சாதாரண பேட்டையில்
இருந்து அதிகார கோட்டைக்கு போகும் சாகசக் கதாநாயகனின் கதையை போன்று விறுவிறுப்பானது,
இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான வாரன் ஹேஸ்டிங்சின் வாழ்க்கை. சுமார் 300
ஆண்டுகால ஆங்கிலேய ஆட்சியில் ராபர்ட் கிளைவுக்கு அடுத்தபடியாக பெரிதும் பேசப்பட்டவர்
வாரன் ஹேஸ்டிங்ஸ். இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு அவர் போட்ட பலமான அஸ்திவாரமே
இதற்கு காரணம்.
வாழ்ந்து கெட்ட ஒரு அரச
குடும்பத்தில் 1732இல் பிறந்தார் வாரன் ஹேஸ்டிங்ஸ். எனவே இந்தியாவிற்கு சென்றால்
பிழைத்துக் கொள்ளலாம் என கப்பல் ஏறிய அந்தக்கால இங்கிலாந்து இளைஞர்களைப் போல,
18வது வயதில் தனது பயணத்தை தொடங்கினார் ஹேஸ்டிங்ஸ். கிழக்கிந்திய கம்பெனியின்
சாதாரண எழுத்தராக அவர் வந்திறங்கியது முதலில் கல்கத்தாவில் என்றாலும், வாழ்வில் அனைத்து
விதமான ஆட்டங்களையும் ஆடிப் பார்த்தது மெட்ராசில்தான்.
1750ஆம் ஆண்டு ஆகஸ்ட்
மாதம் கல்கத்தா வந்த வாரன் ஹேஸ்டிங்ஸ், தனது கடின உழைப்பால் விரைவில் நல்ல பெயர்
எடுத்தார். இந்தியாவைப் பற்றி தெரிந்து கொள்வதிலும், உருது, பாரசீகம் ஆகிய
மொழிகளைக் கற்பதிலும் ஓய்வு நேரத்தை செலவிட்டார். இதனிடையே சில பல பதவி
உயர்வுகளைப் பெற்று வாழ்க்கையில் சற்று மேலே போனாலும் கல்கத்தாவில் அன்று நிலவிய
அரசியல் குழப்பங்கள் ஹேஸ்டிங்ஸை மன உளைச்சலுக்கு உள்ளாக்கின. எனவே 1764ஆம் ஆண்டு
டிசம்பர் மாதம் பதவியை உதறிவிட்டு இங்கிலாந்திற்கு திரும்பிவிட்டார்.
தனது மற்ற சகாக்களைப்
போல தாயகம் திரும்பும்போது பெரும் செல்வத்தை அவர் சேர்த்துக் கொண்டு செல்லவில்லை. அவர்
சேர்த்த சிறிதளவு பணமும் விரைவிலேயே கரைந்துவிட கடனாளியான ஹேஸ்டிங்ஸ், வட போச்சே
என்று வருந்தினார். அப்போதுதான் மீண்டும் இந்தியா செல்வது என முடிவு எடுத்தார்.
அந்த முடிவு அவரது வாழ்வை மட்டுமின்றி இந்தியாவின் எதிர்காலத்தையே மாற்றி
அமைத்தது.
இந்த முறை அவருக்கு
மெட்ராசில் வேலை கிடைத்தது. இதற்காக 1769இல் ட்யூக் ஆஃப் கிராஃப்டன் என்ற கப்பலில்
ஏறிய போதுதான் அவரது வாழ்வில் வசந்தம் வீசத் தொடங்கியது. அதே கப்பலில் இம்ஹோஃப்
என்பவர் தனது மனைவியுடன் பயணம் செய்தார். பிரபு குடும்பத்தைச் சேர்ந்தவராக
இருந்தாலும் வசதியில் குறைந்த இம்ஹோஃப் நன்றாக ஓவியம் வரைவார். எனவே சென்னையில் ஓய்வு
நேரத்தில் ஆங்கிலேய அதிகாரிகளை படம் வரைந்து நன்றாக சம்பாதிக்கலாம் என்ற
நினைப்போடு, சிபாரிசு மூலம் ராணுவத்தில் பயிற்சியாளர் வேலை பெற்று, கனவுகளோடு
கப்பலில் வந்துகொண்டிருந்தார்.
நீண்ட கப்பல்
பயணத்தில் வாரன் ஹேஸ்டிங்ஸும், இம்ஹோஃபின் மனைவி மரியாவும் நெருங்கிய
நண்பர்களானார்கள். கடல் பயணம் ஒத்துக் கொள்ளாமல் ஹேஸ்டிங்ஸ் நோய்வாய்ப்பட்டபோது,
மரியா மருந்துகளோடு சேர்த்து அன்பையும் கொடுத்து அரவணைத்தார். ஏற்கனவே மனைவியை
இழந்திருந்த ஹேஸ்டிங்ஸுக்கு மரியாவின் துணை பெரும் ஆறுதலாக இருந்தது. சென்னையில்
வந்து இறங்குவதற்கு முன்பே இவர்களின் நட்பு காதலாக பரிணாம வளர்ச்சி
அடைந்துவிட்டது.
![]() |
வாரன் ஹேஸ்டிங்ஸ் |
சென்னைக்கு வந்ததும்
வாரன் ஹேஸ்டிங்ஸ் அடிக்கடி மரியாவின் வீட்டிற்கு சென்று வந்தார். 1771இல் மரியா
தனது கணவருடன் கல்கத்தா செல்லும் வரை இது நீடித்தது. ஹேஸ்டிங்ஸ் தனக்கு ஆளுநர்
பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்னையிலேயே தங்கி இருந்தார். ஆனால் விதி
அவரையும் கல்கத்தாவிற்கு இழுத்துச் சென்றது. அவருக்கு கல்கத்தாவின் ஆளுநர் பதவி
கொடுக்கப்பட்டிருப்பதாக செய்தி வந்தது. மச்சக்கார ஹேஸ்டிங்ஸிற்கு அவர் விரும்பிய
ஆளுநர் பதவி மரியா வசிக்கும் நகரிலேயே கிடைத்துவிட்டது.
ஹேஸ்டிங்ஸ் கல்கத்தா
சென்றதும் மீண்டும் உறவு தொடர்ந்தது. அந்நாட்களில் கல்கத்தா முழுவதும் இதுதான்
பேச்சாக இருந்தது. இதனிடையே ஹேஸ்டிங்ஸ் தனது நிர்வாகப் பணிகளையும் சிறப்பாக
செய்துவந்தார். அந்தக் காலத்தில் நிலவிய பல்வேறு அரசியல் சிக்கல்களையும் திறம்பட
சமாளித்தார். எனவே 1773இல் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
அதுநாள் வரை மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா ஆகிய மூன்று மாகாணங்களுக்கும் தனித்தனி
ஆளுநர்கள்தான் இருந்து வந்தனர். ஹேஸ்டிங்ஸின் முயற்சியால்தான் இந்த மூன்றையும்
ஒருங்கிணைத்து கவர்னர் ஜெனரல் என்ற பதவி உருவாக்கப்பட்டது.
இதனிடையே கணவனை
விவாகரத்து செய்துவிட்டு வந்த மரியாவை 1777இல் முறைப்படி திருமணம் செய்துகொண்டார்
வாரன் ஹேஸ்டிங்ஸ். பின்னர் இவர்களின் இல்வாழ்க்கை கடைசி வரை இனிமையாகத்
தொடர்ந்தது. மரியாவின் மனதில் இடம் பிடித்துவிட்டால் கவர்னர் ஜெனரலிடம் காரியம்
சாதித்துக் கொள்ளலாம் என சிறு குழந்தைக்கு கூட தெரிந்திருந்தது. இதனால் அதிகார துஷ்பிரயோக
குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார் ஹேஸ்டிங்ஸ்.
![]() |
வாரன் ஹேஸ்டிங்ஸ் நினைவிடம் |
இந்த சூழலில்தான் 'பெங்கால்
கெஜெட்' என்ற இந்தியாவின் முதல் செய்தித்தாளைத் தொடங்கினார் ஜேம்ஸ் அகஸ்டஸ்
ஹிக்கி. ஹிக்கியின் பத்திரிகை ஹேஸ்டிங்ஸையும், மரியாவையும் சரமாரியாக கிழித்தது. இப்படித்தான்
இந்தியாவின் முதல் பத்திரிகை கிசுகிசு சூடு பிடித்தது. கவர்னர் ஜெனரல் தனது
அதிகாரத்தைப் பயன்படுத்தி ஹிக்கியை சிறையில் அடைத்தார். அப்போதும் அடங்காமல் அவர் அவதூறுகளைப்
பிரசுரித்துக் கொண்டே இருந்தார். இதனால் அவரது அச்சகத்தையும் அரசு அபகரித்துக்
கொண்டது. இறுதியில் தனது போரில் ஹிக்கி தோற்றார்.
ஹிக்கியின்
பத்திரிகைக்கு தீனி போடுவதைப் போல ஹேஸ்டிங்சும் நிறைய அதிகார துஷ்பிரயோகங்களிலும்,
ஊழல்களிலும் ஈடுபட்டார். ஓர் எழுத்தராக ஐந்து பவுண்ட் பணத்துடன் வந்த வாரன்
ஹேஸ்டிங், இந்தியாவில் கொள்ளை
அடித்த பணத்தின் மதிப்பு குறைந்தபட்சம் 20 மில்லியன் பவுண்ட் என்கிறார்கள். இது போன்ற குற்றச்சாட்டுகளைப் பற்றி இங்கிலாந்தின்
காமன் சபையில் விசாரிக்கப்பட்டது. ஏழு ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கின் முடிவில்,
வாரன் ஹேஸ்டிங் குற்றமற்றவர் என்று
தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பை விலைக்கு வாங்கினார் வாரன் என்றும்
சொல்லப்படுகிறது.
எது எப்படியோ
ஓட்டாண்டியாய் இந்தியா வந்து ஓஹோவென வாழ்ந்து, பெரும் செல்வத்துடன் ஓட்டம் பிடித்த
ஆங்கிலேயர்கள் வரிசையில் வாரன் ஹேஸ்டிங்ஸும் இடம்பிடித்துவிட்டார்.
நன்றி - தினத்தந்தி
* பகவத் கீதையால்
கவரப்பட்ட வாரன் ஹேஸ்டிங்ஸ் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் செய்தார்.
* மெட்ராசிற்கு ஒரு
துறைமுகம் தேவை என்ற கருத்தை முதன்முதலில் வலியுறுத்தியவர் வாரன் ஹேஸ்டிங்ஸ்தான்.
அருமையான கட்டுரை, பயனுள்ள தகவல்!
ReplyDeleteஇம்ஹோப்புக்கு பணம் செட்டிமெண்ட் கொஞ்சம் கொடுத்தார் ஹேஸ்டிங். அதையும் சொல்லி இருக்கலாமே?
ReplyDeleteஇருந்தாலும் நுணுக்கமாக கூறியதற்கு நன்றி
இன்னும் சில நுனுக்கமான தகவலை கொடுத்துள்ளார் பிரிட்டிஷ் பெண் பயணி எலீசா ஃபே.
ReplyDelete"இந்திய பயண கடிதங்கள்" என்னும் அந்த நூலில் வாரென் ஹேஸ்டிங்ஸ், மரி ஹேஸ்டிங்ஸ் பற்றி கூறியுள்ளார்.
நான் படித்துள்ளேன்.