என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Sunday, March 3, 2013

மெட்ராசின் ஜட்கா வண்டி


மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்து விளங்கும் சில விஷயங்கள், காலப்போக்கில் மெல்ல மங்கி மறைந்து விடுகின்றன. அப்படி ஒரு காலத்தில் மெட்ராசில் இறக்கைகட்டிப் பறந்துகொண்டிருந்த ஜட்கா வண்டிகள், நவீன வாகனங்களின் வருகைக்கு பின் காணாமலே போய்விட்டன.

ஆங்கிலேயர்கள் சென்னையில் குடியேறிய புதிதில் தங்களின் போக்குவரத்திற்கு பல்லக்கு, மாட்டு வண்டி, குதிரை, குதிரை வண்டி போன்றவற்றையே பயன்படுத்தினர். ஆனால் பொதுமக்களில் வசதி படைத்தோருக்கு மட்டுமே இந்த சொகுசு சாத்தியமாக இருந்தது. மற்றவர்கள் தன் காலே தனக்கு உதவி என்று பல மைல் தூரம் நடந்துதான் சென்றனர்.

சென்னை மாகாணத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்கு இடையில் சாலைகள் போடப்பட்ட பின்னர், போக்குவரத்து அதிகரிக்கத் தொடங்கியது. ரயில் கண்டுபிடிக்கப்பட்டு ராயபுரம், சென்ட்ரல் ரயில் நிலையங்கள் எல்லாம் வந்த பிறகு, வெளியூர்களில் இருந்து மெட்ராஸ் வருபவர்களின் எண்ணிக்கை பெருகியது. ரயில் நிலையங்களில் வந்திறங்கும் அவர்களுக்கு வரப்பிரசாதமாக வந்தவைதான் ஜட்கா வண்டிகள்.

ஒற்றை குதிரை பூட்டிய ஒரு சிறிய கூண்டு வண்டிதான் ஜட்கா வண்டி என்று அழைக்கப்பட்டது. மாடு பூட்டிய சில ஜட்கா வண்டிகளும் ஆரம்பத்தில் இருந்தன. ஆனால் குதிரைகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாததால் இவை சீக்கிரமே வழக்கொழிந்துவிட்டன. அந்தக்கால மெட்ராஸ் City Of Magnificent distances என்று அழைக்கப்பட்டது. காரணம் ஒரு இடத்திற்கும் இன்னொரு இடத்திற்கும் இடையில் அவ்வளவு தூரம் இருந்தது. இந்த தூரத்தை கடக்க ஜட்கா வண்டிகள்தான் உதவின.

சென்ட்ரல் ஸ்டேஷனுக்கெதிரில் ராஜா ராமசாமி முதலியார் சத்திரம் என்று ஒன்றிருந்தது. அதேபோல எழும்பூர் ஸ்டேஷனுக்கருகில் கண்ணன் செட்டியார் சத்திரம் இருந்தது. இப்படி இன்னும் சில சத்திரங்கள் நகரில் ஆங்காங்கே இருந்தன. இவற்றின் வாசல்களில் ஜட்கா வண்டிகள் வரிசைகட்டி நின்றன. நான்கு பேர் அமர்ந்து செல்லக்கூடியது என்று சொல்லப்படும் இந்த ஜட்கா வண்டிகளைப் பற்றி அந்தக்காலத்தில் ஒருவர் 'அனுபவித்து' எழுதியது இது..

சென்னப் பட்டணத்தில் காணப்படுகிற  ஜட்கா மாதிரி அங்கே (லண்டனில்) தேடித் தேடியலைந்தாலும் கிடைக்காது. அந்த ஜட்கா  சென்னப் பட்டணத்திற்கென்று விசேஷமாயல்லவோ ஏற்பட்டிருக்கிறது. பிரமனுடைய சிருஷ்டிகளில் எதைத்தான்  அதற்குச் சமானமாய்ச் சொல்லலாம்? பம்பாய்க்குப் போனால்தான் என்ன, கல்கத்தாவுக்குப் போனால்தான் என்ன, அங்கே இதுமாதிரி, ஒடுக்கமாய் ஒடிந்தும் நெரிந்துமிருக்கிற மரப் பெட்டிகளை வெகு காலத்திற்கு முன் வர்ணம் பூசப்பட்ட அடையாளத்துடன் இரண்டு சக்கரங்களின் மேலேற்றி, தேக சவுக்கியமுள்ள ஒரு மனிதனுடைய சரீரத்திற்கு உள்ளே இடம் இல்லாதபொழுது, `நாலு பேர் சவாரி செய்ய` என்று எழுதிய ஒரு தகடுஞ் சேர்த்துள்ள வண்டிகள் கிடைத்தல் அருமையினுமருமை. லண்டனில் அதனினும் அருமை. அந்தப் பாக்கியமெல்லாம் சென்னைக்கே இருக்கட்டும்.

-
ஜி.பரமேஸ்வரம் பிள்ளை
`
லண்டன் பாரீஸ் நகரங்களின் வினோத சரித்திரம்` 1899.

இதுமட்டுமின்றி, இப்போது சில ஆட்டோக்காரர்கள் செய்யும் அதே வேலைகளை அப்போதைய ஜட்காகாரர்களும் செய்திருக்கின்றனர். அதிக பணம் கேட்டு அடாவடி செய்வது, வேறு இடத்தில் இறக்கிவிட்டுச் செல்வது போன்ற விஷயங்கள் எல்லாம் அப்போதே இருந்திருக்கிறது. இது பற்றிய செய்திகள் அந்தக்கால பத்திரிகைகளில் ஆதங்கத்தோடும், ஆவேசத்தோடும் இடம்பெற்றிருக்கின்றன.

வண்டிக்குள் சொற்பவிடத்திலே நான்கு பேராய் உட்கார்ந்து அதிக நெருக்கத்தால் செம்மையாய் உட்காரக் கூடாமல் கால்நோவும், இடுப்புநோவுமாய்ப் பிரயாணிகள்  வருந்திக் கொண்டு போவது மாத்திரமேயல்லாமல், அவ்வண்டிகள்  ஆடுகிற ஆட்டத்தில் தேகத்தில் பூட்டுக்குப்  பூட்டு நோவெடுத்து எப்பொழுது இவ்வண்டியைவிட்டு இறங்கப் போகிறோம் என்று  எண்ணும்படியாகிறது.

மேலும் அவ்வண்டிக்காரர்களுள் அநேகர் துர்மார்க்கர்களாய்த் திருஅல்லிக்கேணிக்கு என்று பேசி வண்டி ஏறிப்போனால், திருவல்லிக்கேணிக் கடைத் தெருவிலே கொண்டுபோய் நிறுத்தி, இதுதான் திருவல்லிக்கேணி  இறங்குங்கள் என்கிறார்கள். பின்பு பிரயாணிகள் என்ன நியாயம் எடுத்துரைத்தாலும் அவர்கள் கேட்பதில்லை. நடுவே சற்றிறங்கி ஒருவரோடு ஒரு பேச்சு பேசி வருகிறோம் என்றால் அவர்கள் சம்மதிப்பதில்லை.
இவ்விதமான பல காரணங்களால் சச்சரவு உண்டாகி  இப்பட்டணத்தில் ஜட்கா வண்டி வியவகாரம்  போலீசுக்குப் போகாத நாளில்லை.

இதென்ன வீண்தொல்லையாயிருக்கிறது என்று இவ்வகையான துர்மார்க்கச் செயல்கள் மறுப்பதற்காகவே நாளது வருஷத்தில் போலீசு அதிகாரிகள்ஜட்கா வண்டிகளுக்கு  இவ்வளவு தூரத்திற்கு இவ்வளவு கூலி கொடுக்க வேண்டுமென்றும், நடுவே  நிற்க வேண்டுமானால் அந்தக் காலத்திற்குத் தக்கபடி கூலி கட்டிக்கொடுக்க வேண்டுமென்றும், பிரயாணிகள் எந்த இடத்திற்கு வண்டி பேசுகிறார்களோ அங்கே  அவர்கள் இறங்கவேண்டிய இடத்திலேயே வண்டியைவிட வேண்டுமென்றும் ஒரு விதி ஏற்படுத்தியிருக்கிறார்களாம். ஆயினும் அந்த வருத்தங்கள் மட்டும் அதிகமாய் ஒழியவில்லை.

`ஜநவிநோதினி`
டிசம்பர் 1879
இல.12. புஸ்த.10
பக்கம் 269 – 272

இந்த ஜட்காகாரர்கள் மகாத்மா காந்தியைக் கூட விட்டுவைக்கவில்லை. கோட்டு சூட்டு போட்டுக்கொண்டிருந்த காலத்தில் ஒருமுறை சென்னை வந்த காந்தி, தம்புசெட்டித் தெருவில் இருந்த எழுத்தாளும் பதிப்பாளருமான ஜி.ஏ.நடேசன் வீட்டிற்கு செல்ல ஒரு ஜட்காவில் ஏறினாராம். அந்த ஜட்காகாரர் ஊரெல்லாம் சுற்றிவிட்டு தம்புச்செட்டித் தெருவில் காந்தியை இறக்கிவிட்டு அதிக காசு பிடுங்கிவிட்டாராம்.

இப்படி சண்டை சச்சரவுகள் இருந்தாலும் மக்கள் தொடர்ந்து ஜட்கா வண்டிகளை பயன்படுத்தி வந்தனர். அரசு பொதுமருத்துவமனையில் இருந்து பிணங்களை எடுத்துச் செல்லவும் ஜட்கா வண்டிகள்தான் பயன்பட்டிருக்கின்றன.

1877இல் மெட்ராஸ்வாசிகளுக்கு டிராம் வண்டி அறிமுகமானது. அப்போதெல்லாம் குதிரை இழுத்துச் செல்லும் டிராம் வண்டிதான் இருந்தது. இதிலும் கட்டணம் குறைவாக இருந்ததால் மக்கள் ஜட்காவை கழற்றிவிட்டுவிட்டு டிராமிற்கு மாறினார்கள். அதற்குள் மே 7, 1895இல் எலெக்ட்ரிக் டிராம்கள் ஓடத் தொடங்கி விட்டன. அதோடு ரிக்ஷா வண்டிகளும் அதிகமாகிவிட்டதால், இவற்றை எல்லாம் தாக்குப் பிடிக்க முடியாமல், ஜட்கா வண்டிகள் இந்த பட்டணத்தின் தெருக்களில் இருந்து ஒரேயடியாக மறைந்துவிட்டன.

நன்றி - தினத்தந்தி

* இந்தியாவிலேயே மெட்ராசில்தான் எலெக்ட்ரிக் டிராம் முதன்முறையாக ஓடியது. அந்த சமயத்தில் லண்டன் போன்ற மாநகரங்களில் கூட எலெக்ட்ரிக் டிராம் அறிமுகமாகவில்லை.

* பொதுவாக ஜட்கா வண்டியை இழுக்க தட்டுவாணிக் குதிரை அல்லது நாட்டுத் தட்டு குதிரைகள்தான் பயன்படுத்தப்பட்டன.

1 comment: