்களைப் பற்றிய நல்ல விஷயங்கள் எவ்வளவு இருக்கும் என்பது சந்தேகமே. ஆனால் குறைந்தபட்சமாக அப்போது நிகழ்ந்த சம்பவங்களையாவது இவற்றின் மூலம் அறிந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது.

ஆரம்ப காலத்தில் கோட்டைக்குள் இருந்த கவுன்சில் அறையில் இந்த ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டன. பின்னர் ஆவணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க கோட்டைக்குள்ளேயே இவை இடம் மாறிக் கொண்டே இருந்தன. பிற்காலத்தில் மெட்ராஸ் மாகாணம் என்றழைக்கப்பட்ட தென்னிந்தியப் பகுதி முழுவதும் 1801இல் கிழக்கிந்திய கம்பெனியார் கட்டுப்பாட்டில் வந்தது. இதன் பிறகு, ஆணவங்கள் மலை போல் குவியத் தொடங்கிவிட்டன.

எனவே 1805இல் மெட்ராஸ் ஆளுநராக இருந்த வில்லியம் பெண்டிக், துறைவாரியாக சிதறிக் கிடந்த தலைமைச் செயலக ஆவணங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பாதுகாக்க உத்தரவிட்டார். இதற்கென ஒரு ஆவணக் காப்பாளரையும், சில உதவியாளர்களையும் பணியமர்த்தினார். இவர்கள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் பல்வேறு ஆவணங்களையும் தொடர்ந்து சேகரித்துக் கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் ஆவணங்களை வைக்க இடம் இல்லாத நிலை ஏற்பட்டதும்தான் இதற்கென தனி கட்டடம் தேவை என்பது உணரப்பட்டது.

அப்போது உருவானதுதான் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு எதிரில் இருக்கும் தற்போதைய தமிழ்நாடு ஆவணக் காப்பகம். 1909ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டடத்திற்கு அந்த காலத்திலேயே ரூ.2,20,000 செலவானதாம். இதில் ஆவணங்களை பாதுகாக்கத் தேவையான வசதிகளுக்காக தனியாக ரூ.1,17,000 செலவிட்டிருக்கிறார்கள். செக்கச் செவேலென இந்தோ - சராசனிக் பாணியில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் இந்த கட்டடத்தை லோகநாத முதலியார் என்ற தமிழர்தான் கட்டினார். அந்த காலத்தில் புகழ்பெற்ற கட்டுமானக் கலைஞராக விளங்கிய லோகநாத முதலியார்தான் பிற்காலத்தில் ரிப்பன் மாளிகையை கட்டியவர்.

ஆவணக் காப்பகம் அந்த காலத்தில் மெட்ராஸ் ரெக்கார்ட் ஆபிஸ் என்று அழைக்கப்பட்டது. 1670ஆம் ஆண்டைச் சேர்ந்த சில ஆவணங்கள் கூட இங்கே இருக்கின்றன. இவை மட்டுமின்றி அந்த காலத்தில் தஞ்சாவூர் மகாராஜா போன்ற இந்திய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்களுக்கு எழுதிய கடிதங்களும் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.

தென்னிந்திய பகுதி முழுவதையும் கைப்பற்றிய பிறகு கிழக்கிந்திய கம்பெனியார் நிர்வாக வசதிக்காக அவற்றை பல்வேறு மாவட்டங்களாகப் பிரித்தனர். அவற்றை நிர்வகிக்க தனித்தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். புதிதாக வரும் ஆங்கிலேயே அதிகாரிகள் அந்த மாவட்டத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்காக புத்தகங்கள் போடப்பட்டன. மாவட்ட கையேடு என்ற பெயரில் இவை பிரசுரிக்கப்பட்டன. முதலில் 1868இல் மெட்ராஸ் மாவட்ட கையேடு வெளியானது. இதனைத் தொடர்ந்து தென்னாற்காடு, வட ஆற்காடு, திருச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களின் கையேடுகள் வெளியாகின.

இந்த கையேடுகளில் உள்ள தகவல்களை புதுப்பிக்க வேண்டிய தருணம் வந்தபோது, இவற்றில் புதியவற்றை சேர்த்து மாவட்ட கெசட்டியர்கள் (District Gazetteers) வெளியிடப்பட்டன. முதல் மாவட்ட கெசட்டியர் 1906ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தைப் பற்றி வெளியானது. அன்று தொட்டு இன்று வரை இவை தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இவற்றின் மூலம் ஒரு மாவட்டம் பற்றிய பல்வேறு தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும். இந்த கெசட்டியர்கள் தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் விலைக்கும் விற்கப்படுகின்றன.

ஆவணங்களை பாதுகாப்பதோடு அவை மக்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் ஆராய்ச்சி மாணவர்கள் இந்த ஆவணங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர். பொதுமக்களும் இங்கிருக்கும் ஆவணங்களில் இருந்து தங்களுக்கு தேவையான தகவல்களை கட்டணம் செலுத்தி அறிந்து கொள்ளலாம்.

இங்கு குவிந்திருக்கும் மலை போன்ற ஆவணங்களில் நம்மை மலைக்க வைக்கும் ஏராளமான தகவல்கள் புதைந்திருக்கின்றன. ஜாடிக்குள் அடைபட்ட அலாவுதீன் பூதம் போல தம்மை வெளிப்படுத்த அவை தருணம் பார்த்துக் காத்திருப்பதாகவே தோன்றுகிறது.

நன்றி - தினத்தந்தி

* சர் வில்லியம் தனக்காக கிண்டியில் கட்டிய தோட்ட வீடுதான், ராஜ் பவன் எனப்படும் இன்றைய ஆளநர் மாளிகையாக உருமாறி இருக்கிறது.

* பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு இங்கிருக்கும் ஆவணங்கள் படி எடுக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.

* தெற்காசியாவிலேயே மிகப் பெரிய ஆவணக் காப்பகங்களில் முக்கியமானதாக இது திகழ்கிறது. 

Saturday, June 2, 2012

குஜிலி பஜார்


ஷாப்பிங் என்றால் இன்றைய சென்னைவாசிகளுக்கு முதலில் நினைவுக்கு வரும் இடம் பாண்டி பஜார். காரணம், தலைக்கு கிளிப் முதல் காலுக்கு செருப்பு வரை அனைத்தையும் இங்கு வாங்கி விட முடியும். ஆனால் அந்தக்கால சென்னைவாசிகள் இப்படி ஷாப்பிங் செய்ய வசதி இருந்ததா? அவர்கள் எங்கு போய் தங்களின் ஷாப்பிங் ஆர்வத்தைத் தணித்துக் கொண்டனர்? இதற்கான விடையைத் தேடிய போதுதான் மெட்ராஸின் ஒரு சுவாரஸ்யமான பஜார் பற்றிய செய்திகள் தெரிய வந்தன.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இன்றைய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் ஒரு பஜார் இருந்திருக்கிறது. இதன் பெயர் குஜிலி பஜார். பாரிமுனை கந்தசாமிக் கோவிலுக்கு அருகில் உள்ள இந்த பகுதியில், அந்த நாட்களில் நிறைய குஜராத்திகள் வசித்து வந்தனர். இங்கிருக்கும் ஏதோ ஒரு இளம் குஜராத்திப் பெண்ணைப் பார்த்து பரவசமாகிப் போன யாரோ ஒரு சென்னைவாசி அந்தப் பெண்ணின் மீது உருகி மருகியதன் விளைவாக உருவானதே குஜிலி என்ற சொல். குஜராத்தி+கிளி என்பதையே மெட்ராஸ் பாஷைக்கே உரிய பாணியில் ரத்தின சுருக்கமாக நசுக்கி பிசுக்கி குஜிலி ஆக்கியிருக்கிறார்கள். குஜிலி ஏரியாவில் இருக்கும் பஜார் என்பதால் குஜிலி பஜார் என்று பெயர் வந்திருக்கலாம் என மொழி ஆய்வாளர்கள் (!!!) கருதுகின்றனர். குஜிலி என்பது உருதுமொழிச் சொல் என்றும் ஒரு கருத்து இருக்கிறது.

குஜிலி பஜார் என்பதை மாலை நேரக் கடைத்தெரு என்று வைத்துக் கொள்ளலாம். இந்த பஜாரின் கதாநாயகன் பாட்டுப் புத்தகங்கள்தான். இங்கு கிடைத்த பாடல்கள் வெறும் சினிமாப் பாடல்கள் அல்ல. அந்த காலத்தில் ஏது அத்தனை சினிமா. இங்கு கிடைத்த பாடல்கள் எல்லாம் வேறு ரகம். இவற்றை குஜிலிப் பாடல்கள் என்று அழைத்தார்கள். புகைவண்டி, மின்சார விளக்கு, மண்ணெண்ணெய், சிகரெட், தேநீர் என எந்த பொருள் புதிதாக அறிமுகமானாலும் அதைப் பற்றி பாட்டு எழுதி இருக்கிறார்கள். பொருட்கள் மட்டுமல்லாமல் அன்றாடம் நடந்த கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களையும் பாட்டாக்கியிருக்கிறார்கள். அரை அணா இருந்தால் இந்த வித்தியாச பாடல்கள் அடங்கிய புத்தகங்களை வாங்கிவிடலாம்.

சாதாரண உப்புமாவில் இருந்து உப்பு சத்தியாகிரகம் வரைக்கும் குஜிலிக் கவிஞர்களின் பாடு பொருட்களாக இருந்தன. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தலைவர்கள் கைதான போது அரெஸ்டு பாட்டுஎன்றே சில பாடல்கள் எழுதப்பட்டன. இவை மக்கள் மத்தியில் சுடச்சுட விநியோகிக்கப்பட்டன. தேச பக்தர்களுக்கு எதிரானவர்களும் குஜிலியை கும்மி எடுத்திருக்கிறார்கள். அவர்கள் தரப்பிலிருந்து இராஜ விசுவாசக் கும்மிபோன்ற சில புத்தகங்களும் வெளி வந்திருக்கின்றன. இப்படி வெளியான இருதரப்புப் பாடல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல கிராக்கி இருந்தது.

1920 களிலும் 1930 களின் தொடக்கத்திலும் கிராமபோன் இசைத் தட்டுகள் பிரபலமாகி வந்தன. அது ரேடியோ இல்லாத காலம். எச்.எம்.வீ., கொலம்பியா, ஓடியன் போன்ற இசைத் தட்டுக் கம்பெனிகள் பிரபல நாடக மேடைப் பாடகர்களைக் கொண்டு இசைத் தட்டுக்களை வெளியிட்டன. குஜிலிக் கடைக்காரர்கள் இந்த கிராமபோன் பாடல் வரிகளை அச்சிட்டு காசு பார்த்தார்கள்.

இன்றைக்கு பிரபல பாடகர்களின் பெயரில் தனியாக பாட்டுப் புத்தகம் போடும் வழக்கம் அப்போதுதான் தொடங்கியது. எஸ்.எஸ். விஸ்வநாத தாஸ், எஸ்.ஜி. கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள், என்.எஸ். பபூன் சண்முகம் போன்றோருக்கு தனிப் புத்தகங்கள் போடப்பட்டன. அவர்களின் ரசிகர்கள் அவற்றை வாங்கி பொக்கிஷமாகப் பாதுகாத்து பரவசமடைந்தனர். 1960கள் வரை கூட பாட்டுப் புத்தகங்கள், கதைப் பாடல்கள் போன்ற வெகுஜன நாட்டார் இலக்கியங்கள் குஜிலி பஜாரில் கிடைத்து வந்தன. 

குஜிலி பஜாரின் முக்கில், ஒரு வீதி ஈவினிங் பெஜார்என்றும், மற்றொரு வீதி தீவிங் பெஜார்என்றும் அழைக்கப்பட்டது. இதுபற்றி மாதவையா 1925ஆம் ஆண்டு வெளியான தனது பஞ்சாமிர்தம் இதழில் கீழ்கண்டவாறு எழுதி இருக்கிறார்.
''இதை நான் முதலில் கவனித்தபோது, உண்மை எவ்வாறிருப்பினும், ராஜதானி நகரத்திலே ஒரு வீதிக்கு தீவிங் பெஜார் ரோடு“ (அதாவது, திருட்டுக் கடைத் தெரு) என்றிருப்பதுநகரவாசிகளுக்கேனும், போலீஸாருக்கேனும் கௌரவம் தருவதன்று என்று நினைத்து, அப்பொழுது முனிசிபல் கமிஷனராயிருந்த என் நண்பர் மலோனி துரைக்கு அதைப்பற்றி எழுத, அவர், “தீவிங் பெஜார்என்ற பெயரை குஜிலி பெஜார்என்று மாற்றினார்.''
- மாதவையா

குஜிலி பஜாருக்கு அருகிலேயே சைனா பஜார் இருந்தது. அந்தக் கால சைனா பஜார் எப்படி இருந்தது என்பதை அறிந்துகொள்ள, 1913இல் வெளியான கட்டுரையின் கீழ்கண்ட பகுதி மிகவும் உதவியாக இருக்கும்.

''சைனா பஜார் வீதி - மாலைக் காலத்தில் எப்போதும் ஜன நெருக்கமுள்ள இவ்வீதியைப் பார்க்க வெகு வினோத விழாவாயிருக்கும். செலவழிக்க மனம் வராதவர்களும் வாங்கக் கூடிய துணிமணிகளும், கண் கவரும் பழ தினுசுகளும், சித்திரப் படங்களும், பொன், வெள்ளி ஆபரணங்களும், செம்பு பித்தளை வெங்கலப் பாத்திரங்களும், வாசனை திரவியங்களும், குடை, ஜோடு, கொம்பு, தடிகளும், மிட்டாய் தினுசுகளும், புஸ்தகங்களும் மற்றும் பல வஸ்துக்களும் விற்கும் கடைகள் எண்ணிறந்தன.
வேடிக்கை பார்ப்பதிலேயே மனம் செலுத்தாமல் அப்போதுக்கப் போது தங்களுடைய ஜேபியிலும் மடியிலும் வைத்திருக்கும் பணப் பைகளை கவனித்து வர வேண்டும். இவ்விடத்தில்  முடிச்சவிழ்க்கும் பேர்வழிகள் அதிகம். இதற்கு விளக்கு வெளிச்சம் போராத குறையொன்றுண்டு. சென்னை நகரசபையார் இதைக் கவனித்து ஜியார்ஜ் அரசரின் உருவச் சிலைக்கு எதிரில் அதிகம்  வெளிச்சம்  தரக்கூடிய கொத்து விளக்கு, ஒன்றை அமைக்கப் பெற்றால் வெகு நலமாயிருக்கும்.''

 - மயிலை கொ. பட்டாபிராம முதலியார்
 `விஷ்ணு ஸ்தல மஞ்சரி` 1913

இப்படி எல்லாம் மெட்ராஸ்வாசிகளின் மாலை நேரங்களை ரம்மியமாக மாற்றிய இந்த குஜிலி பஜார்தான் தற்போது பர்மா பஜாராக பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது.

நன்றி - தினத்தந்தி

* பர்மாவிலிருந்து வந்து குடியேறியவர்களுக்காக 1960களில் ஒதுக்கப்பட்ட பகுதிதான் பர்மா பஜார்.
* திருட்டுப் பொருட்கள் விற்கும் கடைகள் இருந்தன என்பதால், பர்மா பஜாருக்கு வெள்ளைக்காரர்கள் காலத்தில் தீவ்ஸ் பஜார் என்று பெயராம்.

--------
அரெஸ்ட் பாட்டு


ஐந்தாம் ஜார்ஜ் மன்னவரும்
அவர் மனைவி மேரியளும் மைந்தருடன்
பூவுலகில் மகாராஜர் வாழ்கவுமே
கவர்னர் வைசிராயவரும்
கனம் மாண்டேகு மந்திரியும்
புவனமெலாம் போற்ற புண்ணியர்கள் வாழ்கவுமே.

திக்கெங்கும் போர் படைத்த தியாகராஜன் புகழும்
மிக்க புகழ் நாயர் முதல் மேலவர்கள் வாழ்கவுமே.
புதுக்கோட்டை பிரின்ஸ் அவர்கள் பூமான்துரை ராஜா
மதிப்பாயுலகினிலே மன்னவரும் வாழ்கவுமே
ராஜா வெங்கடகிரி ராவ்பகதூரா ராஜரத்தினம்
தேசாபிமானியெல்லாம் தேவரொக்க வாழ்கவுமே
வாழ்க திராவிடரும் வாழ்க அவர் சங்கமதுவும்
வாழ்க பொதுவிற்குழைப்போர் வாழ்க வாழ்க வாழ்கவுமே

ஹோம் ரூல் கண்டன, திராவிட முன்னேற்ற, இராஜ விசுவாசக் கும்மி
[சேலம் ஆசுகவி தி.சு. கணபதி பிள்ளையால் எழுதப்பட்டது (1918).]