என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, March 9, 2013

சிந்தாதிரிப்பேட்டை


மெட்ராஸ் நன்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம் அல்ல. காலத்தின் தேவை கருதி, தொடர்ந்து தன்னை விரிவுபடுத்திக் கொண்டதுதான், ஒருகாலத்தில் சிறிய மணல்வெளியாக இருந்த மெட்ராஸை, இன்று மாபெரும் நகரங்களின் பட்டியலில் சேர்த்திருக்கிறது. அப்படி இந்த மாநகரம் தனது தேவை கருதி உருவாக்கிய ஒரு பகுதிதான் சிந்தாதிரிப்பேட்டை.

சிந்தாதிரிப்பேட்டை உருவானதற்கு பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான அரசியல் கதையும் இருக்கிறது. ஆட்சியாளர்களின் அதிருப்திக்கு ஆளானால் என்ன ஆகும் என்பதை அந்தக் கதை இன்றும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது. புனித ஜார்ஜ் கோட்டைக்கு அருகில், கூவம் நதியின் வளைவில் குளுகுளுவென இருந்ததால் இந்த இடத்தில் தோட்ட வீடு கட்டி குடியேறினார் சுங்குராமா.
கூவத்தின் மேல் சிந்தாதிரிப்பேட்டை பாலம்

18ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் மெட்ராஸில் மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்தவர்தான் இந்த சுங்குராமா. ஆங்கிலேயர்களுக்கு மொழிபெயர்ப்பாளராக (துபாஷ்) இருந்த அவர், 1711இல் தலைமை வணிகராக உயர்ந்தார். 1717இல் திருவொற்றியூர், சாத்தன்காடு, எண்ணூர், வியாசர்பாடி, நுங்கம்பாக்கம் ஆகிய கிராமங்களை ஆண்டுக்கு 1200 பகோடாக்கள் கொடுத்து 12 ஆண்டுகளுக்கு வாடகைக்கு எடுக்கும் அளவுக்கு பணமும், செல்வாக்கும் அவருக்கு இருந்தது.

புனித ஜார்ஜ் கோட்டைக்குள்ளேயே வீடு கட்டிக் கொள்ளும் உரிமையும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர் அந்த வீட்டை ஏற்றுமதிக்கான துணிகளை வைக்கும் குடோனாக பயன்படுத்தி வந்தார். பதவி வரும்போது பணிவும் வரவேண்டும் என்பார்கள். ஆனால் சுங்குராமாவிற்கு அது வரவில்லை. ஐரோப்பிய வணிகர்களிடம் அவர் நடந்துகொண்ட விதம் பலருக்கும் அவர் மீது கசப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கியது. விளைவு, சுங்குராமாவிற்கான கெட்ட காலம் தொடங்கியது. ஆட்சி மாறியதும், காட்சியும் மாறியது.

மெட்ராஸின் புதிய ஆளுநராக மார்டன் பிட் (Morton Pitt) பதவியேற்றார். இவருக்கும் சுங்குராமாவிற்கும் அவ்வளவாக ஒத்துப்போகவில்லை. அந்த சமயத்தில் ஏற்றுமதிக்காக தரமான துணிகள் கிடைப்பதும் சற்று சிரமமாக இருந்தது. கிழக்கிந்திய கம்பெனியின் பிரதான தொழிலே மெட்ராசில் இருந்து மேலைநாடுகளுக்கு துணி ஏற்றுமதி செய்வதுதான். இதற்காகத்தான் முன்னர் ஆளுநராக இருந்த கோலட், தனது பெயரில் (காலடிப்பேட்டை) தண்டையார்பேட்டை அருகில் ஒரு புதிய குடியிருப்பை உருவாக்கி இருந்தார். அதேபோன்றதொரு தேவை ஆளுநர் பிட்டுக்கும் எழுந்தது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க விரும்பிய பிட், இந்த புதிய குடியிருப்பை சுங்குராமாவின் பரந்துவிரிந்த தோட்டத்தில் அமைப்பது என முடிவெடுத்தார். கூவத்தின் வளைவில் மரங்கள் நிறைந்திருந்த அந்த பகுதி நெசவாளர்கள் நிழலில் அமர்ந்து வேலை செய்யவும், கூவம் ஆற்றின் நீர் துணிகளை அலசவும் ஏற்றதாக இருக்கும் எனக் காரணம் சொல்லப்பட்டது. இது அராஜகம் என சுங்குராமா கூக்குரலிட்டுப் பார்த்தார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இதனிடையே சுங்குராமா தலைமை வணிகர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுவிட்டதால் அவரால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை.

மெட்ராஸ் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்பவர், நெசவாளர், சாயம் தோய்ப்போர் உள்ளிட்டோர் இந்த பகுதியில் குடியேற்றப்பட்டனர். இப்படித்தான் 1734இல் 'சின்ன தறிப் பேட்டை' உருவாகி காலப்போக்கில் சிந்தாதிரிப்பேட்டை என்றானது. 1737இல் இந்த பகுதியில் 230 நெசவாளர்கள் இருந்ததாக ஒரு ஆங்கிலேய குறிப்பு சொல்கிறது.
ஆதிகேசவ பெருமாள் கோவில்

பிட் இந்த குடியிருப்பை உருவாக்க ஆதியப்ப நாராயண செட்டி, சின்னதம்பி முதலியார் ஆகிய இரண்டு வணிகர்களைப் பயன்படுத்திக் கொண்டார். நெசவாளர்களை இங்கு அழைத்து வருவது, அவர்களுக்கு வீடு கட்டிக்கொள்ள குறிப்பிட்ட காலம் வரை வட்டியில்லாமல் கடன் வழங்குவது போன்ற பணிகளை இவர்கள் மேற்கொண்டனர். இதற்கு பதிலாக இங்கு உற்பத்தி செய்யப்படும் துணிகளை மொத்தமாக வாங்கி கணிசமான லாபத்திற்கு கம்பெனிக்கு விற்கும் உரிமை இவர்களுக்கு வழங்கப்பட்டது.

கிழக்கிந்திய கம்பெனி எதிர்பார்த்தது போலவே துணி வியாபாரத்திற்கு சிந்தாதிரிப்பேட்டை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எனவே பிட்டிற்கு பிறகு ஆளுநரான ரிச்சர்ட் பென்யானும் இந்த பகுதியை வளர்ப்பதில் ஆர்வம் காட்டினார். ஆற்காடு நவாப்பிடம் இருந்து ஆற்காடு நாணயங்களை கம்பெனியே அச்சடித்துக் கொள்ளும் உரிமையைப் பெற்ற பென்யான், அதற்கான நாணயச் சாலையை சிந்தாதிரிப்பேட்டையில் அமைத்தார். அதை நிர்வகிக்கும் உரிமை லிங்கிச் செட்டி என்ற வணிகருக்கு வழங்கப்பட்டது.

ஒருபக்கம் பறக்கும் ரயில், மற்றொரு பக்கம் அண்ணாசாலையை நோக்கி விரையும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் என சிந்தாதிரிப்பேட்டையின் முகம் இன்று வெகுவாக மாறிவிட்டது. ஆனால் ஒவ்வொருமுறையும் மாலை மயங்கும் நேரத்தில் கூவம் ஆற்றுப் பாலத்தில் நடக்கும்போது, 300 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்தாதிரிப்பேட்டையின் முகம், கறுப்பு கூவத்தில் கலங்கலாய் தெரிவது போலவே இருக்கிறது.

நன்றி - தினத்தந்தி


* சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில், ஆதியப்ப நாராயண செட்டி கட்டியதுதான். இவர் இந்த பகுதியில் ஒரு மசூதியையும் கட்டிக் கொடுத்தார். இப்பகுதியில் 1847இல் கட்டப்பட்ட ஒரு சர்ச்சும் இருக்கிறது.

* புனித ஜார்ஜ் கோட்டையை முற்றுகையிட்டபோது, பிரெஞ்சுப் படைகள் சிந்தாதிரிப்பேட்டையில்தான் முகாமிட்டு தங்கின.

No comments:

Post a Comment