என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Friday, July 12, 2013

மெட்ராசின் கதை

இன்று நாம் சென்னை என்று அழைக்கும் இந்த நகரம், சுமார் 375 ஆண்டுகளுக்கு முன் வங்கக் கடலோரம் ஒரு சின்னஞ்சிறிய கிராமமாக இருந்தது. கடற்கரை அருகில் குட்டி குட்டி மீனவக் குப்பங்கள் இருந்தன. தங்களின் கம்பெனிக்காக இடம் தேடி அலைந்த கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதியான பிரான்சிஸ் டேவின் கண்ணில் இந்த பகுதி தென்பட்டதில் இருந்துதான் மெட்ராஸ் என்ற பிரம்மாண்ட நகரத்தின் கதை தொடங்குகிறது.
1673இல் ஜார்ஜ் கோட்டையின் வரைபடம்

இந்த பகுதியை ஆண்ட நாயக்க மன்னரின் பிரதிநிதியிடம் இருந்து வியாபாரம் செய்ய அனுமதி பெற்ற கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள், கடற்கரையோரம் கோட்டை கட்டி குடியேறினர். 1639இல் கட்டப்பட்ட அந்த கோட்டைதான் மெட்ராசின் வளர்ச்சிக்கு அஸ்திவாரம் போட்டது. கோட்டைக்குள் ஆங்கிலேய குடியிருப்புகள் வந்ததும், கோட்டையைச் சுற்றி ஒரு சிறிய பட்டணமும் உருவானது. ஆங்கிலேயர்களுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் உள்ளூர் மக்கள் இங்கு குடியேறினர்.

கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் வியாபாரம் செய்வதற்காகத்தான் இங்கு வந்தனர் என்பதால் அவர்களோடு வாணிபம் செய்ய நிறைய உள்ளூர் வியாபாரிகள் கோட்டையை சுற்றிச்சுற்றி வந்தனர். இதனால் கோட்டைக்கு உள்ளும், புறமும் நடமாட்டம் அதிகரித்தது. 1646இல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, அப்போதைய மெட்ராசின் ஜனத்தொகை சுமார் 19 ஆயிரமாக இருந்தது.
அந்தக்கால எஸ்பிளனேட் பகுதி

கம்பெனியின் வியாபாரம் வேகமாகப் பெருக, அதற்கேற்ப ஆட்களின் போக்குவரத்தும் அதிகரித்தது. எனவே கோட்டையின் எல்லையை விஸ்தரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமானது. கோட்டைக்கு உள்ளேயும், வெளியேயும் வெள்ளையர் நகரம், கருப்பர் நகரம் என இரண்டு நகரங்கள் உருவாயின.

கம்பெனியின் வியாபாரம் பெரும்பாலும் துணி சார்ந்ததாக இருந்ததால், அதற்கு தேவையான ஆட்களை மெட்ராசில் குடியேற்றம் செய்யும் பணிகள் தொடங்கின. நெசவாளர்களை ஊக்குவிப்பதற்காக கம்பெனி செலவிலேயே வீடு கட்டிக் கொடுக்கப்பட்டு, அங்கேயே பரம்பரை பரம்பரையாக வாழ அனுமதியும் வழங்கப்பட்டது. இதனால் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் மெட்ராஸ் நோக்கி படையெடுத்தனர். இப்படித்தான் வண்ணாரப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, காலடிப்பேட்டை போன்ற புதிய பகுதிகள் உருவாகின.

ஏற்கனவே இருந்த எழும்பூர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் போன்ற கிராமங்கள் காலப்போக்கில் சென்னையுடன் இணைக்கப்பட்டன. மெட்ராஸ் மெல்ல ஒரு நகரமாக உருமாற ஆரம்பித்ததும், துணி வியாபாரத்தை தாண்டி மற்ற வியாபாரங்களும் சூடிபிடித்தன. கப்பல் போக்குவரத்து அதிகரித்ததால் துறைமுகம் கட்டப்பட்டது. உலகின் மற்ற பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசி, ரயில், சினிமா போன்ற விஷயங்கள் அடுத்த சில ஆண்டுகளிலேயே மெட்ராசிற்கு அறிமுகமாயின. மே 7, 1895இல் சென்னை நகர வீதிகளில் முதன்முறையாக எலெக்ட்ரிக் டிராம்கள் ஓடின. இந்தியாவிலேயே எலெக்ட்ரிக் டிராம் ஓடுவது அதுதான் முதல்முறை. அந்த சமயத்தில் லண்டன் போன்ற மாநகரங்களில் கூட எலெக்ட்ரிக் டிராம்கள் அறிமுகமாகவில்லை.
1905இல் அண்ணாசாலை

மெட்ராசை ஆண்ட தாமஸ் மன்றோ போன்ற ஆளுநர்கள், இங்கு வந்து குடியேறிய தாமஸ் பாரி, பெட்ரூஸ் உஸ்கான் போன்ற பெரு வணிகர்கள், பச்சையப்ப முதலியார், சர் பிட்டி தியாகராயர் போன்ற உள்ளூர் பெரிய மனிதர்கள் முதல் சென்னைக்கென பிரத்யேகமான மெட்ராஸ் பாஷையை அறிமுகப்படுத்திய சாதாரண ரிக்ஷாக்காரர்கள் வரை எத்தனையோ பேர் சேர்ந்து செதுக்கியதுதான் இன்றைய சென்னை. இந்த நகரம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதல்ல. காலத்தின் தேவை கருதி தன்னைத்தானே விஸ்தரித்துக் கொண்டது.

மெட்ராசின் பழமையைப் பறைசாற்றியபடி நூற்றாண்டுகள் கடந்து நின்றுகொண்டிருக்கும் ஒவ்வொரு இந்தோ சராசனிக் பாணி கட்டடத்திற்கு பின்னும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. ஒவ்வொரு சாலைக்கு அடியிலும் ஒரு வரலாறு நிலத்தடி நீராய் ஈரம் மாறாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. கால ஓட்டத்தில் எத்தனையோ மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு இன்றும் இளமை மாறாமல் அதே துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சென்னை நகரத்திடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன.

மொத்தத்தில் மூன்று நூற்றாண்டுகளைக் கடந்த இந்த மாநகரத்தின் கதை, அனைவருக்குமான ஒரு சிறந்த வாழ்வியல் பாடம்.

நன்றி - தினத்தந்தி

கடந்து வந்த பாதை

* 1640 - புனித ஜார்ஜ் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது
* 1688 - மெட்ராஸ் மாநகராட்சி உதயமானது
* 1693 - எழும்பூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை ஆகிய ஊர்கள் மெட்ராசுடன் இணைக்கப்பட்டன
* 1746 - மெட்ராஸ் பிரெஞ்சுக்காரர்கள் வசம் சென்றது
* 1749 - மீண்டும் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
* 1768 - ஆற்காடு நவாப் சேப்பாக்கம் அரண்மனையைக் கட்டினார்
* 1772 - நகரத்தின் முதல் குடிநீர் திட்டமான ஏழுகிணறு திட்டம் ஆரம்பமானது
* 1785 - முதல் தபால் நிலையம் செயல்படத் தொடங்கியது
* 1841 - ஐஸ்கட்டிகளை சேமித்து வைப்பதற்காக ஐஸ் ஹவுஸ் கட்டப்பட்டது
* 1856 - முதல் ரயில் ராயபுரத்தில் கிளம்பி ஆற்காடு சென்றது
* 1882 - சென்னையில் முதல் டெலிபோன் ஒலித்தது
* 1889 - உயர்நீதிமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது
* 1895 - மெட்ராசில் டிராம் வண்டிகள் ஓடத் தொடங்கின
* 1910 - மெட்ராஸ் வானில் முதல் விமானம் பறந்தது

* 1947 - புனித ஜார்ஜ் கோட்டையில் இந்திய தேசியக் கொடி ஏறியது

Saturday, July 6, 2013

ஒய்.எம்.சி.ஏ

பிரபல விளையாட்டு மைதானங்களுக்கு நிகராக எப்போதும் பிசியாக இருக்கும் மைதானம் ஒன்று சென்னையில் உள்ளதென்றால் அது ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானமாகத்தான் இருக்க முடியும். அரசியல் விழாக்களுக்கும், பொருட்காட்சி நிகழ்வுகளுக்கும் ஏற்ற இடமாகத் திகழும் இந்த மைதானத்திற்கு பின்னே ஒரு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது.
ஒய்.எம்.சி.ஏ கட்டடம்

மெட்ராஸ் ஒய்.எம்.சி.ஏ., டேவிட் (Mr.David McConaughy) என்பவரால் 1890ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் ஒய்.எம்.சி.ஏ இயக்கம் அதற்கும் 50 ஆண்டுகளுக்கு முன்பே இங்கிலாந்தில் உதயமாகிவிட்டது. தொழிற்புரட்சிக்கு பிந்தைய இங்கிலாந்தில், துணி விற்பனை நிறுவனம் ஒன்றில் உதவியாளராக இருந்த 21 வயதான ஜார்ஜ் வில்லியம் என்பவரின் முயற்சியால் உருவானதுதான் இந்த இயக்கம். இவர் தன்னுடன் வேலை செய்யும் 12 ஊழியர்களை சேர்த்துக் கொண்டு 1844இல் லண்டனில் பைபிள் வகுப்புகளைத் தொடங்கினார். இளம் கிறிஸ்தவர்களிடையே நல்லொழுக்கங்களை போதிப்பதே இந்த வகுப்பின் நோக்கமாக இருந்தது. தற்போது 125க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் நாலரை கோடி உறுப்பினர்களை கொண்டிருக்கும் ஒய்.எம்.சி.ஏ (YMCA - Young Men’s Christian Association) இப்படிதான் கருவாகி உருவானது.

இந்தியாவில் ஒய்.எம்.சி.ஏ இயக்கம் 1857இல் கல்கத்தாவில்தான் காலூன்றியது. இதைத் தொடர்ந்து கொழும்பு, திருவனந்தபுரம், பம்பாய், மெட்ராஸ் என ஆசியாவின் பல பகுதிகளிலும் ஒய்.எம்.சி.ஏ ஆரம்பிக்கப்பட்டது. அந்த வரிசையில் 1890இல் மெட்ராஸ் வந்த டேவிட் என்ற இளம் அமெரிக்கர், இங்கு ஒய்.எம்.சி.ஏ இயக்கத்தை தொடங்கினார். அடுத்த ஆண்டு இவர் மேற்கொண்ட முயற்சியால் இந்தியாவில் உள்ள ஒய்.எம்.சி.ஏ அமைப்புகளின் கூட்டம் சென்னையில் கூடியது. ஒய்.எம்.சி.ஏ.வின் தேசிய கவுன்சிலை உருவாக்குவது என இதில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இந்த கவுன்சிலின் தலைமையகம் முதல் ஓராண்டு காலம் மெட்ராசில் இருந்து செயல்பட்டது. பின்னர் இது கல்கத்தாவிற்கு மாற்றப்பட்டது.

மெட்ராஸ் ஒய்.எம்.சி.ஏ.விற்கென பாரிமுனையின் எஸ்பிளனேட் பகுதியில் 1895இல் ஒரு பிரம்மாண்ட கட்டடம் கட்டும் பணி தொடங்கியது. ஜெய்ப்பூர் அரண்மனை பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த கண்கவர் கட்டடத்தை ஹார்டிங் (G.S.T Harding) என்பவர் வடிவமைத்துக் கொடுத்தார். இதன் கட்டுமானப் பணிக்காக ஜான் வானாமேக்கர் என்பவர் அந்த காலத்திலேயே 40,000 டாலர் நன்கொடை அளித்தார். இந்த ஜான், அப்போது அமெரிக்காவின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாக இருந்தார்.

பைபிள் வகுப்புகள், பிரசங்கங்கள் என கிறிஸ்தவ செயல்பாடுகளில் மட்டும் ஒய்.எம்.சி.ஏ கவனம் செலுத்தி வந்த நிலையில், 1919இல் மெட்ராஸ் வந்து சேர்ந்தார் ஹாரி க்ரோ பக் (Harry Crowe Buck). அடுத்த ஆண்டே எஸ்பிளனேட் கட்டடத்தில் இவர் ஒரு உடற்பயிற்சி பள்ளியை ஆரம்பித்தார். ஆரம்பிக்கப்பட்ட புதிதில் இந்த பள்ளியில் வெறும் 5 மாணவர்கள் மட்டுமே பயின்றனர். அந்த மாணவர்களுக்கு பக் அளித்த சிறப்பான பயிற்சிகளைப் பார்த்த மெட்ராஸ் அரசு, அவரை அரசின் உடற்கல்வி ஆலோசகராக 1922இல் நியமித்தது.

1924இல் இந்தியாவில் இருந்து ஒலிம்பிக்கில் பங்கேற்கச் சென்ற அணியில், ஒய்.எம்.சி.ஏ பள்ளியின் மாணவர்களும் இடம்பிடித்தனர். பாரீஸ் நகரில் நடைபெற்ற இந்த ஒலிம்பிக் போட்டியில் பக் தான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார். பள்ளி வேகமாக வளரத் தொடங்கியதால் எஸ்பிளனேட் இடம் போதுமானதாக இல்லை. எனவே 1928இல் ராயப்பேட்டையில் உள்ள வெஸ்லி பள்ளி மைதானத்திற்கு உடற்பயிற்சிக் கல்லூரி இடம்மாறியது. காலப்போக்கில் அந்த இடமும் போதுமானதாக இல்லாததால், அடையாறு ஆற்றங்கரையில் சைதாப்பேட்டையில் ஒரு பரந்து விரிந்த இடத்தை பக் தேர்வு செய்தார். இப்படித்தான் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சிக் கல்லூரி உருவானது.

65 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்திலேயே பக்கும் குடும்பத்துடன் குடியேறி விட்டார். ஆரம்ப நாட்களில் வெறும் கீற்றுக் கொட்டகைகளில் வகுப்புகள் நடத்தப்பட்டன. பின்னர் 1933இல் அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் சர் ஜார்ஜ் ஸ்டான்லி அடிக்கல் நாட்ட, கட்டடங்கள் கட்டும் பணி தொடங்கியது. காலப்போக்கில் இந்த உடற்பயிற்சிக் கல்லூரியில் பெண்களும் சேர ஆரம்பித்தனர். ஆசியாவின் பழமையான இந்த உடற்பயிற்சிக் கல்லூரியை வளர்ப்பதற்காக தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த ஹாரி க்ரோ பக் 1943, ஜூலை 24 அன்று தனது கடைசி மூச்சு வரை இந்த வளாகத்தில்தான் இருந்தார். அவரது நினைவிடம் இன்றும் நந்தனம் வளாகத்தில் இருக்கிறது.

ஒய்.எம்.சி.ஏ.வைப் போலவே பெண்களுக்கென தொடங்கப்பட்ட ஒய்.டபிள்யூ.சி.ஏ (YWCA - Young Women's Christian Association) ஆரம்ப நாட்களில் மெட்ராஸ் கிறிஸ்தவ மகளிர் அமைப்பு என அழைக்கப்பட்டது. இங்கு பெண்களுக்கான பைபிள் வகுப்புகள், தையல் பயிற்சிகள், தேநீர் விருந்துகள் நடைபெற்றன. இதே காலகட்டத்தில் மன்னரின் மகள்கள் (King's Daughters) என்ற அமைப்பும் மெட்ராசில் செயல்பட்டது. மெட்ராஸ் ஒய்.எம்.சி.ஏ.வைத் தொடங்கிய டேவிட்டின் மனைவி லில்லி இந்த அமைப்பை ஏற்படுத்தினார். பின்னர் இந்த இரு அமைப்புகளும் 1892இல் ஒருங்கிணைக்கப்பட்டு ஒய்.டபிள்யூ.சி.ஏ உருவானது.
ஒய்.டபிள்யூ.சி.ஏ

ஒய்.எம்.சி.ஏ, ஒய்.டபிள்யூ.சி.ஏ ஆகிய இரண்டும் கிறிஸ்தவ இளம்தலைமுறையினருக்காக ஆரம்பிக்கப்பட்டாலும், பின்னாட்களில் அனைவரும் பயன்பெறத்தக்க வகையில் பல்வேறு சமூக மேம்பாட்டு செயல்களில் முத்திரை பதித்தன. மொத்தத்தில் மெட்ராஸ் வரலாற்றின் சில பயனுள்ள பக்கங்களை ஒய்.எம்.சி.ஏ தனது சேவையால் நிரப்பி இருக்கிறது என்பதே நிஜம்.

நன்றி - தினத்தந்தி

* மாற்றுத்திறனாளி மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்த, முதன்முதலில் நடவடிக்கை எடுத்த கல்லூரிகளில் ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சிக் கல்லூரி மிக முக்கியமானது.

* பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ரம்மியமான சூழலில் அமைந்துள்ள கிளைவ் இல்லத்தில்தான் ஒய்.டபிள்யூ.சி.ஏ தற்போது செயல்பட்டு வருகிறது.