என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Friday, September 3, 2010

பயணிப் புறா


வட அமெரிக்காவின் மலைப் பகுதிகளில் ஒரு காலத்தில் கூட்டம் கூட்டமாக பறந்து கொண்டிருந்தவை தான் பயணிப் புறா (Passenger Pigeon) எனப்படும் காட்டுப் புறாக்கள். நம்ம ஊர் காக்கையைப் போல இவை காணும் இடங்களில் எல்லாம் நிறைந்திருந்தன. வட அமெரிக்காவில் கோடிக்கணக்கில் வாழ்ந்து கொண்டிருந்த இந்த புறாக்கள், கூட்டமாக வானில் பறக்கத் தொடங்கினால் அந்த கண்கவர் ஊர்வலம் முடிய பல மணி நேரம் ஆகுமாம்.

1873ஆம் ஆண்டு, ஏப்ரல் 8ந் தேதி, மிச்சிகன் நகரின் வான்வெளியில் காலை 7.30 மணிக்கு தொடங்கிய புறா ஊர்வலம் ஒன்று மாலை 4.00 மணிக்கு தான் நிறைவு பெற்றதாக உள்ளூர்வாசி ஒருவர் எழுதி வைத்த குறிப்பு இருக்கிறது. அண்ணாந்து பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பயணிப் புறாக்கள் சாரை சாரையாக வந்துகொண்டே இருக்கும் காட்சிகள் அந்நாட்களில் சர்வ சகஜமான ஒன்றாக இருந்திருக்கிறது. வான்வெளியை அடைத்துவிடும் இந்த மெகா ஊர்வலங்களால் அந்த பகுதியே கடும் மேக மூட்டத்திற்கு உள்ளானதைப் போல் மாறிவிடுமாம்.

இப்படி பார்ப்பவர் கண்ணை உறுத்தும் அளவுக்கு பறந்து பறந்து காட்டியது தான் கடைசியில் இவற்றிற்கு எமனாக அமைந்துவிட்டது. வட அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்கள் இந்த புறாக்களை வேட்டையாடத் தொடங்கினர். ஆரம்ப நாட்களில் குடியேறியவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், வேட்டையும் குறைவாக இருந்தது. பின்னர் இது அதிகரிக்க அதிகரிக்க, வேட்டையாடப்படும் பறவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இவற்றை வேட்டையாடுவதும் ஒன்றும் கடினமாக இருக்கவில்லை. வலையை விரித்தால் கொத்து கொத்தாக வந்து சிக்கின. துப்பாக்கியால் சுட்டால் சத்தம் கேட்டே பல புறாக்கள் மூச்சை நிறுத்திக் கொண்டன. கூட்டமாக பறக்கும்போது சும்மா ஒரு கட்டையை வீசி எறிந்தே பல புறாக்களை வீழ்த்தியிருக்கிறார்கள்.

வட அமெரிக்காவில் அக்காலத்தில் இருந்த மொத்த பறவைகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு இந்த பயணிப் புறாக்கள் இருந்திருக்கின்றன. தோராயமாக 5 பில்லியன் பறவைகள் இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். பல பறவைகள் ஒரே மரத்தை ஆக்கிரமித்ததால், அவற்றின் பாரம் தாங்காமல் மரங்களின் கிளைகளும், சமயங்களில் மரங்களுமே முறிந்துவிழுந்த சம்பவங்களும் அரங்கேறியிருக்கின்றன. இப்படி நிறைந்து கிடந்த பயணிப் புறாக்கள், ரயில் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மிக வேகமாக அழிவை நோக்கிச் சென்றன.

இவற்றை அதிகமாக கொன்று குவித்து ரயில் மூலம் நியூயார்க் போன்ற இடங்களுக்கு அனுப்பத் தொடங்கினர். கப்பல் மூலமும் புறா வர்த்தகம் லாபகரமாக நடைபெற்று வந்தது. புறாக்கறி விலை மலிவாகக் கிடைத்ததால், இதற்கு அமெரிக்கர்கள் மத்தியில் ஏகப்பட்ட கிராக்கி. இதனை முழு நேரப் பணியாகவே செய்து புறாக்களை வேக வேகமாக பரலோகம் அனுப்ப ஆரம்பித்தார்கள். 1855ஆம் ஆண்டு நியூயார்க் நகருக்கு மட்டும் 3 லட்சம் புறாக்கள் பார்சல் செய்யப்பட்டன. இது அசுர வேகத்தில் அதிகரித்து 1869ஆம் ஆண்டு மிச்சிகன் நகரில் இருந்து வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதிகளுக்கு 75 லட்சம் புறாக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

பொதுவாக ஒரு பெண் புறா ஆண்டுக்கு ஒரு முட்டை தான் இடும். எனவே அழிக்கப்படும் வேகத்திற்கு, அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியவில்லை. அதேபோல வட அமெரிக்காவில் குடியேறியவர்களால் அவற்றின் உணவு ஆதாரங்களும் வெகுவாகக் குறைந்துவிட்டன. இதுபோன்ற காரணங்களால் பயணப் புறா 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தனது பயணத்தை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. உலகின் கடைசி பயணப் புறாவான மார்த்தா, சின்சினாட்டி உயிரியல் பூங்காவில், 1914ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி மதியம் 1.00 மணிக்கு தன் மூச்சை நிறுத்தியது.

No comments:

Post a Comment