என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Sunday, October 30, 2011

பேங்க் ஆஃப் மெட்ராஸ்

கடற்கரை ரயில்நிலையத்திற்கு எதிரில் பிரம்மாண்டமாக காட்சியளித்துக் கொண்டிருக்கும் ஒரு சிகப்பு கட்டடத்தில் தற்போது பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடம் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டதே ஒரு வங்கிக்காகத்தான். அந்த வங்கிதான் மெட்ராஸ் ராஜதானியின் தலைமை வங்கியாக ஒரு காலத்தில் செயல்பட்டு வந்த பேங்க் ஆஃப் மெட்ராஸ். அன்றைய மெட்ராஸ்வாசிகளின் கைகளில் புரண்டு கொண்டிருந்த ரூபாய் நோட்டுகளை அச்சடித்து விநியோகித்த அந்த புராதன வங்கியின் கதையைத் தான் இந்த வாரம் பார்க்க இருக்கிறோம்.

இந்தியாவில் பண்டைய காலந்தொட்டு வசதி படைத்த சில தனியார் தான் வங்கித் தொழில் செய்து வந்தனர். பொதுவங்கிகள் என்ற விஷயமே பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில்தான் தொடங்கப்பட்டது. 1786ஆம் ஆண்டு தி ஜெனரல் பேங்க் ஆஃப் இந்தியா, மற்றும் பேங்க் ஆப் ஹிந்துஸ்தான் ஆகியவை முதலில் துவங்கப்பட்டன. ஆனால் அவ்வங்கிகள் தற்பொழுது செயல்பாட்டில் இல்லை. இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருப்பவற்றில் மிகப்பழமையான வங்கி பாரத ஸ்டேட் வங்கியாகும் (State Bank of India).

அப்படிப் பழம்பெருமை பெற்ற பாரத ஸ்டேட் வங்கியின் தாய்தான் பேங்க் ஆப் மெட்ராஸ். இதன் கதை சுமார் 200 ஆண்டுகள் பழமையானது. ஆங்கிலேயர்கள் மெட்ராசில் குடியேறி நிர்வாக வசதிகளுக்காக பல்வேறு விஷயங்களையும் உருவாக்கிக் கொண்டிருந்தபோது, நிதி விவகாரங்களை கையாள ஒரு வங்கி தேவை என்பதை உணர்ந்தனர்.

முதன்முதலில் 1683இல் ஆளுநர் வில்லியம் ஜிப்போர்டும், அவரது குழுவினரும் மெட்ராசில் ஒரு வங்கியை தொடங்கினர். இதன் அடுத்த கட்டமாக 1805இல் அப்போதைய ஆளுநர் சர் வில்லியம் பெண்டிக் நிதிக் குழு ஒன்றை கூட்டினார். அக்குழுவின் ஆலோசனையின்படி 1806இல் ஒரு வங்கி உருவாக்கப்பட்டது. அதுதான் மெட்ராஸ் வங்கி (பேங்க் ஆப் மெட்ராஸ் என்பது வேறு), இதனை அரசு வங்கி என்றும் மக்கள் அழைத்தனர்.

அந்தக் காலத்தில் இதைப் போல வேறு சில வங்கிகளும் செயல்பட்டு வந்தன. பின்னர் 1843ஆம் ஆண்டு, மெட்ராஸ் வங்கி, கர்நாடிக் வங்கி, பிரிட்டிஷ் பேங்க் ஆஃப் மெட்ராஸ், ஆசியாடிக் வங்கி ஆகிய நான்கையும் இணைத்து ரூ.30 லட்சம் முதலீட்டில் ஒரு மத்திய வங்கி தொடங்கப்பட்டது. அதுதான் பேங்க் ஆஃப் மெட்ராஸ்.

கிட்டத்தட்ட சென்னை மாகாணம் முழுவதற்குமான ரிசர்வ் வங்கியைப் போன்று இது செயல்பட்டது. இதேபோல பம்பாய் மற்றும் வங்காள மாகாணங்களுக்காக பேங்க் ஆஃப் பம்பாய், பேங்க் ஆஃப் பெங்கால் ஆகிய வங்கிகள் உருவாக்கப்பட்டன. கிழக்கிந்திய கம்பெனி வழங்கிய உரிமை சாசனத்தின் கீழ், மூன்று தலைமை மாகாணங்களுக்குரிய வங்கிகளாக இவை நிறுவப்பெற்றன.

பேங்க் ஆஃப் மெட்ராஸிற்கு கோவை, நாகை, தூத்துக்குடி, பெங்களூர், மங்களூர், கொச்சி, ஆலப்புழை, குண்டூர் என தென்னிந்தியா முழுவதும் கிளைகள் இருந்தன. இதுமட்டுமின்றி இலங்கையின் கொழும்பு நகரிலும் இந்த வங்கி கிளை விரித்திருந்தது. ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது உள்பட சென்னை மாகாணத்தின் அனைத்து நிதித் தேவைகள் மற்றும் சேவைகளை இந்த வங்கி கவனித்துக் கொண்டது.

இந்த வங்கியின் தலைமை அலுவலகம் கட்டுவதற்காக 1895ஆம் ஆண்டு மெரினா கடற்கரைக்கு எதிரில், தெற்கு கடற்கரைச் சாலையில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து நிலம் வாங்கப்பட்டது. அங்கு நம்பெருமாள் செட்டி என்ற மெட்ராசின் புகழ்பெற்ற காண்ட்ராக்டரைக் கொண்டு ரூ.3 லட்சம் செலவில் ஒரு பிரம்மாண்ட கட்டடம் கட்டப்பட்டது. பாரிமுனையில் உள்ள ஐகோர்ட், சட்டக்கல்லூரி, எழும்பூரில் உள்ள சிற்பக் கலை கல்லூரி, மியூசியம், கன்னிமாரா நூலகம் போன்றவற்றை எல்லாம் கட்டியவர் இந்த நம்பெருமாள் செட்டிதான். கர்னல் சாமுவேல் ஜேக்கப் வடிவமைப்பில் கட்டப்பட்ட பேங்க் ஆஃப் மெட்ராஸ் கட்டிடம், விக்டோரியா காலத்து இந்தோ சாராசனிக் கட்டடக் கலைக்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது.

1921ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி, பேங்க் ஆஃப் மெட்ராஸ், பேங்க் ஆஃப் பெங்காள், பேங்க் ஆஃப் பம்பாய் ஆகிய மூன்று மாகாண வங்கிகளையும் இணைத்து இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியா (Imperial Bank of India) உருவாக்கப்பட்டது. இம்பீரியல் வங்கி நியமனம் செய்த முதல் இந்திய டைரக்டர் யார் தெரியுமா? நம்பெருமாள் செட்டிதான். இந்த வங்கி 1955இல் மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னர், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எனப்படும் இன்றைய பாரத ஸ்டேட் வங்கியாக மாறியது.

கடற்கரை ரயில் நிலையத்திற்கு எதிரில் இருக்கும் இந்த பழைய பேங்க் ஆஃப் மெட்ராஸ் கட்டடம் சென்னையின் பல முக்கிய நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறது. அவற்றில் குறிப்பிடத்தக்கது முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள். உலகப் போர்களுக்கும் இந்த வங்கிக்கும் ஒரு எதிர்பாராத தொடர்பு ஏற்பட்டது. 1914ஆம் ஆண்டு, முதல் உலகப் போர் உச்சத்தில் இருந்தபோது, ஜெர்மனின் எம்டன் கப்பல் சென்னை துறைமுகம் மீது குண்டு வீசியது. ஒரு சில நிமிடங்களில் 125 குண்டுகளை எம்டன் அள்ளி வீசியது. இந்த தாக்குதலில் ஒரு குண்டு சிதறல், சென்னை உயர்நீதிமன்றத்தின் பின்புற சுற்றுச்சுவரில் விழுந்த இடம் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எம்டன் வீசிய ஒரு குண்டு கடற்கரையில் விழுந்து சிதறி பேங்க் ஆப் மெட்ராசின் சுவற்றில் மண்ணை அப்பியது. எம்டன் போய்விட்டாலும் வங்கியின் சுவற்றில் அது விட்டுச் சென்ற அடையாளம் மெட்ராஸ்வாசிகளை கதிகலங்க வைத்தது. சுவற்றில் அப்பியிருந்த மணலை அவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து அச்சத்துடன் பார்த்துச் சென்றனர்.

இரண்டாம் உலகப் போரின்போது மெட்ராஸ் மீது ஜப்பான் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. குறிப்பாக துறைமுகப் பகுதியில் அவை குண்டுகளை வீசின. இந்த தாக்குதலையும் பேங்க் ஆஃப் மெட்ராஸ் மௌன சாட்சியாக பார்த்துக் கொண்டிருந்தது. இப்படி சென்னையுடன் தொடர்புடைய பல அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளை இந்த புராதன கட்டடம் பார்த்திருக்கிறது, இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

நன்றி - தினத்தந்தி

---------

* 1969ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி நாட்டின் மிகப்பெரிய 14 வங்கிகள் நாட்டுடைமைக்கப்பட்டன. அப்போது நாட்டிலிருந்த வங்கிக் கிளைகள் 8260 மட்டுமே.

* பேங்க் ஆஃப் மெட்ராஸ் வெளியிட்ட ரூபாய் நோட்டுகளில் மெட்ராஸ் ஆளுநராக இருந்த சர் தாமஸ் மன்ரோவின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment