என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Monday, September 20, 2010

சிரிக்கும் ஆந்தை


"சிரிக்கும் ஆற்றலை இயற்கை மனிதர்களுக்கு மட்டும்தான் கொடுத்திருக்கிறது என்று யார் சொன்னது, எங்களுக்கும்தான் அளித்திருக்கிறது" என்கின்றன நியுசிலாந்து நாட்டில் காணப்படும் ஒரு வகை ஆந்தைகள். இவற்றின் பெயரே சிரிக்கும் ஆந்தைகள்தான். சிரிப்பென்றால் அப்படியொரு சிரிப்பு, பைத்தியம் பிடித்தவன் நிறுத்தாமல் வெறித்தனமாக சிரிப்பது போல இவற்றின் சிரிப்பு இருக்கும் என்கிறார்கள் காதுகொடுத்து கேட்டவர்கள். இவை கூட்டமாக கூடிச் சிரிப்பதைக் கேட்டு அலறி அடித்து ஓடியவர்கள் ஏராளம்.

சுமார் 15 இன்ச் உயரம் இருக்கும் இந்த ஆந்தை, சிவப்பு நிற உடலோடும் வெள்ளை நிற முகத்தோடும் காட்சியளிக்கும். இதனால் இதனை வெள்ளை முக ஆந்தை என்றும் அழைப்பார்கள். இதில் வடக்குத் தீவு ஆந்தைகள், தெற்குத் தீவு ஆந்தைகள் என இருவகைகள் இருக்கின்றன. தெற்குத் தீவு ஆந்தைகள் சற்று பெரியதாக இருக்கும். ஆனால் இரண்டு வகைகளிலும் ஆண் ஆந்தைகள் பெண்களை விட சிறியதாக இருக்கும். இவை பெரும்பாலும் மழை குறைவான, மலைப்பாங்கான இடங்களில் தங்கியிருக்கும். பல்லி, பூச்சிகள், சிறு பறவைகள் போன்றவைதான் இதன் டயட். பாறை இடுக்குகள், பெரிய பாறைகளுக்கு அடியில் போன்ற பாதுகாப்பான இடங்களில் காய்ந்த புற்களைப் பரப்பி அதன் மீது முட்டையிடும். ஒரு சமயத்தில் இரண்டு முட்டைகள்தான் இடும்.

"டாக் வைல் வாக்" விளம்பரம்போல இந்த ஆந்தையார் பறக்கும்போது தான் சவுண்ட் விடுவார். பெரும்பாலும் இருள் சூழ்ந்த நேரத்தில் அல்லது மழை வருவதற்கு முன் அல்லது தூறல் போடும் இரவுகளில் ஆந்தையாரின் கச்சேரியை நாம் ரசிக்கலாம். இது தூரத்தில் இருக்கும் யாரையோ அழைப்பதற்கு கூவுவதற்கு போலவும், ஒரு குட்டி நாய் குரைப்பது போலவும், வேதனை கலந்த வீறிடல் போலவும் இருப்பதாக கேட்டவர்கள் கூறுகிறார்கள்.

1880களுக்கு பிறகு அரிதாகிப் போன இந்த வகை ஆந்தைகள் 1914ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் அழிந்துபோனதாக கருதப்படுகிறது. காரணம் அப்போதுதான் நியுசிலாந்தின் கான்டர்பரி என்ற பகுதியில் கடைசி ஆந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதன் பிறகு சிரிக்கும் ஆந்தையின் அடிவயிற்றைக் கலக்கும் சிரிப்பைக் கேட்டதாக பல இடங்களில் பலர் கூறியிருந்தாலும், அதற்கான நிரூபிக்கக் கூடிய ஆதாரம் எதுவும் இல்லை. ஐரோப்பியர்களின் வருகையால் நியுசிலாந்தில் மரநாய், கீரி, பூனை போன்ற விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்ததும், அவை ஆந்தையின் உணவில் கை வைத்ததும் இவை அழிந்துபோனதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் இன்றும் இரவு நேரத்தில் மலைப் பிரதேசங்களில் பயணிப்பவர்கள் சிரிக்கும் ஆந்தையின் குரலைக் கேட்பதாகக் கூறுகிறார்கள்.

இது தமிழ் சினிமாக்களில் இரவில் சோகமாக பாடிக் கொண்டே செல்லும் ஆவிகளைப் போல, அழிந்து போன ஆந்தைகளின் ஆவிக் கச்சேரியா அல்லது ஆய்வாளர்களின் கண்ணில் படாமல் கண்ணாமூச்சி ஆடும் மீதமிருக்கும் ஆந்தைகளின் அக்மார்க் அலறலா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

2 comments:

  1. Please visit

    https://groups.google.com/group/realfarmer/browse_thread/thread/c18c9f48dd11ecd8?hl=en

    ReplyDelete
  2. அருமையான படைப்பு .....நன்றி ! :-)

    ReplyDelete