என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, November 26, 2011

ஸ்பென்சர் பிளாசா

சென்னைக்கு பழசு, புதுசு என நிறைய அடையாளங்கள் உண்டு. அப்படி புதிய தலைமுறையின் அடையாளமாக காணப்படும் ஒரு கட்டடம், உண்மையில் பழமையின் பிரதிநிதி என்றால் நம்ப முடிகிறதா. அதுதான் சென்னையின் நவீன அடையாளச் சின்னங்களில் ஒன்றாகத் திகழும் ஸ்பென்சர் பிளாசா.

இளசுகள் உல்லாசமாக சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் இந்த ஷாப்பிங் மால், உண்மையில் சுமார் 150 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டது. புதிய ரக கார்களிலும், பைக்குகளிலும் இளைஞர்கள் படையெடுக்கும் இந்த ஷாப்பிங் மால், மவுண்ட் ரோட்டில் மாட்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும் ஓடிய காலத்தில் இருந்து இருக்கிறது. ஆமாம், இந்தியத் துணை கண்டத்தின் (அக்காலத்தில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கையை உள்ளடக்கியது) முதல் ஷாப்பிங் மால் என்ற பெருமை ஸ்பென்சர் பிளாசாவிற்கு உண்டு.

மெட்ராஸ் ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது, 1863ஆம் ஆண்டு சென்னையில் ஒரு பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர் தொடங்கப்பட்டது. சார்லஸ் டுரண்டு மற்றும் ஜே.டபிள்யூ. ஸ்பென்சர் (Charles Durant and J. W. Spencer) ஆகிய இருவர் இணைந்து இந்த மெகா கடையை ஆரம்பித்தனர். அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று இவர்கள் சிந்தித்ததன் விளைவுதான் ஸ்பென்சர் பிளாசா.

இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்ததால், கடையை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. எனவே சில ஆண்டுகள் கழித்து அந்த காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த இந்தோ - சாராசனிக் பாணியில் ஒரு அழகிய கட்டடம் கட்டப்பட்டு, ஸ்பென்சர் பிளாசா அங்கு குடியேறியது. அதுதான் மவுண்ட் ரோட்டில் இன்று ஸ்பென்சர் இருக்கும் இடம். ஆனால் அங்கிருப்பது அதே பழைய ஸ்பென்சர் இல்லை. காரணம், 1985ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு பயங்கரத் தீ விபத்து அந்த அழகிய கட்டடத்தை தின்று தீர்த்துவிட்டது.

அதன் பின்னர் அங்கு எழுந்ததுதான் இன்று நாம் பார்க்கும் ஸ்பென்சர் பிளாசா. ஸ்பென்சரில் ஃபேஸ் 1,2,3 என மொத்தம் மூன்று கட்டடங்கள் இருக்கின்றன. இதில் ஃபேஸ் 3 எனப்படும் மூன்றாவது கட்டடத்தின் உள்புறத்தை பழைய ஸ்பென்சரை நினைவூட்டும் வகையில், அதே பாணியில் மீண்டும் உருவாக்கியிருக்கிறார்கள். மேல்தளத்தில் நின்றபடி இதைப் பார்க்கும்போது, நம்மையும் அறியாமல் மெல்ல நினைவுகள் கருப்பு, வெள்ளை காலத்திற்கு நழுவிவிடுகின்றன.

அந்தக் காலத்தில் மெட்ராஸ் ராஜ்தானியில் வேறு எங்கும் கிடைக்காத பொருட்கள் கூட ஸ்பென்சர் பிளாசாவில் கிடைக்குமாம். மாம்பலம், திருவல்லிக்கேணி கொசுக்களை சமாளிக்க கொசு வலை முதல் வெயிலுக்கு ஐஸ்கிரீம் வரை மெட்ராசின் சவால்களை சந்திக்க ஆங்கிலேயர்கள் இங்குதான் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களும் இங்கு கிடைக்குமாம்.

பொருட்கள் வாங்குவது மட்டுமின்றி வெறுமனே சுற்றிப் பார்த்து பொழுதுபோக்கவும் ஸ்பென்சர் சிறந்த இடமாகத் திகழ்ந்திருக்கிறது. அந்த வகையில் அன்றைய மெட்ராஸ்வாசிகளின் பொழுதுபோக்கு மையங்களில் மெரினாவிற்கு அடுத்த இடத்தில் ஸ்பென்சர் இருந்தது. இரண்டு இடங்களிலும் பாக்கெட்டில் காசே இல்லாமல் வலம் வரலாம். காலம் மாறிவிட்டாலும் ஸ்பென்சரின் இந்த குணம் மட்டும் இன்றும் அப்படியே தொடர்கிறது. பாக்கெட் நிறைய பணத்துடன் வருபவரையும், பாக்கெட்டே இல்லாமல் வருபவரையும் இன்றும் ஒரே மாதிரி வரவேற்கிறது, இந்தியாவின் முதல் ஷாப்பிங் மால்.

நன்றி - தினத்தந்தி

* போக்சன் (W. N. Pogson) என்பவர்தான் இந்த கட்டடத்தை வடிவமைத்தவர்

* ஸ்பென்சர் பிளாசா மொத்தம் 2,50,000 சதுர பரப்பளவு கொண்டது.

* கடைகள் மட்டுமின்றி பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் அலுவலகங்களும் இங்கு செயல்பட்டு வருகின்றன.

Friday, November 18, 2011

பெரம்பூர் ராஜா

வட சென்னையின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றான பெரம்பூர் இன்று எப்படி இருக்கிறது என்று நம் எல்லோருக்கும் தெரியும். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது தெரியுமா? மூங்கில் மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. ஆனால் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பே இந்த காட்டுப் பகுதி திருத்தி அமைக்கப்பட்டு ஊராகிவிட்டது.

1752ஆம் ஆண்டு எழுதப்பட்ட 'ஆனந்தரங்கம் விஜய சம்பு' என்ற சமஸ்கிருத நூலில் பெரம்பூர் பற்றிய சுவாரஸ்யமான ஒரு செய்தி இருக்கிறது. அதாவது அந்தக் காலத்தில் கருவேந்தன் என்ற ஒருத்தர் அயனாவரத்தில் வசித்து வந்தார். சிறந்த கலா ரசிகனான கருவேந்தன் அவரைத் தேடி வரும் கலைஞர்களுக்கு நிறைய பரிசுப் பொருட்களைக் கொடுத்து கவுரவிப்பாராம். அதேபோல ஒருமுறை கொல்கொண்டாவில் இருந்து வந்திருந்த சில கவிஞர்களுக்கு கருவேந்தன் அள்ளிக் கொடுத்து அனுப்பியிருக்கிறார். அவர்கள் நாடு திரும்பியதும் இவரைப் பற்றி தங்கள் அரசரிடம் ஆஹா ஓஹோவென்று புகழ்ந்திருக்கிறார்கள்.

கவிஞர்கள் போற்றும் அந்த கலா ரசிகனை பார்க்க வேண்டும் என்று கூப்பிட்டு அனுப்பியிருக்கிறார் கோல்கொண்டா அரசர் மகரங்கா. அரசரைப் பார்க்கப் போன இடத்தில் கருவேந்தனுக்கு அடித்தது அதிர்ஷ்டம். கருவேந்தனைப் பிடித்துப் போன மகரங்கா அவருக்கு பரிசாக வெட்ரபுரா என்ற இடத்தைக் கொடுத்தார். அதுதாங்க நம்ம பெரம்பூர். அதாவது வெட்ர என்றால் பிரம்பு என்று அர்த்தம். வெட்ரபுரா என்றால் பிரம்புகள் நிறைந்த ஊர் என்று பொருள். அப்படித்தான் பெரம்பூரைப் பெற்றுத் திரும்பினார் கருவேந்தன். ராஜா ஆனதும் அவர் அயனாவரத்தில் இருந்து பெரம்பூருக்கு வீட்டை மாற்றிக் கொண்டு வந்துவிட்டார்.

அதெல்லாம் சரி, இந்த கருவேந்தனுக்கும் 'ஆனந்தரங்கம் விஜய சம்பு' நூலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? நியாயமான கேள்வி. இரண்டுக்கும் பல தலைமுறை சம்பந்தம் இருக்கிறது. அதாவது இந்த நூலின் கதாநாயகன் ஆனந்தரங்கப் பிள்ளை. இந்த அனந்தரங்கப் பிள்ளை யார் தெரியுமா? பிரெஞ்சு கவர்னர் துய்ப்ளேக்ஸின் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர். இவர் 1736 முதல் 1760 வரை கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகள் தான் பார்த்த கேட்டவற்றை நாட்குறிப்பு போல எழுதி வைத்தார்! அந்த காலகட்டத்தை அறிந்துகொள்ள இந்த குறிப்புகள் பெருமளவில் உதவுகின்றன.

சரி, விஷயத்திற்கு வருவோம். இந்த ஆனந்தரங்கத்தின் கொள்ளு கொள்ளுத் தாத்தாதான் நம்ம கருவேந்தன். இதற்கும் ஆதாரம் இருக்கிறது. கருவேந்தன் பெரம்பூருக்கு வீடு மாறியதும், அவருக்கு சோலை, வடமலை, திருமலை என மூன்று மகன்கள் பிறந்தனர். இவர்களில் சோலையின் மகன் பொம்மைய்யா. அந்த பொம்மைய்யாவிற்கு பெத்த பொம்மா, சின்ன பொம்மா என இரட்டைக் குழந்தைகள். இதில் சின்ன பொம்மாவிற்கு 6 மகன்கள். அதில் மூத்த மகனான பொம்மையாவிற்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். இதில் இரண்டாவது மகன் பேர் திருவேங்கடம். இவர்தான் நம்ம ஆனந்தரங்கத்தின் அப்பா. அப்பாடா... ஒருவழியா சொல்லி முடிச்சாச்சு.

இந்த திருவேங்கடத்திற்கு பிரெஞ்சு, ஆங்கிலம், டச்சு, போர்த்துகீஸ் என பல ஐரோப்பிய மொழிகள் தெரியுமாம். திறமைசாலியாக மட்டுமில்லாமல் பெரிய மனசுக்காரராகவும் இருந்திருக்கிறார் திருவேங்கடம். பெரம்பூரில் அவர் கட்டிய சத்திரமும், அருகிலேயே ஏழைப் பிரமாணர்களுக்காக அவர் உருவாக்கிய சிறிய கிராமமும் இதற்கு ஆதாரமாக விளங்கின.

கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் மெட்ராசில் காலூன்றி அதனை விஸ்தரித்துக் கொண்டிருந்தபோது, பெரம்பூர் ஆர்காடு நவாபின் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போதைய நவாப்பாக இருந்த முகம்மது சையத், 1742ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு ஐந்து கிராமங்களை வழங்கினார். அதில் நம்ம பெரம்பூரும் இருந்தது. பின்னர் ஆங்கிலேயர்கள் இங்கு குடியேறினர். அப்போதைய மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வே கம்பெனிக்காக 1856இல் இங்கு ஒரு ரயில்வே வொர்க் ஷாப் கட்டப்பட்டது. இங்கு பணிபுரிவதற்காக இன்னும் நிறைய ஆங்கிலேயர்கள் இப்பகுதிக்கு வந்தனர். இதனால் ஒரு காலத்தில் பெரம்பூர் ஒரு குட்டி வெள்ளையர் நகரம் போலவே காட்சியளித்தது. இன்றும் பெரம்பூர் பகுதியில் நிறைய ஆங்கிலோ - இந்தியர்கள் காணப்படுவதற்கு இதுதான் காரணம்.

ஒரு கலா ரசிகனுக்கு பரிசாக கிடைத்து உருவானதாலோ என்னவோ, இப்போதும் பெரம்பூர் பல்வேறு மதத்தினரும், கலாச்சாரத்தினரும் ஒன்றுகலந்து வாழும் உயிர்துடிப்புமிக்க கலைப் படைப்பைப் போல் காட்சியளிக்கிறது.

நன்றி - தினத்தந்தி

* துய்ப்ளேக்ஸ் அரசாங்கத்தில் மற்றவர்களுக்கில்லாத உரிமைகளை ஆனந்தரங்கப் பிள்ளை பெற்றிருந்தார். பல்லக்கில் மேள வாத்தியத்தோடு கவர்னர் மாளிகையினுள் போகவும், தங்கப் பிடிபோட்ட கைத்தடி வைத்திருக்கவும், பாதரட்சை அணிந்து கவர்னரின் காரியாலயத்திற்குச் செல்லவும் அவருக்கு உரிமை அளிக்கப்பட்டிருந்தது,

* சாதாரண வழக்குகளை ஆராய்ந்து நீதி வழங்கும் அதிகாரத்தையும் பிரெஞ்சுக்காரர்கள் அவருக்கு அளித்திருந்தனர்.

* ஆனந்தரங்கப் பிள்ளை 'ஆனந்தப் புரவி' என்ற பெயரில் புதுச்சேரி - கொழும்பு இடையே வியாபாரக் கப்பலை நடத்தும் அளவுக்கு செல்வாக்குடன் இருந்தார்.

Saturday, November 12, 2011

ரிப்பன் மாளிகை

எப்போது பார்த்தாலும் பொங்கலுக்கு வெள்ளை அடித்தது போல பளிச்சென்று இருக்கும் ஒரு புராதனக் கட்டிடம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் ரிப்பன் மாளிகைக் கட்டிடம். ஆங்கிலேயர் காலத்தைச் சார்ந்த பல கட்டிடங்களும் செக்கச் சேவல் என்று நின்று கொண்டிருக்க இது மட்டும் பவுடர் போட்ட பெரிய பாப்பா மாதிரி வெள்ளை வெளேரென்று பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.

சென்னையின் இந்த வெள்ளை மாளிகை உருவான கதையைத் தேடிப் போனால் அது 1688இல் போய் நிற்கிறது. அப்போதுதான் இந்தியாவின் முதல் மாநகராட்சியாக மெட்ராஸ் மாநகராட்சி உதயமானது. கிழக்கிந்திய கம்பெனியின் தலைவராக இருந்த சர் ஜோசய்யா சைல்ட் என்பவரின் மூளையில் உதித்த யோசனைதான் இது. உள்ளாட்சி நிர்வாகத்தை கவனிப்பதற்கென்றே ஒரு தனி அமைப்பு தேவை என்று அவர் கருதினார். இது குறித்து அப்போது இங்கிலந்தை ஆட்சி செய்த மன்னர் இரண்டாம் ஜேம்சிடம் அவர் எடுத்துக் கூற, மன்னரும் உடனடியாக ஒப்புதல் அளித்துவிட்டார். இதனையடுத்து 1688ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி மெட்ராஸ் மாநகராட்சி தொடங்கப்பட்டது.

நதானியேல் ஹிக்கின்சன் (Nathaniel Higginson) என்பவர் முதல் மேயராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உதவி செய்வதற்காக ஆங்கிலேயர்கள், போர்த்துகீசியர்கள், யூதர்கள், இந்துக்கள் என பலதரப்பு பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் அதே செப்டம்பர் 29ஆம் தேதி புதிய மேயர் தேர்வு செய்யப்பட்டார். இப்படித் தான் இந்தியாவின் முதல் மாநகராட்சி தனது பணியைத் தொடங்கியது. அப்போது ரிப்பன் மாளிகை கட்டப்படவில்லை. கோட்டைக்குள் இருந்த டவுன் ஹாலில் தான் முதல் மாநகராட்சி செயல்பட்டது.

உற்சாகமாகத் தொடங்கப்பட்டதே தவிர அதன் செயல்பாடுகள் அத்தனை உற்சாகமாக இல்லை. ஆறே மாதத்தில் முதல் மேயர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அடுத்ததாக லிட்டில்டன் என்பவர் மேயரானார். மாநகராட்சி தனது பணிகளை மேற்கொள்ள போதுமான நிதி இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போதைய மெட்ராஸ் ஆளுநராக இருந்த சர் எலிஹூ யேலுக்கும் மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் இடையே அதிகார மோதல்கள் வெடித்தன. அப்படியே சண்டை சச்சரவுகளுடன் போய்க் கொண்டிருந்த மாநகராட்சி நிர்வாகம் 1727இல் மறுசீரமைக்கப்பட்டது. நகரம் வளர வளர மாநகராட்சியின் பணிகளும் அதிகரித்துக் கொண்டே சென்றன.

இந்நிலையில் டவுன் ஹால் பகுதியை அரசு எடுத்துக் கொண்டதால் அங்கிருந்த மாநகராட்சி அலுவலகம், ஜார்ஜ் டவுன் பகுதியின் எர்ரபாலு செட்டி தெருவுக்கு மாற்றப்பட்டது. பின்னர் சில ஆண்டுகளில் அந்த இடம் போதவில்லை எனக் கருதப்பட்டதால் புதிய இடம் தேடும் படலம் தொடங்கியது. அப்போதுதான் பீப்பிள்ஸ் பார்க் பகுதியில் ஒரு இடத்தை ஒதுக்கி மாநகராட்சிக்கென புதிய கட்டிடம் கட்டுவதென முடிவு செய்யப்பட்டது. அப்படித்தான் அந்தக் காலத்திலேயே ரூ. 7.5 லட்சம் செலவு செய்து தற்போதுள்ள ரிப்பன் மாளிகை கட்டப்பட்டது. நான்கு ஆண்டுகளாக இதைப் பார்த்துப் பார்த்து இந்தோ - சாரசனிக் பாணியில் பிரம்மாண்டமாக கட்டித்தந்த லோகநாத முதலியார் கூலியாக வாங்கிய தொகை ரூ. 5.5 லட்சம்.

1913இல் இந்த கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் மூவாயிரத்திற்கும் அதிகமான முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மாநகராட்சி கட்டிடம் என்பதால் உள்ளாட்சி நிர்வாகத்தில் பல்வேறு சீரமைப்புகளை செய்த லார்ட் ரிப்பனின் பெயரையே இதற்கும் வைத்துவிட்டனர். அவரை நினைவு கூறும் வகையில் அவரது சிலை ஒன்றும் இங்கு நிறுவப்பட்டது.

252 அடி நீளமும், 126 அடி அகலமும் கொண்ட இந்த கட்டிடத்தின் முக்கியமான அம்சம், அதன் நடுவில் இருக்கும் கோபுரம். 132 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தின் நடுவில் எட்டு அடி விட்டத்தில் ஒரு பிரம்மாண்ட கடிகாரமும் அமைக்கப்பட்டது. இதற்கு தினமும் கீ கொடுப்பார்கள். அந்தக் காலத்தில் மெட்ராசிற்கு வரும் நிறைய பேர், சுமார் நூறு அடி உயரத்தில் இருந்த இந்த மெகா சைஸ் கடிகாரத்தை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மாநகராட்சி இந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட பிறகு முதல் தலைவராக இருந்தவர் (அப்போது மேயர் பதவியை தூக்கிவிட்டார்கள்) பி.எல். மூர். பின்னர் 1919இல் தான் மெட்ராஸ் மாநகராட்சிக்கு முதல் இந்தியத் தலைவர் கிடைத்தார். அவர்தான் சர் பி. தியாகராய செட்டி. மீண்டும் 1933ஆம் ஆண்டு மேயர் பதவி உயிர் பெற்று எழுந்தது. அப்போது முதல் மேயரானவர் குமார ராஜா எம்.ஏ. முத்தையா செட்டியார். அதன் பிறகு இதுவரை மேயர் என்ற பதவி தொடர்ந்து நீடித்து வருகிறது.

தற்போது ரிப்பன் அலுவலக வளாகத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது நிறைவடைந்துவிட்டால், இதுவரை அருகில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்கள் வந்து செல்லும் சத்தத்தை மட்டும் கேட்டுக் கொண்டிருந்த ரிப்பன் மாளிகை, தனது வளாகத்திற்குள்ளேயே ரயில் வந்துசெல்லும் காட்சியையும் காணலாம். ரிப்பன் மாளிகை விரைவில் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும்போது, நாமும் அதற்கு மெட்ரோ ரயிலில் சென்று பூங்கொத்து கொடுக்கலாம்.

நன்றி - தினத்தந்தி

* இந்தியாவின் முதல் பெண் மேயரைத் தந்ததும் சென்னை மாநகராட்சிதான். அவர்தான் தாரா செரியன்.

* கிழக்கிந்திய டச்சு அரசாங்கத்தின் நிர்வாகத்தைப் பார்த்துதான் சர் ஜோசய்யா சைல்ட்டுக்கு மாநகராட்சி ஏற்படுத்தும் யோசனை பிறந்ததாக கூறப்படுகிறது.

Saturday, November 5, 2011

அரசு அருங்காட்சியகம்

ஒரு சில விநாடி இடைவெளியில் வெவ்வேறு காலகட்டங்களையும், வெவ்வேறு நாகரிகங்களையும் பார்க்க ஆசைப்படுகிறீர்களா? அப்படி என்றால் டைம் மெஷின் எனப்படும் கால இயந்திரத்தில் சென்று பார்க்கலாம். 'என்ன கிண்டலா... அட, நடக்குற கதையைப் பேசுப்பா..' என்பவர்கள் எழும்பூரில் இருக்கும் அரசு அருங்காட்சியகத்திற்கு போய் வரலாம். ஆங்கிலேயர்கள் உருப்படியாக செய்துவிட்டுப் போன காரியங்களில் மிகவும் முக்கியமானது அருங்காட்சியகம் அமைத்தது.

'வரலாறு முக்கியம் அமைச்சரே..' என்று நினைத்த மெட்ராஸ் கல்விக் கழகத்தினர் (Madras Literary Society) சென்னை நகருக்கு ஒரு அருங்காட்சியகம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதை ஏற்று அப்போதைய மெட்ராஸ் ஆளுநராக இருந்த சர் ஹென்றி பாடிங்கர் (Sir Henry Pottinger), லண்டனில் இருந்த கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்திடம் இதற்கான அனுமதியைப் பெற்றார். இதை அடுத்து 1851ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் முதன்முதலாக ஒரு அருங்காட்சியகம் உருவானது.

கல்லூரிச் சாலையில் தற்போது இருக்கும் டிபிஐ (DPI) வளாகத்தில் அந்த காலத்தில் ஒரு கல்லூரி இருந்தது. அந்த கல்லூரியின் முதலாம் மாடியில்தான் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. அப்போது மெட்ராஸ் கல்விக் கழகத்திடம் இருந்த 1100 நிலவியல் மாதிரிகள் இங்கு வைக்கப்பட்டன.

அருங்காட்சியக அலுவலர்களின் ஆர்வம் காரணமாக அது வேகமாக விரிவடைந்தது. அதேசமயம் அது இடம்பெற்றிருந்த கட்டடமும் அதே வேகத்தில் சிதிலமடையத் தொடங்கியது. அதனால் 1854ஆம் ஆண்டு எழும்பூரில் உள்ள பாந்தியன் என்ற கட்டடத்தில் அருங்காட்சியகத்தை பால் காய்ச்சி குடி அமர்த்திவிட்டார்கள்.

பாந்தியன் தோட்டம் என்பது ஹால் பிளூமர் என்ற பொதுப்பணித் துறை காண்டராக்டருக்கு சொந்தமானது. அவர் அதை கமிட்டி ஆஃப் 24 என்ற அமைப்பினருக்கு விற்க, அவர்களிடம் இருந்து மூரட் என்ற பணக்கார ஆர்மீனிய வணிகர் அந்த இடத்தின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கினார். பின்னர் 1830ஆம் ஆண்டு அதை அப்போதைய அரசுக்கு ரூ. 28,000க்கு விற்றுவிட்டார். அங்கு 1853ஆம் ஆண்டு ஒரு பொதுநூலகம் ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு நமது அருங்காட்சியகம் வந்து சேர்ந்துகொண்டது.

ஒரு புலியும், சிறுத்தைக் குட்டி ஒன்றும்தான் அருங்காட்சியகத்தின் அப்போதைய கதாநாயகர்கள். இவற்றைப் பார்க்க வெகு தொலைவில் இருந்தெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். மெட்ராசுக்கு வந்தவர்கள் உயிர் காலேஜ், செத்த காலேஜ் பார்க்காமல் திரும்புவதில்லை என்ற சபதத்தோடே ஊரில் இருந்து புறப்பட்டது போல தோன்றியது.

இதைப் பார்த்த அருங்காட்சியகப் பொறுப்பாளரான மருத்துவர் பல்ஃபர், கர்நாடக நவாப்பிடம் இருந்த காட்டு விலங்குகளை அருங்காட்சியகத்துக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். நவாப்பும் அனுப்பி வைக்க, 1856 ஆம் ஆண்டு முதல் அருங்காட்சியகத்தில் 360 விலங்குகள் இருந்தன. பின்னர் மாநகர சபை இந்த விலங்கினக் காட்சிச்சாலையைப் பொறுப்பேற்று வேறிடத்துக்கு மாற்றியது.

சில ஆண்டுகளில் நீர்வாழ்விலங்குகள் காட்சியகம் (Aquarium) ஒன்றும் அரசு அருங்காட்சியகத்தில் திறந்து வைக்கப்பட்டது. 1942 ஆம் ஆண்டில் மெட்ராஸ் மீது ஜப்பான் தாக்குதல் நடத்தும் என்ற பீதி நிலவியதால், அதற்கு பயந்து நகரத்திலிருந்து நிறுவனங்கள் அகற்றப்பட்டபோது நீர்வாழ்விலங்குகளை கை கழுவிவிட்டனர். இதனை மீண்டும் அமைப்பதற்கான முயற்சிகள் கடைசி வரை கை கூடவில்லை.

1984 ஆம் ஆண்டு சமகால ஓவியங்களுக்கான புதிய கட்டிடம் ஒன்று திறக்கப்பட்டது. இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டு இருப்பனவற்றுள் ராஜா ரவிவர்மாவின் அற்புதமான ஓவியங்களும் அடங்கும். 1988 ஆம் ஆண்டில் இங்கு ஒரு சிறுவர் அருங்காட்சியகமும் தொடங்கப்பட்டது. சிறுவர்களின் கற்பனைகளை சிறகடிக்க வைக்கும் பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

கற்கால மனிதர்களில் தொடங்கி சேர, சோழ, பாண்டியர்கள் வரை நமக்கு அழகாக அறிமுகப்படுத்துகிறது இந்த அருங்காட்சியகம். அரிய வரலாறுகளை சுமந்து நிற்கும் கல்வெட்டுகள், மீண்டும் மீண்டும் காணத் தூண்டும் கலைப் படைப்புகள், பிரபஞ்ச ரகசியங்களை கற்றுத் தரும் விண்கற்கள் என இங்குள்ள ஒவ்வொரு பொருளும் விலை மதிக்கமுடியாதவை. கொஞ்சம் நேரத்தை மட்டும் செலவழித்தால், பிரபஞ்சம் எத்தனை பிரம்மாண்டமானது, வாழ்க்கை எவ்வளவு அழகானது, அர்த்தமுள்ளது என்பதை புரிய வைக்க ஆர்வமுடன் காத்திருக்கிறது இந்த அருங்காட்சியகம்.

தினத்தந்தி - பார்த்திபன்

---------------------

* 16.25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் ஆறு கட்டிடங்களும், அவற்றில் 46 காட்சிக் கூடங்களும் உள்ளன.

* எம்டன் போர் கப்பல் சென்னையில் தாக்குதல் நடத்தியதில் கண்டெடுக்கப்பட்ட வெடித்து சிதறிய உலோக சிதறல்கள், வெடிக்காத குண்டுகள் ஆகியவையும் இங்கு இருக்கின்றன.

* கடற்கரையில் ஆவேசமாக நின்று கொண்டிருந்த கண்ணகி கூட, சில காலம் இந்த அருங்காட்சியகத்தில் ஓய்வெடுத்தார்.

* அருங்காட்சியக வளாகத்தில் கலையரங்கம் ஒன்றும் இருக்கிறது