என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, June 23, 2012

எல்லீசன் என்ற தமிழன்!


சென்னை மாநகரில் நிறைய தெருக்கள் இன்றும் ஆங்கிலேயப் பெயர்களைத் தாங்கி நிற்கின்றன. அந்த வரிசையில் சாந்தி திரையரங்கிற்கு பின்புறம் திருவல்லிக்கேணியில் இருந்து அண்ணாசாலை வரை நீளும் சாலைக்கு எல்லீஸ் என்பவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. யார் இந்த எல்லீஸ் என்று வரலாற்றுப் பக்கங்களில் தேடியபோது, ஒரு சுவாரஸ்யமான மனிதரின் கதை கிடைத்தது.

கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றுவதற்காக இங்கிலாந்தில் இருந்து வந்த எத்தனையோ பேரில் ஒருவர்தான் ஃப்ரான்சிஸ் வைட் எல்லீஸ் (Francis Whyte Ellis). 1796இல் இந்தியா வந்த அவர், பல்வேறு பொறுப்புகளை வகித்து, படிப்படியாக முன்னேறி 1810இல் மெட்ராஸ் மாகாணத்தின் ஆளுநரானார்.

இங்கிலீஷ் பேசிப் பழகிய எல்லீசுக்கு தமிழ் மொழியைக் கேட்டதும் காதில் தேன் பாய்ந்திருக்கிறது. தமிழ் மீது எக்கச்சக்கமாக காதல்வசப்பட்டுப் போன அந்த வெள்ளைக்காரர், ராமச்சந்திரக் கவிராயர் என்பவரிடம் ட்யூஷன் படிக்க ஆரம்பித்து விட்டார். விருப்பம் இருந்ததால் விறுவிறுவென தமிழ் கற்ற எல்லீஸ், செய்யுள் இயற்றும் அளவுக்கு புலமை பெற்றுவிட்டார்.

தமிழ் கற்ற காலத்தில் திருவள்ளுவரின் தீவிர ரசிகராகிவிட்டார் எல்லீஸ். இரண்டே இரண்டு வரிகளில் இந்த மனிதர் எவ்வளவு அரிய பெரிய கருத்துகளை எல்லாம் சொல்லிவிட்டார் என்று அதிசயித்த எல்லீஸ், இதை ஆங்கிலேயர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 1812ல் வெளியான அவரின் ஆங்கிலேய அறத்துப்பால்தான், திருக்குறளின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு. இதுபோதாதென்று பல தமிழ் நூல்களையும் படித்து, திருக்குறளுக்கு ஒரு எளிமையான விளக்கவுரையையும் எழுதினார் எல்லீஸ்.

தமிழ் மட்டுமின்றி பிற தென்னிந்திய மொழிகளின் முக்கியத்துவத்தையும் உணர்ந்த அவர், இங்கு பணியாற்ற வரும் ஆங்கிலேயே அதிகாரிகள் இந்த மொழிகளை அறிந்திருப்பது அவசியம் என்று வலியுறுத்தினார். இதற்காக 1812இல் புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகியவற்றை கற்பிக்கும் கல்லூரி ஒன்றை தொடங்கினார்.

அதேசமயம் எல்லீஸ், மக்கள் பணியிலும் கவனம் செலுத்தத் தவறவில்லை. 1818-ல் பெரும் தண்ணீர்ப் பஞ்சம் வந்தபோது, எல்லீஸ் சென்னையில் 27 கிணறுகளை வெட்டி இருக்கிறார். அவற்றுள் ஒன்று சென்னை இராயப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயிலில் இருக்கிறது. இந்த கிணற்றில் எல்லீசின் திருப்பணி பற்றி சொல்லும் ஒரு நீண்ட பாடல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த கல்வெட்டின் விவரங்களை எனக்கு விரிவாக விளக்கினார், சென்னை அருங்காட்சியக நாணயவியல் துறை காப்பாட்சியர் திரு. சுந்தரராஜன். அதில் திருக்குறள் படித்ததன் பயனாகவே 27 கிணறுகளை வெட்டியதாக எல்லீஸ் குறிப்பிட்டிருக்கிறார். அந்த கல்வெட்டில் தம்மை சென்னப் பட்டணத்து எல்லீசன்என்று  அறிவித்துக் கொள்கிறார் எல்லீஸ். அத்துடன், ‘நட்சத்திர யோக கரணம் பார்த்து சுபதினத்தில் இருபத்தேழு துறவு கண்டு புண்யாகவாசகம் பண்ணுவித்தேன்என்றும் அறிவிக்கிறார். இந்தக் கல்வெட்டு தற்சமயம் மதுரை திருமலை நாயக்கர் மஹால் தொல்லியல் துறை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

திருக்குறள் மீது இருந்த பற்று காரணமாக, எல்லீஸ் திருவள்ளுவர் உருவம் பொறித்த, பொன்னாலான இரட்டை வராகன் நாணயத்தை வடிவமைத்து ஒப்புதலுக்காக கல்கத்தாவிற்கு அனுப்பினார். ஆனால் பல்வேறு காரணங்களால் தாமதமானதால், அது மக்கள் புழக்கத்திற்கு வரவே இல்லை.

இதனிடையே எல்லீஸ் 1819ஆம் ஆண்டு தமது 41ஆவது வயதிலேயே காலரா வந்து காலமானார். வயிற்று வலி மருந்து என்று நினைத்து தவறுதலாக எதையோ குடித்ததால் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இறந்தாலும் தமிழை அவர் பிரியவில்லை என்பதை திண்டுக்கல்லில் உள்ள அவரது கல்லறை உணர்த்துகிறது. அதில் கீழ்கண்டவாறு ஒரு செய்யுள் பொறிக்கப்பட்டுள்ளது.

'திருவள்ளுவப் பெயர்த் தெய்வம் செப்பிய 
அருங்குறள் நூலுள் அறப்பா லினுக்குத்
தங்குபல நூலுதா ரணங்களைப் பெய்து
இங்கிலீசு தன்னில் இணங்க மொழிபெயர்த்தோன்'.


இவ்வாறு எல்லீஸ் தனது கல்லறையிலும் தமிழை பறைசாற்றிக் கொண்டிருக்கிறார். மொத்தத்தில் எங்கேயோ, பிறந்து வளர்ந்த இந்த ஆங்கிலேயர், பிழைக்க வந்த நாட்டில் தமிழால் ஈர்க்கப்பட்டு தனது இறுதி நாட்களில் தமிழராகவே மாறிவிட்டார் என்பதே உண்மை. இந்த கதையை அறிந்தபின் எல்லீஸ் சாலையில் செல்லும்போதெல்லாம், அங்கிருக்கும் ஏதோ ஒரு  கடையில் அமர்ந்து எல்லீஸ் அமைதியாக டீ குடித்தபடி திருக்குறள் படித்துக் கொண்டு இருப்பதைப் போலவே தோன்றுகிறது.

நன்றி - தினத்தந்தி

* தமிழறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர் என்ற நூலில், தமிழர் பண்பாடு, தமிழர்களின் சமய நம்பிக்கை ஆகியவற்றில் எல்லிஸுக்கு இருந்த ஆழ்ந்த ஈடுபாடு பற்றி தெரிவித்திருக்கிறார்.

* தமிழ்ச் சங்கம் ஒன்றை நிறுவித் தமக்குக் கிடைத்த சுவடிகளை எல்லீஸ் அச்சிட்டு வெளியிட்டார் என்று அயோத்திதாசப் பண்டிதர் குறிப்பிட்டிருக்கிறார்.

* தமிழின் யாப்பியலைப் பற்றி எல்லீஸ் எழுதி வெளியாகாதிருந்த ஒரு நூலை, தாமசு டிரவுட்மன் என்ற ஆய்வாளர் இங்கிலாந்தில் கண்டுபிடித்துள்ளார்.

எல்லீசன் கல்வெட்டு

வாரியும் சிறுக வருபடைக் கடலோன்
ஆர்கடல் அதிர ஆர்க்கும் கப்பலோன்
மரக்கல வாழ்வில் மற்றொப் பிலாதோன்
தனிப்பெரும் கடற்குத் தானே நாயகன்
தீவுகள் பலவும் திதிபெறப் புரப்போன்
தன்னடி நிழற்குத் தானே நாயகன் 
தாயினும் இனியன் தந்தையிற் சிறந்தோன்
நயநெறி நீங்கா நாட்டார் மொழிகேட்டு
உயர்செங் கோலும் வழாமை யுள்ளோன் 
மெய்மறை யொழுக்கம் வீடுற அளிப்போன்
பிரிதன்னிய சகோத்திய விபானிய மென்று
மும்முடி தரித்து முடிவில் லாத
தீக்கனைத் தும்தனிச் சக்கர நடாத்தி
ஒருவழிப் பட்ட ஒருமை யாளன்
வீரசிங் காதனத்து வீற்றிருந் தருளிய
சோர்சென்னும் அரசற்கு 57 ஆம் ஆண்டில் 
காலமும் கருவியும் கருமமும் சூழ்ந்து
வென்றியொடு பெரும்புகழ் மேனிமேற் பெற்ற
கும்பினி யார்கீழ்ப் பட்டகனம் பொருந்திய
யூவெலயத் என்பவன் ஆண்டவனாக
சேர சோழ பாண்டி யாந்திரம் 
கலிங்க துளுவ கன்னட கேரளம் 
பணிக்கொடு துரைத்தனம் பண்ணும் நாளில்
சயங்கொண்ட தொன்டிய சாணுறு நாடெனும் 
ஆழியில் இழைத்த அழகுறு மாமணி
குணகடல் முதலா குடகடல் அளவு
நெடுநிலம் தாழ நிமிர்ந்திடு சென்னப்
பட்டணத்து எல்லீசன் என்பவன் யானே
பண்டார காரிய பாரம் சுமக்கையில் 
புலவர்கள் பெருமான் மயிலையம் பதியான்
தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்
திருக்குறள் தன்னில் திருவுளம் பற்றி 
'இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு'
என்பதின் பொருளை என்னுள் ஆய்ந்து
ஸ்வஸ்திஸ்ரீ சாலி வாகன சகாப்தம் 
வருஷம் 1740க்குச் செல்லாநின்ற
இங்கிலீசு 1818ம் ஆண்டில் 
பிரபவாதி வருஷத்துக்கு மேற் செல்லாநின்ற
பஹீத்திர யோக கரணம் பார்த்து
சுபதினத்தில் இதனோடு இருபத்தேழு
துறவு கண்டு புண்யாகவாசகம்
பண்ணுவித்தேன் 1818.

2 comments:

  1. இந்த வியப்புமிகு , உண்மைகளை பற்றி தெரிந்து கொள்ளும் முனைப்பு , நம்மில் கிடையாது. இவ்வளவு, முயற்சி செய்து , தகவல்களை சேகரித்து சுவையான பதிவாக வெளியிட்டுள்ளது, பாராட்ட தக்கது!

    உங்களுக்கு நேரம் இருப்பின், என் பதிவையும் பார்வை இட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
    http://vetrimagal.blogspot.in/

    ReplyDelete
  2. உங்களின் பாராட்டுகளுக்கு நன்றி. நிச்சயம் படிக்கிறேன் வெற்றிமகள்

    ReplyDelete