என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Friday, November 23, 2012

காளிகாம்பாள் கோவில்


சென்னை பாரிமுனைப் பகுதியின் பழைய அடையாளங்களில் ஒன்று காளிகாம்பாள் கோவில். நெரிசல் மிகுந்த தம்புசெட்டித் தெருவில் தற்போது வசிக்கும் காளிகாம்பாள் ஆரம்ப நாட்களில் கடற்கரையோரமாக காற்று வாங்கிக் கொண்டு நிம்மதியாக குடியிருந்தாள்.

ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் வங்கக் கடலை ஒட்டி ஒரு சிறிய மீனவ கிராமம்தான் இருந்தது. இந்த கிராமத்தினரின் கடவுளாக இருந்த காளிகாம்பாளுக்கு அவர்கள் செந்தூரம் சாத்தி வழிபட்டு வந்தனர். இதனால் சென்னியம்மன் என அழைக்கப்பட்டாள். சென்னியம்மன் குப்பம் என்ற பெயரே பின்னர் சென்னை என்று மருவியது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

விஸ்வகர்மா சமூகத்தினர் நாயக்கர் காலகட்டத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் கோயில் திருப்பணிகளுக்காக சென்னையில் குடியேறியபோது திருவண்ணாமலையில் இருந்து கல் எடுத்து வந்து கட்டிய ஆலயம் இது என்று கூறப்படுகிறது. பின்னர் 1640இல் ஆங்கிலேயர்கள் இந்த பகுதியில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியபோது, கோவில் கோட்டைக்குள் வந்துவிட்டது. இப்படி கோட்டைக்குள் வைத்து வழிபட்டதால் கோட்டையம்மன் என்றும் ஒரு பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.
காளிகாம்பாள் கோவில்

ஆங்கிலேய வணிகர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் கோட்டைக்கு வெளியே தம்புசெட்டித் தெருவிற்கு இடம்மாறினாள் இந்த அம்மன். தம்புசெட்டித் தெருவில் உள்ள கோவிலை முத்துமாரி ஆச்சாரி என்பவர் நிர்மாணித்தார். இடம் மாறியதே தவிர பக்தர்களின் எண்ணிக்கை மாறவில்லை. அம்மனை வழிபட ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்துகொண்டே இருந்தனர். அப்படி வந்த ஒரு விஐபி பக்தர்தான் சத்ரபதி சிவாஜி.

1677இல் சென்னையை நோக்கி படையெடுத்து வந்தார் சத்ரபதி சிவாஜி. அப்போது சென்னையின் ஆளுநராக இருந்தவர் ஸ்ட்ரெயின்ஷாம் மாஸ்டர் (Streynsham Master). இவர் ஏற்கனவே சிவாஜியின் வீரத்தைப் பார்த்திருக்கிறார். 1670இல் சிவாஜி சூரத் நகரில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் கோட்டையைத் தாக்கியபோது அதனை எதிர்கொண்டவர் இதே ஸ்ட்ரெயின்ஷாம் மாஸ்டர்தான்.

தனது தென்னகப் படையெடுப்பால் வேலூர், செஞ்சி, ஆற்காடு ஆகியப் பகுதிகளை கைப்பற்றிய சிவாஜியின் அடுத்த குறி சென்னைதான் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் மெட்ராஸ்வாசிகள் அடுத்து என்ன எனத் தெரியாமல் அச்சத்தில் உறைந்து போயிருந்தனர். இப்படி நிமிடங்கள் திக்..திக்.. என கடந்து கொண்டிருந்த நிலையில், 1677, மே 14ஆம் தேதி சிவாஜியின் தூதர் ஒருவர் புனித ஜார்ஜ் கோட்டைக்கு வந்தார்.
கோவிலுக்கு வந்த சிவாஜி

சத்ரபதி சிவாஜி சில விலை உயர்ந்த கற்களையும், விஷமுறிவு மருந்துகளையும் கேட்பதாகவும், அதற்குரிய பணத்தை அளித்து விடுவதாகவும் அந்த தூதர் தெரிவித்தார். ஆனால் ஆங்கிலேயர்கள் பணம் எதையும் பெறாமல் சிவாஜி கேட்ட பொருட்களை அனுப்பி வைத்தனர். சிவாஜி சென்னையைத் தாக்காமல் இருக்க என்ன விலையையும் கொடுக்க அவர்கள் தயாராக இருந்தனர்.

சில நாட்கள் கழித்து மீண்டும் சில கோரிக்கைகளோடு திரும்பி வந்தார் சிவாஜியின் தூதர். இம்முறை வாங்கும் பொருட்களுக்கு உரிய விலையை கண்டிப்பாக கொடுக்கும்படி சிவாஜி வலியுறுத்தியதாக கூறினார். ஆனால் இரண்டாம் முறையும் விலையில்லா பொருட்களே அவருக்கு வழங்கப்பட்டன. மூன்றாவது முறையாக மீண்டும் வந்த தூதர், இம்முறை சில ஆங்கிலேய பொறியாளர்களை சிவாஜி அழைத்து வரச் சொன்னதாகத் தெரிவித்தார். ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க முடியாதென மிகவும் பணிவாக மறுத்துவிட்டார்கள் ஆங்கிலேயர்கள். இதனால் ஆத்திரமுற்று சிவாஜி சென்னை மீது படையெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. இதனிடையே சில அரசியல் மாற்றங்கள் காரணமாக சிவாஜி மீண்டும் தனது ராஜ்ஜியத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டி இருந்தது.

இந்த இடத்தில்தான் வரலாற்றில் ஒரு புதிர் அவிழ்க்கப்படாமல் நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது. சிவாஜி சென்னைக்குள்ளேயே வரவில்லை என்கிறார்கள் சில வரலாற்று ஆய்வாளர்கள். ஆனால் காளியின் பக்தரான சிவாஜி, யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் வந்து தம்புசெட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாளை தரிசித்துவிட்டுச் சென்றார் என்கிறார்கள் சிலர். அக்டோபர் 3, 1677இல் சிவாஜி காளிகாம்பாள் கோவிலுக்கு வந்தார் என கோவிலில் ஒரு குறிப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு உறுதியான வரலாற்று ஆவணங்கள் எதுவும் இல்லை.

மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில், பணியாற்றிக் கொண்டிருந்தபோது பிராட்வேயில் தங்கியிருந்தார். அப்போது அடிக்கடி இந்த கோவிலுக்கு வழிபட வருவாராம். ‘‘யாதுமாகி நின்றாய் காளி’’ என்ற அவரது பாடலில் வருவது காளிகாம்பாள்தான்.

சத்ரபதி சிவாஜி, பாரதியார் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பலரையும் ஆசிர்வதித்த காளிகாம்பாள், 3 நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் தனது அன்பால் சென்னையை அரவணைத்துக் கொண்டிருக்கிறாள்.

நன்றி - தினத்தந்தி

* கடற்கரைக் கோவிலில் காளி உருவம் உக்கிரமாக இருந்ததாகவும், தம்புசெட்டித் தெருவிற்கு மாறியபோது காளியின் உருவம் சாந்த சொரூபியாக மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

* கோவிலின் வாசலில் இருக்கும் கிழக்கு ராஜகோபுரம் 1983இல் கட்டப்பட்டது. 

Sunday, November 18, 2012

மெட்ராசின் பறக்கும் டாக்டர்


பறந்து பறந்து வேலை செய்வது என்று பேச்சு வழக்கில் சொல்வதுண்டு. ஆனால் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே மெட்ராசில் ஒரு டாக்டர் உண்மையிலேயே பறந்து பறந்து மருத்துவம் பார்த்திருக்கிறார். இதனால் அவரை மெட்ராஸ்வாசிகள் 'பறக்கும் டாக்டர்' என்றே அழைத்திருக்கிறார்கள்.

பின்னாட்களில் பறக்கும் டாக்டர் எனப் பெயரெடுத்த ரங்காச்சாரி கும்பகோணம் அருகே சருக்கை என்ற கிராமத்தில் 1882ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை கிருஷ்ணமாச்சாரி ஒரு பொறியாளர். சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் மற்றும் சென்ட்ரலுக்கு எதிரில் இருக்கும் அரசு பொதுமருத்துவமனை ஆகியவற்றை கட்டியதில் இவரின் பங்களிப்பும் உள்ளது.

ரங்காச்சாரியின் மாமா கோபாலாச்சாரி, ஒரு வழக்கறிஞர். திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக பணியாற்றியவர். இப்படி கல்வியின் மேன்மை அறிந்த குடும்பத்தில் பிறந்ததால் ரங்காச்சாரிக்கும் இயல்பிலேயே படிப்பின் மீது அதீத ஆர்வம் இருந்தது. கும்பகோணம் டவுன் ஐ ஸ்கூலில் படிப்பை முடித்ததும், கல்லூரியில் சேர்வதற்காக சென்னை வந்தார்.
சிலையாக ரங்காச்சாரி

மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ரங்காச்சாரியை மருத்துவம் படிக்கும்படி இரண்டு ஐரோப்பிய அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஊக்கப்படுத்தினர். அவர்கள் அளித்த உற்சாகத்தால் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த ரங்காச்சாரி, 1904ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தார். இரண்டே ஆண்டுகளில் துணை அறுவை சிகிச்சை மருத்துவராக அரசு பணியில் சேர்ந்தவர் எழும்பூர், ஐதராபாத், மாயவரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கும்பகோணம், பெர்ஹாம்பூர் என பல ஊர்களிலும் மாறி மாறி பணியாற்றினார்.

திறமையான மருத்துவர் எனப் பெயரெடுத்த ரங்காச்சாரி, எழும்பூரில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளராக 1917இல் நியமிக்கப்பட்டார். இதன் மூலம் இந்த பதவியை அடைந்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். 1919இல் அறுவை சிகிச்சை நிபுணராக பதவி உயர்வு பெற்ற அவர், 1922 வரை அரசு பணியில் இருந்தார். பின்னர் ராஜினாமா செய்துவிட்டு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தனியாக மருத்துவம் பார்க்கத் தொடங்கினார்.

சிறந்த மருத்துவராகத் திகழ்ந்த ரங்காச்சாரி மிகச்சிறந்த மனிதராகவும் இருந்தார். ஒரு நாளில் கிட்டத்தட்ட 18 மணி நேரம் மருத்துவம் பார்ப்பார். அதிகாலை 4 மணி தொடங்கி 11 மணி வரை அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வார். அதன் பின்னர் தனது கிளினிக்கிற்கு வந்திருக்கும் நோயாளிகளை கவனிப்பார். இதனிடையே நடக்க முடியாத நோயாளிகளின் வீட்டிற்கும் சென்று மருத்துவம் பார்ப்பார். அதிக பணம் சம்பாதிப்பதற்காக நிறைய நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்திருப்பார் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.

வறுமையால் வாடும் நோயாளிகளுக்கு ரங்காச்சாரி வழக்கமாக இலவசமாகத் தான் மருத்துவம் செய்வார். சிலருக்கு மருத்துவமும் பார்த்து ஆரோக்கியமான உணவுகளை வாங்கி சாப்பிடச் சொல்லி பணமும் கொடுத்து அனுப்புவாராம். ஆரம்ப நாட்களில் ரங்காச்சாரி ஒரு சைக்கிள் வைத்திருந்தார். அதில் தான் மருத்துவமனைக்கு சென்று வருவார். பின்னர் மோட்டார் பைக்கிற்கு மாறிய அவர், 1920களின் பிற்பகுதியில் அந்த காலத்திலேயே ரூ.52,000 கொடுத்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசுக் கார் ஒன்றை வாங்கினார். அடிக்கடி பயணிக்க வேண்டி இருந்ததால், பல சமயங்களில் அந்த காரே அவரின் வீடாக மாறிவிட்டது. நேரம் இல்லாததால் மதிய உணவை காரில் செல்லும்போதே சாப்பிட்டுவிடுவாராம்.

இப்படி மாய்ந்து மாய்ந்து மருத்துவம் பார்த்தும் ரங்காச்சாரிக்கு மனத்திருப்தி ஏற்படவில்லை. இன்னும் நிறைய பேருக்கு மருத்துவம் பார்க்க என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்தபோது அவருக்கு அந்த எண்ணம் தோன்றியது. யாருமே நினைத்துப் பார்க்காத வகையில், ஒரு சிறிய விமானத்தை விலைக்கு வாங்கினார் ரங்காச்சாரி. அந்நாட்களில் பறந்து விரிந்திருந்த சென்னை மாகாணம் முழுவதும் பறந்து சென்று மருத்துவம் பார்க்க இது அவருக்கு பெரிதும் உதவியது. இப்படித் தான் சென்னைக்கு ஒரு பறக்கும் டாக்டர் கிடைத்தார்.

ரங்காச்சாரி இவ்வாறு மருத்துவத்தில் சாதனை புரிந்து கொண்டிருந்த நிலையில், திடீரென ஒரு நாள் டைபாய்டு நோயால் பாதிக்கப்பட்டார். எவ்வளவு முயன்றும் நோயில் இருந்து மீள முடியாமல் 1934ஆம் ஆண்டு தமது 52வது வயதில் இயற்கை எய்தினார். மனிதநேயமிக்க அந்த மருத்துவரை இழந்த சென்னைவாசிகள் மீளாத்துயரில் ஆழ்ந்தனர். அவரை கௌரவிக்கும் வகையில் 1939ஆம் ஆண்டு சென்னை அரசு பொதுமருத்துவமனை வாயிலில் ஒரு சிலை வைத்தனர். அந்த சிலையின் பீடத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது, 'அவரின் சிறந்த மருத்துவ ஆற்றலையும், எல்லையற்ற மனிதநேயத்தையும் கௌரவிக்கும் வகையில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது'.

தந்தை கட்டிய மருத்துவமனையின் வாயிலில் மகன் சிலையாக நின்று கொண்டிருக்கிறார். 'மருத்துவம் தொழில் அல்ல சேவை' என சிலையாக நிற்கும் ரங்காச்சாரி உரக்க சொல்லிக் கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது. ஆனால் எத்தனை மருத்துவர்களுக்கு இது காதில் விழுகிறது என்பதுதான் தெரியவில்லை.

நன்றி - தினத்தந்தி

* டாக்டர் ரங்காச்சாரி மேல்படிப்பிற்காக இங்கிலாந்து செல்ல ஆசைப்பட்டார். ஆனால் ஆச்சாரமான இந்துகள் கடல் கடந்து செல்லக் கூடாது என்று சொல்லி குடும்பத்தார் அவரது ஆசைக்கு தடை போட்டுவிட்டனர்.

* மருந்து, மாத்திரைகளே இல்லாமல் வெறும் ஆலோசனைகள் மூலமே நிறைய பேரின் மருத்துவப் பிரச்னைகளை டாக்டர் ரங்காச்சாரி தீர்த்திருக்கிறார்.

Saturday, November 10, 2012

மெட்ராஸை மிரட்டிய எம்டன்


சினிமாவை மிஞ்சும் காட்சிகள் சில நேரங்களில் நிஜ வாழ்விலும் அரங்கேறி விடுகின்றன. 1914ஆம் ஆண்டு செப்டம்பர் 22ந் தேதி இரவு சென்னைவாசிகள் அப்படி ஒரு காட்சியைத்தான் மிரண்டு போய் பார்த்தார்கள். முதல் உலகப் போரால் பல நாடுகளும் அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் நவராத்திரி கொண்டாட்டங்களில் மூழ்கியிருந்த மெட்ராஸ்வாசிகளை அச்சத்தில் உறைய வைத்தது அந்த காட்சி.

1914, செப்டம்பர் 22, இரவு 9.30 மணி... சென்னை துறைமுகத்திற்கு மிக அருகில் திடீரென காட்சி கொடுத்தது ஜெர்மானிய போர்க்கப்பலான எம்டன். பிரிட்டீஷ் கப்பற்படையின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு துறைமுகத்தை நெருங்கிய அந்த கப்பல், சென்னை மாநகரை நோக்கி குண்டு மழை பொழியத் தொடங்கியது. துறைமுகத்திற்குள் இருந்த பர்மா ஆயில் கம்பெனியின் எண்ணெய் கிடங்குகள் கொழுந்துவிட்டு எரிந்தன.
எம்டனால் எரியும் எண்ணெய் கிடங்குகள் 
எண்ணெய் டாங்குகளை கபளீகரம் செய்த எம்டன் அடுத்தபடியாக துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய வணிகக் கப்பல் ஒன்றை சுட்டு வீழ்த்தியது. கப்பலில் இருந்த 3 பணியாளர்கள் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பிரிட்டன் படைகள் சுதாரித்து எதிர்தாக்குதல் நடத்த அரை மணி நேரம் ஆகிவிட்டது. அதற்குள் மேலும் சில குண்டுகளை சென்னைக்கு பரிசளித்துவிட்டு எம்டன் பத்திரமாக வங்கக் கடலில் விரைந்து மறைந்துவிட்டது.

அடுத்தநாள் காலை, சென்னையில் காட்சிகள் வேகமாக மாறின. எம்டன் வீசிச் சென்ற குண்டுகள் உயர்நீதிமன்றம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, சூலை, நுங்கம்பாக்கம் என பல கிலோ மீட்டர் தூரம் சிதறிக் கிடந்தன. மக்கள் இதனை பீதியுடன் பார்த்தனர். எம்டன் பற்றிய செய்தி காட்டுத்தீயாய் பரவியது. மீண்டும் எம்டன் தாக்கலாம் என்ற வதந்தி இறக்கை கட்டிப் பறந்தது. அச்சத்தில் உறைந்த மக்கள் அவசர அவசரமாக நகரை விட்டு வெளியேறத் தொடங்கினர். தினமும் சுமார் 20 ஆயிரம் பேர் நகரை காலி செய்துவிட்டு கிளம்பியதாக அன்றைய செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன. ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.

ரயில்களில் இடம் கிடைக்காதோர் சாலை மார்க்கமாக பயணித்தனர். எங்கு பார்த்தாலும் மூட்டை முடிச்சுகளோடு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருந்தனர். கடைகள் அடைக்கப்பட்டன. திறந்திருந்த ஒரு சில கடைகளில் விலைகள் திடீரென விண்ணில் பறந்தன. அடுத்து என்ன எனத் தெரியாத ஒரு குழப்ப மேகம் நகரை சூழ்ந்திருந்தது. வதந்தி கிளப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்தும் எந்த பயனும் இல்லை. வதந்திகள் பரவிக் கொண்டே இருந்தன, மக்கள் வெளியேறிக் கொண்டே இருந்தார்கள்.

அப்போதைய மெட்ராஸ் ஆளுநரான லார்ட் பெண்ட்லாண்ட் எம்டன் தாக்குதல் நடத்தியபோது ஊட்டியில் இருந்தார். தகவல் கிடைத்த பிறகும் அவர் உடனே சென்னைக்கு வரவில்லை. பொறுமையாக செப்டம்பர் 25ந் தேதி வந்து தாக்குதல் நடந்த இடங்களைப் பார்வையிட்டார். 'எம்டன் திரும்பி வராது, பயப்படாதீர்கள்' என்று நம்பிக்கை அளித்துவிட்டு, மீண்டும் ஊட்டிக்குத் திரும்பிவிட்டார். 'எம்டன் வராது என்றால் ஆளுநர் இங்கேயே இருக்க வேண்டியதுதானே, ஏன் நகரில் இருப்பதை தவிர்க்கிறார்?' என்று பொதுமக்கள் கேட்டார்கள். ஆனால் பதில் சொல்லத்தான் யாரும் இல்லை.

அந்த காலத்தில் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் மகுடமாகக் கருதப்பட்ட இந்தியாவில், அதுவும் அவர்கள் முதன்முதலாக காலடி வைத்த சென்னைக்கே வந்து ஒரு எதிரி தாக்கிவிட்டு பத்திரமாகத் திரும்பியது ஆங்கிலேயப் படைக்கு மிகப் பெரிய அவமானமாக கருதப்பட்டது. இந்த ஒரு காரணத்திற்காக இந்திய மக்கள் எம்டனை ஹீரோவாகப் போற்றினார்கள். அதன்பின்னர் அசகாய சூரர்களை எம்டன் என்று தமிழக மக்கள் அழைக்கத் தொடங்கினர்.

ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த எம்டன், தனது பணிக் காலத்தில் 31 கப்பல்களை மூழ்கடித்திருக்கிறது. தனது வசீகரத் தோற்றத்தால் 'கிழக்கின் அன்னப்பறவை' என எதிரிப் படைகளாலும் வர்ணப்பட்ட பெருமை எம்டனுக்கு உண்டு. ஜெர்மானிய கப்பற்படையில் முக்கிய அங்கம் வகித்த இந்த கப்பலுக்கு, 1913ஆம் ஆண்டு வான் முல்லர் (Karl Von Muller) கேப்டனாக பொறுப்பேற்றார்.
கம்பீரமான எம்டன்
அந்த காலத்தில் இந்துமா சமுத்திரம் முழுவதும் பிரிட்டீஷ் கப்பல்கள் நிறைந்திருக்கும். ஒட்டுமொத்த சமுத்திரத்திலும் தாங்களே ஆதிக்கம் செலுத்தியதால் இந்துமா சமுத்திரத்தை 'பிரிட்டனின் ஏரி' என்று ஆங்கிலேயர்கள் கர்வத்துடன் அழைத்துக் கொண்டிருந்தனர். இந்த கர்வத்திற்குதான் மரண அடி கொடுத்தார் முல்லர். எம்டன் கப்பலில் இருந்த செண்பகராமன் என்ற விடுதலைப் போராட்ட வீரரின் கோரிக்கையை ஏற்றே சென்னை மீது முல்லர் தாக்குதல் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இதுபற்றி உறுதியான ஆவணங்கள் எதுவும் இல்லை.
ஜலசமாதியாகும் எம்டன்
எம்டனை வீழ்த்த பல நாட்டு கப்பல்களும் எவ்வளவோ முயற்சித்தன. ஆனால் முடியவில்லை. இறுதியில், வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் எம்டனுக்கு போட்டியாக ஒரு கப்பல் களமிறங்கியது. முதல் உலகப் போர் உச்சத்தில் இருந்த போது, ஆஸ்திரேலியாவின் சிட்னி என்ற நவீன போர்க்கப்பலுடன் எம்டன் மோதியது. கடுமையான சண்டைக்குப் பிறகு எம்டன் சுட்டு வீழ்த்தப்பட்டது. கேப்டன் முல்லர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கடலில் பல வெற்றிகளை நிலைநாட்டிய எம்டன், அதே கடலில் அமைதியாக ஜலசமாதியானது.

நன்றி - தினத்தந்தி

* முதல் உலகப் போரின்போது இந்தியாவில் தாக்குதலுக்கு உள்ளான ஒரே நகரம் சென்னை தான்.

* எம்டன் தாக்கியதில் உயர்நீதிமன்ற சுற்றுசுவரின் ஒரு பகுதி மட்டும் சேதமடைந்தது. இதன் நினைவாக நீதிமன்றத்தில் இன்றும் ஒரு கல்வெட்டு இருக்கிறது.

* ஜெர்மனியின் எம்ஸ் நதிக்கரையில் உள்ள எம்டன் நகரின் நினைவாக இந்த கப்பலுக்கு எம்டன் எனப் பெயரிடப்பட்டது.

Saturday, November 3, 2012

கொள்ளைக்காரன் ராபர்ட் கிளைவ்


வரலாறு வெற்றியாளர்களாக பதிவு செய்திருக்கும் சிலர் சொந்த வாழ்க்கையில் படுதோல்வியடைந்து பரிதாபத்திற்குரியவர்களாக இருந்திருக்கிறார்கள். இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி ஆழமாக காலூன்ற மிக முக்கியக் காரணகர்த்தா என்று ஆங்கிலேயர்களால் கொண்டாடப்பட்ட ராபர்ட் கிளைவ் அப்படிப்பட்ட ஒருவர்தான். மிக இளம் வயதிலேயே வாழ்வின் உச்சங்களைத் தொட்ட கிளைவ், திடீரென ஒரு நாள் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதே இதற்கு சாட்சி.
ராபர்ட் கிளைவ்
இங்கிலாந்தின் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ராபர்ட் கிளைவ், 17 வயதில் கிளர்க் வேலைக்காக பாய்மரக் கப்பல் ஒன்றில் இந்தியாவுக்கு பயணமானார். பயணத்தின் போது, குடித்துவிட்டு கலாட்டா செய்த கிளைவ் சொந்த ஊரில் இருந்தபோதும் கிட்டத்தட்ட அதையேதான் செய்து கொண்டிருந்தார். எனவேதான் அவரது தந்தை ரிச்சர்ட் கிளைவ் பையன் கொஞ்சம் உருப்படட்டுமே என்ற எண்ணத்தில் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். ஆனால் கிளைவ் இந்தியாவை உருப்பட விடாமல் செய்யப் போகிறார் என்பது அந்த தந்தைக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

துடுக்குத்தனத்தைப் போலவே இளைஞர் கிளைவிடம் நிறையவே புத்திசாலித்தனமும் இருந்தது. லத்தீனும் ஆங்கிலமும் கற்றிருந்த கிளைவ், புயலால் சேதமடைந்து கப்பல் சில மாதங்கள் பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் நின்றபோது, போர்த்துக்கீசிய மொழியையும் கற்றுக் கொண்டார். அது, மெட்ராஸில் அவருக்கு பெரிதும் கை கொடுத்தது.

18 மாத நீண்ட பயணத்திற்கு பிறகு, ஒரு வழியாக 1744இல் மெட்ராஸில் காலடி வைத்த கிளைவ், குறுகிய காலத்திலேயே இந்திய வரலாற்றிலும் அழுத்தமாக கால் பதித்தார். வாழ்வில் முன்னேற குறுக்கு வழிதான் சுலபமானது என முடிவெடுத்த கிளைவ், அந்த வழியில் மிக வேகமாக தனது பயணத்தை தொடர்ந்தார். கொடுக்க வேண்டியதைக் கொடுத்து காரியங்களை சாதித்தார். இதன் மூலம் கிளர்க் வேலையில் இருந்து ராணுவப் பணிக்கு மாறிய கிளைவ், பதவிப் படிகளில் கிடுகிடுவென ஏறினார். 1749இல் பிரெஞ்சுப் படையினரைத் தோற்கடித்து ஆற்காடு பகுதியைக் கைப்பற்றினார். அடுத்தடுத்து போர்களை நடத்தி தென்னிந்தியாவின் பல பகுதிகளை ஆங்கிலேய வசமாக்கினார் ராபர்ட் கிளைவ்.

வெற்றிகளைக் குவித்த கிளைவ், சொந்த வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவெடுத்தார். தனது நண்பரின் சகோதரியான மார்க்ரெட்டைக் கரம் பிடித்தார். வரலாற்று சிறப்புமிக்க அந்த திருமணம் 1753-ம் ஆண்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்றது.

திருமணம் ஆனதும் மனைவியுடன் கிளைவ் தாயகம் திரும்பினார். ஆனால் அவரால் அங்கே அதிக காலம் இருக்க முடியவில்லை. இதனிடையே வங்காளத்தில் ஆட்சியைக் கைப்பற்ற பிரெஞ்சுப் படைகளுடனான போரில் வெற்று பெற ஒரு திறமையான தளபதி வேண்டும் என்று நினைத்த ஆங்கிலேயர்கள் கிளைவிற்கு அழைப்பு விடுத்தனர். இதனை ஏற்ற கிளைவ் 1756இல் மீண்டும் இந்தியா வந்தார்.

மெட்ராசில் இருந்து படை திரட்டிக் கொண்டு கல்கத்தா சென்றார். அங்கே யுத்தக் கைதியாகப் பிடிபட்ட கிளைவ், லஞ்சம் கொடுத்து சிறையில் இருந்து தப்பினார். பணத்தின் பலத்தை நன்றாகப் புரிந்துகொண்ட கிளைவ், பலரையும் 'கவனித்து' சரித்திரப் புகழ்பெற்ற பிளாசி யுத்தத்தில் வெற்றியை 'வாங்கினார்'. இந்த வெற்றிதான் அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை நிலைநிறுத்த உதவியது.
பிளாசி யுத்தம்
வளமான வங்காளத்தின் ஆளுநரான கிளைவ், தனிப்பட்ட முறையிலும் எக்கச்சக்கமான செல்வத்தைக் குவித்தார். இப்படி முப்பது வயதுக்குள் கிழக்கிந்திய கம்பெனியின் பெரும் பதவிகளை வகித்து, லட்சக்கணக்கில் பணத்தையும் வைரங்களையும் குவித்த கிளைவ் 1760இல் பெரும் செல்வந்தராக நாடு திரும்பினார். இருக்கும் பணத்தைக் கொண்டு பல தோட்ட வீடுகளை வாங்கிய கிளைவ் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராகி பேரும் புகழும் அடைந்தார். ஆனால் இதுவும் நீடிக்கவில்லை. 1764இல் காலம் மீண்டும் கிளைவை இந்தியாவிற்கு அனுப்பியது.

மூன்றாவது பயணத்திலும் முடிந்த வரை கொள்ளையடித்தார் கிளைவ். பெரும் செல்வத்துடன் நாடு திரும்பிய கிளைவிற்கு அங்கு ஒரு சோதனை காத்திருந்தது. அதிகாரத்தைப் பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இங்கிலாந்து நாடாளுமன்றம் அவர் மீது விசாரணை நடத்தியது. அன்றைய வங்காளத்தின் மொத்த வருமானம் 1 கோடியே 30 லட்சத்து 66,761 ரூபாய். செலவு 9 லட்சத்து 27,609 ரூபாய். இதில் ராபர்ட் கிளைவ் அடைந்த ஆதாயம் 2 லட்சத்து 50,000 ரூபாய் என்று அந்த குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மகத்தான ஊழல் விசாரணையில் தப்பித்துவிட்டாலும், அவரால் மனசாட்சியிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை.

கிளைவின் உடல்நலம் நலிவடையத் தொடங்கியது. ரத்தக் கொதிப்பால் தூக்கமின்றி அவதிப்பட்ட கிளைவிற்கு பித்தப்பை கோளாறும் இருந்தது. தூக்கம் வருவதற்காக தினமும் போதை ஊசி போட்டுக் கொண்டதால் நரம்புத் தளர்ச்சி அதிகமானது. வலியாலும் வேதனையாலும் அழுது கதறிய கிளைவ், தன்னைக் கொன்று விடும்படி மன்றாடினார். இறுதியில் 1774-ம் ஆண்டு 49-ம் வயதில் தனது பகட்டான பண்ணை வீடு ஒன்றில் கழுத்தை அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட பரிதாபமாக செத்துப் போனார் ராபர்ட் கிளைவ்.

படுக்கையில் சிந்திக் கிடந்த ரத்தத்தில், கிளைவ் இந்தியாவில் செய்த பாவங்கள் அமைதியாக பிரதிபலித்துக் கொண்டிருந்தன.

நன்றி - தினத்தந்தி

* கிளைவ் முதன்முறையாக இந்தியா வந்தபோது, கப்பலில் இருந்து கடலில் விழுந்துவிட்டார். உடன் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்றியதால் உயிர் பிழைத்தார்.

* கிளைவ் இந்தியாவில் இருந்து கொண்டு சென்ற அரிய கலைப் பொக்கிஷங்கள் இங்கிலாந்தில் உள்ள கிளைவ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

* சுமார் 260 ஆண்டுகளுக்கு முன் கிளைவ் தனது மனைவியுடன் வசித்த வீடு, புனித ஜார்ஜ் கோட்டைக்குள் 'கிளைவ் இல்லம்' என்ற பெயரில் இன்றும் இருக்கிறது.