என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Wednesday, September 15, 2010

உயிர்த்தெழுந்த குதிரை


டர்பன் என்ற காட்டுக் குதிரையின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. சுமார் கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தெற்கு பிரான்ஸ், ரஷ்யா, ஸ்பெயின் என ஐரோப்பிய காடுகளில் காற்றைக் கிழித்திக் கொண்டு பறந்து கொண்டிருந்தது இந்த டர்பன் குதிரை. டர்பன் என்றால் துருக்கிய மொழியில் காட்டுக் குதிரை என்று அர்த்தம்.

கட்டுக்கடங்காத இந்த காட்டுக் குதிரையை ரஷ்யாவில் சைந்தியன் என்ற நாடோடிக் குழுவினர் பழக்கிப் பயன்படுத்தி வந்தனர். பிரான்சிலும், ஸ்பெயினிலும் ஆதிமனிதர்கள் வாழ்ந்த குகைகளில் டர்பனின் ஓவியங்கள் காணப்படுகின்றன. பெரிய தலையும், குட்டைக் கால்களையும் கொண்ட டர்பன்களின் உடலில் அடர்த்தியான ரோமங்கள் இருந்தன. இவைதான் ரஷ்யாவின் கடுங்குளிரில் இருந்து அவற்றை பாதுகாத்தன.

ரஷ்ய உயிரியல் பூங்கா ஒன்றில் பராமரிக்கப்பட்டு வந்த டர்பன் ஒன்று, 1909ஆம் ஆண்டு தனது மூச்சை நிறுத்திக் கொண்டு டர்பன் இனக் குதிரைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால், காடுகளில் இருந்த டர்பன்களின் கதை 1875 - 1890 காலகட்டத்திலேயே முற்றிலுமாக முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. காட்டில் இருந்த கடைசி டர்பன், அதனைப் பிடிக்க நடந்த முயற்சியில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தது.

பின்னர் இந்த இனக் குதிரைகளை மீண்டும் உருவாக்க, 1930களில் இருந்து விஞ்ஞானிகள் மூன்று முறை முயற்சித்தனர். ஆனால் மூன்று முயற்சிகளும் முழுமையாக வெற்றி பெறவில்லை. அதேசமயம் இந்த முயற்சிகளின் மூலம் டர்பனின் பல குணாம்சங்கள் பொருந்திய ஹெக், ஸ்ட்ரோபெல் போன்ற குதிரைகள் உருவாக்கப்பட்டன. டர்பன் என்ற காட்டுக் குதிரைகள் இந்த பூமியில் ஒருகாலத்தில் வாழ்ந்தன என்பதை பறைசாற்றியபடி இவை உலா வந்து கொண்டிருக்கின்றன.

1 comment: