என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Wednesday, October 26, 2011

பிரசிடென்சி கல்லூரி

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தாயாக கருதப்படும் பிரசிடென்சி கல்லூரி எனப்படும் மாநிலக் கல்லூரி சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று. மெரினா கடற்கரைக்கு எதிரில் வங்கக் கடலை வேடிக்கை பார்த்தபடி கம்பீரமாக நின்றுகொண்டிருக்கும் இந்த சிகப்பு நிறக் கட்டிடத்திற்கு 140 வயதாகிறது. எத்தனையோ அறிஞர் பெருமக்களை உருவாக்கி இருக்கும் இக்கல்லூரி, சென்னைக்கு கிடைத்த மாபெரும் வரம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இத்தாலிய அரண்மனை போல் காட்சியளிக்கும் இந்த கல்லூரியின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. 1826இல் அப்போதைய மெட்ராஸ் ஆளுநராக இருந்த தாமஸ் மன்றோ, Committee of Public Instruction என்ற குழு ஒன்றை அமைத்தார். பத்து ஆண்டுகள் கழித்து 1836இல் இந்த குழுவின் பணிகளை Committee of Native Education என்ற கல்விக் குழு ஏற்றுக் கொண்டது. அந்தக் குழு கல்வி தொடர்பாக சில யோசனைகளை முன்வைத்தது. ஆனால் அவை அப்போதைய ஆளுநர் லார்ட் எல்ஃபின்ஸ்டோனுக்கு பிடிக்கவில்லை. அதற்கு பதில் அவரே 19 தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றினார். அதில் முக்கியமான தீர்மானம், மெட்ராசில் ஒரு பல்கலைக்கழகத்தை தொடங்குவது என்பது.

இதன் முதல்படியாக, 1840ஆம் ஆண்டு அக்டோபர் 15ந் தேதி, எழும்பூரில் ஒரு வாடகைக் கட்டிடத்தில் பிரசிடென்சி பள்ளி தொடங்கப்பட்டது. கல்வி ஆர்வம்மிக்க தனியார் சிலர் சேர்ந்து இந்த பள்ளியைத் தொடங்கினர். இந்த பள்ளியின் நிர்வாகம் அன்று மெட்ராஸில் வசித்த ஆங்கிலேய மற்றும் முக்கிய இந்தியப் பிரமுகர்கள் அடங்கிய குழுவின் கட்டுப்பாட்டில் இருந்தது.

இந்த பள்ளியின் முதல்வராக இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் ஹானர்சில் தேர்ச்சி பெற்ற இ.பி. பவுல் என்பவரை நியமிக்க எல்ஃபின்ஸ்டோன் விரும்பினார். ஆனால் விதி விளையாடியதில் பவுலுக்கு அந்த வரலாற்றுப் பெருமை கிடைக்காமல் போய்விட்டது.

எல்ஃபின்ஸ்டோனின் அழைப்பை ஏற்று உடனடியாக இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டு வந்த பவுல், 1840 செப்டம்பர் 20ந் தேதி பம்பாய் துறைமுகத்தை அடைந்துவிட்டார். ஆனால் அங்கிருந்து மெட்ராஸ் துறைமுகம் வருவதற்கு அவருக்கு 4 வார காலம் ஆகிவிட்டது. அதுவரை பொறுக்க முடியாத கல்விக் குழுவினர், கல்கத்தா ஹூக்லி கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த கூப்பர் என்பவரை தற்காலிக முதல்வராக இருக்கும்படி கேட்டுக் கொண்டனர். அவரும் மாதம் ரூ.400 சம்பளத்திற்கு பிரசிடென்சி பள்ளியின் முதல்வராக வந்து சேர்ந்தார்.

பவுல் வந்த பிறகு சில மாதங்களிலேயே கூப்பர் மீண்டும் கல்கத்தா சென்றுவிட்டார். 1841ல் பிரசிடென்சி பள்ளி, உயர்நிலைப் பள்ளியானது. இடமும் எழும்பூரில் இருந்து பிராட்வேவிற்கு மாறியது. மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்து 1853இல் பிரசிடென்சி பள்ளி, பிரசிடென்சி கல்லூரியாக உயர்ந்தது. சிறுவர், சிறுமியர் உலவிக் கொண்டிருந்த வளாகத்தில் வளர்இளம் பருவ பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கத் தொடங்கின. 1857இல் சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட போது, அதன் கீழ் இந்த கல்லூரி இணைந்தது. அப்போதும்கூட பிரசிடென்சி கல்லூரி பிராட்வேயில் தான் இருந்தது.

கல்லூரிக்கு இந்த சிறிய இடம் போதாது என்பது சில ஆண்டுகளிலேயே உணரப்பட்டது. எனவே பெரிய கட்டிடம் ஒன்றை மெரினா கடற்கரைக்கு எதிரில் கட்டுவது என தீர்மானிக்கப்பட்டது. இந்த கட்டடத்திற்காக சிறப்பான வரைபடம் தயாரித்துக் கொடுப்பவருக்கு ரூ.3000 சன்மானம் அளிக்கப்படும் என 1864இல் ஒரு போட்டி அறிவிக்கப்பட்டது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு ரூ 3000 என்பது எவ்வளவு பெரிய தொகை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அருமையான ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என விரும்பியதால், இத்தனை பெரிய சன்மானம் கொடுக்க முன்வரப்பட்டது. இந்த ஜாக்பாட் பரிசு யாருக்கு என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்க, அந்த பரிசைத் தட்டிச் சென்றார் இங்கிலாந்தின் புகழ்பெற்ற கட்டடக்கலை நிபுணரான ராபர்ட் சிஸ்ஹோம்.

இதனைத் தொடர்ந்து கல்கத்தாவில் இருந்த அவர் மெட்ராஸ் வந்தார். மெட்ராசில் ராபர்ட் சிஸ்ஹோம் வடிவமைத்துக் கொடுத்த முதல் கட்டடம் பிரசிடென்சி கல்லூரி. பின்னர் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், விக்டோரியா பப்ளிக் ஹால், தலைமைத் தபால் நிலையம் என அந்தக் கால மெட்ராசின் பல கட்டடங்கள் இவரது கைவண்ணத்தில் உருவாகின. அவர் மெட்ராஸ் வந்த புதிதில் வடிவமைத்துக் கொடுத்த கட்டிடம் என்பதால், பிரசிடென்சி கல்லூரி கட்டடத்தில் இத்தாலிய பாணியின் தாக்கம் அதிகம் இருக்கும். காரணம், அப்போதைய இங்கிலாந்தில் இத்தாலிய பாணி கட்டடங்கள் பிரபலமாக இருந்தன. பின்னர் அவர் வடிவமைத்த கட்டிடங்களில் பலவகை பாணிகள் காணப்படுகின்றன.

1867இல் அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் லார்ட் நேப்பியர் அடிக்கல் நாட்ட கட்டுமானப் பணி தொடங்கியது. மூன்று ஆண்டு கால கடும் உழைப்பில் கட்டி முடிக்கப்பட்ட பிரசிடென்சி கல்லூரி கட்டடத்தை 1870ஆம் ஆண்டு மார்ச் 25ந் தேதி எடின்பர்க் கோமகன் திறந்துவைத்தார்.

1940இல் கல்லூரியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, கல்லூரி கட்டடத்தில் நான்கு முகங்களைக் கொண்ட கடிகார கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டது. அந்த தானியங்கி எலெக்ட்ரிக் கடிகாரத்தில் சிறப்பு தானியங்கி விளக்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. கல்லூரியின் இயற்பியல் பேராசிரியர் பரமேஸ்வரன் தலைமையில் இயற்பியல் துறையிலேயே அந்த கடிகாரம் வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்தக் காலத்தில் மணிக்கொரு தரம் இந்த கடிகாரம் இசைக்கும் இனிய இசை திருவல்லிக்கேணி முழுவதும் எதிரொலிக்குமாம்.

பிரசிடென்சி கல்லூரியின் மற்றொரு சிறப்பு இங்கு பணிபுரிந்த வரலாற்று சிறப்புமிக்க ஆசிரியர்கள். கரையானுக்கும், செல்லரிப்புக்கும் பலியாகிக் கொண்டிருந்த அரிய தமிழ் சுவடிகளைக் காப்பாற்றிக் கொடுத்ததால், தமிழ் தாத்தா என்று கொண்டாடப்படும் உ.வே. சாமிநாத அய்யர், இங்கு 16 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கல்லூரியின் முன்புறத்தில் 1948ஆம் ஆண்டு அவருக்கு சிலை வைக்கப்பட்டது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், வள்ளலாரின் திருவருட்பா வெளியாகக் காரணமாக இருந்த தொழுவூர் வேலாயுதம் முதலியார், இலங்கை தமிழறிஞர் சி.வை. தாமோதரன் பிள்ளை, பேராசிரியர் சி. இலக்குவனார் (இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தொல்காப்பியத்தை அண்ணா யேல் பல்கலைக்கழகத்திற்கு செல்லும்போது கொண்டு சென்றார்) என பலப் பிரபலங்கள் இங்கு ஆசிரியர்களாக பணிபுரிந்திருக்கின்றனர்.

அக்காலத்தில் நிலவிய சாதிய ஏற்றத் தாழ்வுகள் பிரசிடென்சி கல்லூரியையும் விட்டுவைக்கவில்லை. இங்கு தமிழ்ப் பேராசிரியராக வேலை பார்த்த கா. நமச்சிவாயம் முதலியார் அவர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.81 ஆகவும், அதே நேரத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராக வேலை பார்த்த குப்புசாமி சாஸ்திரி அவர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.300 ஆகவும் இருந்திருக்கிறது. இதுகுறித்து அறிந்ததும், இந்தக் கொடுமையை எதிர்த்து தந்தை பெரியார் அவர்கள் எழுத அதன் அடிப்படையில் நீதிக்கட்சி ஆட்சியில் முதலமைச்சராக இருந்த பனகல் அரசர் அந்த வேறுபாட்டை நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.

நோபல் பரிசு பெற்ற சர். சி.வி.ராமன், டாக்டர் சுப்பிரமணிய சந்திரசேகர் ஆகியோர் இந்த கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள். சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர், மூதறிஞர் ராஜாஜி, இந்தியாவின் முதல் பாதுகாப்புத் துறை அமைச்சர் வி.கே. கிருஷ்ண மேனன், என இக்கல்லூரியின் பிரபலமான மாணவர்கள் பட்டியலும் மிக மிக நீளமானது.

இப்படி எண்ணற்ற மாணவர்களை உருவாக்கியபடி, தனது 200வது பிறந்தநாளை நோக்கி அதே இளமையுடன் முன்னேறிக் கொண்டிருக்கிறது சென்னை மாநிலக் கல்லூரி.

நன்றி : தினத்தந்தி

* 1891இல் இந்த கல்லூரியின் பொன்விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கல்லூரி முதல்வரான டாக்டர் டேவிட் டங்கன், கல்லூரியின் 50 ஆண்டு சாதனைகளை புத்தகமாக வெளியிட்டார். இதுதான் கல்லூரியின் வரலாறை நன்கு அறிந்துகொள்ள இப்போது நமக்கு உதவுகிறது.

* இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆரம்பித்த இரண்டு பிரசிடென்சி கல்லூரிகளில் இதுவும் ஒன்று. மற்றொன்று கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரி

* 1987ஆம் ஆண்டு இந்த கல்லூரிக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment