என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, May 26, 2012

தேனாம்பேட்டை


மெட்ராஸ் பேட்டைகளில் முக்கியமானது தேனாம்பேட்டை.
கோர்ட்யார்ட் மரியட், ஹயாத் ரிஜென்சி என பிரம்மாண்ட 5 நட்சத்திர ஓட்டல்களோடு இன்று ஜொலிக்கும் இந்த பேட்டை, சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் வயல்கள் சூழ்ந்த கிராமமாக இருந்தது. ஷங்கர் பட கிளைமேக்ஸ் மாதிரி, இந்த கிராமம் ஒரு நவநாகரீகப் பகுதியாக உருமாறிய கதை ரொம்பவே சுவாரஸ்யமானது.

1800களுக்கு முன் இந்த பகுதி முழுவதும் விவசாய நிலங்களாகத் தான் இருந்தன. எங்கு பார்த்தாலும் நெல் வயல்கள், வெத்தலை, வாழைத் தோப்புகள், கரும்பு மற்றும் காய்கறித் தோட்டங்கள் என பச்சைப் பசேலென்று காட்சியளித்தது. இங்கு நிறைய தென்னந்தோப்புகள் இருந்ததால் இது தென்னம் பேட்டை என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் மருவி தேனாம்பேட்டை ஆகிவிட்டது என்று கூறப்படுகிறது.

தேனாம்பேட்டை பெயருக்கு வேறு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. இந்த பகுதியில் செல்வாக்குடன் வாழ்ந்த தெய்வநாயக முதலியார் என்பவர் இங்குள்ள அகஸ்தீஸ்வர சுவாமி கோவில், அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் ஆகியவற்றிற்கு நன்கொடைகளை வாரிக் கொடுத்ததாகவும், அவரின் நினைவாகவே இது தெய்வநாயகம்பேட்டை என அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்தக் கால பத்திரப் பதிவு ஆவணங்களில் தெய்வநாயகம் பேட்டை என்பதை குறிக்கும் வகையில் தெ.பேட்டை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பேச்சு வழக்கில் மக்கள் 'தேனா பேட்டை' என்று அழைக்கத் தொடங்கி, அதுவே தேனாம்பேட்டை ஆகியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

சரி, இந்த தேனாம்பேட்டை கிடுகிடு வளர்ச்சி அடைந்த கதைக்கு வருவோம். தேனாம்பேட்டையின் மேற்குப் பகுதியில் அந்த காலத்தில் ஒரு பெரிய குளம் இருந்தது. இந்த குளத்து நீரைப் பயன்படுத்தித்தான் இங்கு விவசாயம் செழிப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில்தான் கதையில் ஒரு திருப்பம். கிழக்கிந்திய கம்பெனியார் சென்னையில் குடியேறிய உடன், புனித தோமையார் மலைக்கு செல்வதற்காக பரங்கிமலை வரை சுமார் 15 கி.மீ நீளத்திற்கு ஒரு சாலையை அமைத்தனர். 1781-1785 கால கட்டத்தில் சார்லஸ் மெக்கார்டினி (Charles MaCartney) மெட்ராஸ் ஆளுநராக இருந்தபோது அமைக்கப்பட்ட இந்த அகன்ற சாலைதான் இன்றைய மவுண்ட் ரோடு.

இந்த மவுண்ட் ரோடு, தேனாம்பேட்டையை ஒட்டி அமைக்கப்பட்டது இந்த பகுதியின் வளர்ச்சியை பன்மடங்கு அதிகரிக்கச் செய்தது. தேனாம்பேட்டை விவசாயிகள் மவுண்ட் ரோடு மூலம் தங்களின் விளை பொருட்களை மெட்ராசின் வேறு பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்தனர். இதனால் பலருக்கும் தேனாம்பேட்டை பற்றி தெரிய வந்தது. இயற்கை எழில் கொஞ்சும் சூழல், அருகிலேயே ஒரு பிரதான சாலை என அம்சமாக அமைந்துபோனதால், நிறைய ஆங்கிலேயர்கள் இங்கு தோட்ட வீடுகளை கட்டி குடியேற ஆரம்பித்தனர்.

அவர்களில் முதலில் தேனாம்பேட்டைவாசியானவர் லெப்டினன்ட் கர்னல் வேலெண்டைன் பிளாக்கர் (Lieu. Col. Valentine Blacker). இவருக்கு 1806ஆம் ஆண்டு இந்த பகுதியில் 9 ஏக்கர் நிலம் மானியமாக வழங்கப்பட்டது. இதில் அழகாக ஒரு வீட்டைக் கட்டி குடியேறிய அவர், 1817-1819 இடையே நடைபெற்ற மராத்திய யுத்தம் பற்றி சிறப்பாக எழுதிய வரலாற்று ஆய்வாளராக போற்றப்படுகிறார். அவரைத் தொடர்ந்து இந்த பகுதிக்கு வந்த முக்கிய பிரமுகர் லஷிங்டன். இவர் இன்றைய தோட்டக்கலை பண்ணையில் வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்தவர். இப்படி அடுத்தடுத்து நிறைய பிரபலங்கள் தேனாம்பேட்டைவாசிகளாக மாறினர்.

அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் ரிச்சர்ட் எல்டாம். 1801இல் மெட்ராஸ் நகர மேயராக இருந்த இவர், தேனாம்பேட்டையில் ஒன்றரை ஏக்கர் நிலத்தை வாங்கி லஸ் ஹவுஸ் என்ற வீட்டைக் கட்டினார். இவர் கிழக்கிந்திய கம்பெனியில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். இவரின் நினைவாகத் தான் இந்த சாலை இன்று எல்டாம்ஸ் சாலை (Yeldam Road) என அழைக்கப்படுகிறது.

ஆங்கிலேயர்களின் வருகை அதிகரித்ததை அடுத்து இந்த பகுதியைச் சுற்றி பிரபல தேவாலயங்கள் எழுப்பப்பட்டன. இதில் வடக்கே அமைக்கப்பட்ட புகழ்பெற்ற கதீட்ரல் தேவாலயம் காரணமாக, அந்த சாலையே கதீட்ரல் சாலை எனப் பெயர் பெற்றது. தேனாம்பேட்டையின் மற்றொரு முக்கிய இடம் எல்லையம்மன் கோவில் பகுதி. இங்கிருந்த ஏரியில் ஒரு முறை பெரிய வெள்ளம் வந்துவிட்டதாம். அப்போது அலைகளில் அடித்தபடி ஒரு அம்மன் சிலை வந்ததாகவும், அதனைக் கொண்டு கோவில் அமைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அலைகளில் வந்த அம்மன் என்பதால் அலை அம்மன் என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் ஆலையம்மன் என்றும் எல்லையம்மன் என்றும் மருவிவிட்டதாகவும் சொல்கிறார்கள். இந்த கோவிலின் காலம் பற்றிய தகவல் உறுதியாகத் தெரியவில்லை.

ஒருபுறம் எல்லையம்மன் கோவில், மறுபுறம் நட்சத்திர ஹோட்டல்கள். இடையே அண்ணா அறிவாலயம், காமராஜர் அரங்கம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள், பேட்டையைச் சுற்றிலும் அரசியல் நாயகர்களான முன்னாள், இன்னாள் முதலமைச்சர்களின் வீடுகள், கோலிவுட் நாயகர்களான சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகனின் இல்லங்கள், இவற்றிற்கிடையே இன்றும் எந்த மாற்றமும் இல்லாமல் சந்து, பொந்துகளில் காட்சியளிக்கும் சென்னையின் பூர்வகுடிகளின் குடிசைகள் என வாழ்வின் மிகப் பெரிய தத்துவத்தை நம்முன்  காட்சிக்கு வைத்திருக்கிறது இந்த பேட்டை.

நன்றி - தினத்தந்தி

* தேனாம்பேட்டை ஆரம்ப நாட்களில் வெள்ளாளத் தேனாம்பேட்டை, வன்னியத் தேனாம்பேட்டை என இரண்டாக இருந்தது

* பிரபல பாலிவுட் நாயகியாக விளங்கிய ஹேமாமாலினி முதலில் தன் இல்லத்தையும், நடனப் பள்ளியையும் இங்குதான் அமைத்திருந்தார்.


* மெட்ரோ ரயில் பணிகளால் மீண்டும் ஒரு பிரம்மாண்ட மாற்றத்திற்கு தயாராகி வருகிறது இந்த பேட்டை.

Saturday, May 19, 2012

சென்னை துறைமுகம்துறைமுகம் இல்லாத சென்னையை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? முயன்று பாருங்கள், சற்று கடினமாகத் தான் இருக்கும். ஆனால் முந்நூறு ஆண்டுகளுக்கு முன், சென்னை வெறும் மணல்வெளியாக இருந்த காலத்தில், இங்கு துறைமுகம் இல்லை, அதற்கான தேவையும் இல்லை.

ஆனால் பல்லவர்கள் காலத்திலேயே இன்றைய மயிலாப்பூர், ஒரு துறைமுக நகரமாக இருந்திருக்கிறது. இங்கிருந்து ரோம சாம்ராஜ்ஜியத்துடன் பெரிய அளவில் வர்த்தகம் நடைப்பெற்றிருக்கிறது. 1522இல் போர்ச்சுகீசியர்கள் சோழ மண்டல கடற்கரையில் புனித தோமையாரின் பெயரால் சிறிய துறைமுகம் ஒன்றை நிறுவியிருக்கிறார்கள். போர்ச்சுகீசியர்களைத் தொடர்ந்து 1613இல் டச்சு வர்த்தகர்கள் பழவேற்காடு பகுதிக்கு வந்தனர். அவர்கள் வந்து சுமார் 25 ஆண்டுகள் கழித்தே, அதாவது 1639ஆம் ஆண்டுதான் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் சென்னை மண்ணில் கால் பதித்தார்கள்.

அவர்கள் கடற்கரை ஓரத்தில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டி வியாபாரத்தை ரிப்பன் வெட்டித் திறந்ததும், அவர்களுக்கான சரக்குகள் இங்கிலாந்தில் இருந்து பெரிய பெரிய கப்பல்களில் மெட்ராஸ் வரத் தொடங்கின. ஆனால் அப்போது இங்கு துறைமுகம் எதுவும் கிடையாது. எனவே கப்பல்கள் கடும் அலைகளைத் தாக்குப் பிடித்தபடி நடுக்கடலிலேயே நிற்க வேண்டும். பெரிய திறந்த படகுகள் (MASULAH BOATS) மூலம் கடலுக்குள் சென்று கப்பலில் உள்ள சரக்கை கரை சேர்ப்பார்கள். சில சமயங்களில் பெரிய அலைகளை எதிர்க்க முடியாமல் இந்த படகுகள் கவிழும்போது, சரக்குகளை கடல் ஸ்வாகா செய்துவிடும்.

ஒரு நூற்றாண்டு காலம் இப்படி அலைகளால் அலைக்கழிக்கப்பட்ட பின்னர், 1770ஆம் ஆண்டுதான் மெட்ராசிற்கு ஒரு துறைமுகம் தேவை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இந்த கருத்தை உதிர்த்தவர் பின்னாளில் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக உயர இருந்த வாரன் ஹேஸ்டிங்க்ஸ். ஆனால் அதற்காக உடனே விழுந்தடித்து எந்த முயற்சியும் செய்யப்படவில்லை. இப்படியே மேலும் ஒரு நூற்றாண்டு கழிந்தது.

இந்த முறை மெட்ராஸ் வர்த்தக சபையினர் துறைமுகம் வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக வைத்தனர். இதனையடுத்து பெரிய கப்பல்கள் சற்று உள்ளே வந்து நிற்பதற்கு வசதியாக 1861ஆம் ஆண்டு ஒரு நீண்ட சுவர் கடற்கரையில் இருந்து கடலுக்குள் செல்வது போல குறுக்காக கட்டப்பட்டது. ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் வீசிய புயலில் இந்த சுவர் குட்டிச் சுவராகிவிட்டது. எனவே இம்முறை இதனை சற்றே மாற்றி 'எல்' (L) வடிவில் இரண்டு தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டன. இந்த இரண்டு 'எல்'களுக்கு இடையில் கிழக்குப் பகுதியில் 515அடி திறப்புடன் ஒரு செயற்கைத் துறைமுகம் உருவானது. கராச்சி துறைமுகத்தை கட்டிய பார்க்கஸ் என்பவர்தான் இந்த யோசனையை முன்வைத்தார். இதற்காக பல்லாவரம் மலையில் இருந்து கற்கள் கொண்டு வரப்பட்டன.

1881ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த வேலை முடியும் தருவாயில், பெரிய கப்பல்கள் உள்ளே வரத் தொடங்கின. ஆனால் இரண்டு மாதங்கள் கூட இந்த நிம்மதி நீடிக்கவில்லை. நவம்பர் மாதம் வீசிய புயலில் பாதி 'எல்' காணாமல் போய்விட்டது. மனந்தளராத விக்கிரமாதித்தனைப் போல கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் மீண்டும் துறைமுகம் கட்டும் பணியில் இறங்கினர். ஒரு வழியாக இந்த பணி 1896இல் முழுமை அடைந்தது.

இந்த துறைமுகத்தை மேம்படுத்தும் பணியில் சர் பிரான்சிஸ் ஸ்பிரிங் என்பவர் 1904ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இவர்தான்  இன்றைய துறைமுகத்தின் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர். அடுத்த ஆண்டு உருவாக்கப்பட்ட மெட்ராஸ் போர்ட் டிரஸ்டுக்கு தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பிரான்சிஸ், பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இதன் ஒரு பகுதியாக துறைமுகம் மாற்றியமைக்கப்பட்டது. பழைய கிழக்குப் பக்க வாயில் மூடப்பட்டு வட கிழக்கு மூலையில் 400 அடி வாயில் அமைக்கப்பட்டது. 1600 அடி நீள தடுப்புச் சுவரால் இது பாதுகாக்கப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் 1911இல் முழுமை அடைந்தன. முதல் இரண்டு ஆண்டுகளில் 600 கப்பல்கள் இங்கு வந்து போனதாகவும், 3 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டதாகவும் கிழக்கிந்திய கம்பெனி ஆவணங்கள் கூறுகின்றன.

இப்படி சென்னை துறைமுகம் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருந்த நிலையில்தான், முதல் உலகப் போர் வெடித்தது. இதில் இந்தியாவில் தாக்குதலுக்கு உள்ளான ஒரே நகரம் சென்னைதான், அதுவும் கடல் மார்க்கமாக. 1914ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், பிரிட்டீஷ் படைகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மெட்ராஸ் வந்த ஜெர்மனியின் எம்டன் கப்பல், சென்னை துறைமுகம் மீது 125 குண்டுகளை சரமாரியாக வீசியது. இதில் துறைமுகத்திற்குள் இருந்த பர்மா ஆயில் கம்பெனிக்கு சொந்தமான எண்ணெய் கிடங்கு கொளுந்துவிட்டு எரிந்தது.


இந்த தாக்குதலின் பாதிப்பில் இருந்தும் சென்னை துறைமுகம் விரைவில் மீண்டெழுந்தது. இறுதியில் 1919இல் பிரான்சிஸ் ஓய்வு பெறும்போது, சென்னை துறைமுகம் அனைத்து பிரச்னைகளையும் சமாளிக்கும் திறன் படைத்ததாக முன்னேறிவிட்டது. இதோடு நின்றுவிடாமல் தொடர்ந்து தன்னை மெருகேற்றிக் கொண்டே வந்ததால், இன்று பல லட்சம் கோடி மதிப்புள்ள சரக்குகளைக் கையாளும் உலகின் மிக முக்கியத் துறைமுகங்களில் ஒன்றாக சென்னை துறைமுகம் வளர்ந்திருக்கிறது.

ஆரம்ப காலங்களில் வீசும் புயல்களைப் புறந்தள்ளிவிட்டு, விடாமுயற்சியுடன் போராடினால் நிச்சயம் ஒரு நாள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதற்கு சாட்சியாய் நின்று கொண்டிருக்கிறது சென்னை துறைமுகம்.

நன்றி - தினத்தந்தி

* மும்பைக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய துறைமுகம் சென்னை துறைமுகம்தான்.

* கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமியின் போது, சென்னை துறைமுகம் சுமார் 13 கோடி ரூபாய் அளவுக்கு சேதமடைந்தது. இதனால் இரண்டு நாட்கள் துறைமுகப் பணிகள் நிறுத்தப்பட்டன.

* 1881ஆம் ஆண்டை தொடக்கமாகக் கருதி, கடந்த 2007ஆம் ஆண்டு சென்னை துறைமுகத்தின் 125வது ஆண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Saturday, May 12, 2012

ராஜாஜி ஹால்பல தமிழ்ப்படங்களில் நீதிமன்றப் படிக்கட்டுகளாகக் காட்டப்படும் பிரம்மாண்ட படிக்கட்டுகளைக் கொண்ட ராஜாஜி ஹாலின் கதையும் அதே அளவிற்கு பிரம்மாண்டமானதுதான். இந்த ஹால் ஒரு மாபெரும் வெற்றியின் நினைவாகக் கட்டப்பட்டது. ஆம், திப்பு சுல்தானுக்கு எதிராக நான்காவது மைசூர் யுத்தத்தில் கிழக்கிந்திய படைகள் பெற்ற வெற்றியின் சின்னம்தான் இது.

1800இல் தொடங்கி 1802இல் கட்டி முடிக்கப்பட்டபோது, இதற்கு பான்குவிடிங் ஹால் (Banqueting Hall) எனப் பெயரிடப்பட்டது. காரணம், பொதுநிகழ்ச்சிகளை நடத்துவதற்கான ஒரு அரங்கமாகத் தான் இது கட்டப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியின் பொறியாளரும் வானியல் நிபுணருமான ஜான் கோல்டிங்ஹாம் என்பவர்தான் இந்த பிரம்மாண்ட ஹாலை வடிவமைத்தார். இவர் வானியல் நிபுணர் என்பதாலோ என்னவோ, வான சாஸ்திரத்தில் அதிக ஆர்வம் காட்டிய புராதன கிரேக்கர்களின் கன்னித் தெய்வமான ஏத்தெனாவின் பார்த்தினான் கோவில் சாயலில் இதனை வடிவமைத்தார். இப்போதும் ஏத்தென்ஸ் நகரில் சிதிலமடைந்து கிடக்கும் பார்த்தினான் கோவிலைப் பார்த்தால், உங்களுக்கு இதை ஏற்கனவே எங்கோ பார்த்திருக்கிறோமே என்ற எண்ணம் தோன்றும்.  

சரி, விஷயத்திற்கு வருவோம். புதிய தலைமைச் செயலக கட்டடம் அமைந்திருக்கும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தின் பரந்தவெளி முழுவதும் ஒரு காலத்தில் ஆண்டானியா தி மதிரோஸ் (Antonia de Madeiros) குடும்பத்தினருக்கு சொந்தமாக இருந்தது. அன்றைய சென்னைப்பட்டினத்தின் மிகவும் செல்வாக்கு வாய்ந்த இந்த குடும்பத்தினால்தான் சென்னைக்கு மெட்ராஸ் என்ற பெயரே வந்தது என்று ஒரு கருத்தும் உள்ளது. இந்த குடும்பத்திடம் இருந்து, அந்த பரந்து விரிந்த மைதானத்தை 1753இல் விலைக்கு வாங்கிய கிழக்கிந்திய கம்பெனி, மெட்ராஸ் ஆளுநர்கள் தங்குவதற்காக அங்கு ஒரு பெரிய பங்களாவைக் கட்டியது. அதுதான் அரசினர் இல்லம்.


பின்னர் ராபர்ட் கிளைவின் மகன் எட்வர்ட் கிளைவ் மெட்ராஸ் ஆளுநராக இருந்தபோது, 1800களில் இந்த கட்டடம் சற்றே புனரமைக்கப்பட்டது. அப்போதுதான் அருகில் பான்குவிடிங் ஹால் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தின் வடிவமைப்பாளர் ஜான் கோல்டிங்ஹாம் இதற்காக உருவாக்கிய வரைபடங்கள் இன்றும் பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட இந்த ஹால், 1802 அக்டோபர் 7ந் தேதி திறந்து வைக்கப்பட்டது. அதன் பிறகு சென்னை மாநகரின் எத்தனையோ முக்கியமான விழாக்கள் இந்த கட்டடத்தில் நடைபெற்றன. மக்கள் இதைப் பெருமளவு பயன்படுத்தியதால், 1875இல் தொடங்கி இந்த ஹால் அடிக்கடி புனரமைக்கப்பட்டும், விஸ்தரிக்கப்பட்டும் வந்தது. 1857இல் இருந்து மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஆண்டுதோறும் இந்த பிரம்மாண்ட ஹாலில்தான் நடைபெற்றது. 1879இல் செனட் இல்லம் கட்டப்படும் வரை மெட்ராஸ் பட்டதாரிகள் இங்குதான் தங்களின் பட்டங்களை பெற்றுச் சென்றனர்.

1938 ஜனவரி 27 - 1939 அக்டோபர் 26 காலகட்டத்தில் மெட்ராஸ் ராஜ்தானியின் சட்டப்பேரவை இங்குதான் செயல்பட்டது. பின்னர் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்ததும், முதல் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜகோபாலச்சாரியின் நினைவாக, இந்த கட்டடம் 1948இல் ராஜாஜி ஹால் எனப் பெயர் மாற்றப்பட்டது.

120 அடி நீளமும், 65 அடி அகலமும், 40 அடி உயரமும் கொண்ட இந்த விசாலமான கட்டடம், வெறும் கூட்டங்கள் மட்டுமின்றி சரித்திரப் புகழ்மிக்க பல நிகழ்வுகளுக்கு சாட்சியமாய் இருந்திருக்கிறது. 1961ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்து ராணி எலிசபெத் தனது பிறந்தநாள் கேக்கை இந்த ஹாலில்தான் வெட்டினார். அப்போது முதலமைச்சராக இருந்த காமராஜர் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதே காமராஜர் இறந்தபோது, மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக இதே ராஜாஜி ஹாலில்தான் அவரின் உடல் வைக்கப்பட்டது. இவரைத் தவிர பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற முன்னாள் முதலமைச்சர்களின் உடல்களுக்கு தமிழகமே திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியதையும் இந்த ஹால் கனத்த இதயத்தோடு பார்த்திருக்கிறது.

ஓமந்தூரார் அரசினர் தோட்டம் ஒரு காலத்தில் அழகிய வனம்  போல இருந்தது. கொளுத்தும வெயிலிலும் குளிர்ச்சியான நிழல் பரப்பும் நிறைய ஆலமரங்கள் இங்கிருந்தன. ஆனால் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக இதில் பல மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. அரசினர் இல்லம், காந்தி இல்லம் உட்பட இங்கிருந்த சில பழைய கட்டடங்கள் இடித்து தள்ளப்பட்டன. ஆனால் இதில் இருந்து எல்லாம் தப்பிப் பிழைத்து, 200 ஆண்டுகளைக் கடந்து நின்று கொண்டிருக்கிறது ராஜாஜி ஹால்.

நன்றி - தினத்தந்தி


* ஒரு காலகட்டத்தில், இந்த ஹாலை கோலிவுட்காரர்கள் குத்தகைக்கு எடுத்துக் கொண்டதைப் போல, ஏராளமான படப்பிடிப்புகள் இங்கு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன.

* புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளால் இந்த ஹால் பலவீனமடைந்துள்ளதாகவும், உடனே இதை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Saturday, May 5, 2012

கலங்கரை விளக்கம்கடலில் திக்குத் தெரியாமல் தவிப்பவர்களுக்கு கடவுளைப் போன்றது கலங்கரை விளக்கம். இன்று மெரினாவில் நாம் பார்க்கும் நீண்டு உயர்ந்த கலங்கரை விளக்கத்திற்கு மூன்று மூதாதையர்கள் இருக்கிறார்கள். அவர்களின் கதையை அறிந்துகொள்ள நாம் மூன்று நூற்றாண்டுகள் பின்னோக்கிப் போக வேண்டும்.

மெட்ராஸ் வெறும் மணல் வெளியாக இருந்த காலத்தில் இங்கிருந்த மீனவர்கள் சிறிய கட்டுமரங்களைத் தான் பயன்படுத்தினார்கள். அவர்கள் கடலில் மீன் பிடித்துவிட்டு திரும்பும்போது, இருள் நேரத்தில் கரையில் அவர்கள் வீட்டுப் பெண்கள் பெரிய தீப்பந்தங்களை ஏந்தியபடி காத்திருப்பார்கள். அதுதான் அவர்களுக்கு கரையைக் காட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தது.

பின்னர் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் இங்கு கோட்டை கட்டி வசிக்கத் தொடங்கியதும், அவர்களுக்கான சரக்குகளை ஏற்றியபடி பெரிய கப்பல்கள் இங்கிலாந்தில் இருந்து இந்த பகுதிக்கு வரத் தொடங்கின. ஆனால் அப்போது மெட்ராசில் துறைமுகம் எல்லாம் கிடையாது. எனவே கப்பலை நடுக்கடலிலேயே நிறுத்திவிட்டு, சிறிய படகுகள் மூலம் சென்று கப்பலில் உள்ள சரக்கை கரைக்கு கொண்டு வருவார்கள். கிழக்கிந்திய கம்பெனியார் 1639ஆம் ஆண்டே இங்கு வந்துவிட்டாலும், 1795 வரை அவர்கள் கலங்கரை விளக்கம் என்ற ஒன்றைப் பயன்படுத்தினார்களா என்று தெரியவில்லை. அதற்கான ஆதாரங்களோ, ஆவணங்களோ எதுவும் இல்லை.

1796இல் தான் முதன்முறையாக ஜார்ஜ் கோட்டையில் இன்று கோட்டை மியூசியம் இருக்கும் கட்டடத்தின் உச்சியில் ஒரு எச்சரிக்கை விளக்கு பொருத்தப்பட்டது. இதுதான் சென்னையின் முதல் கலங்கரை விளக்கம். இந்த கட்டடத்தின் மேல் தளத்தில் ஒரு பெரிய எண்ணெய் விளக்கு எரிந்துகொண்டிருக்கும். கோட்டை இருக்கும் இடத்தை அறிந்து கப்பலை செலுத்த இது உதவியாக இருந்தது. சுமார் 50 ஆண்டுகள் (1841) வரை இங்கிலாந்தில் இருந்து வந்த கிழக்கிந்திய கப்பல்கள் இந்த விளக்கைத் தான் நம்பி இருந்தன. இப்போது நமது எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்வது போல, கலங்கரை விளக்கும் கோட்டையைவிட்டு ஒரு நாள் வெளிநடப்பு செய்தது.

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மெட்ராஸ் இரண்டாக இருந்தது. ஆங்கிலேயர்கள் எல்லோரும் கோட்டைக்குள் வசித்தார்கள், சென்னையின் பூர்வகுடிகளும், ஆங்கிலேயர்களுக்கு பணிபுரியும் மற்ற இனத்தவர்களும் கோட்டைக்கு மேற்கே சற்று தள்ளி இருந்த பகுதியில் வசித்தார்கள். இது கருப்பர் நகரம் என்று அழைக்கப்பட்டது. கோட்டைக்கும் இந்த கருப்பர் நகரத்திற்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளி இருந்தது.

இங்குதான் சென்ன கேசவப்பெருமாள் கோவிலும், சென்ன மல்லீஸ்வரர் கோவிலும் ஆரம்பத்தில் இருந்தன. 1762இல் பரவிய (மர்ம) தீ இந்த பகுதியை கபளீகரம் செய்தது. இதை அடுத்து, கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் இந்த இடத்தை வசப்படுத்தி, இங்கிருந்த இரண்டு கோவில்களையும் தற்போதைய பூக்கடை பகுதியில் மீண்டும் கட்டிக் கொடுத்தனர். பின்னர் இங்கிருந்த காலி மைதானத்தில் ஒரு உயரமான கலங்கரை விளக்கத்தை அமைத்தனர்.

சுமார் 2 ஆண்டுகால உழைப்பில் 1841ஆம் ஆண்டு 161 அடி உயர கலங்கரை விளக்கம் கம்பீரமாக எழுந்து நின்றது. இதில் பொருத்துவதற்காக இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரில் இருந்த ஒரு பிரபல நிறுவனத்தில் நவீன விளக்கிற்கு ஆர்டர் கொடுத்திருந்தார்கள். ஆனால் அது உரிய நேரத்தில் கிடைக்காததால், கோட்டையில் இருந்த பெரிய லாந்தர் விளக்கையே இதன் உச்சியில் வைத்துவிட்டார்கள். சுமார் 3 ஆண்டுகள் வரை இந்த லாந்தர் தான் கலங்கரை விளக்கமாக செயல்பட்டது. பின்னர் 1844ஆம் ஆண்டு அந்த நவீன விளக்கு ஆற அமர வந்து கலங்கரை விளக்கத்தின் உச்சியில் உட்கார்ந்து கொண்டது. இது சாதாரண விளக்கைப் போல தொடர்ந்து எரியாமல், விட்டுவிட்டு ஃபிளாஷ் அடிக்கும். எனவே மற்ற விளக்குகளில் இருந்து இதனை எளிதாகப் பிரித்தறிய முடியும், வெளிச்சமும் கூடுதலாக இருக்கும். இந்த கலங்கரை விளக்கம் ஒரு அரை செஞ்சுரி போட்டபோது, மீண்டும் இடப்பெயர்ச்சி வந்துவிட்டது.

இந்த கலங்கரை விளக்கத்திற்கு அருகில், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்திற்கென ஒரு பிரம்மாண்டமான கட்டடம் 1892ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கட்டடம்தான் அந்த காலத்தில் சென்னையிலேயே மிக உயரமான கட்டடமாக இருந்தது. எனவே கலங்கரை விளக்கம் உயரமான இடத்தில் இருப்பதுதானே சரி என யாரோ கேள்வி எழுப்ப, உயர்நீதிமன்றத்தின் உயரமான மாடம் (175 அடி) ஒன்றிற்கு உடனடியாக மாற்றப்பட்டது. 1894ஆம் ஆண்டு இந்த மாடத்தில் ஏறிய கலங்கரை விளக்கம் 1977 வரை அங்குதான் இருந்தது.

பின்னர் கலங்ரை விளக்கம் இன்னும் சற்று தூரம் தள்ளி, மெரினா கடற்கரையில் சாந்தோமிற்கு அருகில் இப்போது இருக்கும் இடத்தை வந்தடைந்தது. உயர்நீதிமன்ற கலங்கரை விளக்கம் சட்டென பார்க்கும் போது குதுப் மினார் மாதிரி உயரமாக உருளையாக இருக்கும். ஆனால் மெரினாவில் அமைந்த கலங்கரை விளக்கம், உயரமான பென்சில் டப்பாவைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 187அடி உயரத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்கின் ஒளி, 28 கடல்மைல் தொலைவு தெரியும் அளவுக்கு சக்தி வாய்ந்தது.

இப்படித்தான் நமது கலங்கரை விளக்கம், மூன்று சுற்றுகளை முடித்து முழுமை அடைந்து, இன்று கடற்கரையில் ஹாயாக காற்று வாங்கிக் கொண்டிருக்கிறது.

நன்றி - தினத்தந்தி

* முதல் உலகப் போரின்போது ஜெர்மனின் எம்டன் கப்பல் கலங்கரை விளக்கை குறிவைத்தே உயர்நீதிமன்ற வளாகத்தை நோக்கி குண்டு வீசியதாக கூறப்படுகிறது.

* 1970கள் வரை உயர்நீதிமன்ற கலங்கரை விளக்கில் ஏறிப் பார்க்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

* தற்போது மெரினாவில் இருக்கும் கலங்கரை விளக்கம் தான் இந்தியாவிலேயே லிப்ஃட் வசதி கொண்ட ஒரே லைட் ஹவுஸ்.