சென்னை பாரிமுனைப்
பகுதியின் பழைய அடையாளங்களில் ஒன்று காளிகாம்பாள் கோவில். நெரிசல் மிகுந்த
தம்புசெட்டித் தெருவில் தற்போது வசிக்கும் காளிகாம்பாள் ஆரம்ப நாட்களில்
கடற்கரையோரமாக காற்று வாங்கிக் கொண்டு நிம்மதியாக குடியிருந்தாள்.
ஆங்கிலேயர்களின்
வருகைக்கு முன் வங்கக் கடலை ஒட்டி ஒரு சிறிய மீனவ கிராமம்தான் இருந்தது. இந்த
கிராமத்தினரின் கடவுளாக இருந்த காளிகாம்பாளுக்கு அவர்கள் செந்தூரம் சாத்தி
வழிபட்டு வந்தனர். இதனால் சென்னியம்மன் என அழைக்கப்பட்டாள். சென்னியம்மன் குப்பம்
என்ற பெயரே பின்னர் சென்னை என்று மருவியது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
விஸ்வகர்மா
சமூகத்தினர் நாயக்கர் காலகட்டத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் கோயில்
திருப்பணிகளுக்காக சென்னையில் குடியேறியபோது திருவண்ணாமலையில் இருந்து கல் எடுத்து
வந்து கட்டிய ஆலயம் இது என்று கூறப்படுகிறது. பின்னர் 1640இல் ஆங்கிலேயர்கள் இந்த
பகுதியில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியபோது, கோவில் கோட்டைக்குள் வந்துவிட்டது.
இப்படி கோட்டைக்குள் வைத்து வழிபட்டதால் கோட்டையம்மன் என்றும் ஒரு பெயர்
வழங்கப்பட்டிருக்கிறது.
![]() |
காளிகாம்பாள் கோவில் |
ஆங்கிலேய வணிகர்கள்
கேட்டுக் கொண்டதன் பேரில் கோட்டைக்கு வெளியே தம்புசெட்டித் தெருவிற்கு இடம்மாறினாள்
இந்த அம்மன். தம்புசெட்டித் தெருவில் உள்ள கோவிலை முத்துமாரி ஆச்சாரி என்பவர்
நிர்மாணித்தார். இடம் மாறியதே தவிர பக்தர்களின் எண்ணிக்கை மாறவில்லை. அம்மனை வழிபட
ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்துகொண்டே இருந்தனர். அப்படி வந்த ஒரு விஐபி
பக்தர்தான் சத்ரபதி சிவாஜி.
1677இல் சென்னையை
நோக்கி படையெடுத்து வந்தார் சத்ரபதி சிவாஜி. அப்போது சென்னையின் ஆளுநராக இருந்தவர்
ஸ்ட்ரெயின்ஷாம் மாஸ்டர் (Streynsham Master). இவர் ஏற்கனவே சிவாஜியின் வீரத்தைப் பார்த்திருக்கிறார். 1670இல் சிவாஜி
சூரத் நகரில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் கோட்டையைத் தாக்கியபோது அதனை
எதிர்கொண்டவர் இதே ஸ்ட்ரெயின்ஷாம் மாஸ்டர்தான்.
தனது தென்னகப்
படையெடுப்பால் வேலூர், செஞ்சி, ஆற்காடு ஆகியப் பகுதிகளை கைப்பற்றிய சிவாஜியின்
அடுத்த குறி சென்னைதான் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் மெட்ராஸ்வாசிகள்
அடுத்து என்ன எனத் தெரியாமல் அச்சத்தில் உறைந்து போயிருந்தனர். இப்படி நிமிடங்கள்
திக்..திக்.. என கடந்து கொண்டிருந்த நிலையில், 1677, மே 14ஆம் தேதி சிவாஜியின்
தூதர் ஒருவர் புனித ஜார்ஜ் கோட்டைக்கு வந்தார்.
![]() |
கோவிலுக்கு வந்த சிவாஜி |
சத்ரபதி சிவாஜி சில விலை
உயர்ந்த கற்களையும், விஷமுறிவு மருந்துகளையும் கேட்பதாகவும், அதற்குரிய பணத்தை
அளித்து விடுவதாகவும் அந்த தூதர் தெரிவித்தார். ஆனால் ஆங்கிலேயர்கள் பணம் எதையும்
பெறாமல் சிவாஜி கேட்ட பொருட்களை அனுப்பி வைத்தனர். சிவாஜி சென்னையைத் தாக்காமல்
இருக்க என்ன விலையையும் கொடுக்க அவர்கள் தயாராக இருந்தனர்.
சில நாட்கள் கழித்து
மீண்டும் சில கோரிக்கைகளோடு திரும்பி வந்தார் சிவாஜியின் தூதர். இம்முறை வாங்கும்
பொருட்களுக்கு உரிய விலையை கண்டிப்பாக கொடுக்கும்படி சிவாஜி வலியுறுத்தியதாக
கூறினார். ஆனால் இரண்டாம் முறையும் விலையில்லா பொருட்களே அவருக்கு வழங்கப்பட்டன. மூன்றாவது
முறையாக மீண்டும் வந்த தூதர், இம்முறை சில ஆங்கிலேய பொறியாளர்களை சிவாஜி அழைத்து
வரச் சொன்னதாகத் தெரிவித்தார். ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க முடியாதென மிகவும்
பணிவாக மறுத்துவிட்டார்கள் ஆங்கிலேயர்கள். இதனால் ஆத்திரமுற்று சிவாஜி சென்னை மீது
படையெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. இதனிடையே
சில அரசியல் மாற்றங்கள் காரணமாக சிவாஜி மீண்டும் தனது ராஜ்ஜியத்திற்கு திரும்பிச்
செல்ல வேண்டி இருந்தது.
இந்த இடத்தில்தான்
வரலாற்றில் ஒரு புதிர் அவிழ்க்கப்படாமல் நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது. சிவாஜி
சென்னைக்குள்ளேயே வரவில்லை என்கிறார்கள் சில வரலாற்று ஆய்வாளர்கள். ஆனால் காளியின்
பக்தரான சிவாஜி, யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் வந்து தம்புசெட்டித் தெருவில்
உள்ள காளிகாம்பாளை தரிசித்துவிட்டுச் சென்றார் என்கிறார்கள் சிலர். அக்டோபர் 3,
1677இல் சிவாஜி காளிகாம்பாள் கோவிலுக்கு வந்தார் என கோவிலில் ஒரு குறிப்பு
வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு உறுதியான வரலாற்று ஆவணங்கள் எதுவும் இல்லை.
மகாகவி பாரதியார்
சுதேசமித்திரனில், பணியாற்றிக் கொண்டிருந்தபோது
பிராட்வேயில் தங்கியிருந்தார். அப்போது அடிக்கடி இந்த கோவிலுக்கு வழிபட வருவாராம்.
‘‘யாதுமாகி நின்றாய் காளி’’
என்ற அவரது பாடலில் வருவது காளிகாம்பாள்தான்.
சத்ரபதி சிவாஜி,
பாரதியார் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பலரையும் ஆசிர்வதித்த
காளிகாம்பாள், 3 நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் தனது அன்பால் சென்னையை
அரவணைத்துக் கொண்டிருக்கிறாள்.
நன்றி - தினத்தந்தி
* கடற்கரைக் கோவிலில்
காளி உருவம் உக்கிரமாக இருந்ததாகவும், தம்புசெட்டித் தெருவிற்கு மாறியபோது
காளியின் உருவம் சாந்த சொரூபியாக மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
* கோவிலின் வாசலில்
இருக்கும் கிழக்கு ராஜகோபுரம் 1983இல் கட்டப்பட்டது.