என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, June 8, 2013

காயிதே மில்லத் கல்லூரி

சென்னையின் மிக உயரமான கட்டடம் எது என்று கேட்டால், கேள்வி முடியும் முன்பே எல்ஐசி என்று பதில் வந்துவிடும். ஆனால் எல்ஐசி வருவதற்கு முன் சென்னையின் உயரமான கட்டடமாக இருந்தது எது? அது எங்கிருக்கிறது தெரியுமா? அதைத் தேடி நீங்கள் வெகு தூரம் செல்ல வேண்டாம். அதுவும் எல்ஐசிக்கு மிக அருகில்தான் இருக்கிறது.

எல்ஐசிக்கும், ஸ்பென்சருக்கும் இடையில் உள்ள சிக்னலில் காத்திருக்கும்போது, நடுவில் சிவப்பு வண்ணத்தில் நின்று கொண்டிருக்கும் சிறிய அரண்மனை போன்ற புராதன கட்டடத்தை நிச்சயம் பார்த்திருப்பீர்கள். அகர்சந்த் மேன்சன் (Agurchand Mansion) என்று தற்போது அறியப்படும் அந்த 100 அடி உயர கட்டடம்தான் ஒருகாலத்தில் சென்னையின் உயரமான கட்டடமாக இருந்தது.
அகர்சந்த் மேன்சன்

இந்த கட்டடத்தின் வரலாற்றை புரட்டிக் கொண்டே போனால் அது கர்நாடக கடைசி நவாப்பின் வீட்டு வாசலில் போய் நிற்கிறது. நவாப் குலாம் முகமது கவுஸின் மனைவி, பேகம் அஸீம் உ நிசா. நவாப் தனது மனைவிக்கு நிறைய சொத்துகளை விட்டுச் சென்றிருந்தார். அவற்றில் முக்கியமானது தற்போது அகர்சந்த் மேன்சனும் எதிரில் காயிதே மில்லத் கல்லூரியும் உள்ள இடங்கள்.

காயிதே மில்லத் கல்லூரி இருக்கும் இடத்தில் தான் பேகம் அஸீம் உ நிசா தங்கியிருந்தார். அவர் தங்கியிருந்த மாளிகை உம்தா பாக் (Umda Bagh) என்று அழைக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த நிலம் கோல சிங்கண்ண செட்டிக்கு சொந்தமாக இருந்தது. 1816இல் வெளியான மெட்ராஸ் வரைபடத்தில் இந்த நிலம் சிங்கண்ண செட்டியின் நிலம் என்றுதான் குறிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் 19ஆம் நூற்றாண்டில்தான் இது பேகம் அஸீம் உ நிசா வசம் வந்தது (அவர் வாடகைக்குதான் இருந்தார் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது). இவர் செய்த தான தர்மங்கள் காரணமாக பேகமின் பெயர் அன்றைய மெட்ராசில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியது. நவாப் வாலாஜாவால் சேப்பாக்கம் அரண்மனை வளாகத்தில் தொடங்கப்பட்ட இஸ்லாமிய பள்ளி, பேகம் காலத்தில் அவரது உம்தா பாக் மாளிகைக்கு மாற்றப்பட்டது. அதுதான் இன்றும் மவுன்ட் ரோட்டில் இயங்கி வரும் மதராஸா-இ-ஆஸாம் பள்ளி.
மதராஸா இ ஆஸாம் பள்ளி

1901இல் மெட்ராசில் நடைபெற்ற அனைத்திந்திய இஸ்லாமிய கல்வி மாநாட்டில், இந்த இடத்தை அரசு வாங்கி ஒரு சிறந்த கல்வி நிலையத்தை நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அரசும் இதனை ஏற்று அப்போது இந்த நிலத்தின் உரிமையாளராக இருந்த திவான் பகதூர் கோவிந்த்தாஸ் முகன்தாஸிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கு நிலத்தை வாங்கியது.

பின்னர் இந்த பள்ளி தரம் உயர்த்தப்பட்டதுடன், அருகில் ஒரு பள்ளிவாசலும் கட்டப்பட்டது. பள்ளியின் அருகிலேயே கட்டப்பட்ட தங்கும் விடுதிக்கு உம்தா பாக் என்றே பெயரிடப்பட்டது. 1918இல் இங்கு ஒரு கல்லூரியும் தொடங்கப்பட்டது. 1934இல் இந்த கல்லூரிக்கென தனிக்கட்டடம் கட்டப்பட்டது. அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் லார்ட் எர்ஸ்கின் இதனைத் திறந்து வைத்தார். ஆரம்ப நாட்களில் இஸ்லாமிய மாணவர்கள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்பட்டனர். 1938ஆம் ஆண்டிற்கு பிறகு 25% இஸ்லாமியர் அல்லாத மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

சுதந்திரத்திற்கு பிறகு 1948இல் இது அரசு கலைக் கல்லூரி எனப் பெயர் மாற்றப்பட்டு, அனைத்து சமூக மாணவர்களும் சேரலாம் என அறிவிக்கப்பட்டது. பின்னர் பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 1974இல் தமிழக அரசு இதனை பெண்கள் கல்லூரியாக மாற்றி, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி எனப் பெயரிட்டது. ஆனால் கல்லூரி விடுதியின் பெயர் மட்டும் இன்றும் உம்தா பாக் என்றே இருக்கிறது.
கடைசி கர்நாடக நவாப்

சரி, இப்போது சாலைக்கு எதிர்புறம் இருக்கும் அகர்சந்த் மேன்சனின் கதைக்கு வருவோம். பேகம் நிசா இந்த சொத்தை 1910இல் அகா முகமது கலீலி சிராஸி என்ற வணிகருக்கு விற்றுவிட்டார். ஈரானில் இருந்து வந்திருந்த இந்த பணக்கார வணிகர், பல வியாபாரங்களில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக கட்டுமானத் துறையில் சிறந்து விளங்கினார். எனவே பேகத்திடம் வாங்கிய இடத்தில் மெட்ராசிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் 1925இல் ஒரு வானளாவிய அழகிய கட்டடத்தை கட்டி வாடகைக்கு விட்டார். 100 அடி உயரத்தில் கம்பீரமாக நின்ற அந்த கட்டடம் கலீலி மேன்சன் என்று அழைக்கப்பட்டது.

கடைசி காலத்தில் கலீலி தனது இரண்டு மகன்களுக்கு சொத்துகளை பிரித்துக் கொடுக்கும்போது, மூத்த மகன் அப்பாஸ் கலீலிக்கு இந்த கட்டடம் கிடைத்தது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது அப்பாஸ் பாகிஸ்தான் செல்ல முடிவெடுத்ததால், இடம்பெயர்ந்தோர் சொத்து சட்டப்படி அரசு இந்த கட்டடத்தை ஏலம் விட்டது. அப்போது இதனை ஏலத்தில் எடுத்தவர்தான் அகர்சந்த் என்ற வியாபாரி. அப்படித்தான் கலீலி மேன்சன் அகர்சந்த் மேன்சனாக அவதாரம் எடுத்தது. இந்தோ - சராசனிக் பாணியில் இரண்டு தளங்களோடு நின்று கொண்டிருக்கும் இந்த கட்டடத்தில் இன்றும் பல வணிக நிறுவனங்கள் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன.

அந்திசாயும் நேரத்தில், அகர்சந்த் மேன்சனின் நீண்ட வராந்தாவில் நின்றபடி எதிரில் தெரியும் காயிதே மில்லத் கல்லூரியைப் பார்க்கும்போது, கர்நாடக நவாப் குடும்பத்தாரும், ஆங்கிலேய அதிகாரிகளும் அரூபமாய் அங்கே தொடர்ந்து நடமாடிக் கொண்டிருப்பதைப் போலவே தோன்றுகிறது.

நன்றி - தினத்தந்தி

* நிறைய இஸ்லாமிய பிரபலங்கள் உம்தா பாக்கில் தங்கிச் சென்றுள்ளனர். அலிகார் பல்கலைக்கழகத்தின் நிறுவனரான செய்யது அகமது கான், மெட்ராஸ் வந்தபோது இங்குதான் தங்கினார்.
* கண்ணியம் மிக்க காயிதே மில்லத்தின் மணிமண்டபம் மகளிர் கல்லூரிக்கு பின்புறம் அமைந்துள்ளது.

* 2012ஆம் ஆண்டு அகர்சந்த் மேன்சனின் முதல் தளத்தில் உள்ள புத்தக கடையில் தீ பிடித்தது. ஆனால் இதனால் கட்டடத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.

No comments:

Post a Comment