என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Friday, June 14, 2013

ராயபுரம் நெருப்புக் கோவில்

தனிமனிதத் தேவைகள் காரணமாக எழும் சில விஷயங்கள் வரலாற்றில் நின்று நிலைத்து விடுகின்றன. அப்படி மெட்ராசில் பார்சி இனத்தவரின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்வதுதான் ராயபுரத்தில் இருக்கும் நெருப்புக் கோவில்.
ராயபுரம் நெருப்புக் கோவில்

உலகின் பழமையான இனங்களில் பார்சி இனம் முக்கியமானது. கி.மு. 1200க்கு முன்பே இந்த இனம் தோன்றியதாகக் கூறப்படுகிறது. பாரசீகத்தை (தற்போதைய ஈரான், ஈராக்) பூர்வீகமாகக் கொண்ட இவர்கள், ஜொராஷ்டிரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளை அடுத்து, இவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் புலம்பெயரத் தொடங்கினர்.

அந்த வகையில் 1795ஆம் ஆண்டில் மெட்ராஸ் மண்ணில் பார்சிகள் முதன்முதலில் காலடி எடுத்து வைத்தனர். விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில் சிறு குழுவாக இருந்த அவர்கள், ராயபுரத்தில் தேவாலயத்திற்கு எதிரில் இடம் வாங்கி, வீடு கட்டிக் குடியேறினர். அவர்களைத் தொடர்ந்து மேலும் சில பார்சிகள் மெட்ராஸ் வந்தனர். அவர்களில் ரஸ்தோம்ஜி, நவ்ரோஜி ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு நிறுவனத்தை தொடங்கினர். அதற்காக அப்போதைய ஜார்ஜ் கோட்டை ஆளுநரிடம் இருந்து ராயபுரம் பகுதியில் 24 கிரவுண்ட் நிலத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தனர்.

மெட்ராசில் இப்படி மெல்ல காலூன்றிய பார்சிகள், 1876இல் தங்களுக்கென பார்சி பஞ்சாயத்து என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தினர். இதன் முதல் கூட்டத்தில் 11 பேர் கலந்துகொண்டதாக ஆவணங்கள் கூறுகின்றன. பார்சி இன மக்கள், நெருப்பை கடவுளாக வழிபடுபவர்கள். ஆனால் இவர்கள் வழிபாடு நடத்துவதற்காக, அப்போது மெட்ராசில் எந்த கோவிலும் இல்லை. எனவே பார்சிகளுக்கென ஒரு கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை மெல்ல வலுப்பெறத் தொடங்கியது.

இதற்காக நிதி வசூலிக்கும் வேலையும் ஆரம்பமானது. பார்சிகளின் கோரிக்கையை ஏற்று பூனாவில் இருந்த சர் தின்ஷா பெட்டிட் என்பவர் 1896இல் ரூ3600 நன்கொடையாக அளித்தார். அந்த காலத்தில் இவ்வளவு பெரிய தொகை கிடைத்ததும் கோவில் கட்டும் முயற்சி தீவிரமடைந்தது. பார்சி பஞ்சாயத்தின் அப்போதைய தலைவராக இருந்த சொராப்ஜி பிராம்ஜி தன் பங்கிற்கு ரூ1000 நன்கொடையாக அளித்ததும், அதுவரை சேர்ந்த பணத்தைக் கொண்டு ராயபுரத்தில் கோவிலுக்கென ஒரு இடம் வாங்கப்பட்டது.

ஆனாலும் கோவில் கட்டும் பணி இழுத்துக் கொண்டே போனது. இந்நிலையில் பிரோஜ் கிளப்வாலா என்பவரின் 13 வயது மகன் ஜல், 1906ஆம் ஆண்டு திடீரென மரணமடைந்தான். பார்சிகள் இறுதிச் சடங்கை நெருப்புக் கோவிலில் செய்வது வழக்கம். ஆனால் ஜல்லின் இறுதிச் சடங்குகளை செய்ய, முறையான பூசாரியோ, கோவிலோ அப்போது மெட்ராசில் இல்லை. இதனால் மனமுடைந்துபோன பிரோஜ் கிளப்வாலா, தனக்கு ஏற்பட்ட நிலை இனி யாருக்கும் வரக் கூடாது எனக் கருதி நெருப்புக் கோவில் கட்டும் பணியை துரிதப்படுத்தினார். இதனையடுத்து அடுத்த ஆண்டே ராயபுரத்தில் நெருப்புக் கோவில் ஒன்றை கட்டிக் கொடுத்ததுடன், பூசாரியை நியமிப்பதற்கென தனியாக ரூ2000 நன்கொடையும் வழங்கினார்.

1909ஆம் ஆண்டு பிப்ரவரி 9ந் தேதி இந்த கோவிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பார்சி பஞ்சாயத்தின் அப்போதைய தலைவர் நவ்ரோஜி ஒரு சிவில் என்ஜினியர் என்பதால், அவரே கோவிலுக்கான வரைபடத்தை தயாரித்துக் கொடுத்தார். இதனையடுத்து 1910ம் ஆண்டு மத்தியில் கட்டி முடிக்கப்பட்ட நெருப்புக் கோவிலுக்கு ஜல் பிரோஜ் கிளப்வாலா தர்-இ-மெகர் என்று பெயரிடப்பட்டது. எர்வாட் தோசாபாய் பாவ்ரி என்பவர் இந்த கோவிலின் முதல் பூசாரியாக பணியாற்றினார். அவருக்கு மாதந்தோறும் ரூ40 சம்பளமாக வழங்கப்பட்டது.
ஜல் பிரோஜ் கிளப்வாலா தர்-இ-மெகர்
இந்தக் கோவில் பிறகு பார்சி சமூகத்தவர்கள் சந்திப்பதற்கான இடமாகவும் மாறியது. இந்த நெருப்புக் கோயிலில் 100 ஆண்டுகளைக் கடந்தும் நெருப்பு அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கிறது. இங்கு ஒரு நாளைக்கு ஐந்து முறை விளக்கு ஏற்றுகிறார்கள்.

முதல் உலகப் போரின்போது ஜெர்மானிய போர்க்கப்பலான எம்டன், மெட்ராஸ் மீது குண்டுகளை வீசியது. எம்டன் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்ற பீதி காரணமாக மெட்ராசில் இருந்து ஏராளமானோர் அவசர அவசரமாக வெளியேறினர். அத்தகைய இக்கட்டான நிலையிலும் இந்த கோவிலின் பூசாரியாக இருந்த பெஷோதான் என்பவர் வெளியேற மறுத்துவிட்டாராம். கோவிலில் இருக்கும் நெருப்பு அணையாமல் தொடர வேண்டும் என்பதற்காக தனது உயிரையும் பணயம் வைத்து கோவிலிலேயே இருந்தாராம்.
அணையாத நெருப்பு

இப்படி பலரும் போற்றிப் பாதுகாத்த அந்த நெருப்பு இன்றும் அணையாமல் தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது. சற்று கூர்ந்து பார்த்தால், மெட்ராசின் வர்த்தக வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பை அளித்த பார்சிகளின் நினைவும் அந்த நெருப்பில் சுடர்விடுவதை உணர முடிகிறது.

நன்றி - தினத்தந்தி

* தமிழ்நாட்டில் உள்ள ஒரே நெருப்புக் கோயில் இதுதான். மும்பையில் 55 நெருப்புக் கோவில்கள் இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 100 நெருப்புக் கோவில்கள் உள்ளன.

* சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தாதாபாய் நௌரோஜி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கணவர் ஃபெரோஸ் காந்தி, ரத்தன் டாடா ஆகியோர் பார்சி இனத்தைச் சேர்ந்தவர்கள். 

2 comments:

  1. வணக்கம்
    ராயபுரம் நெருப்புக் கோவில் பற்றி உங்கள் நன்றக உள்ளது இந்த பார்சிகள் பல்லவர்கள் குடிகள் ஆவர்கள்


    தமிழ் நாட்டில் உள்ள வன்னியர் சமூகத்தவர்களும் பல்லவர் குடிகள் தான்


    ஆதரம் கம்பர் கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் (சிலையெழுபதும்) ஒன்றாகும். கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு, சோழருக்கு அடங்கிய சிற்றரசனாக பல்லவ நாட்டை ஆண்ட, முதற் குலோத்துங்க சோழனுடைய தளபதி (கி.பி.1070 - கி.பி.1118) கருணாகரத் தொண்டைமானின் குலமாகிய வன்னியர் பெருமையை பற்றி கம்பர் பாடியது

    ReplyDelete