என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Sunday, November 18, 2012

மெட்ராசின் பறக்கும் டாக்டர்


பறந்து பறந்து வேலை செய்வது என்று பேச்சு வழக்கில் சொல்வதுண்டு. ஆனால் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே மெட்ராசில் ஒரு டாக்டர் உண்மையிலேயே பறந்து பறந்து மருத்துவம் பார்த்திருக்கிறார். இதனால் அவரை மெட்ராஸ்வாசிகள் 'பறக்கும் டாக்டர்' என்றே அழைத்திருக்கிறார்கள்.

பின்னாட்களில் பறக்கும் டாக்டர் எனப் பெயரெடுத்த ரங்காச்சாரி கும்பகோணம் அருகே சருக்கை என்ற கிராமத்தில் 1882ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை கிருஷ்ணமாச்சாரி ஒரு பொறியாளர். சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் மற்றும் சென்ட்ரலுக்கு எதிரில் இருக்கும் அரசு பொதுமருத்துவமனை ஆகியவற்றை கட்டியதில் இவரின் பங்களிப்பும் உள்ளது.

ரங்காச்சாரியின் மாமா கோபாலாச்சாரி, ஒரு வழக்கறிஞர். திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக பணியாற்றியவர். இப்படி கல்வியின் மேன்மை அறிந்த குடும்பத்தில் பிறந்ததால் ரங்காச்சாரிக்கும் இயல்பிலேயே படிப்பின் மீது அதீத ஆர்வம் இருந்தது. கும்பகோணம் டவுன் ஐ ஸ்கூலில் படிப்பை முடித்ததும், கல்லூரியில் சேர்வதற்காக சென்னை வந்தார்.
சிலையாக ரங்காச்சாரி

மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ரங்காச்சாரியை மருத்துவம் படிக்கும்படி இரண்டு ஐரோப்பிய அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஊக்கப்படுத்தினர். அவர்கள் அளித்த உற்சாகத்தால் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த ரங்காச்சாரி, 1904ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தார். இரண்டே ஆண்டுகளில் துணை அறுவை சிகிச்சை மருத்துவராக அரசு பணியில் சேர்ந்தவர் எழும்பூர், ஐதராபாத், மாயவரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கும்பகோணம், பெர்ஹாம்பூர் என பல ஊர்களிலும் மாறி மாறி பணியாற்றினார்.

திறமையான மருத்துவர் எனப் பெயரெடுத்த ரங்காச்சாரி, எழும்பூரில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளராக 1917இல் நியமிக்கப்பட்டார். இதன் மூலம் இந்த பதவியை அடைந்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். 1919இல் அறுவை சிகிச்சை நிபுணராக பதவி உயர்வு பெற்ற அவர், 1922 வரை அரசு பணியில் இருந்தார். பின்னர் ராஜினாமா செய்துவிட்டு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தனியாக மருத்துவம் பார்க்கத் தொடங்கினார்.

சிறந்த மருத்துவராகத் திகழ்ந்த ரங்காச்சாரி மிகச்சிறந்த மனிதராகவும் இருந்தார். ஒரு நாளில் கிட்டத்தட்ட 18 மணி நேரம் மருத்துவம் பார்ப்பார். அதிகாலை 4 மணி தொடங்கி 11 மணி வரை அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வார். அதன் பின்னர் தனது கிளினிக்கிற்கு வந்திருக்கும் நோயாளிகளை கவனிப்பார். இதனிடையே நடக்க முடியாத நோயாளிகளின் வீட்டிற்கும் சென்று மருத்துவம் பார்ப்பார். அதிக பணம் சம்பாதிப்பதற்காக நிறைய நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்திருப்பார் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.

வறுமையால் வாடும் நோயாளிகளுக்கு ரங்காச்சாரி வழக்கமாக இலவசமாகத் தான் மருத்துவம் செய்வார். சிலருக்கு மருத்துவமும் பார்த்து ஆரோக்கியமான உணவுகளை வாங்கி சாப்பிடச் சொல்லி பணமும் கொடுத்து அனுப்புவாராம். ஆரம்ப நாட்களில் ரங்காச்சாரி ஒரு சைக்கிள் வைத்திருந்தார். அதில் தான் மருத்துவமனைக்கு சென்று வருவார். பின்னர் மோட்டார் பைக்கிற்கு மாறிய அவர், 1920களின் பிற்பகுதியில் அந்த காலத்திலேயே ரூ.52,000 கொடுத்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசுக் கார் ஒன்றை வாங்கினார். அடிக்கடி பயணிக்க வேண்டி இருந்ததால், பல சமயங்களில் அந்த காரே அவரின் வீடாக மாறிவிட்டது. நேரம் இல்லாததால் மதிய உணவை காரில் செல்லும்போதே சாப்பிட்டுவிடுவாராம்.

இப்படி மாய்ந்து மாய்ந்து மருத்துவம் பார்த்தும் ரங்காச்சாரிக்கு மனத்திருப்தி ஏற்படவில்லை. இன்னும் நிறைய பேருக்கு மருத்துவம் பார்க்க என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்தபோது அவருக்கு அந்த எண்ணம் தோன்றியது. யாருமே நினைத்துப் பார்க்காத வகையில், ஒரு சிறிய விமானத்தை விலைக்கு வாங்கினார் ரங்காச்சாரி. அந்நாட்களில் பறந்து விரிந்திருந்த சென்னை மாகாணம் முழுவதும் பறந்து சென்று மருத்துவம் பார்க்க இது அவருக்கு பெரிதும் உதவியது. இப்படித் தான் சென்னைக்கு ஒரு பறக்கும் டாக்டர் கிடைத்தார்.

ரங்காச்சாரி இவ்வாறு மருத்துவத்தில் சாதனை புரிந்து கொண்டிருந்த நிலையில், திடீரென ஒரு நாள் டைபாய்டு நோயால் பாதிக்கப்பட்டார். எவ்வளவு முயன்றும் நோயில் இருந்து மீள முடியாமல் 1934ஆம் ஆண்டு தமது 52வது வயதில் இயற்கை எய்தினார். மனிதநேயமிக்க அந்த மருத்துவரை இழந்த சென்னைவாசிகள் மீளாத்துயரில் ஆழ்ந்தனர். அவரை கௌரவிக்கும் வகையில் 1939ஆம் ஆண்டு சென்னை அரசு பொதுமருத்துவமனை வாயிலில் ஒரு சிலை வைத்தனர். அந்த சிலையின் பீடத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது, 'அவரின் சிறந்த மருத்துவ ஆற்றலையும், எல்லையற்ற மனிதநேயத்தையும் கௌரவிக்கும் வகையில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது'.

தந்தை கட்டிய மருத்துவமனையின் வாயிலில் மகன் சிலையாக நின்று கொண்டிருக்கிறார். 'மருத்துவம் தொழில் அல்ல சேவை' என சிலையாக நிற்கும் ரங்காச்சாரி உரக்க சொல்லிக் கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது. ஆனால் எத்தனை மருத்துவர்களுக்கு இது காதில் விழுகிறது என்பதுதான் தெரியவில்லை.

நன்றி - தினத்தந்தி

* டாக்டர் ரங்காச்சாரி மேல்படிப்பிற்காக இங்கிலாந்து செல்ல ஆசைப்பட்டார். ஆனால் ஆச்சாரமான இந்துகள் கடல் கடந்து செல்லக் கூடாது என்று சொல்லி குடும்பத்தார் அவரது ஆசைக்கு தடை போட்டுவிட்டனர்.

* மருந்து, மாத்திரைகளே இல்லாமல் வெறும் ஆலோசனைகள் மூலமே நிறைய பேரின் மருத்துவப் பிரச்னைகளை டாக்டர் ரங்காச்சாரி தீர்த்திருக்கிறார்.

1 comment:

  1. சிறப்பான தகவலை பதிவாகிப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

    ReplyDelete