என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, February 23, 2013

ஆங்கிலேயர் கட்டிய பெருமாள் கோவில்


பக்தர்கள்தான் கடவுளைத் தேடிச் செல்வது வழக்கம். ஆனால் பக்தனைத் தேடி தெய்வம் வருவது அதிசயமாக சில நேரங்களில் நிகழ்ந்துவிடுகிறது. புராணக் காலத்தில் அப்படி எல்லாம் நடந்திருக்கலாம், இப்போது சாத்தியமில்லை என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இது போன்றதொரு ஆச்சர்யம் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் சென்னையிலேயே நடந்திருக்கிறது.
ஜோசப் கோலட்

1717இல் ஜோசப் கோலட் (Joseph Collett) என்பவர் மெட்ராசின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு உள்ளூர் நிர்வாகத்தில் உதவி செய்வதற்காக வீரராகவர் என்ற பிராமணர் எழுத்தராக பணியமர்த்தப்பட்டார். அலுவல் காரணமாக இருவரும் மணிக்கணக்கில் விவாதிக்க வேண்டி இருந்தது. பல்வேறு விஷயங்களில் இருவரும் ஒத்த கருத்துடையவர்களாக இருந்ததால் காலப்போக்கில் கோலட்டும், வீரராகவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். ஆனாலும் வீரராகவரிடம் கோலட்டிற்கு ஒரு பிரச்னை இருந்தது.

வீரராகவர் தீவிர பெருமாள் பக்தர். காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாளை தரிசிப்பதற்காக அடிக்கடி சென்றுவிடுவார். இதனால் பல சமயங்களில் அலுவலகத்திற்கு தாமதமாக வருவார். இது கோலட்டை மிகவும் எரிச்சல்படுத்தியது. வீரராகவரின் கடவுள் பக்தி முட்டாள்தனமானது என்று நினைத்த கோலட், இதனை வீரராகவரும் உணரும்படி செய்ய வேண்டும் என முடிவெடுத்தார். ஆனால் அவர் ஒன்று நினைக்க விதி ஒன்று நினைத்தது.

ஒருமுறை வீரராகவரை அழைத்த கோலட், நீங்கள் பெருமாளுக்காக இப்படி உருகுகிறீர்களே, இந்த நிமிடம் காஞ்சிபுரத்தில் உங்கள் பெருமாள் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று சொல்ல முடியுமா? என்று கேட்டார். ஒருநிமிடம் கண்களை மூடிய வீரராகவர், பெருமாள் தற்போது தேரில் உலா வந்து கொண்டிருப்பதாகவும், இந்த நொடியில் அவரது தேர்ச் சக்கரம் சேற்றில் சிக்கிக் கொண்டதால் அதனை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

வீரராகவர் சொன்ன தகவல்கள் சரியா என கோலட் காஞ்சிபுரத்தில் இருந்த அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டார். அவர்கள் சொன்ன பதில் கோலட்டை வாயடைத்துப் போகச் செய்தது. உண்மையிலேயே வீரராகவர் சொன்ன அந்த தருணத்தில் பெருமாளின் தேரை சேற்றில் இருந்து மீட்கும் முயற்சி தான் நடந்திருக்கிறது. சிலிர்த்துப் போன கோலட், வீரராகவரின் பக்திக்கு மரியாதை செலுத்தும்விதமாக அவரது வீட்டிற்கு அருகிலேயே ஒரு பெருமாள் கோவிலைக் கட்டிக் கொடுத்தார். அதுதான் திருவொற்றியூருக்கு அருகே காலடிப்பேட்டையில் இருக்கும் கல்யாண வரதராஜபெருமாள் கோவில். இங்குள்ள மூலவர் காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் இருக்கும் மூலவரைப் போல அச்சுஅசலாக செய்யப்பட்டிருக்கிறார்.
கல்யாண வரதராஜ பெருமாள் கோவில்

காலடிப்பேட்டை என்ற இந்த ஊரே ஜோசப் கோலட்டால் உருவாக்கப்பட்டதுதான். கிழக்கிந்திய கம்பெனியின் பிராதன தொழில் இங்கிருந்து துணிகளை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுதான். இந்த பணியை மேற்கொள்வதற்காக நிறைய நெசவாளர்களும், சாயம் தோய்ப்பவர்களும் தேவைப்பட்டனர். எனவே மெட்ராஸ் மாகாணம் முழுவதும் பரவிக் கிடந்த அவர்களை ஒன்று திரட்டி கோட்டைக்கு அருகில் சில இடங்களில் குடியமர்த்தினர். அந்த வகையில் கோலட், தான் திரட்டியவர்களை இந்த பகுதியில் குடியேறச் செய்தார். 1719ஆம் ஆண்டு டிசம்பர் 28ந் தேதி கோலட் தனது அதிகாரிகளுக்கு அளித்த அறிக்கை ஒன்றில், இந்த பகுதியில் 104 வீடுகளும், 10 கடைகளும், ஒரு கோவிலும், மொத்தமாக 489 ஆட்களும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை அனுப்பிய கையோடு கோலட் பணியில் இருந்து ஓய்வுபெற்று இங்கிலாந்து திரும்ப விரும்பினார். போவதற்கு முன், தான் ஏற்படுத்திய குடியிருப்புக்கு தனது பெயரையே வைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் விரும்புவதாக (?) ஜார்ஜ் கோட்டையில் உள்ள கவுன்சிலுக்கு தெரிவித்தார். இதனை ஏற்று அந்த பகுதிக்கு கோலட்பெட் (COLLETPET) என்று பெயரிடப்பட்டது. ஆனால் இது காலப்போக்கில் மருவி காலடிப்பேட்டை என்றாகிவிட்டது.

கோலட் ஆளுநராக இருந்தபோது, நிலவரி மற்றும் அடிமைகளுக்கான வரி ஆகியவற்றில் சில திருத்தங்களை செய்தார். அதேபோல கறுப்பர் நகரத்தில் இருக்கும் வீடுகள் மற்றும் தோட்டங்கள் அனைத்தையும் கண்டிப்பாக அரசாங்கத்திடம் பதிவு செய்ய வேண்டும் என்றும் சட்டம் இயற்றினார். ஆனால் இதற்கான பதிவுக் கட்டணத்தை தங்களால் செலுத்த இயலாது என சில வறியவர்கள் ஆளுநரிடம் முறையிட்டனர். இதனைப் பொறுமையாகக் கேட்ட கோலட், 50 பகோடாக்களுக்கும் (அந்தக்கால நாணயம்) குறைவான மதிப்புடைய சொத்துகளை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என சட்டத்திருத்தம் கொண்டு வந்தார். இப்படி ஏழைகளிடம் அவர் காட்டிய பரிவும், மக்கள் அவரது பெயரை தங்களின் பகுதிக்கு வைக்க வேண்டும் எனக் கேட்டதற்கு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இப்படி பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொண்ட கோலட், 1720ஆம் ஆண்டு ஜனவரியில் தாயகம் திரும்பினார். கோலட் போய் கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அவரது பெயர் இன்றும் வடசென்னை வரலாற்றில் நிலைத்து நிற்கிறது.

நன்றி - தினத்தந்தி

*  கர்நாடக சங்கீத ஜாம்பவான் டைகர் வரதாச்சாரி காலடிப்பேட்டையில்தான் பிறந்தார்.

* இராமலிங்க அடிகளார் இந்த பகுதியில் உலா வந்ததால், அவரது 'காலடி பட்ட பேட்டை' என்ற வகையில் காலடிப்பேட்டை என்ற பெயர் பொருத்தமானதுதான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

Sunday, February 17, 2013

பழவேற்காடு கோட்டை


ஒருகாலத்தில் மிகப் பெரிய விஷயமாக இருந்தவை கூட, காலப்போக்கில் மெல்ல மறைந்து, இருந்ததற்கான சுவடே இல்லாமல் போய்விடும்.அப்படி காலக்கரையானால் அரிக்கப்பட்டு நின்று கொண்டிருக்கிறது பழவேற்காடு கோட்டையின் சில கடைசி கற்கள்.
கோட்டையின் வரைபடம்

பிரிட்டீஷார் மெட்ராசில் கால்பதித்து புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டியதில் இருந்துதான் சென்னையின் கதை தொடங்குகிறது. ஆனால் அவர்களின் வருகைக்கு முன்பே இந்த பகுதியில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அதேபோல பிரிட்டீஷாருக்கு முன்பே இங்கு வந்து குடியேறிய வெளிநாட்டினரும் இருக்கிறார்கள். பல விஷயங்களில் அவர்களின் வழியைத்தான் பிற்காலத்தில் பிரிட்டீஷார் அப்படியே பின்பற்றினர்.

1498இல் வாஸ்கோடகாமா இந்தியாவிற்கான கடல்வழியைக் கண்டுபிடித்து கோழிக்கோட்டை அடைந்ததில் ஆரம்பிக்கிறது இந்தக் கதை. இந்தியாவிற்கு வரும் வழி தெரிந்ததையடுத்து 1522இல் போர்த்துகீசியர்கள் பழவேற்காட்டில் குடியேறினர். அந்தக் காலத்தில் பழவேற்காடு மிகப் பிரபலமான துறைமுக நகராக விளங்கியது. இங்கிருந்து துணிகள், வாசனைப் பொருட்கள் போன்றவை பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. இப்படி செல்வச் செழிப்போடு இருந்ததே போர்த்துகீசியர்கள் இங்கு வந்ததற்குக் காரணம்.

அவர்களைத் தொடர்ந்து 1607இல் டச்சுக்காரர்கள் வந்தனர்.  அப்போது இந்த பகுதியை ஆண்ட நாயக்க மன்னர் இரண்டாம் வேங்கடரின் மனைவி இறைவியிடம் அனுமதி பெற்று அவர்கள் ஒரு தொழிற்சாலையைத் தொடங்கினர். இது ஏற்கனவே இங்கு தொழில் செய்துவரும் போர்த்துகீசியர்களை எரிச்சல்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், டச்சுக்காரர்களின் தொழிற்சாலையைத் தாக்கினர். அப்போதுதான் ஒரு கோட்டையின் அவசியம் டச்சுக்காரர்களுக்குப் புரிந்தது.

இதன் விளைவாக 1613இல் உருவானதுதான் ஜெல்டிரியா கோட்டை (FORT GELDRIA). இந்த ஜெல்டிரியா கோட்டையைப் பார்த்துதான் ஆங்கிலேயர்கள் புனித ஜார்ஜ் கோட்டையை (1639) கட்டினர். ஜெல்டிரியா என்பது நெதர்லாந்தில் உள்ள ஒரு மாகாணத்தின் பெயர். இந்த கோட்டையின் முதல் டைரக்டர் ஜெனரலான வெம்மர் (Wemmer van Berchem) தனது சொந்த ஊரின் பெயரையே கோட்டைக்கு வைத்துவிட்டார். கட்டி முடிக்கப்பட்ட முதல் மாதத்திலேயே கோட்டை ஒரு தாக்குதலை எதிர்கொண்டது. உள்ளூர் தலைவரான எத்திராஜா என்பவர் சிறுபடையைக் கொண்டு கோட்டையைத் தாக்கினார். ஆனால் டச்சுக்காரர்கள் இதனை முறியடித்துவிட்டனர். அடுத்ததாக தொழில் போட்டியாளர்களான போர்த்துகீசியர்கள் தரை மற்றும் கடல்வழியாக இருமுனைத்தாக்குதல் நடத்தினர். அதையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் அளவுக்கு கோட்டை மிகப் பலமாக கட்டப்பட்டிருந்தது. 90 வீரர்கள் எந்நேரமும் கோட்டையைக் காவல் காத்ததாக ஒரு குறிப்பு சொல்கிறது.

கோட்டையைச் சுற்றி நான்குபுறமும் ஆழமான அகழிகள், மதில் சுவற்றில் அனைத்து பக்கங்களிலும் பீரங்கிகள் என பல அடுக்கு பாதுகாப்புடன் விளங்கியது ஜெல்டிரியா கோட்டை. இந்தியாவில் டச்சுக்காரர்களுக்கு இருந்த ஒரே கோட்டை என்பதால் இதனைப் போற்றிப் பாதுகாத்தனர். கடலைப் பார்த்தபடி இருக்கும் கோட்டையின் தென்கிழக்கு வாசலில் மிகப்பெரிய கொடி பறக்க விடப்பட்டிருக்கிறது. கப்பல்கள் தூரத்தில் இருந்தே அடையாளம் காண வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு.

கோட்டைக்குள் ஒரு பெரிய வெடிமருந்துத் தொழிற்சாலை இருந்தது. கிழக்கு கடற்கரையோரம் இருந்த டச்சு குடியேற்றப் பகுதிகள் முழுவதற்கும் இங்கிருந்துதான் வெடிமருந்து சப்ளை செய்யப்பட்டது. உள்ளேயே ஒரு நாணய வார்ப்புசாலையும் செயல்பட்டிருக்கிறது. மிக அதிக அளவிலான சரக்குப் போக்குவரத்து இருந்ததால், இந்த நாணயச் சாலை அவசியமானதாக இருந்தது. இங்கு தயாரான நாணயங்கள் பழவேற்காடு நாணயங்கள் என அறியப்பட்டன.
பழவேற்காடு நாணயங்கள்

கோட்டைக்குள்ளே வசிக்கும் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக உள்ளேயே பல கிணறுகள் தோண்டப்பட்டன. இந்த கோட்டை குறித்த வரைபடம் ஒன்றில் கோட்டைக்குள் மூன்று கிணறுகள் இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி சகல வசதிகளுடன் இருந்த ஜெல்டிரியா கோட்டையை, மைசூர் போரின்போது ஹைதர் அலி அழித்தார். 1806இல் ஹாலந்து, பிரெஞ்சுப் பேரரசுடன் இணைக்கப்பட்டுவிட்டது என்பது தெரியவந்ததும், பிரிட்டீஷார் இந்தக் கோட்டையை இடித்து தரைமட்டமாக்கிவிட்டனர்.

இன்று கோட்டை இருந்த இடத்தில் ஒரு பெரிய முட்புதர் காடுதான் எஞ்சியிருக்கிறது. சிரமப்பட்டு உள்ளே சென்று பார்த்தால், ஒருகாலத்தில் கோட்டை மதிலில் ஒய்யாரமாக உட்கார்ந்து கொண்டிருந்த சில கற்கள் சாயம் போன கனவுகளாய் காலில் மிதிபடுகின்றன. அந்த முட்புதர் காடு முழுவதும் 16ஆம் நூற்றாண்டு டச்சுக்காரர்கள் கண்ணுக்குத் தெரியாமல் அரூபமாய் அலைந்து கொண்டிருப்பது போலவே இருக்கிறது.


நன்றி - தினத்தந்தி

* 1522இல் கிருஷ்ணதேவ ராயர்தான் பழவேற்காடு என்று பெயர் வைத்தார். அதற்கு முன் இந்த பகுதி, புலியூர் கோட்டம், பையர் கோட்டம், அனந்தராயன் பட்டினம் எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டது.

* கோட்டை இருந்த பகுதிக்கு எதிரில் டச்சுக்காரர்களின் கல்லறை ஒன்று இருக்கிறது. இங்கிருக்கும் சமாதிக் கற்கள் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Sunday, February 10, 2013

மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி


மெட்ராசை ஆண்ட காலத்தில் ஆங்கிலேயர்கள் செய்த உருப்படியான விஷயங்களில் முக்கியமானது அவர்கள் தொடங்கிய கல்வி நிலையங்கள். கிறிஸ்துவ மதத்தை பரப்பவே இந்த முயற்சி என்று ஒரு கருத்து முன்வைக்கப்பட்டாலும், ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கும் இந்த கல்வி நிலையங்கள் பெரிதும் பயன்பட்டிருக்கின்றன. அந்த வகையில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு கிடைத்த ஒரு அரும் பொக்கிஷம்தான் மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி.

ஆசியாவின் மிகப் பழமையான கல்லூரிகளில் ஒன்றாகக் கருதப்படும் மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி 1837ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் 1835ஆம் ஆண்டே இதற்கான விதை விதைக்கப்பட்டுவிட்டது. மெட்ராசில் இருந்த ஸ்காட்லாந்து தேவாலயத்தின் மதகுருமார்களான ரெவ்ரண்ட் ஜார்ஜ் லாரியும், ரெவ்ரண்ட் மேத்யூ போவியும் (Rev George James Laurie & Rev Matthew Bowie) இணைந்து எழும்பூரில் செயிண்ட் ஆண்ட்ரூ என்ற சிறிய பள்ளியைத் தொடங்கினர்.

இவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த பள்ளியை நிர்வகிப்பதற்காக, ஸ்காட்லாந்து தேவாலயம் சமயப் பிரச்சாரகர் ஒருவரை இந்தியாவிற்கு அனுப்பியது. இப்படி வந்து சேர்ந்த ரெவ்ரண்ட் ஜான் ஆண்டர்சன் என்ற பிரச்சாரகர், பாரிமுனையின் ஆர்மீனியன் தெருவில் 'தி ஜெனரல் அசெம்ப்ளி ஸ்கூல்' என்ற பெயரில் ஒரு பள்ளியைத் தொடங்கினார். அப்போது ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் 59 சிறுவர்களுடன் எழும்பூரில் இயங்கிக் கொண்டிருந்த செயிண்ட் ஆண்ட்ரூ பள்ளி, இந்த வளாகத்திற்கு இடம்மாறியது.
டாக்டர் வில்லியம் மில்லர்

இந்து மாணவர்களுக்கு பைபிளில் உள்ள கருத்துகளை எடுத்துக் கூறுவதன் மூலம் கிறிஸ்துவத்தின் மகத்துவத்தை பரப்புவதே இந்த பள்ளியின் நோக்கமாக இருந்தது. டாக்டர். வில்லியம் மில்லர் என்பவர்தான் தமது அயராத உழைப்பால், இந்த பள்ளியை கல்லூரியாக மாற்றியவர். மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி என்ற பெயரும் இவர் வைத்ததுதான்.

காலப்போக்கில் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கவே, கல்லூரியை சென்னைக்கு வெளியே மாற்றுவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்து 1919ஆம் ஆண்டுதான் தாம்பரத்திற்கு இடம்மாறுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. அப்போது நகர வளர்ச்சித் துறை செயலாளராக இருந்த ரெவ்ரண்ட் கார்டன் மேத்யூ, அரசுடன் பேச்சு நடத்தி தாம்பரத்தில் உள்ள சேலையூர் காட்டுப் பகுதியில் கல்லூரிக்கென 390 ஏக்கர் நிலத்தைப் பெற்றுத் தந்தார்.

தாம்பரத்திற்கு செல்வது என முடிவானதும், எட்வர்ட் பேர்னஸ் என்ற பேராசிரியர் தமது முயற்சியால் ஏராளமான அரிய வகை மரக்கன்றுகளை இந்த பகுதியில் நட ஆரம்பித்தார். இன்று மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரியில் நாம் நின்று இளைப்பாறும் பல மரங்கள் இவரது வியர்வையால் வளர்ந்தவை. அதேபோல இங்கு கட்டப்பட்ட கட்டடங்களை ஹென்றி (Henry Schaetti) என்ற சுவிட்ஸர்லாந்து கட்டடக் கலைஞர் வடிவமைத்துக் கொடுத்தார். இப்படி கல்லூரிக்கான வேலைகள் முடிந்த பிறகு, 100 ஆண்டுகள் சென்னையின் மையப் பகுதியில் இயங்கிய கிறிஸ்துவக் கல்லூரி, 1937ஆம் ஆண்டு அமைதியான தாம்பரம் காட்டுப் பகுதிக்கு இடம்மாறியது.
1937இல் கிறிஸ்துவக் கல்லூரி

1937ஆம் ஆண்டு ஜனவரி 30ந் தேதி, அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் லார்ட் ஜான் எர்ஸ்கின், புதிய கல்லூரி வளாகத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்துவைத்தார். அதுவரை மாணவர்கள் மட்டுமே வலம் வந்துகொண்டிருந்த கல்லூரியில், 1939ஆம் ஆண்டு முதல் மாணவிகளும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டு, ஆங்கிலேய முதல்வர்களையே பார்த்துப் பழகிய கல்லூரியின் முதல் இந்திய பிரின்ஸிபால் என்ற பெருமையைப் பெற்றவர் டாக்டர் சந்திரன் தேவநேசன்.

1962 முதல் 1972 வரை கல்லூரி முதல்வராக இருந்த டாக்டர் சந்திரன் தேவநேசன், ஒரு காந்தியவாதி. எனவே கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை, தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு சமூக சேவைகளில் அவர் ஈடுபடுத்தினார். இது போன்ற சமூகப் பணிகளால் அவர் இன்றும் அப்பகுதி மக்களால் அன்புடன் நினைவுகூரப்படுகிறார். அவர் முதல்வராக இருந்த 10 ஆண்டுகாலத்தை 'தேவநேசன் தசாப்தம்' (The Devanesan Decade) என்றே பழைய மாணவர்கள் பெருமையோடு குறிப்பிடுகின்றனர்.
கல்லூரியின் தொடக்க விழா..

இங்கு பணியாற்றிய பல முதல்வர்கள் பின்னர் இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக உயர்ந்திருக்கின்றனர். இவர்களுக்கு போட்டியாக இங்கு பயின்ற மாணவர்களும் பல்வேறு துறைகளில் முதன்மையாக விளங்கினர், விளங்கிக் கொண்டிருக்கின்றனர். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் முதல் பெப்சி நிறுவனத்தின் இந்திரா நூயி வரை இந்த கல்லூரியின் பெருமைக்குரிய மாணவர்களின் பட்டியல் மிக மிக நீளமானது.

மொத்தத்தில், இப்படியொரு நீண்ட நெடிய பாரம்பரியத்துடன் 200ஆம் ஆண்டை நோக்கி கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது, சென்னை கிறிஸ்துவக் கல்லூரி.

நன்றி - தினத்தந்தி

* பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முகமது சஹாபுதீன் கிறிஸ்துவக் கல்லூரியின் மாணவர்.

* இந்தியாவில் முதன்முதலில் தன்னாட்சி பெற்ற கல்லூரிகளில் கிறிஸ்துவக் கல்லூரியும் ஒன்று. இது 1978ஆம் ஆண்டு தன்னாட்சி பெற்றது.

Sunday, February 3, 2013

சாந்தோம் தேவாலயம்


மெட்ராஸ் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பே சர்வதேச அளவில் புகழ்பெற்ற நகரமாக விளங்கியது. இதற்கு முக்கியக் காரணம் இங்கிருந்த ஒரு சிறிய தேவாலயம். இதனை தரிசிப்பதற்காக உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தனர், இன்னும் வந்து கொண்டிருக்கின்றனர். இப்படி உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அதுதான் சாந்தோம் தேவாலயம்.

இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையார் கிபி 52இல் கேரளாவிற்கு வந்தார். அங்கு தீவிர மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், பின்னர் மெட்ராசிற்கு வருகை தந்தார். இங்கும் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், கிபி 72இல் இன்றைய புனித தோமையார் மலையில் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டார். அவரது சமாதியின் மீது எழுப்பப்பட்டதுதான் சாந்தோம் தேவாலயம்.
புனித தாமஸ்

பண்டைய கிறிஸ்தவ ஆசிரியர்களின் குறிப்புகள்படி, தோமையார் இறந்ததும் அவரது உடல் அவரே கட்டியிருந்த சிறு கோவிலில் அடக்கம் செய்யப்பட்டது. கி.பி. 10ஆம் நூற்றாண்டில் தோமா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கிறிஸ்தவர்கள் சற்று பெரிதாக ஒரு கோவில் கட்டினார்கள். 1292இல் மயிலாப்பூருக்கு வருகை தந்த இத்தாலிய பயணி மார்க்கோ போலோ, புனித தோமாவின் கோவில் மற்றும் கல்லறை பற்றி எழுதி இருக்கிறார்.

பின்னர் 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மெட்ராசிற்கு வந்த போர்த்துகீசியர்கள், தோமா கோவில் பாழடைந்து கிடந்ததாகவும், "பெத் தூமா" ("தோமாவின் வீடு") என்று அழைக்கப்பட்ட ஒரு சிற்றாலயம் மட்டும் தோமாவின் கல்லறையை அடையாளம் காட்டியது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதனையடுத்து 1523இல் போர்த்துகீசியர் தோமா கல்லறைமீது பெரிய அளவில் ஒரு கோவிலைக் கட்டினார்கள். அதோடு தங்கள் குடியிருப்பைப் பாதுகாக்க ஒரு கோட்டையையும் கட்டினார்கள். ஆனால் அது பின்னாட்களில் டச்சுக்காரர்களால் தகர்க்கப்பட்டது.
பழைய சாந்தோம் தேவாலயம்

சுமார் 300 ஆண்டுகள் இந்த கோவில் கடலின் உப்புக் காற்றை தாங்கி நின்றதால் மெல்ல பழுதடையத் தொடங்கியது. எனவே பழைய கோவில் இடிக்கப்பட்டு, 1893ஆம் ஆண்டு புதிய கோவில் வேலை தொடங்கியது. மயிலாப்பூரில் தங்கியிருந்த கேப்டன் பவர் (Captain J.A. Power) என்ற ஆங்கிலேய பொறியியல் வல்லுநர், புதிய கோவிலுக்கு வடிவம் கொடுத்தார். அவர் 'புதிய கோத்திக்' என்னும் கட்டடப் பாணியில் உயர்ந்த கோபுரங்களை எழுப்பி பிரம்மாண்டமான ஒரு கோவிலை வடிவமைத்தார்.

இந்த தேவாலய ஜன்னல்களில் கிறிஸ்தவ சமயம் தொடர்பான காட்சிகள் அடங்கிய அழகிய வண்ணக் கண்ணாடிகள் (stained glass) பொருத்தப்பட்டுள்ளன. இவை ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப்பட்டவை. இதுமட்டுமின்றி விசாலமான வழிபாட்டு அரங்கம், உயரமான மேற்கூரை என பார்த்துப் பார்த்து கட்டிய புதிய கோவில், 1896ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது.

இந்த தேவாலயத்தில் மேரி மாதாவின் பழைய மரச்சிற்பம் ஒன்று உள்ளது. மயிலை மாதா என அழைக்கப்படும் இந்த மூன்றடி சிற்பத்தை பல முக்கியப் பிரமுகர்கள் வழிபட்டுள்ளனர். உலகப் புகழ்பெற்ற புனித பிரான்சிஸ் சேவியர், 1545இல் இங்கு வந்தபோது, மேரி மாதா முன்பு மணிக்கணக்கில் பிரார்த்தனையில் ஈடுபடுவாராம்.

தேவாலய வளாகத்தில் புனித தோமையாரின் கல்லறைக்கு மேல் ஒரு சிறிய வழிபாட்டுத் தலம் அமைக்கப்பட்டுள்ளது. அமைதி நிறைந்த இந்த இடத்தில் ஏராளமானோர் நெஞ்சுருகப் பிரார்த்தித்து இறைஅனுபவம் பெற்றுச் செல்கின்றனர். இந்த கல்லறை இதுவரை நான்கு முறை திறக்கப்பட்டுள்ளது. தோமையார் அற்புதங்கள் நிகழ்த்தும் புனிதராக கருதப்பட்டதால் அவரது உடல் புதைக்கப்பட்ட மண் கூட சக்திவாய்ந்ததாக கருதப்பட்டது. எனவே அப்போது மயிலாப்பூர் பகுதியை ஆண்ட மகாதேவன் என்ற அரசரின் மகன் உடல்நலம் பெறுவதற்காக தோமையாரின் கல்லறையில் இருந்து மண் எடுக்கப்பட்டது.

கிபி 222க்கும் கிபி 235க்கும் இடைப்பட்ட காலத்தில் மீண்டும் ஒருமுறை கல்லறையைத் திறந்து புனித தோமையாரின் உடல் எச்சங்களை எடுத்து இத்தாலியில் உள்ள ஒர்த் தோனா என்ற இடத்திற்கு அனுப்பி வைத்தனர். இன்றும் இத்தாலியில் அவை பாதுகாக்கப்படுகின்றன. 1523இல் போர்த்துகீசியர்கள் கோவிலை புனரமைத்தபோது, கல்லறை மூன்றாவது முறையாகத் திறக்கப்பட்டது. கடைசியாக 1729ஆம் ஆண்டு கல்லறையை திறந்து மண் எடுத்து பக்தர்களுக்கு விநியோகித்தனர்.
தாமஸை கொன்ற ஈட்டி முனை

கிறிஸ்தவர்களின் புனிதத்தலமாக விளங்கும் இந்த தேவாலயத்தில், ஓர் அருங்காட்சியகமும் உள்ளது. புனித தோமையார் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பல பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தோமையாரை குத்திக் கொன்ற ஈட்டியின் தலைப் பகுதியும், அவரின் எலும்புகளும் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அமைதியான ஒரு மதிய நேரத்தில் இந்த அருங்காட்சியகத்தில் தனியாக நிற்கும்போது, திடீரென காலம் நம்மை 2000 ஆண்டுகளுக்கு முன்பு தூக்கி வீசியதைப் போல இருக்கிறது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் கடவுளாக வழிபடப்படும் ஏசுநாதருடன் பேசிப் பழகிய, அவரது நேரடி சீடர் ஒருவரின் எலும்புகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே சிலிர்க்க வைக்கிறது. வெளியில் வந்த பிறகும் நீண்ட நேரம் அந்த இனிய அதிர்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

நன்றி - தினத்தந்தி

* ஏசுவின் மூன்று சீடர்களின் கல்லறைகள் மீதுதான் தேவாலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. ஒன்று ரோமில் உள்ள புனித ராயப்பர் பேராலயம், இரண்டாவது ஸ்பெயினில் உள்ள புனித யாகப்பர் பேராலயம். மூன்றாவது சாந்தோம் பேராலயம்.
* தேவாலயத்திற்கு பின்புறம் கடற்கரைக்கு செல்லும் வழியில் தோமாவின் கம்பம் ஒன்று உள்ளது. கடல்நீர் உட்புகுந்து மனித உயிர்களைப் பறிப்பதை தடுக்க புனித தோமா இதை நிறுவியதாக ஒரு பாரம்பரிய கதை உள்ளது.
* இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையால், 2006ஆம் ஆண்டு இது தேசிய வழிபாட்டுத்தலமாக அறிவிக்கப்பட்டது.