ஒருமுறை கதாநாயகன்
வேடம் போட்டுவிட்டு அதே நாடகத்தில் மறுமுறை வில்லன் வேடம் கிடைத்தால் எப்படி
இருக்கும்? அப்படி ஒரு வாழ்க்கையோடு போராடியவர்தான் சென்னையின் ஆளுநராக இருந்த ஜார்ஜ்
பிகட் (George Pigot).
![]() |
ஜார்ஜ் பிகட் |
ஜார்ஜ் கோட்டைக்குள்
இருக்கும் புனித மேரி தேவாலயத்தின் முன்புறம் ஏராளமான கல்லறைக் கற்கள் இருக்கின்றன.
மெட்ராசில் வாழ்ந்து மறைந்த பல முக்கியப் பிரமுகர்களின் பரலோக விசிட்டிங்
கார்டுகளைப் போல இருக்கும் இந்த கற்களின் பின்னால் ஒரு கதை இருக்கிறது.
1758-59இல்
பிரெஞ்சுப் படைகள் சென்னையை முற்றுகையிட்ட போது, இன்றைய சட்டக்கல்லூரி இருக்கும்
இடம் சுடுகாடாக இருந்தது. எனவே இங்கிருந்த கல்லறை மேடைகளை பீரங்கி நிறுத்தவும்,
கல்லறை ஸ்தூபிகளை மறைந்துகொண்டு சுடவும் பிரெஞ்சுப் படையினர் பயன்படுத்தினர்.
இதனால் கடுப்பான கம்பெனியினர், போர் ஓய்ந்ததும் இந்த கற்களை அகற்றி புனித மேரி
தேவாலயத்தின் முற்றத்தில் பதித்துவிட்டனர். மற்றபடி தேவாலய வளாகத்திற்குள்
புதைக்கப்பட்டவர்கள் வெகு சிலரே. அப்படி தேவாலயத்திற்குள்ளேயே புதைக்கப்பட்ட முதல்
நபர் ஜார்ஜ் பிகட்தான்.
பதினேழு வயது
சிறுவனாக எழுத்தர் வேலை பார்ப்பதற்காக இங்கிலாந்தில் இருந்து மெட்ராசிற்கு
வந்தவர்தான் பிகட். கடின உழைப்பு அவரை 36 வயதில் மெட்ராசின் ஆளுநர் ஆக்கியது. இவர்
ஆளுநராக இருந்தபோதுதான் பிரெஞ்சுப் படைகள் தளபதி லாலி தலைமையில் ஜார்ஜ் கோட்டையை
முற்றுகையிட்டன. 65 நாட்கள் நீடித்த இந்த முற்றுகையை பிகட் திறமையாக சமாளித்தார்.
போர் முடிந்ததும்
மெட்ராசின் வளர்ச்சிப் பணிகளிலும் பிகட் மும்முரமாக ஈடுபட்டார். ஒரு கட்டத்தில்
இங்கிலாந்து திரும்ப முடிவெடுத்த அவர், தமது 45வது வயதில் பதவியைத் துறந்துவிட்டு
தாயகத்திற்கு கப்பல் ஏறினார். அவரின் சேவையைப் பாராட்டி, அயர்லாந்தின் பிரபுப்
பட்டம் வழங்கப்பட்டது. இந்தியாவில் சேர்த்த 45 லட்சம் ரூபாய் பணத்தைக் கொண்டு, அயர்லாந்தில்
சொகுசான எஸ்டேட்டில் கடைசி காலத்தில் ஹாயாக ஓய்வெடுக்கலாம் என்று பிகட்
நினைத்தார். ஆனால் விதி வேறுவிதமாக நினைத்தது.
12 ஆண்டுகள் கழித்து இந்தியாவில்
இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடுவதற்கு அவருக்கு அழைப்பு வந்தது. இந்த அழைப்பின்
பின்னால் இருக்கும் ஆபத்து தெரியாமல் பிகட் இதனை ஏற்றுக் கொண்டார். மீண்டும்
ஆளுநராக பதவி ஏற்பதற்காக மெட்ராஸ் வந்து இறங்கினார். ஆனால் மெட்ராஸ் வெகுவாக
மாறியிருந்தது. இங்கிருந்த அரசியல் சூழலும் அதற்கேற்ப பல்வேறு மாற்றங்களை
சந்தித்திருந்தது.
இந்த மாற்றங்களை ஏற்க
மறுத்ததுதான் பிகட்டின் ஏமாற்றங்களுக்கான தொடக்கமாக அமைந்தது. முதல் முறை ஆளுநராக
இருந்தபோது பிகட்டிற்கு உதவி செய்ய, உறுதுணையாக நிற்க நிறைய நண்பர்கள்
இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் பிகட்டோடு சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்கியவர்கள்,
சம வயதுக்காரர்கள். ஆனால் இம்முறை பிகட் தனி மரமாக நின்றார். வயோதிகம் அவரை சற்று
சிடுசிடுப்பு மிக்கவராகவும் மாற்றியிருந்தது.
வந்த உடனேயே இங்கிருந்த
கவுன்சிலர்களோடு மோதினார். விளைவு சில மாதங்களிலேயே பலரின் பகையை சம்பாதித்துக்
கொண்டார். முதல்முறை ஆளுநராக இருந்தபோது தனது உத்தரவுகளை நிறைவேற்ற ஆட்கள்
அடித்துப் பிடித்து ஓடுவதைப் போல இப்போதும் நடக்கும் என பிகட் எதிர்பார்த்தார்.
ஆனால் அவரவர் தங்கள் அதிகாரங்களை நிலைநிறுத்துவதிலும், இந்திய ராஜாக்களின்
சண்டையில் எப்படி ஆதாயம் அடையலாம் என கணக்குப் போடுவதிலும் மும்முரமாக இருந்ததால்
இவரது ஆணைகளை காது கொடுத்துக் கூட கேட்கவில்லை.
கடுப்பாகிப் போக
பிகட் ஒருகட்டத்தில் சில கவுன்சிலர்களை கைது செய்ய உத்தரவிட்டார். ஒருமுறை கோபத்தின்
உச்சிக்கு போய் கோட்டையின் தளபதியையே கைது செய்யச் சொன்னார். ஆனால் கவுன்சிலர்கள்
ஒன்றுகூடி முடிவெடுத்து பிகட்டை கைது செய்துவிட்டனர். இரவு விருந்து ஒன்றில்
கலந்துகொள்வதற்காக குதிரை வண்டியில் சென்றுகொண்டிருந்த பிகட்டை திடீரென சிலர்
வழிமறித்தனர். என்ன நடக்கிறது என சுதாரிப்பதற்குள் செயின்ட் தாமஸ் மலையில் உள்ள
வீடு ஒன்றிற்கு அழைத்துச் சென்று சிறை வைத்துவிட்டனர்.
![]() |
கைது செய்யப்படும் பிகட் |
சுமார் ஒன்பது
மாதங்கள் அந்த வீட்டுச் சிறையில் இருந்த பிகட் உடல்நலம் குன்றியதால் அரசு
இல்லத்திற்கு மாற்றப்பட்டார். ஆனாலும் உடல்நலனில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் 1777ஆம்
ஆண்டு ஒருநாள் திடீரென உயிரை விட்டார். பிகட்டின் உடலை சிறப்பு (!) மரியாதைகளுடன்
புனித மேரி தேவாலயத்திற்குள் புதைத்துவிட்டனர்.
இதனிடையே பிகட்டை
சிறை வைத்தது குறித்த விசாரணை இங்கிலாந்தில் நடைபெற்றது. இறுதியில் பிகட்டை சிறை
வைத்த 7 கவுன்சிலர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். நான்கு பேருக்கு தலா ஆயிரம்
பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டது. பிகட்டிற்கு மீண்டும் ஆளுநர் பதவி அளிக்க
வேண்டும், அதனை அவரே ராஜினாமா செய்வார் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த
உத்தரவு ஊரெல்லாம் சுற்றிக் கொண்டு இந்தியா வருவதற்குள் பிகட் உலகை விட்டே போய்விட்டார்.
இறுதியில், என்னதான்
திறமைசாலியாக இருந்தாலும் மாற்றங்களை ஏற்க மறுத்தால் ஒருவனின் நிலை என்னவாகும்
என்பதற்கு உதாரணமாகிவிட்டார் லார்ட் பிகட்.
நன்றி - தினத்தந்தி
* பிகட் திருமணம்
செய்துகொள்ளவில்லை. இருந்தாலும் அவருக்கு நிறைய குழந்தைகள் இருந்தனர்.
* பிகட்டிடம் ஒரு விசேஷமான
வைரம் இருந்தது. அது அந்த காலத்தில் பிகட் வைரம் என்றே அழைக்கப்பட்டது.
No comments:
Post a Comment