என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Friday, September 3, 2010

வரிவிலக்கு குதிரை


வரி குதிரை பார்த்திருப்பீர்கள். வரிவிலக்கு குதிரையை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், அது பற்றி கேள்விப்படத் தான் முடியும். பார்க்க முடியாது. காரணம் அந்த வகை குதிரைகள் இப்போது முற்றிலுமாக அழிந்துவிட்டன. இவற்றின் பெயர் குவாகா (னிuணீரீரீணீ). பார்ப்பதற்கு வரிக்குதிரையைப் போன்றே இருக்கும். உடலின் முதல்பாதியைப் பொறுத்தவரை வரிக்குதிரைக்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. பிற்பாதியில்தான் விஷயமே இருக்கிறது. உடலின் பின் பகுதியில் மெல்ல கோடுகள் மறைந்துகொண்டே வந்து ஒரு கட்டத்திற்கு மேல் கோடுகளே இருக்காது. இப்படி பாதி வரிக் குதிரை, பாதி குதிரை கலந்து செய்த கலவைதான் நம்ம குவாகா.
காக்கா கா.. கா.. என்று கத்துவதால் காக்கா என்று பெயர் வந்ததா, இல்லை காக்கா என்று பெயர் வைத்ததால் அது கா.. கா.. என்று கத்துகிறதா என்று கேட்போமே. இது மிஸ்டர் குவாகாவிற்கும் பொருந்தும். இவர் குவா..கா.. என்று கத்துவதால் குவாகா என்று பெயர் வைத்துவிட்டார்கள் என்கிறார்கள். ஆரம்ப காலத்தில் இது ஒரு தனி இனமா அல்லது வரிக்குதிரையில் ஒரு வகையா என ஆராய்ச்சியாளர்களிடையே குழப்பம் இருந்தது. காரணம், வரிக்குதிரை இனத்தில் ஒவ்வொன்றின் கோடுகளும் ஒரு விதமாக இருக்கும். நமது கைரேகையைப் போல ஒவ்வொரு வரிக்குதிரைக்கும் பிரத்யேகமான கோடுகள் உண்டு. இரண்டு வரிக்குதிரைகள் ஒரே மாதிரி இருக்காது. நீண்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு இது வரிக்குதிரை இனத்தில் ஒன்று தான் என்று உறுதிப்படுத்திவிட்டார்கள். ஆனால் அவர்கள் உறுதிப்படுத்துவதற்குள் குவாகாக்களை மனிதர்கள் ஸ்வாகா செய்துவிட்டார்கள் என்பதுதான் மிகப்பெரிய சோகம்.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை தென் ஆப்பிரிக்காவின் கேப் மாகாணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குவாகாக்கள் பெருமளவில் காணப்பட்டன. பின்னர் இறைச்சிக்காகவும், தோலுக்காகவும் குவாகாக்களை மனிதர்கள் வேட்டையாடத் தொடங்கினர். அப்புறம் என்ன, மனிதனின் கண்ணில் பட்ட பாவத்திற்காக பரலோகம் போன விலங்குகளின் பட்டியலில் குவாகாவும் சேர்ந்துவிட்டது. 1870களில் குவாகா இனம் இந்த மண்ணைவிட்டு மறைந்துவிட்டது. ஆம்ஸ்டர்டாம் விலங்கியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வந்த கடைசி குவாகாவும் ஆகஸ்ட் 12, 1883ல் கண்ணை மூடிவிட்டது.
இன்னொரு விஷயம் தெரியுமா? அழிந்துபோன உயிரினங்களில் முதன்முதலில் டிஎன்ஏ டெஸ்ட் எனப்படும் மரபணு பரிசோதனை செய்யப்பட்ட விலங்கு நம்ம குவாகா தான். இந்த சோதனை முடிவுகளை அடிப்படையாக வைத்து குவாகாக்களை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் தென் ஆப்பிரிக்க ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுவிட்டனர். மீண்டும் குவாகாக்கள் உயிர்த்தெழுந்து வந்து குவா..கா.. என்று கத்திக்கொண்டு ஓடும் நாள் விரைவில் வரும் என்று நம்புவோமாக.

1 comment:

  1. Thank you so much. Your info was very helpful for my Science subject .

    ReplyDelete