எந்த ஒரு நகரின்
வளர்ச்சிக்கும் அங்கிருக்கும் சாலைகள் மிக முக்கிய காரணமாக இருக்கின்றன.
மெட்ராசும் இதற்கு விதிவிலக்கல்ல. மெட்ராசில் ஆங்கிலேயர்கள் காலடி வைத்து சுமார்
200 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சாலைகள் முறையாக அமைக்கப்பட்டன. அதுவரை மனிதர்கள்
நடந்து செல்லவும், மாட்டு வண்டிகளில் செல்லவும் போதுமான அளவில்தான் சாலைகளின்
அகலமும், தரமும் இருந்தன.
இன்று வாகனங்கள்
மின்னல் வேகத்தில் விரையும் மவுண்ட் ரோடு எனப்படும் அண்ணா சாலையும், பூந்தமல்லி
நெடுஞ்சாலையும் ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பிருந்தே மக்கள் பயன்பாட்டில் இருந்தன.
மெட்ராஸ் என்ற நிலப்பகுதியை சுற்றியிருந்த திருவொற்றியூர், மயிலாப்பூர்,
திருவல்லிக்கேணி போன்ற கிராமங்கள் பல நூற்றாண்டுகளாக இருக்கின்றன என்பதற்கு
இங்குள்ள புராதன கோவில்களே சாட்சி. இங்குள்ள மக்கள் செங்கல்பட்டு, பூந்தமல்லி
உள்பட தொண்டை மண்டலத்தின் பிற பகுதிகளுக்கு செல்ல இந்த சாலைகளைத் தான் பயன்படுத்தினர்.
இருந்தாலும் சாதாரண புறவழிச்சாலையாக இருந்த இவை, மாநகரின் முக்கிய சாலைகளாக பரிணாம
வளர்ச்சி அடைந்தது ஆங்கிலேயர்களின் வருகைக்கு பிறகுதான்.
![]() |
மவுண்ட் ரோடு 1905இல் |
1856இல்
பொதுப்பணித்துறை வேலைகளை கவனிக்க ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷனின்
அறிக்கை அப்போதைய மெட்ராஸ் சாலைகளின் நிலை எப்படி இருந்தது என்பதை தெளிவாகக்
கூறுகின்றன.
'இங்கிலாந்தைவிட
இரண்டரை மடங்கு அதிக நிலப்பரப்பும், மக்கள்தொகையும் கொண்ட இந்த ராஜதானிக்கு, 3400
மைல்களுக்குத்தான் தெருக்கள் இருக்கின்றன. அவை கூட உண்மையில் சரியாக அமைக்கப்பட்ட
வீதிகள் அல்ல. வெறும் கை வண்டி அல்லது மாட்டு வண்டிகள் செல்லக்கூடிய வழிகள்தான்.
கோடைகாலத்தில் தரை கெட்டியாக இருக்கும்போது மட்டும்தான் அவற்றை பயன்படுத்த
முடியும். பாலங்களும் சரியாக கட்டப்படவில்லை. இவை அனைத்துமே மராமத்து பார்க்க
வேண்டியவை' என்று அந்த கமிஷன் தெரிவித்திருக்கிறது.
இந்த கமிஷன்
வருவதற்கு முன்பே மவுண்ட் ரோடு வந்துவிட்டது. ஜார்ஜ் கோட்டையில் இருந்து செயிண்ட்
தாமஸ் மவுண்ட் வரை சுமார் 15 கிலோ
மீட்டர்களுக்கு நீ......ண்டு கிடக்கும் இந்த சாலை காலப்போக்கில் அசுர வளர்ச்சி அடைந்தது.
ஏசுநாதரின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையார், கிபி 72இல் செயிண்ட் தாமஸ்
மவுண்டில்தான் கொல்லப்பட்டார். இதனையடுத்து கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த
மலை வழிபாட்டுத் தலமாக இருந்து வருகிறது. எனவே மெட்ராஸ் வந்த ஆங்கிலேயர்களும்
கூட்டம் கூட்டமாக இங்கு வந்து வழிபடத் தொடங்கினர்.
![]() |
போக்குவரத்து நெரிசல் இல்லாத மவுண்ட் ரோடு |
இதனிடையே 17ஆம்
நூற்றாண்டின் இறுதியில் மெட்ராஸ் ஆளுநர்கள் கிண்டியில் உள்ள அரசினர் இல்லத்தில்
அடிக்கடி வந்து தங்க ஆரம்பித்ததால், இந்த பகுதியில் போக்குவரத்து அதிகரித்தது.
எனவே சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக மவுண்ட் ரோடு சீரமைக்கப்பட்டது. அரசு
மட்டுமின்றி சில தனி நபர்களும் மவுண்ட் ரோட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளனர்.
மெட்ராசில் அக்காலத்தில்
புகழ்பெற்று விளங்கிய ஆர்மீனிய வணிகரான பெட்ரூஸ் உஸ்கான், செயிண்ட் தாமஸ்
தேவாலயத்திற்கு வருபவர்களின் வசதிக்காக தனது சொந்த செலவில் அடையாற்றின் குறுக்கே
1726இல் ஒரு பாலத்தை கட்டிக் கொடுத்தார். அதுதான் அடையாறு மர்மலாங் பாலம். பின்னர்
இந்த பாலம் சேதமடைந்துவிட்டதால் 1950-களில் இதன் அருகிலேயே தற்போது இருக்கும் மறைமலை அடிகள் பாலம் கட்டப்பட்டது.
இந்தியாவின் தற்போதைய
வரைபடத்திற்கு ஆணிவேராக இருந்ததே மவுண்ட் ரோடுதான். காரணம், இந்தியாவின் நீள
அகலத்தை அளப்பதற்காக 1802ஆம் ஆண்டு தொடங்கிய 'இந்தியாவின் பெரும் முக்கோணவியல்
அளவீடு' (The Great Trigonometrical Survey of India) பணிக்கு மவுண்ட் ரோட்டில்தான் பிள்ளையார் சுழி
போடப்பட்டது. ஜார்ஜ் கோட்டையை செயிண்ட் தாமஸ் மவுண்டுடன் இணைக்கும் 7 மைல் நீளம்
கொண்ட நேர்க் கோட்டை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த வேலை ஆரம்பமானது.
மெட்ராசின் மற்றொரு
முக்கிய சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை. சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில்
நிலையங்களின் வருகைக்கு பிறகு இந்த சாலையின் பயன்பாடு அதிகரித்தது. சென்ட்ரல்
ரயில் நிலையத்தில் வந்திறங்கும் பயணிகள் தங்குவதற்காக ராஜா சர் ராமஸ்வாமி
முதலியார் சத்திரம், அப்துல் ஹகீம் சாகிப் சத்திரம் (சித்திக் செராய்) ஆகியவை இங்கு
கட்டப்பட்டன. இந்த இரண்டு சத்திரங்களும் இன்று வணிக வளாகமாக உருமாறி இருக்கின்றன. சித்திக்
செராயில் ஒரு பெரிய மசூதி இருக்கிறது.
![]() |
பாரிமுனை 1890இல் |
இவை மட்டுமின்றி விக்டோரியா
ஹால், மூர் மார்க்கெட், ரிப்பன் மாளிகை, அரசு பொது மருத்துவமனை, தினத்தந்தி
அலுவலகம், பச்சையப்பன் கல்லூரி, ஆண்ட்ரூஸ் தேவாலயம், ஆங்கிலோ-இந்தியன் பள்ளி என பல
முக்கிய கட்டடங்கள் இந்த சாலையின் பயன்பாட்டை அதிகரித்தன.
ஆரம்ப நாட்களில் கோட்டைக்குள்ளேயே
இருந்து மூச்சு முட்டிய ஆங்கிலேயர்கள், பின்னர் மெல்ல வெளியில் வந்து பெரிய பெரிய
தோட்ட வீடுகளைக் கட்டி குடியேற ஆரம்பித்தனர். தேனாம்பேட்டை, வேப்பேரி,
புரசைவாக்கம், சேத்துபட்டு என அவர்கள் வீடு கட்டிய இடங்களில் எல்லாம் சாலைகள்
முளைத்தன. இப்படித்தான் இன்றைய சென்னையின் பல சாலைகள் உருப்பெற்றன.
அறிஞர்களின் சிலைகள்
வரிசை கட்டி நிற்கும் பிரம்மாண்டமான கடற்கரைச் சாலையில் தொடங்கி சென்னையின் சின்ன
சின்ன தெருக்கள் வரை ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. இந்த
கதைகளை சுமந்தபடி மாட்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும் ஓடிக் கொண்டிருந்த சாலைகளில்,
டிராம்கள் அறிமுகமாகி ஓடி ஓய்ந்துவிட்டன. அடுத்து சாலைகளை ஊடறுத்து ஓட மெட்ரோ
ரெயில்கள் தயாராக இருக்கின்றன. மொத்தத்தில் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும்
இணைத்தபடி, வரலாறுகளால் நிறைந்து கிடக்கின்றன மெட்ராஸ் சாலைகள்.
நன்றி - தினத்தந்தி
* எழும்பூர்
பாந்தியன் சாலையை உள்ளடக்கிய 43 ஏக்கர் நிலம்
1778இல் ஹால்
பிளம்மர் என்பவருக்கு மெட்ராஸ் அளுநரால் வழங்கப்பட்டது.
* நுங்கம்பாக்கத்தில்
ஒருகாலத்தில் மாட்டு வண்டிகள் பயணிக்கும் ஒற்றையடி பாதையாக இருந்ததுதான்
ஸ்டெர்லிங் ரோடு. சாதாரண சிப்பாயாக இருந்து, படிப்படியாக முன்னேறி செஷன்ஸ்
நீதிபதியாகிவிட்ட ஸ்டெர்லிங்கின் (L. K. Sterling) நினைவாக இந்த பெயர் சூட்டப்பட்டது. இப்படி பல ஆங்கிலேயர்களின்
நினைவுகளைத் தாங்கியபடி நிறைய சாலைகள் இன்றும் இருக்கின்றன.
அருமையான் தகவல்...
ReplyDelete