என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, February 19, 2011

புலி வேஷம் போட்ட பூனை

Ice Age படத்தில் வரும் Diego எனப்படும் கோரைப் பல் புலி (Saber Tooth Tiger), 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்த பூமியில் உலா வந்து கொண்டிருந்தது. புலி என அழைக்கப்பட்டாலும் உண்மையில் இது புலி இல்லை. புலி மாதிரி, இல்லை இல்லை சிங்கம் மாதிரி. குழப்பமா இருக்கா?

உண்மையை சொன்னால், இது ஒரு பூனை. கொஞ்சம் பெரிய சைஸ் பூனை. அதாவது கிட்டத்தட்ட இன்றைய சிங்கம் அளவுக்கு, ஆனால் கொஞ்சம் குண்டா இருக்கும். சில கோரைப் பல் புலிகள் 15 அடி நீளம் இருக்குமாம். ஆனால் இவற்றால் புலிகளைப் போல வேகமாக ஓட முடியாது. அதனால் வேகமாக ஓடும் சிறிய மிருகங்கள் இதற்கு சுலபமாக அல்வா கொடுத்துவிடும்.

இதன் தொண்டையில் ஒரு விசேஷ எலும்பு இருக்கிறது. இதனைக் கொண்டு இவற்றால் சிங்கத்தைப் போல கர்ஜிக்க முடியும். தொலைவில் இருக்கும் தனது சகாக்களுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள இது உதவும்.

இதனோட பலமே கடைவாய் பகுதியில் காட்சியளிக்கும் கோரைப் பல் தான். வாயின் இரண்டு பக்கமும் சுமார் 7 அங்குலம் நீளத்திற்கு பயங்கரமா இரண்டு பற்கள் இருக்கும். இதை இந்த பூனைகள் கத்தி மாதிரி பயன்படுத்தும். காட்டெருமை, மான், குதிரை என அன்றைய மெனு கார்டில் இருக்கும் மிருகத்தின் கழுத்து அல்லது வயிற்றுப் பகுதியில் இந்த பற்களால் ஆழமா குத்தி கிழித்துவிடும். அந்த பயங்கர கத்திக் குத்தில் பிடிபட்ட விலங்கு பிராணனை விட்டதும், பொறுமையாக ஏதாவது புதருக்குள் இழுத்துக் கொண்டு போய் ஆற அமர ஸ்வாகா செய்யும்.

கோரைப் பல் புலிகள் ஆரம்பத்தில் ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் தான் சுற்றிக் கொண்டிருந்தன. பின்னர் மெல்ல மெல்ல அமெரிக்க கண்டத்திற்கும் பயணப்பட்டன. கலிபோர்னியா மாகாணத்தில் கோரைப் பல் புலியின் தொன்மங்கள் (fossils) கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பருவ நிலை மாற்றமும், மனிதர்களின் கைவரிசையும் தான் இவை அழிந்து போனதற்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இவை சின்னச் சின்ன மிருகங்களை வேட்டையாட முடியாது என்பதால் பெரிய விலங்குகளை நம்பியே வாழ்ந்து வந்தன. அந்த பெரிய விலங்குகளும் மெல்ல பூமியில் இருந்து மறைந்துவிட்டதால், பசிக் கொடுமையாலேயே இவற்றில் பாதி பரலோகம் போயிருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. எது எப்படியோ, உண்மையில் உலா வந்து கொண்டிருந்த ஒரு உயிரினத்தை அழித்துவிட்டு, அனிமேஷனில் அதனை திரையில் உலவ விட்டு ரசித்துக் கொண்டிருக்கிறோம்.

2 comments:

  1. ஐஸ் ஏஜில் பார்த்த புலி(பூனை) பற்றி புதிய தகவல்கள்.நன்றி!

    ReplyDelete
  2. புலிப்பற்றிய பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

    ReplyDelete