என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, June 1, 2013

மெட்ராஸ் போர்

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டியது போல... என்ற பழமொழியை மெட்ராஸ் 1746இல் அனுபவரீதியாக உணர்ந்தது. எங்கோ ஐரோப்பாவில் பிரிட்டீஷாருக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையில் வெடித்த யுத்தத்தின் அதிர்வுகள் மெட்ராசில் உணரப்பட்டன.

1746ஆம் ஆண்டு ஐரோப்பாவின் முக்கிய நாடுகள் மோதிக் கொண்டன. வரலாற்றில் 'ஆஸ்ட்ரியன் சக்சஷன் போர்' (War of Austrian succession) என்று அழைக்கப்படும் இந்த யுத்தத்தில் பிரிட்டனுக்கு எதிராக ஃபிரான்ஸ் களமிறங்கியதுதான் மெட்ராஸ் போரைத் (Battle of Madras) தொடங்கி வைத்தது.

1720களில் இருந்தே பிரிட்டீஷாருக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே வாய்க்கால் தகராறு இருந்தது. இந்நிலையில் ஆஸ்ட்ரியன் போரில் ஃபிரான்ஸ் களமிறங்கியதும், பிரிட்டீஷ் கப்பற்படை இந்தியாவில் இருந்த பிரெஞ்சு குடியிருப்புகளை அடித்து நொறுக்கத் தொடங்கியது. இதைப் பார்த்துக் கொண்டு பிரெஞ்சுக்காரர்கள் சும்மா இருப்பார்களா, அவர்களும் களத்தில் குதிக்க வங்கக்கடல் குஸ்திக்களமானது.
மெட்ராசின் யுத்தகளக் காட்சி

இருநாட்டு கப்பற்படைகளும் கடலில் கட்டிப் புரண்டதில் இருபுறமும் சில பல சேதங்கள் ஏற்பட்டன. சண்டையில் கிழிந்த சட்டையை தைக்க பிரெஞ்சு படைகள் தங்கள் தளமான பாண்டிச்சேரியை அடைந்தனர். பிரிட்டீஷார் தங்கள் சேதத்தை சரி செய்ய இலங்கைப் பகுதிக்குச் சென்றனர். இதனால் சென்னை கரையோரப் பகுதி மொட்டை மாடி வத்தல் போல போதிய பாதுகாப்பின்றி இருந்தது.

இந்த தருணத்தை பயன்படுத்தி மெட்ராஸை பிடித்துவிட பிரெஞ்சு கவர்னர் ஜோசப் பிரான்கோயிஸ் டுப்லிக்ஸ் (Dupleix) விரும்பினார். இதற்கு அப்போதைய கர்நாடக நவாப் தடையாக இருக்கக் கூடாதென, பிரிட்டீஷாரை வென்று அவர்கள் கொட்டத்தை அடக்கியதும், மெட்ராசை நவாப்பிடம் ஒப்படைப்பதாக டுப்லிக்ஸ் உறுதியளித்தார்.
பிரெஞ்சு கவர்னர் டுப்லிக்ஸ்

1746ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி காலையில் பிரெஞ்சு கடற்படை மெட்ராஸ் கடற்பகுதியில் நின்று கொண்டிருந்ததுகோட்டையை நோக்கி தாக்குதல் ஆரம்பமானது. ஆனால் முதலில் பிரெஞ்சுகாரர்களின் தாக்குதல் இலக்கை சென்று அடையவில்லை. பிரிட்டீஷாரின் பதில் தாக்குதல் சும்மா பெயரளவுக்கு இருந்தாலும், பிரெஞ்சுக்காரர்கள் சரியாக குறி பார்த்து தாக்குவதற்குள் இரவாகி விட்டது. அடுத்தநாள் காலை, பிரெஞ்சுப் படை கரையிலும் இறங்கிவிட்டது. கடலில் இருந்தும், கரையில் இருந்தும் கோட்டையை சரமாரியாக தாக்கினார்கள். பிரிட்டீஷாரின் பதில் தாக்குதல் பெரிதாக எடுபடவில்லை. பிரெஞ்சுப் படை வென்றுவிட்டது.

பிரெஞ்சு கடற்படைக்கு தலைமையேற்ற லா பௌர்டான்னைஸ் (la bourdannais ) கொஞ்சம் பெருந்தன்மையோடு நடந்து கொண்டார். கோட்டையையும்பண்டக சாலையையும் மட்டும் எங்களுக்கு கொடுத்துவிட்டு மெட்ராசின் ஆளுமையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்றார். இது தொடர்பாக ஒரு ஒப்பந்தத்தையும் போட்டுவிட்டார். ஆனால் டுப்லிக்ஸிற்கு இது பிடிக்கவில்லை. மெட்ராஸை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வர விரும்பினார். விதியும் அதைத் தான் விரும்பியது போல.

அக்டோபர் மாதம் வங்கக்கடலில் ஒரு புயல் வலுவடைந்ததால், கடற்படையை பாதுகாப்பதற்காக லா பௌர்டான்னைஸ் பாண்டிச்சேரி புறப்பட்டார்இப்போது டுப்லிக்ஸ் தனது வேலையைக் காட்டத் தொடங்கினார். ஒப்பந்தத்தை தூக்கி தூர வைத்துவிட்டு, பிரிட்டிஷ் படைகளையும், மெட்ராஸ் மக்களையும் தாக்கினார்பலரை சிறை வைத்தார் அவர்களில் அப்போது எழுத்தராக இருந்த ராபர்ட் கிளைவும் ஒருவர். ஆனால் கிளைவ் வேறு சிலரையும் சேர்த்துக் கொண்டு நைசாக சிறையில் இருந்து நழுவிவிட்டார். பின்னர் 3 நாட்கள் இரவில் மட்டும் பயணித்து, கடலூரில் உள்ள செயிண்ட் டேவிட் கோட்டைக்கு சென்று, மெட்ராசில் நடந்தவற்றை விளக்கினார். இந்த நிகழ்ச்சிதான் ராபர்ட் கிளைவ் என்ற இளைஞனின் வாழ்க்கையையே மாற்றியது.

இதனிடையே டுப்லிக்ஸ் கர்நாடக நவாப்பிற்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை. இதனால் கடுப்பான கர்நாடக நவாப் அன்வருதீன், 10 ஆயிரம் பேர் கொண்ட பெரும் படையை தனது மகன் மஃபூஸ் கான் தலைமையில் மெட்ராஸ் நோக்கி அனுப்பி வைத்தார். கர்நாடக இளவரசரை எதிர்த்து இரண்டு பீரங்கிகளும் 400 வீரர்களும் கொண்ட பிரெஞ்சுப் படை களமிறங்கியது. நவீன பீரங்கிகளின் முன் நவாப்பின் வீரர்களால் ஒருநாள் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை.  

மெட்ராசில் அடி வாங்கிவிட்டு திரும்பிக் கொண்டிருந்த கர்நாடக இளவரசர், எதிரில் மற்றொரு சிறு பிரெஞ்சுப் படை பாண்டிச்சேரியில் இருந்து மெட்ராஸ் நோக்கி வருவதைக் கேள்விப்பட்டு அவர்களைத் தாக்கலாம் என்று சாந்தோமில் காத்திருந்தார். நவாப்பின் படை அடையாறு ஆற்றின் கரையோரத்தில் அணிவகுத்து நின்றிருந்தது. கோட்டை அருகே நடந்த போரில் பெரிய உயிர்ச்சேதம் இல்லை என்பதால் அந்த படையில் ஏறத்தாழ 10 ஆயிரம் பேர் அப்படியே இருந்தனர். ஆனால் எதிர்தரப்பில் 250 பிரெஞ்சு வீரர்களும், 700 இந்திய வீரர்களும் தான் இருந்தனர். சிறிய படையாக இருந்தாலும் நவீன ஆயுதங்கள் இருந்ததால் இதுவும் நவாப்பின் படையை அடித்து துவைத்து அடையாறு ஆற்றங்கரையில் காயப் போட்டது.

இந்த அடையாறு போர் வரலாற்றில் முக்கியமானதாக கருதப்படுகிறது. காரணம், இந்திய வீரர்களுக்கு முறையாக பயிற்சியளித்து நவீன ஆயுதங்களைக் கொடுத்து களமிறக்கிவிட்டால் பெரிய படையைக்கூட வெல்ல முடியும் என்பதை இந்த போர் நிரூபித்துக் காட்டியது. 3 நாட்களில் இரண்டு தோல்விகளோடு கர்நாடக நவாப்பின் படை ஆற்காட்டிற்கே திரும்பிச் சென்றுவிட்டது.

இப்படியே இரண்டு ஆண்டுகாலம் மெட்ராஸ் பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் இது எல்லாவற்றிற்கும் காரணமான War of Austrian Succession 1748இல் முடிவுக்கு வந்தது. இதனையொட்டி ஆக்ஸ்-லா-சாப்பல் (Treaty of Aix-la-Chapelle ) என்றொரு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்படி, வடக்கு அமெரிக்காவில் உள்ள லூயிஸ்பர்க் என்ற இடத்தை பிரெஞ்க்காரர்களிடம் கொடுத்துவிட்டு, பிரிட்டீஷார் மெட்ராசை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவானது. மீண்டும் மெட்ராஸ் பிரிட்டீஷ் வசம் வந்தது.

நன்றி - தினத்தந்தி

* 1758இல் பிரெஞ்சுப்படைகள் மீண்டும் ஒருமுறை மெட்ராஸை கைப்பற்ற முயன்றன. ஆனால் 3 மாதங்கள் கோட்டையை முற்றுகையிட்டுப் பார்த்தும் அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை.


* மெட்ராஸ் போர்தான் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதை ஆங்கிலேயர்களுக்கு புரிய வைத்தது. பின்னர்தான் கோட்டையை பலப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்றது.

1 comment:

 1. டூப்ளேவின் பெயரை சரியான வகையில் புரிந்து கொள்ளுங்கள் அன்பரெ.

  அவர் பெயர் இதுதான்,,,, "ஜோசப் பிரான்சுவா மர்க்யூஸ் தி டூப்ளேக்ஸ்" நீங்கள் சொல்வதுபோல் பிரான்கோயிஸ் அல்ல!

  இரண்டாவது, மெட்ராஸை மூன்று வருடம் பிடித்து வைத்துகொண்டு ஆங்கிலேயனின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய பிரஞ்சு கப்பற்படை தளபதியின் பெயர் லா போர்டானாயிஸ் அல்ல!

  சரியான பிரஞ்சு உச்சரிப்பில் அவர் பெயர் " லெபூர்தனே"

  நன்றி

  ReplyDelete