என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, December 29, 2012

மெட்ராஸ் - பெயர் வந்த கதை


நீங்கள் மெட்ராஸ்காரரா, சென்னைக்காரரா என யாராவது கேட்டால் அவர்களை ஏற இறங்கத்தான் பார்க்கத் தோன்றும். ஆனால் மெட்ராஸ், சென்னை ஆகியவை இரண்டு தனித்தனிப் பகுதிகள் என்பதுதான் உண்மை. இந்த இரண்டின் பெயருக்குப் பின்னாலும் ஏராளமான கதைகள் இருக்கின்றன.

மெட்ராசை மெட்ராஸ்பட்னம், மதராபட்னம், மத்ராஸ்படான், மதராஸ்படம், மதரேஸ்பட்னம், மத்தராஸ், மதராஸ், மதரேஸ்படான், மதராஸாபடான், மாத்ரிஸ்பட்னம், மதேராஸ், மதிராஸ் என ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும், டச்சுக்காரர்களும், போர்த்துகீசியர்களும் அவரவர் வசதிக்கேற்ப அழைத்திருக்கிறார்கள்.

1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி, பிரான்சிஸ் டே என்ற கிழக்கிந்திய கம்பெனி ஏஜெண்ட் சோழமண்டலக் கடற்கரையில் ஒரு துண்டு பொட்டல் நிலத்தை வாங்கினார். பிரிட்டீஷார் அந்த இடத்தில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டினர். கோட்டையை சுற்றி மெல்ல வளர்ந்து விரிவடைந்ததுதான் இன்றைய சென்னை மாநகரம். இதுதான் சென்னையின் 'சுருக்' வரலாறு.
அந்தக்கால மெட்ராஸ்

பிரான்சிஸ் டே வாங்கிய நிலம், சில மீனவக் குடும்பங்களும், இரு பிரெஞ்சு பாதிரியார்களும் வசித்த சிறிய கிராமத்திற்கு தெற்கே இருந்தது. அந்த கிராமத்தின் ரோமன் கத்தோலிக்க தலையாரியின் பெயர் மாதராஸன் என்றும், எனவே அந்த கிராமம் மாதராஸ்பட்னம் என்றும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தலையாரியின் வாழைத் தோட்டத்தை, தொழிற்சாலை அமைப்பதற்காக டே வாங்கினார். நிலத்தை கொடுக்க அவர் முரண்டு பிடித்ததால், அங்கு அமையவிருக்கும் தொழிற்சாலைக்கு மாதராஸன்பட்னம் எனப் பெயரிடுவதாக வாக்களித்து, டே நிலத்தை வாங்கியதாக சொல்லப்படுகிறது.

மதராஸ் என பெயர் வந்ததற்கு வேறு ஒரு சுவையான காரணமும் கூறப்படுகிறது. ஆங்கிலேயர்களுக்கு முன்பே சாந்தோம் பகுதியில் போர்த்துகீசியர்கள் வசித்து வந்தனர். இங்கு பிரான்சிஸ் டேவிற்கு ஒரு காதலி இருந்தார். காதலிக்கு அருகிலேயே வசிக்க வேண்டும் என்பதாலேயே டே அந்த துண்டு நிலத்தை தேர்வு செய்தார் என்று ஒரு கதை உள்ளது. டேவின் காதலி சாந்தோமில் அந்நாட்களில் செல்வாக்குடன் வாழ்ந்துவந்த மாத்ரா குடும்பத்தை சேர்ந்தவர். கடற்கரை ஓரத்தில் இருந்த நிறைய குப்பங்கள் அவர்களுக்கு சொந்தமாக இருந்தன. எனவே, டே தனது காதலியின் குடும்பப் பெயரை இந்நகருக்கு சூட்டியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

1909இல் மெட்ராஸ் வரைபடம்

எக்மோர் ஆற்றுக்கும் கூவம் ஆற்றுக்கும் இடையில் இருந்த நிலம்சந்திரகிரி ராஜாவிற்கு சொந்தமானது. அதனை வாங்க அவரது உள்ளூர் நாயக்குகளான தாமர்லா சகோதரர்களிடம் பிரான்சிஸ் டே பேரம் பேசினார். அவர்கள் தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கரின் பெயரை, புதிதாக அமையவிருக்கும் குடியிருப்புக்கு சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் நிலத்தை கிழக்கிந்திய கம்பெனிக்கு பட்டா எழுதிக் கொடுத்ததாகவும், அதனால் அந்த பகுதிக்கு சென்னப்பட்டினம் எனப் பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆக, மதராஸபட்டினம் வடக்கிலும், சென்னப்பட்டினம் தெற்கிலும் இருந்த இருவேறு பகுதிகள். பின்னர் காலப்போக்கில் இரண்டையும் ஒருங்கிணைத்து மதராஸ் என ஆங்கிலேயர்கள் அழைக்கத் தொடங்கினர்.

இவை தவிர வேறு சில காரணங்களும் கூறப்படுகின்றன. சோழமண்டல கடற்கரையில் வரும் இப்பகுதி, சோழப் பேரரசின் சிற்றரசர்களான முத்தரையர்கள்வசம் கொஞ்ச காலம் இருந்ததால், இது முத்தராசபட்டினம் என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது முத்தராசா, முத்ராஸ், மத்ராஸ் என மருவியிருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
ஆற்காடு நவாப்புகள் மதராஸ்பட்டினத்தில் இருந்த மதராஸா எனும் சமயப் பள்ளிகளுக்கு பல தலைமுறைகளாக காப்பாளர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். மதராஸா என்றால் சமயப்பள்ளி என்று பொருள். அதனால் மதராஸா என்ற சொல்லில் இருந்துதான் மதராஸ் எனும் பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள்.

இதேபோன்று சென்னை பெயருக்கு பின்னாலும் பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஒருகாலத்தில் சென்னையைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகள் செம்மை நிறத்தில் காணப்பட்டன. அதனால் அந்தப் பகுதிக்கு செம்மை என்று பெயர் வைக்கப்பட்டது. நாளடைவில் செம்மை என்பது சென்னையாக மாறிப்போனது என்பது ஒரு கருத்து.

ஆரம்ப நாட்களில் ஜார்ஜ் கோட்டைக்குள்தான் காளிகாம்பாள் கோயில் இருந்தது. பின்னர்தான் தம்பு செட்டித் தெருவிற்கு அம்மன் இடம் மாறினாள். ஏற்கனவேகோட்டைப் பகுதிக்குள் இருந்ததால் கோட்டையம்மன் என்ற பெயரும் அவளுக்கு உண்டு. இந்த காளிகாம்பாளுக்கு பக்தர்கள் செந்தூரம் பூசி வழிபட்டதால், சென்னம்மன்’ என்று அழைத்தார்கள். ‘சென்னம்மன்’ குடியிருக்கும் இடம் படிப்படியாக வளர்ச்சி கண்டது. நாளடைவில் சென்னம்மன் சென்னையாக மாறியதாக ஒரு தரப்பினர் சொல்கின்றனர். சென்னம்மன் என்பதை 'செம் அன்னை' என்றும் சிலர் அழைத்தனர். இந்தச் செம் அன்னை தான் சென்னை என மாறியதாகவும் கூறப்படுகிறது.

சென்னைப் பகுதியில் சென்னக் கேசவப் பெருமாள் கோயில் எனும் பெயரில் ஒரு கோயில் இருந்தது. இப்போதும் இருக்கிறது. இந்தக் கோயில் நகரத்தின் முதன்முகப்பில் இருந்ததால், இக்கோயில் இருந்த நகரத்திற்கு சென்னை என்ற பெயர் வந்ததாகச் சிலர் கூறுகின்றனர். சென்னக் கேசவப் பெருமாள் என்பது சரியா, சின்னக் கேசவப் பெருமாள் என்பது சரியா எனத் தெரியவில்லை. ‘சின்ன’ என்ற சொல் ‘சென்ன’ என்று மாறிப் போனதாகவும் செய்திகள் உள்ளன.

இப்படி தனது பெயருக்கு பின்னால் ஏராளமான மர்மங்களை ஒளித்து வைத்தபடி, ஆங்கிலத்தில் மெட்ராஸ் என்றும், தமிழில் சென்னை என்றும் அழைக்கப்பட்டு வந்த இந்நகரம், இனி அனைத்து மொழிகளிலும் சென்னை என்றே அழைக்கப்படும் என 1996ஆல் தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மெட்ராஸ் அதிகாரப்பூர்வமாக சென்னை என்று பெயர் மாற்றம் பெற்றது.

நன்றி - தினத்தந்தி

* மசூலிப்பட்டணத்து ஆங்கிலேயர்கள் 1639ஆம் ஆண்டு சூரத்திற்கு எழுதிய கடிதத்தில் 'மதராசபட்டம் என்ற ஒரு இடம் செயின்ட் தோமுக்கு அருகில் இருக்கிறது' எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

* அமெரிக்காவின் ஒரெகான் மாகாணத்தில் 'மெட்ராஸ்' என்று ஒரு ஊர் இருக்கிறது. நமது மெட்ராசில் இருந்து அங்கு சென்ற துணிகளில் அச்சடிக்கப்பட்டிருந்த சொல்லில் இருந்துதான், 1903இல் அந்த ஊருக்கு இந்த பெயர் வந்தது.

Sunday, December 23, 2012

பாவப்பட்ட பிகட்


ஒருமுறை கதாநாயகன் வேடம் போட்டுவிட்டு அதே நாடகத்தில் மறுமுறை வில்லன் வேடம் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு வாழ்க்கையோடு போராடியவர்தான் சென்னையின் ஆளுநராக இருந்த ஜார்ஜ் பிகட் (George Pigot).
ஜார்ஜ் பிகட்

ஜார்ஜ் கோட்டைக்குள் இருக்கும் புனித மேரி தேவாலயத்தின் முன்புறம் ஏராளமான கல்லறைக் கற்கள் இருக்கின்றன. மெட்ராசில் வாழ்ந்து மறைந்த பல முக்கியப் பிரமுகர்களின் பரலோக விசிட்டிங் கார்டுகளைப் போல இருக்கும் இந்த கற்களின் பின்னால் ஒரு கதை இருக்கிறது.

1758-59இல் பிரெஞ்சுப் படைகள் சென்னையை முற்றுகையிட்ட போது, இன்றைய சட்டக்கல்லூரி இருக்கும் இடம் சுடுகாடாக இருந்தது. எனவே இங்கிருந்த கல்லறை மேடைகளை பீரங்கி நிறுத்தவும், கல்லறை ஸ்தூபிகளை மறைந்துகொண்டு சுடவும் பிரெஞ்சுப் படையினர் பயன்படுத்தினர். இதனால் கடுப்பான கம்பெனியினர், போர் ஓய்ந்ததும் இந்த கற்களை அகற்றி புனித மேரி தேவாலயத்தின் முற்றத்தில் பதித்துவிட்டனர். மற்றபடி தேவாலய வளாகத்திற்குள் புதைக்கப்பட்டவர்கள் வெகு சிலரே. அப்படி தேவாலயத்திற்குள்ளேயே புதைக்கப்பட்ட முதல் நபர் ஜார்ஜ் பிகட்தான்.

பதினேழு வயது சிறுவனாக எழுத்தர் வேலை பார்ப்பதற்காக இங்கிலாந்தில் இருந்து மெட்ராசிற்கு வந்தவர்தான் பிகட். கடின உழைப்பு அவரை 36 வயதில் மெட்ராசின் ஆளுநர் ஆக்கியது. இவர் ஆளுநராக இருந்தபோதுதான் பிரெஞ்சுப் படைகள் தளபதி லாலி தலைமையில் ஜார்ஜ் கோட்டையை முற்றுகையிட்டன. 65 நாட்கள் நீடித்த இந்த முற்றுகையை பிகட் திறமையாக சமாளித்தார்.

போர் முடிந்ததும் மெட்ராசின் வளர்ச்சிப் பணிகளிலும் பிகட் மும்முரமாக ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து திரும்ப முடிவெடுத்த அவர், தமது 45வது வயதில் பதவியைத் துறந்துவிட்டு தாயகத்திற்கு கப்பல் ஏறினார். அவரின் சேவையைப் பாராட்டி, அயர்லாந்தின் பிரபுப் பட்டம் வழங்கப்பட்டது. இந்தியாவில் சேர்த்த 45 லட்சம் ரூபாய் பணத்தைக் கொண்டு, அயர்லாந்தில் சொகுசான எஸ்டேட்டில் கடைசி காலத்தில் ஹாயாக ஓய்வெடுக்கலாம் என்று பிகட் நினைத்தார். ஆனால் விதி வேறுவிதமாக நினைத்தது.

12 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடுவதற்கு அவருக்கு அழைப்பு வந்தது. இந்த அழைப்பின் பின்னால் இருக்கும் ஆபத்து தெரியாமல் பிகட் இதனை ஏற்றுக் கொண்டார். மீண்டும் ஆளுநராக பதவி ஏற்பதற்காக மெட்ராஸ் வந்து இறங்கினார். ஆனால் மெட்ராஸ் வெகுவாக மாறியிருந்தது. இங்கிருந்த அரசியல் சூழலும் அதற்கேற்ப பல்வேறு மாற்றங்களை சந்தித்திருந்தது.

இந்த மாற்றங்களை ஏற்க மறுத்ததுதான் பிகட்டின் ஏமாற்றங்களுக்கான தொடக்கமாக அமைந்தது. முதல் முறை ஆளுநராக இருந்தபோது பிகட்டிற்கு உதவி செய்ய, உறுதுணையாக நிற்க நிறைய நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் பிகட்டோடு சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்கியவர்கள், சம வயதுக்காரர்கள். ஆனால் இம்முறை பிகட் தனி மரமாக நின்றார். வயோதிகம் அவரை சற்று சிடுசிடுப்பு மிக்கவராகவும் மாற்றியிருந்தது.

வந்த உடனேயே இங்கிருந்த கவுன்சிலர்களோடு மோதினார். விளைவு சில மாதங்களிலேயே பலரின் பகையை சம்பாதித்துக் கொண்டார். முதல்முறை ஆளுநராக இருந்தபோது தனது உத்தரவுகளை நிறைவேற்ற ஆட்கள் அடித்துப் பிடித்து ஓடுவதைப் போல இப்போதும் நடக்கும் என பிகட் எதிர்பார்த்தார். ஆனால் அவரவர் தங்கள் அதிகாரங்களை நிலைநிறுத்துவதிலும், இந்திய ராஜாக்களின் சண்டையில் எப்படி ஆதாயம் அடையலாம் என கணக்குப் போடுவதிலும் மும்முரமாக இருந்ததால் இவரது ஆணைகளை காது கொடுத்துக் கூட கேட்கவில்லை.

கடுப்பாகிப் போக பிகட் ஒருகட்டத்தில் சில கவுன்சிலர்களை கைது செய்ய உத்தரவிட்டார். ஒருமுறை கோபத்தின் உச்சிக்கு போய் கோட்டையின் தளபதியையே கைது செய்யச் சொன்னார். ஆனால் கவுன்சிலர்கள் ஒன்றுகூடி முடிவெடுத்து பிகட்டை கைது செய்துவிட்டனர். இரவு விருந்து ஒன்றில் கலந்துகொள்வதற்காக குதிரை வண்டியில் சென்றுகொண்டிருந்த பிகட்டை திடீரென சிலர் வழிமறித்தனர். என்ன நடக்கிறது என சுதாரிப்பதற்குள் செயின்ட் தாமஸ் மலையில் உள்ள வீடு ஒன்றிற்கு அழைத்துச் சென்று சிறை வைத்துவிட்டனர்.
கைது செய்யப்படும் பிகட்

சுமார் ஒன்பது மாதங்கள் அந்த வீட்டுச் சிறையில் இருந்த பிகட் உடல்நலம் குன்றியதால் அரசு இல்லத்திற்கு மாற்றப்பட்டார். ஆனாலும் உடல்நலனில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் 1777ஆம் ஆண்டு ஒருநாள் திடீரென உயிரை விட்டார். பிகட்டின் உடலை சிறப்பு (!) மரியாதைகளுடன் புனித மேரி தேவாலயத்திற்குள் புதைத்துவிட்டனர்.

இதனிடையே பிகட்டை சிறை வைத்தது குறித்த விசாரணை இங்கிலாந்தில் நடைபெற்றது. இறுதியில் பிகட்டை சிறை வைத்த 7 கவுன்சிலர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். நான்கு பேருக்கு தலா ஆயிரம் பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டது. பிகட்டிற்கு மீண்டும் ஆளுநர் பதவி அளிக்க வேண்டும், அதனை அவரே ராஜினாமா செய்வார் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த உத்தரவு ஊரெல்லாம் சுற்றிக் கொண்டு இந்தியா வருவதற்குள் பிகட் உலகை விட்டே போய்விட்டார்.

இறுதியில், என்னதான் திறமைசாலியாக இருந்தாலும் மாற்றங்களை ஏற்க மறுத்தால் ஒருவனின் நிலை என்னவாகும் என்பதற்கு உதாரணமாகிவிட்டார் லார்ட் பிகட்.

நன்றி - தினத்தந்தி

* பிகட் திருமணம் செய்துகொள்ளவில்லை. இருந்தாலும் அவருக்கு நிறைய குழந்தைகள் இருந்தனர்.

* பிகட்டிடம் ஒரு விசேஷமான வைரம் இருந்தது. அது அந்த காலத்தில் பிகட் வைரம் என்றே அழைக்கப்பட்டது.

Saturday, December 15, 2012

மெட்ராஸ் பாஷை


இன்னாபா... ஷோக்கா கீறியா?... நாஸ்டா துன்னுக்கினியா? என்று யாராவது விசாரித்தால் மெர்சலாகிவிடாதீர்கள்.. அதாவது மிரண்டு விடாதீர்கள். அக்மார்க் மெட்ராஸ்வாசிகளின் அன்பின் வெளிப்பாடாக கரைபுரண்டு வரும் வார்த்தை வெள்ளத்தின் நட்புத்துளிகள்தான் அவை. மூன்றரை நூற்றாண்டுகளைக் கடந்துவிட்ட மெட்ராஸ் மாநகரின் அடையாளங்களில் மிகவும் முக்கியமானது இந்த மெட்ராஸ் பாஷை.

மெட்ராஸ் பாஷையின் அழகே அதன் வேகமும், எளிமையும்தான். ஆங்கிலம், தெலுங்கு, உருது என இந்த பகுதியில் புழங்கிய அனைத்து மொழிகளிலும் கொஞ்சம் கொஞ்சம் பிய்த்து எடுத்து தமிழோடு பிசைந்து உருவாக்கிய கூட்டாஞ்சோறு மொழிதான் மெட்ராஸ் பாஷை. எவ்வளவு பெரிய சொற்றொடரையும் அப்படியே நசுக்கி பிசுக்கி ஒற்றைச் சொல்லாய் வார்த்து எடுக்கிற வார்த்தைச் சித்தர்களால் உருவானதுதான் இந்த அழகிய மொழி.
மெட்ராஸ் பாஷையின் வாத்தியார்கள்
உதாரணத்திற்கு, 'இங்கே அழைத்துக் கொண்டு வந்து விடு' என்பதை மெட்ராஸ் பாஷையில் ரத்தினச் சுருக்கமாக 'இட்டாந்துடு' என்று சொல்லிவிடலாம். அதேசமயம் 'இட்டுக்குனு வா' என்பதற்கும் 'இஸ்துகுனு வா' என்பதற்கும் கடலளவு வித்தியாசம் இருக்கிறது. முன்னது அழைத்துக் கொண்டு வருவது, பின்னது இழுத்துக் கொண்டு வருவது. இந்த வார்த்தை விளையாட்டுகள் தமிழோடு நின்றுவிடுவதில்லை. ஆங்கிலத்தின் பங்களிப்பும் இதில் பெருமளவு இருக்கிறது.

அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்களோடு அதிகம் பழகிய ரிக்ஷாக்காரர்கள்தான் மெட்ராஸ் பாஷையின் வாத்தியார்கள். உன்னோட படா பேஜாரா பூட்ச்சுபா... என அலுத்துக் கொள்பவர்கள் அதற்குள் ஒரு ஆங்கிலச் சொல் இருக்கிறது என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் இருந்து கப்பலில் வந்திறங்கும் ஆங்கிலேயர்களை, இன்று வெளியூர்வாசிகளை ஆட்டோக்காரர்கள் கையைப் பிடித்து இழுப்பதைப் போல, ரிக்ஷாக்காரர்கள் அன்புத் தொல்லையில் பிய்த்தெடுத்திருக்கிறார்கள். இதனால் கடுப்பாகும் சில ஆங்கிலேயர்கள் dont badger me (என்னை நச்சரிக்காதே) என்று சொல்லி தவிர்த்திருக்கிறார்கள். வெள்ளைக்காரன் சொன்ன அந்த badger-ஐ, நம்ம ரிக்ஷாக்காரர்கள் அப்படியே தங்களின் குப்பத்திற்கு எடுத்துச் சென்று பேஜார் ஆக்கிவிட்டார்கள். இவை போக பக்கெட்டு (BUCKET), பாமாயிலு (PALM OIL), பிஸ்கோத்து (BISCUIT), என நிறைய சொற்களை அப்படியே ஆங்கிலத்தில் இருந்தும் எடுத்தாண்டு கொண்டு இருக்கிறார்கள்.

ஆங்கிலம் மட்டுமின்றி மற்ற மொழிகளும் மெட்ராஸ் பாஷையில் கலந்திருக்கின்றன. 'பஜாரி' என்ற சொல் உருது மொழியில் இருந்து உருவானது. உருதுவில் பஜார் என்றால் சந்தை என்று அர்த்தம். இதனால் சந்தைக்கடையில் நின்று சத்தம் போடுபவள் பஜாரி ஆகிவிட்டாள். ஆனால் பஜாரன் என்று ஒரு சொல் இல்லை. ஆக இதிலும் ஆணாதிக்கம் இருந்திருக்கிறது என்பதை கவனிக்கவும். பேக்கு என்பது கூட உருதுவில் இருந்து வந்ததுதான். பேவ்கூஃப் என்றால் உருது மொழியில் முட்டாள் என்று அர்த்தம். சென்னைவாசிகள் இந்த பேவ்கூஃபைத் தான் சுருக்கி பேக்கு என்று ஆக்கிவிட்டார்கள். இப்படி ஒவ்வொரு சொல்லுக்கு பின்னும் ஒரு மொழியியல் வரலாறே இருக்கிறது.

சென்னையின் ஒரு பகுதியில் மட்டும் புழங்கிக் கொண்டிருந்த இந்த பாஷையை நாடறியச் செய்த பெருமை தமிழ் திரையுலகிற்கு உண்டு. எம்.ஆர். ராதா, சந்திரபாபு, தேங்காய் சீனிவாசன் தொடங்கி லூஸ் மோகன், கமலஹாசன் வரை பலரும் இந்த பாஷையைப் பேசி இதன் பெருமையை பறைசாற்றி இருக்கிறார்கள். 'வா வா வாத்யாரே ஊட்டாண்ட..' என்ற மெட்ராஸ் பாஷை பாடல் தமிழகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் அலறியது.

ஜெயகாந்தன் போன்றவர்கள் இதே பணியை எழுத்து மூலம் செய்திருக்கிறார்கள். ஜெயகாந்தனின் 'சினிமாவுக்கு போன சித்தாளு' பேசிய பல சொற்கள் இன்று வழக்கத்தில் இருந்து மறைந்துவிட்டன. ஆனால் இன்றும் அந்த சித்தாள் நமது நினைவுகளில் நிழலாடிக் கொண்டிருக்கிறாள்.

தமிழகத்தின் பிற பகுதியினராலும் மெட்ராஸ் பாஷை ரசிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் அதில் இருக்கும் வேகமும், ஒலிநயமும்தான். 'அடக் படக் டிமிக் அடிக்கிற டோலு மையா டப்ஸா' போன்ற சொற்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாவிட்டாலும் அந்த ஓசைநயம் கேட்பவர்களை திக்குமுக்காட வைத்துவிடுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதேபோல எவ்வளவு அரிய கருத்தையும் பாமரனுக்கும் புரியும் வகையில் பந்தி வைக்கவும் இந்த மெட்ராஸ் பாஷையால் முடிகிறது என்பது இதன் கூடுதல் பலம்.

ஆரம்ப நாட்களில் பேசப்பட்ட மெட்ராஸ் பாஷைக்கும் இன்று பேசப்படும் பாஷைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அன்று புழக்கத்தில் இருந்த பல சொற்கள் மறைந்து தற்போது அந்த இடத்தில் ஃபீல் பண்ணி, செக் பண்ணி, டிபன் பண்ணி என நிறைய பண்ணிவிட்டார்கள். ஆனாலும் புதுப்புது சொற்களை அப்படியே அல்லது சற்று நமது வசதிக்கேற்ப உருமாற்றி பயன்படுத்துவது என்ற பாரம்பரியம் மட்டும் இன்றளவும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அதனால்தான் மெட்ராஸ் பாஷை ஷோக்கா கீதுபா!

நன்றி - தினத்தந்தி


மெட்ராஸ் பாஷை அகராதியில் சில...

கில்லி - திறமையான ஆள்
ஜல்பு - ஜலதோஷம்
மட்டை - போதையில் மயங்கி விழுவது
மால் - கமிஷன்
பீட்டர் - பெருமைக்காக ஆங்கிலம் பேசுபவர்
பீலா - பொய் சொல்வது
கலீஜ் - அசுத்தம்

ஆனந்தரங்கப் பிள்ளை


நமது தாத்தாவின் டைரி திடீரென நமக்கு கிடைத்தால் எப்படி இருக்கும்? நூறு ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு நாளும் என்ன நடந்தது? மக்கள் அன்றாடம் என்ன செய்தார்கள்? அரசியல், பொருளாதார, சமூக சூழல் எப்படி இருந்தது என்பதெல்லாம் ஒரு கதை மாதிரி அதில் எழுதப்பட்டிருந்தால் எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்? அப்படி ஒரு அனுபவத்தை தேடுபவர்கள் ஆனந்தரங்கப் பிள்ளையின் டைரிக் குறிப்புகளை படிக்கலாம்.

ஆனந்தரங்கப் பிள்ளை சென்னையைச் சேர்ந்த பெரம்பூரில், சர்வதாரி ஆண்டு பங்குனித் திங்கள் 21-ஆம் நாள் சனிக்கிழமை (கி. பி. 1709) பிறந்தார். அவரது தந்தை திருவேங்கடப் பிள்ளை சிறிது காலத்துக்குப் பின் புதுச்சேரியில் குடியேறி அங்கேயே தங்கிவிட்டார். புதுச்சேரியில் இந்து சம்பிரதாயங்களுக்கு ஏற்பட்ட இடையூறுகளை எதிர்த்து போராடியதால் மக்கள் மத்தியில் கதாநாயகனாகத் திகழ்ந்த அவரை பிரெஞ்சுக்காரர்கள் உதவித் தரகராக நியமனம் செய்தனர்.

சிறிது காலத்திற்குப் பின் அவர் திவானாக உயர்ந்தார். ஆனால் சில ஆண்டுகளிலேயே திருவேங்கடப் பிள்ளை காலமானதால் அவருக்குப் பதிலாகக் கனகராய முதலியார் என்பவர் திவான் ஆனார். அவரும் கி.பி. 1746-ஆம் ஆண்டில் இறந்துவிடவே, அடுத்து திருவேங்கடப் பிள்ளையின் மகன் ஆனந்தரங்கப் பிள்ளை அந்த பதவியில் நியமிக்கப்பட்டார். திருவேங்கடம் திவானாய் இருந்தபோது ஆனந்தரங்கம் கூடவே இருந்து அவருக்கு வேண்டிய உதவிகளை செய்து வந்ததால் நன்றாக தொழில் கற்று வைத்திருந்தார். இதுவே, அவருக்குத் திவான் பதவி கிடைக்கக் காரணமாயிற்று.

புதுச்சேரியை ஆண்டுவந்த பிரெஞ்சு கவர்னர் துய்ப்ளேயின் (Marquis Joseph-Francois Dupleix) துபாஷியாக இருந்த ஆனந்தரங்கப் பிள்ளை, பிரதம மந்திரியாகவும், இராணுவ ஆலோசகராகவும், பிரெஞ்சுக்காரர்களின் வியாபாரப் பங்காளியாகவும் மெல்ல மெல்ல உயர்ந்தார். இந்த காலகட்டத்தில் 1736 முதல் 1761-ல் தான் இறக்கும்வரை அவர் நாட்குறிப்புகளை எழுதிவைத்தார். இதற்கு  'தினப்படிச் செய்திக்குறிப்பு, சொஸ்த லிகிதம்' என்று பெயரிட்டிருந்தார்.  அன்றைய அரசியல் அரங்கை அறிந்துகொள்ள இந்த குறிப்புகள் மிகவும் உதவியாக இருக்கின்றன.

நாள்தோறும் காலையில் கவர்னர் துய்ப்ளேக்ஸ் சிற்றுண்டி அருந்தியதும் ஆனந்தரங்கப் பிள்ளையைத் தமது அவைக்கு வரவழைத்து, நாட்டு நடப்புகளைப் பற்றிய செய்திகளையும் யோசனைகளையும் கேட்பதை வழக்கமாக வைத்திருந்தார். சென்னைப் பட்டணத்தின் மீது பிரெஞ்சு துருப்புகள் படையெடுத்த போது, அதனை துயிப்ளே ஆனந்தரங்கப்பிள்ளையிடம் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார். "பூந்தமல்லி சீமை வகையிரா, மயிலாப்பூர் உள்பட பரங்கிமலை பெரிய மலை, சின்ன மலை வகையிரா கொள்ளையிட்டார்கள். கொள்ளையிட்டவர்களுக்கு விஸ்தாரமாய் தினுசுகள், தானியங்கள், மாடுகள் வகையிரா அகப்பட்டதெல்லாம் அங்கங்கே தானே சரிப்போனபடிக்கெல்லாம் வித்துப் போடுகிறார்களாம். ஆனால் நம்முடவர்களுக்கு கொள்ளை நன்றாய் வாய்க்குது. ஒவ்வொருத்தன் கூலிக்காறன் கூட ஆஸ்திக்காறனாக சுகப்பட்டார்கள்".

இதன் விளைவாகக் குடிமக்கள் அங்குமிங்கும் இடம்பெயர்வதை, "தாமரை யிலையிலே யிருக்கிற செலம் மூலைக்கி மூலை ஆதரவன்றி யிலே ஓடி தளும்புகிறாப் போலே செனங்களும் அலையுறார்கள்" என்று ஆனந்தரங்கப்பிள்ளை கூறியிருக்கிறார். அவரின் நாட்குறிப்புகளின் பெரும்பகுதி வணிகச் செய்திகளையே விவரிக்கின்றன. நீதி வழங்கல், தண்டனை அளித்தல் ஆகிய செய்திகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

1748ஆம் ஆண்டு செப்டம்பரில் புதுச்சேரி நகரை சென்னையிலிருந்து வந்த ஆங்கிலப்படை முற்றுகையிட்டுப் பீரங்கிகளால் தாக்கியது. இதுபற்றி 1748 செப்டம்பர் 9ம் நாள் எழுதிய நாட்குறிப்பில் ஆனந்தரங்கம் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.
"மற்றபடி அவன் (இங்கிலீஷ்காரன்) போட்ட தீக்குடுக்கைகள் எல்லாம் நாற்பதுக்கும் உண்டு. இந்த தீக்குடுக்கை 1-க்கு சிறிது நூற்றைம்பது ராத்தல் முதல் இருநூத்தி பத்து, பதினைந்து மட்டுக்குமிருக்கிறது. இது வரும்போது ஒரு சோதி போல புறப்படுகிற வேடிக்கையும், அப்பாலே மெள்ள அசைந்து அசைந்து கொண்டு அப்பாலே விழுந்தவுடனே வெடிக்கிற வேடிக்கையும், பார்க்கிறதற்கு ஒரு வேடிக்கையாகத் தானே இருந்தது. இத்தனை தீக்குடுக்கை விழுந்தும் ஒரு மனுஷருக்குச் சேதமில்லை. ஒருத்தருக்கும் காயம் பட்டதுமில்லை. சுட்டதும் ஒரு சப்தம், புறப்படும்போது ஒரு சூரியன் தோன்றுகிறதென்று வருகிறாப் போலே வருகிறது. வருகிறது வெகு சப்தத்துடனே வருகிறதுமல்லாமல் வெகு தொந்தியுள்ளவன் நடக்க மாட்டாமல் மெள்ள வருவானே அப்படி வருகிறபடியினாலே சமீபத்திலே வரும்போது மனுஷர் தப்பித்துக்கொள்ள விலகிப் போகலாமென்று வெகு பேருக்கெல்லாம் தைரியமுண்டாகி தீக்குடுக்கையென்றால் அதை சட்டை பண்ணி அது வருகிறதோ போகிறதா என்கிறதுகூட கேழ்க்கிறதுகூட விட்டுவிட்டார்கள். ஆனாலின்றையதினம் பயந்தவர்களுக்குள்ளே வெள்ளைக்காரர் வெள்ளைக்கார்ச்சிகளுக்கு நம்முடைய தமிழர்கள் வெகு தைரியவான்களென்று நூறு தரம் சொல்லலாம்." இவ்வாறு சுவையான பல்வேறு செய்திகள் ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ளன.

தமிழ், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு, சம்ஸ்கிருதம், போர்ச்சுகீசு எனப் பல மொழிகளை அறிந்து வைத்திருந்த ஆனந்தரங்கப் பிள்ளை, தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாப சிம்ம மகாராஜாவுக்கு கடன் கொடுக்கும் அளவுக்கு பெரும் பணக்காரராகத் திகழ்ந்தார். தென்னிந்திய அரசியலில் சாணக்கியராகத் திகழ்ந்த அவர் "ஆனந்த புரவி" என சொந்தமாக கப்பல் ஒன்றையும் வைத்திருந்தார். கலைஞர்களை ஆதரித்த ஆனந்தரங்கப் பிள்ளையைப் புகழ்ந்து நிறைய பாடல்களும் எழுதப்பட்டிருக்கின்றன.

ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்புகளை 1846-ல் கலுவா-மொம்பிரேன் (Gallois-Montbrun) என்ற வருவாய் அதிகாரிதான் முதலில் கண்டெடுத்து பிரதியெடுத்தார். இப்படித்தான் இந்த அரிய வரலாற்றுப் பொக்கிஷம் வெளி உலகிற்கு தெரியவந்தது. ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பைப் படிக்கும்போது, 18ஆம் நூற்றாண்டு ஆங்கிலேய - பிரெஞ்சு இந்தியா அப்படியே ஒரு திரைப்படம் போல கருப்பு வெள்ளையில் நம் கண்முன் ஓடுகிறது.

நன்றி - தினத்தந்தி

* பல்லக்கில் மேள வாத்தியத்தோடு கவர்னர் மாளிகையினுள் போகவும், தங்கப் பிடியிட்ட கைத்தடி வைத்திருக்கவும், பாதரட்சை அணிந்து கவர்னரின் அலுவலகத்திற்குச் செல்லவும் ஆனந்தரங்கப் பிள்ளைக்கு சிறப்பு உரிமை அளிக்கப்பட்டிருந்தது.

* ஆனந்தரங்கப் பிள்ளையின் சுவாரஸ்யமான வாழ்க்கை வரலாறு ரா.தேசிகன் என்பவரால் எழுதப்பட்டு 1941-ல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. 

திருவல்லிக்கேணி பெரிய தெரு


வெள்ளைச்சாமி என்ற பெயருடன் பளீரென சிரிக்கும் கருப்பு பெரியப்பா மாதிரி தான் இருக்கிறது திருவல்லிக்கேணி பெரிய தெரு. பேருக்கும் தெருவின் அகலத்திற்கும் சம்பந்தமே இல்லை. இந்த தெருவின் உண்மையான பெயர் வீரராகவ முதலி தெரு. ஆனால் இந்தப் பெயர் இப்போது பெரும்பாலானோருக்கு தெரியாது என்றே தோன்றுகிறது. இங்குள்ள பெயர்ப்பலகை கூட BIG STREET (பெரிய தெரு) என்றுதான் இருக்கிறது.

திருவல்லிக்கேணி பெரிய தெரு

திருவல்லிக்கேணியின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த தெருவில் பெரும்பாலும் மேன்ஷன்கள்தான் இருக்கின்றன. எனவே தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வேலை தேடி சென்னைக்கு வரும் இளைஞர்களின் சரணாலயமாக இருக்கிறது இந்த தெரு. ஒருவேளை இப்படி பெரிய மனதுடன் பலருக்கும் அடைக்கலம் தருவதால் இதற்கு பெரிய தெரு என்று பெயர் வைத்துவிட்டார்களோ என்னவோ.

பெரிய தெருவின் மிக முக்கிய அடையாளம் இங்கிருக்கும் இந்து மேல்நிலைப் பள்ளி. திருவல்லிக்கேணி என்ற ஊர் ஆரம்ப நாட்களில் இருந்தே கல்விக்கு முக்கியத்துவம் அளித்துவரும் பகுதியாகவே இருந்திருக்கிறது. எனவே 17ஆம் நூற்றாண்டிலேயே இந்த பகுதியில் முறையான பள்ளி வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியது. விளைவு இரண்டு பள்ளிகள் தொடங்கப்பட்டன.

தமிழ் பையன்கள் படிப்பதற்காக 'திராவிட பாடசாலை' என்று ஒன்றும், தெலுங்கு பையன்களுக்காக 'இந்து ஆந்திர பாலரு பாடசாலையும்' ஆரம்பிக்கப்பட்டன. 1852ஆம் ஆண்டு ஆவணங்களின்படி இவை இரண்டும் தனித்தனி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்தன. தமிழ் பள்ளியில் குறள், நைடதம், நன்னூல் கண்டிகை, நிகண்டு, வரலாறு, புவியியல், கணக்கு ஆகிய பாடங்கள் கற்றுத்தரப்பட்டன. விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் ஆங்கிலம் படிக்கலாம். ஆண்டு இறுதியில் பொதுத்தேர்வு மூலம் மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு தேர்வு செய்யப்பட்டார்கள்.

இந்த இரண்டு பள்ளிகளுமே மக்கள் அளித்த நிதியில்தான் ஓடிக் கொண்டிருந்தன. எனவே ஆசிரியர்களுக்கு மிகக்குறைந்த ஊதியமே வழங்க முடிந்தது. இருந்தாலும் அவர்கள் கல்வியை சேவையாகக் கருதி கண்ணும் கருத்துமாக கற்பித்திருக்கிறார்கள். தமிழ் பள்ளிக்கு ஆரம்ப நாட்களில் அரசும், பச்சையப்பர் அறக்கட்டளையும் நிதி உதவி அளித்து வந்தன. ஒருகட்டத்தில் இரண்டு பள்ளிகளுக்கும் நிதி அளிக்க பொதுமக்கள் சிரமப்பட்டதால் இரண்டு பள்ளிகளையும் ஒன்றாக்கிவிட்டால் என்ன என்று ஆலோசிக்கப்பட்டது. இப்படித்தான் 'திருவல்லிக்கேணி ஆந்திர திராவிட பாலரு பாடசாலை' உருவானது. 1864ஆம் ஆண்டு இதே நிர்வாகத்தின் கீழ் பெண்கள் பள்ளி ஒன்றும் தொடங்கப்பட்டது.

1897இல் இது இந்து உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்து தற்போதைய கட்டடத்தை வந்தடைந்தது. செக்கச்செவேலென இந்தோ - கோதிக் (Indo Gothic style) பாணியில் கட்டப்பட்டிருக்கும் இந்த மூன்று மாடிக் கட்டடத்தை ஹென்றி இர்வின் என்ற ஆங்கிலேய கட்டடக் கலைஞர் வடிவமைத்துக் கொடுத்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், அரசு அருங்காட்சியகம் போன்ற பல முக்கிய கட்டடங்களை வடிவமைத்தவர் இவர். இவரது வடிவமைப்பில் 40 ஆயிரம் சதுர அடியில் நம்பெருமாள் செட்டியால் கட்டப்பட்டது தான் இன்று பெரிய தெருவில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் இந்து மேல்நிலைப் பள்ளி.

இந்து மேல்நிலைப் பள்ளி
இந்தியாவின் ஆரம்பகால கூட்டுறவு சங்கங்களில் முக்கியமானதாக கருதப்படும், திருவல்லிக்கேணி நகர்ப்புற கூட்டுறவு சங்கம் (TUCS) இந்த தெருவில்தான் உதயமானது. ஸ்ரீனிவாச சாஸ்திரி, சிங்காரவேலர் உள்ளிட்டோர் சேர்ந்து 1904ஆம் ஆண்டு இந்த சங்கத்தை தொடங்கினர். பல்பொருள் அங்காடி முதல் நியாய விலைக் கடை வரை மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்க வகை செய்த இந்த கூட்டுறவு சங்கத்திற்கு பெரிய தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலங்கள் இருக்கின்றன.

பல்துறை கலைஞர்களுக்கும் பெரிய தெரு முகவரியாக விளங்கி இருக்கிறது. ஆண்கள் மட்டுமே ஹரிகதாகாலட்சேபம் செய்து வந்த காலத்தில் பொது இடத்தில் தைரியமாக களமிறங்கிய முதல் பெண் பாகவதரான சரஸ்வதி பாய் இந்த தெருவில்தான் வசித்து வந்தார். டிகேஎஸ் சகோதரர்களும் இங்கு வசித்திருக்கிறார்கள். அதேபோல 1940களில் இசை மேதை எம்.எஸ். சுப்புலட்சுமி தமது கணவர் சதாசிவத்துடன் இங்கிருந்த வீடு ஒன்றில் வாழ்ந்திருக்கிறார். இசைபட வாழ்தல் என்பார்கள், ஆனால் இசையே வாழ்ந்த தெரு இது.

இப்படி இந்த தெருவைப் பற்றிய வரலாறு இந்த தெருவின் நீளத்தை விட பல மடங்கு அதிகம். இவை அனைத்தையும் விட சிறந்தது இந்த தெருவின் பன்முகத்தன்மைதான். பல்வேறு மதம் மற்றும் கலாச்சாரங்களை சார்ந்தவர்களை பல ஆண்டுகளாக ஒன்றிணைத்து தன்னகத்தே வைத்திருக்கும் இந்த தெரு உண்மையில் 'பெரிய தெரு' தான்.

நன்றி - தினத்தந்தி

* நோபல் பரிசு பெற்ற எஸ். சந்திரசேகர் முதல் உலக நாயகன் கமலஹாசன் வரை பல சாதனையாளர்களை இந்த பள்ளி உருவாக்கித் தந்திருக்கிறது.

* பாரதியின் தன்னுடைய ஞானரதத்தில்-

"கண்ணை விழித்துப் பார்த்தேன். மறுபடி மண்ணுலகத்திலே,
திருவல்லிக்கேணி
வீரராகவ முதலி தெருவில், கிழக்கு முகமுள்ள வீட்டு மேன்மாடத்தில், நானும்
என் பக்கத்தில் சில வர்த்தமானப் பத்திரிகைகள், எழுதுகோல், வெற்றிலைபாக்கு
முதலிய என்னுடைய பரிவாரங்களும் இருப்பது கண்டேன்.'' என்று எழுதி இருக்கிறார்.