என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Sunday, March 31, 2013

செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல்


பார்த்தவுடன் பரவசப்படுத்தி நம்மை பல நூற்றாண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்லும் ஆற்றல் சில கட்டடங்களுக்கு உண்டு. சென்னைக்குள் இந்த வாக்கியத்தை சோதித்துப் பார்க்க விரும்புகிறவர்கள், அமெரிக்க துணைத்தூதரகத்திற்கு அருகில் அமைந்திருக்கும் செயின்ட் ஜார்ஜ் கதீட்ரலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள்.

சுமார் 200 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயம், கிமு 500களில் கிரேக்கர்கள் பயன்படுத்திய ஐயானிக் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கோண கூரையும் அதனைத் தாங்கும் வேலைப்பாடுகள் நிறைந்த உயரமான தூண்களும்தான் ஐயானிக் பாணியின் அடையாளங்கள். கிரேக்கர்களால் மிகவும் ஸ்டைலான மாடலாக கருதப்பட்ட இந்த வடிவமைப்பை செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்திற்காக தேர்ந்தெடுத்தவர், கிழக்கிந்திய கம்பெனியின் மூத்த பொறியாளரான கர்னல் கால்ட்வெல்.
செயிண்ட் ஜார்ஜ் தேவாலயம்

கிரேக்கக் கலையோடு, ஐரோப்பிய கட்டடக் கலையையும் கலந்து உயரமான கோபுரத்துடன், ஒரு பிரம்மாண்டமான தேவாலயத்தை அவர் வடிவமைத்துக் கொடுக்க, அதனை கட்டி முடித்தார் அவரது உதவியாளரான கேப்டன் டி.ஹாவிலேண்ட். இந்த மெகா தேவாலயத்தை 1815இல் கட்டி முடிக்க ரூ.2 லட்சத்து 7000 செலவானதாம். இந்த மொத்தத் தொகையையும் மக்களே திரட்டி அளித்ததாக கூறப்படுகிறது. இவ்வளவு செலவு செய்து கட்டப்பட்ட இந்த ஆலயம், லண்டனுக்கு வெளியே அமைந்துள்ள மிக நேர்த்தியான ஆங்க்லிகன் தேவாலயமாக அந்நாட்களில் போற்றப்பட்டது.

அதெல்லாம் சரி, இப்படி கலைநயமிக்க ஒரு தேவாலயத்தை இங்கு அமைக்க வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்விக்கு விடை தேடியபோது, மெட்ராசின் வரைபடத்தையே மாற்றிய ஒரு கதை கிடைத்தது. ஒருகாலத்தில், தீவுத்திடலில் இருந்து செனடாப் ரோடு வரை மவுண்ட் ரோட்டின் இருபுறமும் வெறும் மைதானமாகத்தான் இருந்தது. பெரிய சத்திரச் சமவெளி என இந்த பகுதி அழைக்கப்பட்டது.

கிழக்கிந்திய கம்பெனி இந்த பகுதியை வாங்கிய பிறகு, மெட்ராசில் மேயராக இருந்த ஜார்ஜ் மெக்கே என்பவர் 1785இல் இங்கு ஒரு பெரிய தோட்ட வீட்டைக் கட்டினார். ஆயிரம் விளக்கு மசூதிக்கு அருகில் இருக்கும் இந்த பகுதி இன்றும் மெக்கேஸ் கார்டன் என அழைக்கப்பட்டு வருகிறது. கோட்டைக்குள் சிறிய வீடுகளில் குடியிருந்த ஆங்கிலேயர்கள், இப்படி பரந்துவிரிந்த தோட்ட வீடுகளுக்கு இடம்பெயர்வதை விரும்பினர். விளைவு மெக்கேவைத் தொடர்ந்து நிறைய பேர் இந்த பகுதியில் குடியேறத் தொடங்கினர்.

இப்படி பல்கிப் பெருகிய ஆங்கிலேயர்களின் வசதிக்காகத்தான் இந்த பகுதியில் புனித ஜார்ஜ் கதீட்ரல் கட்டப்பட்டது. இந்த பகுதியின் அடையாளமாகவே இந்த தேவாலயம் விளங்கியதால், இந்த சாலையே கதீட்ரல் சாலை என அழைக்கப்பட்டது. இந்த கட்டடம் மட்டுமின்றி இங்கு நடைபெற்ற நிறைய காரியங்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.

அவற்றில் சிலவற்றை என்னோடு பகிர்ந்துகொண்டார், இந்த தேவாலயத்தின் அருட்தந்தை இம்மானுவேல் தேவகடாட்சம். தென்னிந்திய திருச்சபை என அழைக்கப்படும் சிஎஸ்ஐ பிரிவு, 1947ஆம் ஆண்டு இந்த தேவாலயத்தில்தான் நிறுவப்பட்டது. நீண்ட நெடிய முயற்சிகளுக்கு பிறகு, கிறிஸ்துவத்தின் பல்வேறு பிரிவுகளை ஒருங்கிணைத்த இந்த நிகழ்வு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இங்குள்ள சுவர்களில் பளிங்குச் சிலைகளாகவும், பத்திரங்களாகவும் நிறைய நினைவுக் குறிப்புகள் இடம்பிடித்திருக்கின்றன. அவை ஒவ்வொன்றுக்கு பின்னாலும் ஒரு கண்ணீர் கதை இருக்கிறது. இந்த தேவாலயத்தின் மற்றொரு முக்கியமான அம்சம், இங்கிருக்கும் சித்திர வேலைப்பாடு நிறைந்த கண்ணாடிகள். கருவறையின் இருபுறமும் ஏசுபிரானின் வாழ்வைச் சொல்லும் வண்ணக் கண்ணாடிகளின் வழியே சூரிய ஒளி தேவாலயத்திற்குள் ஊடுருவதைப் பார்ப்பதே பரவச அனுபவமாக இருக்கிறது.
சித்திரக் கண்ணாடி

தேவாலயத்திற்கு அருகிலேயே ஒரு கல்லறைத் தோட்டம் இருக்கிறது. தேவாலயத்தை கட்டிய கேப்டன் டி.ஹாவிலேண்டின் மனைவிதான் இங்கு புதைக்கப்பட்ட முதல் நபர். அவரைத் தொடர்ந்து அந்தக்கால சென்னையின் பல முக்கியப் பிரமுகர்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். கல்லறைத் தோட்டத்தைச் சுற்றி உள்ள வேலியை உருவாக்க பயன்பட்ட நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இருந்து கைப்பற்றப்பட்டவையாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இப்படி வேலியில் தொடங்கி உள்ளிருக்கும் கல்லறைகள் வரை சென்னையின் 200 ஆண்டுகால சரித்திரம் இங்கு உறைந்து கிடக்கிறது.
விநோத இசைக்கருவி

பாரம்பரியமிக்க கோபுரக் கடிகாரம், ராட்சத மணிகள், காற்றுக்கு இனிமை சேர்க்கும் குழலிசைக் கருவி என வரலாறு பேசும் பல்வேறு பொருட்கள் இங்கு நிறைந்துகிடக்கின்றன. இவ்வளவு சிறப்புகளோடு அமைதியாக நிற்கும் இந்த தேவாலயத்தை ஒவ்வொருமுறை பார்க்கும்போதும், நமது தாத்தா பாட்டிகள் பாசமுடன் அளிக்கும் பரிசுப் பொருட்களால் ஏற்படும் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் ஒருசேர உற்பத்தியாகிறது.

நன்றி - தினத்தந்தி

* நான்காம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த ஜார்ஜ் என்ற புனிதரின் நினைவாகத்தான், இந்த தேவாலயத்திற்கு செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் எனப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.
* கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் உள்ள ஏதெனா கோவில் ஐயானிக் பாணி கட்டடத்திற்கு சிறந்த உதாரணம். அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையின் வடக்கு வாசலும் ஐயானிக் பாணியில் கட்டப்பட்டதுதான்.

Saturday, March 23, 2013

டச்சுக் கல்லறைகள்


வரலாறு மிகவும் விசித்திரமானது. அது இலக்கியமாகவும், கல்வெட்டாகவும், பழம்பொருட்களாகவும் மட்டும் அடுத்த தலைமுறைக்கு கிடைப்பதில்லை. கல்லறைக் கற்களாகவும் வரலாறு உலகம் முழுவதும் ஆங்காங்கே அமைதியாக புதையுண்டு கிடக்கிறது. சில கல்லறைகள் புதையுண்ட அந்த மனிதரையும் தாண்டி, அந்த நிலப்பரப்பின் ஒட்டுமொத்த வரலாற்றிற்கும் கதவு திறந்துவிடுகின்றன. அப்படிப்பட்ட பொக்கிஷக் கல்லறைகள் சில, சென்னைக்கு அருகில் இருக்கின்றன.
டச்சுக்கல்லறை வாயிலில்..

ஆங்கிலேயர்கள் வருவதற்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே போர்த்துகீசியர்கள் சோழமண்டலக் கரையோரத்தில் குடியேறிவிட்டனர். அவர்கள் சென்னைக்கு அருகில் உள்ள பழவேற்காட்டை தங்கள் இருப்பிடமாக்கிக் கொண்டனர். அப்போது சென்னை என்ற பகுதி வெறும் பொட்டல் மணல்வெளியாக  இருந்ததால் இந்தப் பக்கம் வரவில்லை. அதையும் தாண்டி சாந்தோமில் கால்பதித்தது தனிக்கதை. அவர்களைத் தொடர்ந்து 1607இல் டச்சுக்காரர்களும் வந்துவிட்டனர்.

வணிகத்திற்காக வந்த டச்சுக்காரர்கள் பின்னர் பாதுகாப்பு கருதி பழவேற்காட்டில் ஒரு கோட்டையைக் கட்டினர். இன்று கோட்டைக்கான எந்த சுவடும் அந்த பகுதியில் இல்லை. ஆனால் அங்கு ஒரு பலமான கோட்டை இருந்தது என்பதற்கு ஆதாரமாய் இன்றும் இருந்துகொண்டிருக்கிறது ஒரு கல்லறை. ஒருகாலத்தில் கோட்டை இருந்த பகுதிக்கு எதிரில் அமைந்திருக்கிறது இந்த கல்லறைத் தோட்டம்.

புதிய கல்லறைத் தோட்டம் (New Cemetery) என்று அழைக்கப்படும் இந்த பகுதி தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ''பாதுகாக்கப்பட்ட பகுதி, எனவே இதனை சேதப்படுத்துபவர்களுக்கு மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையோ, ரூ.5 ஆயிரம் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ வழங்கப்படும்'' என எச்சரிக்கிறது இங்கிருக்கும் ஒரு துருப்பிடித்த அறிவிப்புப் பலகை. ஆனால் அருகிலேயே ஒட்டப்பட்டிருக்கும் 'மூலம்' சிகிச்சைக்கான சுவரொட்டிகள் மூலம், மக்கள் இதனை எந்தளவு மதிக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
வாயில்காப்போன்..

இரண்டு எலும்புக் கூடுகள் வரவேற்கும் வாசல் வழியாக சென்றால் நம் கண்முன் விரிகிறது 17ஆம் நூற்றாண்டு. குதிரைகள் புடைசூழ ஒய்யாரமாக வலம் வந்த தளபதிகள் முதல் சமையல் அறைகளில் இருந்தபடியே சரித்திரத்தின் பக்கங்களில் ஆதிக்கம் செலுத்திய பெண்மணிகள் வரை அனைவரும் இங்கு அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த கல்லறைத் தோட்டத்தில் மொத்தம் 77 சமாதிகள் இருக்கின்றன. 1656ஆம் ஆண்டுக்கு பிறகு இறந்த முக்கியப் பிரமுகர்களின் உடல்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளன. 1606 முதல் 1656 வரை உயிரிழந்தவர்களின் உடல்கள் சற்று தொலைவில் உள்ள பழைய கல்லறையில் புதைக்கப்பட்டுள்ளன. ஆனால் பழைய கல்லறை இன்று மிகவும் சிதலமடைந்துவிட்டது.
17ஆம் நூற்றாண்டு கல்லறைகள்..

புதிய கல்லறையில் இருக்கும் ஒவ்வொரு சமாதியும் பல வரலாற்றுத் தகவல்களைத் தாங்கி நிற்கின்றன. இந்த நினைவுக் கற்களின் மீதுள்ள எழுத்துகள் டச்சு மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை ஹாலந்து நாட்டிலேயே எழுதப்பட்டு கப்பலில் எடுத்துவரப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இங்குள்ள 77 சமாதிகளில் பெரும்பாலானவை டச்சுக்காரர்களுடையவை. இவற்றில் 5 சமாதிகளின் மீது சிறிய மாடம் போன்ற அமைப்புகள் கட்டப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக மூன்று சமாதிகள், வேலைப்பாடுகள் நிறைந்த வளைவுகளுடன் காட்சியளிக்கின்றன. மீதமுள்ள இரண்டு சமாதிகள் சதுர ஸ்தூபிகளாக (Obelisk) உயர்ந்து நிற்கின்றன. இவற்றில் உயரமாக இருக்கும் ஸ்தூபிக்கு பின் ஒரு அழகான காதல் கதை இருக்கிறது.

இங்குள்ள அனைத்து சமாதிகளின் மீதும் டச்சு மொழியில் நிறைய எழுதப்பட்டுள்ளன. இவை அந்த மனிதரைப் பற்றியும், அவரது வாழ்க்கை சார்ந்த நிறைய தகவல்களையும் தெரிவிக்கின்றன. உதாரணத்திற்கு, இங்குள்ள 20 கல்லறைகளின் தகவல்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இதில் 11 கல்லறைகள் பெண்களுடையவை, 9 ஆண்களுடையவை. இறந்தவர்களில் பெண்களின் சராசரி வயது 30ஆகவும், ஆண்களின் சராசரி வயது 48ஆகவும் இருக்கிறது.
கல்லறையில் கோட்டையின் வரைபடம்

இந்த சமாதிக் கற்களின் மூலம்தான் இங்கு ஜெல்டிரியா என்ற கோட்டை இருந்த விவரம் உறுதிப்படுத்தப்படுகிறது. அந்த கோட்டை எப்படி இருந்தது என்ற வரைபடம் கூட ஒரு சமாதியில் இடம்பெற்றிருக்கிறது. மற்றொரு நினைவிடத்தில் பழவேற்காடு 17ஆம் நூற்றாண்டில் எப்படி இருந்தது என காலத்திற்கும் அழியாத வகையில் கல்லில் பொறித்திருக்கிறார்கள். டச்சுக்காரர்கள் வரைபடம் வரைவதில் சிறந்தவர்கள் என்பதை இந்தக் கற்கள் உறுதிப்படுத்துகின்றன.

நினைவுக் கற்களின் ஓரங்களை அலங்கரிக்கும் விதவிதமான பூ வேலைப்பாடுகள், மத்தியில் காட்சியளிக்கும் பிரதான சித்திரங்கள், அவற்றின் அழகியல் என ஒவ்வொரு கல்லும் சிற்பக் காவியமாகவே காட்சியளிக்கின்றன. இவற்றை ரசித்தபடியே, ஆளரவமற்ற இந்த மயான பூமியில் அமைதியாக கண்களை மூடி நிற்கும்போது வாழ்வின் நிலையாமை அழுத்தமாக முகத்தில் அறைகிறது.  

----

கடலில் கரைந்த கனவு

காதலின் சின்னம்

டச்சு கல்லறைத் தோட்டத்தில் அனைத்தையும் விட உயர்ந்து நிற்கும் ஒரு சதுர ஸ்தூபிக்கும் ஜப்பானுக்கும் தொடர்பு இருக்கிறது. கப்பலில் இருந்து ஓடிவந்த ஹிக்கின்போதம் (MynHeer Von Higginbottom) என்ற வணிகர் பழவேற்காட்டில் தஞ்சமடைந்தார். பின்னாட்களில் சிறந்த வணிகராக பெயரெடுத்த அவர், இங்கிருந்தபடியே சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுடன் வணிகம் செய்தார். வணிகத்தோடு நிறுத்தாமல் அவர் காதலும் செய்தார்.

ஜப்பானின் அரச கருவூலத்தை கவனிக்கும் உயரதிகாரியின் மகளை இந்த வணிகர் காதலித்தார். அவரையே கரம்பிடித்து பழவேற்காட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். இப்படி சந்தோஷமாக போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் ஒருநாள் புயல் வீசியது. கடலில் சிறிய படகில் சென்று கொண்டிருந்த அவரது 18 வயது மகன் அலையின் சீற்றத்திற்கு இரையாகிவிட்டான். தங்கள் அருமை மகனைப் புதைத்து, அதன் மேல் அந்த காதல் தம்பதி எழுப்பிய ஸ்தூபி, இன்றும் அவர்களின் ஆறாத சோகத்தை சொல்லிக் கொண்டே இருக்கிறது.

நன்றி - தினத்தந்தி

Saturday, March 9, 2013

சிந்தாதிரிப்பேட்டை


மெட்ராஸ் நன்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம் அல்ல. காலத்தின் தேவை கருதி, தொடர்ந்து தன்னை விரிவுபடுத்திக் கொண்டதுதான், ஒருகாலத்தில் சிறிய மணல்வெளியாக இருந்த மெட்ராஸை, இன்று மாபெரும் நகரங்களின் பட்டியலில் சேர்த்திருக்கிறது. அப்படி இந்த மாநகரம் தனது தேவை கருதி உருவாக்கிய ஒரு பகுதிதான் சிந்தாதிரிப்பேட்டை.

சிந்தாதிரிப்பேட்டை உருவானதற்கு பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான அரசியல் கதையும் இருக்கிறது. ஆட்சியாளர்களின் அதிருப்திக்கு ஆளானால் என்ன ஆகும் என்பதை அந்தக் கதை இன்றும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது. புனித ஜார்ஜ் கோட்டைக்கு அருகில், கூவம் நதியின் வளைவில் குளுகுளுவென இருந்ததால் இந்த இடத்தில் தோட்ட வீடு கட்டி குடியேறினார் சுங்குராமா.
கூவத்தின் மேல் சிந்தாதிரிப்பேட்டை பாலம்

18ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் மெட்ராஸில் மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்தவர்தான் இந்த சுங்குராமா. ஆங்கிலேயர்களுக்கு மொழிபெயர்ப்பாளராக (துபாஷ்) இருந்த அவர், 1711இல் தலைமை வணிகராக உயர்ந்தார். 1717இல் திருவொற்றியூர், சாத்தன்காடு, எண்ணூர், வியாசர்பாடி, நுங்கம்பாக்கம் ஆகிய கிராமங்களை ஆண்டுக்கு 1200 பகோடாக்கள் கொடுத்து 12 ஆண்டுகளுக்கு வாடகைக்கு எடுக்கும் அளவுக்கு பணமும், செல்வாக்கும் அவருக்கு இருந்தது.

புனித ஜார்ஜ் கோட்டைக்குள்ளேயே வீடு கட்டிக் கொள்ளும் உரிமையும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர் அந்த வீட்டை ஏற்றுமதிக்கான துணிகளை வைக்கும் குடோனாக பயன்படுத்தி வந்தார். பதவி வரும்போது பணிவும் வரவேண்டும் என்பார்கள். ஆனால் சுங்குராமாவிற்கு அது வரவில்லை. ஐரோப்பிய வணிகர்களிடம் அவர் நடந்துகொண்ட விதம் பலருக்கும் அவர் மீது கசப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கியது. விளைவு, சுங்குராமாவிற்கான கெட்ட காலம் தொடங்கியது. ஆட்சி மாறியதும், காட்சியும் மாறியது.

மெட்ராஸின் புதிய ஆளுநராக மார்டன் பிட் (Morton Pitt) பதவியேற்றார். இவருக்கும் சுங்குராமாவிற்கும் அவ்வளவாக ஒத்துப்போகவில்லை. அந்த சமயத்தில் ஏற்றுமதிக்காக தரமான துணிகள் கிடைப்பதும் சற்று சிரமமாக இருந்தது. கிழக்கிந்திய கம்பெனியின் பிரதான தொழிலே மெட்ராசில் இருந்து மேலைநாடுகளுக்கு துணி ஏற்றுமதி செய்வதுதான். இதற்காகத்தான் முன்னர் ஆளுநராக இருந்த கோலட், தனது பெயரில் (காலடிப்பேட்டை) தண்டையார்பேட்டை அருகில் ஒரு புதிய குடியிருப்பை உருவாக்கி இருந்தார். அதேபோன்றதொரு தேவை ஆளுநர் பிட்டுக்கும் எழுந்தது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க விரும்பிய பிட், இந்த புதிய குடியிருப்பை சுங்குராமாவின் பரந்துவிரிந்த தோட்டத்தில் அமைப்பது என முடிவெடுத்தார். கூவத்தின் வளைவில் மரங்கள் நிறைந்திருந்த அந்த பகுதி நெசவாளர்கள் நிழலில் அமர்ந்து வேலை செய்யவும், கூவம் ஆற்றின் நீர் துணிகளை அலசவும் ஏற்றதாக இருக்கும் எனக் காரணம் சொல்லப்பட்டது. இது அராஜகம் என சுங்குராமா கூக்குரலிட்டுப் பார்த்தார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இதனிடையே சுங்குராமா தலைமை வணிகர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுவிட்டதால் அவரால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை.

மெட்ராஸ் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்பவர், நெசவாளர், சாயம் தோய்ப்போர் உள்ளிட்டோர் இந்த பகுதியில் குடியேற்றப்பட்டனர். இப்படித்தான் 1734இல் 'சின்ன தறிப் பேட்டை' உருவாகி காலப்போக்கில் சிந்தாதிரிப்பேட்டை என்றானது. 1737இல் இந்த பகுதியில் 230 நெசவாளர்கள் இருந்ததாக ஒரு ஆங்கிலேய குறிப்பு சொல்கிறது.
ஆதிகேசவ பெருமாள் கோவில்

பிட் இந்த குடியிருப்பை உருவாக்க ஆதியப்ப நாராயண செட்டி, சின்னதம்பி முதலியார் ஆகிய இரண்டு வணிகர்களைப் பயன்படுத்திக் கொண்டார். நெசவாளர்களை இங்கு அழைத்து வருவது, அவர்களுக்கு வீடு கட்டிக்கொள்ள குறிப்பிட்ட காலம் வரை வட்டியில்லாமல் கடன் வழங்குவது போன்ற பணிகளை இவர்கள் மேற்கொண்டனர். இதற்கு பதிலாக இங்கு உற்பத்தி செய்யப்படும் துணிகளை மொத்தமாக வாங்கி கணிசமான லாபத்திற்கு கம்பெனிக்கு விற்கும் உரிமை இவர்களுக்கு வழங்கப்பட்டது.

கிழக்கிந்திய கம்பெனி எதிர்பார்த்தது போலவே துணி வியாபாரத்திற்கு சிந்தாதிரிப்பேட்டை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எனவே பிட்டிற்கு பிறகு ஆளுநரான ரிச்சர்ட் பென்யானும் இந்த பகுதியை வளர்ப்பதில் ஆர்வம் காட்டினார். ஆற்காடு நவாப்பிடம் இருந்து ஆற்காடு நாணயங்களை கம்பெனியே அச்சடித்துக் கொள்ளும் உரிமையைப் பெற்ற பென்யான், அதற்கான நாணயச் சாலையை சிந்தாதிரிப்பேட்டையில் அமைத்தார். அதை நிர்வகிக்கும் உரிமை லிங்கிச் செட்டி என்ற வணிகருக்கு வழங்கப்பட்டது.

ஒருபக்கம் பறக்கும் ரயில், மற்றொரு பக்கம் அண்ணாசாலையை நோக்கி விரையும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் என சிந்தாதிரிப்பேட்டையின் முகம் இன்று வெகுவாக மாறிவிட்டது. ஆனால் ஒவ்வொருமுறையும் மாலை மயங்கும் நேரத்தில் கூவம் ஆற்றுப் பாலத்தில் நடக்கும்போது, 300 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்தாதிரிப்பேட்டையின் முகம், கறுப்பு கூவத்தில் கலங்கலாய் தெரிவது போலவே இருக்கிறது.

நன்றி - தினத்தந்தி


* சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில், ஆதியப்ப நாராயண செட்டி கட்டியதுதான். இவர் இந்த பகுதியில் ஒரு மசூதியையும் கட்டிக் கொடுத்தார். இப்பகுதியில் 1847இல் கட்டப்பட்ட ஒரு சர்ச்சும் இருக்கிறது.

* புனித ஜார்ஜ் கோட்டையை முற்றுகையிட்டபோது, பிரெஞ்சுப் படைகள் சிந்தாதிரிப்பேட்டையில்தான் முகாமிட்டு தங்கின.

Sunday, March 3, 2013

மெட்ராசின் ஜட்கா வண்டி


மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்து விளங்கும் சில விஷயங்கள், காலப்போக்கில் மெல்ல மங்கி மறைந்து விடுகின்றன. அப்படி ஒரு காலத்தில் மெட்ராசில் இறக்கைகட்டிப் பறந்துகொண்டிருந்த ஜட்கா வண்டிகள், நவீன வாகனங்களின் வருகைக்கு பின் காணாமலே போய்விட்டன.

ஆங்கிலேயர்கள் சென்னையில் குடியேறிய புதிதில் தங்களின் போக்குவரத்திற்கு பல்லக்கு, மாட்டு வண்டி, குதிரை, குதிரை வண்டி போன்றவற்றையே பயன்படுத்தினர். ஆனால் பொதுமக்களில் வசதி படைத்தோருக்கு மட்டுமே இந்த சொகுசு சாத்தியமாக இருந்தது. மற்றவர்கள் தன் காலே தனக்கு உதவி என்று பல மைல் தூரம் நடந்துதான் சென்றனர்.

சென்னை மாகாணத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்கு இடையில் சாலைகள் போடப்பட்ட பின்னர், போக்குவரத்து அதிகரிக்கத் தொடங்கியது. ரயில் கண்டுபிடிக்கப்பட்டு ராயபுரம், சென்ட்ரல் ரயில் நிலையங்கள் எல்லாம் வந்த பிறகு, வெளியூர்களில் இருந்து மெட்ராஸ் வருபவர்களின் எண்ணிக்கை பெருகியது. ரயில் நிலையங்களில் வந்திறங்கும் அவர்களுக்கு வரப்பிரசாதமாக வந்தவைதான் ஜட்கா வண்டிகள்.

ஒற்றை குதிரை பூட்டிய ஒரு சிறிய கூண்டு வண்டிதான் ஜட்கா வண்டி என்று அழைக்கப்பட்டது. மாடு பூட்டிய சில ஜட்கா வண்டிகளும் ஆரம்பத்தில் இருந்தன. ஆனால் குதிரைகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாததால் இவை சீக்கிரமே வழக்கொழிந்துவிட்டன. அந்தக்கால மெட்ராஸ் City Of Magnificent distances என்று அழைக்கப்பட்டது. காரணம் ஒரு இடத்திற்கும் இன்னொரு இடத்திற்கும் இடையில் அவ்வளவு தூரம் இருந்தது. இந்த தூரத்தை கடக்க ஜட்கா வண்டிகள்தான் உதவின.

சென்ட்ரல் ஸ்டேஷனுக்கெதிரில் ராஜா ராமசாமி முதலியார் சத்திரம் என்று ஒன்றிருந்தது. அதேபோல எழும்பூர் ஸ்டேஷனுக்கருகில் கண்ணன் செட்டியார் சத்திரம் இருந்தது. இப்படி இன்னும் சில சத்திரங்கள் நகரில் ஆங்காங்கே இருந்தன. இவற்றின் வாசல்களில் ஜட்கா வண்டிகள் வரிசைகட்டி நின்றன. நான்கு பேர் அமர்ந்து செல்லக்கூடியது என்று சொல்லப்படும் இந்த ஜட்கா வண்டிகளைப் பற்றி அந்தக்காலத்தில் ஒருவர் 'அனுபவித்து' எழுதியது இது..

சென்னப் பட்டணத்தில் காணப்படுகிற  ஜட்கா மாதிரி அங்கே (லண்டனில்) தேடித் தேடியலைந்தாலும் கிடைக்காது. அந்த ஜட்கா  சென்னப் பட்டணத்திற்கென்று விசேஷமாயல்லவோ ஏற்பட்டிருக்கிறது. பிரமனுடைய சிருஷ்டிகளில் எதைத்தான்  அதற்குச் சமானமாய்ச் சொல்லலாம்? பம்பாய்க்குப் போனால்தான் என்ன, கல்கத்தாவுக்குப் போனால்தான் என்ன, அங்கே இதுமாதிரி, ஒடுக்கமாய் ஒடிந்தும் நெரிந்துமிருக்கிற மரப் பெட்டிகளை வெகு காலத்திற்கு முன் வர்ணம் பூசப்பட்ட அடையாளத்துடன் இரண்டு சக்கரங்களின் மேலேற்றி, தேக சவுக்கியமுள்ள ஒரு மனிதனுடைய சரீரத்திற்கு உள்ளே இடம் இல்லாதபொழுது, `நாலு பேர் சவாரி செய்ய` என்று எழுதிய ஒரு தகடுஞ் சேர்த்துள்ள வண்டிகள் கிடைத்தல் அருமையினுமருமை. லண்டனில் அதனினும் அருமை. அந்தப் பாக்கியமெல்லாம் சென்னைக்கே இருக்கட்டும்.

-
ஜி.பரமேஸ்வரம் பிள்ளை
`
லண்டன் பாரீஸ் நகரங்களின் வினோத சரித்திரம்` 1899.

இதுமட்டுமின்றி, இப்போது சில ஆட்டோக்காரர்கள் செய்யும் அதே வேலைகளை அப்போதைய ஜட்காகாரர்களும் செய்திருக்கின்றனர். அதிக பணம் கேட்டு அடாவடி செய்வது, வேறு இடத்தில் இறக்கிவிட்டுச் செல்வது போன்ற விஷயங்கள் எல்லாம் அப்போதே இருந்திருக்கிறது. இது பற்றிய செய்திகள் அந்தக்கால பத்திரிகைகளில் ஆதங்கத்தோடும், ஆவேசத்தோடும் இடம்பெற்றிருக்கின்றன.

வண்டிக்குள் சொற்பவிடத்திலே நான்கு பேராய் உட்கார்ந்து அதிக நெருக்கத்தால் செம்மையாய் உட்காரக் கூடாமல் கால்நோவும், இடுப்புநோவுமாய்ப் பிரயாணிகள்  வருந்திக் கொண்டு போவது மாத்திரமேயல்லாமல், அவ்வண்டிகள்  ஆடுகிற ஆட்டத்தில் தேகத்தில் பூட்டுக்குப்  பூட்டு நோவெடுத்து எப்பொழுது இவ்வண்டியைவிட்டு இறங்கப் போகிறோம் என்று  எண்ணும்படியாகிறது.

மேலும் அவ்வண்டிக்காரர்களுள் அநேகர் துர்மார்க்கர்களாய்த் திருஅல்லிக்கேணிக்கு என்று பேசி வண்டி ஏறிப்போனால், திருவல்லிக்கேணிக் கடைத் தெருவிலே கொண்டுபோய் நிறுத்தி, இதுதான் திருவல்லிக்கேணி  இறங்குங்கள் என்கிறார்கள். பின்பு பிரயாணிகள் என்ன நியாயம் எடுத்துரைத்தாலும் அவர்கள் கேட்பதில்லை. நடுவே சற்றிறங்கி ஒருவரோடு ஒரு பேச்சு பேசி வருகிறோம் என்றால் அவர்கள் சம்மதிப்பதில்லை.
இவ்விதமான பல காரணங்களால் சச்சரவு உண்டாகி  இப்பட்டணத்தில் ஜட்கா வண்டி வியவகாரம்  போலீசுக்குப் போகாத நாளில்லை.

இதென்ன வீண்தொல்லையாயிருக்கிறது என்று இவ்வகையான துர்மார்க்கச் செயல்கள் மறுப்பதற்காகவே நாளது வருஷத்தில் போலீசு அதிகாரிகள்ஜட்கா வண்டிகளுக்கு  இவ்வளவு தூரத்திற்கு இவ்வளவு கூலி கொடுக்க வேண்டுமென்றும், நடுவே  நிற்க வேண்டுமானால் அந்தக் காலத்திற்குத் தக்கபடி கூலி கட்டிக்கொடுக்க வேண்டுமென்றும், பிரயாணிகள் எந்த இடத்திற்கு வண்டி பேசுகிறார்களோ அங்கே  அவர்கள் இறங்கவேண்டிய இடத்திலேயே வண்டியைவிட வேண்டுமென்றும் ஒரு விதி ஏற்படுத்தியிருக்கிறார்களாம். ஆயினும் அந்த வருத்தங்கள் மட்டும் அதிகமாய் ஒழியவில்லை.

`ஜநவிநோதினி`
டிசம்பர் 1879
இல.12. புஸ்த.10
பக்கம் 269 – 272

இந்த ஜட்காகாரர்கள் மகாத்மா காந்தியைக் கூட விட்டுவைக்கவில்லை. கோட்டு சூட்டு போட்டுக்கொண்டிருந்த காலத்தில் ஒருமுறை சென்னை வந்த காந்தி, தம்புசெட்டித் தெருவில் இருந்த எழுத்தாளும் பதிப்பாளருமான ஜி.ஏ.நடேசன் வீட்டிற்கு செல்ல ஒரு ஜட்காவில் ஏறினாராம். அந்த ஜட்காகாரர் ஊரெல்லாம் சுற்றிவிட்டு தம்புச்செட்டித் தெருவில் காந்தியை இறக்கிவிட்டு அதிக காசு பிடுங்கிவிட்டாராம்.

இப்படி சண்டை சச்சரவுகள் இருந்தாலும் மக்கள் தொடர்ந்து ஜட்கா வண்டிகளை பயன்படுத்தி வந்தனர். அரசு பொதுமருத்துவமனையில் இருந்து பிணங்களை எடுத்துச் செல்லவும் ஜட்கா வண்டிகள்தான் பயன்பட்டிருக்கின்றன.

1877இல் மெட்ராஸ்வாசிகளுக்கு டிராம் வண்டி அறிமுகமானது. அப்போதெல்லாம் குதிரை இழுத்துச் செல்லும் டிராம் வண்டிதான் இருந்தது. இதிலும் கட்டணம் குறைவாக இருந்ததால் மக்கள் ஜட்காவை கழற்றிவிட்டுவிட்டு டிராமிற்கு மாறினார்கள். அதற்குள் மே 7, 1895இல் எலெக்ட்ரிக் டிராம்கள் ஓடத் தொடங்கி விட்டன. அதோடு ரிக்ஷா வண்டிகளும் அதிகமாகிவிட்டதால், இவற்றை எல்லாம் தாக்குப் பிடிக்க முடியாமல், ஜட்கா வண்டிகள் இந்த பட்டணத்தின் தெருக்களில் இருந்து ஒரேயடியாக மறைந்துவிட்டன.

நன்றி - தினத்தந்தி

* இந்தியாவிலேயே மெட்ராசில்தான் எலெக்ட்ரிக் டிராம் முதன்முறையாக ஓடியது. அந்த சமயத்தில் லண்டன் போன்ற மாநகரங்களில் கூட எலெக்ட்ரிக் டிராம் அறிமுகமாகவில்லை.

* பொதுவாக ஜட்கா வண்டியை இழுக்க தட்டுவாணிக் குதிரை அல்லது நாட்டுத் தட்டு குதிரைகள்தான் பயன்படுத்தப்பட்டன.