என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, December 15, 2012

ஆனந்தரங்கப் பிள்ளை


நமது தாத்தாவின் டைரி திடீரென நமக்கு கிடைத்தால் எப்படி இருக்கும்? நூறு ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு நாளும் என்ன நடந்தது? மக்கள் அன்றாடம் என்ன செய்தார்கள்? அரசியல், பொருளாதார, சமூக சூழல் எப்படி இருந்தது என்பதெல்லாம் ஒரு கதை மாதிரி அதில் எழுதப்பட்டிருந்தால் எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்? அப்படி ஒரு அனுபவத்தை தேடுபவர்கள் ஆனந்தரங்கப் பிள்ளையின் டைரிக் குறிப்புகளை படிக்கலாம்.

ஆனந்தரங்கப் பிள்ளை சென்னையைச் சேர்ந்த பெரம்பூரில், சர்வதாரி ஆண்டு பங்குனித் திங்கள் 21-ஆம் நாள் சனிக்கிழமை (கி. பி. 1709) பிறந்தார். அவரது தந்தை திருவேங்கடப் பிள்ளை சிறிது காலத்துக்குப் பின் புதுச்சேரியில் குடியேறி அங்கேயே தங்கிவிட்டார். புதுச்சேரியில் இந்து சம்பிரதாயங்களுக்கு ஏற்பட்ட இடையூறுகளை எதிர்த்து போராடியதால் மக்கள் மத்தியில் கதாநாயகனாகத் திகழ்ந்த அவரை பிரெஞ்சுக்காரர்கள் உதவித் தரகராக நியமனம் செய்தனர்.

சிறிது காலத்திற்குப் பின் அவர் திவானாக உயர்ந்தார். ஆனால் சில ஆண்டுகளிலேயே திருவேங்கடப் பிள்ளை காலமானதால் அவருக்குப் பதிலாகக் கனகராய முதலியார் என்பவர் திவான் ஆனார். அவரும் கி.பி. 1746-ஆம் ஆண்டில் இறந்துவிடவே, அடுத்து திருவேங்கடப் பிள்ளையின் மகன் ஆனந்தரங்கப் பிள்ளை அந்த பதவியில் நியமிக்கப்பட்டார். திருவேங்கடம் திவானாய் இருந்தபோது ஆனந்தரங்கம் கூடவே இருந்து அவருக்கு வேண்டிய உதவிகளை செய்து வந்ததால் நன்றாக தொழில் கற்று வைத்திருந்தார். இதுவே, அவருக்குத் திவான் பதவி கிடைக்கக் காரணமாயிற்று.

புதுச்சேரியை ஆண்டுவந்த பிரெஞ்சு கவர்னர் துய்ப்ளேயின் (Marquis Joseph-Francois Dupleix) துபாஷியாக இருந்த ஆனந்தரங்கப் பிள்ளை, பிரதம மந்திரியாகவும், இராணுவ ஆலோசகராகவும், பிரெஞ்சுக்காரர்களின் வியாபாரப் பங்காளியாகவும் மெல்ல மெல்ல உயர்ந்தார். இந்த காலகட்டத்தில் 1736 முதல் 1761-ல் தான் இறக்கும்வரை அவர் நாட்குறிப்புகளை எழுதிவைத்தார். இதற்கு  'தினப்படிச் செய்திக்குறிப்பு, சொஸ்த லிகிதம்' என்று பெயரிட்டிருந்தார்.  அன்றைய அரசியல் அரங்கை அறிந்துகொள்ள இந்த குறிப்புகள் மிகவும் உதவியாக இருக்கின்றன.

நாள்தோறும் காலையில் கவர்னர் துய்ப்ளேக்ஸ் சிற்றுண்டி அருந்தியதும் ஆனந்தரங்கப் பிள்ளையைத் தமது அவைக்கு வரவழைத்து, நாட்டு நடப்புகளைப் பற்றிய செய்திகளையும் யோசனைகளையும் கேட்பதை வழக்கமாக வைத்திருந்தார். சென்னைப் பட்டணத்தின் மீது பிரெஞ்சு துருப்புகள் படையெடுத்த போது, அதனை துயிப்ளே ஆனந்தரங்கப்பிள்ளையிடம் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார். "பூந்தமல்லி சீமை வகையிரா, மயிலாப்பூர் உள்பட பரங்கிமலை பெரிய மலை, சின்ன மலை வகையிரா கொள்ளையிட்டார்கள். கொள்ளையிட்டவர்களுக்கு விஸ்தாரமாய் தினுசுகள், தானியங்கள், மாடுகள் வகையிரா அகப்பட்டதெல்லாம் அங்கங்கே தானே சரிப்போனபடிக்கெல்லாம் வித்துப் போடுகிறார்களாம். ஆனால் நம்முடவர்களுக்கு கொள்ளை நன்றாய் வாய்க்குது. ஒவ்வொருத்தன் கூலிக்காறன் கூட ஆஸ்திக்காறனாக சுகப்பட்டார்கள்".

இதன் விளைவாகக் குடிமக்கள் அங்குமிங்கும் இடம்பெயர்வதை, "தாமரை யிலையிலே யிருக்கிற செலம் மூலைக்கி மூலை ஆதரவன்றி யிலே ஓடி தளும்புகிறாப் போலே செனங்களும் அலையுறார்கள்" என்று ஆனந்தரங்கப்பிள்ளை கூறியிருக்கிறார். அவரின் நாட்குறிப்புகளின் பெரும்பகுதி வணிகச் செய்திகளையே விவரிக்கின்றன. நீதி வழங்கல், தண்டனை அளித்தல் ஆகிய செய்திகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

1748ஆம் ஆண்டு செப்டம்பரில் புதுச்சேரி நகரை சென்னையிலிருந்து வந்த ஆங்கிலப்படை முற்றுகையிட்டுப் பீரங்கிகளால் தாக்கியது. இதுபற்றி 1748 செப்டம்பர் 9ம் நாள் எழுதிய நாட்குறிப்பில் ஆனந்தரங்கம் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.
"மற்றபடி அவன் (இங்கிலீஷ்காரன்) போட்ட தீக்குடுக்கைகள் எல்லாம் நாற்பதுக்கும் உண்டு. இந்த தீக்குடுக்கை 1-க்கு சிறிது நூற்றைம்பது ராத்தல் முதல் இருநூத்தி பத்து, பதினைந்து மட்டுக்குமிருக்கிறது. இது வரும்போது ஒரு சோதி போல புறப்படுகிற வேடிக்கையும், அப்பாலே மெள்ள அசைந்து அசைந்து கொண்டு அப்பாலே விழுந்தவுடனே வெடிக்கிற வேடிக்கையும், பார்க்கிறதற்கு ஒரு வேடிக்கையாகத் தானே இருந்தது. இத்தனை தீக்குடுக்கை விழுந்தும் ஒரு மனுஷருக்குச் சேதமில்லை. ஒருத்தருக்கும் காயம் பட்டதுமில்லை. சுட்டதும் ஒரு சப்தம், புறப்படும்போது ஒரு சூரியன் தோன்றுகிறதென்று வருகிறாப் போலே வருகிறது. வருகிறது வெகு சப்தத்துடனே வருகிறதுமல்லாமல் வெகு தொந்தியுள்ளவன் நடக்க மாட்டாமல் மெள்ள வருவானே அப்படி வருகிறபடியினாலே சமீபத்திலே வரும்போது மனுஷர் தப்பித்துக்கொள்ள விலகிப் போகலாமென்று வெகு பேருக்கெல்லாம் தைரியமுண்டாகி தீக்குடுக்கையென்றால் அதை சட்டை பண்ணி அது வருகிறதோ போகிறதா என்கிறதுகூட கேழ்க்கிறதுகூட விட்டுவிட்டார்கள். ஆனாலின்றையதினம் பயந்தவர்களுக்குள்ளே வெள்ளைக்காரர் வெள்ளைக்கார்ச்சிகளுக்கு நம்முடைய தமிழர்கள் வெகு தைரியவான்களென்று நூறு தரம் சொல்லலாம்." இவ்வாறு சுவையான பல்வேறு செய்திகள் ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ளன.

தமிழ், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு, சம்ஸ்கிருதம், போர்ச்சுகீசு எனப் பல மொழிகளை அறிந்து வைத்திருந்த ஆனந்தரங்கப் பிள்ளை, தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாப சிம்ம மகாராஜாவுக்கு கடன் கொடுக்கும் அளவுக்கு பெரும் பணக்காரராகத் திகழ்ந்தார். தென்னிந்திய அரசியலில் சாணக்கியராகத் திகழ்ந்த அவர் "ஆனந்த புரவி" என சொந்தமாக கப்பல் ஒன்றையும் வைத்திருந்தார். கலைஞர்களை ஆதரித்த ஆனந்தரங்கப் பிள்ளையைப் புகழ்ந்து நிறைய பாடல்களும் எழுதப்பட்டிருக்கின்றன.

ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்புகளை 1846-ல் கலுவா-மொம்பிரேன் (Gallois-Montbrun) என்ற வருவாய் அதிகாரிதான் முதலில் கண்டெடுத்து பிரதியெடுத்தார். இப்படித்தான் இந்த அரிய வரலாற்றுப் பொக்கிஷம் வெளி உலகிற்கு தெரியவந்தது. ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பைப் படிக்கும்போது, 18ஆம் நூற்றாண்டு ஆங்கிலேய - பிரெஞ்சு இந்தியா அப்படியே ஒரு திரைப்படம் போல கருப்பு வெள்ளையில் நம் கண்முன் ஓடுகிறது.

நன்றி - தினத்தந்தி

* பல்லக்கில் மேள வாத்தியத்தோடு கவர்னர் மாளிகையினுள் போகவும், தங்கப் பிடியிட்ட கைத்தடி வைத்திருக்கவும், பாதரட்சை அணிந்து கவர்னரின் அலுவலகத்திற்குச் செல்லவும் ஆனந்தரங்கப் பிள்ளைக்கு சிறப்பு உரிமை அளிக்கப்பட்டிருந்தது.

* ஆனந்தரங்கப் பிள்ளையின் சுவாரஸ்யமான வாழ்க்கை வரலாறு ரா.தேசிகன் என்பவரால் எழுதப்பட்டு 1941-ல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment