மெட்ராசை ஆண்ட காலத்தில் ஆங்கிலேயர்கள் செய்த உருப்படியான விஷயங்களில்
முக்கியமானது அவர்கள் தொடங்கிய கல்வி நிலையங்கள். கிறிஸ்துவ மதத்தை பரப்பவே இந்த
முயற்சி என்று ஒரு கருத்து முன்வைக்கப்பட்டாலும், ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கும் இந்த
கல்வி நிலையங்கள் பெரிதும் பயன்பட்டிருக்கின்றன. அந்த வகையில் சுமார் 200
ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு கிடைத்த ஒரு அரும் பொக்கிஷம்தான் மெட்ராஸ்
கிறிஸ்துவக் கல்லூரி.
ஆசியாவின் மிகப் பழமையான கல்லூரிகளில் ஒன்றாகக் கருதப்படும் மெட்ராஸ்
கிறிஸ்துவக் கல்லூரி 1837ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் 1835ஆம் ஆண்டே இதற்கான
விதை விதைக்கப்பட்டுவிட்டது. மெட்ராசில் இருந்த ஸ்காட்லாந்து தேவாலயத்தின்
மதகுருமார்களான ரெவ்ரண்ட் ஜார்ஜ் லாரியும், ரெவ்ரண்ட் மேத்யூ போவியும் (Rev
George James Laurie & Rev
Matthew Bowie) இணைந்து எழும்பூரில்
செயிண்ட் ஆண்ட்ரூ என்ற சிறிய பள்ளியைத் தொடங்கினர்.
இவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த பள்ளியை நிர்வகிப்பதற்காக, ஸ்காட்லாந்து
தேவாலயம் சமயப் பிரச்சாரகர் ஒருவரை இந்தியாவிற்கு அனுப்பியது. இப்படி வந்து
சேர்ந்த ரெவ்ரண்ட் ஜான் ஆண்டர்சன் என்ற பிரச்சாரகர், பாரிமுனையின் ஆர்மீனியன்
தெருவில் 'தி ஜெனரல் அசெம்ப்ளி ஸ்கூல்' என்ற பெயரில் ஒரு பள்ளியைத் தொடங்கினார். அப்போது
ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் 59 சிறுவர்களுடன் எழும்பூரில் இயங்கிக் கொண்டிருந்த
செயிண்ட் ஆண்ட்ரூ பள்ளி, இந்த வளாகத்திற்கு இடம்மாறியது.
![]() |
டாக்டர் வில்லியம் மில்லர் |
இந்து மாணவர்களுக்கு பைபிளில் உள்ள கருத்துகளை எடுத்துக் கூறுவதன் மூலம்
கிறிஸ்துவத்தின் மகத்துவத்தை பரப்புவதே இந்த பள்ளியின் நோக்கமாக இருந்தது. டாக்டர்.
வில்லியம் மில்லர் என்பவர்தான் தமது அயராத உழைப்பால், இந்த பள்ளியை கல்லூரியாக
மாற்றியவர். மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி என்ற பெயரும் இவர் வைத்ததுதான்.
காலப்போக்கில் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கவே, கல்லூரியை
சென்னைக்கு வெளியே மாற்றுவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்து 1919ஆம் ஆண்டுதான்
தாம்பரத்திற்கு இடம்மாறுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. அப்போது நகர வளர்ச்சித் துறை
செயலாளராக இருந்த ரெவ்ரண்ட் கார்டன் மேத்யூ, அரசுடன் பேச்சு நடத்தி தாம்பரத்தில்
உள்ள சேலையூர் காட்டுப் பகுதியில் கல்லூரிக்கென 390 ஏக்கர் நிலத்தைப் பெற்றுத்
தந்தார்.
தாம்பரத்திற்கு செல்வது என முடிவானதும், எட்வர்ட் பேர்னஸ் என்ற பேராசிரியர்
தமது முயற்சியால் ஏராளமான அரிய வகை மரக்கன்றுகளை இந்த பகுதியில் நட ஆரம்பித்தார்.
இன்று மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரியில் நாம் நின்று இளைப்பாறும் பல மரங்கள் இவரது
வியர்வையால் வளர்ந்தவை. அதேபோல இங்கு கட்டப்பட்ட கட்டடங்களை ஹென்றி (Henry Schaetti) என்ற சுவிட்ஸர்லாந்து கட்டடக் கலைஞர் வடிவமைத்துக்
கொடுத்தார். இப்படி கல்லூரிக்கான வேலைகள் முடிந்த பிறகு, 100 ஆண்டுகள் சென்னையின்
மையப் பகுதியில் இயங்கிய கிறிஸ்துவக் கல்லூரி, 1937ஆம் ஆண்டு அமைதியான தாம்பரம்
காட்டுப் பகுதிக்கு இடம்மாறியது.
![]() |
1937இல் கிறிஸ்துவக் கல்லூரி |
1937ஆம் ஆண்டு ஜனவரி 30ந் தேதி, அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் லார்ட் ஜான்
எர்ஸ்கின், புதிய கல்லூரி வளாகத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்துவைத்தார். அதுவரை மாணவர்கள்
மட்டுமே வலம் வந்துகொண்டிருந்த கல்லூரியில், 1939ஆம் ஆண்டு முதல் மாணவிகளும்
சேர்த்துக்கொள்ளப்பட்டனர். ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டு, ஆங்கிலேய முதல்வர்களையே
பார்த்துப் பழகிய கல்லூரியின் முதல் இந்திய பிரின்ஸிபால் என்ற பெருமையைப் பெற்றவர்
டாக்டர் சந்திரன் தேவநேசன்.
1962 முதல் 1972 வரை கல்லூரி முதல்வராக இருந்த டாக்டர் சந்திரன் தேவநேசன், ஒரு
காந்தியவாதி. எனவே கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை, தாம்பரம்
சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு சமூக சேவைகளில் அவர் ஈடுபடுத்தினார். இது போன்ற
சமூகப் பணிகளால் அவர் இன்றும் அப்பகுதி மக்களால் அன்புடன் நினைவுகூரப்படுகிறார். அவர்
முதல்வராக இருந்த 10 ஆண்டுகாலத்தை 'தேவநேசன் தசாப்தம்' (The Devanesan Decade) என்றே பழைய மாணவர்கள் பெருமையோடு குறிப்பிடுகின்றனர்.
![]() |
கல்லூரியின் தொடக்க விழா.. |
இங்கு பணியாற்றிய பல முதல்வர்கள் பின்னர் இந்தியாவின் பல்வேறு
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக உயர்ந்திருக்கின்றனர். இவர்களுக்கு போட்டியாக
இங்கு பயின்ற மாணவர்களும் பல்வேறு துறைகளில் முதன்மையாக விளங்கினர், விளங்கிக்
கொண்டிருக்கின்றனர். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் முதல்
பெப்சி நிறுவனத்தின் இந்திரா நூயி வரை இந்த கல்லூரியின் பெருமைக்குரிய மாணவர்களின்
பட்டியல் மிக மிக நீளமானது.
மொத்தத்தில், இப்படியொரு நீண்ட நெடிய பாரம்பரியத்துடன் 200ஆம் ஆண்டை நோக்கி
கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது, சென்னை கிறிஸ்துவக் கல்லூரி.
நன்றி - தினத்தந்தி
* பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முகமது சஹாபுதீன்
கிறிஸ்துவக் கல்லூரியின் மாணவர்.
* இந்தியாவில் முதன்முதலில் தன்னாட்சி பெற்ற கல்லூரிகளில் கிறிஸ்துவக்
கல்லூரியும் ஒன்று. இது 1978ஆம் ஆண்டு தன்னாட்சி பெற்றது.
No comments:
Post a Comment