என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Tuesday, January 25, 2011

நினைவுகள்

பலத்த வேலைகளுக்கு
இடையிலும் - நிற்காது
தொடர்கிறது உன்
நினைவுத் தூறல்...

அடர்ந்த கிளைகளை
அழகாய் ஊடுருவி
மண்ணை முத்தமிடும்
மாலை மழைபோல

Monday, January 24, 2011

பொன்மாலைப் பொழுது


ஒரு காந்தம், சிறு இரும்பு

ஈர்ப்பின் வசமிழந்தும்

உறுதியாய் இருந்தும்

சேர்ந்தும், சேராமலும்

பேரின்ப பேரவஸ்தையில்

லேசான போதையில்

மிக லேசான தெளிவில்

எல்லைகள் மறந்து(?!)

உலகை கழற்றி வீசி

பேசிப் பேசிப் பேசிப் பேசி

இருத்தலே இன்பமாய்

இருந்துவிட்டு வந்த

பொன்மாலைப் பொழுது...

Saturday, January 1, 2011

மலை ஆட்டின் மறுஅவதாரம்


மண்ணில் இருந்து முற்றிலுமாக மறைந்துபோன ஒரு உயிரினத்தை விஞ்ஞானத்தின் உதவியால் மீண்டும் உயிர்த்தெழ வைத்தார்கள் ஆராய்ச்சியாளர்கள். அப்படி மறுஅவதாரம் எடுத்து உலகையே வியக்க வைத்த விலங்குதான் பைரீனியன் ஐபெக்ஸ் (Pyrenean Ibex) என்ற மலை ஆடு.

இந்த பைரீனியன் ஐபெக்ஸ்கள் ஒரு காலத்தில் பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளின் மலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிந்தன. இலை, தழையையும் புல்லையும் மேய்ந்து விட்டு அப்பாவியாய் அலைந்துகொண்டிருந்த இந்த ஆட்டு மந்தையின் எண்ணிக்கை பல காரணங்களால் மெல்ல மெல்ல குறைந்து வந்தது. 1900களில் கணிசமாக குறைந்த இதன் எண்ணிக்கை, 1910ஆம் ஆண்டிற்கு பிறகு 40ஐ கூடத் தாண்டவில்லை.

இப்படி மெல்ல அழிந்துவந்த ஐபெக்ஸ் இனத்தின் கடைசி உறுப்பினராய் வலம் வந்துகொண்டிருந்த சிலியா என்ற பெண் ஆடு, 2000ஆம் ஆண்டு ஜனவரி 6ந் தேதி ஒரு மரக்கிளை முறிந்து விழுந்ததில் படுகாயமடைந்து பரலோகம் போய்ச் சேர்ந்தது. இயற்கையின் படைப்பில் ஒரு இனம் முற்றிலுமாக அழிந்துபோனதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நேரத்தில்தான் குளோனிங் தொழில்நுட்பம் விஞ்ஞானிகளுக்கு கை கொடுத்தது. 1996ஆம் ஆண்டு விஞ்ஞானிகள் 'டாலி' என்ற ஆட்டுக் குட்டியை குளோனிங் மூலம் உருவாக்கி சாதனை படைத்திருந்தனர். இதன் அடுத்தகட்ட ஆராய்ச்சிக்காக அவர்கள் சிலியாவின் திசுக்களை 1999ஆம் ஆண்டு எடுத்து வைத்திருந்தனர். 2000ஆம் ஆண்டில் ஸ்பெயின் அரசின் அனுமதி கிடைத்ததும், இந்த திசுக்களைக் கொண்டு மற்றொரு சிலியாவை உருவாக்கும் முயற்சி தொடங்கியது.

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மூன்று குழுக்களாகப் பிரிந்து இந்த ஆராய்ச்சியில் இறங்கினர். அழிந்துபோன பைரீனியன் ஐபெக்ஸிற்கு மீண்டும் உயிர் கொடுக்கும் அவர்களின் முதல் முயற்சி தோல்வி அடைந்தது. மனந்தளராத விஞ்ஞானிகள் விடாமுயற்சியுடன் மீண்டும் போராடினர்.

சிலியாவின் தோல் சாம்பிளில் இருந்து விஞ்ஞானிகள் குளோன் எம்பிரியோ எனப்படும் குளோனிங் மூலம் தயாரான சினை முட்டைகளை முதலில் உருவாக்கினர். பின்னர் அவற்றை 208 சாதாரண ஆடுகளின் உடலில் செலுத்தினர். அவற்றில் 7 ஆடுகள் மட்டும் கருவுற்றன. ஆனால் ஒன்றே ஒன்றுதான் இறுதியில் குட்டி போட்டது. 2009ஆம் ஆண்டு சிலியாவின் திசுவில் இருந்து குளோனிங் மூலம் உருவான பெண் ஆட்டுக்குட்டி வெற்றிகரமாகப் பிறந்தது.

ஆனால் அந்த ஆட்டுக் குட்டி சுவாசக் கோளாறு காரணமாக 7 நிமிடங்களிலேயே இறந்துவிட்டது. இருப்பினும், அழிந்துபோன உயிரினத்தில் இருந்து உருவான முதல் உயிர் என்ற பெருமையுடன் அந்த ஆட்டுக் குட்டி வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.