என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, January 28, 2012

கோடம்பாக்கம்

வானவீதிக்கு அடுத்தபடியாக நட்சத்திரங்கள் அதிகம் வலம் வரும் இடம் கோடம்பாக்க வீதிகள். தென்னிந்தியாவின் ஹாலிவுட் எனப் புகழப்படும் கோலிவுட்டின் கதை என்ன? தமிழகத்தின் கனவுத் தொழிற்சாலையாக கோடம்பாக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்?

முதலில் கோடம்பாக்கம் என்ற பெயர் எப்படி வந்தது என்று பார்ப்போம்? இதற்கு இரண்டு கதைகள் சொல்லப்படுகின்றன. ஒன்று வரலாற்று ரீதியானது, மற்றொன்று புராண ரீதியானது. ஆங்கிலேயர்கள் ஜார்ஜ் கோட்டையில் குடியேறிய பிறகு, அருகில் இருக்கும் கிராமங்களை வாங்கி மெட்ராஸ் என்ற பகுதியை விஸ்தரிக்கும் முயற்சியில் இறங்கினர். அப்போது இங்கு நிறைய நிலப் பகுதிகள் கர்நாடக நவாப்புகளின் ஆதிக்கத்தில் இருந்தன. அப்படிப்பட்ட ஒரு பகுதிதான் கோடம்பாக்கம்.

அந்தக் காலத்தில் ஆற்காடு நவாப்பின் குதிரை லாயங்கள் இங்கிருந்திருக்கின்றன. காட்டுப் பகுதியாக இருந்த கோடம்பாக்கம், நவாப்பின் குதிரைகளுக்கு நல்ல மேய்ச்சல் நிலமாக இருந்திருக்கிறது. இதனால் உருது மொழியில் 'கோடா பாக்' அதாவது குதிரைகளின் தோட்டம் என்று இதனை அழைத்திருக்கிறார்கள். அதுவே பின்னர் மருவி கோடம்பாக்கம் ஆகிவிட்டது.

இப்போது அடுத்த கதைக்கு வருவோம். நவாப்புகள் எல்லாம் வருவதற்கு முன்பே இந்த பகுதியில் மக்கள் வசித்திருக்கிறார்கள். இதற்கு சுமார் 2 ஆயிரம் ஆண்டுகால வரலாறு இருக்கிறது. தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியான இது, அந்தக் காலத்தில் புலியூர் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. புலிகள் நிறைந்த காட்டுப் பகுதி என்பதால் இந்த பெயர் வந்திருக்கலாம்.

இங்கு வியாக்ரபுரீஸ்வரர் அல்லது வேங்கீசர் ஆலயம் என்ற பழைய சிவாலயம் இருக்கிறது. வேங்கை பூசித்த ஈசர் என்பதால் வேங்கீசர் என்று கூறப்படுகிறது. சரி, இதற்கும் கோடம்பாக்கம் பெயருக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள்.

இந்த வேங்கீசர் ஆலயத்தில் கார்கோடகன் என்ற பாம்பின் சிலைகள் இருக்கின்றன. இந்து புராணங்களில் வரும் இந்த கார்கோடகன் இந்த பகுதியில் சிவபெருமானைப் பூஜித்ததாகக் கூறப்படுகிறது. அதனால் இந்த பகுதி கார்கோடகன் பாக்கம் (பாக்கம் என்றால் ஊர்) என்று அழைக்கப்பட்டு, பின்னர் கோடம்பாக்கம் ஆகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் கோடம்பாக்கம் கனவுகள் தயாரிக்கும் பகுதியாக ரசவாதம் பெற்றது. சினிமா கண்டுபிடிக்கப்பட்டு சில ஆண்டுகள் ஆன பிறகும் மெட்ராசில் முறையான ஸ்டூடியோக்கள் எதுவும் இல்லை, பம்பாய் அல்லது கல்கத்தாவிற்குதான் செல்ல வேண்டும். தென்னிந்தியாவின் முதல் ஸ்டூடியோவான ஸ்ரீனிவாசா சினிடோன் 1934ஆம் ஆண்டு முளைத்தது. ஆனால் அது ஆரம்பிக்கப்பட்ட இடம், கோடம்பாக்கம் அல்ல கீழ்ப்பாக்கம். நாராயணன் என்பவர் தொடங்கிய இந்த ஸ்டூடியோவில் தான், தமிழின் முதல் பேசும் படமான ஸ்ரீனிவாச கல்யாணம் எடுக்கப்பட்டது.

ஏவி மெய்யப்ப செட்டியார் கூட 1946இல் முதலில் காரைக்குடியில் தான் ஸ்டூடியோ தொடங்கினார். இரண்டாம் உலகப் போர் காலத்தில் சென்னையில் கடுமையான மின் தட்டுப்பாடு நிலவியதால், சொந்த ஊரில் ஸ்டூடியோ தொடங்கினார். பின்னர் 1948இல் இப்போதிருக்கும் இடத்திற்கு ஏவிஎம் இடம்பெயர்ந்தது. பி.என். ரெட்டி தொடங்கிய வாகினி ஸ்டூடியோவும் அருகில்தான் இருக்கிறது.

மெய்யப்ப செட்டியாரும், பி.என். ரெட்டியும் கோடம்பாக்கத்தை தேர்வு செய்ததற்கு என்ன காரணம் தெரியுமா? ஸ்டூடியோ என்றால் பிரம்மாண்டமான செட்டுகள், லேப் என விஸ்தாரமான இடம் வேண்டும். கோடம்பாக்கம் என்ற காட்டுப் பகுதி அதற்கு மிகவும் ஏற்றதாக இருந்தது. இதனை அடுத்து நிறைய ஸ்டூடியோக்கள் கோடம்பாக்கத்தில் உருவாகின. சினிமா உலகின் தவிர்க்க முடியாத அங்கமாக கோடம்பாக்கம் மாறியது.

தென்னிந்திய படங்கள் அனைத்துமே மெட்ராசில் மட்டுமே எடுக்கப்பட்ட காலங்கள் இருக்கின்றன. அப்பொழுதெல்லாம் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் மலையாள நட்சத்திரங்களும் கோடம்பாக்க வீதிகளில் வலம் வந்து கொண்டிருப்பார்கள். பாரதிராஜாவின் 16 வயதினிலே வரும்வரை, கோடம்பாக்க செட்களில் தான் தமிழ் சினிமா குடியிருந்தது.

கோடம்பாக்கத்தின் மற்றொரு சினிமா அடையாளம், இங்கிருந்த லிபர்டி திரையரங்கம். சென்னையின் பழைய தியேட்டர்களில் ஒன்றான இதில், திரை நட்சத்திரங்கள் பலர் ரசிகர்களுடன் அமர்ந்து தங்களின் படங்களைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள். எத்தனையோ உதவி இயக்குநர்கள் இங்கு படங்களைப் பார்த்து தங்களின் சினிமா கனவுகளுக்கு உரம் போட்டிருக்கிறார்கள். இப்படி கனவு வளர்த்த கட்டிடம் இன்று இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டுவிட்டது.

மொத்தத்தில் சினிமாவும் கோடம்பாக்கமும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல பின்னிப் பிணைந்திருக்கின்றன. எனவேதான் ஆஸ்கர் நாயகன் ரஹ்மான் முதல் சினிமாவில் கால்பதிக்கத் துடிக்கும் இளைஞன் வரை பலரின் முகவரியாக இன்றும் கோடம்பாக்கம் திகழ்கிறது.

நன்றி - தினத்தந்தி

* கோடம்பாக்கத்தில் இன்றும் புலியூர் என்ற பகுதி இருக்கிறது.

* 1921 வரை கோடம்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டத்தில்தான் இருந்தது.

* 1937இல் மகாத்மா காந்தி கோடம்பாக்கம் ஹரிஜன தொழிற்பள்ளியில் உரையாற்ற வந்திருக்கிறார்

* இங்கிருக்கும் மீனாட்சி மகளிர் கல்லூரி சர்வதேச மகளிர் ஆண்டான 1975இல் தொடங்கப்பட்டது.

Saturday, January 21, 2012

பாரிமுனை

மெட்ராசுக்கும் பாரீசுக்கும் என்ன தொடர்பு? பிரெஞ்சுக்காரர்களுடன் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டிருந்த பிரிட்டீஷார் தங்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பகுதிக்கு பிரான்சின் தலைநகரத்தின் பெயர் வர எப்படி அனுமதித்தார்கள்? சென்னையின் மையப் பகுதியான பாரீஸ் கார்னர் என்று அழைக்கப்படும் பாரிமுனையைக் கடக்கும்போது இப்படி ஒரு கேள்வி உங்களுக்குள் எழலாம். இந்த கேள்விக்கான விடையை நான் தேடிய போது, சற்றும் எதிர்பாராத ஒரு பதில் கிடைத்தது.

பாரீசுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், ஒரு சுவாரஸ்யமான மனிதர்தான் இந்த பெயர் வரக் காரணம் என்றும் தெரிய வந்தது. தாமஸ் பாரி என்ற அந்த மனிதர், இங்கிலாந்தின் வேல்ஸ் நகரில் இருந்து இந்தியாவில் வியாபாரம் செய்வதற்காக 1788ஆம் ஆண்டு மெட்ராசுக்கு வந்தார். கிழக்கு இந்திய கம்பெனியாரிடம் அனுமதி பெற்று தனி வர்த்தகராக தம்மை பதிவு செய்துகொண்ட பாரி, பல்வேறு பொருட்களின் விற்பனையில் ஈடுபட்டார். ஆனால் அவரின் முக்கியமான வியாபாரம் வட்டிக்குப் பணம் கொடுப்பது.

வட்டி என்றால் சாதாரண வட்டி அல்ல 12.5% வட்டி, இதுதவிர 1% கமிஷன் வேறு. ஆனாலும் அவரிடம் வட்டிக்கு வாங்க நிறையப் பேர் இருந்தார்கள். திப்பு சுல்தான் போன்றவர்களோடு சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் என்பதால், நிறைய இளவரசர்களும், கிழக்கிந்திய அதிகாரிகளும் போர்த் தேவைகளுக்காக பாரியிடம் கை ஏந்தினார்கள். பாரியின் வியாபாரமும் ஓஹோவென்று இருந்தது.

இதனால் 1792இல் பாரி சொந்த அலுவலகம் ஒன்றைத் தொடங்கினார். இந்த அலுவலகம் பல்வேறு துணிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. திடீரென வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட, அனைத்தையும் விட்டுவிட்டு 1796இல் கர்நாடக நவாப்பின் கருவூல அதிகாரியாக சிறிது காலம் பணிபுரிந்தார். பின்னர் 1800இல் கிளைவ் பிரபு ஆளுநராக வந்தபிறகு மெட்ராசில் வர்த்தகர்களின் நிலை மாறியது. கிழக்கிந்திய கம்பெனிக்கு தொடர்பில்லாத தனி வர்த்தகர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறி, கோட்டையைவிட்டு வெளியேற்றினார் கிளைவ். அப்போதுதான் தாமஸ் பாரி, இப்போது பாரீஸ் கார்னர் என்று அழைக்கப்படும் பகுதிக்கு வந்தார்.

ஒரு பக்கம் சீற்றம் காட்டும் கடல், மறுபுறம் உள்ளூர் மக்கள் தங்கியிருக்கும் கருப்பர் நகரம் என அதிகம் பேர் விரும்பாத இடமாக அது இருந்தது. அங்கு வாலாஜா நவாப்பிற்கு சொந்தமான வீடு ஒன்று இருந்தது. அதைத்தான் வாங்கி அலுவலகமாக மாற்றினார் பாரி. 1817ஆம் ஆண்டிலேயே அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைக்கும் அடுக்குமாடிக் கட்டடமாக அது இருந்தது.

மெல்ல வியாபாரத்தை விஸ்தரித்துக் கொண்டிருந்த பாரி, நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்தார். இந்த சூழலில் தான் அவருக்கு பார்ட்னராக வந்து சேர்ந்தார் ஜான் வில்லியம் டேர் (John William Dare). பாரி கட்டடத்தின் பெயர் 'டேர் ஹவுஸ்' என்று இருப்பதற்கு இந்த டேர்தான் காரணம். கடல் மற்றும் கப்பல்கள் பற்றிய அறிவு டேருக்கு நிறைய இருந்ததால், பாரியும் இவரும் சேர்ந்து கப்பல் தொழிலில் நங்கூரம் பாய்ச்சி பணம் பார்த்தனர்.

இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக 1823இல் இங்கிலாந்து திரும்ப முடிவெடுத்தார் பாரி. அவரின் வழியனுப்பு விழாவுக்காக உள்ளூர் வர்த்தகர்கள், பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு தங்க டீ கப்பை தயார் செய்தனர். ஆனால் பாரி திடீரென தனது பயணத்தை ரத்து செய்துவிட்டதால், அவர் ஊருக்கு போகாவிட்டாலும் தயார் செய்த கப் வீணாகிவிடக் கூடாது என்று அந்த கோப்பையை 1824 பிப்ரவரி மாதம் அவருக்கு பொதுமக்கள் வழங்கினர். இந்தளவு மக்கள் மனதில் இடம்பிடித்ததற்கு பாரியின் மனிதாபிமானமும், ஏழைகளுக்கு அவர் செய்த உதவிகளும்தான் காரணம்.

இங்கிலாந்து பயணத்தை ரத்து செய்த பாரியால், தனது பரலோகப் பயணத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. விடைபெறும் கோப்பையைப் பெற்றுக் கொண்ட அதே 1824ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தனது தொழிற்சாலை ஒன்றை ஆய்வு செய்யப் போனபோது காலரா வந்து உயிரிழந்தார் பாரி.

'உல்லாசமாக' வாழ்க்கை நடத்திய தாமஸ் பாரி இரக்க மனசுக்காரரும் கூட. அவர் எழுதி வைத்த உயிலே, இதற்கு அத்தாட்சி. தனது உறவினர்களுக்கு மட்டுமின்றி வேலைக்காரர்களுக்கும் சொத்தில் பங்கு கொடுத்தவர் பாரி. தன் வீட்டில் வளர்க்கப்பட்ட கண்பார்வையற்ற மேரி என்ற பெண்ணிற்கு மாதம் 11 ரூபாயும், செல்லா என்ற வேலைக்காரப் பெண்மணிக்கு மாதம் தலா 5 ரூபாயும், மற்ற வேலைக்காரர்களுக்கு மூன்ற மாத ஊதியமும் வழங்க வேண்டும் என்று தமது உயிலில் எழுதியிருந்தார். தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த மேரி ஆன் என்ற பெண்மணிக்கு மாதம் 5 ரூபாயும், உயில் எழுதப்பட்ட தேதியில் இருந்து 9 மாதத்திற்குள் அவருக்கு பிறக்கும் குழந்தைக்கு 50 ரூபாயும் அளிக்கப்பட வேண்டும் என்றும் பாரி உயிலில் குறிப்பிட்டிருந்தார்.

பாரியின் மறைவுக்கு பின்னர் அவரது தொழில்களை டேர் பார்த்துக் கொண்டார். 1838இல் குதிரை மீதிருந்து கீழே விழுந்ததில் அடிபட்டு அவரும் விண்ணுலகம் போய்ச் சேர்ந்தார். ஆனால் இரு நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், அந்த இரண்டு வர்த்தகர்களின் பெயர்கள் மட்டும் இன்னும் மறையவில்லை. எங்கிருந்தோ வந்து, சென்னை வீதிகளில் அலைந்து திரிந்து, மெட்ராஸ் என்ற மாநகரின் வரலாற்றில் இடம்பிடித்துவிட்ட அந்த இருவரையும், பாரிமுனையும், அங்கிருக்கும் டேர் ஹவுசும் இன்றும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன.

நன்றி - தினத்தந்தி

* தாமஸ் பாரியின் உடல் கடலூரில் அவர் அடிக்கடி சென்று வழிபட்ட தேவாலயத்தில் புதைக்கப்பட்டிருக்கிறது

* முருகப்பா குழுமத்தின் கட்டுப்பாட்டில் பாரி நிறுவனம் இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

* அமெரிக்க தூதரகமும் சிறிது காலம் இந்த பாரி கட்டடத்தில் இருந்து இயங்கி இருக்கிறது.

Saturday, January 14, 2012

லஸ் தேவாலயம்

கிழக்கிந்திய கம்பெனியார் சென்னையில் கால்பதித்து மெட்ராஸ் என்ற நகரம் உருவாவதற்கு முன்பே இப்பகுதியில் கட்டப்பட்டதுதான் லஸ் தேவாலயம். ஆங்கிலேயர்களே வராத காலத்தில் இதனை யார் கட்டினார்கள்? எதற்காக இங்கு கட்டினார்கள்? இந்த கேள்விகளுக்கான விடையை அறிந்துகொள்ள நாம் சுமார் 500 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும்.

ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் பல நூற்றாண்டுகளாக கடல் வழி வணிகம் நடைபெற்று வந்தாலும், அந்த கப்பல்கள் எல்லாம் பல நாடுகளை சுற்றிக் கொண்டே வர வேண்டியிருந்தது. எனவே இந்தியாவிற்கான சுருக்கமான நேரடி கடல் வழியைக் கண்டறியும் முயற்சிகள் 15ஆம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்டன. ஸ்பானியரும், போர்த்துகீசியரும் இதில் அதிக ஆர்வம் காட்டினர். கடைசியில் ஜெயித்தது போர்த்துகீசியர்கள்தான். ஆம், 1498 மே மாதம் 17ஆம் தேதி, போர்த்துகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா வெற்றிகரமாக கேரளத்தின் கோழிக்கோட்டை வந்தடைந்தார்.

அவர் கண்டுபிடித்த வழியில் பயணித்து, போர்ச்சுகலின் லிஸ்பன் நகரில் இருந்து 8 பாதிரிமார்கள் 1500இல் கோழிக்கோடு வந்தனர். அவர்களில் மூன்று பேர் கொல்லப்பட்டுவிட்ட நிலையில், எஞ்சியவர்கள் கொச்சின் சென்று மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சில ஆண்டுகள் கழித்து, மேலும் தெற்கு நோக்கி அவர்கள் பயணித்தபோது கடும் கடல்சீற்றம் காரணமாக அவர்களின் கப்பல் அலைக்கழிக்கப்பட்டது.

தங்களை பத்திரமாக கரை சேர்க்குமாறு அவர்கள் மேரி மாதாவிடம் வேண்டிக் கொண்டபோது, தூரத்தில் வானில் ஒரு ஒளி தோன்றியதாகக் கூறப்படுகிறது. அதனைப் பின்பற்றி கப்பலைச் செலுத்திய அவர்கள் ஒரு நிலப்பகுதியை அடைந்தனர். அந்த ஒளியை மேலும் பின்தொடர்ந்து சென்றபோது, அது ஒரு காட்டுப் பகுதியில் திடீரென மறைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

தங்களுக்கு வழிகாட்டி பத்திரமாக கரைசேர்த்த மேரி மாதாவிற்கு நன்றி பாராட்டும்விதமாக பாதிரிமார்கள், அந்த காட்டுப் பகுதியிலேயே ஒரு தேவாலயத்தை எழுப்பினர். அதுதான் லஸ் தேவாலயம். லஸ் என்றால் போர்த்துகீசிய மொழியில் ஒளி என்று அர்த்தம். அதனால்தான் இதனை பிரகாச மாதா தேவாலயம் (Church of Our Lady of Light) என்று அழைக்கிறார்கள். ஒரு காலத்தில், இது அடர்த்தியான காட்டுப் பகுதியாக இருந்ததால், உள்ளூர் மக்கள் இதனை காட்டுக் கோவில் என்றும் அழைத்தார்கள்.

கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக முதல் நூற்றாண்டில் இந்தியா வந்த புனித தோமையாருக்கும் இந்த பகுதிக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மலபார் மற்றும் சோழ மண்டல கடற்கரைப் பகுதிகளில் தமது பிரச்சாரத்தை துவங்கிய செயிண்ட் தாமஸ், சைதாப்பேட்டைக்கு அருகில் உள்ள சின்னமலைக்கு செல்லும் முன்பாக இன்றைய லஸ் பகுதியில் இருந்த மாந்தோப்பில் ஓய்வெடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது.

தற்போது காணப்படும் லஸ் தேவாலயம் 1516இல் கட்டப்பட்டது. சென்னையின் முதல் தேவாலயமான இது, 16ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய பாணியில், அதாவது கூர்மாட (Gothic) அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக இத்தாலியில் 16ஆம் நூற்றாண்டில் மிகவும் பிரபலமாக இருந்த பாரோக் (Baroque architecture) கட்டட அமைப்பில் இந்த தேவாலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான முறையில் இருந்து வேறுபட்டு பல புதுமைகளுக்கு இடம் அளிப்பதால் இந்த கட்டட அமைப்பு அக்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த சிறிய தேவாலயத்தின் உள்ளே மேரி மாதாவின் சிலைக்கு மேல் இருக்கும் மாடத்தின் உட்புறத்தில் தங்க நிறத்தில் அழகிய பூ வேலைப்பாடுகள் கண்ணைப் பறிக்கின்றன. அதேபோல இந்த தேவாலயத்தில் இருக்கும் சிலைகளை சுற்றியும் நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு தரையில் பதிக்கப்பட்டிருக்கும் கற்கள் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்று கூறப்படுகிறது.

இந்த தேவாலயம் இருமுறை கடும் சேதங்களை சந்தித்தது. 1662 - 1673 காலகட்டத்தில் கோல்கொண்டா படைகள் இதனை சேதப்படுத்தின. அடுத்து அதே வேலையை 1780இல் ஹைதர் அலியின் படைகள் செய்தன. அவற்றை எல்லாம் மீறி சுமார் 500 ஆண்டுகால வரலாற்றை சுமந்தபடி இன்றும் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது லஸ் தேவாலயம்.

நன்றி - தினத்தந்தி

* 1516இல் பெத்ரோ தெ அடோங்கியா என்ற பாதிரியாரால் கட்டப்பட்டது என்ற செய்தியுடன் பழைய ஐரோப்பிய கல்வெட்டு ஒன்று இங்கிருக்கிறது. இதுவே இந்த தேவாலயத்தின் காலத்திற்கான சாட்சியாக கருதப்படுகிறது.

* 1547 முதல் 1582 வரை இந்த தேவாலயத்தில் மறுகட்டுமானப் பணிகள் நடைபெற்றன.

* மைலாப்பூரின் லஸ் கார்னர் என்ற பெயருக்கு இந்த தேவாலயமே காரணம்.

Monday, January 9, 2012

வானிலை ஆய்வு மையம்

'அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் அனேக இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய கனமழையோ பெய்ய வாய்ப்புள்ளது...' என மழைக் காலங்களில் தினமும் நம் கவனத்தைக் கவரும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வயது என்ன இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அதிகபட்சம் 100 ஆண்டுகள் இருக்கலாம் என்று நினைத்தால் அது தவறு.

சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலை திருப்பத்தில் சற்றே உள்ளடங்கி இருக்கும் இந்த ஆய்வு மையம் சுமார் 220 ஆண்டுகள் பழமையானது. ஐரோப்பாவிற்கு வெளியே அமைக்கப்பட்ட முதல் நவீன வானியல் ஆய்வகம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. இதற்கான ஆரம்பப் புள்ளியை வைத்தவர் வில்லியம் பெட்ரீ (William Petrie) என்ற கிழக்கிந்திய கம்பெனி ஊழியர்.

வில்லியம் பெட்ரீ வான சாஸ்திரத்தில் தனக்கிருந்த அதீத ஆர்வம் காரணமாக, 1787இல் தன் நுங்கம்பாக்கம் வீட்டிலேயே சொந்த செலவில் ஒரு ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவினார். ஓய்வு நேரத்தை அங்கேயே செலவிட்டார். அப்போது அவரிடம் மூன்று அங்குல தொலைநோக்கிகள் இரண்டு, வானியல் கடிகாரங்கள் இரண்டு, நட்சத்திரங்களின் இடங்களை கண்காணிக்க உதவும் கருவி ஒன்று என வெகுசில உபகரணங்களே இருந்தன. இவற்றைக் கொண்டு கிழக்கிந்திய கம்பெனியின் கப்பல்களுக்கு அவர் வழிகாட்டி உதவினார்.

ஒருமுறை பெட்ரீ நீண்ட விடுமுறையில் இங்கிலாந்து சென்றபோது, தனது உபகரணங்களை உபயோகிக்க அரசுக்கு அனுமதி அளித்தார். பின்னர் அவர் மெட்ராஸ் திரும்பியபோது, அரசே ஒரு வானிலை ஆய்வுக் கூடத்தை நிறுவி அதை நிர்வகிக்கும் பொறுப்பை பெட்ரீயிடம் கொடுத்தது. மெட்ராஸ் அப்சர்வேட்டரி (Madras Observatory) எனப் பெயரிடப்பட்ட அந்த ஆய்வு மையத்தை அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் சர் சார்லஸ் 1792இல் தொடங்கி வைத்தார்.

மைக்கேல் டோப்பிங் ஆர்ச் (Micheal Topping Arch) என்ற வானியல் ஆய்வாளர் இதனை வடிவமைக்க பெரிதும் உதவினார். வானிலை ஆய்வுக்கு தேவையான பல்வேறு உபகரணங்களையும் அவர் தருவித்தார். இதன் நினைவாக இங்கிருக்கும் 15 அடி உயர கிரானைட் தூணில் அவரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த தூணில்தான் நட்சத்திரங்களை கண்காணிக்கும் தொலைநோக்கிக் கருவி முதன்முதலில் பொருத்தப்பட்டிருந்தது.

'ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் வருபவர்களும் அறிந்துகொள்வதற்காக...' என்ற குறிப்புடன் இந்த தூணில் லத்தீன், தமிழ், தெலுங்கு, உருது ஆகிய மொழிகளில் இதுபற்றிய தகவல் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த தூண் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

1796இல் தான் இங்கு முதன்முறையாக வானியல் நிகழ்வுகளை முறையாகப் பதிவு செய்யும் வழக்கம் தொடங்கியது. கோல்டிங்ஹாம் (Goldingham) என்பவர்தான் இவ்வாறு பதிவு செய்த முதல் வானியல் ஆய்வாளர். இவரைத் தொடர்ந்து நிறைய புகழ்பெற்ற ஆய்வாளர்கள் இங்கு பணியாற்றி உள்ளனர். இவர்களில் முக்கியமானவர் போக்சன் (Pogson). சுமார் 30 ஆண்டுகள், இவர் மெட்ராஸ் அப்சர்வேட்டரியின் ஆய்வாளராக இருந்தார். இவரது மனைவியும், மகளும் கூட இவருடைய பணியில் உதவியாக இருந்தனர்.

19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் தெரிந்த முழு சூரிய கிரகணங்களை கண்காணித்து பதிவு செய்ததில் இந்த ஆய்வு மையம் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. 1867இல் இந்த மையத்தை மூடுவது பற்றி லண்டனில் விவாதிக்கப்பட்டது. அப்போது தென் பகுதியில் பிரிட்டாஷார் வேறு சில ஆய்வகங்களைத் தொடங்கி இருந்ததுதான் காரணம். மெட்ராஸ் அபசர்வேட்டரி நிறைய விஷயங்களை சேகரித்து வைத்திருந்ததால், புதிய விஷயங்களை சேகரிப்பதை நிறுத்திவிட்டு, கையில் இருக்கும் விஷயங்களை பதிப்பிப்பதில் கவனம் செலுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில்தான் 20 அங்குல தொலைநோக்கி ஒன்றை தமிழக மலைகளில் ஏதாவது ஒன்றில் பொருத்தி வானியல் நிகழ்வுகளை ஆராயலாம் என போக்சன் பரிந்துரைத்தார். அதன் அடிப்படையில் நீலகிரி மற்றும் பழனி மலைகளில் இடம்பார்க்கும் பணி நடைபெற்றது. இதன் பயனாகத்தான் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் கொடைக்கானல் அப்சர்வேட்டரி கட்டப்பட்டது. இதன் பிறகு, மெட்ராஸ் அப்சர்வேட்டரியின் பணிகள் அங்கு இடம்மாறின. இதனையடுத்து இந்த மையத்தின் முக்கியத்துவம் மெல்ல குறையத் தொடங்கியது.

இந்த நிலையில்தான் 1945இல் சென்னையில் மண்டல வானிலை ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி, லட்சத்தீவு ஆகியவற்றிற்கான வானிலை அறிக்கைகளை இந்த மையம் தற்போது வெளியிட்டு வருகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் ஒரு தனி மனிதனுக்கு உண்டான ஆர்வம், பெருமழை, புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்றவற்றில் இருந்து இன்று நம்மை தற்காத்துக் கொள்ள உதவுகிறது.

நன்றி - தினத்தந்தி

* வில்லியம் பெட்ரீ 1807இல் மூன்று மாத காலம் மெட்ராசின் ஆளுநராக இருந்திருக்கிறார்.

* இந்த ஆய்வு மையத்தில் மணிக்கொரு முறை வானியல் நிகழ்வுகள் பதிவு செய்யப்படும் முறை 1840இல் தொடங்கியது.

* தீர்க்க ரேகை போன்ற விஷயங்களில் மெட்ராஸ் அப்சர்வேட்டரி அளித்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்திய வரைபடம் உருவாக்கப்பட்டிருக்கிறது.