வாழ்க்கை மிகவும்
விசித்திரமானது. அது சில நேரங்களில் எதிரெதிரான இரண்டு விஷயங்களை ஒன்றாக கட்டிப்
போட்டுவிடுகிறது. அப்படி ஒரு விநோத விளையாட்டின் சாட்சிதான் நேப்பியர் பாலம். மெட்ராசில்
முதன்முதலில் கட்டப்பட்ட பாலங்களில் இன்றும் நிலைத்து நிற்கும் இந்த பாலத்தின் கதை
மிகவும் சுவாரஸ்யமானது.
![]() |
நேப்பியர் பாலம் 1895இல் |
1819இல்
ஸ்காட்லாந்தில் ஒரு பிரபுக் குடும்பத்தில் பிறந்த ஃபிரான்சிஸ் நேப்பியர், இங்கிலாந்தில்
உள்ள டிரினிடி கல்லூரியில் சேர்ந்தார். பெற்றோர் சேர்த்துவிட்டார்களே தவிர அவரால்
படிப்பை தொடர முடியாததால் பாதியிலேயே வெளியேறிவிட்டார். ஆனால் தனியாக ஆசிரியரை
அமர்த்தி சில வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொண்டார். அதுதான் அவருக்கு
பிற்காலத்தில் பெரிதும் கை கொடுத்தது.
வெளிநாட்டு மொழிகள்
அறிந்தவர் என்பதால் இங்கிலாந்தின் தூதராக அவர் பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டார். வியன்னா, இத்தாலி, அமெரிக்கா, ரஷ்யா என உலகமெல்லாம்
சுற்றிக் கொண்டிருந்தவரை இங்கிலாந்து அரசு கடைசியில் மெட்ராசிற்கு அனுப்பியது. 1866இல்
மெட்ராஸ் ஆளுநராக நியமிக்கப்பட்டார் லார்ட் நேப்பியர்.
நேப்பியர் பதவி ஏற்ற
சிறிது காலத்திலேயே அவர் ஒரு மிகப்பெரிய பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.
இன்றைய ஒரிசாவில் உள்ள கஞ்சம் (Ganjam) மாவட்டத்தில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அன்றைய மெட்ராஸ் மாகாணத்திற்கு
உட்பட்ட பகுதி என்பதால், பஞ்சத்தால் தவித்த கஞ்சம் மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை
நேப்பியர் தலையில் விழுந்தது. ஆனால் நேப்பியர் இதனை திறமையாகவே சமாளித்தார்.
உலகம் முழுவதும்
சுற்றிப் பெற்ற அனுபவமும், நட்பும் அவருக்கு கை கொடுத்தது. கிரீமிய யுத்தத்தில்
காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளித்ததன் மூலம் கை விளக்கேந்திய காரிகை என
வரலாற்றில் போற்றப்படும் பிரபல செவிலியர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல், நேப்பியரின்
நெருங்கிய நண்பர். மக்கள் பஞ்சத்தால் மடிந்தபோது, அவருக்கு கடிதம் எழுதி ஆலோசனை
கேட்டார் நேப்பியர். நைட்டிங்கேலின் ஆலோசனைகளை உடனே செயல்படுத்தவும் செய்தார். இது
பஞ்சத்தை எதிர்கொள்ள மிகவும் உதவியது.
![]() |
நேப்பியர் அருங்காட்சியகம் |
பென்னாறு அணை
நேப்பியர் காலத்தில்தான் கட்டப்பட்டது. இதேபோல விவசாயத்தை வளப்படுத்த நிறைய பாசனத்
திட்டங்களை நேப்பியர் செயல்படுத்தினார். 1872இல் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த
ரிச்சர்ட் பூர்ட், அந்தமானில் கொல்லப்பட்ட பிறகு சிறிது காலம் தற்காலிக வைஸ்ராயாக
நேப்பியர் நியமிக்கப்பட்டார். பின்னர் ஒரு புதிய வைஸ்ராய் கிடைத்ததும், நேப்பியர்
இந்திய சேவைகளை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிவிட்டார்.
இதனிடையே நேப்பியர்
மெட்ராஸ் ஆளுநராக இருந்தபோது, 1869இல் கட்டப்பட்டதுதான் நேப்பியர் பாலம். அந்த
காலத்தில் இதனை இரும்புப் பாலம் என்று அழைத்தனர். மெரினாவையும், புனித ஜார்ஜ்
கோட்டையையும் இணைக்கும் வகையில், 149 மீட்டர் நீளத்தில், 6 வளைவுகளுடன் பிரம்மாண்டமாக
இந்த பாலம் கட்டப்பட்டது. அதெல்லாம் சரி, எதற்காக இப்படி ஒரு பாலத்தை கட்டினார்கள்
என்ற கேள்விக்கு விடை தேடிய போது ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்தது.
இப்போது நேப்பியர்
பாலம் இருக்கிற இடத்துக்கு அருகே அந்த காலத்தில் நரிமேடு என்று ஒரு குன்று
இருந்தது. ஜோக் ஹில் என்று அழைக்கப்பட்ட அந்தக் குன்றில் பீரங்கியை நிறுத்தி குறி
வைத்தால் கோட்டையைத் தரைமட்டம் ஆக்கிவிட முடியும்.
எனவே கோட்டைக்கு அருகில் இப்படியொரு ஆபத்து வேண்டாம் என நினைத்த வெள்ளையர், குன்றை அகற்றுவது என முடிவெடுத்தனர். எனவே அந்தக் குன்றின் மண்ணை மாட்டு வண்டிகளில் எடுத்துச் சென்று ஒரு இடத்தில் கொட்டினர். அப்படி மண் அடிக்கப்பட்ட பகுதிதான் இன்று மண்ணடி என்று அழைக்கப்படுகிறது.
இப்படி குன்று காணாமல் போன பிறகுதான் அங்கு நேப்பியர் பாலம் முளைத்தது. மெட்ராசில் உள்ள அழுக்குகளை எல்லாம் சுமந்துகொண்டு, தள்ளாடி அசைந்துவரும் கூவம் ஆறு, இந்த பாலத்திற்கு அடியில் நுழைந்துதான் வங்கக் கடலோடு கலக்கிறது. லார்ட் நேப்பியர் சுத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். நகர சுகாதாரம் பற்றி சிறப்பு பயிற்சி பெறுவதற்காக அதிகாரிகள் சிலரை இங்கிலாந்திற்கு அனுப்பியவர். இப்படி சுத்தம், சுகாதாரம் என வாழ்ந்தவரின் நினைவாக நிற்கும் நேப்பியர் பாலம், கூவத்தின் கருப்புத் திரவம் கருநீல வங்கக் கடலில் கலக்கும் கண்கொள்ளா காட்சியை இன்று அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆம், வாழ்க்கை விசித்திரமானதுதான்.

நன்றி - தினத்தந்தி
* நேப்பியர் பாலம்
1999ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.
* சிந்தாதிரிப்பேட்டையில்
நேப்பியரின் நினைவாக தொடங்கப்பட்ட நேப்பியர் பூங்கா தான், இன்றைய மே தினப் பூங்கா.
* நேப்பியர் பெயரில்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஒரு அருங்காட்சியகம் இருக்கிறது.
No comments:
Post a Comment