என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Thursday, September 23, 2010

பாவம் பெரிய ஓக்


பெரிய ஓக் என்ற பெயரைக் கேட்டதும் ஏதோ பெரிய நாட்டாமை போல என்று நினைத்துவிடாதீர்கள். எந்த வம்புதும்புக்கும் போகாத சாது பறவைதான் பெரிய ஓக் (பிங்குயினஸ் இம்பென்னிஸ் அல்லது அல்கா இம்பென்னிஸ்). பார்ப்பதற்கு பெரிதாக இருப்பதால் பெரிய ஓக் என்று பெயர் வைத்துவிட்டார்கள். இது பென்குயின் போலவே இருக்கும். உண்மையில் பென்குயின்களுக்கு அந்த பெயர் வரக் காரணமாக இருந்ததே இந்த பெரிய ஓக் தான்.

பெரிய ஓக்குகள் ஒரு காலத்தில், கனடாவுக்கு அப்பாலுள்ள தீவுகளிலும், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, அயர்லாந்து மற்றும் பிரிட்டன் போன்ற இடங்களில் பெருமளவில் காணப்பட்டன. 75 முதல் 85 சென்டி மீட்டர் உயரம் கொண்ட இந்த பறவை சுமார் 5 கிலோ எடை இருக்கும். பெரிய ஓக்குகள் நன்றாக நீந்தக் கூடியவை. சிறகுகளை பயன்படுத்தி நீருக்கடியில் அருமையாக நீந்தும். இவை 25 வயது வரை உயிர்வாழும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். பெரிய ஓக்குகள் ஒரு வருடத்தில் ஒரு முட்டையை மாத்திரமே இடுகின்றன.

சிறிய கழுத்து, குட்டி கால்களுடன் மெல்ல அசைந்து அசைந்து நடந்து வரும் பெரிய ஓக் பெயரளவில் பறவைதான் என்றாலும் இதனால் பறக்க முடியாது. இதுவே இவற்றின் அழிவிற்கு முக்கிய காரணமாகிவிட்டது. சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே பெரிய ஓக்குகள் மனிதர்களுக்கு அறிமுகமாகியிருக்கின்றன. 35 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஸ்பெயின் நாட்டில் உள்ள எல் பிண்டோ குகைகளில் இவற்றின் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன.

8 ஆம் நூற்றாண்டிலிருந்து இவை, உணவுக்காகவும், மெத்தைகள் செய்வதற்காகவும் மனிதர்களால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வந்தன. இவை முற்றிலுமாக அழிந்து போகும் வரை மனிதர்கள் ஓயவில்லை. இவ்வினத்தின் கடைசி ஜோடி, 1844, ஜூலை 3ல் ஐஸ்லாந்துக்கு அப்பாலுள்ள ஒரு தீவில் கொல்லப்பட்டன.

பெரிய ஓக்குகள் வெல்ஷ் மொழியில், அவற்றின் தலையிலுள்ள வெள்ளை நிறத்தை வைத்து, "வெண் தலை" எனப் பொருள்படும் பென் க்வின் என அழைக்கப்பட்டன. இதுவே "பென்குயின்" என்ற பெயருக்கு அடிப்படை. கடற்பயணங்களின் போது பெரிய ஓக்கை ஒத்த பறவைகளைக் கண்ட பயணிகள் அவற்றையும் அதே பெயரிலேயே அழைத்தனர்.

பெரிய ஓக்குகள் பரலோகம் போய்விட்ட நிலையில் இப்போது பென்குயின்கள் மட்டுமே நமது பார்வைக்கு எஞ்சியிருக்கின்றன.

No comments:

Post a Comment