என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Friday, October 7, 2011

விக்டோரியா பப்ளிக் ஹால்

மெட்ராஸ் ராஜதானியில் முதல் திரைப்படம் திரையிடப்பட்ட அரங்கம்தான் விக்டோரியா பப்ளிக் ஹால். எட்வர்ட் என்ற ஆங்கிலேயர் 1897இல் மவுனமாக ஓடும் சலனப்படக் காட்சிகளை முதன்முறையாக இங்கு திரையிட்டுக் காட்டினார். ரயில் நிலையத்தில் ரயில் வந்து நிற்பதும், தொழிற்சாலையில் இருந்து தொழிலாளர்கள் வெளியே வருவதும்தான் இங்கு திரையிடப்பட்ட முதல் சலனப்படக் காட்சிகள்.

திரையில் படங்கள் நகர்வதைப் பார்த்தவர்களுக்கு தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை. திடீரென ஒரு வெள்ளைத் திரையில் எப்படி ரயில் ஓடுகிறது, இத்தனை பேர் எங்கிருந்து வந்து போகிறார்கள் என்ற சூட்சுமம் புரியாமல் விழிகள் வியப்பில் விரிய, ஒரு மாயாஜால மயக்கத்தில் கிறங்கிப் போனார்கள் மெட்ராஸ்வாசிகள். இந்த அமோக வரவேற்பின் விளைவுதான் மெட்ராசில் தொடங்கப்பட்ட நிரந்தர திரையரங்குகள்.

இப்படி சென்னையின் திரையரங்குகளுக்கு அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்த இந்த விக்டோரியா பப்ளிக் ஹாலின் அஸ்திவாரம் போடப்பட்ட கதையும் சுவையானதுதான். 1882இல் ஜார்ஜ் டவுன் பகுதியில் கூட்டம் போட்ட முக்கியப் பிரமுகர்கள், மெட்ராசிற்கென ஒரு பிரத்யேக டவுன் ஹால் வேண்டுமென தீர்மானித்தனர். அதற்கென முக்கியஸ்தர்கள் சிலரிடம் நிதி வசூலிக்கப்பட்டு ரூ. 16,425 திரட்டப்பட்டது. இதற்கென 12 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. 1886ஆம் ஆண்டு பீப்பிள்ஸ் பார்க் (People's Park) பகுதியில் 57 கிரவுண்டு நிலம் 99 ஆண்டு லீசுக்கு எடுக்கப்பட்டது. லீசுக்கான தொகை எவ்வளவு தெரியுமா? ஒரு கிரவுண்டுக்கு எட்டணா வீதம் மொத்தம் ரூ 28.

விஜயநகர மன்னர் சர் ஆனந்த கஜபதி ராவ் அடிக்கல் நாட்ட கட்டுமானப் பணி தொடங்கியது. இதற்கு நிதி அளித்தவர்களில் திருவாங்கூர் மகாராஜா, மைசூர் மகாராஜா, புதுக்கோட்டை அரசர் ஆகியோர் முக்கியமானவர்கள். இந்தோ - சாராசெனிக் பாணியில் அமைந்த இந்த கட்டிடத்தை ராபர்ட் பெல்லாஸ் சிஸ்ஹோம் என்ற கட்டிடக் கலை வல்லுநர் வடிவமைத்துக் கொடுக்க, நம்பெருமாள் செட்டி கட்டினார். இத்தாலியப் பாணி கோபுரத்தில் கேரளப் பாணி கூரை அமைக்கப்பட்டது இதன் சிறப்பம்சம். திருவாங்கூர் மகாராஜாவும் நிதி அளித்ததால், கேரளப் பாணி கூரை அமைத்துவிட்டார்கள் போல் இருக்கிறது.

விக்டோரியா அரசியின் பொன்விழா 1887ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டதை நினைவுகூறும் வகையில், இந்த கட்டிடத்திற்கு அவரின் பெயரை சூட்ட வேண்டும் என முக்கியப் பிரமுகர்கள் கருத்து தெரிவித்தனர். இதனை அடுத்து 1888ஆம் தொடங்கி 1890ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இக்கட்டிடத்திற்கு விக்டோரியா பப்ளிக் ஹால் எனப் பெயர் சூட்டப்பட்டது.

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் ஆங்கிலேயர் காலத்து மெட்ராஸை நினைவுபடுத்தியபடி நின்று கொண்டிருக்கும் இந்த சிவப்பு நிறக் கட்டிடம், சலனப்படக் காட்சி திரையிடப்பட்டது முதல் அரசியல் கூட்டங்கள் அரங்கேறியது வரை மெட்ராசின் பல முக்கிய நிகழ்வுகளை பார்த்திருக்கிறது.

தமிழ் நாடக உலகின் முன்னோடிகளான சங்கரதாஸ் சுவாமிகளும், பம்மல் சம்மந்த முதலியாரும் தங்களின் நாடகங்களை இங்கு மேடையேற்றி இருக்கின்றனர்.

அக்கால மெட்ராஸ்வாசிகளின் மாலைப் பொழுதை இனிமையாக்கும் பணியை இந்த சிவப்பு கட்டிடம் செவ்வனே செய்திருக்கிறது. அவர்களின் நினைவுகளில் உற்சாகம் பாய்ச்சக் கூடிய கனவுப் பிரதேசமாகவே இந்த ஹால் திகழ்ந்திருக்கிறது. மரங்கள் நிறைந்த பீப்பிள்ஸ் பார்க்கில், கலைநயமிக்க கட்டிடத்தில், ரம்மியமான மாலை நேரத்தில், வங்கக் கடல் காற்று வருடிக் கொடுக்க, ஹாயாக அமர்ந்து நாடகம் பார்ப்பது என்பது நினைக்கும்போதே சுகமான மயக்கம் தரக்கூடிய விஷயம்தானே. அதனால்தான் இங்கு நடைபெறும் நாடகங்களைக் காண மக்கள் ஆர்வமாகக் கூடினர். பெரும்பாலான நாடகங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே நடைபெற்றிருக்கின்றன. சில காட்சிகளுக்கு முன்பதிவு செய்தும் பார்த்திருக்கிறார்கள். அன்றைய மெட்ராசில் தெலுங்கர்கள் அதிகம் வசித்ததால், தெலுங்கு நாடகங்கள் பெருமளவில் அரங்கேறின.

பம்மல் சம்பந்த முதலியாரின் சுகுண விலாஸ சபாவினர் இந்த அரங்கில் முதன்முதலில் நாடகம் போட்டபோது அதனை பிரபலப்படுத்துவதற்காக 25,000 பிட் நோட்டீஸ்களை அச்சடித்து, ஒரு குதிரையை வாடகைக்கு அமர்த்தி, ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மூலம் தெருத்தெருவாக கொடுத்திருக்கின்றனர். அந்தக் காலத்தில் இங்கு நடைபெறும் நாடகங்கள் இரவு 9 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.30 மணிக்கு முடியும்.

இதனால் அடுத்தநாள் வேலைக்கு செல்ல முடியவில்லை என அரசு ஊழியர்களும், வியாபாரிகளும் புலம்பியதால், நாடக நேரம் மாற்றப்பட்டது. 1906இல் சுகுண விலாஸ சபாவினர், தங்களின் 'காதலர் கண்கள்' என்ற நாடகம் மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிக்கு முடியும் என அறிவித்தபோது பலரும் ஆட்சேபம் தெரிவித்தனர். இந்த முயற்சிக்கு வரவேற்பு கிடைக்காது என்றனர். ஆனால் மக்கள் இதனை விரும்பி ஏற்றுக்கொண்டனர். பின்னர் மெட்ராசில் சினிமா அரங்குகள் தொடங்கப்பட்டபோது மாலைக் காட்சிக்கு இதேநேரம்தான் தேர்வு செய்யப்பட்டது.

தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஜூலியஸ் சீசர் போன்ற ஆங்கில நாடகங்களும் இங்கு மேடையேறி இருக்கின்றன. ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களை தமிழில் மொழிமாற்றம் செய்தும் அரங்கேற்றி இருக்கின்றனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் ஷேக்ஸ்பியர் தினம் கொண்டாடி, பின்னாளில் அதனை ஷேக்ஸ்பியர் வாரமாக மாற்றினர். அரங்கில் இடமில்லாத அளவிற்கு கூட்டம் வந்ததால், விக்டோரியா அரங்கத்திற்கு பின்புறம் உள்ள டென்னிஸ் மைதானத்தில் நாடகம் போட வேண்டியதாகிவிட்டது.

விக்டோரியா ஹாலில் ஒருமுறை பம்மல் சம்பந்த முதலியாரின் மனோகரா நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கிளைமாக்ஸில் மனோகரன் தன்னை பிணைத்திருக்கும் சங்கிலிகளை அறுத்தெறியும் காட்சி. மனோகரனாக நடித்தவர் சங்கிலிகளை அறுத்தெறிந்த சத்தம் கேட்டு, தனது குவார்டர்ஸில் தூங்கிக் கொண்டிருந்த விக்டோரியா ஹாலின் கண்காணிப்பாளர் எல்லிஸ் ஏதோ கலவரம் வந்துவிட்டது என எண்ணி அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தாராம். இப்படி நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள் இந்த ஹாலில் அரங்கேறி இருக்கின்றன.

நாடகங்கள் மட்டுமின்றி பொதுக் கூட்டங்களும் இங்கு நடைபெற்றிருக்கின்றன. சுவாமி விவேகானந்தர், சர்தார் வல்லபாய் படேல், கோபால கிருஷ்ண கோகலே, பாரதியார் போன்ற தலைவர்கள் இங்கு உரையாற்றி உள்ளனர். 1902ஆம் ஆண்டு இந்த அரங்கில் மாறுவேடப் போட்டி கூட நடந்திருக்கிறது.

மெல்ல சிதிலமடைந்து வந்த இந்த புராதன கட்டிடத்தை 1967ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபொழுது புனரமைத்து திறந்து வைத்தார். ஆனால் கடந்த 40 ஆண்டுகளாக இது பயன்பாடின்றி இருந்தது. தற்போது மீண்டும் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாடிப்படிகள், பழுதடைந்த ஜன்னல், கதவுகள், சுவர்களில் உடைந்த செங்கற்கள் ஆகியவை கலைநயத்துடன் வடிவமைப்பு மாறாமல் புனரமைக்கப்படுகின்றன. பணிகள் நிறைவடைந்ததும் கலை, கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் ஒரு பொன்மாலைப் பொழுதிற்கு தயாராகிறது விக்டோரியா பப்ளிக் ஹால்.

நன்றி - தினத்தந்தி

-----------------------------


* விக்டோரியா அரசியின் பெயர் கொண்ட கட்டடிடத்தில் அவரின் படம் இருக்க வேண்டும் எனக் கருதி சுகுண விலாஸ சபாவினர் ரூ. 200 செலவழித்து 1910ஆம் ஆண்டு அவரது படத்தை நிறுவினர்.

* 1908ஆம் ஆண்டு இங்கு ஒரு நூலகமும் ஏற்படுத்தப்பட்டது. ஆங்கிலம் மட்டுமின்றி நான்கு தென்னிந்திய மொழி நூல்கள் இதில் இடம்பெற்றிருந்தன. அந்நாட்களில் நாடகங்கள் தொடர்பான புத்தகங்கள் இருந்த நூலகம் சென்னையிலேயே இது ஒன்றாகத் தான் இருக்கும் என்கிறார்கள்.

1 comment:

  1. very intresting. very nice work. new generations like this.

    T.Siddarthan.

    ReplyDelete