என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Wednesday, May 29, 2013

உட்லண்ட்ஸ் ஹோட்டல்

உழைப்பு ஒரு மனிதனை எந்தளவுக்கு உயர்த்தும் என்பதற்கு உதாரணம்தான் சென்னையில் இருக்கும் உட்லண்ட்ஸ் ஹோட்டல். அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாமல் இருந்த ஒரு மனிதரின் வியர்வுத் துளிகள் விஸ்வரூபம் எடுத்த கதை ரொம்பவே விறுவிறுப்பானது.
கிருஷ்ணா ராவ்

கிருஷ்ணா ராவ்... கர்நாடகாவின் உடுப்பி பகுதியைச் சேர்ந்த கடந்தலெ என்ற சிறிய கிராமத்தில் ஏழை அர்ச்சகர் வீட்டில் பிறந்ததால், பசி இவருக்கு இளமையிலேயே அறிமுகம் ஆகிவிட்டது. 1898இல் பிறந்த கிருஷ்ணா ராவ் சிறு வயதிலேயே உடுப்பி பகுதியில் ஒரு மடத்தில் வேலைக்கு சேர்ந்தார். இது அதிக காலம் நீடிக்கவில்லை. பின்னர் ஒரு கிராமப்புற உணவகத்தில் உதவியாளர் பணி. தண்ணீர் இறைப்பது, பாத்திரம் கழுவுவது, இட்லிக்கு மாவாட்டுவது... இவை தான் வேலை. இதற்கு மாசம் ரூ.3 சம்பளம்.

இந்த சமயத்தில்தான் சென்னையில் இருந்த இவரது அக்கா வீட்டுக்காரர், கிருஷ்ணா ராவின் பட்டணப் பிரவேசத்திற்கு அழைப்பு விடுத்தார். ஊர் தெரியாது, மொழி தெரியாது. இருந்தாலும் முன்னேற வேண்டும் என்ற உத்வேத்தில் 1920களில் சென்னைப் பட்டணத்தில் வந்திறங்கினார் கிருஷ்ணா ராவ். ஐந்து ரூபாய் சம்பளத்துக்கு ஒரு வீட்டில் சமையல்காரராகச் சேர்ந்தார். பிறகு, தம்பு செட்டித் தெருவில் உள்ள உணவகத்தில் எட்டு ரூபாய் சம்பளத்திற்கு வேலை கிடைத்தது.

சில மாதங்கள் கழித்து அருகில் உள்ள போஸ்ட் ஆபிஸ் தெருவில் வெங்கடராமய்யர் என்பவரின் ஹோட்டலில் இருபது ரூபாய் சம்பளத்தில் வேலை. அது வேலை மட்டுமல்ல, ஒரு புதிய விடியலுக்கான வாசல் என்பது கிருஷ்ணா ராவிற்கு அப்போது தெரியாது. இருந்தாலும் அவர் எப்போதும் போல் பம்பரமாக சுற்றிச் சுழன்றார். அவரது சுறுசுறுப்பும், கடமை உணர்ச்சியும் வெங்கடராமய்யரைக் கவர்ந்தன.

வெங்கடராமய்யருக்கு ஜார்ஜ் டவுனின் ஆசாரப்பன் தெருவில் இன்னொரு சிறிய ஹோட்டல் இருந்தது. இதை சரியாக பார்த்துக் கொள்ள ஆள் இல்லாததால் அங்கு வியாபாரம் சற்று டல்லடித்தது. எனவே இந்த ஹோட்டலை ரூ.700க்கு கிருஷ்ணா ராவிற்கு விற்க வெங்கடராமய்யர் முன்வந்தார். அதையும் ரூ.50 என்ற மாதத் தவணையில் செலுத்தினால் போதும் என்றார். மாதம் ரூ.20 சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணா ராவ், மாதம் ரூ.50 தவணை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் முதலாளி ஆனார்.

அந்த சிறிய ஹோட்டலில் முதலாளி, சர்வர், சரக்கு மாஸ்டர் எல்லாம் கிருஷ்ணா தான். அவரது அயராத உழைப்பிற்கு பலன் கிடைத்தது. வியாபாரம் மெல்ல சூடு பிடிக்க ஆரம்பித்தது. அடுத்ததாக மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த மவுண்ட் ரோடுக்கு மாறுவது என கிருஷ்ணா முடிவெடுத்தார். 1926-ல் ஒருவரோடு கூட்டு சேர்ந்து சென்னை மவுண்ட் ரோடில் உடுப்பி ஹோட்டல் ஒன்றைத் தொடங்கினார். சென்னையின் முதல் நவீன சைவ உணவகமான உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண விலாஸ் உதயமானது. மாதம் நூற்று அறுபது ரூபாய் வாடகை. அதிலும் நல்ல வியாபாரம்.

பிறகு 1933இல் கூட்டாளிகள் பிரிந்தபோது, கிருஷ்ணா ராவ் உடுப்பி ஹோட்டலையும், கூட்டாளிகள் ஸ்ரீ கிருஷ்ண விலாஸையும் வைத்துக் கொண்டனர். ஏழு வருடங்கள் கழித்து உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண விலாஸ் அவருக்கே மீண்டும் கிடைத்தது. இதனிடையே அடுத்த கட்டத்திற்கு நகர நினைத்த கிருஷ்ணா, பயணிகள் விடுதி ஒன்றைத் தொடங்குவது என முடிவு செய்தார்.

அந்த சமயத்தில் ராயப்பேட்டையில் ராமநாதபுரம் ராஜா ஷண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதிக்கு சொந்தமான பங்களா ஒன்றை முனிவெங்கடப்பா என்பவர் வாங்கி இருந்தார். அதை ஹோட்டலாக மாற்ற நினைத்த வெங்கடப்பா, அந்த கட்டடத்தை ஐந்நூறு ரூபாய் வாடகையில் கிருஷ்ணா ராவிற்கு 10 ஆண்டு குத்தகைக்கு கொடுத்தார். 1938-ல், இப்படி தொடங்கப்பட்டதுதான் ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் ஹோட்டல். மரங்கள் சூழ்ந்த கட்டடம் என்பதால்  'உட்லண்ட்ஸ்என்று பெயர் வைத்துவிட்டார்.

45 அறைகள் கொண்ட ராமநாதபுரம் ராஜாவின் அரண்மனை பயணியர் விடுதியாக மாறியது. இரட்டைக் கட்டில் போடப்பட்ட அறைக்கு ஒரு நாள் வாடகையாக ரூ.5 வசூலிக்கப்பட்டது. மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் 10 ஆண்டுகள் முடிந்ததும் வெங்கடப்பா குத்தகையை புதுப்பிக்க மறுத்துவிட்டார். எனவே நகரின் வேறு பகுதியில் இடம் தேடினார் கிருஷ்ணா ராவ். அப்போது மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்த ஏ.எம்.எம். முருகப்பா குடும்பத்தின் 4 ஏக்கர் மாளிகை விலைக்கு வந்தது. இதை அந்த காலத்திலேயே ரூ.2.5 லட்சம் கொடுத்து வாங்கினார் கிருஷ்ணா ராவ்.

ஒரு கல்யாண மண்டபம், அதை அடுத்து ஒரு கோவில், கூட்டங்கள் நடத்த தனி அரங்கு, குடும்பங்கள் தங்குவதற்காக சிறிய காட்டேஜ்கள் என இந்த மாளிகையை தனது எண்ணங்களுக்கு ஏற்ப மாற்றினார். ரம்மியமான சூழல், சுத்தமான உணவு, தரமான சேவை போன்ற காரணங்களால் நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலை மெட்ராஸ்வாசிகள் இருகரம் நீட்டி ஏற்றுக் கொண்டனர்.

இதனிடையே மற்ற நாடுகளில் ஹோட்டல்கள் எப்படி இயங்குகின்றன எனத் தெரிந்துகொள்வதற்காக லண்டன், ஜெர்மனி, பாரிஸ், ரோம், நியூயார்க் என ஒரு சுற்றுசுற்றிவிட்டு வந்தார் கிருஷ்ணா. அந்த உலகப் பயணத்தின் பலன்தான், 1962இல் சென்னை வேளாண் விவசாய வாரியத்தின் தோட்டத்தில் விளைந்த சென்னையின் முதல் டிரைவ் இன் ஹோட்டல். பின்னர் நியூயார்க், சிங்கப்பூர் என உலகின் பல இடங்களில் உட்லண்ட்ஸ் ஹோட்டல்கள் திறக்கப்பட்டன.

இதுதான் கர்நாடக கிராமம் ஒன்றில் கல்லில் மாவாட்டிக் கொண்டிருந்த ஒரு இளைஞனின் கனவுகள், அயராத உழைப்பினால் உயிர்ப்பெற்ற கதை.

- பார்த்திபன்

* 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, ராஜாஜி ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் தேநீர் விருந்து கொடுத்திருக்கிறார்.


* டிசம்பர் கச்சேரிகளில் காண்டீன்கள் முக்கிய பங்கு வகிக்கும் போக்கை தொடங்கி வைத்ததில் கிருஷ்ணா ராவிற்கு பெரும் பங்கு இருக்கிறது. 

Saturday, May 25, 2013

சென்னைப் பல்கலைக்கழகம்


மெட்ராசில் உயர்கல்வி பற்றி 19ஆம் நூற்றாண்டில் அதிகளவில் விவாதிக்கப்பட்டது. அதன் விளைவாகப் பிறந்ததுதான், 150 ஆண்டுகளைக் கடந்து இன்றும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் சென்னைப் பல்கலைக்கழகம்.

ஆங்கிலேயர்கள், மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா என இந்தியாவின் மூன்று துறைமுக நகரங்களில் கோலோச்சிக் கொண்டிருந்தனர். அதனால் இந்த மூன்று நகரங்களிலும் அவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. இந்நகரங்களில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர்கள், தங்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்வி கிடைக்க வகை செய்ய வேண்டும் என எண்ணினர். இதுபற்றிய விவாதங்களும் அடிக்கடி நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக, 1854ம் ஆண்டு சார்லஸ் உட் என்பவர் கல்வி தொடர்பாக அரசுக்கு ஒரு குறிப்பு எழுதினார். அதன் பயனாக, 1855ம் ஆண்டு மதராஸ் அரசு ஒரு தனியார் கல்வித்துறையை உருவாக்கியது.
பட்டம் வென்ற மாணவர்கள்

அப்போது இந்தியாவில் இருந்த கல்விச்சூழல் கிழக்கிந்திய கம்பெனியை மையமாகக் கொண்டே அமைந்திருந்தது. திறமையான கிளார்க்குகளை உருவாக்க ஆங்கிலேயர்களுக்கு ஒரு கல்விமுறை தேவைப்பட்டது. இந்தியர்கள் தாங்கள் சொல்வதை புரிந்துகொண்டு பணியாற்ற வேண்டும் என்பது மட்டுமே இந்த கல்வியின் நோக்கமாக இருந்தது. அதற்கேற்ப பாடத்திட்டங்களை உருவாக்கி, அதற்கு உயர்கல்வி என்று பெயரிட்டார்கள்.

அதற்கு முன்பு வரை, இந்தியாவில் வீட்டிலேயே கற்றுக் கொள்ளும் திண்ணைக்கல்வி, குருகுலத்திற்கு சென்று குருவிற்கு பணிவிடை செய்து கற்றுக் கொள்ளும் குருகுலக்கல்வி, இதையும் விட்டால் சான்றிதழ் கல்வி ஆகியவைதான் நடைமுறையில் இருந்தன. கிழக்கிந்தியக் கம்பெனி நுழைந்தவுடன் தங்களுக்கான வேலையாட்களை தயார் செய்ய உயர்கல்வி(!) முறையை அறிமுகம் செய்தனர்.

இந்த கல்விக்கான பாடத்திட்டங்களை மெக்காலே என்பவர் தயாரித்தார். இவர் அளித்த குறிப்புகளின் அடிப்படையில்தான் கிழக்கிந்தியக் கம்பெனி பள்ளிகளில் பாடங்கள் நடத்த உத்தரவிட்டது. அதன்படி ஐரோப்பிய இலக்கியம், அடிப்படை அறிவியல் போன்ற பாடங்கள் கற்பிக்கப்பட்டன. குறிப்பாக இந்த பள்ளிகளில் ஆங்கிலத்தை கற்றுக் கொண்டதால்தான், இந்தியர்களால் அன்றைக்கு ஆங்கில அரசில் வேலை செய்ய முடிந்தது. நீதிமன்றங்களில் ஆங்கிலத்தில்தான் வாதாட வேண்டும் என்ற சட்டமும் அந்த காலகட்டத்தில்தான் (1837 ஆம் ஆண்டு) கொண்டு வரப்பட்டது.

இந்த ஆங்கிலக் கல்வி கூடங்களில் படித்த இந்தியர்களின் எண்ணிக்கை மெல்ல உயரத் தொடங்கியது. இந்தியர்கள் ஆங்கிலத்தை சிறப்பாக படிப்பதைப் பார்த்து வியந்து போன கிழக்கிந்தியக் கம்பெனி, அவர்களுக்கு உயர்பதவிகளை வழங்க முன்வந்தது. இதற்கான ஆணையை 1849ஆம் ஆண்டில் ஹார்டிங் பிரபு பிறப்பித்தார். இந்தியர்களில் சிலர் இப்படி உயர் பதவி பெற்று வளமாக வாழ்வதைக் கண்ட மற்றவர்களுக்கும் தாங்களும் அதுபோல் ஆக வேண்டும் என்ற ஆசை பிறந்தது. ஆங்கில கல்வி உயர்ந்தது என்ற மனநிலை வேகமாகப் பரவ ஆரம்பித்தது.
செனட் இல்லம்

இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான், 1854ஆம் ஆண்டு ஜுலை 19ஆம் தேதி, அப்போதைய இந்திய கல்வி கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த சார்லஸ் உட், அந்த கல்விக் குறிப்பை எழுதினார். அதற்கு முன்னரே, மெட்ராஸ் மாகாணத்தில் ஒரு உயர்கல்வி நிறுவனம் தேவை என வலியுறுத்தி 70 ஆயிரம் பேர் கையெழுத்திட்ட ஒரு மனு, அப்போதைய ஆளுநர் லார்ட் எல்பின்ஸ்டோனிடம் 1839இல் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து அப்போதைய அட்வகேட் ஜெனரல் ஜார்ஜ் நார்டனை தலைவராகக் கொண்டு, 1840ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பல்கலைக்கழக போர்டு ஒன்று அமைக்கப்பட்டது.

இதனிடையே 1857ஆம் ஆண்டில் மெட்ராஸ், கல்கத்தா, பாம்பே ஆகிய பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அந்நாட்களில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் உயர்கல்வி தென்னிந்தியா முழுவதும் பரவியிருந்தது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் படிப்பது மிகுந்த கவுரமான விஷயமாக பார்க்கப்பட்டது. 1858ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 1956ஆம் ஆண்டு சென்னை தனி மாநிலமாக உருவாகும் வரை தென்னிந்தியா முழுவதிலும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் உயர்கல்வி அதிகாரம் பரவியிருந்தது.

பின்னாட்களில் பல்கலைக்கழகம் பல்கிப் பெருகியதும், இதிலிருந்து மைசூர் பல்கலை(1916), உசுமானியா பல்கலை(1918), ஆந்திர பல்கலை(1926), அண்ணாமலை பல்கலை(1929) என பல பல்கலைக்கழகங்கள், சேய் பல்கலைக்கழகங்களாக உருவெடுத்தன.

பல்கலைக்கழகத்தில் இருக்கும் பாரம்பரியமிக்க செனட் இல்லம் (Senate House ) எனப்படும் ஆட்சிப் பேரவை மன்றக் கட்டடம் இந்தியாவின் சிறந்த இந்தோ-சராசனிக் பாணி கட்டடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மெட்ராஸ் அரசாங்கம் இந்த கட்டடத்தை கட்டுவதற்கு முன், இதனை சிறப்பாக வடிவமைக்க விரும்பி 1864இல் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்திருக்கிறது. நிறைய பேர் தங்களின் கட்டட வரைபடங்களை அனுப்பி வைக்க, இறுதியில் இந்தோ-சராசனிக் பாணியில் கைதேர்ந்த ராபர்ட் சிஸ்ஹோம் (அருகில் உள்ள மாநிலக் கல்லூரியும் இவர் கட்டியதுதான்) என்ற பொறியாளரின் வரைபடம் தான் தேர்வு செய்யப்பட்டது.

இந்த கட்டடத்திற்கான பணிகள் 1874ஆம் ஆண்டு தொடங்கி 1879ஆம் ஆண்டு நிறைவுபெற்றது. காலத்தின் கோலத்தால் சிதிலமடைந்துபோன செனட் இல்லம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பயன்படுத்தப்படாமல் இருந்தது. பின்னர் புதுப்பிக்கப்பட்டு தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. பட்டமளிப்பு விழாக்கள், சர்வதேச மாநாடுகள், இரண்டாம் எலிசபெத் ராணிக்கு வரவேற்பு, மிகச்சிறந்த இசைக் கச்சேரிகள் என பல நிகழ்ச்சிகளை இந்த கட்டடம் பார்த்திருக்கிறது.

இந்தியாவின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு சென்னைப் பல்கலைக்கழகம் அரும்பெரும் தொண்டாற்றி வருகிறது. அரசியல் மேதைகள், திரைக் கலைஞர்கள், தொழிலதிபர்கள், துணைவேந்தர்கள், தமிழறிஞர்கள், பேராசிரியர்கள் என பலதரப்பட்ட பெருமக்களை இந்த பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகம் இதுவரை ஏறத்தாழ மூன்று கோடிக்கும் அதிகமான மாணவ, மாணவியரை உலகிற்கு அளித்திருக்கிறது. மொத்தத்தில், எதிர்புறம் உள்ள வங்கக் கடலுக்கு போட்டியாக இந்த கல்விக் கடலும் 150 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் இளமை மாறாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது.

நன்றி - தினத்தந்தி

* 1937ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாண சட்டப்பேரவைக் கூட்டம் செனட் இல்லத்தில்தான் நடைபெற்றது.

* 1957ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அச்சமயம் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் 128 கல்லூரிகள் இணைக்கப்பட்டிருந்தன.

Saturday, May 18, 2013

மன்னர் ஐந்தாம் ஜார்ஜ்


சென்னை பூக்கடை திருப்பத்தில், தலையில் கிரீடத்தோடும், கையில் செங்கோலோடும் ஆளுயர நின்று கொண்டிருக்கும் மன்னர் ஐந்தாம் ஜார்ஜின் சிலையைப் பார்க்கும்போதெல்லாம் இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்ததை நினைவுபடுத்தும் இந்த சிலையை ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறார்கள் என்று தோன்றும். இதுகுறித்து ஆராய்ந்தபோது நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைத்தன.
பூக்கடை பகுதியில் சிலையாக..

கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி, அடிமை இந்தியாவின் முதல் பேரரசியான இங்கிலாந்து ராணியின் பேரன்தான் ஐந்தாம் ஜார்ஜ். இவரது தந்தையான ஏழாம் எட்வர்ட் 1910இல் பரலோகம் போய்ச் சேர்ந்ததும், இங்கிலாந்தின் மன்னரானார் ஜந்தாம் ஜார்ஜ். அப்போது இந்தியாவும் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்ததால், தனது பதவி ஏற்பு விழாவை இந்தியாவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஜார்ஜ் விரும்பினார். காரணம், அவருக்கு இந்தியாவின் மீது எப்போதுமே ஒரு ஈர்ப்பு இருந்தது.

ஜார்ஜ், இளவரசனாக இருந்தபோதே இந்தியாவிற்கு வந்திருக்கிறார். இளவரசர் ஜார்ஜ் 1909ஆம் ஆண்டில் மெட்ராஸ் வந்தபோது, அவரது வருகையை கொண்டாடும் விதமாக ஒரு பிரம்மாண்ட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஒலியுடன் கூடிய குறும்படங்கள் திரையிடப்பட்டன. இதற்காக 'க்ரோன்-மெகாபோன்' என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இது கிராமபோன் பொருத்தப்பட்ட படப் புரொஜக்டர். திரையில் படம் ஓடும்போது, அதற்கேற்ப ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒலி கிராமபோனில் ஒலிக்கும். இப்படித்தான் மெட்ராஸ்வாசிகளுக்கு ஜார்ஜின் புண்ணியத்தில் முதல் ஒலி, ஒளி சினிமாவைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இளவரசர் ஐந்தாம் ஜார்ஜ் வருகை தந்ததன் நினைவாகத்தான் இன்றைய பூக்கடை பகுதி ஜார்ஜ் டவுன் எனப் பெயர் மாற்றப்பட்டது.

ஐந்தாம் ஜார்ஜ், வேல்ஸ் இளவரசராக சென்னைக்கு வந்திருந்த போது, பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மாவைப் பார்க்க விரும்பினாராம். இதனையடுத்து அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் கேரளாவில் இருந்த ரவிவர்மாவை சென்னை வருமாறு அழைப்பு விடுத்தார். அந்த சமயத்தில், ரவிவர்மாவின் மகன் ராமவர்மா பெரியம்மை வந்து அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இருப்பினும் அரசின் அழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து ரவிவர்மா சென்னைக்கு வந்தார். மெட்ராஸ் கவர்னரையும், இளவரசரையும் தனக்கே உரிய பாணியில் தத்ரூபமாக வரைந்து கொடுத்தார். 

இரண்டு ஆண்டுகள் கழித்து 1911இல் ஐந்தாம் ஜார்ஜ், லண்டன் அரண்மனையில் மன்னராக பதவி ஏற்றுக் கொண்டார். பின்னர் அவரது விருப்பப்படியே இந்தியாவிலும் ஒரு பதவி ஏற்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக 40 நாள் பயணமாக மன்னரும், ராணியாரும் இந்தியா வந்தனர். இந்த விழாவில்தான் இந்தியாவின் தலைநகர் கல்கத்தாவில் இருந்து புதுடெல்லிக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்திய இளவரசர்கள், மாகாண கவர்னர்கள் எனப் பல பெருந்தலைகள் பங்கேற்ற அந்த நிகழ்ச்சி, 1911ஆம் ஆண்டு டிசம்பர் 12ந் தேதி வெகு தடபுடலாக நடைபெற்றது.
விழாவிற்கு வந்த இந்திய இளவரசர்கள்

மன்னரின் இந்த முடிசூட்டு விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. ராஜவிசுவாசத்தை காட்டும் வகையில், மெட்ராஸ் மாகாணத்தில் இதையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முத்தையால்பேட்டை சபா, மன்னரைப் போற்றிப் பாடும் பாட்டுப் போட்டி ஒன்றை அறிவித்தது. இதற்கு பல இடங்களில் இருந்தும் பாடல்கள் வந்து குவிந்தன. இறுதியில் ராமநாதபுரம் 'பூச்சி' ஸ்ரீனிவாச ஐயங்கார் என்பவர் தோடி ராகத்தில் எழுதிய பாடல் முதல் பரிசைத் தட்டிச் சென்றது.

இப்படி எல்லாம் கோலாகலமாக முடிசூட்டிக் கொண்டு லண்டன் திரும்பிய மன்னர் ஐந்தாம் ஜார்ஜிற்கு, அந்த மகிழ்ச்சி அதிக காலம் நீடிக்கவில்லை. 1914இல் முதல் உலக யுத்தம் ஆரம்பித்து மன்னரின் மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. நான்கு ஆண்டுகள் நீடித்த யுத்தத்தில் இறுதியில் இங்கிலாந்து வெற்றி பெற்றாலும் இதனால் ஏற்பட்ட உடல் சோர்வும், மன உளைச்சலும் மன்னர் ஜார்ஜை வாட்டி எடுத்தன.
மன்னர் ஐந்தாம் ஜார்ஜ்

1915இல் பிரான்சில் படைப்பிரிவுகளை பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது, மன்னர் ஜார்ஜ் அமர்ந்திருந்த குதிரை திடீரென அவரை கீழே தள்ளியது. அப்போது விழுந்தவர்தான், பின்னர் அவர் முழுமையாக குணமடைந்து எழவே இல்லை. அவருக்கு புகைப்பழக்கமும் இருந்ததால் சுவாசப் பிரச்னையால் அவதிப்பட்டார். 1918இல் உலகப் போர் முடிந்தாலும், நோயுடனான மன்னரின் போராட்டம் முடியவில்லை.

நுரையீரல் சவ்வு அழற்சியும் ஜார்ஜை வாட்டி எடுத்தது. இதுபோதாதென்று ரத்தமே நஞ்சாக மாறும் septicaemia என்ற நோயும் அவருக்கு இருந்தது. இவ்வளவு நோய்கள் இருந்தாலும் அவர் மன்னர் என்பதால் பெரும் பொருட்செலவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவரின் உயிரை மருத்துவர்கள் இழுத்துப் பிடித்தனர். ஆனால் எதற்கும் ஒரு முடிவு இருக்கிறது அல்லவா. அந்த முடிவு 1936, ஜனவரி 20 அன்று வந்தது. மன்னர் இறந்துவிட்டார் என இரவு 11.55 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மன்னரின் மரணம் குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் குழுவின் தலைவர் டாசன் தமது டைரியில் எழுதி வைத்திருந்தார். அந்த டைரிக் குறிப்பு 1986இல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம், மன்னரின் இறப்பு செய்தி, காலைப் பத்திரிகைகளில் வரவேண்டும் என்பதற்காகவும், முக்கியத்துவம் குறைந்த மாலைப் பத்திரிகைகளில் அச்செய்தி முதலில் வெளியானால் மன்னர் குடும்பத்திற்கு மரியாதையாக இருக்காது என்பதாலும், மன்னரின் மரணத்தை இரவுக்குள் வேகப்படுத்த தாம் சில ஊசிகளைப் போட்டதாக டாசன் அதில் தெரிவித்திருந்ததார்.

இப்படி இருபதாண்டுகளுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டு இறுதியிலும் சர்ச்சைகளை விதைத்துவிட்டு உயிரை விட்ட
மன்னர் ஐந்தாம் ஜார்ஜ்தான் இன்றும் பூக்கடை பகுதியில் சிலையாக நின்று கொண்டிருக்கிறார். செங்கோலுடன் நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் ஜார்ஜைப் பார்க்கும்போதெல்லாம், வாழ்வின் மாயக் கைகள் சூரியன் அஸ்தமிக்காத இங்கிலாந்து ஏகாதிபத்தியத்தின் அரசனையும் விட்டுவைக்கவில்லை என்ற யதார்த்தம் முகத்தில் அறைகிறது.

நன்றி - தினத்தந்தி

* துறைமுகம் பகுதியில் இருந்த மன்னர் ஜார்ஜின் சிலை, பின்னாட்களில் அகற்றப்பட்டு விட்டது. பனகல் பார்க்கில் இருந்த ஜார்ஜின் மார்பளவு சிலை திடீரென காணாமல் போய்விட்டது. ஜார்ஜின் தகப்பனாரான ஏழாம் எட்வர்டிற்கும் அண்ணா சாலையில் ஒரு சிலை இருந்தது. ஆனால் அது ஒருநாள் திடீரென அகற்றப்பட்டு அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்பட்டு விட்டது.

* வேட்டைப் பிரியரான மன்னர் ஜார்ஜ், இந்தியா வந்திருந்த போது அருகில் உள்ள நேபாளக் காடுகளில் வேட்டையாடினார். அப்போது 10 நாட்களில் அவர் 21 புலிகள், 8 காண்டாமிருகங்கள் மற்றும் ஒரு கரடி ஆகியவற்றைக் கொன்றதாக ஒரு குறிப்பு உள்ளது.

Sunday, May 12, 2013

மெமோரியல் ஹால்


நடந்து முடிந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வை நினைவு கூர்வதற்காக நினைவுத் தூண்களும், கட்டடங்களும் கட்டப்படுவதைத்தான் வரலாறு இதுவரை பார்த்திருக்கிறது. ஆனால் இதற்கு நேர் எதிராக, நடைபெறாத ஒரு விஷயத்தை நினைவுகூர மக்கள் கைக்காசைப் போட்டு கட்டடம் கட்டியது அநேகமாக மெட்ராசில் மட்டும்தான் இருக்க முடியும். அப்படி உருவானதுதான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் மெமோரியல் ஹால்.
மெமோரியல் ஹால்

இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் என்று வர்ணிக்கப்படும் சிப்பாய் கலகம், கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்திய சிப்பாய்களால் 1857ஆம் ஆண்டு, மே 10ந் தேதி, மீரட் நகரில் தொடங்கியது. ஒரு மூலையில் பற்றிய தீ மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவுவது போல, மீரட்டையும் மீறி பிற நகரங்களையும் இந்த கலகம் கபளீகரம் செய்தது. குறிப்பாக இந்தியாவின் மத்திய மலைப் பகுதிகளில் பரவிய கலகத்தில் சிப்பாய்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பலரும் பங்கெடுத்துக் கொண்டனர்.

முக்கிய கிளர்ச்சி இன்றைய உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், வடக்கு மத்தியப் பிரதேசம், டெல்லி, குர்காவுன் ஆகிய இடங்களை மையம் கொண்டிருந்தது. கிளர்ச்சியாளர்கள் கிழக்கிந்திய படையினருக்கு பெரும் சவாலாக விளங்கினர்ஓராண்டு கடும் போராட்டத்திற்கு பிறகு ஜூன் 20, 1858இல்தான் கலகத்தை முழுவதுமாக முடிவுக்கு கொண்டு வர முடிந்தது.  

இந்த கலகம் முடிவுக்கு வந்ததும், இதனை நினைவுகூறும் வகையில் லக்னோ, கான்பூர், டெல்லி போன்ற இடங்களில் நினைவகங்கள் அமைக்கப்பட்டன. காரணம், இந்த நகரங்கள் சிப்பாய் கலகத்தின் தாக்கத்தை நேரடியாக உணர்ந்தன. இந்நகரத் தெருக்களில் கலகத்தின்போது ரத்த ஆறு ஓடியது. மக்கள் பதற்றத்துடனும், பயத்துடனும் ஆங்காங்கே பதுங்கிக் கிடந்தனர். ஆனால் இந்த கலகத்தால் மெட்ராஸ் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.
கலகம் செய்த சிப்பாய் களுக்கான தண்டனை

திருவல்லிக்கேணி, ஜார்ஜ் டவுன் போன்ற ஒரு சில இடங்களில் மட்டுமே லேசான கலவரங்கள் வெடித்தன. அதுவும் உடனடியாக அடக்கப்பட்டு விட்டன. எனவே மெட்ராஸ் ராஜ்தானியில் சிப்பாய் கலகத்தால் ஒரு ஆங்கிலேய உயிர்கூட பறிபோகவில்லை. இதற்காக நிச்சயம் ஆண்டவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று சென்னையில் கூடிய ஒரு ஆங்கிலேய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து மெட்ராசில் ஒரு நினைவகம் கட்டுவது என தீர்மானிக்கப்பட்டு, அதற்காக மெட்ராசில் வசித்த ஆங்கிலேயர்களிடம் நிதி வசூலிக்கப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்கும் பொறியியல் கல்லூரியின் அன்றைய முதல்வர் கர்னல் ஜார்ஜ் வின்ஸ்காம் (Col.George Winscom) இதற்கென ஒரு அழகிய கட்டடத்தை வடிவமைத்துக் கொடுத்தார். இதனையடுத்து கட்டுமானப் பணி 1858ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால் மக்களிடம் பணம் வசூலித்து கட்ட வேண்டியிருந்ததால், பணி மெல்ல ஆமை வேகத்தில் நடைபெற்றது. இதனிடையே கர்னல் ஹார்ஸ்லி என்பவர் வின்ஸ்காமின் வடிவமைப்பில் சில பல மாற்றங்களை செய்ய, ஒருவழியாக 1860களின் தொடக்கத்தில் இந்த பணி நிறைவடைந்தது.

இப்படித்தான் மெட்ராசிற்கு மெமோரியல் ஹால் என்ற அழகிய கட்டடம் கிடைத்தது. உயரமான மேடை, அதன் மீது ஐயானிக் பாணியில் பிரம்மாண்ட தூண்களுடன் கூடிய போர்ட்டிக்கோ என மிக நேர்த்தியாக கட்டப்பட்ட மெமோரியல் ஹால், மெட்ராசின் அழகிய கட்டடங்களுள் முக்கியமானதாக கருதப்படுகிறது. கட்டடத்தின் முகப்பில், ஆண்டவருக்கு நன்றி சொல்லும் வகையில் “The Lord has been Mindful of us: He will bless us.” என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டன.

ஆரம்ப நாட்களில் இந்த கட்டடம் பைபிள் பிரசங்கங்கள், கிறிஸ்துவக் கூட்டங்கள் போன்றவற்றிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. மெட்ராசின் பைபிள் சொசைட்டி இந்த கூட்டங்களை ஏற்பாடு செய்தது. பின்னர் காலப்போக்கில் இந்த அரங்கு, ஆடைகள் விற்பனைக் கண்காட்சி, கைவினைப் பொருள் கண்காட்சி என பல்வேறு பயன்பாடுகளுக்காக வாடகைக்கு விடப்பட்டது.

இதன் எதிரில் அரங்கேறும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் காரணமாக, 150 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் இந்த ஹால் தினமும் செய்திகளில் அடிபடுகிறது. இந்தியர்களிடையே எழுந்த ஒரு பெரிய புரட்சியால் பாதிக்கப்படவில்லை என்பதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கட்டப்பட்ட கட்டடம், இன்று தினமும் புரட்சி முழக்கங்களை கண் எதிரில் பார்த்துக் கொண்டிருக்கிறது. வரலாறு விசித்திரமானது என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சியம் வேண்டும்?

நன்றி - தினத்தந்தி

* மெமோரியல் ஹால் வளாகத்தில் அருகிலேயே பாரம்பரிய பாணியில் ஒரு கட்டடம் கட்டப்பட்டது. இதுதான் கிறிஸ்துவ இலக்கிய சங்கத்தின் தலைமையகமாக இருந்தது. இந்த பழைய கட்டடம் சில ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டு தற்போது அங்கு ஒரு புதிய கட்டடம் முளைத்திருக்கிறது.

Saturday, May 4, 2013

மெட்ராஸ் பரதேசிகள்


மெட்ராஸ் மண்ணில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் பரதேசியாய், அடிமையாய் கப்பல்களில் கொத்து கொத்தாக அடைத்து அனுப்பப்பட்ட எளிய மனிதர்களின் கதை நம்மில் பலரும் அறியாதது. மெட்ராஸ் மாநகரின் வரலாறு அவர்களின் வலி நிறைந்த வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து கிடக்கிறது.

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பிருந்தே அடிமை முறை இருந்திருக்கிறது. ஆனால் வேலைக்காக அடிமையை வாங்குவது, கொத்தடிமையாக வெளிநாடுகளுக்கு அனுப்புவது போன்ற பழக்கமெல்லாம் ஐரோப்பியர்கள் வந்த பிறகுதான் தொடங்கியது. ஆங்கிலேயர்கள், போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் என அனைவரும் இந்த அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆரம்ப நாட்களில் கிழக்கிந்திய கம்பெனியினர் ஆப்ரிக்க நாடுகளில் அடிமைகளை வாங்கி கீழை நாடுகளில் தோட்ட வேலைக்காக அனுப்பி வைத்தனர். அந்நாட்களில் ஆப்ரிக்காவில் இருந்து புறப்படும் அனைத்து கப்பல்களிலும் வணிகப் பொருட்களோடு சேர்த்து அடிமைகளும் ஏற்றப்பட்டனர். கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் மெட்ராசில் கோட்டை கட்டி குடியேறியதும், ஆப்ரிக்காவில் செய்த வேலையை இங்கும் செய்யத் தொடங்கினர்.

ஜனவரி 5, 1641இல் மைக்கேல் என்ற கப்பலில் 14 மலபார் (தமிழ்) நாட்டு மனிதர்களை அடிமைகளாக அழைத்துச் சென்றதாக ஒரு குறிப்பு சொல்கிறது. இதுபோன்று அடிமைகளாக செல்பவர்களின் கூலி, அவர்கள் செல்லும் நாட்டில் உள்ள உள்நாட்டுத் தொழிலாளர்களின் கூலியை விட மூன்று மடங்கு குறைவானதாக இருந்தது.
பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள்

இந்தியாவின் தென்பகுதியில் மெட்ராஸ் துறைமுகத்தில்தான் அடிமை வணிகம் அமோகமாக நடைபெற்றது. மெட்ராஸில் அடிமை வணிகத்திற்கு நிறைய சலுகைகள் அளிக்கப்பட்டதே இதற்குக் காரணம். அடிமைகளுக்கான சுங்க வரி மற்ற துறைமுகங்களை விட மெட்ராசில் குறைவு. 1711ஆம் ஆண்டு நிலவரப்படி, ஒரு அடிமைக்கு 6 ஷில்லிங்கு, 9 பென்ஸ் அதாவது இந்திய மதிப்பில் 8 அணா, சுங்க வரியாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணம் கிழக்கிந்திய கம்பெனி, நீதிபதி மற்றும் வேலையாட்கள் இடையே பகிர்ந்து கொள்ளப்பட்டது.

இந்த குறைவான சுங்க வரி காரணமாக ஆங்கிலேயர்கள் மட்டுமின்றி டச்சுக்காரர்கள் கூட மெட்ராஸ் துறைமுகம் வழியாகவே தங்களின் அடிமை வியாபாரத்தை நடத்தினர். அடிமைகளைப் பிடிப்பதற்காக அவர்கள் மெட்ராஸில் தனியாக புரோக்கர்களை வைத்திருந்தனர். அதெல்லாம் சரி, இவர்களிடம் அடிமைகளாக, முன்பின் தெரியாத நாட்டிற்கு செல்ல உள்நாட்டு மக்கள் எப்படி சம்மதித்தார்கள் என்று ஒரு கேள்வி எழுகிறது.

மெட்ராசில் ஏற்பட்ட கடுமையான பஞ்சங்கள் தான் இதற்கு பதில். 1646இல் ஒரு பயங்கரப் பஞ்சம் மெட்ராஸை பந்தாடியது. சொந்த மண்ணில் சோற்றுக்கு இல்லாமல் சாவதைவிட, எங்கோ சென்று அடிமையாக உயிரைத் தக்கவைத்துக் கொள்வதே மேல் என மக்கள் முடிவுக்கு வந்தனர். அப்படி பஞ்சத்தால் நொந்துபோன மக்களை, இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கு ஆங்கிலேயர்கள் அடிமைகளாக அனுப்பி வைத்து காசு பார்த்தனர்.

பஞ்சம் போன பிறகும் மெட்ராசில் அடிமை வியாபாரம் தொடர்ந்தது. அடிமைகள் கிடைக்காதபோது, குழந்தைகளையும், பெண்களையும் திருடி விற்கும் அயோக்கியத்தனங்கள் அரங்கேறின. மெட்ராசில் தங்கியிருந்த வெனிஸ் நகரத்து வியாபாரியான நிகோலஸ் மானுச்சி தமது நூலில் இதுபற்றி குறிப்பிட்டிருக்கிறார். 'ஒரு இத்தாலிய கிறிஸ்துவ மத போதகர், தரங்கம்பாடியில், மதுரை வாழ் இந்தியக் கிறிஸ்துவரை ஏமாற்றி அவரது மனைவியையும், நான்கு மகன்களையும் 30 பகோடாக்களுக்கு விற்றுவிட்டார்' என்று அவர் தமது நூலில் பதிவு செய்திருக்கிறார்.

அடிமை வியாபாரத்திற்கு ஆங்கிலேயர்கள் மத்தியிலேயே எதிர்ப்பு கிளம்பியபோதும், இதன் மூலம் நிறைய பணம் கிடைத்ததால், கிழக்கிந்திய கம்பெனி இதனை கண்டும்காணாமல் இருந்தது. அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டதாக யாராவது பிடிபட்டால் பெயரளவில் ஒரு சிறிய தண்டனையை கொடுத்து பிரச்னையை அதோடு முடிக்கப் பார்த்தது.

1682இல் தான் அடிமை வியாபாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கம்பெனி உண்மையிலேயே யோசிக்க ஆரம்பித்தது. இதற்காக ஆங்கிலம், போர்ச்சுகீஸ், தமிழ், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி இனிமேல் யாரேனும் அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டால் 50 பகோடாக்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இப்படி வசூலிக்கப்படும் பணத்தில் மூன்றில் ஒரு பங்கு, இதுகுறித்து துப்பு கொடுத்தவருக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த அறிவிப்பு வெளியான ஐந்தாவது ஆண்டு (1687இல்) மெட்ராசில் மீண்டும் பஞ்சம் வந்தது. கம்பெனியின் தடையையும் மீறி மீண்டும் அடிமை வியாபாரம் களைகட்டத் தொடங்கியது. இதைத் தடுக்க முடியாது என்பதை உணர்ந்துகொண்ட கம்பெனி, ஏற்றுமதி செய்யப்பட்ட ஒவ்வொரு அடிமைக்கும் ஒரு பகோடா சுங்கம் வசூலித்து கஜானாவை நிரப்பிக் கொண்டது.
கப்பலில் செல்லும் அடிமைகள்

பஞ்சத்தின் கொடுமை சற்று தீர்ந்ததும், 1688இல் அடிமை வணிகத்திற்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே அடிமைகளை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டிருந்தவர்கள் கடுப்பு காட்டியதால், அடிமைத் தடுப்புச் சட்டம் சற்றே தளர்த்தப்பட்டது. அடிமைகளை ஏற்றுமதி செய்யும்முன் நீதிபதியிடம் உத்தரவு பெற வேண்டும், தவறான முறையில் அடிமைகளை கொண்டு வரவில்லை என்றும், அவர்களுக்கு வேறு யாரும் சொந்தம் கொண்டாடவில்லை என்றும் தெரிந்த பிறகுதான் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தாலும் அடிமை வியாபாரம் கனஜோராக நடைபெற்றது. காரணம், இதில் புழங்கிய அபரிமிதமான காசு.

பின்னர் மக்கள் மத்தியில் கம்பெனிக்கு இதனால் கெட்டப் பெயர் ஏற்படுகிறது என்பது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதால் அடிமை வியாபாரத்தை ஒரேயடியாக ஒழிக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி அடிமை வியாபாரத்திற்கு முதலில் முடிவு கட்டிய பெருமையும் மெட்ராஸையே சாரும். மெட்ராஸ் துறைமுகத்தில் அடிமை வியாபாரம் அடியோடு தடை செய்யப்பட்ட பிறகும், இந்தியாவில் இருந்த டச்சு, ஃபிரெஞ்சு மற்றும் போர்த்துகீசியத் துறைமுகங்களில் இந்த வணிகம் தொடர்ந்தது.

நன்றி - தினத்தந்தி

* அடிமைகளாக சென்ற தமிழர்கள்தான் சுமத்ரா, ஜாவா ஆகிய நாடுகளில் நெல் சாகுபடியை அறிமுகப்படுத்தினர்.

* டெய்லர் என்பவர் நீதிபதியாக இருந்தபோது, கப்பலில் கடத்தப்பட இருந்த 20 பையன்களையும், 21 பெண் குழந்தைகளையும் மீட்டார். அவர்கள் கிழக்கிந்திய கம்பெனியால் இரண்டரை ஆண்டுகள் பராமரிக்கப்பட்டனர்.